SEETHAKKATHI ,
PHILANTHRAPIST OF 17 TH CENTURY
செத்தும் கொடுத்தார் சீதக்காதி!!
பண்டைத் தமிழ் நாட்டில், புகழ்மிக்க அரசர்கள், மக்களை ஆண்டதோடு, தமிழ் மொழியை ஆண்டவர்களையும் பாராட்டி, பரிசில்கள் வழங்கி, ஆதரித்தார்கள். அரசர்கள் மட்டுமன்றி, வசதியுள்ள தமிழ் ஆர்வலர்கள், செலவந்தர்களும் புலவர்களை ஆதரித்து, அரவணைத்தனர். இராமநாதபுரம் விஜய இரகுநாத சேதுபதி மன்னரின் அரசவையில், கௌரவ அமைச்சராக, மன்னரின் மரியாதைக்குரிய நண்பராகத் திகழ்ந்த, சீதக்காதி வள்ளல் என்று அழைக்கப்படும், கீழக்கரை ஷேக் அப்துல் காதிர் மரைக்காயர், தமிழ் மொழியில் பற்று கொண்டு, தமிழ்க் கவிஞர்களை ஊக்குவித்து வந்தார்.
பிறவி செல்வந்தரான சீதக்காதி வள்ளல், தன்னுடைய முன்னோர்கள் வழியில் கடல் வாணிகத்தில் ஈடுபட்டு, பெரும் பொருள் ஈட்டியவர். கிழக்கிந்திய ஆங்கிலேயக் கம்பெனியார், வாணிகம் செய்ய, நம் தேசத்தில் அடியெடுத்து வைத்த நேரம் அது. அப்போது அவர்களுக்குப் பெருமளவில் மிளகு ஏற்றுமதி வணிகம் செய்தவர், சீதக்காதி அவர்கள்.
கீழக்கரை ஷேக் அப்துல் காதிர் மரைக்காயர்: பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் இராமநாதபுரம் அருகேயுள்ள கீழக்கரையில் பெரும் வணிகக் குடும்பத்தில் பிறந்து, பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மறைந்தவர், சீதக்காதி எனும் கீழக்கரை ஷேக் அப்துல் காதிர் மரைக்காயர் அவர்கள்.பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும், தமிழ் மொழியை நேசித்ததிலும், தமிழ்ப் புலவர்களை ஆதரித்ததிலும், தலை சிறந்து விளங்கினார்.
கடல் வாணிகத்தில் சீதக்காதி: முன்னோர் வழியில் அல்லும் பகலும் அரும்பாடுபட்டு, கடல் வாணிபத்தில் ஈடுபட்டு, பெரும் பொருள் ஈட்டினார், சீதக்காதி. ஈட்டிய பொருட்செல்வத்தை எல்லாம், அற வழியில், மக்களுக்கே தானமாக அளித்த வள்ளல் அவர். அக்காலத்தில், மிளகு வணிகத்தில் தேசத்தின் மொத்த விற்பனையாளராகத் திகழ்ந்தவர், சீதக்காதி என்பார்கள். தன்னுடைய மாளிகைக்கு வரும் தமிழ்ப் புலவர்களை வரவேற்று, அவர்களுக்கு அளவற்ற பரிசில்கள் அளித்து, தமது கொடைத்தன்மையில் புலவர்களை நெகிழ வைப்பவர் சீதக்காதி. இவருக்கு, குருநாதராகவும் நண்பராகவும், இஸ்லாமிய பேரறிஞர் சதகத்துல்லா வலி அவர்களும், படிக்காசுத் தம்பிரான், உமறுப்புலவர், கந்தசாமி புலவர் போன்றோரும் அவ்வப்போது வந்து சீதக்காதியைக் கண்டு, கவிதைகள் புனைந்து, வாசித்து, பரிசில்கள் பெற்றுத்திரும்புவர்.
இராமநாதபுரம் மன்னரின் நட்பும், “விஜய இரகுநாத பெரியதம்பி” பட்டமும்! பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில். இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் விஜய இரகுநாத சேதுபதி, மதுரையில் உள்ள பாண்டியருக்கு கப்பம் கட்டி அடிமையாக இருப்பதை விட, தனித்தே ஆட்சி செய்வது எனத் தீர்மானித்தார். எதிரிகளின் தாக்குதல்களை சமாளிக்கவும், அரண்மனையின் பாதுகாப்புக்காகவும், கோட்டை வாயில்களை பலப்படுத்தத் தீர்மானித்த போது, அந்த செலவுகளை தாமே மனமுவந்து ஏற்று, பொன்னும் பொருளும் அளித்தவர், சீதக்காதி என்பார்கள். இதனால், மனம் மகிழ்ந்த இராமநாதபுர மன்னர் சேதுபதி, தனது அன்பின் வெளிப்பாடாக "விஜய இரகுநாத பெரியதம்பி" எனும் சகோதரப் பட்டத்தை, வள்ளலுக்கு சூட்டி மகிழ்ந்தார்.
வங்கத்தின் கலிபா.:
சீதக்காதியின் குருநாதர் சதகத்துல்லா அவர்களின் பரிந்துரையின் பேரில், டெல்லி மன்னர் அவ்ரங்கசீப், சீதக்காதி அவர்களை, வங்காள நாட்டின் கலீபாவாக நியமித்தார். சீதக்காதி, அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் நற்பணியாற்றி வந்தார்.
பஞ்ச காலத்தில் மக்களின் பசிப்பிணி போக்கிய சீதக்காதி: ஒரு சமயம், நாட்டில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. மழை பொய்த்துப் போனதால், உணவு உற்பத்தி இன்றி, மக்கள் உண்ண வழியின்றி, பசிப்பிணி தாக்க, பஞ்சத்தில் இறக்க ஆரம்பித்தனர். உடனே சீதக்காதி, மக்கள் எல்லோருக்கும் பஞ்ச காலம் முடியும் வரை தினமும் உணவிட்டு, அவர்களின் பசியைப் போக்கி, பஞ்சத்தில் இருந்து காத்தார். பஞ்சத்தின் கொடுமையால், தராசில் பொன்னை வைத்தால் அதன் அளவுக்குக்கூட உணவு கிடைக்காத கடுமையான பஞ்சம் சூழ்ந்த காலத்தில்கூட, அவர் வீட்டில் எந்த தட்டுப்பாடுகளும் இன்றி, ஏழைகள் உண்ண உண்ண உணவுகள், வந்துகொண்டே இருந்தன என்று குறிப்பிடுகிறார், படிக்காசு தம்பிரான் கவிஞர்.
புலவர்களின் பாட்டில் சீதக்காதி: சீதக்காதி நொண்டி நாடகம் சீதக்காதி திருமண வாழ்த்து எனும் உமறுப்புலவரின் கவிதை மற்றும் படிக்காசு தம்பிரான், நமசிவாய புலவர், கந்தசாமி புலவர் ஆகியோர் பாடிய தனிப்பாடல்கள், வள்ளல் சீதக்காதி அவர்களின் கொடைத்திறனைப் புகழ்ந்து பாடும் பாடல்களாக, விளங்கியவை.
நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாற்று காவியம், சீறாப்புராணம்: இஸ்லாமிய மதத்தின் நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாற்றை எல்லோரும் அறிந்துகொள்ள உருவான நூல்தான், சீறாப்புராணம். ஏற்கனவே, வள்ளல் சீதக்காதியிடம் வீடும், மாதக் கொடையும் பெற்று அவர் ஆதரவில் வாழ்ந்து வந்த, உமறுப்புலவர் இயற்றிய அந்நூல், செம்மையும் சிறப்புமாக வெளி வர வேண்டும் என்று, சீதக்காதி அவர்கள் ஏராளமான பொன்னும் பொருளும் அளித்தார். வந்து கேட்பவர், என்ன குலம் ,என்ன இனம் என்று பாராது, வந்தவர் மனம் நிறைவடைய, தானம் செய்வதே தன் பணி என்று வாழ்ந்த அந்த அருள் வள்ளலின் பெயர், அவர் கொடையளித்த நூலின் முன்னுரையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அதனால், அவர் பணி தடைபடபோவதில்லை, என்பதே, உண்மை. இறக்கும்வரை மட்டுமல்ல, இறந்தபின்னும், வணங்கி நின்றவர்களுக்கு, பரிசில்கள் அளித்து நிறைவடைந்த, மகான் அல்லவா, வள்ளல் சீதக்காதி.
வள்ளல் மறைவை அறிந்த படிக்காசுதம்பிரான் கலங்குதல்: அக்காலத்தில் எல்லாம், வெளியூர் சென்றிருக்கும் உறவினர், நண்பர் நிலை அறிய ஒரு வசதியும் இல்லை, அவர்களாக வந்தால்தான் உண்டு. மிக உயர்ந்த செல்வந்தர்களுக்கே, முக்கிய தகவல்கள், குதிரைவீரர்கள் மூலம் அனுப்பபடும். அதுவும் உடனே சென்று சேர்வதற்கு உத்திரவாதம் இல்லை. இப்படி ஒரு காலகட்டத்தில், வள்ளல் சீதக்காதி இயற்கை எய்தினார். அருகில் இருந்த தமிழ் புலவர்கள், நண்பர்கள், வள்ளலிடம் கொடை பெற்று வறுமை நீங்கி வாழும் பலரும், நெஞ்சில் வேதனை படர, இனி யார் இருக்கிறார்கள் எமக்கு, என்று மனம் கலங்கி வாடி நின்றார்கள். வள்ளலின் இறுதிச் சடங்கு, இஸ்லாமிய முறைப்படி, நடத்தி, நல்லடக்கம் செய்யப்பட்டது.
வள்ளலின் கரம் :
இது நிகழ்ந்து சில நாட்கள் கழித்து, படிக்காசு தம்பிரான், வள்ளலைக் காண வர, காலமான செய்தி அறிந்து, அழுகையும் ஆத்திரமும் மேலிட, அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட சமாதியை நோக்கி ஓடுகிறார். புலவர்களை ஆதரித்து, வழிநடத்திய கொடை இங்கே உறங்குகிறதே, இனி எமக்கு யார் இருக்கிறார்கள், எம் பாடலைகேட்டு ஈய, என்று மனம் கலங்கி வருந்தி நிற்க, அந்த நேரத்தில், சமாதி இரண்டாகப் பிளந்து, அதிலிருந்து ஒரு கை வெளியே நீட்டியதாகவும், கையின் விரலில் இருந்த மோதிரத்தை இவர் எடுத்துக்கொண்டதும், கை உள்ளே சென்றுவிட்டதாகவும் ஒரு நிகழ்வு, சீதக்காதி வரலாற்றில் உண்டு. அதனால் தான் "செத்தும் கொடுத்தான் சீதக்காதி" எனும் பழஞ்சொல் இன்றும் வழக்கில் இருக்கிறது. நாம் பகுத்தறிவு சிந்தனைகளில் சென்று விளக்கம் தேடுவதை விட, சீதக்காதி அவர்களின் வள்ளல் தன்மையை வெளி உலகிற்கு தெரிவிக்கும் ஒரு உயர்வு நவிற்சியாக, கவிஞர்களின் கற்பனை வளமாகக்கூட இதை எடுத்துக் கொள்ளலாம்!
செத்தும் கொடை கொடுத்த சீதக்காதியின் பெயர் அப்துல் காதர்!
எஸ்.கதிரேசன்
வள்ளல்தன்மையைப் பற்றி நாம் பேசும்போதெல்லாம், நம் நினைவு அடுக்குகளில் இவர்கள்தான் வந்து போவார்கள். முதலில் வருபவர் மகாபாரத கர்ணன். தொடர்ந்து முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னன் பாரி உள்ளிட்ட கடையெழு வள்ளல்கள், கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளல் என்று இந்த வரிசையில் செத்தும் கொடை கொடுத்த சீதக்காதியையும் சொல்வார்கள். செத்தும் கொடை கொடுத்த சீதக்காதியின் பெயர் அப்துல்காதர் என்பது நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்?
இன்றைக்கு கல்வியைக் காசாக்க குடிசைத்தொழில் போல தனியார் பள்ளி நிறுவனங்களும், வீட்டுக்கு ஒரு என்ஜினீயரை உருவாக்கும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் பெருகிப்போன நிலையில் நமக்கு எப்படி அவரைத் தெரியும்.
கால ஓட்டத்தில் வலதுகை கொடுப்பது இடதுகைக்குத் தெரியாமல் கொடுத்தவர் அப்துல்காதர்.
தென் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் கீழக்கரைப் பகுதியில் 1650-ல் பிறந்து வளர்ந்த இஸ்லாமியர். கப்பலில் பல நாடுகளுக்குச் சென்று முத்து வணிகம் செய்தவர். மார்க்க நெறிகளையும் சமய ஒழுங்குகளையும் முறையாகப் பின்பற்றிய சமயத்தலைவர் மட்டுமல்ல. அந்தப் பகுதியிலேயே மிகப்பெரும் செல்வந்தராகத் திகழ்ந்தவர். இல்லையென்று வந்து கேட்பவர்களுக்கு இல்லையென்று சொல்லாது வாரி வழங்கிய வள்ளல்.
கல்வி பயிலும் மாணவர்களோ, தமிழ்க்கவி பாடும் புலவர்களோ வந்து விட்டால் அன்று அவரது வீட்டில் தடபுடல் விருந்துதான். அவர்கள் புறப்படும்போது மனம் நிறைய பொருட்செல்வத்தை வாரி வழங்கித்தான் வழியனுப்பி வைப்பார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், வந்திருப்பவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதுபோன்ற மதவேற்றுமையை எல்லாம் இவர் பார்க்கமாட்டார். அவர் கல்விமானா, தமிழ்ப்புலமை மிக்கவரா என்று மட்டும்தான் பார்ப்பார். இவற்றையெல்லாம் அவருக்கு போதித்து அவரை மனிதரில் மாணிக்கமாக உருவாக்கியவரர் இஸ்லாமியப் பெரியவர் ‘சதக்கத்துல்லா வலி’ என்பவர்.
* ராமநாதபுரத்தை ஆண்டசேதுபதி மகாராஜா சீதக்காதியின் நெருங்கிய நண்பர். சேதுபதிக்குச் சீதக்காதி அவர்கள் ஆலோசனைகள் வழங்கும் அமைச்சர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
* டில்லியை ஆண்ட முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் சீதக்காதியின்பால் பெருமதிப்புக் கொண்டவர். சீதக்காதியை வங்காளத்தின் கலீபாவாக நியமித்தார்.
* நபிகள் நாயகத்தின் பெருமைகளைச் சொல்லும் ‘சீறாப்புராணம்’ உருவாக புலவர் உமறுபுலவருக்கு பெரும் நிதியை வழங்கி ஆதரித்தார்.
சீதக்காதியை வறியவர் ஒருவர் சந்தித்து தமது மகளின் திருமணத்துக்காக உதவி கேட்டார். உடனே அவருக்கு பொருளுதவி தர முன் வந்தார். ஆனால், வந்தவரும் ஆகச் சிறந்த மனிதர் என்பதால், இந்த பணம் உங்களிடமே இருக்கட்டும். திருமணம் முடிவானதும், நான் வந்து பெற்றுக்கொள்வதாக் கூறிச் சென்றார்.
சில மாதங்கள் கழித்து, மகளுக்கு திருமணத்தை நிச்சயம் செய்துவிட்டு, சீதக்காதியைப் பார்க்க வந்த வறியவருக்கு, சீதக்காதி இயற்கை எய்தினார் என்ற துயரச் செய்தியே காத்திருந்தது. 'உதவுகிறேன்' என்று கூறிய வள்ளல் சீதக்காதியின் உடலைக்கூட அவரால் பார்க்க முடியவில்லை. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பார்த்து அஞ்சலி செலுத்துவோமென சென்றார்.
உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு சென்று மலர்களால் அஞ்சலி செலுத்திவிட்டு, அங்குள்ளவர்களிடம் தன் கதையைச் சொல்லி கண்கலங்கினார்.
என்ன ஓர் ஆச்சர்யம்!
அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து வள்ளல் பெருமகனாரின் வலது கரம் நீண்டது. அதில் விலையுயர்ந்த அழகிய முத்துக்கள் பதிக்கப்பட்ட மோதிரம். இதைப் பார்த்த அங்கு கூடியிருந்த சபையோர்கள் பெரிதும் வியப்புற்று அந்த மோதிரத்தை அந்த வறியவருக்கு வழங்கினர். அந்தமோதிரமோ பல ஆயிரம் பொன் மதிப்புள்ளது. அதுமுதலாக அவரை செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி என்று அழைக்கலாயினர்.
No comments:
Post a Comment