Saturday 12 March 2022

M.V.RAJAMMA ,SUPER STAR OF CINEMA

 

M.V.RAJAMMA ,SUPER STAR OF CINEMA



பேரறிஞர் அண்ணா கதை-வசனம் எழுதிய ‘வேலைக்காரி’ படத்தில் வேலைக்காரியாக நடித்துப் புகழ்பெற்றவர், எம்.வி.ராஜம்மா. சிட்டாடல் ‘ஞானசவுந்தரி’யில் புகழின் சிகரத்தை அடைந்தவர்.

பிற்காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் ஆகியோருக்கு அம்மாவாக நடித்தார். எம்.வி.ராஜம்மாவின் சொந்த ஊர், சேலம் அருகில் உள்ள அகண்டபள்ளி ஆகும். தாய் மொழி கன்னடம். இனிய குரல் வளம் படைத்த ராஜம்மா, சின்ன வயதிலேயே நன்றாகப் பாடுவார்.

நடிக்க வருவதற்கு முன்பே ராஜம்மாவுக்குத் திருமணம் ஆகிவிட்டது. கணவரின் நண்பரான `டிக்கி’ மாதவராவ் என்பவர், ஒருநாள் நண்பரைப் பார்க்க வந்தபோது, எம்.வி.ராஜம்மா ஆர்மோனியத்தை வாசித்தபடி பாடிக்கொண்டிருந்தார். அதைக்கேட்டு அசந்துபோன டிக்கி மாதவராவ், “இவ்வளவு இனிமையாக பாடுகிறாரே! ஏன் சினிமாவில் நடிக்கக்கூடாது?” என்று கேட்டார். ராஜம்மாவின் கணவர் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.

டிக்கி மாதவராவ் எடுத்துக்கொண்ட முயற்சியால், ‘சம்சார நவுகா’ (வாழ்க்கைப்படகு) என்ற கன்னடப் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்க ராஜம்மாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ராஜம்மாவின் தோற்றம், நடிப்புத் திறமை, இனிய குரல் ஆகியவற்றைக் கண்ட பட அதிபர்கள், கதாநாயகி வேடத்தையே ராஜம்மாவுக்கு கொடுத்தார்கள்.

‘சம்சார நவுகா’ மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. ராஜம்மா பெரும் புகழ் பெற்றார். நிறைய கன்னடப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

1940-ல் மாடர்ன் தியேட்டர் சார், ‘உத்தமபுத்திரன்’ படத்தைத் தயாரித்தார்கள். தமிழின் முதல் இரட்டை வேடப்படமான ‘உத்தமபுத்திர’னில், பி.யூ.சின்னப்பா கதாநாயகனாக நடித்தார். கதாநாயகியாக, சின்னப்பாவுக்கு ஈடுகொடுத்து நடித்தார், எம்.வி.ராஜம்மா. ‘உத்தமபுத்திரன்’ பெரிய வெற்றி பெற்றது. எம்.வி.ராஜம்மா, தமிழ்ப்பட உலகிலும் புகழ் பெற்றார்.

1941-ல், டி.கே.எஸ்.சகோதரர்கள் தங்களுடைய வெற்றி நாடகமான ‘குமாஸ்தாவின் பெண்’ணை திரைப்படமாகத் தயாரித்தனர். டி.கே.சண்முகம், டி.கே.பகவதி, கே.ஆர்.ராமசாமி ஆகியோர் நடித்த இந்தப்படத்தின் கதாநாயகியாக எம்.வி.ராஜம்மா நடித்தார்.

1948-ல் சிட்டாடல் தயாரித்த ‘ஞானசவுந்தரி’யில் கதாநாயகியாக ராஜம்மா நடித்தார். அவருக்கு ஜோடியாக டி.ஆர்.மகாலிங்கம் நடித்தார். ‘ஞானசவுந்தரி’, மகத்தான வெற்றிப்படமாக அமைந்தது. அந்த வெற்றியில் பெரும் பங்கு ராஜம்மாவுக்கு உண்டு. அவருடைய தோற்றம், நடிப்பு, வசனம் பேசிய விதம் எல்லாமே அற்புதமாக அமைந்திருந்தன. ஞானசவுந்தரியாகவே வாழ்ந்து காட்டினார் என்று சொல்லலாம்.

பேரறிஞர் அண்ணா கதை-வசனம் எழுதிய ‘வேலைக்காரி’, 1949-ல் ஜுபிடர் தயாரிப்பில் வெளிவந்தது. டைரக்ஷன் ஏ.எஸ்.ஏ.சாமி. இப்படத்தில் கே.ஆர்.ராமசாமி – வி.என்.ஜானகி ஒரு ஜோடியாகவும், எம்.வி.ராஜம்மா – எம்.என்.நம்பியார் ஒரு ஜோடியாகவும் நடித்தனர்.

எம்.வி.ராஜம்மாவுக்கு புகழ் தேடித்தந்த படங்களில் ‘வேலைக்காரி’யும் ஒன்று. 1950-ம் ஆண்டில், ‘பாரிஜாதம்’, ‘லைலா மஜ்னு’ ஆகிய படங்களில் நடித்தார். இரண்டிலும் மகாலிங்கம்தான் கதாநாயகன்.

இதே காலகட்டத்தில், பானுமதி – நாகேஸ்வரராவ் நடித்த இன்னொரு ‘லைலா மஜ்னு’வும் வெளிவந்தது. பானுமதியின் ‘லைலாமஜ்னு’ பெரிய வெற்றி பெற, மகாலிங்கம் – ராஜம்மா நடித்த ‘லைலா மஜ்னு’ தோல்வி அடைந்தது.

தொடர்ந்து பல படங்களில் ராஜம்மா கதாநாயகியாக நடித்தார். அவற்றில் `கேமரா மேதை’ கே.ராம்நாத் இயக்கத்தில் நாராயணன் கம்பெனி தயாரித்த ‘தாய் உள்ளம்’ மிகச்சிறந்த படம். இதில் ராஜம்மாவுடன் கதாநாயகனாக நடித்தவர் ஆர்.எஸ்.மனோகர். வில்லனாக ஜெமினிகணேசன் நடித்தார்.
எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும் சூப்பர் ஸ்டார்களாக உருவானபோது, எம்.வி.ராஜம்மா, அவர்களுக்கு அம்மாவாக நடித்தார். ‘”குடும்பத் தலைவன்’, ‘தேடிவந்த மாப்பிள்ளை’ ஆகிய படங்களில் எம்.ஜி.ஆருக்கு அம்மாவாகவும், ‘தங்கமலை ரகசியம்’, ‘பாவமன்னிப்பு’, ‘ஆலயமணி’, ‘அன்னை இல்லம்’, ‘முரடன்முத்து’ ஆகிய படங்களில் சிவாஜிக்கு தாயாகவும் நடித்தார்.
குறிப்பாக, ‘கர்ணன்’ படத்தில் கர்ணனின் தாய் குந்தி தேவியாக நடித்து, ரசிகர்களின் நெஞ்சத்தை நெகிழ வைத்தார். ‘ராதா ரமணா’ உள்பட சில கன்னடப் படங்களை சொந்தமாகத் தயாரித்தார். ‘ஸ்கூல் மாஸ்டர்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்.
தமிழுக்குக் கிடைத்த சிறந்த நடிகைகளில் ஒருவர் எம்.வி.ராஜம்மா.

mv-rajamma-kumasthavin-penn-1mv-rajamma-kumasthavin-penn-2

தங்கமலை ரகசியம் படக்காட்சிகள்

ImageImageImage

No comments:

Post a Comment