Tuesday 14 August 2018

A SHORT HISTORY OF FISHERMAN , FORMERELY CHOLA SOLDIERS




A SHORT HISTORY OF FISHERMAN ,
FORMERELY CHOLA SOLDIERS






வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 மீனவர்களை சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து அறிக்கை விடுத்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள், "கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களின் நாட்டுப் படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று கோரியுள்ளார்.

மீன்பிடிப்பில் ஈடுபட்டு, சிங்களப்படையால் கைது செய்யப்பட்டுள்ள 27 பேரில், 22 பேர் இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆகும். இவர்களில் 21 பேர் வன்னியர்கள். இவர்களின் வரலாறு ஒரு வீரமிக்க போர் வரலாறு ஆகும்!

சுமார் 850 ஆண்டுகளுக்கு முன்பு சிங்களப்படையினர் தென் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து கிராமங்களைக் கொளுத்தினர், மக்களைக் கொன்றனர். சிங்களப் படையின் அட்டூழியத்தைத் தடுக்க சோழ மன்னர் தன்னுடைய படைவீரர்களை அனுப்பினார்.

சோழப்படையினர் சிங்களப் படையைத் தோற்கடித்து, சிங்களத் தளபதிகளின் தலையைக் கொய்து மதுரைக் கோட்டை முகப்பில் தொங்கவிட்டனர். அப்போது சிங்களப்படையினைத் தோற்கடித்தவர்கள் இப்போதும் புதுக்கோட்டை - இராமநாதபுரம் மாவட்டங்களில் வாழ்கின்றனர்.

அவர்களின் வழிவந்தவர்கள் தான் இப்போது சிங்களப்படையால் கைது செய்யப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

அதுகுறித்த வியப்பளிக்கும் வரலாற்றை காண்போம்.

------------------- 
தொண்டி: சோழர் படையின் வரலாற்று பின்னணி
-------------------

இரண்டாம் இராசாதிராச சோழன் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1163 – 1173) பாண்டிய நாட்டில் பராக்கிரம பாண்டியனுக்கும், குலசேகர பாண்டியனுக்கும் இடையே அரசுரிமை மோதல் ஏற்பட்டது. சிங்கள மன்னன் பராக்கிரம பாகுவின் உதவியை பாராக்கிரம பாண்டியன் நாடினான். பராக்கிரம பாகு தனது தளபதி 'லங்காபுர தண்டநாதா' என்பவன் தலைமையில் படையை அனுப்பினான். பின்னர் ‘ஜகத் விஜயன்’ என்பவன் தலைமையில் இன்னொரு படையையும் அனுப்பினான்.

இராமேசுவரம், சிறுவயல், பொன்னமராவதி, தேவிப்பட்டனம், காளையார் கோவில், தேவிக்கோட்டை, மணமேல்குடி என பல ஊர்களிலும் சிங்களப் படையினர் கொடும் தாக்குதல் நடத்தினர். குலசேகரப் பாண்டியனைத் தோற்கடித்து பராக்கிரம பாண்டியனுடைய மகனாகிய வீரபாண்டியனை அரியணை ஏற்றினர்.

அக்காலத்தில் 'சிங்களப் படையினரின் அட்டூழியங்கள் சோழநாட்டிலும் கடும் சினத்தை ஏற்படுத்தி இருந்ததை' ஆர்ப்பாக்கம் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.

இந்நிலையில், சிங்கள படையிடம் தோல்வியுற்ற குலசேகர பாண்டியன், இரண்டாம் இராசாதிராச சோழனிடம் உதவி கேட்டான். இராசாதிராச சோழன் தனது படைத்தலைவர் 'திருச்சிற்றம்பலமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன்' தலைமையில் பெரும் படையினரை இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி மற்றும் பாசிப்பட்டினத்துக்கு அனுப்பினார்.

இரண்டாம் இராசாதிராசன் அனுப்பிய சோழப் படை வீரர்கள், சிங்கள மன்னனின் படையைத் தோற்கடித்தனர். 'லங்காபுர தண்டநாதா' மற்றும் ‘ஜகத் விஜயன்’ ஆகிய இரு சிங்களப் படைத்தளபதிகளின் தலையைக் கம்பில் குத்தி மதுரைக் கோட்டை முகப்பில் வைத்தனர். பின்பு வீரபாண்டியனை ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டு, குலசேகர பாண்டியனை ஆட்சியில் அமர்த்தினர்.

இந்த போருக்கு பின்னர் படைத்தளபதி பெருமானம்பிப் பல்லவராயன் காலமானார். அவருக்கு பின்னர் 'அம்மையப்பன் ஆன அண்ணன் பல்லவரான்' என்பவர் படைத்தளபதி ஆனார். தோற்று ஓடிய சிங்களப்படைகள் மீண்டும் ஒரு போருக்கு தயாராவதாக தெரிந்தவுடன் அண்ணன் பல்லவரான் தலைமையில் மீண்டும் படையெடுத்து சென்று, இரண்டாவது முறையாகவும் சிங்களப்படைகளை தோற்கடித்தனர். இந்தப் போர் கி.பி. 1169 - 1177 ஆண்டுகளுக்கு இடையே நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

----------------------
"சம்புவராயர் யாகம்"

சோழர்களின் படையாக சென்றவர்கள் சம்புவராயர்கள். இவர்கள் பல்லவர் மரபில் வந்த போர்ப்படையினர். இவர்கள் சோழர் படையின் கீழ் படைத்தளபதிகளாக இருந்தனர். சோழப்பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் தனி அரசினை அமைத்தார்கள்.

சிங்களப் படைகளுக்கு எதிராக சோழப்படையின் படைத்தளபதியாக பல்லவராயன், படையெடுத்து சென்ற அதே காலத்தில், பல்லவராயனுடைய தந்தை 'எதிரிலி சோழ சம்புவராயன்' சோழப்பேரரசின் கீழ் சிற்றரரசராக தொண்டை மண்டலத்தில் படைவீட்டிலிருந்து ஆட்சி நடத்தினார்.

சிங்களர்களுடனான போரின் தொடக்கத்தில் சிங்களப்படையினரே வெற்றி பெற்றதால், சம்புவராயர் தன்னுடைய மகன் பல்லவராயன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, உமாபதி சிவர் எனும் ஞானசிவ தேவர் சிவாச்சாரியரைக் கொண்டு 28 நாள் அகோரபூஜை நடத்தினார். சிங்களப்படை தோற்ற செய்தி வந்ததும் ஆர்ப்பாக்கம் எனும் ஊரை ஞானசிவ தேவருக்கு தானமாக அளித்தார்.

மேற்கண்டவாறு, இரண்டாம் இராஜாதிராஜன் காலத்தில் பல்லவராயர்கள் சிங்களப்படை மீது போர்த்தொடுத்ததும், சம்புவராயன் எனும் சிற்றரசனின் மகன்தான் பல்லவராயன் எனும் படைத்தளபதி என்பதும் உறுதியாகிறது. இதுகுறித்த வரலாற்று செய்திகள் மயிலாடுதுறை பல்லவராயன் பேட்டை கல்வெட்டு, திருவள்ளூர் திருவாலங்காடு கல்வெட்டு, திருவண்ணாமலை ஆர்ப்பாக்கம் கல்வெட்டு ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.

"இராசாதிராசன் ஆட்சியில் சோழர்க்கும் ஈழ அரசர்க்கும் இரண்டு முறை போர் நடத்தது. இருமுறையும் பாண்டிநாடு சம்பந்தமாகவே நடந்தது. முதற்போரில் வெற்றி பெற்ற சோழர் படைத்தலைவன் பல்லவராயன், இரண்டாம் போரில் வெற்றிபெற்ற பெருவீரன் அண்ணன் பல்லவராயன், இந்த இருபோர்களிலும் ஈழத்தரசன் காலாட்படையையும் கப்பற்படையையும் இழந்தான். இரு போர்கட்கும் பிறகு இராசாதிராசன், மதுரையும் ஈழமும் கொண்டருளிய தேவர், ‘என்னும் விருதுப் பெயர் பூண்டான்" என சோழர் வரலாறு எனும் நூலில் டாக்டர். மா. இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார்.

-------------------
"சிங்கள ஊடுருவலைத் தடுக்கும் அரணாக சோழப் படை"
-------------------

சிங்களர்கள் மீண்டும் தென் தமிழ்நாட்டின் மீது போர் தொடுக்க வாய்ப்பிருக்கிறது என்பதனால் பாண்டிய நாட்டு கடற்கரை பகுதியில் சோழப் படைகளை காவலுக்கு வைத்தான் இரண்டாம் இராசாதிராசன். அவ்வாறு சிங்களப் படைகள் பாண்டிய நாட்டுக்குள் நுழையாமல் அரணாக நிறுத்தப்பட்டவர்கள் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆகும். அவர்கள் இப்போதும் புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கடலோரங்களில் வாழ்கின்றனர்

பொன்னகரம், வடக்குப் புதுக்குடி, தெற்கு புதுக்குடி, அய்யம்பட்டினம், பாசிப்பட்டினம், தாமோதரன்பட்டினம், சோழன் தொண்டி, நம்புதாளை, தேவிப்பட்டினம், முடிவீரன் பட்டினம் என பாண்டியநாட்டுக் கடலோர எல்லைப் பகுதியில் அவர்கள் சுமார் 30,000 பேர் வாழ்கிறார்கள்.

சிங்களர்களின் கொட்டத்தை அடக்க சோழ மன்னன் அனுப்பிய அந்த படையினர்தான் அங்கு பூர்விக மக்களாக உள்ளனர். அவர்கள் படை நடத்தியதால் படையாட்சி என்று அழைக்கப்படுகிறார்கள்.

புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் வாழ்ந்த வன்னியர்கள், காலப்போக்கில் மீன்பிடிப்பதை முதன்மைத் தொழிலாகக் கொண்டனர். இந்த பரம்பரையில் வந்த சீனிக்குப்பன் படையாட்சி என்பவரால்தான், கச்சத்தீவில் புனித அந்தோணியார் தேவாலயம் கட்டப்பட்டது.

-------------------
"வட எல்லையையும் காத்து நின்ற சம்புவராயர்கள்"
-------------------

துங்கபத்திரை நதிக்கரையில் சங்கம மரபினரான ஹரிஹரன்-புக்கன் உள்ளிட்ட சகோதரர்களால் விஜயநகர அரசு 1336-ல் உருவானது. இந்த புக்கனின் மகன் குமார கம்பணன். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவதற்காக தமிழகத்தின் மீது படையெடுத்தான். அப்போது அவனது சாம்ராஜ்ய விரிவாக்கத்துக்கு மிகப்பெரிய தடையாக இருந்தவர்கள் வன்னியர்கள் (சம்புவராயர்கள்).

தமிழ்நாட்டைக் கைப்பற்ற வேண்டுமென்றால் - அதற்கு வன்னியர் ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் குமார கம்பணனின் முக்கிய இலக்காக இருந்தது. இதனை 1380 ஆண்டு வாக்கில் எழுதப்பட்ட மதுராவிஜயம் எனும் சமற்கிருத காவியம் குறிப்பிடுகிறது.

'தமிழ்நாட்டை வெற்றியடைய வேண்டுமானால் நீ முதலில் வன்னியர் ஆட்சியை வீழ்த்த வேண்டும்' என்று குமார கம்பணனிடம் அவனது தந்தை புக்கன் அறிவுரைக் கூறினான். அதனை ஏற்று வன்னியர் ஆட்சியை வீழ்த்தினான் என்கிறது குமார கம்பணனின் மனைவி கங்காதேவி எழுதிய மதுரா விஜயம் நூல்.

குமார கம்பணன் தமிழ்நாட்டை கைப்பற்றினான், வடதமிழ்நாட்டை ஆட்சி செய்த வன்னிய மன்னர்களை தோற்கடித்தான். அதன்பின்னர் மதுரையை ஆண்ட முஸ்லிம் சுல்தான்களை வெற்றி கொண்டான். அதுவே தமிழ்நாட்டில் தெலுங்கு சாம்ராஜ்ய ஆதிக்கமாக விரிவடைந்தது.

ஹரிஹர சாஸ்திரி, சுப்ரமணிய சாஸ்திரி ஆகிய வரலாற்று அறிஞர்கள் 1924 ஆம் ஆண்டில் எழுதிய 'மதுராவிஜயம்' குறித்த ஆய்வு நூலில், முதலில் வன்னிய ராஜாவை தோற்கடித்து அதன் பின்னர் துருக்க ராஜாவை தோற்கடிக்க வேண்டும் என்று குமார கம்பணனின் தந்தை ஆலோசனை கூறியதை குறிப்பிட்டுள்ளனர். (attack and conquer the "Vannyarajas" further south and the Turushkarajas reigning at Madhura - Madhura Vijaya or Virakamparaya Charita - An Historical Kavya by Ganga Devi, by G. Harihara Sastri and V. Srinivasa Sastri 1924.)

இதே கருத்தை 'வன்னியர்களின் தலைவன் சம்புவராயனை தோற்கடிக்க வேண்டும்' என்று குமார கம்பணனின் தந்தை ஆலோசனை கூறியதாக கர்நாடக பல்கலைக்கழகத்தின் கங்காதேவியின் மதுராவிஜயம் எனும் ஆய்வு நூலும் குறிப்பிடுகிறது. (Bukka I advised his son Kumara Kampana to march against the Shambuvaraya...The Sambuvaraya is the leader of "Vanniyas" : from Gangadevi's Madhravijayam - A Critical Study, by BA. Dodamani, Karnataka University 1991)

- இப்படி, தெற்கே சிங்கள படையெடுப்பையும், வடக்கே தெலுங்கு ஆதிக்கத்தையும் எதிர்த்து நின்ற மரபை சேர்ந்த வன்னியர்களின் வாரிசுகள் - இப்போது சிங்களத் தீவில் சிறையில் இருக்கின்றனர்.

----------------------
"வரலாற்று ஆதாரம்"
----------------------

1. இலங்கையின் வரலாற்று நூலான 'மகாவம்சம்', பராக்கிரம பாகுவின் தளபதியான 'லங்காபுர தண்டநாதா' என்பவன் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்தததைக் குறிப்பிடுகிறது.

2. சிங்களத் தளபதி லங்காபுர தண்டநாதா என்ன ஆனான் என்பதை 'திருவாலங்காடு‘ மற்றும் ‘பல்லவராயன் பேட்டை‘ கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சிங்களப்படையைத் தோற்கடித்து 'லங்காபுர தண்டநாதா' மற்றும் 'ஜகத் விஜயன்' ஆகிய படைத்தளபதிகளின் தலையைக் கொய்து, அதனை கம்பில் குத்தி மதுரைக் கோட்டையின் வாயிலில் சோழப்படையினர் தொங்கவிட்டனர் - என பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டுக் கூறுகிறது.

3. சிங்களர்களுக்கு எதிராக இராசாதிராசன் வெற்றிகொண்டதைக் குறிப்பிடும் இக்கல்வெட்டு மயிலாடுதுறைக்கு அருகே உள்ள பல்லவராயன் பேட்டையில் இருக்கிறது. இந்த ஊரின் பெயரே - சோழப்படைத் தளபதி பல்லவராயன் பெயரில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஊரில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலைக் கட்டியதும் இதே பல்லவராயன்தான்.

4. சிங்களப்படையைத் தோற்கடித்த பல்லவராயனின் தந்தையின் பெயர் எதிரிலிச் சோழ சம்புவராயர் என்று HISTORICAL SKETCHES OF ANCIENT DEKHAN எனும் நூலில் வரலாற்று அறிஞர் சுப்பிரமணிய அய்யர் குறிப்பிட்டுள்ளார். இதே தகவலை வரலாற்று அறிஞர் கிருஷ்ணசாமி அய்யங்காரும் குறிப்பிட்டுள்ளார்.

5. இரண்டாம் இராசாதிராசன் தனது படையினரை பல்லவராயன் தலைமையில் கடற்கரை நகரமான தொண்டிக்கும், பாசிப்பட்டனத்துக்கும் அனுப்பிய செய்தியை SOUTH INDIA AND HER MUHAMMADAN INVADERS எனும் நூலில் வரலாற்று அறிஞர் கிருஷ்ணசாமி அய்யங்கார் குறிப்பிட்டுள்ளார். இப்போதும் பாசிப்பட்டினத்தில் பெரும்பான்மையினராகவும் தொண்டியில் கணிசமாகவும் வன்னியர்கள் வாழ்கின்றனர்.

6. சிங்களப்படைகளுக்கு எதிராக படையெடுத்துச் சென்றவர்களில் ஒருவராக 'அம்மையப்பன் பாண்டிநாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவராயன்' என்பவரின் பெயரை 'பிற்கால சோழர் வரலாறு’ எனும் நூலில் வரலாற்று அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் குறிப்பிட்டுள்ளார்.

7. சம்புவராயர்களின் ஆட்சியை வன்னிய ராஜாக்கள் என்று 1380 ஆண்டு வாக்கில் எழுதப்பட்ட மதுராவிஜயம் எனும் சமற்கிருத காவியம் குறிப்பிடுகிறது.

No comments:

Post a Comment