CALIFORNIA GOLD RUSH 1848-1855
கலிபோர்னியா தங்க வேட்டை (California Gold Rush) (1848-1855), கலிபோர்னியாவின் கொலமாவில் இருந்த சட்டரின் மர ஆலையில் யேம்சு டபிள்யூ மார்சல் என்பவரால் தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட 1858 சனவரி 24 இல் தொடங்கியது.[1] தங்கம் கிடைத்தது பற்றிய செய்தியால் ஐக்கிய அமெரிக்காவின் பிற பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் 300,000 மக்கள் வரை கலிபோர்னியாவில் குவிந்தனர்.[2] சடுதியான மக்கள் உள்வரவும் தங்கத்தின் வருகையும் அமெரிக்கப் பொருளாதாரத்துக்குப் புதுவலுவைக் கொடுத்தது. அத்துடன், பிரதேசத் தகுதிக்குச் செல்லாமல் நேரடியாகவே 1850 இல் மாநிலத் தகுதியைப் பெற்ற மிகச் சில அமெரிக்க மாநிலங்களில் ஒன்றாகக் கலிபோர்னியா ஆனது. இந்தத் தங்க வேட்டை, கலிபோர்னியாவின் தாயக மக்களில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. இது நோயாலும், இன அழிப்பாலும், பட்டினியாலும் அவர்களின் வேகமான மக்கள்தொகை வீழ்ச்சிக்கு வழிகோலியது. தங்க வேட்டை முடிவடைந்த போது, கலிபோர்னியா ஐதாக மக்கள் வாழ்ந்த முன்னாள் மெக்சிக்கப் பகுதி என்னும் நிலையில் இருந்து, 1856 இல் புதிய குடியரசுக் கட்சியின் முதல் சனாதிபதி வேட்பாளரின் சொந்த மாநிலம் என்ற தகுதிக்கு உயர்ந்துவிட்டது.
தங்க வேட்டையினால் ஏற்பட்ட தாக்கம் மிகவும் அதிகம். தங்கம் தேடுவோர் முழுத் தாயக மக்கள் சமுதாயங்களையும் தாக்கி அவர்களை அவர்களது நிலங்களில் இருந்து துரத்திவிட்டனர். ஒரிகன், சான்ட்விச் தீவு (அவாய்), இலத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோரே தங்கம் கிடைத்தது பற்றிய உறுதியான தகவலை முதலில் பெற்றனர். இவர்களே 1848 இல் முதலில் கலிபோனியாவில் குவிந்தனர். தங்க வேட்டையின்போது அமெரிக்காவுக்கு வந்த 300,000 பேர்களில் அரைப்பங்கினர் கடல் வழியாகவும், ஏனையோர் நிலம் வழியாகவும் வந்தனர்.
நிலம் வழியாக வந்தோர் கலிபோர்னியா வழியூடாகவும், கிலா ஆற்று வழியூடாகவும் வந்தனர். இவர்கள் பயணத்தின்போது பெரும் இன்னல்களை எதிர்கொண்டனர். புதிதாக வந்தவர்களில் பெரும்பாலோர் அமெரிக்கர்களாக இருந்தபோதிலும், தங்க வேட்டை பல ஆயிரக் கணக்கானோரை இலத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசுத்திரேலியா, சீனா போன்ற நாடுகளில் இருந்தும் கவர்ந்து இழுத்தது.
புதிய குடியேறிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக வேளாண்மையும், மேய்ப்புத் தொழிலும் மாநிலம் முழுவது விரிவடைந்தன. 1846 இல் 200 பேரைக்கொண்ட சிறிய குடியேற்றமாக இருந்த சான்பிரான்சிசுக்கோ 1852 இல் 36,000 பெரைக்கொண்ட நகரமாக வளர்ந்துவிட்டது. சாலைகள், தேவாலயங்கள், பள்ளிகள், புதிய நகரங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டன. 1849 இல் மாநில அரசியல் சட்டம் எழுதப்பட்டது. அது பொதுமக்கள் வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், மாநிலத்தின் முதல் இடைக்கால ஆளுனரும், சட்டசபையும் தெரிவாயின. 1850 செப்டெம்பரில் கலிபோர்னியா மாநிலம் ஆனது.
தங்க வேட்டை தொடங்கிய காலத்தில், தங்க வயல்களில் சொத்துரிமை தொடர்பான சட்டங்கள் இருக்கவில்லை. "உரிமை கோருதல்" என்னும் முறை கையாளப்பட்டது. வளவாய்ப்புத் தேடுவோர் சிற்றாறுகளில் இருந்தும், ஆற்றுப் படுகைகளில் இருந்தும் எளிமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தங்கம் எடுத்தனர். சுரங்கம் தோண்டுதல் சூழலுக்கு கேடு என்றபோதிலும், சிக்கலான தங்கம் எடுக்கும் முறைகள் உருவாக்கப்பட்டுப் பின்னர் பிற நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டது. நீராவிக் கப்பல்கள் ஒழுங்கான சேவைக்கு வந்தபோது புதிய போக்குவரத்து முறைகள் வளர்ச்சி பெற்றன. 1869 இல் கலிபோர்னியாவில் இருந்து நாட்டினூடாகக் கிழக்கு ஐக்கிய அமெரிக்கா வரை தொடருந்துப் பாதைகள் அமைக்கப்பட்டன. இதன் உச்சக் கட்டமாக, தொழில்நுட்பங்கள் குறிப்பிடத்தக்க நிதி வளங்கள் தேவைப்படும் அளவுக்கு வளர்ந்து விட்டன. இதனால், தனிப்பட்ட தங்கம் தோண்டுவோருடன் ஒப்பிடும்போது தங்க நிறுவனங்களின் அளவு விகிதத்தை அதிகரித்தது. இன்றைய மதிப்பீட்டில் பல பத்து பில்லியன்கள் பெறுமதியான தங்கம் எடுக்கப்பட்டது. இது சிலருக்குப் பெருஞ் செல்வத்தை ஈட்டிக் கொடுத்தது. பலர் அவர்கள் முன்னர் வைத்திருந்ததை விடச் சற்று அதிகமான பணத்துடன் திரும்பிச் சென்றனர்.
No comments:
Post a Comment