Sunday 24 September 2017

KANCHANA ,THE UNFORGETTABLE ACTRESS IN KOLLYWOOD




KANCHANA ,THE UNFORGETTABLE ACTRESS IN  KOLLYWOOD



 நினைவுப் பாதையில்தான் எவ்வளவு முகங்கள்.



இரவுப் பொழுது ரயில் பயணமொன்றில் நம்முடனேயே மூங்கில் காடு, ஆறு ,மலை சமவெளி என எல்லா இடங்களும் தொடர்ந்து வந்து ,இருள் கலைகையில் சொல்லாமல்,கொள்ளாமல் சென்று விட்ட நிலாக்களும் அங்கே இருக்கின்றன.. ஆயுள் பூராவும் நம் நிழல் போல் தொடர்பவையும் உண்டு.
ஒரு வான வில் என்பது மறைந்து கொண்டிருக்கும் கணங்களிலுங் கூடத் தன் வர்ணங் களையெல்லாம் என் மனதில் நிரந்தரமாக வாரியிறைத்து விட்டுத்தான் சென்றிருக்கின்றது.
ஒரு பறவை வந்தமர்ந்து தன் மொழியால் ஏதோ பேசி விட்டுப் பறந்த இடம் என் பார்வையில் ஒரு போதும் வெற்றிடமில்லை . அது எப்போதும் என் மன விருட்சத்தின் கிளையொன்றில் உட்கார்ந்து கொண்டு தன் அலகினை உரசிய படியேதான் இருக்கின்றது.

கேலிப் பேச்சுகளும், குதூகலமும் , கும்மாளமும் எங்கள் வகுப்பறையில் பொங்கி வழிந்து கொண்டிருந்த கல்லூரிக் காலம் அது. மூன்று பாடங்களுக்கும் வந்தமரும் ஒரே ஆசிரியரின் முகத்தைப் பார்த்துச் சலித்துப் போயிருந்த எங்களுக்கு இறைவனின் ஆறுதல் பரிசாக ஒரு மாணவி வந்து சேர்ந்திருந்தாள் .அதிகமாக அவள் பேசியதில்லை.
ஒரு மழைத் தூறலாக முகத்தில் எப்போதாவது தோன்றுகின்ற அந்தப் புன்னகை கூட விழுந்த சுவடு தெரியாமல் மறு கணம் மறைந்து விடும். ஆனாலும் செஞ் சொண்டுடன் எங்கள் வகுப்பில் வந்தமர்ந்த பச்சைக் கிளி அவள். எங்கள் மரமும்,அதன் கிளைகளும் ,இலைகளும் ,பூக்களும், பிஞ்சுகளும் அந்தக் கிளியால் பொலிவுற்றன .
அழகுகள் எல்லாம் ஒரே சீருடையில் தோன்றுபவை அல்ல.! வைத்த கண்ணை நகர்த்த முடியாமல் திணற வைக்கும் காந்த ரகம்,.....மோனத் தவமியற்றும் ஆழமான ஆறு ....கிறக்கத்துள் அமிழ்த்தும் மது.....,கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் கோயிற் கருஞ் சிலைகள்.....திமிறும் வெண் குதிரை....மஞ்சள் வெயில்.....காலை மல்லிகை ...இப்படி அழகின் ரகங்கள்தான் எவ்வளவு?
எங்கள் ஊரில் மாரியின் எல்லை ஆகக் கூடினால் மூன்று மாதங்கள். எங்கள் சந்தோஷமும் ஒரு முடிவுக்கு வந்து விட்டது. கோடை மறு படியும் எங்களையும் பசும் புற்களையும் பற்றிக் கொண்டது.வகுப்பறையில் அவளுடைய இருக்கை காலியாகி விட்டது. விசாரித்துப் பார்த்ததில் அரசுப் பணியாளரான அவளுடைய அப்பாவுக்கு வெளியூர் ஒன்றுக்கு மாற்றம் கிடைத்து , குடும்பமாக இடம் பெயர்ந்து விட்டார்கள் என்ற தகவல் கிடைத்தது. அதன் பின் அவள் பற்றிய எந்த செய்தியும் என்னை வந்தடைந்ததில்லை.

இப்படி நம் வாழ்வில் எவ்வளவோ வான வில்கள் ,மாய மான்கள்.
நடிகை காஞ்சனா என் வாழ்வின் இன்னொரு வானவில். திரை வானவில் !
ஓராயிரம் முகங்களிடையே ஒரு முகம் மாத்திரம் கல் வெட்டாய்ப் பதிவது மனதின் விசித்திரமன்றி வேறென்ன?
இவ்வளவுக்கும் காஞ்சனா பெரியதொரு நடிகையாகத் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவரல்ல .அவர் நடித்த தமிழ்ப் படங்களின் மொத்த எண்ணிக்கை இருபதைத் தாண்டியிருக்காது என்பது என் அனுமானம். நட்சத்திர நடிகர்களுடன் முடிந்த வரை ஒட்டி உரசி,இடுப்பை நெளித்து ,ஆடிப் பாடி ஒத்துழைத்த போதும் அவருடைய சமகாலத்து நட்சத்திரங்களான ஜெயலலிதா, கே.ஆர். விஜயா ,வாணிஸ்ரீயை அவரால்
முந்த முடியவில்லை.
விமானப் பயணங்களை மேற் கொள்ளும் ஒவ்வொரு தடவையும் அங்கே சந்திக்க நேரிடும் உபசரிப்புப் பெண்களில் [ Air Hostess ] காஞ்சனாவின் முகத்தைத் தேடும் கிறுக்குத் தனம் இன்று வரை எனக்கு ஒரு வழக்கமாகி விட்டது.
வசுந்தரா என்ற இயற் பெயரையுடைய நடிகை காஞ்சனா ஆரம்பத்தில் விமான உபசரிப்புப் பெண்ணாகப் பணியாற்றிப் ,பின்னர் நடிகையானவர் என்ற தகவல் விதைத்த அசட்டுத் தனமான ஆர்வம் அது.
.1964 இல் வெளியான காதலிக்க நேரமில்லை படத்தின் மூலமாக நடிகை காஞ்சனா விமானத்திலிருந்து சினிமாவுக்கு வந்து சேர்ந்தார். கோடீஸ்வரர் ஒருவரின் இரண்டு புதல்விகளில் மூத்தவள் பாத்திரத்தில்

அறிமுகமானார்.கோடீஸ்வரரின் புதல்விகள் என்பதால் அவசியம் காதல் வந்திருக்கும் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவை இல்லை.படத்தின் தலைப்பு 'காதலிக்க நேரமில்லை ' என்றிருந்தாலும் புத்திரிகளுக்குப் படம் முழுக்கக் காதலிப்பதும், ஆடிப் பாடுவதுந்தான் வேலை.
ஈஸ்ட்மன் வர்ணத்தின் குளுமையையின் விகிதத்தை அதிகரித்ததில் காஞ்சனாவுக்கும் முக்கிய பங்கிருந்தது.ராஜ்ஸ்ரீ தன் எண் சாண் உடம்பை இறுகக் கவ்விய ஆடை அலங்காரம் மூலம் இந்தப் படத்தில் மயக்கு வித்தைகள் புரிய முயன்ற போதும் காஞ்சனாவிடம் வெளிப்பட்ட எளிமையின் அழகு இறுதியில் மனதில் பதிந்தது ..அவருடைய பலம் உதடுகளுக்குப் பின்னால் எப்போதும் ததும்பிக்

கொண்டிருக்கும் அந்த வசீகரமான புன்னகை. படம் ஆரம்பவாவதே காஞ்சனா தோன்றும் ஒரு பாடல் காட்சியுடன்தான். அந்தப் பாடலின் முதல் வரி கூட மிகவும் சிரத்தையுடன் காஞ்சனாவை நோக்கிப் புனையப் பட்டதாகவே இன்று தோன்றுகின்றது.
' என்ன பார்வை... உந்தன் பார்வை?..'
அவருடைய காதலனாக வந்த முத்துராமன் திரு திருவென்று முழித்த படி பாடல் காட்சிகளில் காட்டிய அபத்தமான முக பாவனைகளிலிருந்து ரசிகர்களின் கவனத்தைத் திருப்பியதில் காஞ்சனாவுக்கு பெரும் பங்கிருந்தது..
பின்னர் வீர அபிமன்யுவில் [1965] ஏ.வி.எம்.ராஜனின் ஜோடி. அபிமன்யு எதிரியைத் துரத்திச் செல்லுகின்றான். காட்டின் நடுவே அந்தப் பேரழகி குறுக் கிடுகின்றாள் . 'வேலும் வில்லும் விளையாட' என்று அபிமன்யு வியப்புடன் வர்ணித்துப் பாடும் அளவு தகுதி காஞ்சனாவுக்கு இருந்தது என்பதை மஹா பாரதத்தைப் படிக்காதவர்களும் ஒத்துக் கொள்வார்கள் .


1966 இல் எம்.ஜி.ஆர். உடன் பறக்கும் பாவையில் காஞ்சனா நடித்தார். ஆனால் அதில் பறக்கும் பாவை சரோஜாதேவிதான். துரதிர்ஷ்டவசமாக காஞ்சனாவை 'இறக்கும் பாவையாக்கி இருந்தார்கள். எம்.ஜி.ஆரும் ,ராமண்ணாவும் ஓர வஞ்சனை செய்யாமல் காஞ்சனாவுக்கும் 'முத்தமா, மோகமா' என்றொரு பாடலை வழங்கி இருந்தார்கள். எம்.ஜி.ஆர். மீது ஒரு தலைக் காதல் வைத்து ,ஏமாந்து வில்லியாக,கொலை காரியாக மாறுவதாக இதில் காஞ்சனாவுக்குப் பாத்திரம்.
பாவம் ,காஞ்சனாவின் தோற்றம் அவர் ஒரு கேக்கை வெட்டுவதற்குக் கூடக் கத்தியைத் தூக்கக் கூடியவராகத் தோன்றவில்லை. ஒருதலைக் காதலுக்காக அவர் ஒரு கொலைகாரியாக மாறினார் என்ற திருப்பம் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனதற்கு காஞ்சனாவின் வெள்ளந்தித் தோற்றம் முக்கிய காரணம். 'இத்தனை சிறிய தலையின் மீது எத்தனை' சுமைகளடா ' என்று பாட வேண்டி ஆகி விட்டது. ஒரு ரெவெரெண்ட் சிஸ்டரின் [அருட் சகோதரியியின்] கையில் பிஸ்டலைப் பார்த்தது போன்ற வரலாற்றுக் கொடுமை.


1966 இல் கலைஞரின் ' மறக்க முடியுமா?'விலும் காஞ்சனாவுக்கு இரண்டாம் நிலைப் பாத்திரந்தான். முதலாளியின் மகளாகப் பாத்திரமேற்ற காஞ்சனாவை அசடு வழிய ,வழிய எஸ்.எஸ்.ஆர் . காதலிக்கின்றார்.
அவசர அவசரமாக ,அளவு குறைவாகத் தைக்கப் பட்ட ஆடையை காஞ்சனாவுக்கு இதில் ஏனோ வழங்கியிருந்தார்கள் . எஸ்.எஸ்.ஆர் உடன் ' எட்டி எட்டி ஓடும் போது ' ' என்றொரு பாடலை மாடிப் படிகளின் கைப் பிடியில் வழுக்கியபடி அவர் பாடுவது போல் பாவனை காட்டுவார்.கைப் பிடியில் உராய்ந்தும், படிகளில் உருண்டு புரண்டும் அழுக்கை ஒரு வழியாக அவர் சுத்தம் செய்தது நல்ல காரியந்தான். ஆனால் இந்தக் காட்சி அவருக்குக் கண்ணியம் சேர்த்ததாகக் கூற முடியவில்லை.

1966 இல் அவர் நடித்து வெளிவந்த இன்னொரு திரைப்படம் மோட்டார் சுந்தரம்பிள்ளை.
சிவாஜி-சௌகாரின் ஒன்பது பிள்ளைகளில் ஆக மூத்தவர் இவர். ஆனாலும் காட்சியமைப்புகள் இளைய பெண்ணாக நடித்த ஜெயலலிதாவையே அதிக வசனங்கள் பேச வைத்தன. கணவனின் பட்டப் படிப்பு குழம்பி விடக் கூடாதே என்பதற்காகஅவனைப் பிரிந்து அப்பா வீட்டில் தங்கியிருந்து கடிதங்கள் மூலம் பேசிக் கொள்ளும் மூத்த மகள் பாத்திரம் காஞ்சனாவுக்கு.கணவனாக நடித்தவர் சிவகுமார். உடம்பில் சதை போடாத,ஒழுங்காகத் தலை வார,சீப்புக் கிடைக்காத காலத்தில் அவர் நடித்த இரண்டாவது தமிழ்த் திரைப்படம் இது.



காஞ்சனா நாயகியாக நடித்த அதே கண்கள் திரைப் படம் 1967 இல் வந்தது. நாயகியின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் கொல்லப் படுகின்றார்கள்.நாயகியும் இலக்கு வைக்கப் படுகின்றாள் .கொலையாளி மட்டுந்தான் படத்தில் இறுதியாக மிஞ்சுவானோ என ரசிகர்கள் அஞ்சிக் கொண்டிருக்கும் வேளையில் நல்ல வேளையாக கொலையாளி மடக்கப் பட்டு விடுகின்றான். நாயகன் கொலையாளியுடன் போராடி அவளை மீட்டு விடுகிறான்.

14 நாட்கள் விடுமுறையில் வரும் நாயகி தன் தோழிகளுடன் 'பூம் பூம் பூம் ...மாட்டுக் காரன் ' பாடலைப் பாடிக் கொண்டே சமூக சேவை செய்கிறாள் .தோழியர்களின் ஆடை அலங்காரங்களைக் கண்டு மாடு கடைசி வரை மிரளவில்லை என்பது இங்கே அவசியம் குறிப்பிடப் பட வேண்டிய விஷயம்.

1967 இல் வந்த 'தங்கை' திரைப் படத்தில் காஞ்சனா இரவு விடுதி நடனக்காரி.தங்கையைக் குணப் படுத்த வேறு வழியில்லாமல் சூதாடியாகி விட்ட ஒருவனை [நல்ல வேளையாக அவன் டாக்டர் ஆகும் வரை தங்கை காத்திருக்கவில்லை ] ஒருதலையாக நேசிக்கும் பாத்திரம். கடைசியில் நாயகனைக் காப்பாற்றுவதற்காக வில்லனின் துப்பாக்கிக் குண்டுகளை மார்பினில் தாங்கி தியாகச் சாவைப் புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளுகிறாள்.

காஞ்சனாவின் நடனத்தில் ,எல்.ஆர்.ஈஸ்வரியின் கிறக்கமூட்டும் குரலில் ஒலிக்கும் ' நினைத்தேன் உன்னை...' யும்
தத்தித்... தத்தி ..' யும் உற்சாகம் தந்தாலும் அவற்றுக்கு நடனமாடும் காஞ்சனா வழி தப்பிச் செல்லும் ஆட்டுக் குட்டி போல்தான் அங்கே தோன்றினார்.விஜயலலிதாவும் ,ஜோதிலட்சுமியும் வெளியூர் சென்று விட்ட ஒரு விடுமுறை காலமாகக் கூட அது இருந்திருக்கலாம்.

டி .எஸ். பாலையாவின் மூன்று மருமகள்களில் ஒருத்தியாக காஞ்சனா பாத்திரமேற்ற பாமா விஜயம் 1967 இல் வந்தது. ' பக்கத்து பங்களாவுக்குக் புதிதாகக் குடி வந்திருக்கும் பாமா என்ற சினிமா நடிகையால் மூன்று மருமகள்களின் குடும்பங்களிலும் உண்டாகும் அதிரடி மாற்றங்கள்தான் இந்தத் திரை நாடகத்தின் உள்ளடக்கம்.. முகங்களைச் சொடுக்குவதிலும், உதடுகளைச் சுளிப்பதிலும் , வக்கணை பேசுவதிலும் கே.பாலச்சந்தர் படங்களில் சிறந்து விளங்கிய சௌகார் ஜானகி, ஜெயந்தி ஆகியோருக்கு மத்தியில் கண்ணாடி அணிந்த காஞ்சனாவும் தன் முகத்தைக் காட்ட வேண்டியிருந்தது.. 

அவர்களின் அமுக்குப் பிடியை மீறி , ஜோடியாக வழமை போல் திரு திருவென்று முழித்த படி நடித்துக் கொண்டிருக்கும் முத்துராமனுக்கும் முட்டுக் கொடுத்துக் கொண்டு , அதே வேளை சௌகார் ஜானகி ,ஜெயந்தி ஆகியோரின் அமுக்குப் பிடியையும் மீறி , தன்னை நிரூபிக்க வேண்டிய கஷ்டமான நிலைமை காஞ்சனாவுக்கு.
காஞ்சனாவின் வசீகரம் இந்தப் படத்தின் இரண்டு பாடல் காட்சிகளில் மிகச் சிறப்பாக வெளிப் பட்டன. 


மூன்று மருமக்களும் சேர்ந்து பாடும் 'ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே' என்ற பாடல் காட்சி அவற்றில் ஒன்று..
மற்றையது படுக்கையறையில் கணவனுடன் சரசமாடிக் கொண்டு பாடும் 'நினைத்தால் சிரிப்பு வரும், நினைவில் மயக்கம் வரும் ' என்ற பாடல் காட்சி. அவர் சரிந்து சரிந்து கணவன் மேல் சாயும் பாவனையில் காமத்தின் உள்ளடக்கம் ஒளிந்திருந்தது .

1969 இல் பெரும் பணச் செலவில் ,ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று படமாக்கப் பட்ட ஒரு படத்தின் நாயகியாகவும் காஞ்சனா இருந்திருக்கிறார் . படத்தின் பெயர் 'சிவந்த மண் '.இந்தியாவின் சமஸ்தானம் ஒன்றின் மஹா ராஜாவின் மகளான நாயகி லண்டனில் கல்வி பயில்கிறாள். அதே சமஸ்தானத்தின் உயர் போலிஸ் அதிகாரியின் மகனும் அங்கே கல்வி பயில்பவன். குடும்ப பின் புலங்களை பரஸ்பரம் அறிந்து கொள்ளாமலேயே காதல் மலர்கின்றது. ஏனைய தமிழ்க் கதாநாயக நாயகிகளுக்கு கிட்டாத அதிர்ஷ்டம் 1969 இலேயே இவர்களுக்குக் கிட்டியதென்பது வரலாற்றில் குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம்.
கிடைத்த வாய்ப்பை வீணாக்காமல் பாடலொன்றின் தொகையறாவை லண்டனிலும்,சரணத்தை பிரான்சிலும் ,பல்லவியை ஸ்விட்சர்லாந்திலும் பாடினார்கள்.ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தையும்,, அழகிய ரைன் நதிக் கரை ஓரத்தையும் ஒரே பாடலில் 1969 இலேயே பார்த்த தமிழ் ரசிகர்களும் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்! 

மூன்று காதல் பாடல்களுக்குப் பின் ஒரு கட்டத்தில் இருவருக்கும் முழிப்பு நிலை ஏற்பட்டு விடுகின்றது. தங்கள் சொந்த பூமியில் தன் கைகளுக்குள் ஆட்சியதிகாரத்தைக் கபடத் தனமாகக் கொண்டு வந்து விட்ட திவான் நிகழ்த்தும் அராஜகங்களுக்கு முடிவு கட்டப் புரட்சிப் படை அமைக்கின்றனர். திவானைத் தீர்த்துக் கட்டக் கூட காஞ்சனா அரை குறை ஆடையுடன் , 15 தடவைகள் சாட்டையடி பட்டு 'பட்டத்து ராணி பார்க்கும் பார்வையை' மேடையில் ஆடிப் , பாட வேண்டி இருக்கிறது.


மனோகரா பாணியும் ,ஹொலிவூட் பாணியும் பின்னிப் பிணைந்த சிவந்தமண்ணின் அழகில் காஞ்சனாவுக்கும் , வெளி நாட்டுக் காட்சிகளுக்கும் முக்கிய பங்கு இருந்தன. ஆனாலும் வீர சாகசங்களின் திருவுருவாகக் காட்டப் படும் நாயகனின் சிம்மக் குரலின் முன்னே காஞ்சனா ஒரு மருண்ட முயலாக ஆனதுதான் வரலாறு.
என்னுடைய கணிப்பில் காஞ்சனாவின் திரையுலகப் பயணத்தில் அவருக்குப் பெருமை சேர்த்த படங்கள் இரண்டு. அவற்றுள் ஒன்று ஒன்று 1969 இல் வெளியான சாந்தி நிலையம். மற்றையது 1971 இல் வெளியான ' அவளுக்கென்று ஓர் மனம்'.



'SOUND OF MUSIC' ஐத் தழுவி வந்த சாந்தி நிலையத்தில் காஞ்சனாவுக்குக் கச்சிதமான வேஷப் பொருத்தம். SOUND OF MUSIC திரைப் படத்தின் ஜீவநாடி ஜூலி ஆண்ட்ரூஸ் [JULIE ANDREWS ] என்ற நடிகை.கிட்டத் தட்ட அந்தத் துடிப்பையும், தாய்மையின் பரிவையும், இளவயதின் கனவுகளையும் , மென் சோகத்தையும் காஞ்சனா இதில் மிகவும் சிறப்பாக வெளிப் படுத்தினார் என்றே சொல்ல வேண்டும்.அந்தக் காலகட்டத்தில் புகழில்காஞ்சனாவை விட மிகவும் ஸ்திரமாக இருந்த ஜெயலலிதா , கே.ஆர்,விஜயா, வாணிஸ்ரீ போன்றவர்களுக்கு ஒரு போதும் சித்திக்காத வரம் அது.

சிற்றன்னையின் கொடுமை தாளாமல் அனாதைக் கோலத்தில் பள்ளிக் கூடமொன்றில் சேரும் அந்தச் சிறுமி அதே பாடசாலையில் ஆசிரியையாக மாறுகின்றாள். தன் ஆசிரியை தனக்குச் சொல்லித் தந்த 'இறைவன் வருவான்.. அவன் என்றும் நல் வழி தருவான்' பாடலை தன் மாணவிகளுக்குச் சொல்லித் தருகின்றாள். காஞ்சனாவின் தோற்றத்துக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்திய பாத்திரம் அது.காஞ்சனாவின் அழகைப் பயன் படுத்திய பல படங்களின் மத்தியில் அவருடைய ஆற்றலை அடையாளம் காட்டிய முக்கிய படம் இது.

'அவளுக்கு என்று ஓர் மனம்' வெளி வந்த ஆண்டு 1971.
தன்னை உருக்கி ,பிறருக்கு ஒளி வழங்கும் மெழுகுவர்த்தியைப் போன்ற தியாகப் பாத்திரம் இதில் நடிகை பாரதிக்குப் போய் விட்டது.ஆனாலும் காஞ்சனாவுக்கும் இந்தப் படத்தில் முக்கியத்துவம் கிடைத்திருந்தது. தன் மனதுக்குள் வைத்துப் பூசித்து நேசித்தவனை தோழி திருமணம் செய்து கொள்ளுகின்றாள் .தோழியுடன் ஒருகாலத்தில் தனக்கு இருந்த காதல் விவகாரத்தை அம்பலப் படுத்தப் போவதாகப் பழைய காதலன் மிரட்டுகின்றான். தன் நேசத்துக்குரியவனதும் , தன் தோழியினதும் வாழ்க்கை சீர் குலைந்து போய் விடக் கூடாது என்பதற்காக அந்த அயோக்கியன் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவனுடைய கைச் சங்கிலி நாய் போல் பின்னால் செல்லுகின்றாள் நாயகி.. மையப் பாத்திரம் நடிகை பாரதிக்கு வழங்கப் பட்டிருந்த போதிலும் காஞ்சனாவும் தன் பங்கை மிகவும் சிறப்பாக செய்திருந்தார்.
1971 இல் ஸ்ரீதரின் முகாமில் இருந்த என்.சி,சக்கரவர்த்தியின் இயக்கத்தில் வெளிவந்த 'உத்தரவின்றி உள்ளே வா ' படத்திலும் காஞ்சனாதான் கதாநாயகி.காதலிக்க நேரமில்லை,அதே கண்கள் திரைப் படங்களின் தொடர்ச்சியாக ரவிச்சந்திரனுடன் இதிலும் ஆடிப் பாடியதைத் தவிர விசேஷமாக எதையும் குறிப்பிடத் தோன்றவில்லை.

காஞ்சனாவின் அழகில் அமைதியின் நதி ஒளிந்திருந்தது.
ஆடைக் குறைப்புகளால் அந்த மௌனக் குகையின் ரகசியத்தைக் கண்டு பிடித்து விடலாம் என்றே தமிழ்த் திரையுலகம் முயன்றதாகத் தெரிகின்றது.ஆனால் அது தரிசித்தது உண்மையான அவரல்ல. அமைதியான ஆறு ஏதோ ஒரு ரகசியத்தை ஒளித்து வைத்திருக்கின்றது.
பல வெற்றிப் படங்களில் அவர் நடித்திருக்கின்றார். ஆனால் அந்த வெற்றி அவரால் வந்து சேர்ந்ததல்ல.

எனினும் அந்த வெற்றிகளைக் கேடயமாக்கிக் கொண்டு திரையுலகில் போராடி அவர் முன்னுக்கு வந்திருக்க வேண்டும். சவாலான பாத்திரங்களில் அவர் நடித்துத் தன்னை நிரூபித்திருக்க வேண்டும். தமிழ்த் திரையுலகின் மூவேந்தர்கள், குட்டி ராஜாக்கள் எல்லோருடனும் ஜோடி சேர்ந்துங் கூட காஞ்சனாவால் 'பட்டத்து ராணி'யாக கடைசி வரை முடியவில்லை. பந்தயத்தில் காலம் அவரை ஜெயித்து விட்டது.

இழப்பு காஞ்சனாவுக்கா ,தமிழ் ரசிகர்களுக்கா என்பதைத்தான் தீர்க்கமாக சொல்ல முடியவில்லை.

No comments:

Post a Comment