MGR THE LEGEND
உதவிக்கரம் நீட்டிய வள்ளல்!
பிரபல சினிமா பத்திரிகையாளர் பொம்மை சாரதி, பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆருடனான தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் பகிர்வு...
ஐம்பதுகளின் முற்பகுதி.
ஒரிசா மாநிலத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்களையும் உடைமைகளையும் வாழ்க்கையையும் இழந்து தவிக்கும் அவலநிலை ஏற்பட்டது. நிவாரண நிதிக்கு உதவும்படி ஒரிசா அரசு அறிக்கையும் தந்தது.
ஒரிசாவைச் சேர்ந்த சில மாணவர்கள் அப்போது சென்னையில் தங்கி, மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார்கள். நிவாரண நிதிக்கு பணம் திரட்டித்தர அவர்கள் விரும்பினார்கள். என்னை வந்து சந்தித்தார்கள். வைஜயந்திமாலாவும் கிஷோர்குமாரும் நடித்த ‘நியூடெல்லி’ என்ற இந்திப்படம் வட இந்திய நகரங்களில் திரையிடப்பட்டு பெரும் வெற்றியுடன் ஓடிக்கொண்டிருந்தது.
‘ஒரிசா நிவாரண நிதிக்காக, சென்னை ‘அசோக்’ திரையரங்கில் (தற்போதைய ‘சிவசக்தி’) ‘நியூ டெல்லி’ படத்தை காலைக் காட்சியாகத் திரையிடப் போகிறோம். எம்.ஜி.ஆர். அவர்களை நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்க நீங்கள் ஏற்பாடு செய்து தரவேண்டும். அவர் வந்தால் வசூல் அதிகமாகக் கிடைக்கும்” என்று அந்த மாணவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். நான், எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்தித்து இதுபற்றிச் சொன்னேன்.
“அவதிப்படும் மக்கள் எங்கிருந்தால் என்ன, யாராயிருந்தால் என்ன? அவர்களது துயரத்தைத் துடைக்க வேண்டியது நமது கடமை. நல்ல நோக்கத்திற்காக இவர்கள் அழைக்கிறார்கள். நிச்சயம் கலந்து கொள்கிறேன்” என்று எம்.ஜி.ஆர். அவர்கள் சொன்னார்கள். ஒரிசா மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி.
எம்.ஜி.ஆர். அவர்கள் அப்போது தி.மு.க.வில் ஒரு முக்கிய புள்ளி. இந்தி எதிர்ப்பில் அக்கட்சி தீவிரமாக இருந்தது. “இந்தி படத்திற்கு அழைக்கிறோமே, அவர் வருவாரா என்ற சந்தேகம் இருந்தது. பயந்தபடிதான் இருந்தோம். எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி” என்று அந்த மாணவர்கள் தெரிவித்தார்கள்.
“எம்.ஜி.ஆர். அவர்கள் இந்திக்கு எதிரானவர் அல்ல. அது மக்கள் மீது திணிக்கப்படும் முறையைக் கண்டிக்கிறார். அவர் நடித்த மர்மயோகி, சர்வாதிகாரி படங்கள் இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. சொந்தத்தில் இந்தியில் ஒரு படம் தயாரிக்கவும் அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது கைகூடவில்லை” என்று மாணவர்களிடம் எடுத்துச் சொன்னேன். அவர்கள் நேரில் எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்கள். விழாவுக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.
இதற்கிடையில் ‘நியூடெல்லி’ படம் சென்னையில் திரையிடப்பட்டது. அதில் இடம் பெற்ற ஒரு காட்சியைப் பற்றி சில பத்திரிகைகள் கடுமையாக விமர்சனம் செய்தன. கண்டனத்துக்கு உள்ளான காட்சி இதுதான்.
ஒரு பொது இடம். படத்தின் நாயகன் (கிஷோர் குமார்) ஒரு தமிழனின் தலையில் செருப்பை வைத்து ஆடிப் பாடி வருகிறார் அங்கு கதாநாயகியும் (வைஜயந்தி மாலா) இருக்கிறார். “ஒரு தமிழ் நடிகை கதாநாயகியாக நடித்துள்ள படத்தில் எப்படி இந்தக் காட்சி இடம் பெறலாம்? தணிக்கையில் எப்படி அனுமதித்தார்கள்? தமிழ் நாட்டில் இதை திரையிட அனுமதிக்கலாமா?” என்று விமர்சனங்கள் வர, ஒரே பரபரப்பாகிவிட்டது. விழாவை ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுக்கு பெரும் பயம் வந்து விட்டது. எம்.ஜி.ஆர் அவர்கள் நிகழ்ச்சிக்கு வருவாரா மாட்டாரா என்ற கவலையுடன் பதைபதைப்புடன் என்னை வந்து சந்தித்தார்கள். இதற்கிடையே எம்.ஜி.ஆர். அவர்களின் பார்வைக்கும் இந்த விமர்சனங்கள் வந்தன. அவர் என்னை அழைத்தார். “தமிழர்களை இழிவு செய்யும் காட்சியைக் கொண்ட இப்படத்திற்கு நான் எப்படித் தலைமை வகித்து வசூலுக்கு உதவ முடியும்? இதை முன்னமே நீங்கள் ஏன் என்னிடம் சொல்லவில்லை? என்னை தர்மசங்கடத்தில் வைத்து விட்டீர்களே!” என்று சற்று கடுமையாகவே என்னிடம் பேசினார்.
“அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் உங்களை அழைத்திருக்கவே மாட்டேன்!” என்றேன். என்னைப் புரிந்துகொண்ட நிலையில் “இப்போது என்ன செய்யலாம்?” என்றார். ஒரிசா மாணவர்கள் என்னைச் சந்தித்துப் பேசிய விவரத்தை அவரிடம் சொன்னேன்.
“அவர்கள் நிரபராதிகள். ஒரு நல்ல நோக்கத்தின் அடிப்படையில்தான் இதைத் திரையிடுகிறார்கள். பெரிதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்திருக்க நியாயமில்லை. கடைசி நிமிஷத்தில் நீங்கள் மறுத்துவிட்டால் பெரிதும் மனம் ஒடிந்து போய் ஏமாற்றமடைந்து விடுவார்கள். தவிர, நீங்கள் மறுத்துவிட்டால். வேறு எவரும் முன்வந்து தலைமை வகிக்கத் துணியமாட்டார்கள் உங்கள் விருப்பப்படிச் செய்யலாம்” என்றேன். சில நிமிஷங்கள் யோசித்த அவர், “விழாவுக்கு வருகிறேன். ஆனால் அதே சமயம் என் எதிர்ப்பையும் நான் காட்டுவேன்” என்றார். “அது உங்கள் தனிப்பட்ட உரிமை. எவரும் தலையிட முடியாது!” என்றேன்.
விழா நாள் வந்தது.
விரும்பத்தகாத கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி!
பிரபல சினிமா பத்திரிகையாளர் பொம்மை சாரதி, பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆருடனான தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் பகிர்வு...
‘கலைஞர்களுக்குள் போட்டி இருக்கலாம். இதனால் தொழிலில் முன்னேற்றமும் வளர்ச்சியும் காண முடியும். ஆனால் எந்த ஒரு கட்டத்திலும் பொறாமையாக அது மாறிவிடக்கூடாது. இது பெரும் பாதிப்பை வளர்ச்சியில் ஏற்படுத்திவிடும்’ என்பதை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்தி வருவார் எம்.ஜி.ஆர். இதற்காகவே நடிகர்கள் ஒருவரையொருவர் அடிக்கடி சந்தித்திப் பேசிப் பழக வேண்டும் என்ற கருத்தினைக் கொண்டிருந்த அவர் அதைச் செயலிலும் காட்டி வந்தார்.
நடிகர் சங்கத்தின் தலைவராக எம்.ஜி.ஆர். இருந்த சமயம், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை சங்கத்தின் சார்பில் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்வார். நடிகர் சங்கத்தில் (தற்போதைய அ.தி.மு.க. தலைமையகம்) கலைஞர்களுக்கென பல கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், கருத்தரங்குகள் ஏற்பாடு செய்வார். கலைஞர்களைப் பங்கேற்க வைப்பார்.
விழா காலையிலேயே ஆரம்பமாகிவிடும். மூத்த கலைஞர்களின் அறிவுரைகளுடன் விழா ஆரம்பமாகி, இரவு வரை தொடரும். காலை சிற்றுண்டி, பகலுணவுடன் இரவு விருந்தும் இருக்கும். அனைவருடனும் தரையில் அமர்ந்து வேடிக்கையாகப் பேசியபடி உணவு அருந்துவார். பம்பரம் போலச் சுற்றிச் சுழன்று எல்லா ஏற்பாடுகளும் சரிவர நடக்கின்றனவா என்பதைக் கண்காணிப்பார். எல்லாக் கலைஞர்களையும் அவரே முன்வந்து வரவேற்று உபசரிப்பார்; முகமலர்ச்சியுடன் விடை கொடுத்து அனுப்புவார்.
பல வெற்றிப் படங்களில் தொடர்ந்து நடித்து, ‘நடிகர் திலகம்’ எனப் போற்றப்பட்ட சிவாஜி கணேசன், மக்களின் பேராதரவுடன் மிக்க செல்வாக்குடன் திகழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு படி மேலாக எம்.ஜி.ஆரும் மிக்க செல்வாக்குடன் விளங்கி வந்தார்.
இரண்டு கலைஞர்களுக்கும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருந்தார்கள். அவர்களிடையே பலத்த போட்டியும் இருந்தது. தங்களது அபிமான நடிகர் மீது கொண்டிருந்த அன்பும் பாசமும் சில சமயம் இவர்களிடையே வெறியாகக்கூட மாறியது. தங்களது அபிமான நடிகருக்குப் போட்டியாக இருந்த நடிகர் நடித்த படங்கள் திரையிடப்படும் சமயம் ஒட்டப்படும் சுவரொட்டிகள் மீது சாணம் அடிப்பதும், சுவரொட்டிகளைக் கிழிப்பது போன்ற சம்பவங்களூம் நடைபெற்று வந்தன.
திரைப்படத்துறையின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பலர் இந்த இரண்டு கலைஞர்களையும் சந்தித்து, விரும்பத்தகாத இந்தக் கலாசாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க முன்வருமாறு கேட்டுக்கொண்டார்கள்.
துரதிர்ஷ்டவசமாக அப்போது ஒரு சம்பவம் நடந்தது. சீர்காழியில் நாடகம் நடத்த சென்றிருந்த எம்.ஜி.ஆர்., நாடக மேடையில் எதிர்பாராத வகையில் விபத்துக்குள்ளாகி, அவரது கால் எலும்பு முறிந்து போனது. நாடகத்தை மேற்கொண்டு நடத்த முடியாத நிலையில், எம்.ஜி.ஆர். சென்னைக்கு உடனே திரும்பி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
திரைப்படவுலகையும், லட்சக்கணக்கான அவரது ரசிகர்களையும் இச்சம்பவம் மிக்க துயரத்திற்குள்ளாக்கியது. அவர் பூரண குணம் பெற்று விரைவில் திரும்ப வேண்டும் என அனைவரும் மனதார விரும்பினார்கள்.
இந்த நிலையில் நானும், என்னுடன் அப்போது ‘பேசும் படம்’ பத்திரிகையில் பணியாற்றி வந்த எஸ்.வி. சம்பத்குமாரும் மருத்துவமனைக்குச் சென்று எம்.ஜி.ஆரை பார்த்தோம். அவரது உடல்நலம் பற்றி விசாரித்து அவர் பூரண குணம் பெற்று விரைவில் திரும்ப வேண்டும் என வாழ்த்தினோம்.
‘பயப்பட எதுவுமில்லை. விரைவில் குணமடைந்து, முன்பு இருந்ததை விட முழு உற்சாகத்துடன் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். இதை என் ரசிகர் களுக்குத் தெரிவியுங்கள்’ என்று எங்களுக்கு ஆறுதல் சொல்லி, தன்னம்பிக்கையுடன் பதில் தந்தார்.
பேச்சுக்கிடையில் அவரிடம் நாங்கள் விளம்பரச் சுவரொட்டிகளில் சாணம் அடிப்பது பற்றியும், கிழித்து அலங்கோலப்படுத்துவதைப் பற்றியும் குறிப்பிட்டு, ‘இதை நிறுத்த நீங்கள் உடனடியாக ஏதாவது முயற்சி எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டோம்.
அப்போதைய சூழ்நிலையையும், உடல் நிலையையும் பொருட்படுத்தாமல், ‘உணமைதான். இதை உடனே செய்ய வேண்டும். எனது ரசிகர்கள் இம்மாதிரி நடந்து கொள்ளமாட்டார்கள். அப்படி அவர்கள் செய்வார்களேயானால் எனக்கு அதில் உடன்பாடே கிடையாது!’ என உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார் அவர்.
'இதையே ஓர் அறிக்கையாக நீங்கள் தந்தால் ‘பேசும் படம்’ இதழில் வெளியிடுவோம். உங்களை உங்கள் ரசிகர்கள் புரிந்து கொள்ள ஏதுவாகும்' என்று நாங்கள் சொன்னதும், உடனே ஓர் அறிக்கையையும் தயாரித்துக் கொடுத்தார். அறிக்கையின் முடிவில் புகைப்படத்துடன், தனது கையெழுத்தையும் வெளியிடும்படிக் கேட்டுக்கொண்டு, தன் கையெழுத்தையும் போட்டுத் தந்தார்.
எம்.ஜி.ஆர். விருப்பப்படியே ‘பேசும் படம்’ இதழில் அந்த அறிக்கை பிரசுரிக்கப்பட்டு அதற்கான பலனும் விரைவில் கிடைத்தது. சாணம் அடிப்பது நீங்கியது.
மக்கள் செல்வாக்கு மிக்கவர்!
பிரபல சினிமா பத்திரிகையாளர் பொம்மை சாரதி, பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆருடனான தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் பகிர்வு...
ஒரு சமயம் எங்கள் சந்திப்பின்போது ‘மக்களிடையே ஏற்கனவே செல்வாக்குடன் விளங்கும் நடிகர்களுக்கு விளம்பரம் தேவையா, அல்லது வளரத்துடிக்கும் திறமைசாலிகளுக்கு அதிக விளம்பரம் அவசியமா? என்ற கேள்வி எழுந்தது.
“செல்வாக்குடன் விளங்கும் களைஞர்களுக்குப் பதிலாக வளரும் நிலையிலுள்ளவர்களுக்கு போதிய விளம்பரம் தந்தால், அந்த விளம்பரம் அவர்களுக்கு பெரும் ஊக்கமாக அமைந்து, அவர்கள் முன்னேற உதவுமல்லவா? என்றார் எம்.ஜி.ஆர். அவர்கள்.
“செல்வாக்குடன் விளங்கும் உங்களைப் போன்றவர்களைப்பற்றி செய்திகளும் படங்களும் வெளியிடும்போது மக்கள் ஆர்வமுடன் வாங்குகிறார்கள். அதே சமயம் புதுமுகங்களைப் பற்றியும், வளரும் கலைஞர்களைப் பற்றியும் ஊக்குவிக்கத் தவறுவதில்லை. ‘பேசும் படம்’ அதைத்தான் செய்கிறது என்று சொன்னோம்.
’அப்படியானால் புதுமுகங்கள் சார்பில் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்றார் அவர்.
இந்தப் பதில் எங்களுக்கு மிக்க மன நிறைவு தந்ததுடன், அவர் மீதுள்ள மதிப்பையும் நல்லெண்ணத்தையும் மேலும் கூட்டியது. சக கலைஞர்களுக்காக - அவர்கள் அறியாமலேயே - அவர்களது நலனுக்காக முன்னின்று வாதிடும் தன்னலமற்ற செயல்வீரராக அவரைக் கண்டோம். தன் வாழ்நாளின் கடைசிவரை அப்படித்தான் அவர் விளங்கினார்.
அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். அவர்கள் தூய வெண்ணிற கதராடை அல்லது கைத்தறி உடைகளையே அணிவார். தலைமுடியை பாகவதர் கிராப் பாணியில் பின்புறம் நோக்கி வாரி விட்டிருப்பார். கழுத்தில் தாமரை மணி மாலை ‘பளிச்’சென மின்னும்.
‘எம்.ஜி.ராம்சந்தர்’ என்றே தன் பெயரைச் சொல்வார். கையெழுத்தும் அப்படித்தான் போடுவார். ‘ஏன் இப்படி?’ என்று அவரிடம் நான் ஒரு சமயம் கேட்டபோது, ‘டி.ஆர்.ராமச்சந்திரன், டி.கே.ராமச்சந்திரன்(வில்லன்) இப்படி பலர் இருக்கிறார்கள். மேலும் ஒரு ராமச்சந்திரனா? அதனால் தான் ‘ராம்சந்தர்’ என்றார்.
‘’வட இந்திய நடிகரின் பெயர் போல் இல்லையா இது?’’ என அவரது வளர்ச்சியில் ஈடுபாடு கொண்ட, எங்களைப் போன்ற பலர் எடுத்துச் சொல்லி இருக்க வேண்டும். சிறிது காலத்தில் ’எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றே கையெழுத்துப் போட ஆரம்பித்து, பெயரையும் அப்படியே மாற்றிக் கொண்டார் அவர்.
மற்றொரு சமயம். நானும் எனது ‘பேசும் ப்டம்’ சகாக்களும் வழக்கம் போல எம்.ஜி.ஆர். அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம். நடிப்பைப் பற்றி எங்கள் பேச்சுத் திரும்பியது.
ஒரு சில திரைப்பட விமர்சகர்கள், ‘எம்.ஜி.ஆர். அவர்களது நடிப்பில் போதுமான அழுத்தம் இல்லை. மேலோட்டமாக அவரது நடிப்பு இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் சோபிக்கும் அளவுக்கு, உணர்ச்சிகரமான காட்சிகளில் அவர் சோபிப்பதில்லை’ என்ற வகையில் எழுதியும், பேசியும் வந்தார்கள். மற்றும் சிலர், ‘அவர் வயதுக்குப் பொருந்தாத கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், தன்னை இன்னும் இளம் வாலிபனாகக் கருதிக் கொண்டு காதல் காட்சிகளில் இளம் நடிகைகளுடன் நடிக்கிறார் என்றும் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்கள்.
ஒரு பிரபலமான நாளேடு அவரது படத்தைப் பற்றி விமர்சிக்கும்போது – அவர் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதைப் பற்றி எழுதும்போது – அடைப்புக் குறிக்குள் அவரது வயதையும் குறிப்பிட்டு – வயதுக்குப் பொருந்தாத காட்சிகளில் அவர் நடிப்பதாக மறைமுகமாகச் சுட்டிக் காட்டி விமர்சனம் செய்து வந்தது.
அன்றைய எங்கள் சந்திப்பின்போது எம்.ஜி.ஆர். அவர்கள் இதைப் பற்றியெல்லாம் மனம் திறந்து பேசினார்.
‘நடிப்பு என்பது மிகையாகவும் இருக்கக்கூடாது. எமாற்றத்தைத் தருவதாகவும் அமையக்கூடாது. மனதைத் தொடும்படியாக – இயல்பானதாக நடிப்பு அமையவேண்டும். மக்களும் அது நடிப்பு என்பதை உணர்ந்து அதை ஏற்கும்படிச் செய்ய வேண்டும். அதுதான் உண்மையான நடிப்பு’ என்று எங்களிடம் விளக்கம் தந்த எம்.ஜி.ஆர். அவர்கள், எங்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.
‘இருபத்தைந்து வயதுள்ள ஒரு நடிகர் – கல்லூரி மாணவனாகவோ, கிராமாத்து இளைஞனாகவோ நடிக்கும்போது, அது அவரது வயதுக்குப் பொருத்தமாக அமைந்து அவர் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு பாதி வெற்றியை ஆரம்பத்திலேயே தந்து விடுகிறது.
தவிர, அதே இளவயதுடைய நடிகர் ஒரு முதியவராக, ஒப்பனையின் உதவியுடன் தன்னை வயோதிகராகக் காட்சியளிக்க வைத்து, அதில் வெற்றி பெறுவது என்பதும் சுலபமே.
ஆனால் வாலிபப் பருவத்தை கடந்த ஒரு நடிகர் – மக்களால் அவர் இளமைப் பருவத்தை கடந்தவர் என உணரப்பட்ட ஒருவர் – படங்களில் நடிக்கும்போது தன்னை ஓர் இளைஞனாகக் காட்டிக் கொண்டு, அத்தகைய கதாபாத்திரங்களையே தொடர்ந்து ஏற்று, அவர் இளைஞரே என்று மக்களால் நினைத்து ஏற்கப்பட்டு, அது பாராட்டப்பட்டு அங்கீகரிக்கப்படுவது என்பது சுலபமானதல்ல; மிக மிகக் கடினமானது. நான் அந்தக் கடினமான காரியத்தைச் செய்து மக்களால் முழுதுமாக அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டப்பட்டு வெற்றி பெற்றுள்ளேன் என்றால், எது சிறப்பானது?
நீங்களே பதில் சொல்லுங்கள்!” என்று முடித்தார். அவரது வாதத்தில் உண்மை இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியுமா?
இன்னொரு சமயம் ‘சண்டைக் காட்சிகளே இல்லாமல் உங்கள் படம் வெளிவராதா?’ என்று கேட்டபோது, ‘மக்கள் அதை விரும்புவார்களா? வரவேற்பார்களா? இதை முதலில் தெரிந்து கொண்டு வாருங்கள்’ என்றார்.
இப்படி தன் தரப்பு வாதங்களை நியாயப்படுத்தி ஆணித்தரமாக கருத்துக்களை வெளியிடுவதில் எம்.ஜி.ஆர். அவர்கள் என்றுமே வல்லவராகத் திகழ்ந்தார்.
எதிர்பார்த்ததற்கும் மேலான வசூல்!
பிரபல சினிமா பத்திரிகையாளர் பொம்மை சாரதி, பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆருடனான தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் பகிர்வு...
எம்.ஜி.ஆர். அவர்களுடன் அவரது ‘பிளைமவுத்’ காரில் நானும் சென்றேன். வழக்கமாக கலகலப்பாகப் பேசியபடி வரும் அவர், அன்று எதையோ தீவிரமாக யோசித்தபடி மௌனமாகவே இருந்தார். திரைப்பட அரங்கின் வாசலிலேயே மாணவர்கள் ஒன்று திரண்டு, கோலாகலமாக அவரை வரவேற்றார்கள். ரசிகர்களின் கூட்டம் அலை மோதியது.
படம் திரையிடப்பட்டு, இடைவேளையின் போது எம்.ஜி.ஆர். அவர்கள் பேச மேடைக்கு அழைக்கப் பட்டார். ரசிகர்களின் அன்பான ஆரவாரம் அடங்கவே பல நிமிடங்கள் பிடித்தன. எம்.ஜி.ஆர். அவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.
“திரைப்படம் மிக சக்தி வாய்ந்தது. பார்ப்பவர் மனதில் உடனே ஆழமாகப் பதியக்கூடியது. நல்ல கருத்துக்களை மக்களுக்கு படங்களின் மூலம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க வேண்டும். வெறுப்பையும் வேற்றுமையையும் ஏற்படுத்தக்கூடாது. இந்தப் படத்தில் செருப்பு வைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்தக் காட்சியைப் பார்க்கும் போது நான் மிகவும் வேதனைப்பட்டேன். என்னைப் போலவே படம் பார்த்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் வருத்தப்பட்டிருப்பார்கள்.
குறிப்பிட ஓர் இனத்தவரின் கலாச்சாரத்திற்கு இது ஏற்புடையதாக இருந்தாலும், வேறு ஒரு பகுதியைச் சேர்ந்த மக்களின் உணர்வை அது பாதிக்குமானால், அம்மாதிரியான காட்சிகளை படத்தில் இடம் பெறச் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதை கலைஞர்கள் எங்கிருந்தாலும் கவனிக்க வேண்டும்: கடைப்பிடிக்க வேண்டும்” என்று தனது எதிர்ப்பைத் தெரிவித்த அவர், அதே சமயம் மாணவர்களின் நாட்டுப் பற்றையும் அவர்களது நல்ல நோக்கத்தையும் மிகவும் புகழ்ந்தார். அந்த ஒரு காரணத்திற்காகவே தான் வரச் சம்மதித்ததையும் எடுத்துச் சொன்னார்.
விழா முடிவடைந்து திரும்பும் சமயம் வந்தது.
காரில் ஏறப்போகும் முன் விழா நிர்வாகியை அழைத்து விழாவைச் சிறப்பாக நடத்தியதற்காகப் பாராட்டி நன்றி தெரிவித்து, “நாளை என்னை வந்து பாருங்கள்” என்று அவரிடம் கூறி, பின்னர் என் பக்கம் திரும்பி, “அவரை அழைத்து வரும் பொறுப்பு உங்களுடையது!” என்றார்.
திரும்பும் சமயம் வழி நெடுக பேசியபடி வந்தார். அவரது மன இறுக்கம் தணிந்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்டேன்.
மறுநாள் விழா அமைப்பாளருடன் (அவரது பெயர் திரு.ராஜ்கிஷோர் என்று நினைவு) எம்.ஜி.ஆர். அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன்.
முகம் மலர வரவேற்றார். விழா அமைப்பாளரிடம் “உங்களது நோக்கம் உயர்வானது. ஆனால் நீங்கள் தேர்ந்தெடுத்த படம் பற்றி அப்படி என்னால் சொல்ல முடியாது. உங்களது நற்பணிக்கு என் சிறிய காணிக்கை!” என்று, ஒரு பெரிய தொகைக்கான காசோலையும் அவரிடம் தந்தார். எம்.ஜி.ஆர். அவர்களின் உயர்ந்த பண்பையும் அன்பையும் கண்டு, வந்தவர் திக்குமுக்காடிப் போய்விட்டார்.
அவர் புறப்பட்டுச் சென்றதும் எம்.ஜி.ஆர். அவர்களிடம் நான், ‘’நேற்று விழா மேடையிலேயே இதைத் தந்திருக்கலாமே. இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே!” என்றேன்.
எம்.ஜி.ஆர். அவர்கள் கலகலவெனச் சிரித்தார்.
“நேற்றைய விழாவில் படத்தைப் பற்றி என் எதிர்ப்பை வெளியிட்டபோது இதைச் செய்திருந்தால் இதற்குத்தான் முக்கியத்துவம் கிடைத்திருக்கும். என் எதிர்ப்புக்கு வலிமை குறைந்து போயிருக்கும்” என்றார்.
எம்.ஜி.ஆர். அவர்களின் சமாதானம் எனக்குத் திருப்தியைத் தந்தது. அதே சமயம் பிறர் மனம் புண்படாத நிலையில் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கும் நயமும் என்னை வியக்க வைத்தது
.
No comments:
Post a Comment