Sunday 19 January 2020

JALLIKATTU ,A TRUE WARRIOR IN MADURAI DISTRICT


JALLIKATTU ,A TRUE WARRIOR 
IN MADURAI DISTRICT




மதுரை மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் சாமி மாடு என்று முதலாவாக ஒன்றை அவிழ்த்து ஓடவிடுவார்கள். அதை யாரும் பிடிக்கக்கூடாது என்பது ஆண்டாண்டு கால மரபு. விபரம் அறிந்தவர்களுக்குத் தெரியும் அந்த மாடு மாவீரன் அழகாத்தேவன் நினைவாகவே அவிழ்த்துவிடப்படுகிறது என்பது.

யார் இந்த அழகாத்தேவன்?

மதுரை மாவட்டத்தில் சொரிநாயக்கன்பட்டியைச் (இன்றைக்கு அது சொரிக்காம்பட்டி) சேர்ந்தவர் கருத்தமாயன். நிலபுலன்களோடு வாழ்ந்த செல்வந்தர். அவரது கடைக்குட்டி அழகாத்தேவன் புஜபல பராக்கிரமுடைய இளைஞன். ஆனால் பொறுப்பில்லாமல் தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு ஊர் சுற்றுகின்ற நாடோடி. 

அழகாத்தேவனுக்கு கால்கட்டு (கல்யாணம்) போட்டுவிட்டால் பையன் ஒழுங்காக இருப்பான் என்று பெரியவர்கள் கூறியதைக் கேட்ட கருத்தமாயன் பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கினார்.
நாகமலைக்கு அருகேயுள்ள கீழக்குயில்குடியில் வாழ்ந்து வரும் கருத்தமலையின் மகள் ஒய்யம்மாள் குறித்து அறிந்து, தன் செல்வாக்குக்கு சமமாக இல்லையெனினும் கருத்தமாயன், கருத்தமலையின் வீட்டிற்கு பெண் பார்க்கச் செல்கிறார். 

கருத்தமலைக்கோ ஏக மகிழ்ச்சி. தனது மகளைப் பெண் பார்க்க கருத்தமாயன் வருவதையறிந்து ஊருக்குள் தடபுடல் செய்கிறார். வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்த பின்னர் கருத்தமாயன், தனது மகன் அழகாத்தேவனுக்கு ஒய்யம்மாளைக் கேட்கிறார். கருத்தமலையோ தனது மகளிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்று கூறி ஒய்யம்மாளிடம் கேட்கிறார். 

அவளுக்குப் அழகாத்தேவனைப் பிடித்துப்போனாலும், நிபந்தனை ஒன்றை விதிக்கிறாள். தான் வளர்த்து வரும் ஏழு காளைகளை அழகாத்தேவன் அடக்கினால், திருமணத்திற்கு ஒத்துக் கொள்வதாகவும், ஒருவேளை தோற்றால் தனது வீட்டில் பண்ணை அடிமையாக வேலை பார்க்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறாள். 

இந்த சவாலை அழகாத்தேவனும் ஏற்றுக் கொள்கிறான். காளையை அடக்குவதற்கு நாள் குறிக்கிறார்கள். தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு இணைந்து கடும் பயிற்சி மேற்கொள்கிறான் அழகாத்தேவன். அந்த நாளும் வருகிறது. இரண்டு ஊர்ப் பொது மக்கள் மட்டுமன்றி, பக்கத்து ஊர் ஜனங்களும் கூடி நிற்க அழகாத்தேவன், வாடிவாசல் அருகே ஒய்யம்மாள் வளர்த்த ஏழு காளைகளை ஒவ்வொன்றாக எதிர்கொள்கிறான். 

அனைத்துக் காளைகளையும் மிகத் திறமையாகக் கையாண்டு வீழ்த்திய அழகாத்தேவன், ஏழாவது காளையோடு மல்லுக்கட்டுகிறான். கடுமையான போராட்டத்திற்கிடையே அந்தக் காளை அழகாத்தேவனின் வயிற்றைப் பதம் பார்க்கிறது. 

குடல் வெளியே சரிந்த நிலையிலும் போராடி அந்தக் காளையை அடக்கிவிடுகிறான். உயிருக்கு ஆபத்தான நிலையில், அழகாத்தேவனை அழைத்துச் செல்கின்றனர். ஆனாலும் வாக்குக் கொடுத்த காரணத்திற்காக கருத்தமலை பெண் கொடுக்க சம்மதம் தெரிவிக்கிறார். 

சுத்துப்பட்டு கிராம ஜல்லிக்கட்டுகளில் பெயர் பெற்ற தங்களது காளைகளை அடக்கிவிட்டானே என்ற பொறாமையின் காரணமாக ஒய்யம்மாளின் சகோதரர்களுக்கு அழகாத்தேவனைப் பிடிக்கவில்லை. ஆகையால் அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்து, அழகாத்தேவனுக்கு மருத்துவம் பார்த்த பெண்ணை சரிக்கட்டி, அவனது உடம்பில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் ஏற்றிக் கொலை செய்துவிடுகிறார்கள்!!

இந்த செய்தி ஒய்யம்மாளுக்குத் தெரியவரும்போது, தாங்கொணாத துயரத்தில் அழகாத்தேவனோடு உடன்கட்டை ஏறி தனது உயிரை மாய்த்துக்கொள்கிறாள்!!

அழகாத்தேவன் நினைவாக அவனது பரம்பரையில் வந்தோர், மதுரை மாவட்டம் செக்கணூரணிக்கு அருகிலுள்ள சொரிக்காம்பட்டியில் கோயில் கட்டி வணங்கி வருகின்றனர். 

கருவறையில் காளையோடு அழகாத்தேவன் நிற்க... அக்கோயிலுக்கு வெளியே அமைக்கப்பட்ட நினைவு வளைவில் நண்பன் தோட்டி மாயாண்டிக்கும் சிலை எழுப்பியுள்ளனர். 
கீழக்குயில்குடிக்காரர்களிடம் சொரிக்காம்பட்டிக்காரர்கள் எந்தவித மண உறவோ, கொடுக்கல் வாங்கலோ இப்போதும் வைத்துக்கொள்வதில்லை. இந்த மரபு காலங்காலமாகத் தொடர்கிறது. 

நானூறு ஆண்டுகால காதல் வரலாற்றை மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்றும் தழும்பாய் சுமந்து கொண்டிருக்கின்றன... சொரிக்காம்பட்டி கிராம எல்லையில்... தோட்டி மாயாண்டி காவல் நிற்க... அழகாத்தேவன் கருவறையில் காளையோடு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான்... ஒய்யம்மாள் அக்கருவறை காற்றோடு காற்றாய்... 🌼🌼🌼

காதலும் துரோகமும் நாணயமும் ரோசமும் நிறைந்த இந்த வீர வரலாறு 





திருமங்கலம் அருகே ஜல்லிக்கட்டு வீரருக்கு கோவில் கட்டி வழிபடும் மக்கள்

திருமங்கலம், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சொரிக்காம்பட்டி கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் அடங்காத காளைகளை அடக்கிப்பிடித்து சாதனை செய்து உயிர்நீத்த மாடுபிடி வீரரின் நினைவாக கோவில் கட்டியுள்ள அப்பகுதி மக்கள் அவரை தெய்வமாக வணங்கி வழிபட்டு வருகின்றனர்.

சுமார் 300ஆண்டுகளுக்கு முன்பாக மாமதுரை நகரின் மேற்கு தொலைவில் விவசாய செழிப்பு மிகுந்த இடத்திற்கு கருத்தமாயன் என்பவரின் குடும்பத்தினர் வந்து தங்கியுள்ளனர். இதை தொடர்ந்து கருத்தமாயனின் உறவினர்களும் அந்த செழிப்பு நிறைந்த பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதையடுத்து சில ஆண்டுகளில் அந்த நிலப்பகுதி மக்கள் அதிகமாக வசித்திடும் சொரிக்காம்பட்டி என்ற கிராமமாக மாறியிருக்கிறது. இந்த ஊரின் முத்தகுடியான கருத்தமாயனும் மக்களும் ஒன்றிணைந்து விவசாய பணிகளில் தீவிரம் காட்டியதுடன் கால்நடைகள் வளர்ப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளனர். வயலில் உழைத்த களைப்பு நீங்கிடவும் விவசாய பெருமக்களுக்கு உற்சாகம் செய்திடவுமான விளையாட்டாக ஜல்லிக்கட்டு மாறியிருந்தது. அதன்படி இங்கு நடந்திட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுகளில் கருத்தமாயனின் நான்கு மகன்களில் கடைசி மகனான அழகத்தேவன் என்பவருக்கு காளைகளை அடக்குவதில் எல்லையில்லா ஆர்வம் இருந்துள்ளது. இவருடைய மாடுபிடி ஆர்வத்தை ஊக்குவித்து போட்டிகளில் பெற்றிடும் வெற்றிகள் அனைத்திற்கும் அழகத்தேவனின் உயிர்நண்பனான சமயன் என்பவர் திகழ்ந்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றிடும் பல்வேறு வகையான காளைகளின் குணாதிசயங்களை ஆய்வு செய்து அதனை மடக்கிப் பிடிக்கும் கலையினை வளர்த்துக் கொண்ட அழகத்தேவனும், அவரது நண்பர் சமயனும் சிறந்த மாடுபிடி வீரர்களாக அக்காலத்தில் உருவாகியிருந்தனர். இது எவரிடமும் பிடிபடாத மாடு என்று உரிமையாளர்களால் சவால் விடப்படும் மாடுகளை தன்னுடைய தனித்திறமையால் மடக்கிப் பிடிப்பது அழகத்தேவனின் தனிச்சிறப்பாகும்.

ரசிகர் பட்டாளம்

இன்றைய அலங்காநல்லூரை போன்று அன்றைய காலகட்டத்தில் ஜல்லிக்கட்டிற்கு பெயர் போன ஊராக விக்கிரமங்கலம் திகழ்ந்துள்ளது. இந்நிலையில் விக்கிரமங்கலம் ஜல்லிக்கட்டில் நின்று விளையாண்ட பல்வேறு காளைகளை மின்னல் வேகத்தில் அழகத்தேவன் மடக்கிப் பிடித்து தொடர் வெற்றிகளை குவித்து வந்துள்ளார். இதனால் அழகத்தேவனின் வீரமும் காளைகளை அடக்கிடும் திறமையும் மாமதுரையைச் சுற்றிலும் பரவியுள்ளது. அழகத்தேவன் பங்கேற்றிடும் ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டியையும் காண்பதற்காக அக்காலத்திலே ஒரு ரசிகர் பட்டாளமே அவருக்கு இருந்துள்ளது. இதனை கண்டு பொறாமை கொண்ட அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த மூத்த மாடுபிடி வீரர்கள் ஒன்று சேர்ந்து அழகத்தேவனை நீண்காலமாக கண்காணித்து அவரது யுக்திகளை கணித்துள்ளனர்.

பெண் பரிசு


இதையடுத்து அழகாத்தேவனை வீழ்த்துவதற்காக அடங்காத காளையொன்றை அந்த கிராமத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள் தயார் செய்தனர். அந்த காளைக்கு அழகத்தேவனின் தனித்துவத்திற்கு எதிரான பாய்ச்சலை சொல்லிக் கொடுத்து பக்குவப்படுத் தியிருந்தனர். மேலும் தங்களது மாட்டை அடக்குபவருக்கு தங்களது கிராமத்தின் மூத்தகுடியின் பெண்ணை திருமணம் செய்து தருவதாக அறிவிப்பு செய்துள்ளனர்.

குடல் சரிந்தது

இந்த சூழ்ச்சியை அறியாத மாடுபிடி வீரரான அழகத்தேவனும் அவரது உயிர்நண்பனுமான சமயனும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டனர். அப்போது மூத்த மாடுபிடி வீரர்களால் தயார் செய்யப்பட்ட முரட்டுக்காளை மட்டும் அழகத்தேவனிடம் சிக்கிடாமல் போக்குகாட்டி விளையாடியுள்ளது. ஒருகட்டத்தில் விடாமுயற்சியுடன் வீறுகொண்டு எழுந்த அழகத்தேவனை அந்த காளை வயிற்றில் குத்தி குடலை சரியச் செய்துள்ளது. இருப்பினும் குடல் சரிந்து ரத்தம் வெள்ளமாக சிதறிய நிலையிலும் தனது இறுதிகட்ட சூட்சுமத்தை பயன்படுத்திய அழகத்தேவன் அடங்காத காளையை அடக்கி மண்ணில் சாய்த்து விட்டு தானும் மண்ணில் சாய்ந்துள்ளார். இதனை கண்ட அவரது நண்பர் சமயன் தான் உடுத்தியிருந்த துணியை கிழித்து  அழகத்தேவனின் வயிற்றில் கட்டி அவரை தனது தோழில் தூக்கிப் போட்டுக் கொண்டு சொரிக்காம்பட்டி கிராமத்திலுள்ள நந்தவனம் எனும் தோட்டத்திற்கு ஓட்டமாக ஓடிவந்து சேர்த்துள்ளார்.

கொல்ல முடிவு

தனது மகன் அழகத்தேவன் ஜல்லிக்கட்டில் காயமடைந்த தகவலறிந்த அவரது தந்தை கருத்தமாயன் மற்றும் ஊர்மக்கள் அனைவரும் நந்தவனம் தோட்டத்திற்கு திரண்டு வந்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் தொடர் சிகிச்சை மேற்கொண்டதன் பலனாக அழகத்தேவன் உடல்நலம் பெற்றிட ஆரம்பித்துள்ளார். இதனையறிந்த பக்கத்து கிராமத்து மூத்த மாடுபிடி வீரர்கள் அழகத்தேவன் மீண்டு வந்தால் தங்களது மூத்தகுடியின் பெண்ணை திருமணம் முடிக்க கேட்டுவிடுவான் என்று பயந்து அழகத்தேவனை சதியின் மூலம் கொன்று விடமுடிவு செய்தனர்.

உயிர் நீத்த வீரர்

இதற்காக அழகத்தேவன் வைத்தியம் செய்து வந்த இடத்திற்கு தங்களது ஆட்களை ஆள்மாற்றி அனுப்பினார்கள். ஆள்மாறாட்டம் செய்து நந்தவனம் சென்றவர்கள் அழகத்தேவனுக்கு குடல் சரிந்த இடத்தில் கள்ளிக் கொழுந்தினை வைத்து மருந்து கட்டியுள்ளனர். இதனால் கள்ளியின் விஷம் சிறிது சிறிதாக அழகத்தேவனின் உடலில் கலந்து உயிரிழப்பு ஏற்படும் நிலை உருவாகிறது. அப்போது அடங்காத காளை களையெல்லாம் தனது மதிநுட்பத்தால் மடக்கிப் பிடித்த மாவீரன் அழகத்தேவன் தனது கடைசி ஆசையாக தனக்கு சொரிக்காம்பட்டி நந்தவனத்தில் கோவில் கட்ட வேண்டும், அதன் மூலமாக ஜல்லிக்கட்டு பற்றிய விழிப்புணர்வு வரும் சந்ததியினருக்கு தெரிய வந்திடும் என்று தனது கிராமத்தினரிடம் கூறிவிட்டு உயிர் துறந்துள்ளார்.

தோழனுக்கும் சிலை

இதையடுத்து மாடுபிடி மாவீரன் அழகத்தேவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிடும் வகையில் அவரது வாரிசுகளும்,கிராமத்தினரும் ஒன்றிணைந்து சொரிக்காம்பட்டி கிராமத்தில் அழகிய கோவிலை எழுப்பி இன்றும் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் காளையை அழகத்தேவன் அடக்குவது போன்ற சிலை வைக்கப்பட்டு அதனை அப்பகுதி மக்கள் வணங்கி செல்கின்றனர்.மேலும் நட்பின் இலக்கணமாக அழகத்தேவனுடன் இருந்த சமயனுக்கும் அங்கே சிலை வைக்கப்பட்டள்ளது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஜல்லிக்கட்டில் அவர்களது வீரத்தையும் விவேகத்தையும் போற்றிடும் வகையில் இருவரும் இன்றுவரை அப்பகுதி மக்களின் நெஞ்சங்களில் நீங்காமல் உள்ளனர்.அதே போல் குடல்சரிந்த அழகத்தேவனை தனது தோளில் சமயன் தூக்கிச் சென்ற போது அவர்கள் தாகசாந்தி செய்திட இளைப்பாறிய இடங்களில் கற்கள் போடப்பட்டு மக்கள் வழிபாடு நடத்திச் செல்கின்றனர்.வீரம் விளைந்த மாமதுரை மண்ணில் அடங்காத முரட்டுக்காளைகளை அடக்கி சாதனை படைத்து சதியினால் உயிர்நீத்த மாடுபிடி வீரர்களின் முதல்வனான அழகத்தேவனின் கோவிலில் வழிபட்டு சென்றால் ஜல்லிக்கட்டில் போட்டிகளில் வெற்றி உறுதி என்பதால் சொரிக்காம்பட்டி கிராமத்திற்கு வந்து அழகத்தேவன் கோவிலில் வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

வீரர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, அழகத்தேவன் போன்ற மாவீரர்களின் தியாகத்தினால் இன்றுவரை அழியாமல் உள்ளது என்பதே நிஜம்.




மதுரை மண்ணில் களம் கண்ட காளைகளை சினம் கொண்டு அடக்கிய வேங்கை அழகுதேவனுக்கு அமைந்த திருக்கோவில்!
18 January 2020, 1:03 pm

Quick Share
தமிழர் திருநாளான தை 1 பிறந்ததில் இருந்தே, மண்ணின் மாண்பை போற்றும்வகையில் ஏருழுவும் காளைகளுக்கு நடத்தும் வழிபாடும், பார் போற்றும் வீரம் கொண்ட ஜல்லிக்கட்டும் தமிழரின் பண்பாட்டை உலகத்திற்கு எடுத்துரைத்து கொண்டே தான் இருக்கிறது. சாதியால், மதத்தால் தமிழன் பிளவுற்று இருந்தாலும் எமது பண்பாட்டான ஜல்லிக்கட்டை மீட்க தமிழன் கரம் கோர்த்து தனது பாரம்பரியத்தை மீட்டும் தம் இனத்தின் போர் குணத்தை உலகிற்கு அறிவித்தான்.

Jalli- updatenews360
இன்று பாரே போற்றும் இந்த வீர விளையாட்டை ஒரு காலத்தில் தனது பொழுதுபோக்காக கொண்டு, இவர் அடக்காத காளைகள் இல்லை என பேர் வாங்கியவர் தான் மதுரை மண்ணின் மைந்தர் ” அழகுதேவன் ”. 300 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயத்திற்காக வண்டல்மண் வளம் நிறைந்த பகுதி நோக்கி கருத்தமாயன் என்பவரும் அவரது உறவினர்களும் இடம் பெயர்ந்தனர். அந்த பகுதியின் பெயர் தான் சொரிக்காம்பட்டி. அந்த ஊரின் மூத்த தலைகாட்டாக நின்று அந்த ஊரை நிர்வகித்த கருத்தமாயனுக்குக்கு 4 மகன்கள். அதில் ஒருவர் தான் அழகுதேவன். ஏறுழுது களைப்படைந்த விவசாய பெருங்குடி மக்களுக்கு உற்சாகத்தை அளிக்க ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது வழக்கம். அப்படி அந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் அழகுதேவன் கைதேர்ந்தவர். சீறிவரும் காளையின் வேகத்தையும், அதன் அசைவுகளையும் கணித்து அதனை அடக்குவதில் அழகுதேவன் கைதேர்ந்த வந்தார். அவருக்கு அவரது நண்பரான சமயன் என்பவர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிக ஆதரவு அளித்து வந்தார். பிற்காலத்தில் சமயனும் அழகுதேவனுடன் இணைந்து மாடுகளை பிடிக்க ஆரம்பித்தார். பின்னர் இருவரும் கைதேர்ந்த மாடுபிடி வீரர்களாக வந்தனர். அந்த ஊரில் அழகுதேவன் அடக்காத காளைகளே இல்லை என்ற அளவுக்கு நிலை மாறியது. பிற்காலத்தில் மதுரை மண்ணில் நடந்த அணைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் கலந்து கொண்ட அழகுதேவன், யாருக்கும் அடங்காத இந்த காளையை அடக்கி பாருங்கப்பா என சவால் விடுக்கப்படும் காளைகளை தனது வீரத்தாலும், ஜல்லிக்கட்டில் அவர் கற்றுத்தேர்ந்த நுண்ணறிவாலும் எப்பேர்ப்பட்ட காளையாக இருந்தாலும் அடக்கிவிடுவார்.

இப்படிப்பட்ட மாவீரரனுக்கு மதுரை மண்ணில் சொரிக்காம்பட்டியில் கோவில் அமைந்துள்ளது. முன்னோரை வழிபடுதை வழிபாடாக கொண்ட தமிழினம், அழகுதேவனும் இன்று காளைகளை அடக்கும் காளையர்களுக்கு குலதெய்வமாக திகழ்ந்து வருகிறார். இவர் வாழ்ந்த சொரிக்காம்பட்டி மண்ணில் தான் இவரது திருக்கோவில் அமைந்துள்ளது. இன்று வரை ஒவ்வொரு மாடுபிடி வீரனும் இவரது கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

காலம் பல கடந்தாலும், சுழலும் பூமி பந்து ராட்சத வேகத்தில் சுழன்றாலும், பொழியும் மாரி கடலென பெய்தாலும், தமிழனின் வீரத்தையோ, அவன் வரலாற்றையோ எந்த சக்தியாலும் அழிக்கமுடியாது என்பதற்கு தமிழன் அவனின் முன்னோரை இறைவனாகவும், முன்னோர் அளித்த வரலாற்றை இறையாகவும் வழிபடுவதே காரணம். 300 அல்ல 3000 ஆண்டுகள் ஆயினும், அழகுதேவன் வீரத்தின் குறியீடாக மதுரை மண்ணில் நிலைத்து நிற்பார்.

No comments:

Post a Comment