MUJIBUR REHMAN AND THEIR TOTAL FAMILY MEMBERS KILLED 1975 AUGUST 15 EXCEPT TWO
ஷாபாக் சதுக்கம் - புதைக்கப்பட்ட நினைவுகளைத் தேடும் வங்கதேச எழுச்சி
முஸ்லிம்கள் பாகிஸ்தான்
விடுதலையும், இரத்தமும், அழுகையும், கண்ணீரும், ஏழ்மையும், கோபமும்என ஒன்றுக்கொன்று தொடர்புடைய அல்லது தொடர்பில்லா கலவையான உணர்வுகளுடன் நடந்தேறிய போராட்டம் அது.முப்பதாண்டுகளுக்கும் மேலான வங்க தேசத்தின் ஒடுக்கப்பட்ட குரல்கள் காற்றைக் கிழித்து விண்ணை எட்டிய வரலாற்று தருணமது.பிப்ரவரி 5, வங்கதேச தலைநகர் டாக்காவின் ஷாபாக் சதுக்கத்தில் ஒரு மாலைப் பொழுதில் தொடங்கிய மக்கள் திரள் எழுச்சி பெரும்பாலான வெகுசன ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டன.
Shahbag_360ஆங்காங்கே ஒரு சில செய்திகள், கட்டுரைகள் என கடந்து போகும் ஒரு நிகழ்வாக ஷாபாக் போராட்டத்தை கருதி விட முடியாது.மூன்று லட்சம் மக்களின் இரத்தக் கறைகளோடு கூடிய ஒரு தேசிய விடுதலைப் போராட்ட நினைவுகளையும் எந்த நீதியாலும் திரும்பப் பெற்றுத் தர இயலாத கோரமானதொரு இனப்படுகொலையையும் அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியுமா என்ன?
ஷாபாக் சதுக்கத்தின் போராட்ட பின்னணியை ஆய்வு செய்தால், வரலாற்று அடுக்குகளிலிருந்து பல்வேறு நிகழ்வுகளை தூசு தட்ட வேண்டியிருக்கிறது. அதிக உயரத்திற்குச் செல்லாமல், கைக்கு எட்டிய தூரம் 1971 ஆம் ஆண்டு வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டத்திலிருந்து தொடங்குவோம்.குழப்பத்தைத் தவிர்க்க முதலில் ஒன்றை தெளிவு படுத்தி விடுகிறேன்.கிழக்கு வங்காளம்,கிழக்கு பாகிஸ்தான் ஆகிய இரண்டு பழைய பெயர்களும் தற்போதைய பங்களாதேஷ் என்றழைக்கப்படும் வங்க தேசத்தையே குறிக்கின்றன.1947 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியாவுடன் மேற்கு வங்காளமும், பாகிஸ்தானோடு கிழக்கு வங்காளமும் மத அடிப்படையில் இணைக்கப்பட்டன.
அரசியல் ரீதியாகவும்,பொருளாதார ரீதியாகவும் பாகிஸ்தானிய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த கிழக்கு வங்காள மக்கள் பாகிஸ்தானிய அரசின் மீது பெருங்கோபத்தில் இருந்தனர்.1948 பாகிஸ்தான் அரசு, உருது மொழியே பாகிஸ்தானின் தேசிய மொழி என்று அறிவித்த போது, கிழக்கு வங்காளத்தில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.ஏறத்தாழ தமிழகத்தில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்திற்கு நிகரான ஒரு போராட்டம் கிழக்கு வங்காளத்திலும் நடந்தது.அந்த மொழிப்போராட்டத்தையும் முன்னெடுத்தவர்கள் மாணவர்களே.
அப்போராட்டத்தை ஒடுக்க 1952ல் டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவமே, பாகிஸ்தான் என்ற ஒரு ஆதிக்கத்தின் கீழ் நாம் ஒடுக்கப்படுகிறோம் என்ற வங்காள மக்களின் தேசிய விடுதலை உணர்வு துளிர் விடக் காரணமாக அமைந்தது.அது மட்டுமின்றி பாகிஸ்தானுக்கு நிகரான மக்கள் தொகை கொண்ட கிழக்கு வங்காள மக்கள் வறுமையிலும் வேலையின்மையிலும் தத்தளித்தனர்.1970 ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் மக்கள் செல்வாக்கை பெற்றிருந்த அவாமி லீக்கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருந்த போதும்,அக்கட்சியின் தலைவரை பாகிஸ்தான் ஆட்சியமைக்க மறுத்துவிட்டது.
அதே ஆண்டில்,போலா எனும் சூறாவளி வங்க தேசத்தை தாக்கி பெரும் சேதத்தை விளைவித்தது.மூன்று லட்சம் மக்கள் உயிரிழந்தனர். எதிர்பாராத இயற்கைச் சீற்றத்தால் மிகப்பெரும் இழப்பைச் சந்தித்த வங்காள தேசத்திற்கு நிதியுதவி அளிப்பதிலும் மறுசீரமைப்பு பணிகளிலும் பாகிஸ்தான் அரசு மெத்தனமாகவே நடந்து கொண்டது.ஒன்றன் பின் ஒன்றாக நடந்த எல்லா நிகழ்வுகளும் இராணுவ பலம் கொண்ட பாகிஸ்தானை எதிர்த்து, வங்காளத்தின் தேசிய விடுதலைப் போராட்டம் வீறுகொண்டெழக் காரணமாக அமைந்தன.
1970ல் நடந்த தேர்தலில் கிழக்கு வங்காளத்தின் அவாமி லீக் 162ல் 160 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.இரண்டு இடங்களைத் தவிர நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த பெரும்பான்மையைப் பெற்ற அவாமி லீக் கட்சியை அரசமைக்க பாகிஸ்தானின் மக்கள் கட்சியின் தலைவர் ஜுல்ஃபிகார் அலி பூட்டோவும் ராணுவ ஆட்சியாளருமான யாஹியா கானும் மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து அவாமி லீக் கட்சியின் தலைவரான ஷேக் முஜிபுர் ரஹ்மான் 1971 மார்ச் 7 ஆம் திகதி கிழக்கு வங்காள மக்களை பாகிஸ்தானிய அரசை எதிர்த்து சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுமாறு அழைப்பு விடுத்தார்.மார்ச் 25ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத்திற்கு முன்பாக,கிழக்கு வங்காளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அதிகாரம் அளிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேச விடுதலைப்போர் தொடங்குகின்றது.
டிக்கா கான் என்ற பாகிஸ்தானிய இராணுவ தளபதி,கிழக்கு வங்காளத்தின் கவர்னராக பொறுப்பேற்க கிழக்கு வங்காளத்திற்கு வருகின்றார்.அங்குள்ள நீதிபதிகள் அவரை நுழையவிடாமல் தடுத்து நிறுத்துகின்றனர்.இந்நிகழ்வையடுத்து,மார்ச் 25ஆம் திகதி நள்ளிரவில் கிழக்கு வங்காள மண்ணின் விடுதலை போராட்டத்தை ஒடுக்குவதற்காக பாகிஸ்தானிய இராணுவம் தரையிறக்கப்படுகிறது.
surr_320மார்ச் 26 ஆம் தேதி ஷேக் முஜிபுர் ரஹ்மான் கைது செய்யப்படுகிறார்.அதே நாளில் ஷேக் ஆல் எழுதிக் கொடுக்கப்பட்ட அறிக்கையை கலூர்கட் வானொலி நிலையத்தில் அவரது அவாமி லீக் கட்சியின் சக உறுப்பினர் எம்.ஏ.ஹன்னான் முதன் முறையாக வாசிக்கிறார். பங்களாதேஷ் சுதந்திரம் அடைந்து விட்டதாக அறிவிக்கிறார். விடுதலைப் போராட்டம் தீவிரமடைகிறது. பாகிஸ்தானிய ராணுவத்துடன் உள்ளூர் ரஜாக்கர்கள் என்றழைக்கப்படும் பாகிஸ்தானிய ஆதரவு இஸ்லாமிய அடிப்படை வாதிகள் (இவர்கள் வங்க தேச விடுதலைக்கு எதிரானவர்கள் )கூட்டு சேர்கின்றனர். இதனையடுத்து கோரமான காட்சிகள் அரங்கேறுகின்றன.பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள்.பெண்களும் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
ரஜாக்கர்கள் என்றழைக்கப் படுபவர்கள் வங்கதேசத்தில் பாகிஸ்தானிய ஆதரவு ஜமாத்-இ-இஸ்லாமி என்ற இஸ்லாமிய அடிப்படைவாத கட்சியால் ஊற்றி வளர்க்கப்பட்டவர்கள்.இவர்கள் உருது மொழி பேசுபவர்கள், வங்கதேசத்தில் பெரும்பான்மை மக்கள் வங்காள மொழியை தாய்மொழியாக கொண்ட இசுலாமியர்களும், இந்துக்களுமாவர்.பாகிஸ்தானிய இராணுவத்தோடு கூட்டு சேர்ந்து வரலாற்றின் மிகப்பெரிய, மிகக்கோரமான, திட்டமிடப்பட்ட ஒரு இனப்படுகொலையை நடத்தி முடித்ததில் ரஜாக்கர்கள் இன்று ஒட்டுமொத்த வங்க தேசத்தின துரோகிகளாக மாறி இருக்கின்றனர்.'திட்டமிடப்பட்ட' என்ற வார்த்தை வெறும் இடைச்செருகல் அல்ல.மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் என ஒரு அறிவுச் சமூகத்தையே அழிக்கும் மிகப்பெரிய திட்டமிடலும் சூழ்ச்சியும் அவர்களிடமிருந்தது.வங்காள இன அடையாளத்தை அழிப்பதே அவர்களின் இலக்காக இருந்தாலும், மாணவர்களையும் நுண்ணறிவுச் சமூகத்தையுமே குறி வைத்து தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.
1952ல் உருது மயமாக்கத்துக்கு எதிரான கிழக்கு வங்க மாணவர்களின் போராட்டமே இதற்கு காரணமாக அமைந்தது.தேடல்விளக்கு Operation Search light)என்று பெயரிடப்பட்ட அந்த இனப்படுகொலையில் மூன்றுலட்சம்மக்கள் கொல்லப்பட்டனர்.சிறுபான்மை இந்துக்களும்,இந்த கோவில்களும் இத்தாக்குதல்களின் முக்கிய இலக்காக அமைந்தன.பல்லாயிரக்கணக்கான
பெண்கள்பாலியல்வன்கொடுமைக்குஉள்ளாக்கப்பட்டனர்.பெரும்பாலானபெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பொதுவில் வெளிப்படுத்த விரும்பாததால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை கூட இதுவரை பதிவு செய்யப்படவில்லை. ஒட்டுமொத்தமாக 25000 பெண்கள் கர்ப்பிணியாக்கப்பட்டார்கள் என்ற கணக்கு மட்டும் இறுதியாக்கப்பட்டது.பத்து லட்சம் வங்காள மக்கள் அகதிகளாக இந்தியாவுக்குள் தஞ்சம் அடைந்தனர்.
எப்படியேனும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முனைப்புடன் இருந்த இந்திய அரசுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது.வங்க தேசத்தின் ’முக்தி பாஹினி’ என்றழைக்கப்பட்ட வங்க தேச இராணுவத்துடன் கூட்டு சேர்ந்த மக்கள் ஆயுதப்படை ஒன்பது மாதங்களாக தனித்து பாகிஸ்தானை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தது.பல லட்சம் மக்கள் அகதிகளாக இந்தியாவுக்குள் நுழைந்ததும், வட கிழக்கு இந்திய வான்பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய விமான தாக்குதல்களும், இந்திய இராணுவம் டிசம்பர் 3ல் வங்க தேசத்துக்குள் நுழைந்து முக்தி பாஹினியோடு கை கோர்த்து,பாகிஸ்தான் இராணுவத்தை எதிர்த்து போரைத் தொடங்கக் காரணமாக அமைந்தது.பத்து நாட்களே நீடித்த இந்த நடவடிக்கையின் மூலம் டிசம்பர் 16ஆம் தேதி பாகிஸ்தான் இந்திய வங்கதேச ராணுவத்திடம் சரணடைந்தது.பங்களாதேஷ் சுதந்திர நாடானது."பங்க பந்து"வங்கத்தின் தந்தை என்றழைக்கப்பட்ட அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்டது.
1975 ஆம் ஆண்டு ஷேக் முஜிபுர் ரஹ்மான் இராணுவ தளபதிகளால் கொல்லப்பட்டார். இராணுவ தளபதி ஜியாவுர் ரஹ்மான் பொறுப்பேற்று தற்போது (Bangladesh National Party) BNP என்றழைக்கப்படும் பங்களாதேஷ் தேசியக் கட்சியை உருவாக்கினார்.அவரும் இராணுவ தளபதிகளால் கொல்லப்பட்டு 1982ல் ஹூசைன் முகமது எர்ஷாத் என்ற இராணுவ தளபதி இராணுவ ஆட்சியை ஏற்படுத்துகிறார்.
இவ்வாறாக இரத்தம் தோய்ந்த வரலாறு வங்கதேசத்தில் தொடர்ந்தது. 1991ல் முற்றிலுமாக இராணுவ ஆட்சி வீழ்த்தப்பட்டு,முஜிபூர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா பேகம் தலைமையில் அவாமி லீக் கட்சியும்,ஜியா உர் ரஹ்மானின் மனைவி பேகம் கலீடா ஜியா தலைமையில் பங்களாதேஷ் தேசியக் கட்சியும் (BNP)மாறி மாறி தேர்தல்களில் வெற்றி பெற்று கடந்த இருபதாண்டுகளுக்கும் மேல் வங்க தேசத்தில் ஆட்சி செய்து வருகின்றனர்.
2008ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது,1971ல் போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் மீதான போர்க்குற்ற சிறப்பு விசாரணை ஆணையம் அமைக்க விருப்பதாக உறுதியளித்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசினா பேகம். அதன்படி 2010ம் ஆண்டு 3 உறுப்பினர்கள் கொண்ட பன்னாட்டு போர்க்குற்ற தீர்ப்பாயம் (ICT) 7 உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக் குழு,12 உறுப்பினர்கள் கொண்ட வழக்கறிஞர்கள் குழு ஆகியவை உருவாக்கப்பட்டன.
கட்டுரையில் ஆறாம் பத்தியில் முன்பே குறிப்பிட்டது போல,1971ல் போர்க்குற்றவாளிகளான 'ரஜாக்கர்கள்' பாகிஸ்தானில் உருவான ஜமாத்-இ-இஸ்லாமி என்ற இஸ்லாமிய அடிப்படை வாத கட்சியின் மூலம் வளர்க்கப்பட்டவர்கள்.வங்க தேசம் விடுதலையடைந்த சில ஆண்டுகளில் இவர்கள் மீதான போர்க்குற்ற விசாரணை,ஷேக் முஜிபுர் ரகுமான் முயற்சியால் தொடங்கப்பட்டது.1975ல் ஷேக் படுகொலை செய்யப்பட்ட போதே இவ்வழக்கின் நீதியும் சேர்த்து புதைக்கப்பட்டது.
அதன்பின், 1977ல் பதவியேற்ற இராணுவ தளபதியான ஜியா வுர் ரஹ்மான் பங்களாதேஷ் தேசிய கட்சியை உருவாக்கிய போது,இந்த போர்க்குற்றவாளிகள் மீண்டும் புத்துணர்வு பெற்றனர். 1981 ஜியா வுர் ரஹ்மான் படுகொலை செய்யப்படும் வரை, ஜமாத் கட்சியின் உதவியோடும் ஜியாவின் பங்களாதேஷ் தேசிய கட்சியின் ஆசியோடும் ரஜாக்கர்கள் உண்டு களித்து செழித்து வளர்ந்தனர். அது மட்டுமின்றி 2001 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் தேசிய கட்சியின் மிகப்பெரிய கூட்டணிக் கட்சியாக ஜமாத்-இ-இஸ்லாமி வளர்ந்தது.அங்கிருந்து தான் ஜமாத் இ இஸ்லாமி கட்சி பொருளாதார ஏறுமுகத்தை கண்டது.
மதம் அரசியல் மட்டுமின்றி இன்று வங்கிகள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், கலாச்சார மையங்கள் என்று ஜமாத் இ இஸ்லாமி பணம் சம்பாதிக்காத துறைகளே இல்லையென்னுமளவுக்கு வங்க தேசம் முழுதும் நீக்கமற பரந்து விரிந்திருக்கிறது ஜமாத்-இ-இஸ்லாமி என்னும் போர்க்குற்ற, இனப்படுகொலை குற்றவாளிகளின் கட்சி. "இஸ்லாமி வங்கி" என்றழைக்கப்படும் ஜமாத்- இ-இஸ்லாமி வங்கியில் ஜேபி மோர்கன் போன்ற மிகப்பெரும் நிதி நிறுவனங்கள் கூட முதலீடு செய்கின்றன.ஜேபி மோர்கன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் தங்களுக்கு இலாபம் கிடைப்பதை மட்டுமே அடிப்படையாக கொண்டு எல்லா நாடுகளிலும் முதலீடு செய்கின்றன. அது இனப்படுகொலை நாடா, இராணுவதிகாரமா, மக்களாட்சியா என்றெல்லாம் பார்ப்பதில்லை.“வணிகம் அறம் பார்ப்பதில்லை” என்ற கூற்று மெய்ப்பிக்கப்படுகிறது.
இப்படி பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்த வங்க தேச போர்க்குற்றவாளிகள் கடந்த மூன்று மாதங்களாக,ஷேக் ஹசீனா நியமித்த பன்னாட்டு போர்க்குற்ற நீதிமன்ற தீர்ப்புகளால் நிலை குலைந்து போயிருக்கின்றனர்.போர்க்குற்ற நீதிமன்றத்தின் முதல் அடி,பாகிஸ்தானுக்கு ஓடிப்போன அப்துல் கலாம் ஆசாத் என்ற போர்க்குற்றவாளிக்கு தூக்கு தண்டனைத் தீர்ப்பாக விழுந்தது.இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட வங்க தேசத்தின் ஒவ்வொரு குடும்பமும்,அடுத்த முக்கியமான தீர்ப்பான அப்துல் காதர் முல்லாவின் தீர்ப்புக்காக காத்திருந்தது.'மீர்பூரின் கசாப்பு கடைக்காரர்' என்றழைக்கப்படும் அப்துல் காதர் முல்லா இப்போது ஜமாத்-இ-இஸ்லாமியின் துணை பொதுச் செயலாளர்.
பிப்ரவரி 5ம் தேதி அப்துல் காதர் முல்லாவின் குற்றங்களை உறுதி செய்து மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக முல்லாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது நீதிமன்றம். தனக்கு தூக்கு தண்டனையே கிடைக்கும் என அச்சத்தில் இருந்த அப்துல் காதர் நீதிமன்றத்திலிருந்து வெளி வரும் போது ஆணவமாக சிரித்துக்
கொண்டே வெற்றிக் குறியீடாக இரண்டு விரல்களைக் காட்டினார்.‘அவர் செய்த குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை மிகவும் குறைவானது'என்று பெரும்பான்மையான மக்கள் கொந்தளித்தனர்.மதியம் 12.08 மணிக்கு தீர்ப்பு வெளியாகிறது. நீதிமன்றத்தில் இருக்கும் அனைவரும் தீர்ப்பைக் கேட்டு அதிர்ந்து போகின்றனர்.அப்துல் காதர் முல்லா நீதிமன்றத்திற்கு வெளியே வெற்றிக் களிப்போடு பேட்டி கொடுக்கிறார்.இந்த ஆயுள் தண்டனை தீரப்பும் முல்லாவின் ஆணவப் பேச்சும் வங்க தேசம் முழுதும் காட்டுத் தீயென பரவுகிறது. மக்களின் கோபம் தலைக்கேறுகிறது. அடுத்த மூன்று மணி நேரத்தில் ஒரு கூட்டம் டாக்கா நகரின் முக்கிய சந்திப்பான ஷாபாக் சதுக்கத்தில் ஒன்று கூடுகிறது.
எகிப்து துனிஷியாவைப் போல் ஒரு இணையப் புரட்சி ஒன்று மலர ஆரம்பித்தது அந்நாளில்mollah தான்.இம்ரான் சர்கார், மஹ்மூதுல் ஹக் முன்ஷி, மரூஃப் ரசுல்,அமித் பிக்ராம் திரிபுரா ஆகிய நான்கு இளம் வலைப்பதிவர்கள் முகநூலில் ஒரு பக்கத்தை உருவாக்கி,அவர்களது நண்பர்களையும் மற்றவர்களையும் போராட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றனர்.ஷாபாக் சதுக்கத்தின் மிக அருகில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் அனைவரும் ஒன்று கூடி, நீதிமன்ற தீர்ப்புக்கெதிரான தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.அநீதிக்கெதிராக கோபத்தின் உச்சத்தில் இருந்த பெரிவாரியான வங்க தேச மக்களை இந்த போராட்டம் கவர்ந்திழுக்கிறது.தொடர்ந்து மணிக்கணக்காக ஷாபாக் சதுக்கம் முழுமையும் பெருந்திரளான மக்கள் அலை ஆக்கிரமிக்கத் தொடங்குகிறது.பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், மாணவர்கள்,எழுத்தாளர்கள் என கூட்டம் கூட்டமாக குடும்பத்தோடு ஷாபாக் சதுக்கத்தில் குழுமத் தொடங்கியிருந்தனர்.ஷாபாக் சதுக்கம் மட்டுமின்றி வங்க தேசத்தின் பல பகுதிகளில் போராட்டத் தீ பரவுகிறது.முல்லா உள்ளிட்ட 11 போர்க்குற்றவாளிகளான ரஜாக்கர்களுக்கு மரண தண்டனை வழங்கு, ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியையும் அதன் இளைஞர் அணியையும் தடை செய், ஜமாத்தின் நிறுவனங்களையும் அவர்களின் வியாபாரத்தையும் தடை செய் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கமிட்டனர்.போராட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான இஸ்லாமியர்கள், தினமும் மாலை தொழுகைக்கு பின் போராட்டத்தில் இணைந்து கொள்வதும் அங்கு வெகு இயல்பாக நடந்து
வருகின்றது.போராட்டங்களுக்கு ஆதரவாக எழுதிய ரஜிப் ஹைதர் என்ற வலைப்பதிவர் பிப்ரவரி 15ஆம் நாள் போராட்டம் முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, ஜமாத்-இ-இஸ்லாமி குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் போராட்டத்தின் உக்கிரத்தை இன்னும் அதிகமாக்கியது.லட்சக்கணக்கான மக்கள் ரஜப்பின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு,ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கு தங்களின் கடும் எதிர்ப்பையும்,கண்டனங்களையும் பதிவு செய்தனர்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக அழுத்தப்பட்டிருந்த மக்களின் நீதிக்கான, இனப்படுகொலைக்கு எதிரான போராட்ட எரிமலை கடந்த பிப்ரவரி 5ல் வெடித்ததில் இருந்து இன்று வரை போராட்ட சாம்பலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றது.பிப்ரவரி 28ம் தேதி 3வது குற்றவாளியான டெல்வார் உசைன் சய்யீதிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து, ஜமாத் இ இஸ்லாமி தொண்டர்கள் நாடு முழுதும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.மீண்டும் இந்து கோவில்கள் தாக்கப்பட்டன.
இந்த கலவரங்களில் 6 போலீஸ் உட்பட 76 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டோர் அதிகம்.அதிலும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்காரர்கள் அதிகம்.தொடர்ந்து போராட்டங்களுக்கு எதிரான வன்முறையும் அடக்குமுறைகளும் நிகழ்ந்த வண்ணம் இருந்தாலும், அவற்றையெல்லாம் எதிர்த்து நிற்க துணிந்து விட்டனர் வங்க தேச மக்கள்.பாகிஸ்தானைப் போல வங்க தேசம் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத அரசாக்கப்படுவதை அவர்கள் முற்றாக நிராகரிக்கின்றனர்.வங்க தேசத்தின் அரசியல் கட்டமைப்பில் மத அடையாளங்களை அவர்கள் விரும்பவில்லை.ஜனநாயகமும் நீதியும் தான் தங்களின் ஒரே இலக்கு என்பதை வலியுறுத்த,மாதக்கணக்காக ஷாபாக் சதுக்கப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.வங்க தேசத்தில் முதன்முறையாக மக்களே பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து,தொடர்ந்து அற வழியிலான போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர்.
shahbag-square-prote_320_copyமரண தண்டனையை நாம் முழுமையாக எதிர்த்தாலும், பெருந்திரளான மக்கள் எழுச்சி வரலாற்றின் மிகப்பெரிய அநீதியான ஒரு இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற விசாரணையின் அடிப்படை நீதியை வென்றெடுத்திருக்கிறது. போராடும் இளைஞர்களிடையே மையப்படுத்தப்பட்ட அரசியல் இலக்கு மற்றும் அவற்றை கண்டடைவதற்கான நீண்ட கால செயல் திட்டம் பலவீனமாக இருந்தாலும், அவர்களுடைய விருப்பங்களும் குறிக்கோள்களும் தெளிவாகவே இருக்கின்றன.உலகின் நான்காவது மிகப் பெரிய இஸ்லாமிய நாடான வங்க தேசத்தில், இஸ்லாமிய மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு ஜனநாயக விழுமியங்களை நோக்கி முன்னகரும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் ஏகாதிபத்திய நாடுகளை எச்சில் விழுங்க வைக்கின்றன.எனவே தான் இப்போராட்டங்கள் குறித்த செய்திகள் பெரும்பாலும் மேற்குலக மற்றும் இந்திய ஊடகங்களால் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.
இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கெதிராக எழுச்சிமிகு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் நம் தமிழினம், வங்கதேசத்தின் அன்றாட நிகழ்வுகளை தொடர்ந்து கவனிக்க வேண்டிய தேவையிருக்கிறது.தமிழீழ விடுதலைக்கான நம் மாணவர் போராட்டங்களைப் போலவே,எந்தவொரு அரசியல் கட்சியின் பின்புலமும் இல்லாமல் பிறப்பெடுத்த தன்னெழுச்சியான வங்கதேச மக்களின் போராட்டங்களை ஆதரிப்பதோடு நின்றுவிடாமல்,அவர்களின் முன்னகர்வுகளையும் தொடர்புடைய செய்திகளையும் பல்வேறு தளங்களில் பரப்புரை செய்தலும் அவசியமாகிறது.
இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கான நீதி வேண்டி களமிறங்கியிருக்கும் வங்கதேசத்தைப் போல,இது போன்ற போர்க்குற்ற,இனப்படுகொலை குற்றவாளிகளை தண்டிக்கக் கோருகின்ற,பெரும்பான்மை மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் இலங்கை மண்ணில் தற்போதுள்ள சூழ்நிலையில் சாத்தியமில்லை.காரணம் பெரும்பான்மையான சிங்கள மக்கள் போர் வெற்றி பெருமிதத்தில் தான் இன்னும் உள்ளனர்.
மேலும்,இன அழிப்பு போரை முடித்த கையோடு,தமிழர்களின் வாழ்நிலமான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களும் தமிழின அடையாளங்களைச் சிதைக்கும் பண்பாட்டு படையெடுப்பும் இராணுவ மயமாக்கலும் தான் அங்கே அன்றாட வாடிக்கையாக இருக்கின்றன.அது மட்டுமின்றி இலங்கை வாழ் இசுலாமியர்கள் மீதான வெறுப்பும் அங்கே உருக்கொண்டு, அம்மக்களின் மீதான வன்முறை கட்டவிழ்ப்புகளையும் கடந்த சில மாதங்களாக அரங்கேற்றி பின்னின்று நடத்தி வருகிறது சிங்கள பேரினவாத அரசு.
ஆக தமிழினப் படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்குமான மறுக்க முடியாத நீதியைக் கோரியும், ஜனநாயக மீட்சிக்கான போராட்டங்களையும் தன்னளவில் இன்று தாய் தமிழக மக்களும் புலம்பெயர் வாழ் தமிழர்களுமே தொடர்ந்து முன்னெடுத்து நடத்தி வருவதை சிங்கள அரசு பெருத்த அச்சத்தோடு அவதானிக்க வேண்டியிருக்கிறது. மாபெரும் மனித குல பேரவலத்தை நிகழ்த்திய கடைசி போர்க்குற்றவாளி தண்டிக்கப்படும் வரை, நீதிக்கான இப்போராட்டங்கள் வரலாற்றின் பக்கங்களை நிரப்பியபடியே இருக்கும்.
No comments:
Post a Comment