Monday 6 August 2018

CHANDRA BABU , HOW TO GET CINEMA CHANCE



CHANDRA BABU ,
HOW TO GET CINEMA CHANCE 




பரபரப்பான பகல் நேரம் அது... ஏராளமான கலைஞர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும் ஜெமினி ஸ்டுடியோ கேன்டீனில் சாப்பிட்டுக் கொண்டிருக்க, யாரும் கவனிக்கும் விதமான தனித்துவம் ஏதும் இல்லாத இளைஞர் ஒருவர் உள்ளே நுழைந்தார்.

'என்ன சாப்பிடறீங்க?' என்று, யாரும் அவரிடம் கேட்கவில்லை. கேன்டீனை நடத்தும் மணியனிடம், 'கொஞ்சம் தண்ணி கொடுங்க...' என்று கேட்டார், அந்த இளைஞர். அவர், தன் ஊழியர் ஒருவரை திரும்பிப் பார்க்க, அவர், ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்து வந்து கொடுத்தார்.

தண்ணீர் குவளையுடன், தனியே போன இளைஞர், தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து, ஒரு காகித பொட்டல த்தை எடுத்து பிரித்தார். அது, மயில் துத்தம்; உள்ளே போனால், உயிர் வெளியே போய்விடும். பொட்டலத்தை பிரித்து, அப்படியே தண்ணீரில் கொட்டி, கலக்கி, அருந்தினார். பின், தடுமாறியபடி வெளியேறினார். சில அடிகள் நடந்தவர், மேற்கொண்டு நடக்க முடியாமல், மயங்கி விழுந்தார்.

அவரைச் சுற்றி கூட்டம் கூடி விட்டது; அருகே இருந்த ஓய்வறையில் இருந்து, பலர் ஓடி வந்தனர். புரோகிராம் ஆபீசில் இருந்த, ஜெமினி ஸ்டுடியோ அதிகாரி சுந்தரவரதனுக்கு தகவல் தரப்பட்டது. அவசரமாக ஸ்டுடியோ வேனை வரவழைத்து, ஆழ்வார்பேட்டை, சங்கரா கிளீனிக்குக்கு அந்த இளைஞரை தூக்கிச் சென்றனர்.

ஒரு வழியாக அபாய கட்டத்தை தாண்டினாலும், மயக்க நிலையிலேயே இருந்தார், இளைஞர்.

இரவு, 1:30 மணி -
மெல்ல கண் விழித்த அவரை சுற்றி, 
போலீஸ் கான்ஸ்டபிள்கள், சப் - இன்ஸ்பெக்டர் ரங்காச்சாரி, சுந்தரவரதன், ஆடை அலங்கார கலைஞர், ஆர்.கணேஷ், (நடிகர் ஜெமினி கணேசன்) கேமராமேன் தம்பு, சீப் எக்சிக்யூட்டிவ் சர்மா ஆகியோர் நின்றிருந்தனர். விசாரணையை துவக்கினார்,

சப் - இன்ஸ்பெக்டர், ரங்காச்சாரி... 
'உன் பெயர் என்ன?'
'சந்திரபாபு...'
'தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்தாயா?'
'ஆம்...'
'ஏன்?'
'சினிமாவில் நடிக்க வந்தேன்; வாய்ப்பு கிடைக்கவில்லை...' என, பதில் சொல்லி, தன் சட்டைப் பையில் இருந்து, ஒரு கடிதத்தை எடுத்து, சுந்தரவர தனிடம் கொடுக்க, அவர் அதை படித்து, சப் - இன்ஸ்பெ க்டரிடம் கொடுத்தார்; அவர் வாசித்தார்...

'சார்... சினிமா சான்சுக்காக எத்தனையோ முறை, எஸ்.எஸ்.வாசனை சந்திக்க முயன்றேன்; முடியவில்லை. அதனால் தான் இந்த முடிவுக்கு வந்தேன். என் சாவுக்கு காரணம் நான் தான். எனக்கு முதன் முதலில் சிறிய அளவில், 'சான்ஸ்' கொடுத்த, 'மணிக்கொடி' பத்திரிகை எழுத்தாளர், 
பி.எஸ்.ராமையாவிடம் என் உடலை ஒப்படைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்...'
— இப்படிக்கு,
ஜே.பி.சந்திரபாபு.

போலீசார் யோசித்தனர். வேறு வழியில்லை;
தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். 
அங்கிருந்த வர்களிடம், 'சிகரெட் இருக்கா?' என்று கேட்டார், சந்திரபாபு.

தன்னிடம் இருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து நீட்டினார், சப் - இன்ஸ்பெக்டர்.

'ஸாரி... நான் பிளேயர்ஸ் பிடிக்கறதில்ல; கோல்ட் பிளேக் சிகரெட் கிடைக்குமா?' என்று கேட்டார். 
ஆள் அனுப்பி, வாங்கி வரச் செய்தார், ரங்காச்சாரி. சந்திரபாபுவின் விலாசத்தை வாங்கி, 'கோர்ட் சம்மன் வரும்போது ஆஜராக வேண்டும்...' என்று சொல்லிப் போனார், சப் - இன்ஸ்பெக்டர், ரங்காச்சாரி.

தன் தற்கொலை முயற்சிக்காகவும், அதன் பொருட்டு நேர்ந்த சிரமங்களுக்காகவும், சுற்றி இருந்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டார் சந்திரபாபு. பின், நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது, கோர்ட்டில் ஆஜரானார், சந்திரபாபு. அரசு தரப்பு சாட்சிகளாக தம்பு, சர்மா மற்றும் 
ஆர்.கணேஷ் (ஜெமினி கணேசன்) ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.

நீதிபதி துவங்கினார்...
'ஏன் தற்கொலை செய்ய துணிந்தாய்?'
'வாழ்க்கை வெறுத்துப் போச்சு; அதனாலேயே விஷம் குடித்தேன்...'
'இனிமேல் இப்படி செய்வியா?'
'சொல்ல முடியாது...'
'ஏன் அப்படி சொல்ற?'
உடனே, தன் பாக்கெட்டில் இருந்து தீப்பெட்டியை எடுத்த சந்திரபாபு, ஒரு தீக்குச்சியை எடுத்து பற்ற வைத்து, அந்த ஜுவாலை மீது, தன் உள்ளங்கையை வைத்தார்.
அதிர்ச்சி அடைந்த நீதிபதி, 'என்ன செய்கிறாய்?' என்றார்.
'நான் செய்ததை உங்களால் பார்க்க முடிகிறது; ஆனால், அச்சூட்டை உங்களால், உணர முடியாது...'

'நடிப்பதில் உனக்கு அவ்வளவு ஆர்வமா?' வியப்புடன் கேட்டார் நீதிபதி.

ஷேக்ஸ்பியரின் நாடக வசனம் ஒன்றை ஆங்கிலத்தில் பேசி, நடித்துக் காண்பித்தார் சந்திரபாபு.

அதை ரசித்த நீதிபதி, 'இவ்வளவு திறமையை வைத்துள்ள நீ, உயிரை விட துணிந்து விட்டாயே... நிச்சயம், உனக்கு நல்ல நேரம் வரும்; அதுவரை பொறுமையாக காத்திரு. முதல் முறை என்பதால், ஒரு ஆண்டுக்கு உனக்கு நன்னடத்தை ஜாமீன் தருகிறேன். தினமும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, கையெழு த்துப் போட வேண்டும்...' என்றார்.

சந்திரபாபுவின் தற்கொலை முயற்சி, 
எஸ்.எஸ்.வாசனு க்கு தெரியவந்தது. அப்போது, வாசனின், மூன்று பிள்ளைகள் என்ற படம் தயாராகிக் கொண்டிருந்தது. அப்படத்தில், சிறிய வேடத்தில் நடிக்க, சந்திரபாபுவுக்கு வாய்ப்பளித்தார்.

முடிவை தேடிப் போனவருக்கு, அதுவே, நல்ல துவக்கமாக அமைந்தது. இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் மிகத் தீவிரமடைந்திருந்த காலம் அது... தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அறவழி மற்றும் வன்முறை போராட்டம் கொழுந்து விட்டு எரிந்தது.
ராஜாஜியின் தலைமையில் சத்தியமூர்த்தி, வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோருடன், உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டார், 
ஜே.பி.ரோட்ரிக்ஸ். இவர், ஆகஸ்டு புரட்சியிலும் கலந்து கொண்ட காங்கிரஸ்வாதி. அத்துடன், 'சுதந்தர வீரன்' என்ற பெயரில், ஒரு பத்திரிகையையும் துவங்கினார்.

அப்பத்திரிகை, தென் தமிழக மக்களிடையே சுதந்திர வேட்கையை விதைத்ததுடன், பிரிட்டிஷ் அரசின் கொடுமைகளுக்கு எதிராக, குரல் கொடுக்கவும் செய்தது.
அதனால், பிரிட்டிஷ் அரசு அப்பத்திரிகையையும், 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் பறிமுதல் செய்தது. ஆனாலும் ஓய்ந்து விடவில்லை, ரோட்ரிக்ஸ். முன்னை விட போராட்டத்தில் தீவிர ஈடுபாட்டை காட்டினார்.

கணவருக்கு உறுதுணையாக, போராட்டத்தில் இறங்கினார், அவரது மனைவி ரோசலின் கெரோ. கள்ளுக்கடை மறியல் நடத்த திட்டமிடப்பட்டது. தூத்துக்குடியில் நடந்த முதல் கள்ளுக்கடை மறியலின்போது, 'அன்னிய தேசத்து கடைகளை கொளுத்துங்கள்...' என, கூக்குரலிட்டவர் ரோசலின்.
சுதந்திர போராட்டத் தியாகிகளான,

ஜே.பி.ரோட்ரிக்ஸ் - ரோசலின் தம்பதியினருக்கு, கிளாஸ்டன், மாணிக்கம்மாள், சத்யா, நெப்போலியன், துரைராஜ், ஏஞ்சலின், பனிமயதாசன், ராஜம், ஜவஹர், ஜோதி, நோபிள், ரவி மற்றும் பெஞ்சமின் என்று, 13 குழந்தைகள்.

ஆக., 5, 1927ல், ரோட்ரிக்ஸ் குடும்பத்தில், ஆறாவது குழந்தையாகப் பிறந்த, பனிமயதாசன் தான், பின்னாளில் தன் பெயரை, சந்திரபாபு என்று மாற்றிக் கொண்டார். பிறந்த சில நாட்களிலேயே, பனிமயதாசனை கடுமையான விஷக்காய்ச்சல் தாக்கியது. குழந்தை பிழைக்குமா பிழைக்காதா என்ற நிலையில், தூத்துக்குடியில் கடற்கரையோரம் அமைந்துள்ள, பனிமய மாதாவின் தேவாலயத்துக்கு சென்று, குழந்தையை பிழைக்க வைக்கும்படியும், குழந்தைக்கு, மாதாவின் பெயரையே வைப்பதாகவும் மனமுருக வேண்டினர், ரோட்ரிக்ஸ் தம்பதி. குழந்தை பிழைத்துக் கொண்டது.

No comments:

Post a Comment