Thursday 2 January 2020

water lorry - novel





தண்ணி லாரி சிறுகதை
-ஆ.முத்துக்கிருஷ்ணன்

'உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் ஒரே சீராக வளர்ந்தால் தான் அது வளர்ச்சி; ஒரு உறுப்பு வளர்ந்து இன்னொரு உறுப்பு வளரலன்னா, அது ஊனம்

ஊரிலிருந்து கிளம்பியாயிற்று; அம்மாவும், அப்பாவும் இன்னும் இரண்டு நாட்கள் தங்கிப் போகச் சொன்னார்கள். மனைவிக்கும், மகனுக்கும் தங்கிச் செல்ல ஆசை தான். சிவகுமார் கூட அதே திட்டத்தோடு தான் வந்திருந்தான். ஆனால், ஊரில் நடந்த சம்பவம், அவனை அங்கு இருக்க விடவில்லை.
மதுரை வரை காரிலும், அங்கிருந்து விமானத்தில் செல்வதாக ஏற்பாடு.
வாடகை சொகுசு கார், கிராமத்து மேடு பள்ளச் சாலையில், நிமிர்ந்தும், சரிந்தும் ஓடிக் கொண்டிருந்தது. அது, சிவகுமாருக்கு எரிச்சலாகவும், அவனது மனைவிக்கும், மகனுக்கும் புது அனுபவமாகவும் இருந்தது.
பரந்து விரிந்து கிடந்த பொட்டல் காட்டில், தங்களது பச்சை துாரிகையை இழந்து, ஆங்காங்கே ராட்சச ஊதுவத்திகளை நட்டு வைத்தது போன்று காட்சியளிக்கும் மொட்டை பனை மரங்களையும், தண்ணீர் இல்லாமல் காய்ந்து பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கும் குளங்களையும் கடந்து, ஊசி கோபுரத்திற்கும் வண்ணாரப்பேட்டைக்கும் இடையில் கார் சென்று கொண்டிருந்தது.
பாளையங்கோட்டையில் படிக்கும்போது, தாமிரபரணியில் குளிப்பதற்கும், டவுனில் உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்ப்பதற்கும் பலமுறை அவ்வழியாக சென்றிருக்கிறான். அப்போதெல்லாம் சாலையின் இரு மருங்கிலும் மருத மரங்களும், சாலைக்கு அப்பால், பச்சை கம்பளங்களை விரித்தது போன்ற வயல்வெளிகளையும் பார்க்கப் பார்க்க பரவசமாய் இருக்கும்.
இப்போது, அந்த மரங்களும், வயல்களும் இருந்த இடத்தில் காரைக் கட்டடங்களும், பாலமும் எழுந்து நின்று எரிச்சலை ஏற்படுத்தின. அந்த சுகமான அனுபவத்திற்கு மனம் ஏங்கியது. ஆனால், அது இனி கிடைக்காது என்று புத்தியில் உறைத்த போது, மனதில் ஏற்படும் ஏமாற்றத்தை தவிர்க்க முடியவில்லை.
''என்னங்க, இங்கதானே குறுக்குத்துறை முருகன் கோவில் உள்ளது; அதை கொஞ்சம் காண்பியுங்களேன்,'' என்றாள் மனைவி.
''அதுக்கு இன்னும் கொஞ்ச துாரம் போகணும்; வரும்போது சொல்றேன்,'' என்றான் சிவகுமார்.
ஒரே சீராக சென்று கொண்டிருந்த கார், ரெட்டியார்பட்டி அருகே வரும் போது, சாலையில், தண்ணீர் லாரியை மொய்த்தபடி பெண்கள் கூட்டம்; காரின் ஒலிப்பான் ஓசையை யாரும் பொருட்படுத்தவில்லை. வரிசையில் வந்தால், எங்கே தன் முறை வருவதற்குள் தண்ணீர் தீர்ந்து விடுமோ என்ற பயத்தில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு முண்டியடித்தனர். முகதாட்சண்யம் பாராது ஒருவருக்கொருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். தண்ணீருக்காக சகஜமாக பழகுகிறவர்கள் கூட சண்டையிட்டுக் கொள்வதை பார்க்க வேடிக்கையாக இருந்தது. ஓட்டுனர் போய் வழிவிட கேட்டுக் கொண்டதால், காரை, ஏற இறங்க பார்த்தவாறு வழி விட்டது, கூட்டம்.
அடுத்த ஊரிலோ, காலிக் குடங்களுடன் சாலை மறியல் செய்தனர், மக்கள்.
தண்ணீருக்காக மக்கள் படும்பாட்டை நேற்று அவன் பார்த்திருந்தால், நிச்சயமாக விழா ஏற்பாட்டை தடுத்திருப்பான்; இவ்வளவு அவமானமும், புறக்கணிப்பும் ஏற்பட்டிருக்காது.
இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில், மிக முக்கிய பொறுப்பில் உள்ளான், சிவகுமார். அவனது தலைமையில் உள்ள குழு, வான்வெளி ஆராய்ச்சியில் மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளது. இதுவரை, ரஷ்யா தான் அதிகபட்சமாக, 29 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் அனுப்பி, சாதனை படைத்திருந்தது. இப்போது, அந்த சாதனை முறியடிக்கப்பட்டு, ஒரே விண்கலத்தில், 104 செயற்கைகோள்களை அனுப்பி, உலக சாதனை படைத்துள்ளது, இந்தியா. பிரதமரும், ஜனாதிபதியும் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தனர். பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் அவனது பேட்டியையும், படங்களையும் கண்டு அவனே பூரித்து போனான்.
இச்சமயத்தில் தான், அவன் படித்த ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
'தம்பி சிவகுமார்... இன்னைக்கு உலகம் முழுவதும் உங்கள பற்றிதான் பேச்சு... உலகமே பாராட்டுற உங்கள, ஊர்க்காரங்க பாராட்டாம இருந்தா எப்படி... ஊரில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்றோம்; கலந்துக்குவீங்களா...' என, கேட்டார் ஆசிரியர்.
பிறந்த ஊர் ஜனங்களின் பாராட்டு யாருக்குதான் கசக்கும்!
'கண்டிப்பாக கலந்துக்கிறேன் சார்... ஏற்பாடு செய்யுங்க...' என்றான் உற்சாகமாக!
'தேதி சொல்லுங்க...'
'அடுத்த மாசம் அப்பாவ பாக்க வர்றேன்; அப்போ வைச்சுக்கலாம்...' என்றான்.

சிவகுமார் ஊருக்கு வந்து சேர்ந்தபோது, இருட்டி விட்டது. சமீபகாலமாக ஏற்பட்ட மாற்றங்கள் எதுவும் அவன் கண்ணில் படவில்லை. வீட்டு வாசலில் கார் வந்து நின்றபோது, தெருவே வந்து வரவேற்க, அதைக் கண்டு நெகிழ்ந்து விட்டனர், அவன் மனைவியும், மகனும்!
இரவு முழுவதும் அவன் சரியாக துாங்கவில்லை; நாளை நடக்கப்போகும் பாராட்டு விழா பற்றியே மனம் சுற்றிச் சுற்றி வந்தது. அவனது சாதனையையும், மகத்துவத்தையும் மற்றவர்கள் பேசப் பேச, அதைக் கேட்டு, ஊர் மக்கள், 'நீ இவ்வளவு பெரிய ஆளா... உன் சாதனை எங்களுக்கு இப்பதான் தெரிகிறது. நீ இந்த ஊர்க்காரன்ங்கிறதுல எங்களுக்கெல்லாம் ரொம்ப பெருமை...' என்று அவர்கள் பேசப்போகும் வார்த்தைகளுக்காகவும், பாராட்டுகளுக்காகவும் காத்திருந்தான்.
மறுநாள் காலை, 10:00 மணிக்கு விழா ஆரம்பித்து விட்டது; மேடையில், பிரத்தியேக அலங்காரத்துடன் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான், சிவகுமார். விஸ்தாரமாக போடப்பட்டிருந்த பந்தலின் கீழ் உட்கார்ந்திருந்தனர், ஊர் மக்கள். அனைவரது முகத்திலும் பிரகாசம்!
தலைமை ஆசிரியர் பேசும்போது, சிவகுமார், தங்கள் பள்ளியில் படித்தது, தங்கள் பள்ளிக்கு பெருமை என்றும், அவனை மாதிரி மாணவர்கள் அனைவரும் உயர்ந்த நிலைக்கு வந்து, நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும், அவன் படித்த பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பதற்கு தான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
அடுத்து பேசிய சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட ஆட்சியரும் கூட அவனை வெகுவாக பாராட்டினர். அவர்களின் பேச்சில் மிகவும் மகிழ்ந்து போயிருந்தான், சிவகுமார்.
'அடுத்து, நம் விழா நாயகன் பேசுவார்...' என்று தலைமை ஆசிரியர் அறிவித்தவுடன், அனைவரும் கைதட்டினர். உற்சாகம் கரை புரண்டோட, விசில் அடித்தனர், சிலர்.
சிவகுமார் எழுந்து, மைக்கை பிடித்து பேச ஆரம்பித்தபோது, 'தண்ணீர் லாரி வந்திருக்கு...' என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது.
அவ்வளவுதான், அடுத்த நொடி, அந்த இடம் காலியாகி விட்டது. மேடையில் இருந்த அனைவரும், ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
அவமானத்தால் விக்கித்துப் போனான், சிவகுமார். எந்த மக்கள் அவன் பேசுவதை கேட்டு கைதட்டி பாராட்டி, அவனை தலை மேல் வைத்துக் கொண்டாடுவர் என்று எதிர்பார்த்தானோ, அவர்கள் அவன் பேச்சை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், தண்ணீருக்காக ஓடிவிட்டனர்.
சிவகுமாருக்கு அங்கே ஒரு நிமிடம் கூட நிற்க பிடிக்கவில்லை; மேடையில் இருந்த அனைவரையும் பார்த்து இயந்திரத்தனமாய் கும்பிடு போட்டு, இறங்கி, 'விடுவிடு'வென்று நடந்து, வீட்டுக்கு வந்து விட்டான்.
அதிர்ச்சியிலிருந்து மீண்ட தலைமை ஆசிரியர் அவன் வீட்டிற்கு வந்து, 'மன்னிச்சிடுங்க சிவகுமார்... இப்படி நடக்கும்ன்னு கொஞ்சம் கூட எதிர்பாக்கல...' என்றார், குற்ற உணர்வுடன்!
'ஊர்க்காரங்க இப்படி நடந்து கொண்டதற்கு நீங்க என்ன சார் செய்வீங்க... உண்மையிலேயே என் மீதுள்ள அன்பாலும், அபிமானத்தாலும் இப்படி ஒரு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தீங்க... அது இப்படி முடியும்ன்னா நினைச்சீங்க...' என்றான்.
அப்போது, அவன் அருகில் நின்றிருந்த அவன் நண்பன் சுப்பிரமணியன், 'ஊர் ஜனங்களுக்கும் உன் மீது அன்பும், மரியாதையும் உண்டு...' என்றான்.
'கூட்டத் திலிருந்து எழுந்து ஓடுவது தான் மரியாதையா...' என்று கோபப்பட்டான் சிவகுமார்.
'கோபப்படாதே... இங்குள்ள சூழ்நிலை அப்படி; சரியா மழை பெய்யாததால் ஆறு, குளம், கிணறு எல்லாம் வறண்டு, நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு போயிருச்சு. ஆழ்துளை கிணற்றிலிருந்து கூட தண்ணீர் எடுக்க முடியல. தாமிரபரணியிலிருந்து டேங்கர் லாரி மூலமாக தண்ணீர் எடுத்து வந்து, குளோரின் மாத்திரைகளை போட்டு வினியோகிக்கிறாங்க. இதை விட்டா, ஊர் ஜனங்களுக்கு குடிக்க தண்ணீர் கிடையாது.
'அவங்கள பொறுத்தவரை இந்தியா ராக்கெட் விடுறதும், விடாததும், அதில் உலக சாதனை படைப்பதும் ஒரு பொருட்டே அல்ல. ஏன்னா, அது அவங்களோட வாழ்க்கையில எந்த ஒரு தாக்கத்தையும் உடனடியாக ஏற்படுத்தாது. ஆனால், தண்ணீர் அப்படியல்ல; அது அவங்களோட வாழ்வாதாரப் பிரச்னை. தண்ணீர் இல்லாமல் யாரும் உயிர் வாழ முடியாது. இப்ப சொல்லு, எது முக்கியம்...' என்று கேட்டான், சுப்பிரமணியன்.
சிவகுமாருக்கு நிலைமை தெளிவாக புரிந்தது. மவுனமாக படியேறி அவன் மொட்டை மாடிக்கு வர, அவர்களும் கூட வந்தனர். அங்கிருந்து பார்த்த போது, மரங்கள் எல்லாம் இலைகளை உதிர்த்து எலும்புக் கூடுகளாய் காட்சியளித்தன. வயல்வெளிகள் வெறும் தரிசு நிலங்களாகிப் போயிருந்தன.
பகல் பொழுதில் வந்திருந்தால், ஊருக்குள் நுழையும்போது, ஊரின் நிலைமை ஓரளவு புரிந்திருக்கும். விடிந்த பின்னும் வெளியே போக சந்தர்ப்பம் கிட்டவில்லை. குளித்து முடித்து சாப்பிட உட்காரும்போதே, வெகு நாட்களுக்கு பின் வந்திருக்கும் அவனையும், அவன் மனைவி மற்றும் மகனையும் பார்க்க, அக்கம்பக்கத்தினர் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் பேசி விடை பெறுவதற்குள், விழாவுக்கு அழைத்துப்போக தலைமை ஆசிரியர் வந்து விட்டார். இப்படி ஊரின் நிலைமையை புரிந்துகொள்ள முடியாதபடி சந்தர்ப்பங்கள் அமைந்து விட்டன.
'என்னை மன்னிச்சிடுங்க சார்... நான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்... ஆகாயத்தில் பறக்கும்போது, பூமியில் உள்ள மேடு பள்ளங்கள் தெரியாது; அதுபோல வானத்தை அளந்து கணக்கிட்ட என் கண்களுக்கு, இங்குள்ள பிரச்னைகள் தெரியாம போயிருச்சு. துக்க வீட்டில், பிறந்தநாள் கொண்டாடத்தை எதிர்பார்த்தது என் தப்பு தான்...' என்று சொல்லி வருத்தப்பட்டான், சிவகுமார்.
'இதில், மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்ல; நாட்டின் தகவல் தொடர்புக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் உலக அரங்கில் நம் கவுரவத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும் தீவிரமாக செயல்படுறோம். ஆனா, அதைவிட முக்கியமான, நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்னைகள தீர்ப்பதில் தீவிரம் காட்டுறதில்ல; நம் நாட்டில் வற்றாத ஜீவநதிகளுக்கு பஞ்சமில்ல. ஆனாலும், குடிக்க தண்ணீர் கிடைக்காமல் திண்டாடுறாங்க, மக்கள். விவசாயம் செய்ய முடியாமல், விவசாயிகள் தற்கொலை செய்துக்கிறாங்க.
'உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் ஒரே சீராக வளர்ந்தால் தான் அது வளர்ச்சி; ஒரு உறுப்பு வளர்ந்து இன்னொரு உறுப்பு வளரலன்னா, அது ஊனம். நம் நாட்டு வளர்ச்சியும் அப்படித்தான் இருக்கு...' என்றான், சுப்பிரமணியன்.
ஒரு வழியாக, சிவகுமார் சமாதானம் அடைந்தாலும், ஏனோ, அவனால் சகஜமாக இருக்க முடியவில்லை. அவனுடன் சேர்ந்து உழைத்த சக விஞ்ஞானிகளும் இந்த சாதனைக்காக எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளனர் என்பது அவனுக்கு தெரியும். அந்த உலக சாதனையை, தன் சொந்த ஊர் மக்களோடு பகிர்ந்துகொள்ள ஓடோடி வந்து, அது முடியாமல் போனமைக்காக மிகவும் வருந்தினான். அதே சமயம் சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகள் கடந்த பின்பும், நாட்டு மக்களின் மிக முக்கிய வாழ்வாதாரமான, தண்ணீர் பிரச்னையை கூட தீர்க்க முடியாமல், மற்ற களங்களில் சாதிக்கும் சாதனைகளை எப்படி உண்மையான சாதனைகளாகும் என்று யோசித்தபடி காரில் பயணித்தான்.
அவனது கார், திருநெல்வேலி சந்திப்பிலுள்ள பழைய பேருந்து நிலையத்தை தாண்டி ரயில் நிலையம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

ஆ.முத்துக்கிருஷ்ணன்

சொந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம், பனையங்குளம். பள்ளிப் பருவத்திலிருந்தே, இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு, கதை, கட்டுரை, கவிதை என எழுதியுள்ளார்.
அரசு பள்ளியிலிருந்து ஓய்வு பெற்றவர். டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில், ஆறுதல் பரிசு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment