HOW INDIAN PILOTS ESCAPED
FROM PAKISTAN JAIL
பாகிஸ்தான் சிறையில் இருந்து தப்பிய இந்திய விமானிகளின் கதை
'ரெட் ஒன், யூ ஆர் ஆன் ஃபயர்...'… குழுவின் தலைவர் தீரேந்திர ஜாஃபாவின் ஹெட்போனில் சக விமானி ஃபர்டியின் குரல் கேட்டது.
மற்றொரு விமானி மோகனின் குரலும் ஒலித்தது, ' பெல் அவுட் ரெட் ஒன், பெல் அவுட்.' மூன்றாவது விமானி ஜக்கூ சக்லானியின் குரலிலும் பரபரப்பு காணப்பட்டது, 'சார்... யூ ஆர்.... ஆன் ஃபயர்... கெட் அவுட்... ஃபார் காட் சேக்... பெல் அவுட்...'
ஜாஃபாவின் சுகோய் விமானத்தில் ஏற்பட்ட தீ காக்பிட் வரை பரவியது. விமானம் கட்டுப்பாட்டில் இருந்து விலகியது. விமானியின் இருக்கையில் இருந்து வெளியேறும் பொத்தானை ஜாஃபா அழுத்தியதும், அவர் வெளியே தள்ளப்பட்டு, அவருடைய பாராசூட் விரிந்து அவரை தரைக்குக்கொண்டு சென்றது.
தரையில் இறங்கியதும், அல்லாஹு அக்பர், நார்-இ-தக்பீர் என்று முழங்கியவாறே ஓடி வந்த கிராம மக்களின் கூட்டம் அவரை சூழ்ந்தது என்று ஜாஃபா கூறுகிறார். அவரது ஆடைகளை பிடித்து இழுத்து கிழித்தவர்கள், கையிலிருந்த கடிகாரத்தையும் அவரிடம் இருந்த சிகரெட் லைட்டரையும் பிடுங்கிக் கொண்டனர்.
அவரது கையுறைகள், காலணிகள், 200 பாகிஸ்தானிய ரூபாய், கழுத்தில் அணிந்திருந்த மஃப்லெர் அனைத்தும் நொடியில் காணமல் போயின. பாகிஸ்தான் வீரர்கள் சிலர் கூட்டத்தில் இருந்து அவரைக் காப்பாற்ற முயற்சிப்பதையும் ஜாஃபா கண்டார்
உன்னிடம் ஆயுதங்கள் ஏதாவது இருக்கிறதா?' என்று ஒரு வாட்ட சாட்டமான அதிகாரி ஜாஃபாவிடம் கேட்டார். அவருக்கு பதிலளித்த ஜாஃபா, 'என்னிடம் துப்பாக்கி இருந்தது, கூட்டத்தினர் அதை எடுத்துக்கொண்டார்கள் என நினைக்கிறேன்.'
'என்னுடைய உடல் பாகங்கள் அனைத்தும் துவண்டுபோய் விட்டதாக தோன்றியது, நிற்பதற்கு முதுகெலும்பு கூட இல்லை என்று தோன்றியது. உடலை ஓரடி கூட நகர்த்த முடியும் என்று தோன்றவில்லை' என்று வேதனையுடன் கூறினார் அவர்.
ஜாஃபாவை அழைத்துச் செல்லுமாறு அந்த அதிகாரி உத்தரவிட்டதை அடுத்து, இரண்டு சிப்பாய்கள் அவரை ஒரு கூடாரத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். அவருக்கு தேநீர் வழங்குமாறு உத்தரவிடப்பட்டது.
கொடுக்கப்பட்ட தேநீர் கிளாசை கையில் எடுக்கும் பலம்கூட தன் கைகளுக்கு இல்லை என்று ஜாஃபாவுக்கு தோன்றியது. அவரது நிலையைப் பார்த்த ஒரு சிப்பாய், ஸ்பூனால் கொஞ்சம் கொஞ்சமாக ஜாஃபாவின் வாயில் தேநீரை ஊட்டினார்..
பாகிஸ்தான் சிறையில் இந்திய தேசிய கீதம்
ஜாஃபாவின் இடுப்பு காயங்களுக்கு கட்டு போடப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தினமும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அவர் கழிவறைக்கு செல்லும்போது, அவரது முகத்தில் கடிவாளம் போன்று தலையணை ஒன்று பொருத்தப்படும். இது அவர் பக்கவாட்டில் பார்ப்பதை தடுக்கும்.
அவர் அந்த அறைக்கு செல்லும்போது சிலர் பேசிக் கொண்டிருக்கும் ஓசை கேட்கும். அவர் சென்றதும் நிசப்தமாகிவிடும். திடீரென்று ஒரு நாள் சார்... என்று கூவியவாறே விமானி லெஃப்டினெண்ட் திலீப் பாரூல்கர் ஓடிவந்தார்.
ஜாஃபாவின் தளர்வான சட்டைக்குள் அவருக்கு பிளாஸ்டர் போட்டிருப்பதை திலீப் கவனிக்கவில்லை. அங்கு பத்து இந்திய விமானிகள் போர்க் கைதிகளாக இருந்தனர்.
சக இந்தியர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்த ஜாஃபாவின் கண்களில் நீர் பெருகியது. அப்போது போர்க் கைதிகள் முகாமின் கண்காணிப்பாளர் உஸ்மான் ஹனீஃப் அங்கு சிரித்துக் கொண்டே வந்தார்.
அவரைத் தொடர்ந்து இரண்டு ஆர்டர்லிகள் தேநீர் கோப்பைகளை எடுத்துக்கொண்டு வந்தனர். உங்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை சொல்ல வந்தேன் என்று உஸ்மான் சொன்னார்.
அன்றைய தினம் மறக்கமுடியாத நாளாக இருந்தது. உயிரிழந்த நமது சக வீரர்களுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்துவோம், பிறகு தேசிய கீதம் பாடுவோம் என்று சொன்னார், அங்கிருந்தவர்களில் மூத்த இந்திய விமானி கோயெல்ஹோ.
1971, டிசம்பர் 25ஆம் தேதியன்று மாலை, பாகிஸ்தான் சிறைச்சாலையில் இந்திய தேசிய கீதத்தை பாடியபோது தாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்ததாகவும், தங்கள் நெஞ்சம் பெருமிதத்தில் விம்மியதாகவும் ஜாஃபா கூறுகிறார்.
சுவரில் துளை
இதற்கிடையில், இந்தியாவின் கொள்கைத் திட்டக் குழுவின் தலைவர் டி.பி தர், பாகிஸ்தானுக்கு வந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி விட்டு திரும்பிச் சென்றார். ஆனால் போர்க் கைதிகளின் நிலைமை பற்றிய முடிவு எதுவும் ஏற்படவில்லை.
அனைவரும் ஏமாற்றமடைந்தாலும், விமானப்படை தளபதி திலீப் பாரூல்கர் மற்றும் மல்விந்தர் சிங் கரேவால் இருவரும் அதிக வேதனையடைந்தார்கள்.
1971 யுத்தத்திற்கு முன்னர், ஒருமுறை தனது சகாக்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, எப்போதாவது அவரது விமானம் பிடிபட்டால், எதிரியின் சிறையில் இருக்க மாட்டேன், அங்கிருந்து தப்பிக்க முயற்சிப்பேன் என்று பாரூல்கர் கூறியிருந்தார். அந்த வார்த்தைகளை தற்போது உண்மையிலுமே நடத்திக் காட்டினார் பாரூல்கர்.
சிறையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் பாரூல்கருடன் இணைந்து, கரேவாலும், ஹரீஷ் சிங்கும் செயல்பட்டனர்.
பச்சை நிற ஆடை
சிறையின் அறை எண் ஐந்தின் சுவரில், 21 X 15 அங்குல ஓட்டை போடவேண்டும். அது பாகிஸ்தானிய விமானப்படை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வளாகத்திற்குள் செல்ல உதவும், அங்கிருந்து ஆறடி சுவரை தாண்டிக் குதித்தால், மால் ரோடு என்ற சாலைக்கு சென்றுவிடலாம்.
56 செங்கற்களை அதன் இடத்தில் இருந்து அகற்றி விட்டு, பிறகு அதை சுவர் இருப்பது போலவே அடுக்கி வைத்து விடவேண்டும். சுவரில் இருந்து செங்கற்களை பிரித்து எடுக்கும்போது விழும் காய்ந்த சிமெண்ட் கலவை கொண்ட குப்பைகளை எங்காவது மறைத்து வைக்க வேண்டும். அதாவது சுவரை பார்த்தால் அப்படியே இருக்கும், ஆனால் தேவைப்படும்போது செங்கற்களை உடனடியாக அகற்றிவிடலாம்.
எலக்ட்ரீஷியன் ஒருவரின் திருப்புளியை ஒருவர் திருடி வைத்துக் கொண்டார். கோகா கோலா பாட்டிலில் சுவரை துளையிடும் கருவிகளை ஒருவர் ஏற்பாடு செய்து வைத்தார்.
இரவு பத்து மணிக்கு பிறகு சுவரில் இருந்து செங்கற்களை பிரித்தெடுக்கும் பணியில் திலீப் பாரூல்கரும், கரேவாலும் தொடங்குவார்கள். ஹைரியும், சாடியும் ரோந்துக்கு யாராவது வருகிறார்களா என்பதை கண்காணிப்பார்கள்.
ஜெனீவா ஒப்பந்தத்தின் விதிகளின் படி, இந்தியக் கைதிகளுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளமாக 50 பிராங்கிற்கு சமமான பாகிஸ்தான் ரூபாய் வழங்கப்பட்டது. அதில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள், எஞ்சிய பணத்தை சேமித்து வைப்பார்கள்.
இதற்கிடையில், சிறையில் பாகிஸ்தானிய பாதுகாவலராக பணியாற்றிய ஒளரங்கசீப் என்பவர் தையல் வேலையும் செய்பவர் என்பதை பேச்சுவாக்கில் பாரூல்கர் அறிந்துகொண்டார்.
இதை பயன்படுத்திக் கொண்ட அவர், ஒளரங்கசிப்பிடம் பேச்சுக் கொடுக்கும்போது, இந்தியாவில் பட்டான் சூட் கிடைப்பதில்லை. எங்களுக்கு அதை அணிந்து பார்க்க ஆசையாக இருக்கிறது. எங்களுக்காக தைத்துக் கொடுப்பீர்களா என்று கேட்டார்.
பாரூல்கர் கேட்டுக்கொண்டபடி பச்சை நிறத்தில் பட்டான் சூட் என்ற ஆடையை தைத்துக் கொடுத்தார் ஒளரங்கசீப். கம்பி மற்றும் பேட்டரியின் உதவியுடன் ஊசியியை காந்த ஊசியாக மாற்றி பார்ப்பதற்கு ஃபவுண்டர் பேனா போல் தோற்றமளிக்கும் திசைகாட்டி ஒன்றை உருவாக்கினார் காமத்.
புயலும், பெருங்காற்றும் வீசும்போது சிறையில் இருந்து தப்பித்தனர் பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று காவலாளிகள் விடுமுறை மனநிலையில் சற்று எச்சரிக்கை குறைவாக இருப்பார்கள் என்று கணித்தார் பாரூல்கர்.
ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று இரவு, இடி மின்னல் ஓசை கேட்டது. அன்று அவர்களின் செங்கற்களைப் பெயர்த்து எடுக்கும் பணியும் முடிவடைந்தது.
சிறிய துவாரத்தின் வழியாக மூன்று பேர் வெளியே வந்து சுவரின் அருகே காத்திருந்தார்கள். அவர்கள் வெளியே சுவாசித்தது சுதந்திரக் காற்றை மட்டுமல்ல, புயல் காற்றையும்தான்.
அவர்கள் வெளியேறிய இடத்திற்கு அருகில் கட்டில் ஒன்றில் சிறைக் காவலர் ஒருவர் அமர்ந்திருந்தார். சற்றே அச்சத்துடன் அவரைக் கவனித்தபோது, புயல் காற்று தூசியில் இருந்து பாதுகாப்பாக தலையில் கம்பளியை போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார்
வெளிப்புற சுவரை ஒட்டியிருந்த மால் ரோட்டை உற்று கவனித்தார்கள். புயலும் மழையும் வீசிய அந்த இரவு நேரத்தில் சாலையில் ஆள் அரவமே இல்லை. இரவுகாட்சி திரைப்படம் பார்த்து முடித்தவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
கட்டிலில் அமர்ந்திருந்த காவல்காரர், ஒருமுறை தலையை வெளியே தூக்கிய போது மழை வேகமாக பெய்ததை பார்த்து மீண்டும் தலையை மூடியபடியே, கட்டிலை தூக்கிக்கொண்டு விமானப்படை வேலைவாய்ப்பு அலுவலகத்தை நோக்கி ஓடினார்.
சரியான சந்தர்ப்பம் கிடைத்ததை பயன்படுத்திக் கொண்ட மூவரும் சுவரேறி குதித்தனர். வெளியேறிய அனைவரும் அந்த பட்டான் சூட்டை அணிந்திருந்தனர், மால் ரோட்டில் சென்று இரவு நேர சினிமா பார்த்துவிட்டு நடந்து கொண்டிருந்த மக்களுடன் கலந்துவிட்டனர்.
தாங்கள் அனைவரும் அதி உயர் பாதுகாப்புக் கொண்ட பாக்கிஸ்தானில் சிறைச்சாலையில் இருந்து வெளியேறிவிட்டது சற்று நேரத்திற்கு பிறகு தான் அவர்களுக்கு உறைந்தது. லெப்டினன்ட் ஹரிஷ் சிங் 'விடுதலை!' என்று உரக்கக் கத்தினார்.
அதற்கு பதிலளித்த லெப்டினென்ட் மல்விந்தர் சிங் கரேவால் 'இன்னும் இல்லை' என்று அழுத்தமாக சொன்னார்.
கிறித்துவ பெயர்
உயரமாக வாட்டசாட்டமாக இருந்த கரேவால் தாடி வைத்திருந்தார். அவருடைய தலையில் முடியும் அதிகமாக இருந்ததால் பார்ப்பதற்கு அவர் பட்டானியரைப் போலவே தோற்றமளித்தார்.
அவரது அருகில் நடந்துக் கொண்டிருந்த லெப்டினெண்ட் திலீப் பாரூல்கரும் தாடி வைத்திருந்தார். அவரும் பட்டான் சூட் அணிந்திருந்தார்.
தங்களுடைய பெயர் கேட்கப்பட்டால் உண்மையான பெயரைச் சொல்லாமல் கிறித்துவ பெயர்களை சொல்லவேண்டும் என்று முடிவு செய்து கொண்டார்கள். முஸ்லிம் என்று சொல்லமுடியாது. ஏனெனில் யாருக்கும் நமாஸ் படிக்க வராது. இந்திய விமானப்படையில் கிறித்துவர்களுடன் வேலை செய்திருப்பதால் அவர்களின் நடவடிக்கைகள் ஓரளவுக்கு தெரியும் என்பதால் இந்த முடிவு. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டுமல்லவா?
திலீப்பின் பெயர் ஃபிலிப் என்று மாறியது. கரேவாலின் பெயர் அல் அமீர் என்று மாறியது.
இவர்கள் இருவரும் லாகூரில் பி.ஏ.எஃப் நிலையத்தில் பணியாற்றுபவர்கள் என்று சொல்வதாக முடிவானது. சிங்கின் பெயர் ஹாரோல்ட் ஜேகப், அவர் ஹைதராபாத் சிந்த் பாகிஸ்தான் விமானப்படையில் பணிபுரிபவராக அவதாரம் எடுத்தார்.
இதெல்லாம் யாராவது இவர்களிடம் விசாரித்தால் சொல்வதற்காக இவர்கள் வசனம் எழுதி உருவாக்கிய கதையும் கதாபாத்திரங்களும் என்பது கேட்பதற்கே சுவையாக இருக்கிறது.
பெஷாவருக்கு பேருந்து பயணம்
மழையில் நனைந்து கொண்டே வேகமாக நடைபோட்ட அவர்கள், பேருந்து நிலையத்திற்கு வந்தார்கள். பெஷாவர் செல்லும் பயணிகள் வாருங்கள் என்று கூவும் ஓசை, இவர்களின் காதில் தேனாக வந்து விழுந்தது. மூவரும் பேருந்தில் ஏறி அமர்ந்தார்கள்.
காலை ஆறு மணிக்கு பெஷாவர் சென்றடைந்த அவர்கள், ஜம்ரூத் சாலைக்கு செல்வதற்காக தாங்கே என்ற இடத்தில் இறங்கி நடந்தார்கள்.
பிறகு, அங்கிருந்து ஏறிய பேருந்தில் இடமில்லை. பேருந்து நடத்துனர் அவர்களை பேருந்தின் கூரையில் ஏறி அமரச்சொன்னார். பேருந்தின் கூரையில் அமர்ந்தவாறே பாகிஸ்தானை பார்த்தவாறே ஜம்ரூத் சென்றாடைந்தனர். அங்கு ஒரு சாலையில் 'பழங்குடியின பகுதிக்கு செல்லும் பாதை. எனவெ இந்த பாதையில் செல்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும், சாலையைவிட்டு விலகிச் செல்லவேண்டாம், பெண்களை ஒருபோதும் புகைப்படம் எடுக்கவேண்டாம்' என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தது.
அங்கிருந்து மற்றொரு பேருந்து மூலமாக காலை ஒன்பதரை மணி அளவில் லண்டி கோதல் சென்றடைந்தார்கள். அங்கிருந்து ஆப்கானிஸ்தான் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அருகில் இருந்த தேநீர் கடைக்கு சென்று தேநீர் அருந்தினார்கள். அருகில் அமர்ந்திருந்தவரிடம் இங்கிருந்து லண்டிகானா எவ்வளவு தூரம் என்று விசாரித்தற்கு அங்கு இருந்தவர்களுக்கு விவரம் தெரியவில்லை.
உள்ளூர்வாசிகளின் தலையில் எதாவது ஒருவித தலைப்பாகை அணிந்திருப்பதை பார்த்த திலீப், அவர்களில் இருந்து மாறுபட்டு தெரியக்கூடாது என்று உடனடியாக தலைப்பாகைகளை வாங்கிவிட்டார்.
கரேவாலுக்கு தலைப்பாகை சிறியதாக இருந்ததால் அதனை மாற்றுவதற்காக, அந்த கடைக்கு சென்றபோது, லண்டிவானாவுக்கு செல்வதற்கு 25 ரூபாய் என்று அழைக்கும் குரல் கேட்டது.
தாசில்தார் அர்ஜுன்பீஸ்க்கு சந்தேகம் ஏற்பட்டது
அப்போது அங்கிருந்த ஒருவர் நீங்கள் லண்டிகானாவுக்கு போகவேண்டுமா? எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்.
திலீப்பும் கேரியும் புனையப்பட்ட கதையை சொல்லிவிட்டார்கள். உடனே கேள்வி கேட்டவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இங்கு லாண்டிவானா என்ற பெயரில் இப்போது இடமே இல்லையே? அது ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகு பெயர் மாற்றம் செய்தாயிற்றே என்று கேள்வி எழுப்பினார்.
அவருக்கு ஏற்பட்ட சந்தேகம் என்னவென்றால், இவர்கள் வங்காளிகள், ஆப்கானிஸ்தான் வழியாக வங்கதேசத்திற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதே. நாங்கள் பார்ப்பதற்கு வங்காளிகள் போலவா இருக்கிறோம் என்று சிரித்துக் கொண்டே கேட்டார். நீங்கள் எப்போதாவது வங்காளிகளை பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார்.
அவர்கள் சொன்னதை தாசில்தார் கே.அர்ஜுன்பீஸ் நம்பவில்லை. தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கும் இவர்கள் சொன்னதை நம்பாமல் சிறைக்கு அனுப்பப்போவதாக சொல்லிவிட்டார்கள்.
எஸ்.டி உஸ்மானின் தொலைபேசி அழைப்பு
வேறு வழியில்லாமல், பாகிஸ்தான் விமானப்படையில் பணிபுரியும் எஸ்.சி உஸ்மானிடம் தொலைபேசியில் பேசவேண்டும் என்று திலீப் சொன்னார். உஸ்மான் ராவல்பிண்டி சிறையின் கண்காணிப்பாளராக இருந்தார். அவர்தான் போர்க்கைதிகளுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று கேக் கொண்டு வந்து கொடுத்தவர்.
திலீப் அவரிடம் தொலைபேசியில் பேசியது என்ன தெரியுமா?, 'சார் உங்களுக்கு இதற்குள் விஷயம் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் மூவரும் லண்டிகோதலில் இருக்கிறோம். தாசில்தார் எங்களை தடுத்து வைத்திருக்கிறார். உங்கள் ஆட்களை அனுப்ப முடியுமா?'
தாசில்தாரின் தொலைபேசியை கொடுக்கச் சொன்ன உஸ்மான், அவர்களை சிறையில் வையுங்கள், ஆனால் அடிக்கவேண்டாம் என்று உத்தரவிட்டார்.
பிபிசியிடம் பேசிய திலீப் பாரூல்கர், அந்த இக்கட்டான பரபரபான தருணங்கள் இன்றும் மனதில் பசுமையாக இருப்பதாக நினைவுகூர்ந்தார்.
அங்கு ராவல்பிண்டி சிறையில் 11 மணிக்கு பரபரப்பு ஏற்பட்டது. கைதிகள் தப்பித்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது, மீதமிருந்த போர்க் கைதிகள் வெளிச்சமே இல்லாத இருட்டறைக்குள் தள்ளப்பட்டனர்.
அதில் ஒரு பாதுகாவலர் இவ்வாறு சொன்னார், 'இவர்கள் அனைவரையும் சுட்டுத் தள்ளவேண்டும். அவர்கள் தப்பிப்பதற்காக சுவரில் துளையிடுவதை இவர்களும் பார்த்துக் கொண்டு தானே இருந்தார்கள்? இவர்களும் தப்பிக்க முயன்றார்கள், தடுக்க முயன்றபோது சுடப்பட்டார்கள் என்று சொல்வோம்'.
'எதிரி எப்போதுமே எதிரிதான். அவர்களை எவ்வளவு நன்றாக நடத்தினாலும், எத்தனை நம்பினாலும் பதிலுக்கு துரோகம் தான் செய்வார்கள்' என்று சிறையின் துணை கண்காணிப்பாளர் ரிஜ்வி கடிந்து கொண்டார்.
விடுதலை பெற்று தாயகம் திரும்புதல்
பிறகு போர்க் கைதிகள் அனைவரும் லாயல்புர் சிறைக்கு மாற்றப்பட்டனர். அங்கு இந்திய ராணுவத்தின் போர்க் கைதிகளும் வைக்கப்பட்டிருந்தனர். அங்கு ஒருநாள் திடீரென்று வந்தார் பாகிஸ்தான் அதிபர் ஜுல்ஃபிகர் அலி புட்டோ.
உங்களை பற்றி இந்திய அரசுக்கு எந்தவிதக் கவலையும் இல்லை. ஆனால், உங்களை விடுவிக்கலாம் என்று நானே சுயமாக முடிவெடுத்திருக்கிறேன்' என்று அவர் கூறினார்.
1972 டிசம்பர் மாதம் முதல் நாளன்று போர்க் கைதிகள் வாகா எல்லையை தாண்டி தாயகத்திற்குள் திரும்பினார்கள். தங்களை விடுவிக்க இந்திய அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை, புட்டோவின் விருப்பதாலேயே தாங்கள் விடுவிக்கப்பட்டோம் என்ற மனத்தாங்கலுடன் இந்திய எல்லைக்குள் அவர்கள் நுழைந்தனர்.
ஆனால் இந்திய எல்லைக்குள் வரவேற்க காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்களும், அவர்கள் எழுப்பிய முழக்கங்களும், அவர்களின் மன வருத்தத்திற்கு மருந்திட்டன. மாலை மரியாதையுடன் அவர்கள் நாட்டிற்குள் வந்தனர்.
அப்போதைய பஞ்சாப் முதலமைச்சர் கியானி ஜெயில் சிங் போர்க் கைதிகளை வரவேற்க நேரில் வந்திருந்தார். வாகா எல்லைப் பகுதியில் இருந்து அமிர்தசரஸ் வரையில் 22 கிலோமீட்டர் தொலைவிற்கு அவர்களுக்கு நூற்றுக்கணக்கான வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
கரேவால் பரேலிக்கு சென்றார். தனது ஓராண்டு ஊதியமான 2400 ரூபாயில் பியட் கார் ஒன்றை வாங்கினார். திலீப் விமானப்படை தலைவர் பி.சி. லாலுக்கு ஒரு பவுண்டன் போனாவை பரிசாக வழங்கினார். அது அவர்கள் தப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட திசைகாட்டி பேனா.
திலீப் பாரூல்கரின் பெற்றோர் அவருக்கு உடனடியாக திருமணம் செய்து வைத்தார்கள். இந்தியா திரும்பிய ஐந்து மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற தன்னுடைய திருமணத்திற்கு, பாகிஸ்தானி சிறையில் தன்னுடன் இருந்த ஸ்க்வாட்ரன் தலைவர் ஏ.வி காமத்துக்கு திருமண அழைப்பு அனுப்பினார்.
'எனக்கு விருப்பமான சிறையில் கைதாகப்போகிறேன்'என்ற வாசகம் கொண்ட டெலிகிராம் அழைப்பிதழ் அது
No comments:
Post a Comment