Wednesday 23 March 2022

WRITER LAKSHMI MARCH 23 ,1921 - 1987 JANUARY 7

 WRITER LAKSHMI 

MARCH 23 ,1921 - 1987 JANUARY 7



லக்ஷ்மி அல்லது லட்சுமி (மார்ச் 231921 - சனவரி 71987) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சமூகச் சிறுகதைகள், புதினங்கள் பெருமளவு எழுதியவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

லக்ஷ்மி திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற ஊரில் பிறந்தவர். இவருடைய தந்தையார் மருத்துவர் சீனிவாசன். தாயார் பட்டம்மாள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திரிபுரசுந்தரி. மருத்துவராகவும் தமிழ் இலக்கிய உலகில் தனி இடம் பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்த இவர் தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவிலும் பல ஆண்டுகள் வாழ்ந்தவர்.

இளமைப் பருவம்[தொகு]

பாட்டன் பாட்டியிடம் வளர்ந்த இளமைப் பருவத்தில் பாட்டியிடம் நிறைய அனுபவப் பாடங்களைக் கேட்டு வளர்ந்ததில் இவருடைய சிந்தனைப் போக்கு ஒத்த வயதுடைய மற்ற குழந்தைகளை விட மாறுபட்டதாகவே இருந்தது. தொட்டியத்தில் ஆரம்பக் கல்வி கற்று, முசிறியில் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் தனிப் பெண்பிள்ளையாக உயர்கல்வி கற்றார். திருச்சியில் ஹோலிக்ராஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பு என்று முடித்து சென்னை ஸ்டான்லி கல்லூரியில் மருத்துவப் படிப்பில் நுழையும் வரை திரிபுரசுந்தரிக்கு பொருளாதாரப் பிரச்னை அவ்வளவாகப் பாதிக்கவில்லை.

எழுத்தாளராக[தொகு]

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இருந்த காலத்தில் இரண்டாம் உலகப் போர் காரணமாக நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதாரப் பின்னடைவு திரிபுரசுந்தரியின் குடும்பத்தில் தீவிரமாகவே பாதிப்பினை ஏற்படுத்தியது. தந்தையார் சீனிவாசன் தன் மகளிடம் படிப்பு தொடர்வதற்குப் பண உதவி செய்ய இயலாமையை விளக்கி அவரை ஊருக்குத் திரும்பும் படி வலியுறுத்தினார்.

ஆனால் திரிபுர சுந்தரிக்கு தன் படிப்பினைப் பாதியில் விட மனமில்லை. ஏதோ துணிவில் ஆனந்த விகடன் நிர்வாக ஆசிரியர் வாசனைச் சந்தித்து தன் நிலைமையை விளக்கி தன் படிப்பு தொடர உதவும் படி வேண்டினார். அவர் எழுதித் தரும் கதைகளை ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்ந்து வெளியிட்டு பண உதவி செய்வதாக வாசன் தந்த உறுதிமொழியில் ஊக்கம் அடைந்தவராக தன் முதல் சிறுகதையான “தகுந்த தண்டனையா?” என்கிற சிறுகதையை எழுதி விகடனுக்குத் தந்து தன் எழுத்துலகப் பயணத்தைத் தொடங்கினார்.

விகடனும் லக்ஷ்மியும்[தொகு]

கல்லூரி மாணவியாக இருந்ததாலும் சக மாணவர்களின் கேலியைத் தவிர்க்க எண்ணியதாலும் லக்ஷ்மி என்கிற புனைபெயரிலேயே எழுத ஆரம்பித்த திரிபுரசுந்தரி தன் படிப்பு முடியும் முன்பாகவே தொடர்கதைகள் வரை எழுத ஆரம்பித்தார். இவருடைய படிப்பு தொடரவேண்டும் என்பதற்காக வாசன் அளித்த ஆதரவு மிகவும் உயரியது. மாதத்திற்கு மூன்று சிறுகதைகள் மூலம் (அவை வெளிவந்தாலும் வராவிட்டாலும்) இவருக்குப் பணம் கிடைக்கும் வண்ணம் பார்த்துக் கொண்டார் அவர். தொடர்ந்து பணம் கிடைக்கும் வசதிக்காகத் தான் தொடர்கதையே எழுதினார் லக்ஷ்மி. இவருடைய முதல் தொடர்கதை “பவானி”.

இவருடைய சிறுகதைகள் குடும்பப் பாங்குடனும், ஆபாசம் ஒருசிறிதும் இன்றியும், பெண்களின் பிரச்னைகளை மையப்படுத்தியும் இருந்ததால் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இவருக்குக் கிடைத்தது.

படிப்பு முடியும் முன்பே “பெண்மனம்” என்கிற இன்னொரு நாவலும் எழுதி அதில் கிடைத்த பணத்தைத் தன் இளைய சகோதரியின் திருமணத்துக்குக் கொடுத்து தன் குடும்பத்துக்கும் உதவிகரமாக விளங்கினார் லக்ஷ்மி.

தென் ஆப்பிரிக்காவில் திருமண வாழ்க்கை[தொகு]

லக்ஷ்மியின் மருத்துவப்படிப்பு முடிந்து அரசு மருத்துவராகப் பணியும் கிடைத்த பிறகு வாழ்க்கையின் பொருளாதாரப் பிரச்னைகள் முடிவுக்கு வந்தன. 1955-ல் கண்ணபிரான் என்பவருடன் திருமணம் ஆனது. இது காதல்மணம் என்பதுடன் கலப்பு மணமும் கூட. தென்னாப்பிரிக்காவில் குடியுரிமை பெற்றுவிட்ட தஞ்சைப் பிள்ளை வகுப்பினைச் சேர்ந்த கண்ணபிரானை இலங்கையில் நடைபெற்ற ஓர் இலக்கிய விழாவில் சந்தித்துக் காதல் வயப்பட்டு பதிவுத் திருமணம் செய்து கொண்டார் லக்ஷ்மி. கண்ணபிரான் ஒரு முதுகலைப் பட்டதாரி. தென்னாப்பிரிக்காவில் பத்திரிகைத் துறையில் இருந்தவர். கணவருடன் தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணமானார் லக்ஷ்மி. அங்கேயும் அரசு மருத்துவராகப் பணி கிடைக்க பெருமகிழ்ச்சியுடன் சமூகப் பணியிலும் ஈடுபட்டார். இவர்களுக்கு மகேஸ்வரன் என்கிற மகன் பிறந்தார்.

மீண்டும் தமிழகம்[தொகு]

1968-ஆம் ஆண்டு கண்ணபிரான் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார். அதன் பிறகு ஒன்பது ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவிலேயே இருந்த லக்ஷ்மி 1977-ஆம் ஆண்டு தமிழகம் திரும்பினார்.

அதன்பிறகு 1987-ஆம் ஆண்டு மரணமடையும் வரை முழுநேர மருத்துவப் பணியில் ஈடுபடாமல், பகுதிநேர மருத்துவ ஆலோசகராகவும் முழுநேர எழுத்தாளராகவும் திகழ்ந்தார். ஏராளமாக எழுதிக் குவித்தார்.

படைப்புகளும் விருதுகளும்[தொகு]

ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சுமார் நூற்று ஐம்பது நாவல்கள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், ஆறு மருத்துவ நூல்கள் இவர் எழுதியவையாகும்.

தமிழக அரசின் பரிசு உள்பட ஏராளமான இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் விருதுகளையும் வாங்கிக் குவித்த இவருடைய “ஒரு காவிரியைப் போல” என்கிற நாவல் சாகித்ய அகாதமி விருதினை வென்றது.

சகோதரி[தொகு]

இவருடைய சகோதரி நித்யா மூர்த்தி என்பவரும் ஓர் எழுத்தாளரே. 1987 ஆம் ஆண்டு தேவி வார இதழில் “இரண்டாவது மலர்” என்கிற தொடர்கதையை எழுதிக் கொண்டிருந்த லட்சுமி அதனை முடிக்கும் முன்பே இறந்து விட அதனை எழுதி முடித்தவர் நித்யா மூர்த்தி








நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.

சேதுராமன் தரும் புதிய தகவல்: “அண்மையில் லக்ஷ்மியின் சகோதரர் திரு. ராகவனுடனும், மருமகள் திருமதி மகேஸ்வரனிடமும் பேசினேன். லக்ஷ்மியின் வாரிசுகள் தமிழ் நாடு அரசின் நாட்டுடைமைக்கு ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டதாகத் தெரிவித்தனர்”. அப்படி என்றால் இப்போது 28 பேரில் கண்ணதாசன், சுந்தர ராமசாமி, லக்ஷ்மி ஆகியோர் இப்போது நாட்டுடமை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்கள்.

சமுதாயத்தில் எத்துணைதான் படித்திருந்தாலும், பெண்ணுக்குச் சம உரிமை இல்லை; பெண்கள் சரி நிகர் சமான நிலை பெற வேண்டும் என்பதே குறிக்கோள். பெண் பிரச்சினை, உரிமையே மையக் கருத்து. பெண்ணின் பெருமை பேசுவதே, அருமை பாராட்டுவதே அடித்தளம். இல்லத்தின் உயிர் நாடியே பெண்தான் என்பது. குடும்பச் சிக்கல்களை அலசுவது. பெண்மையின் மென்மை உணர்வுகள்/ஆண்மையின் வன்மை உணர்ச்சிகள், இவற்றின் உரசல்களால் உருவாகும் நிகழ்ச்சிகளைப் பின்னித் தருபவர்; அதேசமயம் நமது தமிழ் மரபினையும், இந்தியப் பண்பாட்டினையும் உயிராகப் பேணி எழுதி வருபவர் – அவர் தான் லக்ஷ்மி என்கிற டாக்டர் எஸ்.திருபுரசுந்தரி (மது.ச.விமலானந்தம்)

சிதம்பரத்தை அடுத்துள்ள அம்மாபேட்டை என்ற சிறு கிராமத்தில் 1921ம் வருஷம் மார்ச்சு மாதம் 21 தேதி பிறந்தவர் லக்ஷ்மி. பெற்றோர் திருச்சி ஜில்லா தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீனிவாசன், பட்டம்மாள் என்ற சிவகாமி. உடன் பிறந்தவர்கள் ஐவர், நான்கு சகோதரிகள், ஒரு தம்பி.

தொட்டியம் தொடக்கப் பள்ளியிலும், முசிறி உயர் நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்ற லக்ஷ்மி, தனது உயர் நிலைக் கல்வியைத் திருச்சியிலுள்ள ஹோலி க்ராஸ் கல்லூரியில் தொடர்ந்தார். காரணம் ஐந்தாவது ஃபாரம் படிப்பை முடித்து எஸ்.எஸ்.எல்.சி வகுப்புக்குப் போக வேண்டிய சமயம், முசிறிப் பள்ளியின் தலைமையாசிரியர் “ஆண்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளியில் தொடர்ந்து வயது வந்த ஒரு பெண்ணைப் படிக்க அனுமதிக்க முடியாது” என்றதால்தான். சீரான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், முறையிட்டு, ஹாஸ்டல் வசதியைப் பெற்றார் லக்ஷ்மி. தமிழில் வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் ஆண்டு ஒரு பரிசையும் பெற்றார். இண்டர் முடித்தவுடன் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், சென்னையிலுள்ள கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பினார். முதலில் வெய்டிங் லிஸ்டில் இருந்த போதிலும் இவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது.

முதல் ஆறுமாதங்கள் ப்ரி-ரிஜிஸ்ட்ரேஷன் ஸ்டான்லியிலும், கல்லூரியில் வசதிகள் இல்லாததால், அனாடமி, ஃபிசியாலஜி படிப்பை மதராஸ் மெடிகல் காலேஜில் இரண்டு வருஷங்கள் தொடர்ந்து, மூன்றாம் வருஷப் படிப்பைத் தொடர ஸ்டான்லி திரும்பினார். இவர் மருத்துவம் படித்த காலம் இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். அதன் தாக்கங்கள் எப்படியிருந்தன என்பதை கதாசிரியையின் கதை என்ற தமது சுய சரிதத்தில் விவரமாக எழுதியிருக்கிறார் லக்ஷ்மி. மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள எழுத்தின் உதவியை நாடினார் லக்ஷ்மி. அக்காலத்தில் ஆனந்த விகடன் காரியாலயம் ஸ்டான்லிக்கு அருகே ப்ராட்வேயில் தான் இருந்தது. இதைப் பற்றி திருமதி பட்டம்மாள் வாசன் நினைவு கூறுகிறார் – ***ஒரு நாள் லக்ஷ்மி ஃபோன் பண்ணினா. “நான் கதையெல்லாம் எழுதுவேன், உங்கள் கணவரைப் பார்த்துப் பேச வேண்டும், உதவி செய்வீர்களா?” நீ ஆஃபீசுக்குப் போனால் அவரைப் பார்க்கலாம் என்றேன். அவரிடம் “டாக்டருக்குப் படிக்க வேண்டும், எங்களுக்கு இப்போது நிதி வசதி சரியாயில்லை. என்னுடைய கதைகள் சிலதைக் கொண்டு தருகிறேன். பிரசுரித்துப் பண உதவி செய்தால் சந்தோஷப்படுவேன்.” என்று கேட்டிருக்கிறாள். நல்ல கதைகள் என்றால் பிரசுரிப்போம் என்று சொன்ன வாசன், பின்னர் கதைகள் தரமாக இருக்கவே பிரசுரம் செய்து உதவினார்.

டாக்டர் படிப்பு முடித்ததும் லக்ஷ்மியின் குடும்பம் சென்னையிலேயே குடியேறிற்று. தங்கைகள் கல்யாணம் பொறுப்பேற்று நடத்தி முடித்தார். 1955ம் வருஷம் தானும் கண்ணபிரான் என்ற தென்னாப்பிரிக்கத் தமிழரை திருமணம் செய்து கொண்டார். சென்னையிலுள்ள அடையாறு தியோசாஃபிகல் சொசைட்டியில்தான் இந்தத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் லக்ஷ்மி இருபத்தியிரண்டு வருஷங்கள் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்தார். மகப்பேறு வைத்தியராகப் பணியாற்றினார். இத்தம்பதிகளுக்கு மகேஸ்வரன் என்ற ஒரு பிள்ளை.

1966ம் வருஷம் கண்ணபிரான் இறந்தது லக்ஷ்மியை மிகவும் பாதித்தது. இருப்பினும் அங்கேயே தன் வாழ்க்கையைத் தொடர்ந்த லக்ஷ்மி 1977ம் வருஷம் சென்னை திரும்பினார். என்ன காரணமாகவோ அதன் பிறகு அவர் தொடர்ந்து எழுதவில்லை. மகேஸ்வரனையும் மருத்துவப் படிப்பில் சேர்த்து அவரையும் மருத்துவராக்கினார்.

பதினான்கு வயதிலேயே எழுத ஆரம்பித்த லக்ஷ்மி நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் படைப்பிலக்கியம் செய்து, ஆயிரத்துக்கும் மேலான சிறுகதைகள், நூற்றுக்கும் மேலான நாவல்கள் வெளியிட்டுள்ளார். மருத்துவம், மகப்பேறு போன்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது முதல் நாவல் பவானி. பெண் மனம், மிதிலா விலாஸ் என்ற இரு நாவல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசையும், ஒரு காவிரியைப் போல 1984ல் சாகித்திய அகாதெமி விருதையும் பெற்றன. காஞ்சனையின் கனவு, பெண் மனம் என்ற நாவல்கள் காஞ்சனா, இருவர் உள்ளம் என்ற தலைப்புகளுடன் மூன்று தென் மொழிகளில் திரைப் படங்களாயின. இருவர் உள்ளம் படத்திற்கு, திரைக்கதை, வசனம் எழுதியது கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.

லக்ஷ்மியின் மறைவு 1987ம் வருஷம் ஜனவரி மாதம் ஏழாம் தேதி சென்னையில். அவரது மறைவு குறித்து ஆனந்த விகடனில் (25-1-1987 – மீள் பதிப்பு ஆ.வி.11-3-2009) பட்டம்மாள் வாசன் நினைவு கூர்வது “வாழ்க்கையில் நிறையச் சிரமப்பட்டிருந்தாலும், அவ பேசறப்போ சிரிச்சுண்டேதான் பேசுவா. சாகித்ய அகாடமி பரிசு வாங்கியதும் என்னைத் தேடி வந்து சொன்னது எனக்குப் பெருமையா இருந்தது. சமீபத்திலே எங்க வீட்டுக் கல்யாணத்துக்கு வந்திருந்தபோது ‘என் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணப் போறேன்’ என்று ரொம்ப சந்தோஷமாச் சொன்னாள். அவ சாகும்போது, அந்த ஒரே பிள்ளையும் துரதிர்ஷ்டவசமா கிட்டக்க இல்லாம எங்கேயோ இங்கிலாந்திலேயா இருக்கணும்னு நினைச்ச போது என் மனசுக்கு கஷ்டமாயிருந்தது.” சொல்லும்போதே திருமதி பட்டம்மாள் வாசனின் குரல் தழுதழுத்துக் கண்கள் பனித்தன.

லக்ஷ்மியின் படைப்புகள் வருமாறு:
அழகின் ஆராதனை — அவள் தாயாகிறாள் — அசோகமரம் பூக்கவில்லை — அடுத்த வீடு — அரக்கு மாளிகை — அதிசய ராகம் — அத்தை — அவளுக்கென்று ஒரு இடம் — அவள் ஒரு தென்றல் — இரண்டாவது மலர் — இவளா என் மகள் — இரண்டு பெண்கள் — இரண்டாவது தேனிலவு — இனிய உணர்வே என்னைக் கொல்லாதே — இருளில் தொலைந்த உண்மை – இன்றும் நாளையும் -உறவுகள் பிரிவதில்லை — உயர்வு — உறவின் குரல் — ஊன்றுகோல் — என் வீடு — என் மனைவி — ஒரு காவிரியைப் போல (சாகித்திய அகாதெமி பரிசு 1984) — ஒரு சிவப்பு பச்சையாகிறது

கடைசி வரை — கங்கையும் வந்தாள் — கதவு திறந்தால் — கதாசிரியையின் கதை (இரண்டு பாகங்கள்) — கழுத்தில் விழுந்த மாலை — கணவன் அமைவதெல்லாம் — காஷ்மீர் கத்தி — காளியின் கண்கள் — கூறாமல் சன்னியாசம் — கூண்டுக்குள்ளே ஒரு பைங்கிளி — கை மாறிய போது — கோடை மேகங்கள் — சசியின் கடிதங்கள் — திரும்பிப் பார்த்தால் — துணை — தை பிறக்கட்டும் — தோட்டத்து வீடு — நதி மூலம் — நல்லதோர் வீணை — நாயக்கர் மக்கள் — நிற்க நேரமில்லை – நியாயங்கள் மாறும்போது — நிகழ்ந்த கதைகள் — நீலப்புடைவை — நீதிக்குக் கைகள் நீளம் — பண்ணையார் மகள் – பவளமல்லி — பவானி (முதல் நாவல்) — புனிதா ஒரு புதிர் — புதை மணல் — பெயர் சொல்ல மாட்டேன் — பெண் மனம் (தமிழ் நாடு அரசு பரிசு) — பெண்ணின் பரிசு — மரகதம் — மனம் ஒரு ரங்க ராட்டினம் — மண் குதிரை — மருமகள் — மறுபடியுமா? — மாயமான் — மீண்டும் வசந்தம் – மீண்டும் ஒரு சீதை — மீண்டும் பிறந்தால் — மீண்டும் பெண் மனம் –முருகன் சிரித்தான் — மோகத்திரை

ராதாவின் திருமணம் — ராம ராஜ்யம் — ரோஜா வைரம் — வனிதா — வசந்திக்கு வந்த ஆசை — வடக்கே ஒரு சந்திப்பு — வாழ நினைத்தால் — வீரத்தேவன் கோட்டை — வெளிச்சம் வந்தது — ஜெயந்தி வந்தாள் — ஸ்ரீமதி மைதிலி

தகவல் ஆதாரம்:
1. தமிழ் இலக்கிய வரலாறு – மது.ச.விமலானந்தம்
2. லக்ஷ்மியின் கதாசிரியையின் கதை – பூங்கொடிப் பதிப்பகம் 1985
3. ஆனந்த விகடன் கட்டுரை (11-3-2009)
4. வலைத்தளக் கட்டுரைகள்

ஆர்வி: லக்ஷ்மி நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய எழுத்தாளர் இல்லை. அவர் எழுதிய மிக சிறந்த நாவல்களாக கருதப்படும் மிதிலா விலாஸ், பெண் மனம் போன்ற அத்தனையும் வீண். அவருக்கு ஒரு சிம்பிள் ஃபார்முலா இருந்தது. “பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்” – இந்த ஃபார்முலாவை அவர் ஐம்பதுகளின், அறுபதுகளின் மத்திய தர வர்க்க, வேலைக்கு போக ஆரம்பித்த பெண்களின் மனம் கவரும் வண்ணம் சித்தரித்தார். ஆனால் ஒரு கால கட்டத்தில் அவர் ஒரு ஸ்டார் எழுத்தாளர் என்பதை மறுக்க முடியாது. சேதுராமனின் உதவியால் இங்கே நான் தெரிந்து கொண்ட சிலரை விட நல்ல தேர்வு என்று வேண்டுமானால் சொல்லலாம். (அவர் ஒரு காலத்திய ஸ்டார் என்பதாலும், மேலும் ஒரு பத்து வருஷங்களாவது பெண்களின் மன நிலையை உண்மையாக எழுத்தில் கொண்டு வந்தார் என்பதாலும்.)

Advertisements

No comments:

Post a Comment