Saturday 11 August 2018

AKSHARA HAASAN , INTERVIEW,




AKSHARA HAASAN , INTERVIEW





“எனது சொந்த மொழியில் முதல் படம் வெளியாகிறது. நான் என்ன நினைக்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிற படமாக ‘விவேகம்’ இருக்கும். மக்களின் வரவேற்பை எதிர்கொள்ள ரொம்ப ஆவலோடு இருக்கிறேன்” என்று சிரித்துக்கொண்டே பேசத் தொடங்கினார் அக்‌ஷரா ஹாசன். உதவி இயக்குநர், இந்தியில் தனுஷுடன் நடித்தது ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழில் ‘விவேகம்’ படத்தில் அறிமுகமாக இருக்கும் அவரிடம் உரையாடியதிலிருந்து….

அப்பா கமல், அக்கா ஸ்ருதி ஆகிய இருவரும் நீங்கள் தமிழில் அறிமுகமாவது பற்றி என்ன கூறினார்கள்?

கடுமையாக உழைக்க வேண்டும், நேர்மையாக இருக்க வேண்டும் என்றார்கள். ஒவ்வொரு படத்திலும் நூறு சதவீதம் உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்று அப்பா அடிக்கடி சொல்வார். அமிதாப் பச்சன் சாருடன் நடிக்கும்போது ஒரு விஷயத்தைத் தெரிந்துகொண்டேன். அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்தையுமே தனது முதல் படமாக நினைப்பார். என்னுடைய அப்பாவும் அப்படி நினைப்பவர்தான். அப்பா இந்த அளவு வளர்ச்சிபெற எவ்வளவு கஷ்டங்களைக் கடந்து வந்திருப்பார், வாழ்க்கை எப்போதுமே போராட்டங்கள் நிறைந்ததுதான்.

அவருடைய திரையுலக வாழ்க்கையில் சந்தோஷத்தைக் குறைவாகத்தான் பார்த்திருப்பார். கஷ்டங்களை அதிகமாகப் பார்த்து இந்த அளவுக்கு வந்திருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய விஷயம். சில கடினமான தருணங்களில் என்னோடு பேசியுள்ளார். அப்போதுதான் அப்பா - மகள் உறவு இன்னும் நெருக்கமானது. அவை வாழ்க்கையின் சிறப்பான தருணங்கள் என நினைக்கிறேன். “அஜித் சார் ஒரு அற்புத மனிதர். அவரோடு தமிழில் அறிமுகமாகிறாய். நீ ரொம்ப கொடுத்துவைத்தவள்” என்று அக்கா பரவசத்தோடு பேசினார்.

அப்பாவின் படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்த அனுபவம் இருக்கிறதா? உதவி இயக்குநராக ‘சபாஷ் நாயுடு’வில் பணிபுரிந்த அனுபவம்?

ஒரு இயக்குநராக அப்பா நிறைய சவால்களைக் கொடுப்பார். ஒரு காட்சியை எடுப்பதற்கு அவர் கையாளும் உத்திகளைப் பார்ப்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவரிடம் கற்றுக்கொள்வதற்கு ஒரு படம் போதவில்லை. ‘சபாஷ் நாயுடு’ படப் பணிகள், வெளியீடு குறித்து அப்பாவுக்குத்தான் தெரியும். அவருடைய எண்ணத்தில் ஒரு திட்டம் வைத்திருக்கிறார்.

‘விருமாண்டி’ வெளியாகும்போது மும்பையில் ஒரு திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன். அங்கேயே அவருடைய ரசிகர்கள் சத்தம் போட்டுக் கொண்டாடினார்கள். இங்கே சென்னையில் அதுபோலப் பார்த்ததில்லை.

‘ஷமிதாப்’ படத்தில் தனுஷுடன் நடித்துள்ளீர்கள். ஹாலிவுட் படங்களில் நடிக்கும் அளவுக்கு அவர் வளர்ந்துவிட்டார். அதைப் பற்றி...

தனுஷ் படங்கள் பார்த்திருக்கிறேன். நடிப்பில் மிகவும் பலசாலி. அவர் இன்னும் உயரத்துக்குச் சொல்வார் என நினைத்தேன். ஹாலிவுட்டில் நமது நாட்டை எடுத்துரைக்க ஒருவர் சென்றிருக்கிறார் எனும்போது சந்தோஷமாக இருக்கிறது. அதில் நமக்குப் பெருமைதான்.

கமல் குடும்பத்திலிருந்து வந்திருப்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டுமே. அதை உணர்கிறீர்களா?

கண்டிப்பாக. எங்கள் குடும்பத்தின் பெயர் கெட்டுப்போகக் கூடாது என்பதில் ரொம்பக் கவனமாக இருக்கிறேன். ஏதாவது ஒரு விஷயம் செய்யும் முன்பு, இந்த விஷயம் தவறாக முடியுமா என்று ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பேன். அதற்குப் பிறகு களத்தில் இறங்கிவிடுவேன். எந்தவொரு விஷயத்திலும் அப்பாவின் பெயரைத் தவறாக உபயோகப்படுத்தியதில்லை. அவரது பெயரையும் கெடுக்க விரும்பவில்லை. அதே போன்று அப்பா - அக்கா - நான் மூவருமே வேலையைப் பற்றி வீட்டில் பேசுவதில்லை. பெரிய பிரச்சினை ஏதேனும் இருந்தால் அப்பா - அக்கா இருவரும் பேசிக்கொள்வார்கள். அவர்களைப் போன்று எனக்கு நிறைய அனுபவம் கிடையாது.

‘விவேகம்’ மற்றும் அஜித் பற்றி...

இக்கதையைக் கூறும் முன்பே, ‘இதற்கு நீங்கள் மட்டுமே சரியாக இருப்பீர்கள்’ என சிவா சார் சொன்னார். வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த கதாபாத்திரம் என்பதால் பொருத்தமாக இருப்பீர்கள் என்று கூறிவிட்டுத்தான் கதையையே சொன்னார். கதையைக் கேட்டதும் ஏற்றுக்கொள்ளும்விதமாக இருந்தது.

அஜித் சார் எப்போதுமே உண்மையான அன்புடன் இருப்பார். எந்தவொரு பிரச்சினையிருந்தாலும் ரொம்ப அமைதியாக ‘ஓ.கே.’ என்பார். அவரிடமிருந்து திரையுலக வெற்றியைக் கையாளும் விதத்தைக் கற்றுக்கொண்டேன். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். ஆனால், அவருடைய பேச்சில் அது தெரியவில்லை.

உதவி இயக்குநராகப் பணிபுரிந்து இருக்கிறீர்கள். எந்த மொழியில் நீங்கள் இயக்கும் முதல் படம் வரும்?

முதல் படம் தமிழில்தான் இயக்குவேன். நான் எழுதி வைத்துள்ள கதை தமிழ் மக்களுக்குத்தான் பொருந்தும். ஆனால், வேறு மொழிகளிலும் படம் இயக்கும் எண்ணமும் உள்ளது.

No comments:

Post a Comment