Tuesday 12 December 2017

VI JAYA VITTALADASAR



VI JAYA VITTALADASAR



விஜய விட்டலதாசர்.

காரணமற்ற கருணையுடையோனே கடவுள்
கன்னட தேசத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் ஒரு ஏழைச் சிறுவன் வசித்துவந்தான். தந்தையை இழந்த அவன் தலையில் குடும்பப் பொறுப்பு முழுதும் விழுந்தது. தாய், தம்பிகள், தங்கைகள் என்று பெரிய குடும்பம். ஊரிலுள்ளோர் வீடுகளில் அவ்வப்போது ஏவப்படும் வேலைகளைச் செய்து அவர்கள் கொடுக்கும் கஞ்சியையோ, பழையதையோ வீட்டிற்குக் கொண்டுவந்து பகிர்ந்துண்பான்.

ஒரு சமயம் இரண்டு மூன்று நாள்களாக வேலை எதுவும் கிடைக்கவில்லை. சாப்பிடவும் எதுவும் கிடைக்கவில்லை. குடும்பமே பசியால் வாடியது. அப்போது பக்கத்து கிராமத்தில் ஒரு கல்யாணம் என்று கேள்விப்பட்டு அங்கு செல்ல விரும்பினான் சிறுவன். இரண்டு நாள்களுக்கு சோறு கிடைக்கும். தானும் தன் குடும்பத்தாரும் வயிறார உண்ணலாம் என்று நினைத்தான். 

நடந்து நடந்து பக்கத்து கிராமத்தில் கல்யாண வீட்டிற்குச் சென்றுவிட்டான். அங்கு விழாவில் சாப்பாட்டு பந்தி ஓடிக் கொண்டிருந்தது. தயங்கி தயங்கிச் சென்று சாப்பிட அமர்ந்தான். எல்லாம் பரிமாறிவிட்டனர். இலை நிறைய பதார்த்தங்களைப் பார்த்ததும் நாவில் நீர் சுரந்தது. 

இலையில் கைவைக்கப்போன சமயம் பளாரென்று அடி விழுந்தது. பந்தி விசாரிப்பவர், இவனைத் தர தரவென்று இழுத்து ஓரமாய் விட்டார்.
யாரடா நீ? திருட வந்தியா?

இல்லை ‌சாமி. எனக்கு பக்கத்து கிராமம். ரெண்டு நாளா வேலை எதுவும் கிடைக்கல. சாப்பிடவும் இல்ல.

அவர் அவன்‌ முகத்தில் தெரிந்த உண்மையைப் பார்த்து சற்று யோசித்தார்.
அப்டின்னா, ஏதாவது வேலை செய். வயிறு நிறைய சோறு போடச் சொல்றேன்.

சிறுவனின் முகம் மலர்ந்தது.
சரிங்க சாமி
கொல்லையில் எல்லோரும் சாப்பிட்டு கை கழுவ, கிணத்திலேர்ந்து தண்ணி எறச்சு கொட்டு அது முடியும் வேலையா? ஆனாலும் மகிழ்வோடு செய்தான் சிறுவன். நீர் இறைத்துக் கொட்ட கொட்ட அது காலியாகிக் கொண்டே இருந்தது.

ஒரு வழியாய் கடைசிப் பந்தியில் சென்று சாப்பிட அமர்ந்தபோது, சமையல்காரர், அடடா, கொஞ்சம் முன்ன வந்திருக்கக்கூடாதாப்பா? சாப்பாடு தீர்ந்துபோச்சே.. என்று சொல்லிவிட்டுப் படுத்துக்கொண்டார்.
பசியும் பட்டினியுமாய் நாள் முழுதும் உழைத்த பின்னும் ஒரு பிடி சோறு கிடைக்கவில்லை. 

என்ன செய்வான் பாவம்!
விரக்தியின் உச்சிக்கே சென்று விட்டான்.

இன்றைக்கு இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு உணவு கிடைச்சது. என்னோட ஒரு சின்ன வயிறுக்கு ஒரு பிடி சோறு கிடைக்கலன்னா, அது அவங்க தப்பில்ல. என் வினைதான் என்னைத் துரத்துது.

வெறுங்கையோடு வீடு திரும்ப மனமில்லை அவனுக்கு.
மெதுவாக காசிக்குச் சென்று கங்கையில் ஒரு முழுக்கு போட்டுவிட்டு உயிரை விட்டுவிடலாம் என்று நினைத்தான்

மெதுவாக நடந்து நடந்து காசியை அடைந்துவிட்டான். 
கங்கையில் ஒரு முழுக்கு போட்டுவிட்டு கரையில் படுத்துக்கொண்டிருந்தான் .

இரவு, விழித்துக்கொண்டே வானத்தைப் பார்த்துக் கொண்டு பல்வேறு சிந்தனைகளுடன் படுத்துக்கொண்டிருந்தவனின் முன்னால் ஒரு நீல ஜ்யோதி தோன்றியது. அதனுள்ளிருந்து ஒரு பெரியவர் தோன்றினார்.
தலையில் ப்ரபன்ன பாகை,கையில் தம்புரா. ஒளிமயமாய் மின்னியது 

அவரது உருவம். அவனை நாக்கை நீட்டு என்று அதட்டினார்.
அவன் சட்டென்று நாவை நீட்ட, அதில் ஏதோ எழுதினார்.
பின் மறைந்துவிட்டார்.

ஏதோ கனவுபோல் இருந்தது. ஆனால், கிள்ளிப் பார்த்துக் கொண்டான். நிஜம்தான். அவன் மனதில், விட்டலா, விட்டலா என்ற நாமம் தானாக ஒலிக்க ஆரம்பித்தது. 

நாவில் அருமையான பாடல்கள் வந்தன.


உடனே, கையைத் தட்டி க் கொண்டு ஆனந்தமாகப்‌பாட ஆரம்பித்தான்.
விடிகாலை வேளையில் அவனது மதுரமான குரலையும், அற்புதமான பாடல்களையும் கேட்டு அவனை ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டது.
அவன் காலை வைக்கும் இடங்களில் எல்லாம் மங்களம் பொங்கிற்று. எல்லோரும் விரும்பி விரும்பி வீட்டிற்கு அழைத்து ஸத்சங்கம் வைத்துக்கொண்டார்கள்.

அவன் பாடிக்கொண்டே மெதுவாக தனது கிராமத்திற்கு வந்து சேர்ந்தான்.
அவனுக்கு ஒரு பிடி சோறு போட யோசித்தவர்களெல்லாரும் இப்போது பூரணகும்பத்தை வைத்துக்கொண்டு கிராம எல்லையில் அவரை வரவேற்கத் தயாராக நின்றனர்.

அவர் பெயர் விஜய விட்டலதாசர். ஸ்ரீ புரந்தரதாசரின் சீடர்களான அஷ்ட தாசர்களுள் ஒருவர். எண்ணற்ற பாடல்களை எழுதியுள்ளார்.
ஒன்றுமே இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சிறுவனை உலகம் போற்றும் பக்தனாக மாற்றியது குருவின் காரணமற்ற கருணையே ஆகும்..

No comments:

Post a Comment