Sunday 26 January 2020

அம்மாவையும், கை ராட்டையையும் ஞாபகப்படுத்திய, அந்த சர்வோதய சங்கக் கட்டடம்


அம்மாவையும், கை ராட்டையையும் ஞாபகப்படுத்திய, அந்த சர்வோதய சங்கக் கட்டடம்




டாக்டர்களின் ஆலோசனையை காட்டிலும், நண்பர்களின் ஆலோசனையை பின்பற்றுவதே பெரும்பாலானவர்களின், 'சாய்ஸ்!' நானும் அதற்கு விதிவிலக்கல்ல. என் சுகரையும், ரத்த அழுத்தத்தையும் மாதந்தோறும் பரிசோதித்து, மாத்திரைகளையும்,'இன்சுலினை'யும் வழங்கும் டாக்டர், 'உணவு கட்டுப்பாடு மற்றும் நடைபயிற்சி முக்கியம்...' என்று, பலமுறை சொல்லியும் பொருட்படுத்தாமல் இருந்தேன்.
''நாளைலேர்ந்து, 'பீச்'சுல நடைபயிற்சிக்கு வர்றீங்க. நீங்க வர்றீங்களா இல்லையான்னு, நான் எங்கிருந்தாவது, பார்த்துட்டு இருப்பேன்,'' என்று, நண்பர், அறிவுறுத்திய போது, தட்ட முடியவில்லை.
மறுநாள் முதல், நானும், மனைவியும், 'பீச்'சில் நடை பயில ஆரம்பித்தோம்.
அப்போது நாங்கள், சென்னை ராயப்பேட்டை, போஸ்ட் ஆபீஸ் மாடியில் இருந்த, 'குவாட்டர்சில்' தான் குடியிருந்தோம்.
அங்கிருந்து, 'ஸ்கூட்டி'யில் மெரீனா பீச்சுக்கு வந்து, நடை பயின்ற பின், வண்டியை எடுத்து வீடு திரும்புவது வாடிக்கையானது. உழைப்பாளர் சிலையை கடந்து செல்லக் கூடாது என்பது, பள்ளிப் பருவத்திலேயே அம்மா சொல்லி இருக்கிறார். அதனால், அந்த எல்லையை ஒருபோதும் கடந்து சென்றதுமில்லை; செல்வதுமில்லை.
ஒரு ஜனவரி, 30ம் தேதியன்று, காந்தி சிலையை கடந்து நடந்து கொண்டிருக்கும் போது தான், அந்த காட்சி, எங்கள் கண்களில் பட்டது. காந்தி சிலை முன், ஆண்களும், பெண்களுமாய் சிலர் அமர்ந்து, 'ரகுபதி ராகவ ராஜாராம்... பதீத பாவன சீதாராம்...' என்று முணுமுணுத்தபடியே, கையால் ராட்டையில் நுால் நுாற்றுக் கொண்டிருந்தனர்.
அந்த காட்சி, எனக்கு இரண்டு விஷயங்களை ஞாபகப்படுத்தியது. ஒன்று, என் அம்மா. இரண்டாவது, முன்னாள் சபாநாயகர் க.ராஜாராம். இருவருமே இப்போது உயிருடன் இல்லை.
வார்டு கவுன்சிலர்கள் கூட, 10 பேருடன் புடைசூழ வலம் வந்து கொண்டிருக்கும் அரசியலில், வானளாவிய அதிகாரம் படைத்த பதவியில் இருந்தும், சிறிதும், 'பந்தா' காட்டாத அரசியல்வாதி அவர்.
காமராஜர் சாலையில், நடை பயிற்சிக்கு வரும் அனைவரிடமும், கொஞ்சம் கூட, 'ஈகோ' பார்க்காமல், இரண்டு கைகளையும் குவித்து, முகத்தில் புன்னகையோடு, வணக்கம் சொல்வது, ராஜாராமின் பண்பாடு. எங்களுக்கும் அவர் அப்படித்தான் அறிமுகமானார்.
'ரகுபதி ராகவ ராஜாராம்' பாடல், ராஜாராமை நினைவூட்ட, அவர்கள் நுாற்றுக் கொண்டிருந்த கை ராட்டை, அம்மாவை ஞாபகப்படுத்தியது.
அப்போது நாங்கள், திருவல்லிகேணி திருவட்டீஸ்வரன்பேட்டை, நாகப்பையர் தெருவில் குடியிருந்தோம்.
என்னவென்று ஊகிக்க முடியாத நோயால் பீடிக்கப்பட்டு, கீழ்ப்பாக்கம், 'லண்டன் தொட்டி' மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார், அப்பா.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள, கீழ்ப்பாக்கம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கு தான், அப்படியொரு திருநாமம். மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கும், லண்டன் தொட்டிக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. அலோபதி மருத்துவம் மட்டுமின்றி, சித்தா, ஆயுர்வேதம் மற்றும் யூனானி வைத்தியமும் அங்கே இருந்தது.
ஆயுர்வேத சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார், அப்பா. அப்போது, முதல்வராக இருந்தார், காமராஜர்.
என்ன கோளாறு என்பது தெரியாத நிலையில், அப்பாவின் சிகிச்சை மாதக் கணக்கில் நீண்டு கொண்டிருந்தது.
வீட்டில், 'வாழ்க்கை படகு' தள்ளாட ஆரம்பித்தது.
அம்மாவின் கழுத்திலும், கையிலும், காதிலும் அலங்கரித்த நகைகள் ஒவ்வொன்றாய் காணாமல் போய், அவரது பெயரில் மட்டுமே, தங்கம் மிச்சமிருந்தது.
மனிதநேயம் முற்றிலும் மறைந்து, சுயநலம் மட்டுமே கோலோச்சத் துவங்காத கால கட்டம் அது.
அம்மா படும் அவஸ்தைகளையும், அவள் சூழ்நிலையையும் உணர்ந்தவராய், பக்கத்து, 'போர்ஷனில்' குடியிருந்த, பாலு மாமா, ஒருநாள், மரப் பெட்டி மற்றும் காகிதப் பொட்டலத்தோடும் வந்து நின்றார்.
அவரை நிமிர்ந்து பார்த்து, 'என்ன...' என்று கேட்டாள், அம்மா.
'ஆத்துல இருந்துண்டே சம்பாதிக்க, நான் ஒரு உபாயம் சொல்லட்டுமா?' என்றார்.
'என்ன சொல்லப் போறேள்?'
அம்மாவின் முன் அமர்ந்த, பாலு மாமா, மரப் பெட்டியை திறந்தார். வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்த நான், அம்மாவின் அருகில் சென்று, எட்டிப் பார்த்தேன்.
அது ஒரு கை ராட்டை.
பிரித்து வைக்கப்பட்டிருந்த அதன் பாகங்களை இணைத்து பொருத்தினார், பாலு மாமா.
பெரிய சக்கரத்திலிருந்து சிறிய சக்கரத்திற்கும், சிறிய சக்கரத்திலிருந்து, 'தக்ளி'க்கும் இணைப்பு கொடுத்தார். தக்ளி பொருத்தி இருந்த கட்டையை, உரிய கோணத்தில் சாய்த்து வைத்தார். சக்கரங்களும், தக்ளியும் லகுவாக சுழல, கொஞ்சம் கிரீசை தடவி, முன்னோட்டம் பார்த்தார். ராட்டையும், தக்ளியும் சுலபமாக சுழன்றன.
பொட்டலத்திலிருந்து பஞ்சை எடுத்து, தக்ளியில் இணைத்து, வலது கையால், பெரிய சக்கரத்தின் பிடியை சுழற்றி, இடது கையால் நுால் நுாற்று, குறிப்பிட்ட அளவு நுாற்றதும், ராட்டையை நிறுத்தினார். நுாற்ற நுாலை தக்ளியின் மேல் பாகத்தில் சுற்றி, மீண்டும் ராட்டையை சுழற்றி, பம்பரமாய் செயல்பட்டார்.
பத்து நிமிடத்தில், அவரது இடது கையில் பிடித்திருந்த பஞ்சு முழுவதும் நுாலாக மாறி, தக்ளிக்கு இடம் பெயர்ந்திருந்தது.
அம்மாவும், நானும் அந்தக் காட்சியை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அடுத்து, பஞ்சை லாவகமாக தக்ளியில் இணைத்து, தொடர்ந்து நுாற்றுக் காட்டிக் கொண்டிருந்தார், பாலு மாமா.
இரண்டாவது பஞ்சு, எட்டு நிமிடத்திலும், மூன்றாவது பஞ்சு, ஐந்து நிமிடத்திலும் நுாலாக மாறி, தக்ளியை நிறைத்திருந்தது.
'ஆத்துல இருந்துண்டே இப்படி நுால் நுாத்துக் கொடுத்து, காசு சம்பாதிக்கலாம் மாமி...' என்றார்.
'சம்பாதிக்கலாம் சரி. ஆனா, எனக்கு நுால் நுாக்கத் தெரியாதே...' என்றாள் அம்மா.
'இது ஒண்ணும் பெரிய கஷ்டமில்லே மாமி. இப்போ நீங்க பார்த்தேள்ல, ஒரு மணி நேரம் இல்லேன்னா ரெண்டு மணி நேரத்துல ஈசியா கத்துக்கலாம்!'
'அது சரி. ஆனா, அதுக்கு ராட்டை வாங்கணும்; பஞ்சு வாங்கணும். நுாத்த நுாலை யாரு வாங்கிப்பா... எங்கே விக்கணும்ன்னு நேக்கு ஒண்ணும் தெரியாதே...' என்றாள்.
'கவலையே படாதீங்கோ, சர்வோதய சங்கத்துல வாங்கிப்பா. நான் அங்கதான் வேலை செய்யறேன். ஓஞ்ச நேரத்துல நுாக்கலாம்னு தான், நான் இதை வாங்கினேன். இப்ப என்னால முடியலை. பரண் மேல போட்டு வெச்சிருந்தேன்.
'இப்போ நீங்க கஷ்டப்பட்டுண்டிருக்கேள். ஏதோ என்னால் ஆன உதவி. இதை வெச்சுக்குங்கோ. நாளை சங்கத்துக்கு வாங்கோ, அறிமுகப்படுத்தி, உங்களை மெம்பராக்கி வைக்கிறேன். வாரம், 10 ரூபா சம்பாதிக்கலாம். கொஞ்சம் சிரமப்பட்டா, 15 ரூபா கூட சம்பாதிக்கலாம்...' என்றார், பாலு மாமா.
அவர் யோசனையும், அணுகுமுறையும், அம்மாவுக்கு பிடித்து இருந்தது.
'சங்கம் எங்கே இருக்கு?'
'பிராட்வேல!'
'ரொம்ப துாரமா இருக்கும் போல இருக்கே?'
'திருவல்லிக்கேணி போஸ்ட் ஆபீஸ் எதிர்க்க, 32 - 32-ஏ பஸ் ஏறினா, சங்கத்தோட வாசல்ல இறக்கி விடுவா. 20 பைசா தான், வண்டிச் சத்தம். ஒவ்வொரு தடவையும் நீங்களே வரணும்ன்னு இல்லை. இதோ இவன்ட்ட கொடுத்து அனுப்புங்கோ. அங்க தான் நான் இருக்கேனே, பார்த்துக்கறேன்...' என்றார், பாலு மாமா.
அம்மா சம்மதித்தாள்.
அதன் பின், அந்த ராட்டையைப் போலவே சுழலத் துவங்கினாள். இயந்திரங்கள் கூட ஒருநாள் ஓய்வெடுத்து உட்காரும். அம்மா சும்மா உட்கார்ந்து, ஒருநாள் கூட நான் பார்த்ததில்லை.
தக்ளியில் நுாற்று வைக்கப்பட்டிருக்கும் நுால்களை இணைத்து சிட்டங்களாக்க வேண்டும். அதற்கு ஒன்றின் மீது ஒன்றாக பொருத்தக் கூடிய இரண்டு சட்டங்கள் உண்டு.
ராட்டையின் சிறிய சக்கரத்தில் அந்த சட்டங்களைப் பொருத்தி, தக்ளியில் உள்ள நுாலை அதில் சுற்ற வேண்டும். ஒரு தக்ளியில் உள்ள நுால் முடிந்தவுடன், அதனுடன் அடுத்த தக்ளியில் உள்ள நுாலை முடிச்சு போடாமல் லாவகமாக இணைக்க வேண்டும்.
பெரும்பாலோர் எச்சில் தொட்டு தான் இணைப்பர். அம்மா, டம்ளரில் தண்ணீர் வைத்து, அதில் தொட்டு இணைப்பாள்.
அதை பார்த்து நானும், ராட்டையில் நுால் நுாற்க கற்றுக்கொண்டேன். ஆனால், நான் நுாற்கும் நுால், சற்று கனமாக இருந்ததால், என்னை, ராட்டையைத் தொட விட மாட்டாள், அம்மா. நுாலின் கனம் கூடுதலாக இருந்தால், நுாலுக்கான, 'ரேட்' குறைந்து விடும்.
நுாலை சட்டத்தில் சுற்றுவதும், சுற்றியதை பிரித்து, முறுக்கி சிட்டங்களாக்குவதும், சிட்டங்களை சங்கத்தில் கொடுத்து பஞ்சும், பணமும் வாங்கி வருவதுமே, என் பணி.
அம்மா, வாரம், 15 சிட்டம் நுாற்பாள். ஒரு சிட்டம், ஒரு ரூபாய். 15 ரூபாயில், மூன்று ரூபாய்க்கு பஞ்சு வாங்கி, மீதி, 12 ரூபாயை அம்மாவிடம் தருவேன்; எனக்கு, எட்டணா தருவாள்.
'எனக்கெதுக்கம்மா காசு?'
'வெச்சுக்கோ. கூடமாட இருந்து ஒத்தாசை செய்யறோல்லியோ. அதுக்குத்தான்!'
அந்த எட்டணாவை, நான், செலவு செய்ய மாட்டேன். பள்ளிக் கூடத்தில் தேசிய சேமிப்பு அட்டை கொடுத்திருந்தனர். 20 கட்டங்கள் இருக்கும், அந்த அட்டையில் ஒவ்வொரு கட்டத்திலும், 25 காசு மதிப்புள்ள தேசிய சேமிப்பு ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும்.
தபால் அலுவலகத்தில், ஸ்டாம்ப் கிடைக்கும். கட்டங்கள் பூர்த்தியானதும், அதை தபால் அலுவலகத்தில் கொடுத்து, நம் பெயரில் சேமிப்பு வங்கி கணக்கு துவக்கலாம்.
அம்மா கொடுக்கும் எட்டணாவுக்கு, இரண்டு ஸ்டாம்ப் வாங்கி, அதில் ஒட்டி பத்திரப்படுத்தினேன். அட்டையை சீக்கிரம் பூர்த்தி செய்யும் ஆவலில், பஸ்சுக்கு கொடுக்கும் காசை மிச்சப்படுத்தி, நடந்து சென்று சேமித்துக் கொண்டிருந்தேன்.
அப்பாவின் உடல் நிலை தேறவேயில்லை. அவ்வப்போது, 'டிஸ்சார்ஜ்' ஆகி வீட்டுக்கு வருவதும், மறு மாதமே மீண்டும், 'அட்மிட்' ஆவதுமாக இருந்தார்.
'லண்டன் தொட்டி' அரசு மருத்துவமனை என்பதால், செலவு இல்லை.
இடையே, சங்கத்தின் திண்டுக்கல் கிளைக்கு மாறுதலாகிப் போனார், பாலு மாமா. போகும் போது, அவரது ஞாபகமாக இருக்கட்டும் என்று, கை ராட்டையை அம்மாவையே வைத்துக் கொள்ளச் சொல்லிச் சென்றார்.
வெள்ளிக்கிழமை தான், சங்கத்தில் நுாலை வாங்கி, பஞ்சும், பணமும் தருவர். அதுவும் மாலை, 6:00 மணிக்குள் செல்ல வேண்டும். கதவை மூடி விடுவான், காவலாளி.
கதவை மூடி விட்டால், உள்ளே இருப்பவர்கள் தான் வெளியே வர முடியுமே தவிர, வெளியில் இருப்பவர்கள் யாரும் உள்ளே செல்ல முடியாது.
அதன்பின், அடுத்த வெள்ளிக் கிழமை தான் நுாலை கொடுத்து, பணத்தையும், பஞ்சையும் வாங்க முடியும். மாலை, 4:00 மணிக்கு, பள்ளி விடும். அன்று, தமிழாசிரியர் கோபால சக்கரவர்த்தி நடத்திய பாடத்தை சரியாக எழுதாததால், 'இம்போசிஷன்' எழுதச் சொன்னார்.
வந்ததும் வராததுமாய், புத்தக பையை வைத்து, நுால் பையை எடுத்து, ஓட்டமும் நடையுமாய் புறப்பட்டேன். சங்கத்தை தொட்டபோது, ஏக களேபரமாய் இருந்தது. நல்ல வேளை, மெயின் கதவு மூடாமல் திறந்திருந்தது.
வரிசையில் நின்றேன். எனக்கு முன் நின்று கொண்டிருந்தவர்கள், சங்கத்தை சகட்டு மேனிக்கு திட்டிக் கொண்டிருந்தனர். ஏன் திட்டுகின்றனர் என புரியாமல், கொஞ்சம் கொஞ்சமாக வரிசையில் முன்னேறினேன்.
என் முறை வந்ததும், சிட்டங்களை கொடுத்து சீட்டை வாங்கி, 'கவுன்டரில்' கொடுத்தேன்.
'என்ன வேணும்?'
'பஞ்சும், பணமும் தான்...' என்றேன்.
'தம்பீ... இனி, நுாலுக்கு பணம் கிடையாது. இதோ இங்கே இருக்குற பொருட்கள்ல என்ன வேணுமோ, அதை நுாலோட மதிப்புக்கு வாங்கிக்க. அரசு உத்தரவு...' என்றார், கவுன்டர் கிளார்க்.
நீம் குளியல் சோப்பு, நீம் வாஷிங் சோப்பு, நீம் டூத் பேஸ்ட், கருப்பட்டி வெல்லம், செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள் என்று, அலமாரி முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
'ஐயா... இந்த பணத்துல தான் அரிசி, பருப்பு வாங்கணும். சோப்பையும், பேஸ்டையும் வாங்கி போய் சோறு பொங்க முடியாதுய்யா...' என்றேன்.
'புரிஞ்சுக்க தம்பீ... இவ்வளவு நாள் கொடுக்கலையா... அரசு உத்தரவு, அதை மீறி எங்களால எதுவும் செய்ய முடியாது...' என்றார் உறுதியாக.
உள்ளே நுழைந்தபோது இருந்த களேபரத்துக்கும், வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் சங்கத்தை திட்டிக் கொண்டிருந்ததற்கும் காரணம் புரிந்தது.
'என்னமோ போங்க; எதையாச்சும் கொடுங்க...' என்றேன்.
நுாலின் மதிப்புக்கு சில சோப்பு, பற்பசையை கொடுத்தார். அம்மாவிடம் கொடுத்து, விஷயத்தைச் சொன்னேன்.
'நல்ல வேளை, நீ பஞ்சு வாங்கிண்டு வரலை...' என்று, அதை வாங்கி வைத்த அம்மா, ராட்டையை பிரித்து, பெட்டியில் மூடி, பரணில் வைத்தாள்.
'நம்பினவாளை கடவுள் கைவிட மாட்டாண்டா... சி.என்.கே., ரோடு, 100ம் நெம்பர் ஆத்துல, நாளை கார்த்தால என்னை சமையலுக்கு கூப்பிட்டிருக்கா. அவாத்து மாமிக்கு உடம்பு சரியில்லையாம். இப்பத்தான் மாமா சொல்லிட்டு போனார்.
'மாசம், 60 ரூபா தருவாளாம். நீ, பஞ்சு வாங்கிண்டு வந்திருந்தா, நுாக்கவும் முடியாது; நுாத்ததை விக்கவும் முடியாது; வீணாத்தான் போயிருக்கும்...' என்றாள் அம்மா.
கண் இமைக்காமல் அம்மாவையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளது மனோ தைரியத்தை என்னவென்று சொல்வது?
அம்மாவையும், கை ராட்டையையும் ஞாபகப்படுத்திய, அந்த சர்வோதய சங்கக் கட்டடம், 60 ஆண்டுகளுக்குப் பின், இப்போது எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் போலிருந்தது.

எஸ்ஸாரெஸ்

No comments:

Post a Comment