Sunday 10 September 2017

V.M.ELUMALAI வி .எம் .ஏழுமலை , மறக்கப்பட்ட நகைசுவை நடிகர்


V.M.ELUMALAI வி .எம் .ஏழுமலை ,
மறக்கப்பட்ட நகைசுவை நடிகர் 


V.M.ஏழுமலை-மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்.தூக்குத்தூக்கித் திரைப்படத்தைப் பார்த்தவர்கள் இவரை மறந்திருக்க முடியாது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுடன் நாடகங்களில் நடித்து வந்தவர் பின்னர் டவுன் பஸ், மிஸ்ஸியம்மா, மலைக்கள்ளன், மாயா பஜார், திகம்பர சாமியார், பொன்முடி, குணசுந்தரி, கடன் வாங்கி கல்யாணம், இல்லறமே நல்லறம், எல்லோரும் வாழ வேண்டும் போன்ற பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். உடல் மொழி, குரல் மொழி இவரிடம் பிரபலம். இவரது அங்க சேஷ்டைகள் படம் பார்ப்போரைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்யும்.இவருக்கென தனி ஸ்டைலில் இவர் நகைச்சுவையை வாரி வழங்கினார். 



சமீபத்தில் 1950-இல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸாரின் பொன்முடி பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அதில் ஏழுமலையும் ஏ.கருணாநிதியும் மச்சானும் மாப்பிள்ளையுமாவர். ஆனாலும் இருவரும் பரம எதிரிகளைப் போல் நடந்துகொள்வர். அதிலொரு காட்சியில் ஏழுமலை ஓர் மரத்தின் கீழ் தன்னுடைய ஆடுகளை விட்டுக்கொண்டு மரத்திலேறி இலை தழைகளை வெட்டிப்போட்டுக் கொண்டிருப்பார். இது தெரியாமல் கருணாநிதி தன்னுடைய ஆடு ஒன்றை மற்ற ஆடுகளுடன் மேய்ச்சலுக்கு விட்டு விடுவார். ஆடும் நன்றாக மேய்ந்து கொண்டிருக்கும். இதை மரத்தின் மேலிருந்து கவனித்துவிட்ட ஏழுமலை எலே எவண்டா அது ஆட கொண்டாந்து மேயவிட்டது என்பார். அதற்கு கருணாநிதி…. நாந்தாண்டா….. இங்க ஆட்ட மேய விடறதுக்கு எவண்டடா கேக்கணும்; அப்படித்தாண்டா மேயும் என்று விதண்டாவாதம் பண்ணிக்கொண்டிருப்பார். மரத்திலிருந்து இறங்கிய ஏழுமலை கருணாநிதியைப் பார்த்து அடி வாங்காம ஆட்ட பத்திட்டுப் போடா என்பார். 


அதற்குக் கருணாநிதி நீ அடிச்சா என்கை என்ன பூவாப்பறிச்சிக்கிட்டிருக்கும் என்பார். கோபமுற்ற ஏழுமலை கருணாநிதியை மொத்து மொதென்று மொத்திவிடுவார். மொத்த அடியையும் வாங்கிக்கொண்டு எதிர்த்து அடிக்கத் துணிவின்றி யோவ் இந்த இடம் சரியில்ல. இன்னொரு நாள் பாத்துக்கிடறேன் ஒன்ன என்று சொல்லிக்கொண்டு ஆட்டைப் பிடித்துக் கொண்டு செல்வார். இக்காட்சியை ஏழுமலையின் உடல்மொழியுடனும் குரல்மொழியுடனும் திரையில் பார்ப்பதற்கு நகைச்சுவை விருந்தளிக்கும்.

1958-இல் வெளிவந்த இல்லறமே நல்லறம் என்ற படத்தில் நாடகத் தயாரிப்பாளராக வி.எம்.ஏழுமலை வருவார்.அதில் நாடக நடிகையாக வரும் நம்பியாரின் காதலியான சரோஜாதேவியை அடைவதற்காக எம்.என்.நம்பியாரிடம் சரோஜாதேவியை வைத்து நாடகம் நடத்த வேண்டுமென்று காக்கா பிடித்துக் கொண்டு வளைய வலம் வரும் கதாபாத்திரத்தில் நகைச்சுவை விருந்தளிப்பார்.

1962-இல் வெளியான ‘எல்லோரும் வாழ வேண்டும்’ என்ற படம் இவரது பங்களிப்பில் வெளிவந்த கடைசிப் படங்களுள் ஒன்று. இவரது மறைவுக்குப் பின் வெளியானது. அதில் இவர் தலைமைக் காவலர் வேடத்தில் நடித்திருந்தார்.
தமிழுடன் சில தெலுங்குப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

No comments:

Post a Comment