PLAYBACK SINGER T.M.SOUNDARAJAN
பின்னணிப் பாடல் ரேஸில் திரும்பி பார்த்த போது !
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்த படங்களின் எண்ணிக்கை, 1957ல் எப்படி இருந்தது? அந்த ஆண்டு வந்த முப்பது படங்களில், ஏழு படங்களில் சிவாஜியும், எட்டுப் படங்களில் ஜெமினியும், நான்கு படங்களில் எம்.ஜி.ஆரும் நடித்திருந்தார்கள். அறுபது சதவீதப் படங்கள் இவர்கள் வசம்! இவர்கள் காட்டில் மழை. இந்த காலகட்டத்தில் இவர்கள் தமிழ் சினிமாவின் ‘மூவேந்தர்கள்’ என்று அழைக்கப்பட்டார்கள்.
இவர்கள் இந்த நிலையை அடைந்தது எப்படி? ‘மலைக்கள்ளன்’ (1954), ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ (1955), ‘குலேபகாவலி’ (1955), ‘தாய்க்குப்பின் தாரம்’ (1956), ‘மதுரை வீரன்’ (1956) முதலிய திரைப்படங்களின் வெற்றியால் ஒரு சாகச நாயகனாக எம்.ஜி.ஆர் பரிணமித்திருந்தார்.
‘பராசக்தி’ (1952), ‘மனோகரா’ (1954), ‘மங்கையர் திலகம்’ (1955) போன்ற படங்களின் வெற்றியும், இடையறாத நடிப்பால் வந்துகொண்டிருந்த பற்பல படங்களும் சிவாஜி கணேசனை ஒரு நட்சத்திர நடிகனாக ஆக்கியிருந்தன.
‘மனம்போல மாங்கல்யம்’ (1953), ‘பெண்’ (1954), ‘மாமன் மகள்’ (1955), ‘மிஸ்ஸியம்மா’ (1955), ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ (1955), ‘பெண்ணின் பெருமை’ (1956) முதலிய படங்களின் வெற்றி, ஜெமினி கணேசனை மிருதுவான ஹீரோவாக நிலைநிறுத்தியிருந்தது.
இவர்கள் மூவருக்கும் டி.எம். சவுந்தரராஜன் பாடிக் கொண்டிருந்தார். இன்னாருக்கு இன்ன பின்னணிப் பாடகர்தான் பாடவேண்டும் என்ற வரையறைகள் கடுமையாக இல்லாத காலம் அது. நடிகருக்குப் பொருத்தமான பின்னணிப் பாடகர் என்பதை விட, ஒரு குறிப்பிட்ட பாடலை எந்தப் பாடகரால் நன்றாகப் பாட முடியும் என்ற எண்ணத்தில் இசையமைப்பாளர்கள் பாடகர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ‘வணங்காமுடி’யில் சிவாஜிக்கு சீர்காழி கோவிந்தராஜன், டி.எம். சவுந்தரராஜன் மற்றும் ஏ.எம்.ராஜா என்று பாடலுக்கு ஏற்ப, பாட வைத்திருந்தார் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்!
‘வணங்காமுடி’யில், ஒரு சிற்பி, மலையிலே பல அழகான சிற்பங்களை வடித்த பின், மலையையே அழகுபடுத்திவிட்டோம் என்ற உற்சாகத்தில், ‘மலையே உன் நிலைதன்னை பாராய்’ என்று அற்புதமாகப் பாடும் பாடல், சிவாஜிக்காக சீர்காழியின் குரலில் வெளிப்பட்டது.
‘ஓம்காரமாய் விளங்கும் நாதம்’ என்று மணியோசை போலவும், ‘மோகன புன்னகை வீசிடும் நிலவே’ என்று (பி.சுசீலாவுடன்) குழைவாகவும் சவுந்தரராஜனின் குரலும் சிவாஜிக்கு ஒலித்தது.
ஒரு கனவுக் காதல் காட்சியில், ‘வாழ்வினிலே, வாழ்வினிலே, இந்நாள் இனி வருமா’ என்று, அலுங்காமல் குலுங்காமல் வந்த ஏ.எம்.ராஜாவின் குரலுக்கு சிவாஜி வாயசைத்தார்!
‘சக்கரவர்த்தித் திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கான அனைத்துப் பாடல்களையும் சீர்காழி கோவிந்தராஜன் பாடினார். ‘எல்லை இல்லாத இன்பத்திலே இணைந்தோம் இந்த நாளே’ என்று எம்.ஜி.ஆரும் அஞ்சலிதேவியும் குதூகலிக்கும் காட்சியில், எம்.ஜி.ஆரின் காதலை வெளிப்படுத்தும் சங்கீத குரலாக சீர்காழி கோவிந்தராஜன் செயல்பட்டார். படமும் வெற்றி அடைந்தது. எம்.ஜி.ஆருக்கு சீர்காழி பாடும் ஒரு வழக்கம் வலுப்பெற்றது. ‘ராஜராஜன்’, ‘நாடோடி மன்னன்’, ‘நல்லவன் வாழ்வான்’ உட்பட பல படங்களில் இது தொடர்ந்தது.
‘நல்லவன் வாழ்வா’னில் இடம்பெற்ற ‘ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்’ பாடலில் எம்.ஜி.ஆரின் சாமியார் மேக்–அப்பைப் போலவே, சீர்காழியின் குரலும் அமர்க்களமாக அமைந்தது.
‘‘சத்தியத்தின் எல்லையிலே, உயர்
சமரச நெறிகளிலே, அன்பின்
சக்தியிலே, தேச பக்தியிலே, நல்ல
சமத்துவம் காட்டும் சன்மார்க்கத்திலே, ஆண்டவன் இருக்கின்றான்’’ என்று சீர்காழியின் வெண்கல நாதம் எம்.ஜி.ஆர். வாயிலாக வெளிப்பட்டது.
சி.எஸ்.ஜெயராமனும் எம்.ஜி.ஆருக்கு சில படங்களில் பாடிக் கொண்டிருந்தார் (‘புதுமைப்பித்தன்’, ‘ராஜாதேசிங்கு’). ‘பகலிலே பித்தன், இரவிலே முகமூடி அணிந்த புதுமைப்பித்தன்’ என்று தன்னுடைய பாத்திரத்தை எம்.ஜி.ஆர். வர்ணிக்கும் இந்த படத்தில், ‘மேளம் கட்டி தாலி கட்டி’ என்று சி.எஸ்.ஜெயராமன் குரலிலே எம்.ஜி.ஆர். ஒரு அட்டகாசப் பாடலுக்கு வாயசைத்தார்.
தி.மு.கழகத்தில் இணையும் முன், நண்பர்களை ‘ஆண்டவனே’ என்று விளித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு இந்தப் பாடலின் வாயிலாக பழைய நினைவுகள் புதுப்பிக்கப்பட்டிருக்கும்! ‘உள்ளம் ரெண்டும் ஒன்று’ என்று ‘புதுமைப்பித்த’னில் இடம்பெற்ற இருகுரலிசையில், எம்.ஜி.ஆருக்கு சி.எஸ்.ஜெயராமன் பாடியது ஒரு வெற்றிப் பாடலாக அமைந்தது.
சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’யில் அவருக்குப் பாடிய சி.எஸ். ஜெயராமன், ஒரு சில
படங்களில் சிவாஜிக்குத் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார். ‘புதைய’லில் ‘விண்ணோடும் முகிலோடும்’, ‘தங்கப்பதுமை’யில் ‘ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே’, ‘தெய்வப்பிறவி’யில் ‘அன்பாலே தேடிய அறிவுச் செல்வம் தங்கம்’, ‘பாவை விளக்’கில் ‘ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே’, ‘குறவஞ்சி’யில் ‘நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே’ என்று ஒரு தனி முத்திரையுடன் இந்த பாடல்கள் அமைந்தன.
தனக்கு ஜெயராமப் பிள்ளைதான் பாடவேண்டும் என்று ‘பராசக்தி’யைத் தொடர்ந்து சிவாஜி கணேசனே கூறிக்கொண்டி ருந்ததற்கு ஏற்ப, சிவாஜி-–சி.எஸ்.ஜெயராமன் என்ற இணைவு, அறுபதுகளின் தொடக்கம் வரை சுமார் பத்தாண்டுகள் தொடர்ந்தன!
இதற்கெல்லாம் இடையில், மூவேந்தர்களில் முதல் இரண்டு ஸ்தானங்களை வகித்த எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் கச்சிதமாகப் பொருந்திய குரலாக சவுந்தரராஜனுக்கு ஒரு தனியிடம் உருவாகிக் கொண்டிருந்தது.
எடுத்த எடுப்பில் பளிச்சென்று ஒலித்து, இனிமையுடன் ரசிகர்களைச் சென்றடையும் சவுந்தரராஜனின் குரல்வாகு அவருக்கு அதிக வரவேற்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.
சவுந்தரராஜனுக்கு ‘கிருஷ்ண விஜயம்’ படத்தில் முதல் பாடலைக் கொடுத்த சுந்தரராவ் நட்கர்னி, ‘மகாதேவி’ என்ற படத்தைப் பாகஸ்தர்களுடன் தயாரித்து, இயக்கினார். திரைக்கதை – வசனம் எழுதினார் கண்ணதாசன். ‘மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி’ என்று இந்த படத்தில் பி.எஸ்.வீரப்பா பேசிய வசனம் பல வருடங்கள் ஒலித்துக் கொண்டிருந்தது.
‘மகாதேவி’யில் தலைமை வேடத்தில் நடித்த சாவித்திரிக்கு எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஜமுனாராணி, பி.சுசீலா, டி.எஸ்.பகவதி என்று மாறுபட்ட குரல்கள் ஒலித்தன. சவுந்தரராஜன் விஷயத்தில் இவ்வளவு மாறுபாடுகள் இல்லை என்றாலும், ‘மகாதேவி’யின் அனைத்துப் பாடல்களும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை.
‘கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே’ என்று ஏ.எம்.ராஜாவின் குரலிலும் எம்.ஜி.ஆர். பாடினார்! ராஜாவும், சுசீலாவும் மிருதுவான மெட்டில் இணைந்த போது பாடல் இனிக்கத்தான் செய்தது. மற்றபடி, பாடல்களில் கருத்து வலிமையாக வெளிப்படவேண்டும் என்றால், ‘சவுந்தரராஜனுக்குப் பாடலைக் கொடு’ என்ற எண்ணவோட்டம் இருந்தது.
‘மகாதேவி’யில் பொல்லாதவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகி, வேஷத்திற்குள் எம்.ஜி.ஆர். பதுங்கவேண்டிய நிலை வருகிறது. கண் தெரியாதவராக, தெருவில் தாயத்து விற்றுக் கொண்டு வருகிறார்.
‘இதிலே வசியம் பண்ற வேலையிருக்கா?’
‘வருமானத்திற்கு இதிலே ஏதாவது இருக்கா?’
‘பொம்பளைங்கள மயக்க முடியுமா?’.....
....முதலிய கேள்விகளுக்கு, ‘தம்பி.. அதெல்லாம் செய்யாது... இது வேற’ என்று தாயத்துப் பாடலில் பதில் கூறி, பகுத்தறிவு (!) பாதையைக் காட்டுகிறார் எம்.ஜி.ஆர்!
‘மந்திரம் வசியமில்லை, மாயாஜால வேலையில்லை, வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப அவசியம், இதில் மறைஞ்சிருக்கு அரிய பெரிய ரகசியம்’ என்று திரையில் எம்.ஜி.ஆர். பாடுகிறார். ‘இளவரசர் உயிருடன் இருக்கிறார்’ என்பதுதான் தாயத்திற்குள் இருக்கும் செப்புத்தகட்டில் உள்ள சேதி. இளவரசர் இறந்துவிட்டார் என்று எண்ணும் மக்களுக்கு ரகசியமாக இதைச் சொல்லத்தான் இந்த தாயத்து விற்கும் வேலை!
சவுந்தரராஜனுக்கு ஒரு பிறவி குணம். உணர்ச்சிகள் அவர் மனதில் கரைபுரளும். எந்த உணர்ச்சியானாலும் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு அதன் எல்லையைக் காண்பார். இயக்குநரோ, உதவி இயக்குநரோ பாடலுக்கான சூழலை அவரிடம் விவரித்துவிட்டால், ஒரு கற்பனை உலகில் சஞ்சரிக்கத் தொடங்கிவிடுவார்.
ஜாதகப்படிப் பார்த்தால் கற்பனை வளத்தைக் குறிக்கும் சந்திர கிரகம் அவருடைய ஜாதகத்தில் உச்சம்! ஒரு கற்பனையோட்டம் அவருக்குள் இருந்துகொண்டே இருக்கும். இசையமைப்பா ளர்கள் மெட்டுக்களைத்தான் சொல்லிக் கொடுக்க முடியும். உணர்ச்சியை எப்படிச் சொல்லிக்கொடுப்பது? அது அவரவர்களுக்கு வரவேண்டிய ஒன்று.
‘குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா, தம்பி தெரிந்து நடந்துகொள்ளடா, இதயம் திறந்து மருந்து சொல்லடா’ ...என்று ‘மகாதேவி’யில் தம்பிகளுக்கு எம்.ஜி.ஆர்.அறிவுரை சொல்லும் போது, சவுந்தரராஜன் அதை ஒரு பெருமித உணர்வுடன் வெளியிட்டது தான் அதற்குக் கூடுதல் ஈர்ப்பைக் கொடுத்தது. இதைக் கண்டுகொண்ட எம்.ஜி.ஆர், பின்னாளில் ‘பாடலைப் பாடும்போது புன்னகை செய்து கொண்டே பாடுங்கள். அந்த மகிழ்ச்சி பாட்டில் வெளிப்பட்டு, கேட்பவர்கள் மனதிலும் பதியும்’ என்று கூறுவார்.
சிவாஜியின் நட்பு வட்டத்தில் இருந்த
வி.கே.ராமசாமியும், ‘நான் பெற்ற செல்வம்’
படத்தில் சிவாஜிக்கு வெற்றிகரமாகக் கதை,
வசனம் எழுதிய ஏ.பி.நாகராஜனும், இணைந்து ‘ஸ்ரீலட்சுமி பிக்சர்ஸ்’ என்ற படத்தயாரிப்பு
நிறுவனம் தொடங்கினார்கள். அவர்கள் எடுத்த படம், ‘மக்களைப் பெற்ற மகராசி’ (1957). உணர்ச்சிவசப்படும் எழுத்தறிவில்லாத விவசாயி செங்கோடனாக தகுந்த மேக்கப்புடன் தோன்றி, கொங்கு நாட்டுத் தமிழில் பொரிந்து தள்ளினார் சிவாஜி.
விவசாயி பணியாற்றும் சூழலை நிறுவ, ‘மணப்பாறை மாடுகட்டி’ பாடல் பயன்பட்டது. மருதகாசி எழுதிய பாடலின் பிரதியை கண்ணில் ஒத்திக்கொண்டு கையில் வாங்குகிறார் சவுந்தரராஜன்.
‘பொன்னு விளையிற பூமியடா -- வெவசாயத்தை
பொறுப்பா கவனிச்சு செய்வோமடா
உண்மையா உழைக்கிற நமக்கு - எல்லா
நன்மைகளும் நாடி வந்து கூடுதடா’ ....என்ற வரிகள் தொகையறா என்று குறிக்கப்பட்டிருந்தது.
‘மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்டை உழுது போடு சின்னக் கண்ணு - பசுந் தழையைப் போட்டுப் பாடுபடு செல்லக்கண்ணு’ என்ற பல்லவியுடன் பாடல்
தொடங்கியது.
கிராமத்துப் பாடலுக்கு ஒரு துள்ளலும் விறுவிறுப்பும் கொடுக்கும் வகையில் திஸ்ர கதியில் மெட்டமைக்கப்பட்டிருந்தது. சிந்து பைரவி ராகத்தில் அமைந்த நாட்டுப்புற மெட்டினுடைய ஒத்திகையின் இடையில் வந்தார், கர்நாடக இசைப் பாடகர் மதுரை சோமு. ‘உங்க ஊர்க்காரர் பாடறார்’ என்று சோமுவிடம் சவுந்தரராஜனைக் காட்டினார் கே.வி.மகாதேவன்.
‘ஒரு கட்டை ஸ்ருதி வையப்பா’ என்று வாத்தியக்காரர்களிடம் கூறினார் மகாதேவன். தபேலாக்காரரும் ஆர்மோனியம் வாசிப்பவர்களும் தயாரானார்கள். அப்போது மதுரை சோமு சவுந்தரராஜனின் தொடையில் தட்டினார். ‘ஏம்பா சவுந்தரராஜன்.. நீ பாகவதர் பாட்டெல்லாம் பாடுவியே.. ஒரு கட்டை ஸ்ருதியிலா பாடற’ என்றார் சோமு!
கீழ் ஷட்ஜமத்திலிருந்து அல்ல, எடுப்பு மேல் ஷட்ஜமத்திலிருந்து கம்பீரமாகப் புறப்படுவதைக் கேட்டவுடன் சோமு மகிழ்ந்தார்.
‘பொன்னு வெளையிற பூமியடா’ என்று குரல் நாளங்களை அடக்கி, நாதத்தை உணர்ச்சியின் அழுத்தத்துடன் சவுந்தரராஜன் தெளிவாக வெளியிட்ட போது மதுரை சோமுவுடன் படத்தின் இயக்குநரான கே.சோமுவும் மகிழ்ந்தார்!
பாடல்களுக்கு வீரியத்தைக் கொடுக்கும் நல்ல ‘பிச்’சில் பாடி, பாடல் எவ்வளவுதான் மேலே சென்றாலும் குரல் இனிமையும் காத்திரமும் குறையாமல் இசைத்து, தனித்தன்மை காட்டினார் சவுந்தரராஜன். அவருடைய குரல் அதற்கு இடம் கொடுத்தது.
இதனால், அறுபதுகளில் சிவாஜி, எம்.ஜி.ஆர். ஆகிய இரு பெரும் நட்சத்திரங்களுக்கு அவர்களே பாடுகிறார்களோ என்று பார்ப்பவர்கள் எண்ணும்படிப் பாடக்கூடியவர் என்ற பெருமையைப் பெற்றார். பின்னணிப் பாடல் ரேஸில் சவுந்தரராஜன் முதன்மையாக வந்த போது, திரும்பி பார்த்தால் மற்றவர்கள் காணாமல் போயிருந்தார்கள்.
No comments:
Post a Comment