கு. மா. பாலசுப்பிரமணியம்
வளம் குன்றாத கருத்துக்கு உடையவர்
இறப்பு 4 நவம்பர் 2004
கு. மா. பாலசுப்பிரமணியம் (1920 - 4 நவம்பர் 2004) திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 'கு.மா.பா' என்று திரை இசைரசிகர்களால் அழைக்கப்பட்டவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
1920 இல் திருவாரூர் அருகேயுள்ள வேளூக்குடியில் பிறந்தார். நான்கு வயதில் தந்தையை இழந்தார். இவரது தாயார் தேவாரம், திருவாசகம், பக்திப் பனுவல்களை இசைக்கக்கூடியவராக இருந்தார். தாயைப் போல பிள்ளை என்பதற்கேற்ப தாய் பாடிய பாடல்கள்தான் தனது தமிழார்வத்தையும், இசை வேட்கையையும் தூண்டியதாக கு.மா.பா பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். ஜெயலக்ஷ்மித் 1947 ல் திருமணம் செய்து, ஐந்து ஆண் மக்களையும், இரண்டு பெண் மக்களையும் பெற்றார். இவரது இளைய மகன் கு. மா. பா. கபிலன் ஆவார்.
சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் அரசியல் பணியாற்றியவர். அக்கழகத்தின் பொதுச்செயலாலராகவும் கடமையாற்றியுள்ளார். 1974 முதல் 1980 வரை தமிழக சட்டசபை மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். பாரதிதாசன் மீது தீவிர அபிமானம் கொண்டிருந்தவர்.
எழுதிய சில திரைப்படப் பாடல்கள்
யாரடீ நீ மோகினி (உத்தம புத்திரன், 1958)
சின்னையா என்றழைத்த (தங்கமலை ரகசியம் படத்துக்காக நேரிசை வெண்பாவாக இயற்றினார்)
சித்திரம் பேசுதடி
அன்பே என் ஆராவமுதே வாராய்
குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே (மரகதம் படத்தில் இடம்பெற்று நடிகர் சந்திரபாபுவின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்ற பாடல்)
அமுதைப் பொழியும் நிலவே (தங்கமலை ரகசியம்)
மாசிலா நிலவே நம் காதலை (அம்பிகாபதி)
நெஞ்சினிலே நினைவு முகம் (சித்ராங்கி)
சிரிக்கத் தெரியுமா (குழந்தைகள் கண்ட குடியரசு, 1960)
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் இயற்றினார்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கலைமாமணி" கவிஞர். கு.மா.பாலசுப்பிரமணியம் 22ஆம் ஆண்டு நினைவுநாள்:
எழுத்தாளர் கா.நாராயணன், பாடகர் திருச்சி லோகநாதன், KU.MAA, பம்பாய் சவுண்டு எஞ்சினியர் ஜெகதாப், நடன நடிகர். நம்பிராஜன் |
கட்டிலின் மீதமர்ந்து
காலைச் செய்திகளில்
கண்பதித்திருந்த நேரம்,
'கப்'பென நெஞ்சடைக்க
எப்படிச் சாய்ந்தாயோ?
கனவுபோல் நடந்த சோகம்.
சிந்தைதனில் தமிழுணர்வை
எந்தையென தந்தபெரும்
தெய்வம் நீ அன்பு மனமே!
- தந்தையை இழந்த சோகத்தில் அதே நாளில் இந்த இரங்கலை நான் எழுதி 22ஆண்டுகள் கடந்துவிட்டன.
எங்கள் தந்தை, திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர். கு.மா.பாலசுப்பிரமணியம் நினைவாக, இவர் "பொம்மை" சினிமா இதழுக்கு 1986இல் அளித்த பேட்டியின் புகைப்பட நகலை இனிய முகநூல் நண்பர்களும், பழைய தமிழ்த் திரைப்பாடல்கள் விரும்பும் நேயர்களும் படித்து அறிவதற்காக பதிவுடன் இணைத்து வெளியிடுகின்றேன். இன்று (4.11.2016) அவர் மறைந்து 22ஆவது ஆண்டுகள் நிறைவுறும் போதும், அவரைப் பற்றிய நினைவுகள் இன்னமும் நேற்று நடந்ததுபோன்று உள்ளது. இந்தப் பேட்டியில், "ஓர் இரவு" (1951) திரைப்படத்தில் அவர் உதவியாளராகப் பணியாற்றியபோது, ஆர்.சுதர்சனம் இசைக்கு முதன்முதலாக "பெண்ணாகப் பிறந்தாலே வாழ்வில் எந்நாளும் துயர்தானே..." பாடல் எழுதும் வாய்ப்பு பெற்றது குறித்து சொல்லியிருப்பார். இதே படத்தில் நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமி பாடிய "என்ன உலகமடா? ஏழைக்கு இது நரகமடா..." மற்றும் பிரபல கர்நாடக இசைப்பாடகி எம்.எல்.வசந்தகுமாரி பாடிய "ஓ.. ஐயா சாமி.. ஆவோஜி சாமி..." பாடலும் இவர் எழுதியதே என்பதை இந்தப் பேட்டியில் தெரிவித்திருப்பார். ஆனால், இவருடைய மானசீக குருவான கே.பி.காமாட்சி எழுதியதாக அவர் பெயரில் இவ்விரு பாடல்களும் அன்று அவரின் பிரபலம் மற்றும் வணிகம் கருதி வெளியிடப்பட்டது என்பார்கள்.
KU.MAA., பம்பாய் சவுண்டு எஞ்சினியர் ஜெகதாப், நடிகர் டி.கே.பகவதி, நடிகர் டி.எஸ்.பாலையா, கா.நாராயணன், ஔவை டி.கே.சண்முகம் படத்தில் உள்ளனர்.(1954) |
சிங்கார வேலனே தேவா..., அமுதைப் பொழியும் நிலவே..., சித்திரம் பேசுதடி..., போன்ற சில நூறு பிரபல பாடல்களை எழுதியதன் மூலம் இன்றும் காலத்தை வென்று பழைய பாடல்கள் விரும்புவோரின் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் கவிஞரின் புகழ் என்றென்றும் வாழவேண்டுமென்ற விருப்பத்துடன் அப்பாவைப் பற்றிய நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
ஔவை டி.கே.சண்முகம், டி.கே.பகவதி, டி.எஸ்.பாலையா, சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், டி.ஜி.லிங்கப்பா, கவிஞர்.வாலி முதலான கலைஞர்களுடன் இவர் இருக்கும் படங்களையும் இணைத்துள்ளேன். உங்களின் கருத்துக்களை இதன் மூலம் வரவேற்கின்றேன். இந்தப் பேட்டியின் போட்டோ நகலை எனக்கு அனுப்பிய நண்பர் கவிஞர். பொன் செல்லமுத்து அவர்களுக்கு என் நன்றி.
அன்புடன்,
கு.மா.பா.திருநாவுக்கரசு
No comments:
Post a Comment