Sunday, 31 January 2021

NAGESH ,TAMIL FAMOUS COMEDIAN BORN 1933 SEPTEMBER 27 - 2009 JANUARY 31

 

NAGESH ,TAMIL FAMOUS COMEDIAN BORN 

1933 SEPTEMBER 27 - 2009 JANUARY 31




நாகேஷ் (செப்டம்பர் 27, 1933 - சனவரி 31, 2009) த‌மிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிக‌ராவார். இவர் நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.வாழ்க்கைச் சுருக்கம்

நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். கிருஷ்ணன் ராவ்-ருக்மணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை கிருஷ்ணன் ராவ் கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் உள்ள இரயில் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றிவந்தார். நாகேஷ் அவர்களை சிறுவயதில் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் கிண்டலாக அழைக்கப்பட்டார்.[1]



தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு கோவை பி. எஸ். ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்ததால் அவரது முகத்தில் தழும்புகள் உண்டானது. பின்பு நாகேஷ் கோவையில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, தனது தந்தை பணியாற்றிய இரயில்வே இலாக்காவில் நாகேசுக்கு திருப்பூர் இரயில் நிலையத்தில் எழுத்தாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததால் சிறிது காலம் திரைக்கு செல்லும் காலம் வரை அங்கு பணியாற்றிவந்தார். புது வசந்தம், சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆனந்த் பாபு இவரது மகனாவார்.


நடிப்புத் துறையில்

சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால், இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.



1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார்.


கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்.



திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.


கதாநாயகனாக

நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன்கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.


கமல்ஹாசன் உடனான நட்பு

கமல்ஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் இவர் தோன்றினார். அதற்குப் பின் பல கமல்ஹாசன் படங்களில் நாகேஷ் நடித்தார். மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். நாகேஷ் கமல்ஹாசனுடன் நடித்த கடைசிப் படம் தசாவதாரம் ஆகும்.


நாகேஷின் நினைவு தினம் இன்று. நாகேஷ் கன்னடத்தை பிறபிறப்பிடமாகக்கொண்டவர் அவருக்கு 1951 ம் ஆண்டு போட்ட அம்மையினால் முகம் முழுவதும் நிரந்தர வடுக்கள் இருக்க , அவரின் அம்மா கொடுத்த ஆறுதலினால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியவர்.


அவர் திருமணம் செய்து, அவருக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது என்ற தகவல் வந்துள்ளது. அதுவும் ஆண் குழந்தை. ஷூட்டிங்கில் இருந்த நாகேஷுக்கு தகவல் சொல்லப்பட்டது. ஆனால், அவர் போய் பார்க்க விரும்பவில்லை. ஏன் என்று எல்லோரும் ஆச்சரியப்பட, பாலசந்தர் கேட்டே விட்டாராம்.


” அம்மைத் தழும்புகளால் விகாரமா ன என் முகத்தை பார்த்து குழந்தை . பயந்துவிடாதா?’ என்று அவ்வளவு வருத்தமும், சோகமும் பட்டு சொல்லி இருக்கிறார் நாகேஷ் . உடனே பாலசந்தர், ‘டேய்… உன் அழகு உன் முகத்தில் இல்லை. நடிப்பில் இருக்கிறது. முதலில் குழந்தையை போய் பார் ’ என்று சொல்லவும், மனம் தெளிந்து பிள்ளையை பார்க்க வந்தாராம் நாகேஷ்.


அதிர்ஷ்டம் கதவை தட்டும் என்பர். ஆனால், எனக்கு சினிமா வாய்ப்பு என்ற அதிர்ஷ்டம், ஜன்னலை தட்டியது. ஆம்... ஒருநாள் காலை, ரயில்வே ஆபீசில் எதேச்சையாக தலையை திருப்பி, ஜன்னல் பக்கம் பார்த்தபோது, எனக்கு பரிச்சயமான முகம் தென்பட்டது.

'இவர், எதற்கு இங்கே வந்திருக்கிறார்...' என்று, எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன். அவர், 'நாகேஷ்... நீ இங்கே தான் இருக்கிறாயா... உன்னை பார்க்கணும்ன்னு தான் வந்தேன்...' என்றார்.

வந்தவர் பெயர், பஞ்சு. சினிமா கம்பெனிகளுடன் தொடர்புடைய மனிதர். அவரை, தி.நகரில், வெற்றிலை, பாக்கு வாங்கும், 'சுல்தான் சீவல்' கடையில், அடிக்கடி பார்ப்பேன். என் அருகே வந்த, பஞ்சு, 'நாடகங்களில் எல்லாம் அமர்க்களமா நடிக்கிற போல இருக்கு... சினிமாவுல நடிக்கறியா?' என்றார்.

'இன்று, ஏப்ரல் 1ம் தேதி கூட இல்லை. என்னை இப்படியெல்லாம் முட்டாளாக்க முடியாது!' என்றேன்.

'விளையாட்டு இல்லை; நான் சொல்றது நிஜம். எங்க முதலாளி, உன் நாடகத்தை பார்த்து, அசந்துட்டாரு! தான் எடுக்கும் படத்துல எப்படியும் உன்னை நடிக்க வைக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டார். உன்னை பார்த்து பேசிட்டு வரச்சொல்லி, என்னை அனுப்பியிருக்கார்...' என்றார், பஞ்சு.

'என்னை நடிக்க வைப்பதில் அவருக்கு ஆட்சேபனை இல்லை என்றால், நடிப்பதற்கு எனக்கும் ஆட்சேபனை ஏதுமில்லை!'

'சரி... புறப்படு!'

'பஞ்சு சார்... இந்த படத்துல நடிக்க, எனக்கு எவ்வளவு ரூபாய் கொடுப்பாங்க?'

'எவ்வளவு எதிர்பார்க்கறே?'

'ரயில்வேயில வேலை பார்க்கிறேன். மாதம் பிறந்தா, சுளையா சம்பளம் வாங்கி பழகிப் போச்சு. இங்கே எனக்கு, மாசம், 150 ரூபாய் சம்பளம்...' என்றேன்.

'ஐந்நுாறு ரூபாய் போதுமா?'

'என்ன... 500 ரூபாயா... சினிமாவுல நடிச்சா, அவ்வளவு பணம் கொடுப்பாங்களா... சார், சீக்கிரமா போய், அவரை பார்த்து பேசி முடிச்சிடலாம்... வேற யாருக்காவது அந்த வாய்ப்பை குடுத்திட போறாரு!'

'உனக்கு ஏன் வீண் சந்தேகம்... குறைந்தது, 500 ரூபாய் வாங்கிக் கொடுக்க நானாச்சு...' என்றார்.

அவரது கைகளை பிடித்து, நன்றி சொன்னேன்.


சினிமா கம்பெனியின் ஆபீசுக்கு போனோம். இரண்டு பேர், ஓர் அறையில் உட்கார்ந்திருந்தனர். அவர்களை கம்பெனி முதலாளிகள் என்று கூறி, என்னை அறிமுகப்படுத்தினார், பஞ்சு.

'திறமையான நடிகர். எங்க படத்துல ஒரு கதாபாத்திரம் இருக்கு. நீங்க தான் நடிக்கணும்...' என்றனர், இருவரும்.

'கண்டிப்பா நடிக்கிறேன். எவ்வளவு பணம் தருவீங்க... இவரு சொன்னாரு, 500 ரூபாய் தருவீங்கன்னு... நிஜமா?' என்றேன்.

'ஐநுாறு ரூபாய் தானே! சரி, கொடுத்துடலாம்...' என்று அவர்கள் சொல்ல, நான், 500 ரூபாய் கற்பனையில் மூழ்கிப் போனேன்.

'படப்பிடிப்பு தேதி முடிவானவுடன், பஞ்சு வந்து சொல்வார்; வந்து விடுங்கள்!' என்றனர்.


'கோல்டன் ஸ்டுடியோ'வில், படப்பிடிப்பு. பஞ்சு மூலம் தகவல் வந்தது. இயக்குனர், முக்தா சீனிவாசன். படத்தின் பெயர், தாமரைக்குளம். எனக்கு காமெடியன் கதாபாத்திரம்; மீர்சாகிப்பேட்டை ராஜேஸ்வரி என்பவர், எனக்கு ஜோடி. அன்று எடுக்கப்பட இருந்த காட்சியை, விளக்கினார், உதவி இயக்குனர்.

கயிற்றுக் கட்டிலில், எம்.ஆர். ராதா உட்கார்ந்திருப்பார். கையை காலை ஆட்டியபடி, அவர் வசனம் பேசிக் கொண்டிருக்கிற சமயத்தில், கட்டிலின் அடியில் ஒளிந்துகொண்டிருக்கிற நானும், ராஜேஸ்வரியும், காமெடி பண்ண வேண்டும்.

அப்போது, மிக பிரபலமானவர், எம்.ஆர். ராதா. அவரது நடிப்பை ரசிக்க, லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. அப்படிப்பட்டவர் இடம்பெறும் காட்சியில், அவர் உட்கார்ந்திருக்கிற கட்டிலின் அடியில் ஒளிந்து, நாம் காமெடி பண்ணினா, அது எப்படி எடுபடும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனால், வெளிப்படையாக சொல்ல முடியாதே; பொறுமையாக இருந்தேன். ஒத்திகை பார்த்தோம்.

திடீரென்று ஒரே பரபரப்பு. உட்கார்ந்திருந்தவர்கள் எல்லாம் எழுந்து நின்றனர். சலசலவென்ற பேச்சுகள் நின்று, நிசப்தம் நிலவியது. 'அண்ணன் வந்துட்டாரு...' என்று ஒருவர் சொல்ல, அடுத்த வினாடி, 'ம்... என்ன?' என்று, தனக்கே உரிய குரலில் கேட்டபடி, படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்தார், எம்.ஆர். ராதா.

என்னை பார்த்து, 'நீதான் புது ஆளா... பேரென்ன?' என்று கேட்டார்.

பெயரை சொன்னதும், 'ம்... ம்... நல்லா பண்ணு...' என்று சொல்லி, முதுகில் தட்டிக்கொடுத்து, வெளியில் போனார்.

உடனே, படத்தின் முதலாளிகள் இரண்டு பேரும் என்னிடம் வந்து, 'ஒத்திகையின் போது கவனிச்சோம், என்ன நடிக்கிறே நீ... ராதா அண்ணன் வர்ற, காட்சியில உன்னை நடிக்க வெச்சிருக்கோம்...

'நீ என்னடான்னா, கட்டிலுக்கு அடியில சும்மா உட்கார்ந்திருக்கியே... அதான்யா, புது ஆளுங்களை போட்டா இப்படித்தான்... இந்த இடத்துல சந்திரபாபு இருந்தா, பிச்சு உதறி இருப்பாரு...' என்று, படபடவென்று பேசிக் கொண்டிருந்தனர்.

எனக்கு சுருக்கென்றது. சட்டென்று தலையில் கை வைத்து இழுத்தேன். 'விக்' கையோடு வந்து விட்டது.

'சார்... நீங்க இப்படி பேசறது துளியும் சரியில்லை... உங்களுக்கு, சந்திரபாபு வேணும்னா, அவரை ஒப்பந்தம் பண்ணியிருக்கணும்... நாகேஷ் வேணும்ன்னு, என்னை ஒப்பந்தம் பண்ணிட்டு, சந்திரபாபு மாதிரி நடிக்கலைன்னு சொல்றது தப்பு...' என்று சொல்லி, கழற்றின, 'விக்'கை நீட்டினேன்.

அந்த சமயம் பார்த்து உள்ளே நுழைந்தார், எம்.ஆர். ராதா.

'என்ன... அங்க தகராறு...' என்று அவர் கேட்க, முதலாளிகள் தயங்கி, ஓரம் நகர்ந்தனர். நான் தான், 'ஒண்ணுமில்லை சார்... இது உங்க, காட்சி. ஜனங்களும், உங்கள் நடிப்பை தான் கவனிப்பாங்க...

'உங்களை பார்த்து கேமரா வெச்சிருக்கிறப்போ, கட்டிலுக்கு கீழே, உங்க காலுக்கு பின்னாடி ஒளிஞ்சுகிட்டு நான் நல்லா நடிக்கலைன்னு சொல்றாரு...' என்று கூறினேன்.

சந்திரபாபுவை பற்றி முதலாளி சொன்னது, அதற்கு என் பதிலடி எல்லாவற்றையும் கடகடவென்று, அவரிடம் சொல்லி விட்டேன்.

- தொடரும்

முதன் முதலாக, சினிமாவில், எம்.ஆர். ராதாவுடன் நடிக்க வேண்டிய காட்சியை படமாக்கும்போது, சின்ன பிரச்னை ஏற்பட, நாகேஷிடம், 'என்ன பிரச்னை...' என்று விசாரித்தார், எம்.ஆர். ராதா.

பொறுமையாக நான் சொன்னதை கேட்ட, ராதா, 'மத்தவன் எல்லாம் நடிகன்!

நீ கலைஞன்!' என்றவர், இயக்குனரை பார்த்து, 'இவனுக்கும் தனியா கேமரா வெச்சே, காட்சி எடுங்க...' என்றார்.

'சரிங்கண்ணே... சரிங்கண்ணே...' என்று எல்லாரும் தலையை ஆட்டியவுடன், எனக்குள், ஆச்சரியமாக இருந்தது.

ஒருநாள், படத்தின் தயாரிப்பாளரிடம், 'சார்... சம்பளம், 500 ரூபாய் பேசினீங்க... எனக்கு தர வேண்டியதை கொடுத்தீங்கன்னா...' என்று இழுத்தேன்.

காசாளரை கூப்பிட்டு, 'இவருக்கு, 50 ரூபாய் கொடுத்திடுங்க...' என்றார்.

'என்ன, 50 ரூபாயா... 500 ரூபாய் தருவதாக தானே பேச்சு?'

'ஆமாம்... மொத்த படத்துக்கும் சேர்த்து தானே, 500 ரூபாய். படம் முடிகிறபோது, எல்லாம் செட்டில் பண்ணிடுவோம்...'

அதிர்ந்து போனேன். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், படம் முடிந்த பின்னரும், படத்தின் தயாரிப்பாளர்கள் பேசியபடி, பணம் தரவில்லை, இனிமேல், பொறுமையாக இருந்து பயன் இல்லை என்று முடிவு செய்து, ஒருநாள், அந்த கம்பெனிக்கு போய் பணம் கேட்டேன்.

ஏதேதோ சமாதானம் கூறினரே தவிர, எனக்கு பணத்தை கொடுக்கவில்லை. வந்ததே கோபம், கன்னாபின்னாவென்று சத்தம் போட்டு, கண்ணில்பட்ட, 'விக்' மற்றும் அழைப்பு மணியை எடுத்து, நடையை கட்டினேன்.

அடுத்த நாள் முதல், நாடகத்தில் அந்த, 'விக்'கை அணிந்து, நடிக்க ஆரம்பித்தேன். அதேபோல், தொலைபேசி ஒலிக்க வேண்டிய காட்சிகளில், நான் எடுத்து வந்த அழைப்பு மணி, 'டிரிங்... டிரிங்...' என்று ஒலிக்க ஆரம்பித்தது.

தாமரைக்குளம் படத்தில், எனக்கும், கருணாநிதி எழுதிய, உதயசூரியன் நாடகத்தில் நடித்து வந்த, ராஜகோபால் என்ற நண்பருக்கும், 'சொக்கு - மக்கு' என்று, ஒரு காமெடி ஜோடி கதாபாத்திரம்; படம் வெளியானது.

படத்தின் போஸ்டர்களில், எங்கள் இருவரின் புகைப் படங்களையும் கலரில் போட்டிருந்தனர். சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை, அருகே போய் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த சமயத்தில், தெருவில் சென்று கொண்டிருந்த இரண்டு பேர், சில விநாடிகள் நின்று, சுவரொட்டியை பார்த்தனர். சட்டென்று அவர்களில் ஒருவன் மட்டும், போஸ்டரை நோக்கி உதைப்பது போல, பாவனை செய்து, 'இவனுக்கெல்லாம் எதுக்குடா சினிமா?' என்று, சற்று உரக்கவே, 'கமென்ட்' அடித்தான்; எனக்கு அதிர்ச்சி.

படமும் தோல்வியடைந்தது. 'ஆனந்த விகடன்' இதழில், அந்த படத்தின் விமர்சனம் வெளியானது. 'என்னை பற்றி ஏதாவது பாராட்டியிருப்பரோ...' என்று, ஆர்வத்துடன் படித்தேன்.

அதில், 'சொக்கு - மக்கு என்று இரண்டு கேரக்டர்களாம். இவர்கள் இரண்டு பேரையும், யார் செட்டுக்குள் விட்டனர்...' என, எழுதியிருந்தனர்.

பிற்காலத்தில், என் நடிப்பை பாராட்டி, 'விகடன்' இதழில், பல சமயங்களில் எழுதப்பட்டது என்றாலும், முதல் விமர்சனத்தை, என்னால் மறக்க முடியாது.

சினிமா உலகில் பலருக்கு, எம்.ஆர். ராதா என்றாலே, சிம்ம சொப்பனம் தான். வெளியே முரட்டுத்தனமான சுபாவம் கொண்டவர் போல நடந்து கொண்டாலும், வெள்ளை மனசு; தைரியசாலி.

எம்.ஆர். ராதாவுடன் நடித்த போது ஏற்பட்ட இன்னொரு அனுபவமும் சுவாரசியமானது. சரசா பி.ஏ., படத்துக்கு, வேம்பு என்பவர் தான், இயக்குனர்.

ஒரு குறிப்பிட்ட காட்சியில், எம்.ஆர். ராதாவும், அவர் மகன், எம்.ஆர்.ஆர். வாசுவும், வீட்டுக்குள் நுழைய வேண்டும். அவர்களின் வருகையை எதிர்பார்க்காத நான், அவர்களை பார்த்து அதிர்ச்சியடைய வேண்டும். காட்சியை விளக்கி, என்னை பார்த்து, 'சும்மா, 'ஷாக்' அடிச்சா மாதிரி நடிக்கணும்...' என்று சொல்லி விட்டார், இயக்குனர்.

'என்னடா இது... 'ஷாக்' அடித்தாற் போல எப்படி நடிப்பது...' என்று, நானும் ஒரு நிமிடம் குழம்பினேன். சுற்றும் முற்றும் பார்த்தேன். சட்டென்று ஒரு யோசனை. அந்த செட்டில், சற்று ஒதுக்குப்புறமான இடத்தில், மரப்பெட்டி மீது, ஒரு கூஜாவை பார்த்தேன்.

காட்சியை படம் பிடிக்க தயாரானவுடன், சட்டென்று சைடு வாங்கி, கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த கூஜாவை எடுத்து, கையில் வைத்துக் கொண்டேன். கேமரா சுழல துவங்கியது.

அதட்டலான குரலில் ராதா, 'யாரு வீட்ல?' என்று கேட்டபடி, வீட்டுக்குள் நுழைய, நான் தடாலென்று கையிலிருந்த கூஜாவை நழுவ விட்டு, என் அதிர்ச்சியை காட்டினேன்.

'கட்... கட்...' என்றார், இயக்குனர்.

என்னை பார்த்து, 'யாரை கேட்டு, கூஜாவை எடுத்து கீழே போட்ட...' என்றார்.

'இல்லை சார்... நீங்கதானே, 'ஷாக்' அடிச்சாப்போல நடிக்கணும்ன்னு சொன்னீங்க?'

'அதுக்கு என் கூஜா தான் கிடைச்சதா?' என்று கத்தினார், இயக்குனர்.

அதற்குள் ஒருவர், கூஜாவை எடுத்து வந்து, இயக்குனரிடம் நீட்டினார். அது, நசுங்கி போயிருந்தது. இயக்குனர், தினமும் குடிக்க தண்ணீர் எடுத்து வரும் கூஜா என்பது, அவர் சொன்ன பிறகு தான் தெரிந்தது.

'ரொம்ப, 'சென்டிமென்ட்'டா வெச்சிருக்கும் கூஜா. அது இல்லாமல் நான் வீட்டுக்கு போக முடியாது...' என்று இயக்குனர் கூறினார்.

உடனே ராதா, 'சென்டிமென்டா, எதை வெச்சுக்கிறதுன்னு ஒரு கணக்கு இல்லை. இன்னிக்கு கூஜா, நாளைக்கு, துடைப்பம், 'சென்டிமென்ட்டு'ன்னு சொல்வீங்களா?' என்று, ஒரு போடு போட்டதும், அமைதியானார், இயக்குனர்.

பழநி பட படப்பிடிப்பின் போது நடந்த, இன்னொரு சம்பவம்.


பழநி என்ற படத்தில், எம்.ஆர். ராதாவுடன் இணைந்து நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

கிராமத்து களத்து மேட்டில் வேலை நடந்து கொண்டிருக்கும். எம்.ஆர். ராதா அங்கே வந்து, எல்லாரையும் மிரட்டி, உருட்டி, குத்தகை பாக்கி வசூலிப்பதாக காட்சி. நான் அவருடைய கணக்கு பிள்ளை.

களத்து மேட்டில், ஒரே வெயில். அங்கு வந்த, ராதாவுக்கு, வெயில் தாங்கவில்லை. நடிக்க வேண்டாம் என்று தீர்மானித்து விட்டார். தன் முடிவை அவர் வெளிப்படுத்திய புத்திசாலித்தனம், என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

'காட்சி நல்லா இல்லே... கல்யாண மாப்பிள்ளையே, அய்யர் மாதிரி மந்திரத்தையும் சொல்லி, தாலி கட்டலாமா... இப்படி படம் எடுத்தா எப்படி ஓடும்?

'குத்தகை பாக்கி வசூல் பண்ண வயல்காட்டுக்கு மிராசுதார் வருவாரா... இதையெல்லாம் பார்த்துக்கத்தானே கணக்கு பிள்ளைக்கு சம்பளம் குடுத்து, வேலைக்கு வெச்சிருக்கு. நாகேஷை வெச்சு காட்சி எடுங்க...' என்று, இயக்குனரிடம் படபடவென்று பேசிவிட்டு, புறப்பட்டு போய் விட்டார்.

எம்.ஆர். ராதாவை வைத்து எடுப்பதற்காக எழுதி வைத்திருந்த காட்சிகளை, கணக்கு பிள்ளைக்கு மாற்றினார், இயக்குனர்.

எதிர்பாராமல் நடிப்பதற்கு, கூடுதலாக காட்சி கிடைத்ததை எண்ணி சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.

ஆனந்த் என்று ஒரு நண்பர், எனக்கு அறிமுகம் ஆனார். அவரது பின்னணி பற்றி எதுவும் தெரியாது. நாங்கள் இரண்டு பேரும், ஸ்கூட்டரில் எங்காவது போவதுண்டு. ஒருநாள் என்னை தேடி வந்த அவர், 'எங்க அப்பா, உன்னை பார்க்கணும்ன்னு சொன்னார். வா...' என்றார்.

'உங்க அப்பாவா... எதற்காக, என்னை பார்க்கணும்ன்னு சொல்றாரு?'

'எங்க அப்பா தான், பிரபல இயக்குனர், தயாரிப்பாளர், எல்.வி. பிரசாத். அவருக்கு, உன்னை பற்றி தெரியும். நீ, என் நண்பர் என்பதும், அவருக்கு தெரியும் என்பதால், அழைத்து வரும்படி சொன்னார்...' என்றார்.

இதை கேட்டதும், எனக்கு இரட்டை வியப்பு. முதலாவது, இத்தனை நாள், பிரபல இயக்குனர், தயாரிப்பாளர், எல்.வி. பிரசாத்தின் மகனுடன், நான் பழகி இருக்கிறேன். இரண்டாவது, அவர், தன் படத்தில், வாய்ப்பு கொடுப்பதற்காக, என்னை கூப்பிட்டு அனுப்பியிருக்கிறார் என்பது.

உற்சாகத்துடன், எல்.வி. பிரசாத்தை போய் பார்த்தேன். என்னை ஆழமாக பார்த்தவர், 'கன்னங்கள் இரண்டும் ரொம்ப குழி விழுந்துருக்கே... பற்கள் கூட நன்றாக இருக்கலாமே...' என்றார்.

நான், பொறுமையாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர், அமைதியாய் உட்கார்ந்திருக்கவே, 'சார்... நீங்க வந்து இறங்கிய குதிரை எங்கே?' என்றேன்.

'குதிரையா... நான் குதிரையில் வரவில்லை; காரில் தான் வந்தேன்...' என்றார்.

'உங்கள் டிரஸ்சை பார்த்தால், குதிரை ஓட்டி வந்தவர் போல இருக்கிறது...' என்றேன்.

'நோ... நீங்கள் நினைப்பது தவறு...' என்றார்.

'அதே மாதிரி தான், என் முகத்தை பார்த்து, எனக்கு நடிக்க தெரியாது என்று நீங்களாக முடிவு கட்டுவதும்...' என்றேன்.

இது மாதிரி ஒரு பதிலை, என்னிடமிருந்து, அவர் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது புரிந்தது.

லேசாக அதிர்ந்து போனாலும், உடனே, சகஜ நிலைக்கு திரும்பி விட்டார்.

'நல்லா பேசறியேப்பா நீ... உனக்கு, கண்டிப்பா, என் படத்துல வேஷம் உண்டு...' என்றார்.

அப்போது, இன்ப அதிர்ச்சி எனக்கு.

அந்த படத்தின் பெயர், தாயில்லா பிள்ளை. படம் வெளியாகி, மிக நன்றாக ஓடியது. ஆனாலும், எனக்கு அந்த படத்தில் தரப்பட்ட வேஷம், மிகவும் சிறியது என்பதால், பெரிய அளவில் பெயர் கிடைக்கவில்லை.

எல்.வி. பிரசாத் பற்றி, இன்னொரு சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன்...

எல்.வி. பிரசாத் இயக்கத்தில், ஒரு படத்தில், வீட்டு எஜமானியம்மாளின் மரணத்தையடுத்து, வீட்டில் இருக்கிறவர்களின் துக்கமான வெளிப்பாடுகளை, படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

வேலைக்காரன் அழுவதை படம் பிடித்த போது, இயக்குனர், எல்.வி. பிரசாத், 'இன்னும் அழு... கேவிக் கேவி அழு...' என்று சைகை செய்ய, வேலைக்காரராக நடித்தவர், ரொம்ப அழுது கொண்டிருந்தார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த நான், 'சார்... 'கட்' சொல்லுங்க...' என்றேன். அவரும், இவன் எதற்காக இடையில் மூக்கை நுழைக்கிறான் என்று யோசிக்காமல், சட்டென்று, 'கட்' சொல்லி விட்டார்; கேமரா நின்றது. உணர்ச்சிகரமான காட்சி எடுத்துக் கொண்டிருக்கும் சமயம், திடீரென்று என்ன ஆனது என்று அனைவருக்கும் குழப்பம்.

'எதற்காக, 'கட்' செய்ய சொன்னாய்?' என்று, எல்.வி. பிரசாத், என்னை பார்க்க...

'சார்... நீங்க, பெரிய இயக்குனர். ஆனால், இந்த காட்சியில், வேலைக்காரரின் நடிப்பு, இத்தனை உணர்ச்சிகரமாக இருக்கக் கூடாது என்பது, என் கருத்து. ஒரு எஜமானி செத்ததற்கு, கணவரை விட, வேலைக்காரர் அதிகமாக அழுதால், அந்த அம்மாவின் நடத்தை மீது, பார்க்கிறவர்களுக்கு சந்தேகம் வந்து விடாதா?' என்றேன்.

'நீ சொல்வது, சரி தான்...' என்றார், அவர்.

'இந்த காட்சியை இப்படி எடுத்தால் என்ன... எஜமானி அம்மாளின் சடலத்தை பார்த்ததும், துக்கம் தாளாமல் வேலைக்காரன், தன் துண்டின் நுனியால் வாயை பொத்தி, தலை குனிந்தபடியே, அந்த இடத்தை விட்டு போய் விடுகிறான்...' என்றேன்.

'வெரி குட்... ரொம்ப சரி... அப்படியே எடுத்திடலாம்...' என்றவர், அடுத்து சொன்ன வார்த்தைகள், எனக்கு என்றைக்கும் மறக்காது...

'இயக்குனராகும் தகுதி உனக்கு இருக்கு...' எவ்வளவு பெரிய மனிதரிடமிருந்து, எவ்வளவு பெரிய பாராட்டு!

தாயில்லா பிள்ளை படத்தில், நடித்துக் கொண்டிருந்த சமயம், திடீரென்று ஒருநாள், பாலாஜியின் அலுவலகத்திலிருந்து, தொலைபேசி அழைப்பு வந்தது. 'உடனடியாக, சித்ராலயா அலுவலகத்தில், இயக்குனர், ஸ்ரீதரை பார்க்க வேண்டும்...' என்று தகவல்.

அந்த காலத்தில், இயக்குனர், ஸ்ரீதர் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைத்திருந்தார். அவரது இயக்கத்தில் நடிப்பது பெருமைக்குரிய விஷயமாக கருதப்பட்டது. அப்படிப்பட்ட இயக்குனரின் கம்பெனியான சித்ராலயாவிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது என்றால் சும்மாவா?

அந்த சந்தோஷமான தருணத்தில், உடனடியாக, நான் நன்றியுடன் நினைத்துக் கொண்டது, பாலாஜியை தான். ஆம்... எனக்கு, சித்ராலயாவிலிருந்து வாய்ப்பு கிடைப்பதற்கு காரணமாக இருந்தது, அவர் தான்.




No comments:

Post a Comment