Thursday 28 January 2021

SANDAL WOOD VEERAPPAN CAPTURED AND KILLED 2004 OCTOBER 18

 


SANDAL WOOD VEERAPPAN 

CAPTURED AND KILLED 2004 OCTOBER 18

*குண்டு வெடித்தது!*


 சேலத்தின் புறநகர் பகுதி மாமாங்கம். இங்கே மத்திய அரசுக்குச் சொந்தமான “பர்ன் அன்ட் ஸ்டேண்டர்டு நிறுவனத்தின் சுரங்கம் உள்ளது. இந்நிறுவனத்தின் ஆய்வு மாளிகை பொதுமக்கள் போக முடியாத பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருக்கிறது. எப்போதும் அமைதியானச் சூழலில் இருக்கும் இந்த ஆய்வு மாளிகை 12.10.2004 மதியம் பரபரப்புடன் காணப்பட்டது. மதியம் இரண்டு மணிக்குத் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையின் தொழில் நுட்ப அணியினர் அங்கு வந்தனர். கூட்ட அறையில் ஒட்டுக் கேட்புக் கருவிகளைப் பொருத்தினர். பக்கத்து அறையில் பதுங்கி, கூட்ட அறையில் நடக்கும் உரையாடலைப் பதிவு செய்யக் காத்திருந்தனர். 

மூன்று மணிக்கு இன்னொரு படைப்பிரிவு வந்தது. கூடுதல் டி.ஜி.பி.யும் STF இன் தலைவருமான விஜயகுமார் IPS அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது. கூட்டம் நடக்கும் அறையில் விஜயகுமாருக்குப் பிடித்த லெமன் கிராஸ் ரூம் ஸ்பிரே அடிக்கப்பட்டது. 

பர்ன் அன்ட் ஸ்டேண்டர்டு ஓய்வு மாளிகை. மாலை நான்கு மணி. 

விஜயகுமார், அதிரடிப்படை எஸ்.பி-1  

செந்தாமரைக்கண்ணன், எஸ்.பி-2 

சண்முகவேல் 

மூவரும் தனித்தனி வண்டிகளில் வந்திறங்கினர். 

செந்தாமரைக்கண்ணனுடன் மிஸ்டர் எக்ஸ் என்று சொல்லப்படும் ஒருவரும் இருந்தார். 

எல்லோரும் கூட்ட அறைக்குள் சென்றனர். அடுத்த சில மணித் துளிகளில் ஹெல்மெட் அணிந்த இருவர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். தலையிலிருந்த ஹெல்மெட்டைக் கழட்டாமலே கூட்ட அறைக்குள் சென்றனர். 

விஜயகுமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் எழுந்து நின்று அந்த இருவரையும் கை குலுக்கி வரவேற்றனர். ஒருவர் கொளத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் துரைப்பாண்டியன். இன்னொருவர் வீரப்பனுக்கு உறவினர். துரைப் பாண்டியன் மீது பற்றும், மரியாதையும் கொண்டவர். அந்த நட்புக்காக வீரப்பனைக் காட்டிக் கொடுத்த M-1 என்ற குறியீட்டைக் கொண்ட போலீஸ் உளவாளி. M-1 பேசத் தொடங்கினார். 

“காட்டு ராஜா நாளைக்குத் தோழரைக் கூட்டிட்டு வரச் சொல்லியிருக்கிறார். தவறினால், நாளா நாளைக்கு நாங்க சந்திப்போம்”. 

“வெரிகுட். உன்னுடைய திட்டம் என்ன...?” என்ற விஜயகுமார், துரைப்பாண்டியன்  பக்கம் திரும்பினார். தனது திட்டத்தை நான்கே வரியில் சொல்லி முடிக்கிறார் துரைப்பாண்டியன். “வேண்டாம் நீயும், பாண்டிக் கண்ணனும் பல முறை கேங்கைப் பக்கத்திலிருந்து பார்த்திருக்கீங்க. ரொம்ப நாளா குளோசா வாட்ச் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. கேங் உங்களைப் பார்க்காமல் இருக்கலாம். ஆனால், நீங்க சந்திக்கும் வீட்டுக்காரர், அந்தப் பக்கம் ஆடு, மாடு மேய்க்கப் போறவங்க. வேட்டைக்குப் போறவங்க யாராவது ஒருத்தர் உங்களைப் பார்த்திருக்கலாம். நீங்க போர நேரத்தில், “அந்த ஒருத்தர்” கேங்குடன் இருக்கலாம். அப்படி இருந்துட்டா நம்ம திட்டம் எல்லாமே அவுட் ஆயிடும். வெள்ளைத் துரை இந்தப் பகுதிக்குப் புது ஆள். அவனை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவன் மேல யாருக்கும் சந்தேகம் வராது. அவன் தான் சரியான ஆள். அவனைச் சேர்த்தால் மட்டுமே இந்த ஆப்ரேஷன் சக்சஸ் ஆகும்” என்கிறார். 

“சாரி சார்... துரைப்பாண்டியன், பாண்டிக்கண்ணன் இந்த ரெண்டு பேரில் ஒருத்தரைத் தான் காட்டுராஜாவிடம் கூட்டிட்டுப் போவேன். வேறு யார் வந்தாலும் நான் இந்த வேலைக்குப் போக மாட்டேன்” என்றார் M-1. 

விஜயகுமார்-துரைப்பாண்டியன் இருவருக்குமிடையே காரசாரமான விவாதம் தொடங்கியது. அது முடிய அரை மணி நேரமானது. வேறு எந்த இடமாக இருந்தாலும், ஏ.டி.ஜி.பி. என்ற உயரிய பொறுப்பில் இருப்பவருடன் ஒரு எஸ்.ஐ. இப்படி வாதம் செய்திருக்க முடியாது. செந்தாமரைக் கண்ணன், சண்முகவேல் இருவருமே துரைப்பாண்டியன் திட்டமே சரியானது. அதைச் செயல் படுத்தினால் மட்டுமே A1(வீரப்பன்) கதை முடிவுக்கு வரும் என்றனர். வேண்டா வெறுப்பாக விஜயகுமாரும் அதை ஏற்கிறார். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் எஸ்.பி.அசோக்குமார் தொடங்கிய ஆப்ரேஷன் ரூட்ஸ் (வேர்கள்) நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுக்கிறார். “14 ஆம் தேதி மாலை சந்திக்கலாம்” வீரப்பனிடமிருந்து அழைப்பு வந்தது. M-1 மற்றும் மிஸ்டர் எக்ஸ் என்பவரும் வீரப்பனைச் சந்தித்தனர். “17 ஆம் தேதி ஒரு தோழர் வருவார். அவர் உங்களுக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பார். என்னை கியூ பிராஞ்சு போலீஸ் தேடிக்கிட்டு இருக்காங்க.  நாளை பெரியகுளம் பகுதிக்குப் போகிறேன். அங்குள்ள தோழர்களை கூட்டிக்கிட்டு 20 ஆம் தேதி இங்கே வந்திருவேன். பிறகு, நாம எல்லோரும் கேரளா காட்டுப்பக்கம் போயிடலாம்.” என்று மிஸ்டர் எக்ஸ் அடுத்தடுத்த திட்டங்கள் பற்றி வீரப்பனிடம் விவரிக்கிறார். வீரப்பன் தனக்குத் தேவையான புதிய ஆட்களும், ஆயுதங்களும் வருகிறது என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார். 

17ஆம் தேதி மாலை ஆறு மணி, M-1 பெண்ணாகரம் பி.டி.ஓ அலுவலகப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார். அவருடன் பாண்டிக்கண்ணன் என்ற அதிரடிப்படை உளவுப் பிரிவு காவலரும் இருக்கிறார். அவர் கையில் ஒட்டுப் போட்டுத் தைக்கப்பட்ட ஒரு துணிப்பை. அதில், தனித் தனியாகப் பிரிக்கப்பட்ட ஐந்து கையெறி குண்டுகள் (Grenade) இருந்தன. இருவரும் தாசம்பட்டி போகும் சாலையில் நடந்தனர். சின்ன தும்கல் ஊரைக் கடந்தனர். அடுத்துள்ள துரிஞ்சி மரத்துப் பிரிவுக்கு சென்றனர். அங்கிருந்து மேற்கே திரும்பி கொடமாங்குளத்துப் பள்ளத்துக்குச் செல்லும் ஒத்தையடிப் பாதையில் நடந்தனர்.  இரவு எட்டு மணிக்கு சின்னாற்று காட்டை ஒட்டியிருந்த தங்கான் வீட்டை அடைந்தனர். 

M-1 ஐப் பார்த்த அந்த வீட்டுப் பெண் கும்பிட்டார். “அரை மணி நேரத்துக்கு முன்னமே வந்துட்டாங்க. அந்தப் பள்ளத்தாண்ட இருக்காங்க. உங்களை வரச் சொன்னாங்க...” என்றார். வீட்டின் முன் எரிந்து கொண்டிருந்த மண்ணெண்ணெய் விளக்கை எடுத்து வீட்டினுள் வைத்தார். வீட்டுக்கு மேற்கிலிருந்த சின்னாற்று காட்டுக்குள் சென்ற M-1, “அண்ணா அண்ணா...” என்கிறார். சத்தம் கேட்டு சந்திரகவுடா முதலில் வருகிறார். அடுத்து, சேதுமணி, கோவிந்தன், வீரப்பன் என நால்வரும் வந்தனர். தங்கான் வீட்டு அடுப்பில் வீரப்பனுக்குப் பிடித்த நாட்டுக் கோழி இறைச்சி வெந்து கொண்டிருந்தது. வீரப்பன் உள்ளிட்ட ஐந்து பேரும் வீட்டுக்கு வருகின்றனர். கட்டிலில் உட்கார்ந்திருந்த பாண்டிக் கண்ணனை “இவர் தான் அண்ணன் அனுப்பிய தோழர்..” என M-1 அறிமுகம் செய்கிறார். வீரப்பனும், பாண்டிக் கண்ணனும் கை குலுக்கினர். பிறகு கோவிந்தன் வரவேற்றார். M-1 வாங்கிப் போயிருந்த அல்சர் மாத்திரையைச் சந்திரகவுடாவிடம் கொடுக்கிறார். பீடிக்கட்டை சேதுமணியிடம் கொடுக்கிறார். வீட்டுக்குப் பின்பக்கம் புகைக்கப் போன சேதுமணி, அங்கிருந்தபடியே யாராவது வருகிறார்களா...? என்ற கண்காணிப்பை மேற்கொள்கிறார். பாண்டிக்கண்ணன், தான் வந்துள்ள நோக்கத்தைச் சொல்கிறார். “சாப்பிட்ட பின்னால காட்டுக்குள்ளார போயிறலாம்...” என்றார் சேத்துக்குழி. “பத்து நிமிஷ வேலை தான் தோழர், இங்கேயே சொல்லிக் குடுத்திட்டு நான் ராத்திரியே கிளம்பணும். அப்பத்தான் வெள்ளனா மதுரைக்குப் போகமுடியும்...” என்கிறார் பாண்டிக்கண்ணன். 

பாலில்லாத தேநீர் வந்தது. எல்லோரும் குடித்தனர்.  “சரி, இங்கேயே பார்த்திருவோம் வாங்க...” என்ற வீரப்பன் அந்தக் கூரை வீட்டினுள் செல்கிறார். பாண்டிக்கண்ணன், கோவிந்தன் இருவரும் அவரைப் பின் தொடர்ந்தனர். வீட்டின் நடுவே மண்ணெண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. பாண்டிக்கண்ணன் அதை எடுத்து ஓரமாக வைக்கிறார். இடுப்பில் மாட்டியிருந்த டார்ச் லைட்டை எடுத்த கோவிந்தன் அதை எரிய விட்டார். கீழே உட்கார்ந்த பாண்டிக்கண்ணன் பையில் இருந்து பிரித்துப் போட்ட கையெறி குண்டுகளின் உதிரிப் பாகங்களை எடுக்கிறார். பாடி, டைனமெட், ஜெலட்டின், லாக், லிவர், சேப்டி பின், பியூஸ், சேப்டி ரிங், ஸ்ட்ரிக்கர், ஸ்ட்ரிக்கர் ஸ்பிரிங் என ஒவ்வொரு பாகமாக அதன் பெயரைச் சொல்லி இணைக்கிறார். வீரப்பன், கோவிந்தன் இருவரும் அதை வியப்புடன் பார்த்தனர். இரண்டு நிமிடத்தில் குண்டு தயாரானது. அவர் சொன்னபடியே செய்கிறார் வீரப்பன். இரண்டாவது குண்டும் தயாரானது. அடுத்து கோவிந்தனிடம் “நீங்க ஒன்றை போட்டுப் பாருங்க... தோழர்” என்கிறார் பாண்டிக்கண்ணன். கோவிந்தன் வெளியிலிருந்த சந்திரகவுடாவைக் கூப்பிட்டார். டார்ச் லைட்டை அவரிடம் கொடுத்தார். புன்சிரிப்புடன் ஒவ்வொரு பாகமாக இணைக்கிறார். மூன்றாம் குண்டு தயார். வீரப்பன் இதையெல்லாம் கூர்ந்து கவனிக்கிறார். “சேதுவையும் கூப்பிடு அவனும் ஒன்னை செய்யட்டும்...” என்கிறார் வீரப்பன். சேதுமணியும் வருகிறார். அடுத்து சந்திரகவுடா. இப்போது ஆளுக்கு ஒரு கையெறி குண்டைத் தயாரித்து முடித்திருந்தனர். பாண்டிக் கண்ணனைச் சுற்றியிருந்த நால்வருமே அவர் செய்வதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். “இப்போ நீங்களே இதைத் தனித்தனியா கழட்டிக்கலாம். அதுக்கு இந்த லிவரைக் கீழே தள்ளணும். இனி தூக்கிப் போட்டாலும் குண்டு வெடிக்காது. நீங்க பாதுகாப்பா எவ்வளவு தூரம் வேணுன்னாலும் எடுத்துக்கிட்டுப் போகலாம்”. என்றவர், அடுத்தக் குண்டை வீரப்பன் கையில் வைக்கிறார். குண்டின் லிவரைக் கீழே தள்ளச் சொல்கிறார். வீரப்பன் லிவரைத் தொட்ட நேரத்தில் 180 டெசிபில் சத்தத்தில் அந்த குண்டு வெடித்தது. 

அங்கிருந்த ஐந்து பேரின் மூக்கு, வாய், கண், காது என அத்தனை துவாரங்களிலும் நைட்ரேட் புகை ஏறியது. தும்மல் வந்தது. கண் கிறுகிறுத்தது.  பார்வை போனது. காதுகளில் கிர்... என்ற சத்தம் மட்டுமே கேட்டது. வட்டம் போட்டு உட்கார்ந்திருந்த வீரப்பன், சேதுமணி, கோவிந்தன், பாண்டிக்கண்ணன் உள்ளிட்ட நால்வரும் நினைவிழந்து விழுந்தனர். நின்ற நிலையில் டார்ச் லைட்டைக் கையில் வைத்திருந்த சந்திரகவுடா வீட்டை விட்டு வெளியே போக முயற்சிக்கிறார். முடியவில்லை, இரண்டு நொடியில் அவரும் மயங்கி விழுகிறார். கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. வீடு முழுவதும் புகையால் மூடியிருந்தது. 

வீட்டு உரிமையாளர் தங்கான், அவருடைய மனைவி, மகன் முருகேசன் மூவரும் உண்மையிலயே பதட்டமடைந்தனர். M-1 மட்டும் பதட்டமடைந்தது போல நடித்தார். என்ன நடந்தது...?, என்ன செய்வது...? ஒருவருக்குமே வழி தெரியவில்லை. வீட்டுக்குப் பக்கத்து வயலின் பொலி மீது ஏறி நின்றனர். வடக்குப் பக்கமிருந்த பாப்பான் மெட்டு கரட்டில் ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் எட்டு அதிரடிப்படை வீரர்கள் காத்திருந்தனர். குண்டு வெடித்த சத்தம் கேட்டதும் அந்த வீட்டை நோக்கி ஓடி வந்தனர். நின்று கொண்டிருந்த நால்வரையும் வளைத்துப் பிடித்தனர். “இங்கே நடந்த எதுவும் வெளியே தெரியக் கூடாது. உங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. விஷயம் வெளியே தெரிஞ்சா அட்ரஸ் இல்லாம போயிருவீங்க...” என எச்சரித்தனர். நால்வரையும், தனித்தனியே சிறை வைத்தனர். பத்து நிமிடங்கள் போனது. வீட்டைச் சூழ்ந்திருந்த புகை மூட்டம் கலைந்தது. மாஸ்க் அணிந்த நால்வர் உள்ளே சென்றனர். மயங்கிக் கிடந்த ஐந்து பேரையும் வெளியே கொண்டு வந்து போட்டனர். வீரப்பன் உள்ளிட்ட நால்வரின் கைகளைப் பின்புறமாகக் கட்டினர். ஒருவர் மட்டும் மீண்டும் பாப்பான் மெட்டு கரட்டுக்குச் செல்கிறார். அணைத்திருந்த வாக்கிக்கு உயிர் கொடுக்கிறார். 

“ஆப்ரேஷன் சக்சஸ்” என்கிறார். கோடுபட்டி பக்கமிருந்து வேன் வந்தது. பெரிய தும்கல் ஏரிக்கரை பஸ் ஸ்டாப்பில் நின்றது. செந்தாமரைக் கண்ணன், விஜயகுமார் இருவரும் இறங்கினர். சீருடை இல்லாத இரு வீரர்கள் வரவேற்றனர்.  ஊஞ்ச மரங்கள் நிறைந்த வழியில் நால்வரும் கால் மணிநேரம் நடந்தனர். மயங்கிக் கிடந்த வீரப்பனைப் பார்த்தனர். 17 ஆண்டுகளாகத் தேடப்பட்ட வீரப்பன் பிடிபட்டு விட்டார். விஜயகுமார் இரண்டாம் முறை அதிரடிப்படைக்கு வந்த நோக்கம் நிறைவேறியது. 

54 ஆண்டுகள் பத்து மாதம் வாழ்ந்த வீரப்பன் கதை இன்றுடன் முடியப் போகிறது. மயங்கிக் கிடந்த வீரப்பனின் ஆழ் மனதில் சிறுவயது நினைவுகள் அணி வகுத்து வந்தது. கிழிந்த கோவணத்துடன் வீரப்பன் விளையாடிய செங்கப்பாடி கிராமம் கண் முன் வருகிறது. அங்கே சிறுவயது வீரப்பன் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார்.

பெ. சிவசுப்பிரமணியம்.




*வீரப்பனின் வரலாறு தொடங்குகிறது.*

*1. வீரப்பன் ஊரும், குடும்பமும்!*

1920 ஆம் ஆண்டு, அன்றைய சென்னை மாநிலம் சாம்பள்ளி என்ற ஊருக்கருகில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட ஆங்கில அரசு முடிவு செய்தது. காவேரிபுரம், நாயம்பாடி, கோட்டையூர் என 66 ஊர்கள் அணைக்குள் மூழ்கியது. அப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. அந்த ஊர்களில் வாழ்ந்த மக்களை வெளியேறச் சொல்லி அரசு உத்தரவிட்டது. காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் சொந்த நிலம், வீடு, வாசல் என வாழ்ந்த மக்கள் எல்லோரும் அகதிகளாயினர். கையில் எடுக்க முடிந்ததை எடுத்துக் கொண்டு வாழ்விடங்களை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறினர். காட்டுப் பகுதியிலிருந்த சமமான நிலப் பரப்பில் குடியேறினர். அணைக்குள் மூழ்கிய ஊர்களின் பெயரையே புதிய ஊருக்கும் சூட்டினர். 

கருங்கல்லூர் பகுதியிலிருந்து புறப்பட்ட ஒரு பிரிவினர் ஒகேனக்கல் செல்லும் காட்டு வழியில் நடந்தனர். கோட்டையூருக்கு வடக்கிலிருந்த சமமான நிலப்பரப்பில் வீடுகளை அமைத்தனர். அவ்வூருக்கு ஆத்தூர் என்று பெயரிட்டனர். 

இன்னொரு குழுவினர், எறக்கியம் பள்ளத்தின் கரையோரத்தில் குடிசைகளை அமைத்தனர். அந்த ஊருக்கு செங்கப்பாடி என்று பெயரிட்டனர். 

1930 ஆம் ஆண்டுகளில் நிலத்தைச் சமன் செய்து விவசாயம் செய்யப் போதிய கருவிகள் இல்லை. அதனால், கல்லும், பாறைகளும் மிகுந்த அந்த நிலத்தில் கொத்துக் காட்டு விவசாயம் செய்தனர். விவசாயத்துடன், வேட்டையாடுதல், மீன் பிடித்தல், மரம் வெட்டுதல் போன்ற பகுதி நேர வேலைகளிலும் ஈடுபட்டனர். 

தமிழகம்-கர்நாடகம் எனப் பிரிக்கப்படாத சென்னை மாநிலத்தில் வாழ்ந்த அம்மக்கள் கோவை மாவட்டம், கொள்ளேகால் வட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 

1956 நவம்பர் முதல் மொழிவாரி மாநிலங்கள் உருவானது. காவிரி மற்றும் பாலாற்றின் அக்கரையிலிருந்த நிலப்பகுதி கர்நாடக மாநிலமானது. இக்கரையில் இருந்த நிலம் தமிழகத்தில் சேர்ந்தது. செங்கப்பாடி கிராமம் 

“எங்க ஊர் புளியம்பட்டி. மேட்டூர் அணை கட்டுனப்போ ஊரெல்லாம் தண்ணிக்குள்ளே போயிட்டுது. அதனால, எங்க தாத்தா, அப்பாவெல்லாம் இந்த ஊருக்கு குடி வந்தாங்க. எங்க அப்பா பேரு முனியக்கவுண்டர். அம்மா பேரு பொன்னுத்தாயி. நாங்க ரெண்டு பேர் அண்ணன் தம்பிகள். அப்பா குடுத்த சொத்து ஆளுக்கு நாலு ஏக்கர் பூமி. அதுவும் தண்ணி வசதியில்லை. மேட்டுக் காடு தான். சோளம், கம்பு, ராகின்னு மானாவாரி விவசாயம் செய்வோம்.” என்கிறார் வீரப்பனின் சித்தப்பா பொன்னுசாமி. 

முனியக் கவுண்டருக்கு கூசன் என்கிற முனுசாமி, கீரியான் என்கிற பொன்னுசாமி என இரு மகன்கள். முதல் மகன் முனுசாமியின் மனைவி பெயரும் பொன்னுத்தாயி, இத்தம்பதிக்கு மாதையன், வீரப்பன், முனியம்மாள், அர்ஜுனன், மாரியம்மாள் என ஐந்து குழந்தைகள். 

இத் தொடரின் நாயகனாக வரும் வீரப்பன் 1950 ஆம் ஆண்டு, ஜனவரி 18 இல் பிறந்தவர். முனுசாமியின் நான்கு ஏக்கர் நிலத்தில் விளைந்த தானியங்கள் ஏழு பேர் கொண்ட குடும்பத்தின் உணவுத் தேவைக்குப் போதவில்லை. அதனால், காட்டில் வேட்டைக்குச் சென்று தான் கஞ்சி குடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார் முனுசாமி. ​ இந்தப் பகுதியில் உள்ள அனைவருக்குமே பட்டப்பெயர் உள்ளது. 

பூர்வீகமாக வாழ்ந்த ஊரின் பெயர், குடியிருக்கும் காடு, வீடு உள்ள இடங்களின் பெயர் அல்லது அவருடைய உருவ அமைப்பைக் கொண்டே அடையாளம் சொல்லப் படுகிறார்கள். முனுசாமி யாரிடமும் கூச்சமில்லாமல் பழகக் கூடியவர். அதனால், கூசன் என்று அழைத்துள்ளனர். 

அவருடைய தம்பி பொன்னுசாமியின் மூக்கும், கண்களும் கீரியைப் போல இருக்கும். அதனால், அவரை கீரியான் என்று அடையாளப் படுத்தினர். 

வீரப்பனுக்கு பத்து வயது இருக்கும் போது தலையில் வண்டு கடி ஏற்பட்டது. இதனால், முடி முழுவதும் கொட்டி தலை மொழுமொழுவென இருந்தது. அதிலிருந்து வீரப்பனுக்கு “மொழுக்கன்” என்ற பட்டப் பெயர் வந்தது. 

வீரப்பனின் அண்ணன் பெயர் மாதையன். இந்த ஊரில் பல மாதையன் இருந்ததால், கூசனின் மகன் மாதையன் என்பதை கூச மாதையன் என்றனர். 

வீரப்பன் குடும்பத்திலிருந்த யாருக்கும் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. 

வீரப்பனின் தம்பி அர்ஜுனன் மட்டும் ஆறாம் வகுப்பு வரை படித்துள்ளார். வறுமையின் காரணமாகப் பள்ளிக்குப் போக வேண்டிய வயதில் வீரப்பன் மாடு மேய்க்கப் போனார். சிறுவனாக இருந்த நேரத்தில் அவருக்குப் போட்டுக் கொள்ளச் சட்டை, ட்ரவுசர் கூட இல்லை. தன்னுடைய சம்பாத்தியத்தில் துணி எடுத்துப் போடும் வரை கோவணமே கட்டிக் கொண்டிருந்தார். 

“அந்தக் காலத்தில் தின்பண்டம் வாங்க எங்களுக்கு வசதியில்லை. எங்கம்மா சாமை குத்திச் சோறு ஆக்குவாங்க. மிச்சமிருக்கும் தவுட்டைத் துணியில் மூட்டை கட்டி எடுத்துட்டுப் போவோம். மாடு மேய்க்கும் காட்டில் நானும், வீரப்பனும் அதைத் தின்னு தான் வாழ்ந்தோம். அப்பவே வீரப்பனுக்குப் பெரிய வேட்டைக்காரனுக்கு உள்ள குணம் இருந்தது. தனக்குச் சோறு இல்லாமப் போனாலும், பசியோடு வந்தவர்களுக்குத் தூக்குப் போசியை எடுத்துக் குடுப்பான். அந்த அளவுக்கு அடுத்தவங்களுக்கு உதவும் குணம் அவங்கிட்டே இருந்தது” என்கிறார் வீரப்பனின் வயதை ஒத்த ஐயந்துரை. 

மாவட்டத் தலைநகர் மைசூரிலிருந்து 175 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது செங்கப்பாடி. அடர்ந்த காடுகளுக்கு நடுவில் வாழ்ந்த இப்பகுதி மக்களுக்கு மருத்துவம், கல்வி என அரசின் எந்த உதவியும் கிடைக்கவில்லை. கிடைப்பதற்கு ஏற்ற சூழலும் இல்லை. அரசு என ஒன்று உள்ளதே பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. பரந்த காடுகளின் உள்ளே வாழ்ந்த அம் மக்களுக்குச் சட்டங்களும், சட்ட மீறல்களும் தெரியாது. செங்கப்பாடிக்குப் பேருந்து வசதியில்லாத காலம். வெளியூர் போகவேண்டுமெனில் காவிரி ஆற்றங்கரை ஓரமாகவே தெற்கே 16 கிலோமீட்டர் நடந்து பாலாறு வரவேண்டும். 

இன்னொரு வழி, அதே காவிரி ஆற்றின் கரை ஓரத்தில் வடக்குப் பக்கமாக 12 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மாறுகொட்டாய் வரை போகலாம். அங்கிருந்து காவிரி ஆற்றைக் கடந்தால் ஒகேனக்கல். 

மூன்றாவது வழி. செங்கப்பாடியில் இருந்து நேர் மேற்கே அடர்ந்த காடுகளுக்குள் 14 கிலோமீட்டர் நடந்தால் ஒடக்காப்பள்ளம் என்ற ஊர் வரும். இந்த மூன்று இடத்திலும் இருந்தே பேருந்து மூலம் வெளியூருக்குப் போகமுடியும். 

இதில், முதல் இரண்டு வழிகளைத் தான் இன்றளவும் மக்கள் பயன் படுத்தி வருகின்றனர். செங்கப்பாடியில் இருந்து எந்தப் பக்கம் போனாலும் மூன்று மணிநேரம் காட்டுக்குள் நடந்தே ஆகவேண்டும். இந்தக் காட்டில் யானை, புலி, சிறுத்தை எனப் பல விலங்குகளும் இருந்தன.  இந்த விலங்குகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மக்களுக்குத் துப்பாக்கி தேவைப் பட்டது. இதற்காக அவர்கள் நாட்டுத் துப்பாக்கியைத் தங்களின் உடைமையாகவே பயன் படுத்தினர். 

பன்றி, மான், போன்ற விலங்குகளை வேட்டையாட துப்பாக்கிகள் பயன்பட்டது. பெண் மானைக் கொல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஆண் மான்களை வேட்டையாட ஆங்கில அரசு அனுமதித்தது. 

1972 வரை இச்சட்டம் நடைமுறையிலும் இருந்தது. மனித இனத்தின் முதல் தொழிலே வேட்டை. நீண்ட காலத்துக்குப் பிறகே வேளாண்மையை கற்றனர். விவசாயத்தை மட்டுமே நம்பி இந்த ஊரில் வாழ முடியாது என்பதால் கூசன் (எ) முனுசாமி முழுநேர “சிகாரி” வேட்டைக்காரனாக இருந்தார். பெரும்பாலான நாளில் காலை நேரம் மயிலமலைக் காட்டுக்குள் போவார். மதியம் ஒரு முசுக்கொந்தியை (கருங்குரங்கு) சுட்டு எடுத்து வந்து, மனைவி பொன்னுத்தாயிடம் கொடுப்பார். அதைக் கூடையில் போட்டு எடுத்துக் கொண்டு காவிரியின் அக்கரையில் (தருமபுரி மாவட்டம்) உள்ள சிகரல்பட்டி என்ற ஊருக்குப் போவார். அங்கே முசுக்கொந்தியை விற்பார். அந்தக் காசில் ராகி மாவும், சர்க்கரையும் வாங்கிக் கொண்டு வருவார். அதை வைத்துத் தான் வீரப்பன் குடும்பம் அடுத்த சில நாட்களுக்கான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து வந்தது. இதை வீரப்பனே என்னிடம் சொல்லியுள்ளார். 

நன்றி:- வை.கதிரவன், செய்தியாளர். சேலம் 

இடுப்பில் கோவணத்துடன், சாமை அரிசித் தவிடு தின்று வாழ்ந்த மொழுக்கன் என்கிற வீரப்பன். இந்தியாவில் யாருடைய தலைக்கும் இல்லாத விலையாக ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவிக்கும் அளவுக்கு மிகப் பெரிய குற்றவாளியாக உயர்ந்தார். ஏன்...? எப்படி...? எதனால்...? என்பதை அடுத்தடுத்தப் பகுதிகளில் காண்போம்.

பெ. சிவசுப்பிரமணியம்.



No comments:

Post a Comment