Sunday 19 January 2020

JOTHILAKSHMI - INTRODUCTION



JOTHILAKSHMI - INTRODUCTION


அடிக்கரும்பாய் இனித்த ‘யாரடி வந்தார்!’

முப்பதுகளில் நடிக்கத் தொடங்கிய பழம்பெரும் நடிகை எஸ்.ஆர். ஜானகி முதல் வாண்டுப் பையன் கமலஹாசன் வரை ஒவ்வொரு பத்தாண்டுக்கும் சில நடிகர்கள் இருந்த ‘வானம்பாடி’யில், கமலஹாசனை விட ஒரு சில வருடங்கள் மட்டுமே பெரியவளான ஒரு இளம் நடிகை யும் இடம்பெற்றிருந்தாள்.... அவள்தான் ஜோதிலட்சுமி. பின்னாளின் கவர்ச்சி நடனப்புயல்!

‘யாரடி வந்தார், என்னடி சொன்னார்

ஏனடி இந்த உல்லாசம்’ என்று ‘வானம்பாடி’யில் ஒய்யாரமாக வயதுக்கு மேற்பட்ட வசீகரங்களுடன் ஜோதிலட்சுமி ஆடிக்கொண்டு வருவதைப் பார்த்தால், படத்தின் குட்டிப் பயலை விட அவருக்கு நான்கு வருடங்கள்தான் அதிகம் என்று நம்பமுடியாது!

‘காளமேகம்’, ‘பிரபாவதி’ போன்ற பழைய படங்களின் கதா நாயகி நடிகையான எஸ்.பி.எல். தனலட்சுமி, அவருடைய தாயார். டி.ஆர். ராஜகுமாரி அவருக்கு சின்ன தாயார் முறை என்கிற அதிரவைக்கும் பின்னணிகள் ஒரு பக்கம் இருந்தாலும், 13 வயதில் பருவமங்கையாகத் திகழ்ந்த ஜோதிலட்சுமியை ஒரு அருமையான பாடலுக்கு நடனம் ஆட வைத்த பெருமை கண்ணதாசனைத்தான் சாரும்!

அதுவும், நடனப்பெண் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு மலர் இட்டு மகிழ்வதைப் போல், யாரடி, என்னடி, ஏனடி, காலடி, ஆறடி, ஓரடி, ஈரடி, பாரடி, காவடி, வேலடி, போலடி என்று அடிக்கு அடி அவளுடைய அடியை ஏந்தும்படி, பாடல் அடிகளை எடுத்துக் கொடுத்தார் கவிஞர்!

‘வானம்பாடி’ திரைப்படம் தொடங்கும் போது, பெண் வேட்டைக்குத் தயாராக இருக்கும் கிளியூர் ஜமீந்தார் மார்த்தாண்டனை இந்த பாடல் காட்சியில் நாம் மீண்டும் பார்க்கிறோம். அவனைத் தான் சுட்டுக்கொன்றுவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறாள் கதாநாயகி... ஆனால், அவனோ இங்கே ஒரு இளம் நடன மாதின் ஆட்டத்தை ஆவலுடன் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறா !

‘வானம்பாடி’யில் இடம்பெற்ற இந்த நடனம், வடக்கத்திய கோட்டா பாணியில் அமைந்தது. தபேலா, ஆர்மோனியம், சாரங்கி ஆகிய வாத்தியக்காரர்கள் ஒரு பக்கம் அமர்ந்து பக்க வாத்தியம் வாசிக்க, இந்த நடனம் நிகழ்த்தப்படுகிறது. இத்தகைய நடனங்கள் சென்னையின் சில பகுதிகளில் கூட அண்மைக்காலங்கள் வரை நடைபெற்று வந்ததாக நான் இசை பயின்ற பைஜு கான் என்ற சிதார் கலைஞர் என்னிடம் தெரிவித்ததுண்டு. கண்ணதாசன் நிச்சயம் சிலவற்றை நேரடியாக அனுபவித்திருப்பார். அதனால்தான், சிருங்காரப்பதம் போன்ற நடனப்பாடல் வகையில், தனி முத்திரையுடன் அவரால் இந்த பாடலை எழுத முடிந்தது!


மகாதேவனைப் பொறுத்தவரை, தான் அமைக்கும் மெட்டுக்கு மிக இயல்பாகத் தொய்வில்லாமல் நடித்திச் செல்வதில் குறி தவறாத திறமை உடையவர். இதை, ‘யாரடி வந்தார்’ பாடலுடைய பல்லவியின் ஒரு சின்ன திருப்பத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம்.பல்லவியின் முதல் பாதியில் சுத்த மத்தியமம் லேசாக இணைந்துகொள்ள, ‘காலடி மீது ஆறடிக் கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம்’ என்று எடுக்கும் போதே பிரதி மத்தியம சுரத்திற்கு முதன்மை கொடுத்து, மெட்டுக்கு ஒரு புது வண்ணத்தைக் கொடுக்கிறார் மகாதேவன். அசால்ட்டான இத்தகைய ‘கியர்’ மாற்றங்களின் வாயிலாக, பாடல்களின் கவர்ச்சியை அவர் கூட்டிக்கொண்டே போகக்கூடியவர்.

நடன அசைவுகள், இன்ப ரசத்தை சுட்டும் அபிநயங்கள், காதல் சங்கதிகளைப் பட்டும் படாமல் தொடர்ந்து தொட்டுக்கொண்டு செல்லும் பாடல் வரிகள், இவை அனைத்தை யும் சேர்த்துக்கொண்டு ஒரு நடனக் கச்சேரியை நிகழ்த்துவதுபோல் விதவிதமான விலாசங்கள் காட்டும் இணைப்பு இசை.....இப்படி அமைந்திருக்கிறது பாடல்.

ஒரு நடன மாதுவின் ஆடல் கட்டம், அதுவும் கோட்டா பாணியில் அமைந்த சூழல் என்கிற போது, இம்மி அளவும் பிசகாமல் பாடல் கட்டத்திற்கு ஏற்ற இசையை கொடுப்பதில் முத்திரைப் பதிக்கிறார் மகாதேவன். பாடலைப் பாட வைக்கப்

பட்டவரோ எல்.ஆர். ஈஸ்வரி. பின்னால் சினிமா, அவரைக் காபரே பாடகி ஆக்கியது... கண்ணதாசன் -மகாதேவன் இணைவில் வந்த இந்தப் பாடல், கலையழகுடன் அவர் குரலைப் பளிச்சிட செய்கிறது!

கண்ணதாசனுடைய சொந்த தயாரிப்பில் கே.வி.மகாதேவன் முதன்முதல் இணைந்த ‘வானம்பாடி’யில், தமிழ்த் திரை இசைக்கு மகத்துவமான இந்த இணைவைக் கொண் டாடும் விதமாக, படம் ஒரு இசை சித்திர

மாக விளங்கியது என்பது உண்மை தான். அதனோடு, ஒரு பின்னணிப் பாடலின் பதிவை முழுவதுமாகக் காட்டி சரித்திரம் படைத்தது. பாடலைப் பாடிய பி.சுசீலா காட்டப்படவில்லை என்பது உண்மைதான். அவர் பாடிய நாட்டுப்புறப் பாடலான ‘தூக்கணாங்குருவி கூடு’ பாடலுக்கு, பின்னணிப் பாடகிபோல் நடித்த தேவிகாதான் வாயசைத்தார் ! ஆனால் மற்றபடி வெவ்வேறு இசைக் கலைஞர்கள் தங்கள் வாத்தியங்களை வாசிப்பதும் சவுண்டு இன்ஜினியர் பாடலைப் பதிவு செய்வதும் பாடலின் காட்சிப்படுத்தலில் இடம்பெற்றன. இது ஒரு புதுமைதான்.

ஆனால், இசையமைப்பாளர் மகா தேவனை இந்த பின்னணிப் பாடல் பதிவில் காணவேயில்லை! கிராமிய பாடல் பாணியில் ஒரு வெற்றிப்பாடலை அமைத்துவிட்டு அவர் தன்னை வெளிக்காட்டவே விரும்பாமல் தள்ளி நின்றுவிட்டார்! சுய தம்பட்டம் இல்லாத மகாதேவனின் அரிய தன்மைக்கு இந்த பாடல் ஒரு சான்றாக விளங்குகிறது.

மகாதேவனின் சகலவிதமான பணிகளிலும் உற்ற உதவியாளரான புகழேந்தி திரையில் காட்டப்படுகிறார். கோட்டு – சூட் அணிந்துகொண்டு வாத்தியக் குழுவினருக்கு சமிக்ஞைகள் செய்துகொண்டிருக்கும் நிலையில் அவர் தென்பட்டாலும், கேமிராக் கண்ணிடமிருந்து தள்ளி தூரத்தில் இருக்கிறார்! ‘பெரியவர்’ என்று மரியாதையுடன் புகழேந்தி அழைத்த மகாதேவனே பாடல் காட்சியில் தலைக்காட்டாத போது, அவருடைய உதவி இசையமைப்பாளரை எப்படிப் பிரதானமாகக் காட்ட முடியும்? ஆகவே, இருந்தும் இல்லாத வகையில், தெரிந்தும் தெரியாத நிலையில் புகழேந்தி தோன்றினார்!

‘தூக்கணாங்குருவி கூடு’ பதிவாகிய 1963ல் ஒலிப்பதிவு கூடங்களில் பெரும்பாலும் குளிர்சாதன வசதி கிடையாது. பாடல் பதிவு நடக்கும்போது, மின்சார விசிறிகள் அணைக்கப்படவேண்டிய நிலை. தேவிகா பின்னணிப் பாடல் பாடுவதாகக் காண்பிக்கப்படும் காட்சிகளில், உத்தரத்தில் தெரியும் விசிறி, ஆடாமல் அசையாமல் இருப்பது இதைத் தத்ரூபமாகக் காட்டுகிறது!

அந்நாளைய பாடல்கள் பலவற்றைப் பாடகர்கள் வேர்த்துக்கொட்டும் சூழலில்தான் பாடினார்கள் என்பதற்கு சாட்சியாக இருக்கிறது, அசையாமல் நிற்கும் அந்த விசிறியின் காட்சி! ஆனால், தமிழ் சினிமா இசையின் இந்த பொற்காலத்தில், மகாதேவன் இசையமைத்த பல பாடல்கள் இன்றும் நம்மைக் குளிர்ந்த தென்றலாய் வந்து தீண்டிக்கொண்டிருக்கின்றன!

No comments:

Post a Comment