Sunday 17 September 2017

A.K.CHETTIAR , WORLD TRAVELLER, PRESERVED GANDHI FILMS

A.K.CHETTIAR , WORLD TRAVELLER, PRESERVED GANDHI FILMS

நியூயார்க்கிலிருந்து 1937 அக்டோபர் 2-ல் டப்ளின் நகருக்கு அட்லாண்டிக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த சமாரியா கப்பலில் 26 வயதுகூட நிரம்பாத ஒரு தமிழ் இளைஞர் கனவொன்று கண்டார் - காந்தியின் வாழ்க்கையை ஓர் ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என்று. இரண்டரை ஆண்டுகள். இருமுறை உலகைச் சுற்றினார். கப்பலிலும் விமானத்திலும் ரயிலிலும் ஒரு லட்சம் மைல் பயணித்தார். 30 ஆண்டுகளில், 100 கேமராகாரர்கள் படம் பிடித்த 50,000 அடி நீளப் படச் சுருள்களைக் கண்டெடுத்தார். 1940-ல் ‘மகாத்மா காந்தி: அவரது வாழ்க்கையின் சம்பவங்கள்’ என்ற இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய படம் ஆகஸ்ட் 1940-ல் வெளிவந்தது.

காந்தியைப் பற்றிய முதல் முழு நீளப் படம் என்ற பெருமை இதற்கு உண்டு. தமிழ் வடிவம் வெளிவந்த சில மாதங்களில், அப்படம் தெலுங்கு விவரணையுடன் வெளி வந்தது. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் சூடுபிடித்த வேளையில், சில ஆண்டுகள் அதன் படச்சுருள்கள் தலைமறைவாயின. சுதந்திரக் கொண்டாட்டம் கோலாகலமாக அரங்கேறிக்கொண்டிருந்த வேளையில், 14 ஆகஸ்ட் 1947 இரவு புது டெல்லியில் இப்படம் திரையிடப்பட்டது. காந்தியின் இறுதிக்கட்ட வாழ்க்கை வரையுள்ள நிகழ்ச்சிகளையும் சேர்த்து முழுமைப்படுத்தி அதனை 1950-ல் இந்தியில் தயாரித்தார் அவ்விளைஞர். சில ஆண்டுகள் கழித்து, ஜோசப் மக்கார்த்தியின் கம்யூனிச எதிர்ப்பு வேட்டை ஹாலிவுட்டைப் பதம் பார்த்துக்கொண்டிருந்த வேளையில், அப்படத்தை ஆங்கிலத்தில் தயாரித்து, அமெரிக்காவிலும் வெளி யிட்டார். இப்படி சாதனைக்கு மேல் சாதனை புரிந்த இளைஞர் ஏ.கே. செட்டியார்.

தன்னை முன்னிலைப்படுத்தாதவர்

குடத்திலிட்ட விளக்குகளுக்குத் தமிழுலகில் பஞ்ச மில்லை. அவர்களுள் ஒருவர் அ.ராம.அண்ணாமலை கருப்பன் செட்டியார் என்ற ஏ.கே.செட்டியார் (4.11.1911 -10.9.1983). (‘ஏ.கே. செட்டியார்’ என்ற பெயரிலேயே தம் நூல்களையெல்லாம் வெளியிட்டபோதும், பல இடங்களில் ‘அ.க.செட்டியார்’ எனவும் கையெழுத்திடும் வழக்கம் அவருக்கு இருந்துள்ளது.) தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றை - தம்மை முதன்மைப்படுத்திக்கொள்ளாமல் - ஆவணப்படுத்தியவர்களில் அவர் மிக முக்கியமானவர். ஏ.கே.செட்டியாரின் அடக்கத்தின் காரணமாக, அவர் பெருமை பரவலாக அறியப்படாமல் போய்விட்டது. தமிழக அரசு பாரதி நூற்றாண்டு விழா எடுத்தபோது, பாரதியியலுக்கு அவர் ஆற்றிய பங்கைப் பாராட்டி ஒரு கேடயம் வழங்க முன்வந்தது. அதனைப் பெற்றுக்கொள்ள மறுத்த ஏ.கே.செட்டியார், விழா நாளன்று பனகல் பூங்காவில் அமர்ந்திருந்ததாகச் சொல்வார்கள்.

விளம்பரத்தை விழையாததால் ஏ.கே.செட்டியாரின் புகைப்படம் கிடைப்பதுகூட அரிதாக இருக்கிறது. பின்னாளில், அவர் தம் புகைப்படம் வெளிவருவதை முற்றிலுமாகத் தவிர்த்திருக்கிறார். ஆனந்த விகடன் பொன் விழா ஆண்டில், ஒவ்வோர் ஆண்டு இதழையும் தொகுத்து அறிமுகம் செய்யும் பொறுப்பு, பெயர்பெற்ற எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு, அத்தொகுப்புகள் அவ்வவ் வெழுத்தாளரின் படத்தோடு வெளியிடப்பட்டன. 1959-ம் ஆண்டுத் தொகுப்பை ஏ.கே.செட்டியார் தொகுத்தளித்தபோது ‘திரு.ஏ.கே.செட்டியார் தமது புகைப்படத்தைப் பிரசுரிக்கக் கொடுப்பதில்லை என்ற கொள்கையுடையவராதலால் அவரது புகைப்படத்தைப் பிரசுரிக்க இயலவில்லை’ என்ற விகடன் ஆசிரியர் குறிப்பு மட்டுமே இடம்பெற்றது.

ஏ.கே.செட்டியார் பிறந்தது செட்டிநாட்டுக் கோட்டையூரில். லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் நூற்பட்டியிலிருந்து, அவருடைய முதலெழுத்தின் விரிவு ‘அண்ணாமலை’ என்று அறிய முடிகிறது. ஆகவே, இது அவருடைய தந்தையின் பெயராகும். தாயார் பெயரைக் கண்டறிய இயலவில்லை. ஏ.கே.செட்டியாருக்குத் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால், அவர் மனைவியின் பெயர்தானும் தெரியவில்லை. திருமணம் நிகழ்ந்த காலமும் தெரியவில்லை. அறியவரும் செவிவழிச் செய்திகள் வள்ளலாரின் இல்லற வாழ்க்கையை நினைவூட்டுகின்றன.

கோட்டையூர் செட்டியார்

1928-ம் ஆண்டு ஆனந்த விகடனில் ‘சாரதாம்பாள் - சிறு தமாஷ்’ என்ற (ஒரே) கதை கோட்டையூர் ஏ.கே.செட்டியார் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. அப்போது அவருக்கு வயது 17.

1930-ம் ஆண்டின் கடைப்பகுதியில் தனவணிகன் என்ற மாத இதழுக்கு நிர்வாக ஆசிரியராக அவர் அமர்ந்தார். சில காலம் அது வெளிவந்தது. அதன் பின்பு, ஏ.கே.செட்டியார் பர்மா சென்றிருக்கிறார். இது 1933-ன் இறுதியாக இருக்கலாம். பர்மா நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கம் நடத்திய ‘தனவணிகன்’ இதழுக்கு ஆசிரியராக அவர் சென்றதாகச் சோமலெ குறிப்பிடுகிறார். எனக்குப் பார்க்கக் கிடைத்த 1934, 1936 பர்மா ‘தனவணிகன்’ பொங்கல் மலர்களில், ஆசிரியர் அ.ராம.அ.கருப்பன் செட்டியார் (A.Rm.A.Karuppan Chettiar) எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. 1937 பொங்கல் மலர் ஏ.கே.பூங்காவனம் என்பவரை ஆசிரியராகக் குறிப்பிடுகிறது. எனவே, 1933 கடைசியிலிருந்து 1936 இடைப் பகுதி வரை பர்மா ‘தனவணிகன்’ ஆசிரியராக ஏ.கே.செட்டியார் விளங்கினார் எனக் கொள்ளலாம்.

பாரதியிடம் ஈடுபாடு

அவர் 40 ஆண்டுக் காலம் நடத்திய ‘குமரி மலர்’ மாத இதழைத் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றை ஆவணப் படுத்துவதற்கு முக்கியக் கருவியாகக் கைக்கொண்டார். மாதம் ஒரு புத்தகமாக 1943-ல் தொடங்கிய குமரி மலர், ஏ.கே.செட்டியார் மறையும்வரை ஒரு சிறு இடைவெளி நீங்கலாக, மாதந் தவறாமல் வெளிவந்தது. ச.வையாபுரிப் பிள்ளை, க.அ.நீலகண்ட சாஸ்திரி, தி.நா.சுப்பிரமணியன், கி.ஸ்வாமிநாதன், அ.முத்தையா உள்ளிட்ட அறிஞர்களும், டி.எஸ்.சொக்கலிங்கம், ராய.சொக்கலிங்கன், ‘சக்தி’ வை.கோவிந்தன், ஏ.என்.சிவராமன், ஏ.ஜி.வேங்கடாச்சாரி போன்ற இதழாளர்களும், பாரதிதாசன், டி.கே.சி., வ.ரா., தி.ஜ.ர., கல்கி, க.நா.சுப்ரமண்யம், த.நா.குமாரசாமி, ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், கு.அழகிரிசாமி போன்ற இலக்கியவாணர்களும் குமரி மலரில் எழுதியிருக்கின்றனர்.

பாரதியிடம் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டிருந்த ஏ.கே.செட்டியார், அவருடைய தொகுக்கப்படாத படைப்புகளைக் கண்டெடுத்து வெளியிடுவதில் பெரும்பங்காற்றினார். ரா.அ.பத்மநாபன் ‘பாரதி புதையல்’ பலவற்றை முதலில் குமரி மலரிலேயே வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத் தகுந்தது. பாரதியின் இந்தியா, சக்கரவர்த்தினி, கர்மயோகி மற்றும் சில சுதேசமித்திரன் கட்டுரைகளை முதலில் வெளியிட்டதில் குமரி மலருக்கு முக்கியப் பங்குண்டு.

தமிழ் இதழியல் வரலாற்றைத் துலக்கமுறக் காட்டும் பெரும் பணியையும் ஏ.கே.செட்டியார் செய்தார். சுதேசமித்திரன் நிறுவனர் ஜி.சுப்பிரமணிய ஐயர் பற்றிய சிறப்பிதழ், பழந் தமிழ் இதழ்களின் முதல் இதழ்களின் ஆசிரியவுரைகளை மறுபதிப்பிட்ட ‘முதல் தலையங்கம்’ என்ற தொடர், எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடுவின் கட்டுரைகள், ரா.அ. பத்மநாபன் எழுதிய இதழியல் வரலாற்றுத் தொடர் போன்றவை தனியே குறிப்பிடப்பட வேண்டியவை.

காந்தியம் சார்ந்த சமூகச் சீர்திருத்தம் தொடர்பான செய்திகளுக்கும் ஏ.கே.செட்டியார் முதன்மை அளித்தார். கதர், கள் ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, கோயில் நுழைவு முதலானவை பற்றிய அரிய ஆவணங்களைக் குமரி மலரில் பரக்கக் காணலாம். தமிழ்ச் சமூகம், அரசியல், பண்பாடு ஆகியவை பற்றிய முக்கியமான கட்டுரை களையும் குறிப்புகளையும் மறுபதிப்பிடுவதே குமரி மலரின் தலையாய பணியாக மாறியது. ஏ.கே.செட்டியார் மறுபதிப்பிட்ட ஆவணங்களை இந்திய தேசிய இயக்கத்தில் தமிழரின் பங்கு, தமிழ்ச் சமூக - பண்பாட்டு மாற்றங்கள் என்ற இரு பெரும் பிரிவுகளில் அடக்கலாம்.

உலகம் சுற்றிய தமிழன்

பயண நூல்கள் பல எழுதியவர் என்று இன்றளவும் பரவலாக அறியப்படும் ஏ.கே.செட்டியாருக்கு, அவர் எழுதிய உலகம் சுற்றும் தமிழன் என்ற நூற்பெயரே அடைமொழியாகவும் சிறப்புப் பெயராகவும் அமைந்துவிட்டது.

1936-37-ம் ஆண்டுகளில், படமெடுக்கும் தொழில் நுட்பத்தில் ஜப்பானிலும் அமெரிக்காவிலும் முறையான பயிற்சி பெற்றார் ஏ.கே.செட்டியார். டோக்கியோவின் பேரரசப் புகைப்படக் கல்லூரியில் (Imperial College of Photography) படித்தபோது, டோக்கியோ அசாஹியின் உருத்துலக்கும் துறையில் பயின்றார். நியூயார்க் புகைப்பட நிறுவனத்தில் (New York Institute of Photography) படித்தபோது, பதே செய்தி நிறுவனத்தில் பயின்றார். இதற்குப் பிறகு, 1937-ம் ஆண்டின் பிற்பகுதியில் பெர்லினுக்குச் சென்று, நாஜி பரப்புரை வாரியத்தின் காரல் வாஸ் என்பவரிடமும் பயிற்சி பெற்றிருக்கிறார். இருப்பினும் அவர் நாஜிக்களையும், நாஜிக்களின் யூத வெறுப்பையும் கடுமையாகவும் கேலியாகவும் பலமுறை கண்டித்திருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் - டிசம்பர் 1937-ல் - அவர் ஆஸ்திரியாவிலுள்ள பாட்காஸ்டீனுக்குச் சென்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸைச் சந்தித்து, அவரைப் படம் பிடித்திருக்கிறார்.

காந்தி படம் ஒரு கப்பல் பயணத்தில் கருக்கொண்டது. உடன் பயணித்த ஒரு நண்பருடன் விவாதித்துக் குறித்துக்கொண்ட தாளே திட்டத்துக்கான வரைபடமாக அமைந்தது.ஏ.கே.செட்டியார் காந்தி ஆவணப்படத்தைச் ‘செய்திப் படச் சம்பிரதாய’த்தில் (news reel) தயாரிக்கப்பட்ட படமாகக் கருதினார். ‘ஒரு தனிப்பட்ட மனிதரின் வாழ்க் கையை, அவரது வாழ்க்கையின் மூலமாகச் சித்தரிக்கும் ஒரு முழு நீளமுள்ள சரித்திரப் படம் முதன்முதலாகத் தயாரிக்கப்படுவது இதுதான்’ என்றும் அவர் நம்பினார்.

நேர்மையும் சிக்கனமும்

1938-ல் ‘டாக்குமெண்டரி ஃபிலிம்ஸ் லிமிடெட்’ என்ற குழுமத்தை ஏ.கே.செட்டியார் நிறுவினார். முதலில் இந்தியாவில் காந்தி பற்றிய படப் பதிவுகளைத் திரட்டிய ஏ.கே.செட்டியார், பிறகு வெளிநாடுகளில் தம் தேடலைத் தொடர்ந்தார். இரண்டு ஆண்டுகளில் மூன்று கண்டங்களில் ஒரு லட்சம் மைல்களைக் கப்பலிலும் விமானத்திலும் ரயிலிலும் கடந்தார். இரண்டாம் உலகப் போர் வெடிக்கவிருந்த நெருக்கடியான தருணம் இது என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். கூடவே, அவர் நிறவெறியையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. விடுதிகளில் அறை கொடுக்க மறுத்த முதலாளிகள்; பயணச்சீட்டு விற்க மறுத்த கப்பல், ரயில், விமான முகவர்கள்; அவமானப்படுத்திய பணியாளர்கள் - இவர் களைப் புறங்கண்டே ஏ.கே.செட்டியார் தம் பணியை மேற் கொள்ள வேண்டியிருந்தது.

படங்களைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பெரிய விடுதிகளிலேயே ஏ.கே.செட்டியார் முதலில் தங்குவார். காரியம் முடிந்ததும் மலிவான விடுதிக்கு இடம்மாறிவிடுவார். குறைந்த நிதி ஆதாரத்தைக் கொண்டு காந்தி படத்தை உருவாக்கிய ஏ.கே.செட்டியார், செலவினங்களில் கறாரான சிக்கனத்தையும் நேர்மையையும் கடைப்பிடித்திருக்கிறார். செலவழித்த ஒவ்வொரு காசுக்கும் அன்றன்றே கணக்கு எழுதியிருக்கிறார். ஹாலிவுட்டில் படத்தைத் தயாரித்து, உலகப் பிரமுகர்களுக்கு அரங்கேற்றக் காட்சியைத் திரையிட்டுவிட்டு, நியூயார்க் புறப்படு முன்னர் வாஷிங்டன் விமான நிலையத்தில் படுத்துறங்கியிருக்கிறார்!

அனைத்துலகுக்கும் காந்தி

23 ஆகஸ்ட் 1940-ல் வெளியிடப்பட்ட காந்தி ஆவணப் படம் பெரும் வெற்றிபெற்றது. இந்தியா விடுதலை பெற்ற இரவு புது டெல்லியின் கன்னாட் பிளேஸில் உள்ள ரீகல் அரங்கில் படத்தைத் திரையிட ஏ.கே.செட்டியார் ஏற்பாடு செய்தார். அரசியல் நிர்ணய அவையின் தலைவர் இராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் பார்வையாளர் வரிசையில் அமர்ந்தனர். இந்தப் படத்தை அனைத்துலகுக்கும் எடுத்துச்செல்ல விழைந்திருக்கிறார் ஏ.கே.செட்டியார்.

10 பிப்ரவரி 1953-ல் ஆங்கிலத்தில் திரையிடப்பட்ட (Mahatma Gandhi: Twentieth Century Prophet) படத்தின் முதல் காட்சி வாஷிங்டனில் அரங்கேறியது. அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் தொடங்கி, ஐ.நா.வின் தலைவரும் உலக நாடுகளின் தூதுவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

புகைப்படம் எடுப்பதிலும் திரைக் கலையிலும் தேர்ச்சிபெற்று, காந்தி ஆவணப்படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்த ஏ.கே.செட்டியார், தம் வாழ்நாளில் வேறொரு படத்தையும் எடுக்கவில்லை!

ஆ.இரா.வேங்கடாசலபதி தொகுத்து, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ஏ.கே.செட்டியாரின் ‘அண்ணலின் அடிச்சுவட்டில்’ நூல் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்.

ஆ.இரா.வேங்கடாசலபதி, வரலாற்று ஆய்வாளர், தொடர்புக்கு: chalapathy@mids.ac.in

செப்டம்பர் 10 - ஏ.கே.செட்டியார் நினைவு நாள்

காந்தியின் முதல் ஆவணப்படத்தை எடுத்த தமிழர்

Keywords
ஏ.கே.செட்டியார்மறக்கப்பட்ட ஒரு சாதனையாளர்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தமிழில் ஏன் பயண இலக்கியம் இல்லை என்று நீண்ட காலமாக யோசித்து வருகிறேன்.  பயணம் செய்பவர்களுக்கு எழுதத் தெரியவில்லை.  எழுதத் தெரிந்தவர்களுக்கு பயணம் செய்வதற்கான பொருள் வசதி இல்லை. எனக்குப் பிடித்தமான தமிழ் எழுத்தாளர் ஒருவர் அமெரிக்கா சென்றார்.  மூன்று மாதம் தங்கினார் என்றதும் ஆர்வத்துடன் அவரது அனுபவங்களைக் கேட்கத் தயாரானேன்.  ஆனால் அவர் சொன்னது எனக்கு மிகுந்த மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது. எழுத்தாளர் ஒரு நண்பர் வீட்டில் தங்குவார். அந்த நண்பரும் அவர் மனைவியும் திங்கட் கிழமையிலிருந்து வெள்ளி வரை அலுவலகம் சென்று விடுவார்கள்.  அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப நள்ளிரவு ஆகி விடும்.  எழுத்தாளருக்கு அந்த ஒரு வாரமும் வீட்டுச் சிறை. அதிகபட்சம், அந்த வீதியில் நடக்கலாம். நமக்கு வரைபடத்தை வைத்துக்கொண்டு ஒரு இடத்தைக் கண்டு பிடித்துப் பழக்கமில்லை. யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொண்டு செல்வதே நமக்குத் தெரிந்த வழி.  நியூயார்க் போன்ற ஒரு நகரத்தில் அது முடியுமா அல்லது ஒரு டாக்ஸி பிடித்து வெளியில் சென்று ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் அல்லது ரயிலிலோ பஸ்ஸிலோ இன்னொரு ஊருக்குப் போய் வரலாம். ஆனால் அதற்கெல்லாம் கை நிறைய காசு வேண்டும். நம்மூர் பணத்தில் லட்ச ரூபாய் எடுத்துக் கொண்டு போனாலும் டாலராக மாற்றினால் சில தினங்களே வரும். ஒரு தமிழ் எழுத்தாளனால் வேறு என்ன செய்ய முடியும்?  மூன்று மாதங்கள் வீட்டுச் சிறையில் இருந்த அனுபவத்தை எப்படி அவர் பயணக் கட்டுரையாக எழுதுவார்?

வேறு சில நண்பர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் போகாத தேசமே இருக்காது.  ஆனால் எந்த தேசத்தைப் பற்றியும் எதுவும் தெரியாது. காரணம், விமானப் பயணம்; தங்குவதற்கு நட்சத்திர ஓட்டல். இப்படிச் செய்தால் எப்படி ஒரு தேசத்தை அறிந்து கொள்ள முடியும்?

சமீபத்தில் Thor Heyerdahl (1914-2002) எழுதிய Kon-Tiki என்ற பயண நூலைப் படிக்க நேர்ந்தது. நார்வே நாட்டைச் சேர்ந்த இவர் சில காலம் உலகின் மிகப் பெரிய சமுத்திரமான பசிஃபிக் பெருங்கடலில் உள்ள பாலினேஷிய தீவுகளில் (ஆயி ரத்துக்கும் மேற்பட்ட தீவுகள்) ஒன்றான தஹித்தியில் இருந்திருக்கிறார். அப்போது அந்த மக்களின் கலாச்சாரத்தை மானுடவியல் ரீதியாக ஆராய்ந்தார்.  அந்த ஆராய்ச்சியில், அமெரிக்காவை கொலம்பஸ் கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே தென்னமெரிக்க ஆதிகுடிகள் பசிஃபிக் பெருங்கடலைத் தாண்டி வந்திருக்கிறார்கள் என்றும், தஹித்தி போன்ற பாலினேஷிய தீவுகளில் வாழும் மக்கள் பெரூவிலிருந்து வந்து குடியேறியவர்களே என்றும் கண்டுபிடித்து இருக்கிறார். அவர் சொன்னதை யாரும் நம்பவில்லை.

உடனே பெரூவிலிருந்து தஹித்திக்கு வந்த காலகட்டத்தில் அவர்கள் எப்படி வந்திருப்பார்கள் என்பதை உலகுக்கு நிகழ்த்திக் காட்ட விரும்பினார் தோர் ஹயர்தால்.  பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தஹிதிக்கு வந்த பெரூவிய மாலுமிகள் கட்டியது போலவே ஒரு சிறிய கட்டுமரத்தைக் கட்டினார்.  ஒன்பது பெரிய மரக்கட்டைகள். கட்டையின் நீளம் 45 அடி; அகலம் 2 அடி. ஆக, 45 அடி நீளமும், 18 அடி அகலமும் கொண்ட அந்தக் கட்டுமரத்தை ஒரு ஆணிகூடப் பயன்படுத்தாமல் கயிற்றாலேயே கட்டினார்.  தளத்தில் மூங்கில் கம்புகளைக் கட்டி அதில் பாயை விரித்தார். கட்டுமரத்தின் மத்தியில் மூங்கிலாலேயே ஒரு சிறிய அறை ஒன்றை அமைத்து வாழை இலைகளால் கூரை செய்து கொண்டார். அறையின் அகலம் 8 அடி; உயரம் 14 அடி. அந்தக் கட்டுமரத்துக்கு ‘கோன்-டிகி’ என்று பெயரிட்டு பெரூவிலிருந்து தஹித்திக்கு தன்னுடன் ஐந்து சகாக்களையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.  திமிங்கலங்களால் ‘கோன்-டிகி’ உருத் தெரியாமல் போய்விடும் என்றும் இன்னும் பலவாறாகவும் அவரை ஏளனம் செய்தார்கள் பலர்.  ஆனால் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் பயணத்தைத் தொடங்கினார் தோர் ஹயர்தால்.

மொத்தம் 102 நாட்கள். 102-ஆவது நாளில் ஒரு புயலால் கட்டுமரம் சேதமடைகிறது; ஆனால் அதிர்ஷ்டவசமாக அது ஒரு ஆளில்லாத தீவின் கடற்கரை.  அந்தத் தீவில் அவர்கள் சமைப்பதற்காகத் தீ மூட்டிய போது அங்கே மீன் பிடிக்க வந்தவர்கள் அவர்களைக் கண்டுபிடித்து தஹித்திக்கு அழைத்துச் சென்றனர்.  உடனடியாக அவர்களது பயணம் உலக அளவில் கவனிக்கப் பட்டது. அமெரிக்க ஜனாதிபதி ஹயர்தாலைக் கௌரவித்தார்.  இது நடந்தது 1947-ஆம் ஆண்டு.  அத்தனை அனுபவங்களையும் ஹயர்தால் தன்னுடைய கோன்-டிகி என்ற நூலில் எழுதியிருக்கிறார். கோன்-டிகி என்று தன்னுடைய பயணத்தை சினிமாவாகவும் எடுத்திருக்கிறார். இந்த நூலைப் பற்றியும் தோர் ஹயர்தாலைப் பற்றியும் எனக்கு ஏ.கே. செட்டியாரின் ‘ஐரோப்பா வழியாக’ என்ற நூலைப் படித்த போது தெரிய வந்தது.

ஆனால் தோர் ஹயர்தாலை விட எனக்கு ஏ.கே. செட்டியார் சிறந்த பயணியாகத் தெரிகிறார்.  ஏனென்றால், உலகெங்கும் இனவாதம் மிகக் கடுமையாக நடை முறையில் இருந்த காலகட்டத்தில் பயணம் செய்திருக்கிறார் செட்டியார்.  அவர் செல்லாத நாடே இல்லையோ என்று நினைக்கும் அளவுக்கு உலக நாடுகள் பலவற்றுக்கும் கப்பலிலும், ரயிலிலும், பஸ்ஸிலும், காரிலுமாகச் சென்றிருக்கிறார். அந்த அனுபவங்களை 18 புத்தகங்களில் விரிவாக எழுதியிருக்கிறார். எங்குமே அவர் விமானத்தில் செல்லவில்லை. கடல் தாண்டிச் செல்வதாக இருந்தால் கப்பல்; நிலவழி என்றால் ரயில். இப்போதைய விமானப் பயணத்தில் அடுத்த மனிதர்களோடு உறவாட முடியவில்லை.  ஆனால் கப்பல் பயணத்தில் ஒரே இடத்தில் பல தினங்கள் ஒன்றாக இருக்க வேண்டியிருப்பதால் பல தேசங்களைச் சேர்ந்த பலதரப்பட்ட மனிதர்களோடும் உறவாட முடிகிறது.

1930லிருந்து 1955 வரை 25 ஆண்டுகள் கப்பலிலேயே உலகம் முழுவதும் சுற்றியிருக்கும் ஒருவருக்கு எத்தகைய அனுபவங்கள் கிடைத்திருக்கும் என்பதற்கு சான்றாகத் திகழ்கின்றன ஏ.கே. செட்டியாரின் பயண நூல்கள்.  

சென்னையிலிருந்து நேபாளம் வரை ரயிலில் சென்ற அனுபவத்தை ஒரு புத்தகத்தில் விவரித்திருக்கிறார்.  கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. 70 ஆண்டுகளுக்கு முன் ரயில் பயணம் எப்படி இருந்திருக்கும்? பல இடங்களில் இரண்டு மூன்று தினங்கள் கூட ரயில் நிலையத்தில் அடுத்த ரயிலுக்காகக் காத்திருக்கிறார். சமயங்களில் சரக்குப் பெட்டியில் சரக்குகளோடு சரக்காகக் கிடந்து பயணம் செய்திருக்கிறார்.

இவ்வளவையும் அவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் உலகமே கொண்டாடி இருக்கும்.  ஆனால் தமிழில் எழுதி விட்டதால் அவருடைய 18 பயண நூல்களும் 70 ஆண்டுகளாக மறு பதிப்பு இல்லாமல் கிடக்கின்றன.  தமிழர்களின் சுரணை, உணர்வை என்னவென்று சொல்வது?

இந்தப் புத்தகங்களைப் படிக்கும்போது ஏதோ ஒரு தங்கப் புதையலைப் பார்ப்பது போல் இருக்கிறது. இந்த நூல்களில் காணக் கிடைக்கும் தகவல்களை வைத்துக் கொண்டு ஒரு பத்துப் பேர் உலகப் பயணம் மேற்கொண்டால் பல நூறு அற்புதங்களைக் கண்டு பதிவு செய்யமுடியும்.  மிக முக்கியமாக, உலகிலுள்ள பல்வேறு தேசங்களின் ஊர்களும் வெவ்வேறுபட்ட மக்களும் 60/70 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தனர்; அவர்கள் வாழ்ந்த ஊர் எப்படி இருந்தது என்பதையெல்லாம் இந்த நூல்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.  செட்டியார் ஒரு தேர்ந்த புகைப்பட நிபுணராகவும் இருந்ததால் எல்லாவற்றையும் புகைப்படமாகவும் எடுத்து தன் புத்தகங்களில் இணைத்திருக்கிறார்.

செட்டியாரின் ஐரோப்பியப் பயண நூலில் ஒரு இடம்: 1953-ஆம் ஆண்டு.  இங்கிலாந்தின் New Castle on Tyne என்ற துறைமுக நகரத்திலிருந்து நார்வேயில் உள்ள பெர்கன் என்ற துறைமுகத்துக்கு கப்பல் ஏறுகிறார் செட்டியார். (டைன் நதிக்கரையில் இருப்பதால் முன்பு அப்படி அழைக்கப்பட்ட அந்த நகரம் இப்போது வெறும் நியூகேஸில்). பெர்கனை அடைய கப்பலில் 22 மணி நேரப் பயணம்.  ஐரோப்பா முழுவதுமே சுங்க அதிகாரிகள் அவருடைய பெட்டியைத் திறந்து பார்க்கவில்லை என்று எழுதும் செட்டியார், இந்திய சுங்க அதிகாரிகளிடமும், இந்தியத் தூதராலய அதிகாரிகளிடமும் தான் மாட்டிக் கொண்ட கதைகளைக் கண்ணீர் விட்டு எழுதியிருக்கிறார். அந்த நிலை இன்னும் மோசமாகி இருக்கிறது என்பதே என்னுடைய சொந்த அனுபவம்.

பெர்கன் துறைமுகத்தில் ஜான் ஹோயம், அவர் மனைவி எல்ஸி இருவரும் செட்டியாரைச் சந்தித்துத் தம் வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர்.  இந்த ஜானும் எல்ஸியும் யார்?  1937-ஆம் ஆண்டு - அதாவது, 16 ஆண்டுகளுக்கு முன்பு - செட்டியார் அமெரிக்கா சென்றிருந்தபோது நான்கு மாணவர்களோடு சேர்ந்து 15,000 மைல்கள் (கிலோ மீட்டர் அல்ல) அமெரிக்கா முழுவதும் காரில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். அப்போது அவருடன் வந்த நான்கு மாணவர்களில் ஒருவர்தான் ஜான் ஹோயம். சுற்றுப்பயணம் செய்த காரும் ஜானுடையதுதான்.

அதற்குப் பிறகு 1939-ஆம் ஆண்டில் ஒருமுறை நார்வே வந்தபோதும் அவர் ஜானையும் எல்ஸியையும் சந்தித்திருக்கிறார். அந்தத் தம் பதியைத்தான் இப்போது 14 ஆண்டுகள் கழித்து பெர்கனில் மீண்டும் சந்திக்கிறார் செட்டியார்.  அன்று இரவு ஜானின் வீட்டில் 14 ஆண்டுக் கதையை இரவு முழுவதும் இருவரும் பேசுகிறார்கள்.  அப்போது ஜான் தங்களுடைய ஊரில் நாஜிகள் பல யூதர்களைக் குடும்பம் குடும்பமாக விஷவாயுக் கிடங்கில் உயிரோடு போட்டு எரித்தது பற்றிய கொடுங்கதைகளைச் சொல்கிறார்.  இப்போது அதெல்லாம் நமக்கு வரலாறு. ஆனால் செட்டியார் ஜானைச் சந்தித்த அந்த இரவில் அது அவர்களின் சமீபத்திய கொடுந்துயரம்.

பிறகு மறுநாள் காலை ரயில் பிடித்து அன்று மாலையே ஓஸ்லோ வந்து சேர்கிறார்.  பழைய நண்பர்களின் முகவரியைத் தொலைபேசி அட்டவணையைக் கொண்டு கண்டுபிடிக்கிறார். நண்பர்கள் என்றால் தமிழர்கள் இல்லை.  எல்லோரும் அவருடைய தேசாந்திரப் பயணத்தின்போது சினேகிதமான நார்வேக்காரர்கள்.

இப்போது தூரதேசங்களுக்குப் பயணம் செய்யும் எழுத்தாளர்கள் அந்தந்த ஊர்களில் வசிக்கும் தமிழர்களையே சந்தித்து விட்டு வந்து பயணக் கட்டுரை எழுதுகிறார்கள்.  அவர்களுக்குத் தெரிந்த தமிழ் நண்பர்கள்,  வாசகர்கள், தமிழ்ச் சங்கங்கள் என்பதைத் தவிர அந்த எழுத்தாளர்களின் கால்கள் எங்கேயும் நகர்வதில்லை.  தமிழ்ச் சங்கத்தைப் பார்ப்பதற்கா 14,000 கி.மீ. தாண்டி நியூயார்க் வரை செல்லவேண்டும்? இங்கேயே மும்பை அல்லது தில்லியில் இருக்கும் தமிழ்ச் சங்கத்துக்குச் செல்லலாமே? கடல் கடந்து சென்று அங்குள்ள தமிழ்ச் சங்கத்தில் மாட்டியிருக்கும் திருவள்ளுவர் படத்தைப் பார்த்துவிட்டு வருவது தமிழர்களுக்கே உள்ள பிரத்தியேக குணம் என்று நினைக்கிறேன்.

உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்கள் தாங்கள் வாழ்கின்ற நாட்டு மக்களோடும், அங்குள்ள கலாச்சாரத்தோடும் தங்களைத் தொடர்புபடுத்திக் கொண்டு வினையாற்றுவதில்லை.  எங்கே இருந்தாலும் தமிழ்த் தொலைக்காட்சி சேனல்கள், தமிழ் ஜனரஞ்சகப் பத்திரிகைகள், எந்திரன் சினிமா என்றே அவர்களின் வாழ்க்கை முடிந்து போகிறது.  இதற்குத் தமிழ் எழுத்தாளர்களும் விதிவிலக்காக இல்லாமல் நியூயார்க் தமிழ்ச் சங்கத்துக்குச் சென்று வந்ததையெல்லாம் பயணக் கட்டுரையாக எழுதுகிறார்கள்.

இந்தத் தமிழ்ச் சங்கக் கதையெல்லாம் ஏ.கே. செட்டியாரின் பயண நூல்களில் இல்லை. அவர் எழுதியிருக்கும் நூற்றுக் கணக்கான பயண அனுபவங்களில் அவர் ஒரே ஒரு இந்தியரைத்தான் சந்திக்கிறார். அவர் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ்.

ஒவ்வொரு நாட்டிலும் தங்கி, அந்த மக்களோடு உறவாடி, பேசிப் பழகி எழுதியதால் ஏ.கே. செட்டியாரின் பயண நூல்கள் விசேஷமான கவனத்துக்கு உரியவை ஆகின்றன. நார்வேஜியர்கள் அடிப்படையில் மிகவும் நல்லவர்கள்; அங்கே ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் உள்ள வித்தியாசம் மிகவும் குறைவு; பெரும்பாலான மக்கள் நடுத்தர வர்க்கம்; உழைப்பாளிகள்; உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள் என்று கூறும் செட்டியார், அவர் சென்றிருந்த சமயத்தில் நார்வேஜிய மக்கள் இந்தியாவுக்குச்  செய்த ஒரு பெரிய உதவி பற்றியும் குறிப்பிடுகிறார்.  நார்வேஜிய மக்கள் தங்களுக்குள் பத்து லட்சம் ரூபாய் வசூலித்து மீன் பிடிக்கும் தொழிலில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களை இந்தியாவுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.  ஆழ்கடலில் மீன் பிடிப்பதில் மிகுந்த திறமை கொண்டவர்கள் நார் வேஜியர்கள். 32 லட்சம் ஜனத்தொகை உள்ள நார்வே 36 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவுக்கு எந்தப் பிரதி பலனும் கருதாமல் செய்த உதவிக்கு இந்தியா என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளது” என்கிறார் செட்டியார்.

செட்டியார் கூறும் வேறு சில தகவல்களும் சுவாரசியம் மிகுந்தவை.  ஒன்றே கால் லட்சம் சதுரமைல் கொண்ட நார்வேயில் உள்ள ஏரிகளின் எண்ணிக்கை 2 லட்சம். உலகிலேயே அதிகமாகப் புத்தகம் படிப்பவர்கள் நார்வேஜியர்கள்.  உலகின் அற்புதங்களில் ஒன்றான த்ரோந்தியம் (Trondheim) என்ற நார்வேஜிய நகரத்துக்குச் சென்றபோது நள்ளிரவில் சூரியனைப் பார்த்தது பற்றி எழுதுகிறார். குளிர் காலத்தில் மைனஸ் பத்து செல்ஷியஸ் கொண்ட அந்த ஊரில்தான் சர்வதேசப் புகழ்பெற்ற நடிகை லிவ் வுல்மன் வாழ்ந்தார். மற்றொரு நார்வே நகரமான போடோ பற்றி ஒரு விபரம்  சொல்கிறார் செட்டியார்.  அந்த நகரில் ஜூன் 2 முதல் ஜூலை 10 வரை நள்ளிரவில் சூரியனைப் பார்க்கலாம்.  அதே போல் டிசம்பர், ஜனவரியில் சூரியனை அறவே பார்க்க முடியாது. இவ்வளவையும் 1939-இல் நேரில் பார்த்து எழுதுகிறார் செட்டியார்.

உலகப் போர்களைப் பற்றியும், அதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றியும் ஆய்வு செய்பவர்களுக்கு செட்டியாரின் நூல்கள் மிக முக்கியமான ஆவணமாக இருக்கும்.  ஐம்பதுகளின் ஐரோப்பா பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறார் செட்டியார். 1953-இல் ட்ரினிடாடிலிருந்து கப்பலில் புறப்படுகிறார்.  எட்டாவது நாள் இங்கிலாந்தின் ப்ளிமத் (Plymouth) என்ற துறைமுக நகருக்கு வந்து சேர்கிறார்.  அக்டோபர் மாதக் குளிர்.  எங்கே தங்குவது என்று புரியவில்லை.  அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அப்போது நிறப்பாகுபாடு கடுமையாக இருந்திருக்கிறது.  கறுப்பு நிறத்தவரான செட்டியாருக்கு எளிதில் தங்க இடம் கிடைப்பதில்லை.

ஒவ்வொரு முறை இங்கிலாந்து வரும் போதும் இதுதான் பெரிய பிரச்சினை என்று எழுதுகிறார்.  அப்படியானால் 1953-க்குள் எத்தனை முறை இங்கிலாந்து வந்திருப்பார் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

ப்ளிமத்திலிருந்து ரயிலில் லண்டன் வந்து எங்கே தங்குவது என்ற கவலையுடன் சாலையைக் கடப்பதற்காக பிக்காடில்லி சதுக்கத்தில் நின்று கொண்டிருக்கும்போது இந்தியரைப் போல் தோற்றமளித்த ஒருவர் செட்டியாரிடம் வந்து பேசுகிறார்.  செட்டியாரின் கையில் வைத்திருந்த பையிலிருந்த கப்பலின் அடையாளச் சீட்டில் ட்ரினிடாடின் பெயர் இருக்கிறது.  அந்த இளைஞர் அது பற்றிக் கேட்கிறார்.  பிறகு அவர் செட்டியாரோடு சிநேகமாகிறார்.  காமரான் கார்டிஸ் என்ற அவர் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த செயிண்ட்வின் சென்ட் தீவைச் சேர்ந்தவர். அவர் பெற்றோர் இந்தியாவிலிருந்து வந்து அந்தத் தீவில் குடியேறியவர்கள்.

காமரான் அவரை நிறவேற்றுமை அதிகமில்லாத கில்போர்டு வீதியிலுள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் செல்கிறார். தான் கொஞ்சம் பழுப்பு நிறம் என்பதால் தப்பியதாகவும், நீக்ரோவாக இருந்தால் (அப்போது நீக்ரோ என்ற வார்த்தைதான் பழக்கத்தில் இருந்தது) தங்கும் அறை கிடைப்பது சாத்தியமே இல்லை என்றும் எழுதுகிறார் செட்டியார்.  தினம் ஒன்றுக்கு பதினான்கரை ஷில்லிங்கில் அங்கே ஒரு அறை கிடைக்கிறது. அறைக்குள் கனப்பு அடுப்பு இல்லை. ஒரே குளிர். குளிப்பதற்கும் வெந்நீர் இல்லை.  உடைந்த நாற்காலிகள்.  ஆடுகின்ற மேஜை.  எல்லாம் விக்டோரியா மகாராணி காலத்தில் வாங்கியவை போலும் என்று கிண்டலடிக்கிறார்.  மேலும் எழுதுகிறார்:

“கீழ் வீட்டில் சமையலறை. அங்கிருந்து தான் பலகாரம் மேல் வீட்டுக்கு வர வேண்டும். அதற்குக் கிணற்றில் தண்ணீர் இறைப்பது போல் ஒரு ஏற்பாடு செய்திருந்தார்கள்.  கீழ் வீட்டில் ஒரு பெரிய மரப்பலகையில் பலகாரத்தை வைத்து உரக்கக் கத்தினார்கள். மேல் வீட்டில் சாப்பிடும் இடத்திலுள்ள வேலைக்காரப் பெண் தண்ணீர் இறைப்பது போல் கயிற்றை இழுத்தாள்.  மேலே வந்த பலகாரங்களை எடுத்துப் பரிமாறினாள். எச்சில் தட்டுகளை அதே பலகையில் வைத்துக் கீழ் வீட்டுக்கு அனுப்பினாள்.

மேலே இருந்தபடியே யார் யாருக்கு என்னென்ன பலகாரம் வேண்டும் என்று கீழே இருந்தவர்களிடம் அப்பெண் உரக்கக் கத்தினாள்.  அதுவும் தவிர அவள் கொண்டு வந்த தட்டு, கத்தி, கரண்டி, முள்கரண்டி எல்லாவற்றிலும் எண்ணெய்ப் பசை இருந்தது.  சுவையற்ற உணவுக்குப் பேர் பெற்றது இங்கிலாந்து.”

இங்கிலாந்து பற்றிய இப்படி ஒரு சித்திரத்தை நாம் வேறு எங்காவது படித்திருக்க முடியுமா?  தாமஸ் ஹார்டியின் நாவல்கள் தவிர வேறு எதுவும் எனக்கு ஞாபகம் வரவில்லை. ஆனால் ஹார்டியின் இங்கிலாந்து, செட்டியார் சித்தரிக்கும் இங்கிலாந்துக்கு 50 ஆண்டுகள் முற்பட்டவை.

செட்டியாரின் இங்கிலாந்து இரண்டாம் உலகப் போரின் விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரம் அது.  1953-இல்தான் இங்கிலாந்தில் உணவுப் பங்கீட்டு முறையை நீக்கியிருந்தார்கள். அதுவரை எல்லாம் ரேஷன்தான். ஆங்கிலேயர்கள் சாப்பிட்டபின் டிப்ஸ் கொடுக்கும் வழக்கமுடையவர்கள் என்பதால் செட்டியார் ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு டிப்ஸ் கொடுத்ததும் அதை வாங்கிய பெண் மிகவும் அதிசயித்துப் போய் பலமுறை அவருக்கு நன்றி சொன்னதைப் பதிவு செய்கிறார். கில்போர்டு தெரு ஓட்டலில் செட்டியாருக்குப் பக்கத்து அறையைச் சேர்ந்த ஒரு ஆங்கிலேயர் அன்றைய இங்கிலாந்து வாழ்க்கையைப் பற்றிக் கூறிய ஒரு பதிவு இது:

“பஞ்சாப் மாகாணத்தில் பல ஆண்டுகள் உத்தியோகத்தில் சௌகரியமாக இருந்தேன். பங்களா, மூன்று வேலைக்காரர்கள்.  இப்போது லண்டனில் ரயில் இலாகாவில் வேலை செய்கிறேன். வாரம் ஐந்தரை பவுன் சம்பளம். அதைக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியவில்லை. தினந்தோறும் இரண்டு வேளைதான் சாப்பாடு. பகலில் சிறு ரொட்டியும் தேத்தண்ணீரும்தான் ஆகாரம். மாதத்துக்கு ஒருமுறைதான் படக்காட்சிக்கு செல்ல முடியும்.  நல்ல உடை வாங்குவதற்கு ஆண்டு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து வருகிறேன். ஆங்கிலேயர் தவறு செய்து விட்டனர். இந்தியாவை விட்டு வந்திருக்கக் கூடாது. இந்தியாவை விட்டு வந்ததால் என்னைப் போல் எத்தனையோ ஆயிரக் கணக்கானவர்களுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது.”

இதைப் படிக்கும்போது எனக்குத் தோன்றியது இதுதான்: அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இப்படி இருந்த இங்கிலாந்து இன்று எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறது என்பதும், இந்தியா இந்த 60 ஆண்டுகளில் எந்த அளவுக்கு சமூக, அரசியல், பொருளாதார வாழ்வில் சீரழிந்து விட்டது என்பதும்தான்.

இதேபோல் ஒருமுறை செட்டியார் டென்மார்க்கிலிருந்து ரயிலில் ஜெர்மனி வழியாக ஹாலந்திலுள்ள ரோட்டர்டாம் நகருக்குச் செல்கிறார். எட்டு பேர் அமரக்கூடிய மிக வசதியான அந்த மூன்றாம் வகுப்புப் பெட்டியில் செட்டியாரின் சக பயணிகள் ஐந்து பேர். அதில் ஒரு டேனிஷ்கார இளம் பெண்ணும் இருக்கிறாள்.  கிராமத்தில் பிறந்து, உயர்நிலைப்பள்ளிவரை படித்தவள்.  அவளுக்குப் பல மொழிகள் தெரிந்திருக்கிறது. செட்டியாரிடம் சரளமான ஆங்கிலத்தில் அவள் தன் கதையைச் சொல்கிறாள். அவளுக்கு ஊர் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று ஆசை. உத்தியோகத்துக்குச் சென்றால் போதுமான வருமானம் கிடைக்காது.  அதனால் ஸ்விட்ஸர்லாந்தில் சூரிச் நகரில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் சமையல் வேலை செய்கிறாள். உணவும் தங்குமிடமும் இலவசம் என்பதால் சம்பளப் பணத்தை சேமித்து வைத்து இத்தாலி, ஃப்ரான்ஸ் முதலிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்கிறாள்.

இப்படி ஒரு வாழ்க்கை முறை இந்தியாவில் அந்த வேலையைச் செய்யும் ஒருவருக்கு - ஏன், அரசாங்க வேலையில் இருப்பவருக்குக் கூட - சாத்தியமாகுமா என்று யோசித்தேன்.

இப்படி சிறு சிறு உரையாடல்களின் வழியாக ஒரு தேசத்தைப் பற்றிய மனச் சித்திரத்தை உருவாக்குகிறார் செட்டியார். "நான் ஜெர்மனி சென்றிருந்தபோது அந்த நாட்டை ஒரு ஆசாரமான அக்கிரகாரம் போல் இருக்கிறது என்றும், அந்தக் காற்றிலேயே ஒருவித இறுக்கம் தெரிகிறது என்றும், திரும்பி ஃப்ரான்ஸ் வந்ததும்தான் சுதந்திரமாக சுவாசிக்க முடிந்தது என்றும் எழுதினேன். புரட்சி என்றால் கூட அதற்கும் டிக்கெட் வாங்கிக் கொண்டுதான் அதில் கலந்து கொள்வார்கள் ஜெர்மன்காரர்கள் என்பது லெனினின் புகழ்பெற்ற ஒரு வாக்கியம்".

அந்த ரயில் பயணம் பற்றிய குறிப்புகளில் மற்றொன்று இது:

“ரயில் ஹாம்பர்க்கை அடைந்தது. எங்களுடன் இருந்த ஆடவர் இறங்கி விட்டார்.  ரயில் நிலையத்தில் தேர்த் திருவிழா மாதிரி ஏராளமான கூட்டம். பிரயாணிகள் நெருக்கியடித்துக் கொண்டு ஏறினர்.  மிகக் கனமான சாமான் பெட்டிகளைப் பின்னால் உள்ள சாமான் வண்டியில் போடாமல் எங்கள் பெட்டியிலேயே வைக்க முயன்றனர்.

அவ்வளவு பெரிய கூட்டத்தைக் கண்டதும் பெண்கள் மிகவும் பயந்தவர்களாய் “தயவுசெய்து எங்கள் இடத்துக்குப் பக்கத்தில் உட்காருங்கள். ஜெர்மானியர் வருகிறார்கள்” என்றனர்.

“ஏனம்மா, ஜெர்மானியர் உங்கள் அண்டை நாட்டார்தானே? ஏன் பயப் படுகிறீர்கள்?” என்றேன்.

“உங்களுக்குத் தெரியாது.  அவர்கள் மிகவும் மிருகத்தனமாய் நடந்து கொள்வார்கள். அவர்களைக் கண்டாலே பயமும் வெறுப்பும் உண்டாகிறது” என்றாள் ஒரு பெண்.

“அவள் கூறியதில் எந்தத் தவறும் இல்லை” என்று சொல்லும் செட்டியார், அதற்கடுத்து அந்தப் பெட்டியில் நடந்த சம்பவங்களை சுவையாக விவரிக்கிறார். பாஸ்போர்ட்டை சோதிக்க வந்த ஜெர்மன் அதிகாரிகள் 'தேங்க் யூ’ சொல்வதே ஏதோ சண்டைக்கு அறைகூவுவது போல் இருந்தது என்றும், ஜெர்மானியர்கள் ஏதோ எந்திரங்களைப் போல் இருந்தனர் என்றும் கூறும் செட்டியார்,  பிறகு தன் பெட்டியில் இருந்த ஜெர்மானியர்களை ‘ஹெயில் ஹிட்லர்’ என்று கூறி சிரிக்க வைத்ததாக எழுதுகிறார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய ஜெர்மானிய அனுபவமும் செட்டியாரின் அனுபவத்திலிருந்து சற்றும் மாறுபடாமல் இருந்தது.  மிக மோசமான நிறவெறி, நியோ நாஜிகளின் வன்முறை ஆகியவற்றை நான் ஜெர்மனியில் நேரடியாகப் பார்த்தேன்.

நாற்பதுகளில் செட்டியார் மேற்கொண்ட இலங்கைப் பயணம் அவருடைய உலகப் பயணங்களிலேயே பொக்கிஷமாகக் கருதப்பட வேண்டியதாகும். 70 ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணமும், மற்ற தமிழ்ப் பகுதிகளும், தமிழ் வாழ்க்கையும் எப்படி இருந்தன என்பது பற்றி இன்றைய ஈழத் தமிழர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. அவர்களுக்கு செட்டியாரின் இலங்கைப் பயண நூல் மிக முக்கியமான ஆவணமாகப் பயன்படும்.  பின்னாளில் சிங்கள இனத்துக்கும் தமிழ் இனத்துக்கும் ஏற்பட்ட பகைமைக்கும் முரண்பாடுகளுக்குமான காரணங்களையும் செட்டியாரின் இந்த நூலில் நம்மால் கண்டுகொள்ள முடியும்.

படங்கள் உதவி : ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

Thanks and courtesy : http://srbc2010.blogspot.in/2010/11/blog-post_11.html

தமிழில் பயண நூல்கள் ஏனில்லை என்ற கேள்வியோடு ஆரம்பித்து, ஏகே செட்டியாருடைய பயண நூல்களைத்தொகுத்து இவ்வளவு அற்புதமான விமரிசனக் கட்டுரையை எழுதியவர் பெயர் விவரம் எதுவும் தெரியவில்லை. தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தால், அதையும் இங்கே இணைத்து விடலாம்!

No comments:

Post a Comment