Saturday, 11 November 2017

ASOKAN IN COURT AGAINST M.R.RADHA ,SHOT CASE 1967 JANUARY 12


ASOKAN  IN COURT AGAINST
 M.R.RADHA ,SHOT CASE 1967 JANUARY 12




எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கில் 
நடிகர் அசோகன் சாட்சி
. "புரட்சி நடக்கப்போகிறது" என்று ராதா தன்னிடம் கூறியதாக அவர் சொன்னார். எம்.ஜி.ஆரை சுட்டதாகவும், ராதா தன்னைத்தானே சுட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் எம்.ஆர்.ராதா மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை செசன்சு கோர்ட்டில் நடந்தது. அப்போது நடிகர் அசோகன், போலீஸ் தரப்பு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். அவர் கூறியதாவது:-

"என் தொழில், நாடகங்களிலும், சினிமாக்களிலும் நடிப்பது. எனக்கு எம்.ஜி.ஆரையும், எம்.ஆர்.ராதாவையும் 7, 8 ஆண்டுகளாகத் தெரியும். முத்துக்குமரன் பிக்சர்ஸ் தயாரித்த "பெற்றால்தான் பிள்ளையா" படத்தில் நான், எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா, சரோஜாதேவி, நம்பியார் ஆகியோர் நடித்தோம்.
"பெற்றால்தான் பிள்ளையா" படத்துக்குப்பிறகு அண்ணா புரொடக்சன்சாரின் "பவானி"படத்தில், நானும் எம்.ஆர். ராதாவும் சேர்ந்து நடித்தோம். "பவானி" படப்பிடிப்பில் கலந்து கொள்ள 10267ந்தேதி (சம்பவத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு) கோடம் பாக்கம் பரணி ஸ்டூடியோவுக்கு சென்றேன். எம்.ஆர்.ராதாவும் அன்று பரணி ஸ்டூடியோவுக்கு வந்தார். 2 மணி வரை எங்களுக்கு சாப்பிடுவதற்கு இடைவேளை விடப்படும்.

இந்த இடைவேளை நேரத்தில் எம்.ஆர்.ராதா ஸ்டூடியோவில் உள்ள பெரிய மேக்கப் அறையில் இருந்தார். நான் சின்ன மேக்கப் அறையில் வீட்டில் இருந்து கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டேன். பிறகு 2 மணிக்கு எம்.ஆர். ராதா இருந்த மேக்கப் அறைக்குப்போனேன். அங்கே எம்.ஆர்.ராதா ஒரு ஈச்சேரில் சாய்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டு ஏதோ சிந்தனையில் இருந்தார்.
நான் அங்கே போனதும் என்னிடம் அவர், "அசோகா! இன்னும் 2 நாளில் புரட்சி நடக்கப்போகிறது. எனவே, இன்று அல்லது நாளைக்குள் சினிமாவில் உள்ள என் பாகத்தை எடுத்து முடித்துவிடச் சொல்லப்போகிறேன்" என்று கூறினார்.
இதைக்கூறிவிட்டு மீண்டும் அவர் ஏதோ யோசனை செய்து கொண்டு இருந்தார். இதுபற்றி நான் எம்.ஆர்.ராதாவிடம் ஒன்றும் கேட்கவில்லை. அதன்பிறகு படப்பிடிப்புக்கு போய்விட்டேன். "பவானி" படத்தை டைரக்டர் ராமண்ணா டைரக்டு செய்தார். எம்.ஜி.ஆர். தோட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டுக்குப்பிறகு, "எம்.ஆர்.ராதா என்னிடம் இதை குறித்துதான் "புரட்சி நடக்கப்போகிறது" என்று சொல்லியிருப்பாரோ? என்று நினைத்தேன். என்னை 1911967ந்தேதி போலீசார் பரணி ஸ்டூடியோவில் வந்து விசாரித்தார்கள்.
இவ்வாறு அசோகன் சாட்சியம் அளித்தார்.
பிறகு அவரை எம்.ஆர்.ராதாவின் வக்கீல் வானமாமலை குறுக்கு விசாரணை செய்தார். அப்போது வக்கீல் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: 10167ந்தேதி எம்.ஆர்.ராதா உங்களிடம் பேசிக்கொண்டு இருந்த பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தாரா?
பதில்: ஆம். நடித்தார்.

கேள்வி: அன்று எவ்வளவு நேரம் படப்பிடிப்பு நடந்தது?
பதில்: நான் ஒரு மணி நேரம் இருந்து விட்டுப்போய் விட்டேன். எனவே எவ்வளவு நேரம் படப்பிடிப்பு நடந்தது என்று தெரியாது.
கேள்வி: 11167ந்தேதி படப்பிடிப்பு நடந்ததா?
பதில்: அன்றைய படப்பிடிப்பில் நான் கலந்து கொள்ள வில்லை. எனக்குத் தெரியாது.
கேள்வி: "பவானி" படத்தில் எம்.ஆர்.ராதா, தான் நடிக்க வேண்டிய பாகத்தை 12ந் தேதிக்கு முன் நடித்து முடித்து விட்டாரா என்பது உங்களுக்குத் தெரியுமா?
பதில்: தெரியாது.
கேள்வி: 10ந்தேதி எம்.ஆர். ராதா உங்களிடம் சொல்லும் போது, எம்.ஆர்.ராதா அவருடைய பாகத்தை முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்று உங்களுக்குத் தெரியுமா?
பதில்: தெரியாது.
கேள்வி: படத்தின் டைரக்டர் ராமண்ணாவுக்கு படப்பிடிப்பு எவ்வளவு முடிந்து இருக்கிறது, எம்.ஆர்.ராதா தன் பாகத்தை நடித்து முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்று விவரம் தெரியும் அல்லவா?
பதில்: ஆம். தெரியும்.
கேள்வி: பவானி படத்தின் கதை வசனம் யாருடையது?
பதில்: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

கேள்வி: 10ந்தேதி இடை வேளைக்கு பிறகு எம்.ஆர். ராதாவுடன் "செட்"டில் நடிக்க வேண்டியது யார்? என்று உங்களுக்கு தெரியுமா?
பதில்: தெரியாது.
கேள்வி: அன்று எம்.ஆர். ராதாவுடன் நடிக்க வேண்டிய நடிகர், நடிகைகளில் ஒருவர் பெயரைக்கூட உங்களால் சொல்லமுடியாது. அப்படித் தானே?
பதில்: ஆம். எனக்கு நினைவு இல்லை.
கேள்வி: 10ந்தேதி காலையில் எம்.ஆர்.ராதா பவானி படத்தில் நடித்தாரா?
பதில்: ஆம். நடித்தார்.
கேள்வி: நீங்கள் அன்று காலை நடித்தீர்களா?
பதில்: ஆம். நடித்தேன்.
கேள்வி: அன்று இடை வேளைக்கு பிறகு நீங்கள் நடிக்கவில்லை அல்லவா?
பதில்: ஆம். நடிக்கவில்லை.
கேள்வி: பவானி படம் தயாராகிக்கொண்டு இருந்த காலகட்டத்தில், நீங்கள் வேறு ஏதாவது படத்தில் நடித்துக் கொண்டு இருந்தீர்களா?
பதில்: ஆம். ஏவி.எம். தயாரித்த "அதே கண்கள்", "அன்று கண்ட முகம்", "ஜோடிப்புறாக்கள்" முதலிய படங்களிலும், பெயரிடப்படாத சில படங்களிலும் நடித்துக்கொண்டு இருந்தேன்.
கேள்வி: 10ந்தேதி வேறு படப்பிடிப்பு உங்களுக்கு இருந்ததா?
பதில்: இல்லை.
கேள்வி: மேக்கப் அறையில் மேக்கப்காரர் இருப்பாரா?

பதில்: ஆம். மேக்கப் போடும் போது இருப்பார்.
கேள்வி: மேக்கப் போடுவதற்கு உதவிக்கு பையன்கள் இருப்பார்கள் அல்லவா?
பதில்: ஆம். இருப்பார்கள்.
கேள்வி: எம்.ஆர்.ராதாவுக்கு சாப்பாடு வீட்டில் இருந்துதான் வந்ததா?
பதில்: எனக்குத் தெரியாது.
கேள்வி: அவர் அன்று சாப்பிட்டாரா என்பதாவது தெரியுமா?
பதில்: தெரியாது.
கேள்வி: பெரிய மேக்கப் அறைக்கும், சின்ன மேக்கப் அறைக்கும் எவ்வளவு தூரம் இருக்கும்?
பதில்: சுமார் 15 அடி தூரம் இருக்கும்.
கேள்வி: எம்.ஆர்.ராதா உங்களிடம் பேசும்போது, சின்ன மேக்கப் அறையில் யாராவது இருந்தார்களா?
பதில்: எனக்குத் தெரியாது.
கேள்வி: அன்று 'செட்'டில் யாராவது இருந்தார்களா?
பதில்: நடிகர், நடிகைகள் ஒருவரும் இல்லை. டைரக்டர் ராமண்ணாவும் இன்னும் சிலரும் இருந்தார்கள்.
கேள்வி: "பவானி" படம் வெளியாகி விட்டது அல்லவா?
பதில்: ஆம்.
கேள்வி: அந்த படம் எப்போது வெளியிடப்பட்டது?
பதில்: ஆகஸ்டு 5ந்தேதி.

கேள்வி: அந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது வந்தது?
பதில்: படம் வெளிவருவதற்கு 15 நாட்கள் முன்புதான்.
கேள்வி: வெளியாகியுள்ள பவானி படத்தில் எம்.ஆர். ராதா நடிக்கவில்லை அல்லவா?
பதில்: ஆம்.
கேள்வி: எம்.ஆர்.ராதாவின் பாகம் எடுத்து முடிக்காததால் தான் அவர் அந்தப் படத்தில் இல்லை என்று நான் கூறுகிறேன்.
பதில்: எனக்குத் தெரியாது.
கேள்வி: எம்.ஆர்.ராதாவின் பாகத்தைதானே நாகேஷ் ஏற்று நடித்தார்?
பதில்: ஆம்.
கேள்வி: 10ந்தேதி எம்.ஆர். ராதா உங்களுடன் பேசும் போது, பவானி படத்தில் எம்.ஆர்.ராதாவின் பாகம் முடியும் நிலையில் இல்லை என்று நான் கூறுகிறேன்.
பதில்: எனக்கு தெரியாது.
கேள்வி: 12-1-67ந்தேதிக்குள் எம்.ஆர்.ராதாவின் பாகத்தை எடுத்து முடித்திருக்க முடியாது என்று நான் கூறுகிறேன்.
பதில்: எனக்குத் தெரியாது.
கேள்வி: அன்று எம்.ஆர். ராதா ஏதோ புரட்சி வரப்போவதாக உங்களிடம் சொன்னதாக கூறினீர்களே. அவர் எப்போதும் இப்படி பேசிக்கொண்டு இருப்பாரா?
பதில்: ஆம். சாதாரணமாக அவர் இப்படித்தான் பேசுவார்.
கேள்வி: அன்று பேசியதைத் தவிர வேறு சமயங்களில் எம்.ஆர்.ராதா இதுபோல் கூறியதாக உங்களுக்கு நினைவு இருக்கிறதா?
பதில்: நினைவு இல்லை.
கேள்வி: ரகசிய போலீஸ் அதிகாரி விசாரிக்கும் முன்பு, எம்.ஆர்.ராதா கூறியதை வேறு யாரிடமாவது சொன்னீர்களா?
பதில்: சொல்லவில்லை.
கேள்வி: எம்.ஜி.ஆரை சம்பவத்திற்கு பிறகு ஆஸ்பத்திரியில் போய் பார்த்தீர்களா?
பதில்: ஆம். மறுநாள் போய்ப் பார்த்தேன்.
கேள்வி: எம்.ஜி.சக்ரபாணி அன்று அங்கு இருந்தாரா?
பதில்: தெரியாது.
கேள்வி: அதற்கு பிறகு எம்.ஜி.ஆரை எப்போது பார்த்தீர்கள்?
பதில்: 15 அல்லது 16ந்தேதி மீண்டும் பார்த்ததாக நினைக்கிறேன்.
கேள்வி: அன்று எம்.ஜி.சக்ர பாணி இருந்தாரா?

பதில்: பார்க்கவில்லை.
கேள்வி: டைரக்டர் பஞ்சுவை யாராவது பார்த்தீர்களா?
பதில்: கும்பலாக இருந்ததால், அங்கு யார் யார் வந்திருக்கிறார்கள் என்று பார்க்க வில்லை.
கேள்வி: சம்பவத்துக்கு பிறகு சினிமா டைரக்டர் ராமண்ணா விடமாவது, மற்றவர்களிட மாவது, எம்.ஆர்.ராதா தன் பாகத்தை பவானி படத்தில் விட்டுவிட்டதாக கூறினீர்களா?
பதில்: இல்லை.
கேள்வி: 10-1-67ந்தேதி எம். ஆர்.ராதா உங்களுடன் ஒன்றும் பேசவில்லை என்று நான் கூறுகிறேன்.
பதில்: இதை நான் மறுக்கிறேன்.
கேள்வி: எம்.ஜி.ஆர் சக்ர பாணி ஆகியோர் தூண்டுதலின் பேரில் பொய்யாக சாட்சி சொல்கிறீர்கள் என்கிறேன்.
பதில்: இதையும் நான் மறுக்கிறேன்.
இத்துடன் குறுக்கு விசாரணை முடிந்தது.

No comments:

Post a Comment