Monday 11 December 2017

SAIBOL ,CELEBRATED 80 YEARS



SAIBOL ,CELEBRATED 80 YEARS



சரித்திர பின்னணியும், புராதன பெருமைகளையும் உள்ளடக்கிய நகரம், மதுரை.
இன்று, 80வது ஆண்டு விழாவை கொண்டாடும், சருமரோக நிவாரணியான, 'சைபால்' நிறுவனம், மதுரை நகரின் பெருமைகளில் ஒன்றாக திகழ்கிறது.
நாட்டில், சுதந்திர தீ, கொழுந்து விட்டு எரியத் துவங்கியிருந்த நேரம் அது... நாடெங்கும் காந்திஜியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, உடல், பொருள், ஆவியை துறக்க பலரும் துடித்தபடி இருந்தனர். இந்நிலையில் தான், 'சொந்தமாக சிந்திக்கவோ, ஒரு பொருளை தயாரிக்கவோ தெரியாத இவர்கள் சுதந்திரம் பெற்று என்ன, செய்யப் போகின்றனர்' என்று பிரிட்டிஷார் நம்மை கேலி செய்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'அந்நிய நாட்டு பொருட்களை நாம் உபயோகிக்கக் கூடாது; அதே நேரம், நம் தேவைகளுக்கு நாமே உற்பத்தி செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் முகத்தில் கரி பூசியது போலாகும். நம்மால் இது நிச்சயம் முடியும். அதற்கான முயற்சியில் இன்றே, இப்போதே இறங்குவீர்...' என்று, 'மேக் இன் இன்டியா' கோஷத்தை முழங்கினார்,
காந்திஜி. இதைக் கேட்ட, 18 வயதே ஆன, எஸ்.சுப்ரமணியன் எடுத்த முடிவு தான், இன்று, நான்கு மாநில மக்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும், 'சைபால்' நிறுவனம்.
மருந்து கம்பெனியில் வேலை பார்த்த சுப்ரமணியன், 'சொந்தமாக ஒரு பொருளை உற்பத்தி செய்ய வேண்டும்... அப்பொருள் குறைந்த விலையில், நிறைந்த பலன் தருவதாக இருக்க வேண்டும்...' என்று எண்ணினார்.
அக்காலகட்டத்தில், நாடே விவசாயத்தில் செழித்திருந்தது. சோற்றில் கை வைத்த நேரம் போக, மீதி நேரம் சேற்றில்தான் கால் வைத்திருந்தனர், விவசாயிகள். இதனால், கால் விரல் இடுக்குகளில் வரக்கூடிய சேற்றுப் புண்ணால் பெரிதும் அவதிப்பட்டனர். இதற்கான மருந்து வெளிநாட்டில் இருந்துதான் வரவேண்டும்; விலையும் அதிகம். இதன் காரணமாக, விவசாயிகளின் அவதி தீர்க்கப்படாமல் தொடர்கதையாகவே இருந்தது.
'இந்த சேற்றுப் புண்ணுக்கான மருந்தை நாமே ஏன் தயாரிக்கக் கூடாது...' என்று எண்ணிய சுப்ரமணியன், தன் உறவினர் ஒருவருடன் சேர்ந்து உருவாக்கியது தான், 'தி சவுத் இன்டியன் மேனுபேக்சரிங்' கம்பெனி. இக்கம்பெனியின் தயாரிப்புதான், சைபால். ஆரம்பத்தில் இதன் பெயர், 'சிபால்!'
குடிசைத் தொழில் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இக்களிம்பை, சிவப்பு டப்பாவில் அடைத்து, தலைச்சுமையாகவே ஊர் ஊராக சென்று விற்று வந்தார், சுப்ரமணியன்.

1940களில் இதன் விலை, 6 அணா; அதாவது, 36 பைசா.
இப்படி வெயில், மழை பாராது உழைத்து, நிறுவனத்தை வளர்த்த சுப்ரமணியன், திடீரென இறந்து விட்டார். இப்போது அவரது பேரன்களான, எஸ்.எஸ்.சுப்ரமணியன் மற்றும் எஸ்.பாலாஜி ஆகியோர் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
தாத்தா உருவாக்கினார்; பேரன்கள் நடத்துகின்றனர்... சரி, நடுவில் அப்பா கேரக்டர் இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா... அமரரான எஸ்.சங்கரநாராயணன் என்ற அந்த மாமனிதரைப் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்...
மழை நேரத்து மாமருந்து...
கடந்த, 2015ல், சென்னையில், பெரு மழை பெய்த போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, இளைஞர்கள் பலர், பல்வேறு ஊடக தளங்களின் மூலம் ஒருங்கிணைந்தனர்.
அவர்களில் ஒருவரான ரேடியோ அறிவிப்பாளரான, பாலாஜி, யார் யார் எங்கே அவதிப்படுகின்றனர், அவர்களுக்கு என்ன உதவிகள் தேவை என்று சொல்லும் போது, 'மழை நீரால் பாதிக்கப்பட்டோ ருக்கு துணிமணிகள் தருவதை விட, நாலு சைபால் டப்பா வாங்கிக் கொடுங்க... ரொம்ப புண்ணியமாக போகும்...' என்று அறிவித்தார்.

'எவ்வளவு மழையில் நனைந்திருந்தாலும் கவலை வேண்டாம்... கொஞ்சம் போல் சைபால் மருந்தை பாதம் முழுவதும், முக்கியமாக, கால் விரல் இடுக்குகளில் தேய்த்து கொள்ளுங்கள்; பாதம் சம்பந்தமான எந்தப் பிரச்னையும் வராது...' என்று, 'டிப்'சும் கொடுத்தார்.
இதைக் கேள்விப்பட்ட மக்கள், சைபால் டப்பாவை வாங்கித் தீர்த்தனர். மேலும், தேவைக்கு மதுரை சைபால் நிறுவனத்தை அணுக, இலவசமாகவும், சலுகை விலையிலும் வேண்டிய அளவு சைபாலை சென்னைக்கு கொடுத்து உதவினர்.

No comments:

Post a Comment