RAJINI ,THE GREAT
"எனக்கு நான்தான் நல்ல நண்பன். அதாவது சிவாஜிராவ். அதற்கு இன்னொரு பெயர் மனசாட்சி. தூங்குவதற்கு முன்னும், தூங்கி எழுந்தபின்னும் கிடைக்கும் தனிமையில்தான் என் நண்பனிடம் மனம் விட்டுப் பேசிக்கொள்வேன்.
- ரஜினிகாந்த்.
8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்''
லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்
பட உலகைச் சேர்ந்த 8 பேர்களுக்கு உதவ நினைத்தார், ரஜினிகாந்த். உடனே, ஒரு படக்கம்பெனி தொடங்கி 8 பேர்களையும் பட அதிபர்களாக்கி "அருணாச்சலம்'' படத்தை தயாரித்தார். அதில் கிடைத்த லாபத்தை 8 பேர்களுக்கும் பகிர்ந்து கொடுத்தார்.
உதவியவர்களுக்கு உதவி
தான் வளரும் நேரத்தில் தன்னை வளர்த்துவிட்டவர்கள் மீது ரஜினி தனி பிரியம் வைத்திருந்தார். இவர்களுக்கு எந்த விதத்திலாவது உதவ வேண்டுமே என்பது அவர் உள்ளத்துக்குள் பதிந்து போய் இருந்திருக்கிறது.
இப்படித்தான் தன்னை அதிக படங்களில் இயக்கிய டைரக்டர் எஸ்.பி.முத்துராமனுக்கு ஏதாவது செய்ய விரும்பினார். அதன் விளைவாகவே எஸ்.பி.முத்துராமனின் மொத்த �னிட்டுக்காக `பாண்டியன்' என்ற படத்தில் நடித்துக் கொடுத்தார்.
ஆரம்ப காலத்தில் இருந்தே தனக்கு பக்கத்துணையாக இருந்த நண்பர்களையும் மறக்கவில்லை. அவர்களுக்காக `வள்ளி' என்ற படத்தில் நடித்துக் கொடுத்து உதவினார்.
இப்படியாக அவரது உதவும் நோக்கம் வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், நடிப்பிலும் இமயமாய் உயர்ந்தார். ரசிகர்களின் உச்ச நட்சத்திரமானார். இப்போதும் அவரது உதவும் குணம் அவரை விட்டுப் போய்விடவில்லை.
அருணாச்சலம்
தன் நண்பர்களில் சிலருக்கு உதவிடும் நோக்கில் ஒரு படத்தை நடித்துக் கொடுக்க முடிவு செய்தார். அந்தப் படத்துக்கு `அருணாச்சலம்' என்று பெயரும் சூட்டினார்.
ரஜினியின் ஜோடியாக ரம்பா, சவுந்தர்யா நடித்தனர். குஷ்புவின் கணவரும், டைரக்டருமான சுந்தர் சி. இந்தப்படத்தை இயக்கினார். தேவா இசை அமைக்க, வசனத்தை கிரேசி மோகன் எழுதினார்.
1997 ஏப்ரல் 10-ந்தேதி வெளிவந்த இந்தப்படம், 37 தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடியது. சென்னையிலும், மதுரையிலும் 200 நாள் ஓடியது.
கலைப்பயணத்தில் தனக்கு உதவியாக இருந்த 8 பேர்களை இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களாக உயர்த்தினார், ரஜினி. அவர்கள் விவரம்:-
1. கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினியின் முதல் படத்தை தயாரித்த "கலாகேந்திரா'' பட நிறுவனத்தின் தயாரிப்பாளர் பி.ஆர்.கோவிந்தராஜ் - துரை ஆகியோர் இருவரும் ஒரு பங்குதாரர்கள்.
2. தயாரிப்பு நிர்வாகி கே.எஸ்.நாகராஜன் ராஜா இன்னொரு பங்குதாரர். இவர் ரஜினியின் சில படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணி யாற்றினார். நேரம் காலம் பார்க்காத இவரது கடின உழைப் புக்காக இந்தப்பரிசு.
3. கே.முரளிபிரசாத்ராவ். இவர் ஏற் கனவே "வள்ளி'' படத்தில் ரஜினியின் உதவி பெற்ற கே.விட்டல்ராவின் சகோதரர். சகோதரர்கள் இருவரும் தங்கள் தாயாருடன் ஆந்திராவில் இருந்து சென்னை வந்தவர்கள். சென்னை புதுப்பேட்டையில் இவர்கள் இருந்த வீட்டில்தான் ரஜினியும், தனது நடிப்பின் ஆரம்ப காலத்தில் தங்கியிருந்தார். இவர்களின் தாயார் ரஜினியையும் தன் மகனாகவே எண்ணி அன்பு செலுத்தினார். பழசை மறக்காத ரஜினியின் பார்வை முரளிபிரசாத் மீதும் நிலைத்ததால் அவரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்தார்.
பட அதிபர்
4. ரஜினி நடித்த "காளி'' படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்த தயாரிப்பாளர் ஹேம்நாக்கும் ஒரு பங்குதாரர். "காளி'' படப்பிடிப்பில் குதிரைகள் தீயில் கருகி பொருளாதார ரீதியில் பலத்த இழப்பை சந்தித்திருந்தார், ஹேம்நாக். படம் வெற்றி பெற்று லாபம் வந்திருந்தாலும், குதிரைகள் உயிரிழப்புக்காக அவர் சந்தித்த பிரச்சினைகளுக்கு ஏராளமாகப் பணம் செலவு செய்ய வேண்டியிருந்தது. அதை மனதில் வைத்து ரஜினி இவருக்கும் தன் பங்கு பட்டியலில் இடம் கொடுத்தார்.
5. ரஜினியின் எல்லாப் படங்களிலுமே நடிகர் வி.கே.ராமசாமி இருப்பார். ரஜினியின் மரியாதைக்குரியவர்கள் லிஸ்ட்டிலும் இடம் பிடித்திருந்தவர், வயது முதிர்ந்த நிலையில் நடக்கவே சிரமப்படும் நிலை, அதற்கான மருத்துவச் செலவு என இருந்த கையிருப்பும் இறக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்த நேரத்தில் ரஜினி தனது படத்தின் பங்குதாரர்களில் ஒருவராக்கி கைகொடுத்தார்.
முன்னதாக தனக்கு ஒரு படம் செய்து தர ரஜினியிடமே கேட்டிருந்தார் வி.கே.ராமசாமி. அதையும் மனதில் பதித்து வைத்திருந்த ரஜினி, ஏற்ற சமயத்தில் படம் தருவதாக கூறியிருந்தார். வி.கே.ராமசாமி இந்த வகையிலும் பங்குதாரர்களில் ஒருவரானார்.
பண்டரிபாய்
6. குணச்சித்திர வேடங்களிலும், அம்மா வேடத்திலும் நடித்து தமிழ்த்திரையுலகில் மறக்க முடியாத இடத்தில் இருப்பவர் நடிகை பண்டரிபாய். "மன்னன்'' படத்தில் பக்கவாதத்தால் முடமாகிப்போன தாயாராக வரும் பண்டரிபாய்க்கு ரஜினியே சகலமுமாக இருப்பார். தாயாரை கோவில் கோவிலாக தூக்கியபடி "அம்மா என்றழைக்காத உயிரில்லையே'' என்று ரஜினி பாடி நடித்த காட்சிகள் இப்போதும் கண்களுக்குள் இருந்து கங்கையை வரவழைக்கும்.
பண்டரிபாய், பஸ் விபத்தில் ஒரு கையை இழந்து, துயரத்தில் இருந்த நேரத்தில் இவரையும் தனது பங்குதாரர் வரிசைக்குள் கொண்டு வந்தார், ரஜினி.
கலைஞானம்
7. வில்லனாக நடிப்பில் கலக்கிக் கொண்டிருந்த ரஜினியை முதன் முதலாக தனது `பைரவி' படத்தில் கதாநாயகனாக்கியவர் தயாரிப்பாளர் கலைஞானம். `பைரவி'யின் வெற்றிக்குப்பிறகு ரஜினியின் "நாயகன் அந்தஸ்து'' நிலைப்படுத்தப்பட்டது.
ரசிகர்கள் தன்னை `வில்லனாக' பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் நாயகனாக்கி, தனது கலைவாழ்வில் திருப்பம் ஏற்படுத்தியதை மறக்காத ரஜினி, பங்குப்பட்டியலுக்குள் கலைஞானத்தையும் கொண்டு வந்துவிட்டார். இந்த சமயத்தில் கலைஞானம் தயாரிப்பில் வெளிவந்த ஒரு படம் ஏற்படுத்திய நஷ்டத்தில் கடனில் இருந்தார். இது ரஜினியின் காதுக்கு வந்தபோது கலைஞானத்தையும் படத்தின் ஒரு பங்குதாரர் ஆக்கிவிட்டார்.
எம்.ஜி.ஆரின் விசுவாசி
8. இதுவரை இடம் பெற்ற பங்குதாரர்கள் ஏழுபேரும் ஏதாவது ஒரு விதத்தில் ரஜினியுடன் தொடர்பு உடையவர்கள். எட்டாவதாக இந்த பட்டியலில் ரஜினி இணைத்த பத்மனாபனோ ரஜினியுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவர். சரியாக சொல்லப்போனால் இந்த பத்மனாபன் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி. எம்.ஜி.ஆருக்காக உயிரையும் விடத் தயங்காதவர் என்ற முறையில் எம்.ஜி.ஆரின் அன்பைப் பெற்றிருந்தவர். எம்.ஜி.ஆருக்காக வாழ்ந்து அவர் மறைந்த சில மாதங்களில் அதே கவலையில் இறந்தும் போனார்.
அப்படிப்பட்டவர், எப்படி ரஜினியின் உதவும் பட்டியலுக்குள் வந்தார்?
எம்.ஜி.ஆர். நாடக கம்பெனி தொடங்கி நடத்தியபோதே உடனிருந்தவர் இந்த பத்மனாபன். எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு காலகட்ட வளர்ச்சியிலும் உடனிருந்தவர். எம்.ஜி.ஆர். வளர்ந்து புகழ் பெற்ற நேரத்தில் அவருக்கு வலதுகரமாக திகழ்ந்தவர். எம்.ஜி.ஆர். வெளி�ருக்கு போகிற சமயங்களில் கூடும் திரளான ரசிகர்கள் கூட்டத்தில், எம்.ஜி.ஆரை பூப்போல தாங்கி கூட்டத்தை தனது கட்டுக்கோப்பால் ஒழுங்குபடுத்தியவர்.
எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்து முதல்-அமைச்சரான போதும் அவருடன் பத்மனாபன் இருந்தார். இவருக்கு 6 பெண்கள். குடும்ப சூழ்நிலையும், சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை என்பதை தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். இவருக்கு உதவ விரும்பினார். நோயின் பிடியில் ஆட்பட்டு பேச்சு சரிவர வராதிருந்த அந்த நேரத்தில் பத்மனாபனை அழைத்த எம்.ஜி.ஆர், சைகை மூலமாக தனது உதவும் நோக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் அந்த உதவியை கண்ணீருடன் மறுத்த பத்மனாபன், "உங்கள் நலம் மட்டுமே என் சொத்து. எனக்கு அதுவே போதும்'' என்று கூறிவிட்டு வந்துவிட்டார்.
இரண்டொரு நாளிலேயே எம்.ஜி.ஆர். இறந்துவிட, அதன் பிறகு வாழ்ந்த ஒன்றிரெண்டு மாதங்களும் மிக சிரமத்தோடு வாழ்ந்திருக்கிறார், பத்மனாபன். எம்.ஜி.ஆர். மேல் விசுவாசத்தை வைத்தவரின் சுவாசமும் அவரை எண்ணியே போய்விட, ஆறு பெண்களை வைத்துக்கொண்டு தலையில் கைவைத்தபடி திக்பிரமைக்குள்ளாகி விட்டார் பத்மனாபனின் மனைவி.
பத்மனாபன் பற்றிய இத்தனை விஷயங்களும் தனது கலை நண்பர்கள் மூலம் ரஜினிக்குத் தெரியவந்திருக்கிறது. ஒரு தலைவருக்காக விசுவாசத்தை மட்டுமே காட்டி, அவர் மூலம் கிடைக்கவிருந்த வளமான எதிர்காலத்தையும் துச்சமாக கருதிய பத்மனாபன் ரஜினிக்குள் ஏற்படுத்திய பிரமிப்புதான், தனது உதவும் பட்டியலுக்குள் அவரைக் கொண்டு வந்தது. பத்மனாபனின் பெண்களில் இருவர் தங்கள் தாயாருடன் வந்து, ரஜினி கொடுத்த பணத்தை பெற்றுக்கொண்டார்கள்.
No comments:
Post a Comment