Tuesday 29 March 2022

BUDDISM AND ITS PREVENTION OF KILLING ANIMALS

 


BUDDISM AND ITS PREVENTION OF KILLING ANIMALS



புத்தர் மிருக பலி இல்லாமல் வைதீக சடங்கு செய்யச் சொன்னது பற்றிக் குறிப்பிட்டீர்கள் . ஆனால் புத்த மதம் உண்மையிலே கொல்லாமையை வலியுறுத்துகிறதா? புத்தம் தழைத்துள்ள திபெத் , மியான்மர் , இலங்கை , தாய்லாந்து போன்ற நாடுகளில் அசைவம் சாப்பிடுகின்றனர் . அதைக் காட்டிலும் இலங்கையில் புத்த பிட்சுகள் பலரே சிங்கள இனவாதத்தைத் தூண்டுபவர்களாகவும் இருகின்றனர் . இப்படி இருக்கையில் ஏன் வைதீகச் சடங்கின் உயிர்க்கொலையை மட்டும் புத்தர் மறுக்க வேண்டும் . உணவிற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கொல்லாம் ஆனால் வேதச் சடங்கிற்காக கொல்லக் கூடாது. இதில் என்ன நியாயம் இருக்கிறது

புத்தர் முழுமையான கொல்லாமையை வலியுறுத்தினார். வேதவேள்விகளுக்கு மட்டும் உயிர்க்கொலை கூடாது என்று சொல்லவில்லை. அவரது கொள்கைகளில் அகிம்சையே முதலிடம் கொள்கிறது. அது முழுமையான கொலைமறுத்தல், முழுமையான வன்முறை விலக்கம்தான்.

புத்தர் சமண மதத்தில்தான் முதலில் சேர்ந்தார். சமணர்களுடன் இணைந்துதவம்செய்தார். சமணர்களுக்கு மூன்று கொள்கைகள் முக்கியமானவை சமநிலை பிரபஞ்சநோக்கு [ ஸம்யக்-தர்சனம்] சமநிலை ஞானம் [ஸம்யக்-ஞானம்] மற்றும் சமநிலை ஒழுக்கம்[ஸம்யக்-சரித்திரம்] .

அதற்கு ஐந்து நெறிகள் முக்கியமானவை. அவை வன்முறை தவிர்த்தல் (அகிம்சை), வாய்மை (சத்தியம்) பொருள்விழையாமை (அஸ்தேயம்) துறவு (பிரமச்சரியம்), பற்றற்றிருத்தல் (அபாரிகிருகம்) . இந்த நெறிகள் அனைத்தும் புத்தரும் ஏற்றுக்கொண்டவையே.

புத்தமதம் பின்னர் பல நிலைகளில் வளர்ந்தும் விரிந்தும் சென்றது. பல நாடுகளுக்கும் பற்பல பண்பாடுகளுக்கும் பௌத்தம் சென்று சேர்ந்தபோது அங்குள்ள பண்பாடுகளுடனும் மதசிந்தனைகளுடனும் அது உரையாடியது. அதன் விளைவாகப் பலவகையான மாற்றங்களை அது அடைந்தது.

இந்தப்பரிணாமத்தில் பௌத்தம் மாமிச உணவு உண்பதை ஏற்றுக்கொண்டது. இன்று பெரும்பாலான பௌத்தநாடுகளில் பௌத்தர்கள் அசைவ உணவுண்பவர்களே.பௌத்த ஆசாரங்கள், வழிபாட்டுமுறைகள் மட்டுமல்ல புத்தரின் வடிவமே கூட இவ்வாறு பலவகையான மாறுதல்களுக்கு ஆளாகியது.

பௌத்த மதம் என்பது ஒன்றல்ல. புத்தர் இறந்த சிலவருடங்களிலேயே அது மகாயானம் , ஹீனயானம் என இரு பிரிவுகளாக ஆகியது. அதன்பின் பல திசைகளில் பிரிந்து கிளைவிட்டு வளர்ந்துகொண்டே இருந்தது. அந்தப்பிரிவுகளுக்கிடையே பலநூற்றாண்டுக்காலம் பிரம்மாண்டமான ஞானவிவாதங்கள் நடந்துள்ளன.

பௌத்தம் வன்முறை மறுத்தலை வலியுறுத்தியது. ஆனால் அது பலநாடுகளில் பலவகையான சூழல்களில் செயல்பட்டபோது அதற்குள் நியுத்தா எனப்பதும் ஆயுதமில்லாத போர்க்கலைகள் குடியேறின. அவை கராத்தே, குங் ஃபு என்றெல்லாம் வளர்ச்சி அடைந்தன. இன்று அவை பௌத்த ஞானச்செயல்பாடுகளாகவே மாற்றம் கொண்டுள்ளன.

இந்தப் பரிணாமத்தை நாம் நின்றுகொண்டிருக்கும் சிறுவட்டத்தில் வைத்துப் புரிந்துகொள்ள, மதிப்பிட்டுத் தீர்ப்புக் கூற முனையக்கூடாது. பௌத்தத்தின் ஈராயிரம் வருடத்து வரலாற்றை, அது சென்ற இடங்களின் பண்பாட்டுச்சூழலை, அங்கெல்லாம் பௌத்தம் அளித்த பங்களிப்பைக் கருத்தில் கொண்டுதான் புரிந்துகொள்ள வேண்டும்.

புத்தர் சமணர்களிடமிருந்து பிரிந்து சென்ற இடம் முக்கியமானது. சமணர்கள் உடலை உருக்கும் கொடும்தவங்களில் ஈடுபடுவதை அவதானித்து அது பயனற்றது என உணர்ந்து புத்தர் அவர்களிடமிருந்து விலகிச்சென்றார். உடலை வளர்ப்பது எப்படி உடல்மையச்சிந்தனையை உருவாக்குகிறதோ அதே போல உடலை நிராகரிப்பதும் உடலையே நினைத்திருக்கச் செய்கிறது என எண்ணினார்.

ஆகவே இரு எல்லைகளுக்கும் செல்லாமல் நடுவே செல்லும் பாதையே சிறந்தது என்று அவர் வகுத்தார். அதை மத்திம மார்க்கம் என பௌத்தம் சொல்கிறது. ஏதேனும் ஒரு திசையில் அதிதீவிரமாகச் செல்லும்போது அதற்கு எதிரான விசையும் அதே அளவுக்கு வலுவாகிறது. அதன்பின்னர் அந்த எதிர்விசையை சமாளிக்கவே நம் ஆற்றல் முழுக்கமுழுக்கச் செலவாகிவிடுகிறது.

இந்த அம்சம்தான் பௌத்தத்துக்கும் சமணத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு. சமணம் அதன் ஆசாரங்களில் , நடைமுறைகளில் எந்தச் சமரசத்துக்கும் தயாராகவில்லை. ஆகவே அதனால் இந்திய எல்லையைத் தாண்டவே முடியவில்லை. மாறுபட்ட பண்பாடுகளை, வெவ்வேறு இனத்தவரை அதனால் உள்ளிழுக்க முடியவில்லை. விளைவாக மெல்லமெல்ல அது தேங்க ஆரம்பித்து ஒரு சிறு குழுவினரின் திட்டவட்டமான நம்பிக்கையாக மட்டுமே நீடிக்கிறது.

கொல்லாமையையே எடுத்துக்கொள்வோம். சமணர்கள் அதில் சமரசமற்றவர்கள். அதி தீவிரநிலையில் அவர்கள் கொல்லாமையை , சைவ உணவை வலியுறுத்துகிறார்கள். அதுவே அவர்களுக்கு பெரிய கட்டுக்கயிறாக ஆகியது

ஒரு கட்டுரையில் மானுடவியலாளர் மெர்வின் ஹாரீஸ் சொல்கிறார், அன்றைய சூழலில் இந்தியாபோன்ற பூமத்தியரேகைப்பகுதி நிலங்களிலேயே தூய தாவர உணவுப்பழக்கம் சாத்தியமாகியிருக்கும், ஆகவேதான் இங்கே சைவ உணவு என்ற கருதுகோள் உருவாகியது என்று. ஒரு சமூகத்துக்கு ஒட்டுமொத்தமாகப் புரதமும் கொழுப்பும் மிக்க உணவை அளிக்கத்தேவையான அளவுக்கு தாவரங்கள் இங்கேதான் வளரமுடியும். அதற்கான மழையும் வெயிலும் இங்கேதான் அதிகம். புரதமும் கொழுப்பும் உள்ள உணவை அளிக்கும் தாவரங்களும் இங்குதான் வளரும்.

பூமத்தியரேகைப்பகுதிகளில் வருடம் முழுக்க சாதகமான பருவநிலை நிலவுவதனால் உணவைப் பாதுகாத்து வைக்கவேண்டியதில்லை. சென்றகாலங்களில் புரதமுள்ள உணவு மிக அபூர்வமானது. அதைப் பாதுகாப்பதென்பது மிகக்கடினம். எல்லாக் காலத்திலும் எங்கும் கொண்டுசெல்லக்கூடிய, பேணக்கூடிய புரத உணவு விலங்குகளே.

ஆகவே ஒரு பருவத்தில் மட்டுமே பயிர் செய்யக்கூடிய, அல்லது விவசாயமே செய்யமுடியாத நிலங்களான பாலைவனங்களும் ,மலைப்பிராந்தியங்களும் ,பனிப்பாலைகளும் அசைவ உணவைத் தவிர்க்கும் நிலையில் அக்காலத்தில் இருக்கவில்லை. சென்ற காலங்களில் உலகமெங்கும் விவசாயத்தை விடப் பெரிய தொழிலாக இருந்தது மேய்ச்சலே. காரணம் நீர்வளமற்ற நிலங்களில் மேய்ச்சலே சாத்தியமானது. மேய்ச்சல் உருவாக்குவது அசைவ உணவைத்தான்.

நிலையான அரசுகள் உருவாகி, அந்த அரசுகளிடம் நிதி சேர்ந்து, அந்நிதியைக்கொண்டு அவை விளைநிலங்களையும் நீர்ப்பாசன வசதிகளையும் உருவாக்குகின்றன. அவ்வாறு நிலவளம் பெருகப்பெருகத்தான் வேளாண்மை அதிகரிக்கிறது. அதுவரைக்கும் பெரும்பகுதி நிலம் மேய்ச்சல்நிலமாகவே நீடிக்கும்

வேளாண்மைமயமாக்கம் பலநூற்றாண்டுக்காலம் முன்னரே ஆரம்பித்தாலும் மிகச்சமீபத்தில்தான் அது வேகமாக நிகழ்ந்திருக்கிறது என்பதைக்காண நம்மைச்சுற்றியிருக்கும் வேளாண்மை நிலங்கள் எப்போது உருவாயின என்று பார்த்தாலே போதும். நம் கிராமத்தில் கடந்த ஐம்பதாண்டுகளில் மேய்ச்சல் இல்லாமலாகி விவசாயம் அதிகரித்திருக்கும்.

இந்தியா பூமத்தியரேகைப்பகுதி நாடு. அதிலும் தென்னிந்தியா பூமத்தியரேகைப்பகுதியை மிக நெருங்கியது. அகவே இங்கே விவசாயம் நெடுங்காலம் முன்னரே வளர்ந்தது. தாவரப்பெருக்கம் சாத்தியமாகியது. சமணம் தென்னிந்தியாவில் பெற்ற வெற்றியை அன்று வட இந்தியாவில் பெறவில்லை என்பதை இதனுடன் இணைத்துப்பார்க்கவேண்டும். சமணத்தால் மலைப்பகுதிகளுக்குச் செல்லவே முடியவில்லை.

அங்கெல்லாம் சென்றது பௌத்தம். அப்பகுதிகளில் அது அசைவ உணவை வலியுறுத்தியிருந்தால் அம்மக்களுக்கு அது கடைப்பிடிக்கவே முடியாத மதமாகவே ஆகியிருக்கும். மாறாக பௌத்தம் நடைமுறைச் சமரசங்களைச் செய்துகொண்டே இருந்தது. அதில் முக்கியமானது அசைவ உணவு.

எல்லா மதங்களும் இத்தகைய சமரசங்களைச் செய்துகொண்டுதான் விரிவடைகின்றன. கருவறைக்குள் செருப்புடன் நிற்கும் நேபாளத்துப் பூசாரியைத் தென்னிந்திய இந்துக்ககள் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள்.

உணவையே எடுத்துக்கொள்வோம், வங்கப்பிராமணர்களுக்கு மீன் ஆசார உணவுதான். அன்றைய வங்கத்தில் வருடத்தில் சில மாதங்களில் மட்டுமே வயல் நீருக்கு வெளியே இருக்கும். விவசாயம் மிகக்குறைவு. ஆனால் மீன் மிக அதிகம். ஆகவே அவ்வுணவுப்பழக்கம் அங்கீகரிக்கப்பட்டது.

பௌத்தம் நடுப்பாதையை முன்வைப்பது. ஆகவே அது எதையுமே அதிதீவிர ஆசாரமாகக் கொள்ளவேண்டியதில்லை. அதன் மையமான தத்துவங்களே அதற்கு முக்கியம், சடங்குகளும் ஆசாரங்களும் அல்ல.

பௌத்தம் சென்ற நிலப்பகுதிகள் என்பவை பெரும்பாலும் அடர்ந்தகாடுகள் அல்லது உயர்ந்த மலைமடிப்புகள். இத்தகைய நிலங்களில் மக்கள் சிறுசிறு சமூகக்குழுக்களாக ஒருவரோடொருவர் தொடர்பற்று வாழ்வார்கள். காரணம் பயணம் மிக அரிதானதாக இருப்பதே. வெளித்தொடர்பு குறைகையில் சமூகம் தேங்கி அவர்கள் பழங்குடிகளாகவே நீடிப்பார்கள். ஒவ்வொரு பழங்குடிக்கும் ஒவ்வொரு மதம்,ஆசாரம்,அடையாளம் இருக்கும்.

காலப்போக்கில் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வளங்களுக்கான போட்டிகள் உருவாகும்போது அவர்களுக்குள் தீவிரமான சண்டைகள் நிகழும். பழங்குடிகளின் அன்னியர்மீதான வெறுப்பு உக்கிரமானது. ஏனென்றால் அவர்களுக்குள் தொடர்புகள் இருப்பதில்லை. ஆகவே வன்முறைகளும் மிக மூர்க்கமானவை.

அத்தகைய நிலப்பகுதிகளுக்குச் சென்ற பௌத்தம் அந்தப்பழங்குடிகள் நடுவே ஒரு பிரம்மாண்டமான தொடர்புவலையை உருவாக்கியது. அவர்கள் நடுவே ஒரு சமரசச் சித்தாந்தமாக அது உருவம் கொண்டது. மெல்ல மெல்ல அம்மக்களை இணைத்து ஒரே சமூகமாக, நாடுகளாக ஆக்கியது. அவ்வகையில் இன்றைய கீழையுலக நாகரீகத்தின் உருவாக்கத்திற்கு பௌத்ததின் பங்களிப்பு மகத்தானது.

இன்றுகூட வடகிழக்கு மாகாணங்களில் பழங்குடிமதங்கள்தான் நடைமுறை ஆசாரமாக இருக்கின்றன. பௌத்தம் உயர்நிலை மதமாக இருக்கிறது. இரண்டையும் மக்கள் ஒரேசமயம் கடைப்பிடிக்கிறார்கள். ஜப்பானில் ஒருவர் அன்றாடவாழ்க்கைக்கு ஷிண்டோ மதத்தையும் அறிவார்ந்த பயணத்துக்கு பௌத்த மதத்தையும் கடைப்பிடிக்கலாம்.

இரண்டாயிரம் வருடம் முன்பு தமிழகத்திலும் இதேபோன்றுதான் பௌத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. பௌத்தத்தின் பங்களிப்பு அதுதான். மானுடவரலாற்றில் மதம் குலச்சடங்குகள், ஆசாரங்கள், நம்பிக்கைகளின் தொகையாகவே உருவாகிவந்தது. பௌத்தம் அவற்றின்மீது விரிந்த தத்துவஞானத்தின் ஒளி.

பௌத்தம் குறுங்குழு மதங்கள் நடுவே ஒரு மாபெரும் தொடர்புப்பின்னலை உருவாக்கியது. மாறுபட்ட ஆசாரங்களையும் நம்பிக்கைகளையும் உரையாடச்செய்தது, இணைத்தது. அந்தப்பணியில் ஒவ்வொரு இடத்திலும் பௌத்தம் மக்களால் தங்கள் வாழ்க்கைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டது. அந்த அனைத்து பௌத்த மதங்களுக்கும் நடுவே பௌத்தமெய்ஞானம் நிலைகொண்டது.

பௌத்தம் சைவ உணவைக் கைவிட்டது ஒரு சமரசம். ஆனால் அதன் விளைவாக அது பிரம்மாண்டமான ஒரு வன்முறை ஒழிப்பை நிகழ்த்திக்காட்டியது. அதுவே பௌத்தத்தின் வழி.

ஆஸ்திரேலியாவிலும் தென்னமெரிக்காவிலும் மானுட அழிவுகளை உருவாக்கிய கிறித்தவம் போல, எகிப்திலும் ஈரானிலும் மாபெரும் பண்பாட்டு அழிப்புகளை நிகழ்த்திய இஸ்லாமைப்போல ஒரு வரலாறு பௌத்தத்துக்குக் கிடையாது.

ஏனென்றால் பௌத்ததின் வழி சமன்வயம் . அதாவது சமரசம். பிற நம்பிக்கைகளை முற்றாக மறுத்து, அவற்றை அழித்து தன்னை நிலைநாட்டிக்கொள்ளக்கூடியதல்ல அது. பிறிதுடன் உரையாடி அதைத் தன்னுள் இழுத்துக்கொள்வது. பிறிதில் உள்ள பல விஷயங்களைத் தான் எடுத்துக்கொண்டு தன்னை மாற்றிக்கொள்வது. ஆகவேதான் அது சென்ற இடங்களில் அழிவை உருவாக்கவில்லை.

கடைசியாக, மதங்களின் மெய்ஞானம் ஒரு பெரும் பிரவாகமாக மக்களை இணைத்துக்கொண்டு முன்செல்கிறது. அதே சமயம், மதங்களின் அமைப்புகள் அதிகாரவர்க்கத்தால் தங்களுக்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. நான் இரண்டையும் பிரித்தே பார்ப்பேன். மதங்களை அதிகாரக்கருவிகளாகக் கையாள்பவர்களை வைத்து அம்மமதங்களை மதிப்பிட மாட்டேன்.

நாஜி கொலைமுகாம்களை நிகழ்த்தியவர்களைக் கொண்டு கிறித்தவ மதத்தை அளக்க மாட்டேன். இஸ்லாமிய தீவிரவாதிகளைக்கொண்டு இஸ்லாமை மதிப்பிட மாட்டேன். மதக்கலவரங்களை நிகழ்த்தும் இந்து மதவெறியர்களைக்கொண்டு இந்து மதத்தைப் புரிந்துகொள்ள மாட்டேன்.

On this day

1 year ago

No comments:

Post a Comment