Wednesday 15 November 2017

INDIAN ECONOMY HAS BEEN FALLING .....UNEMPLOYMENT



INDIAN ECONOMY HAS BEEN FALLING .....UNEMPLOYMENT



சிந்தனைக்கு அப்பால் ....பொருளாதாரமே வீழ்ச்சி
கடந்த சில நாட்களுக்கு முன், திருவண்ணாமலையில் உள்ள ஒரு கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகையைக் காண திரண்டவர்கள், போலீசிடம் அடி வாங்கிச் சென்றனர். இது போன்ற அவமானம் திருவண்ணாமலையில் மட்டுமல்ல, இதற்கு முந்தைய வாரம் சேலத்திலும் நடந்தது.
இப்படி அடி வாங்கியவர்களைப் பார்த்து ஏளனத்துடன் உதிர்க்கப்பட்ட வார்த்தை, 'வேலையில்லா வெட்டி கூட்டம்' என்பது தான். உண்மையில் அவர்கள் கேலிக்குரியவர்கள் அல்லர்; பாவப்பட்டவர்கள். இப்படிப்பட்ட வெட்டி கூட்டம் ஒவ்வொரு ஊரிலும் பெருகி வருகிறது. காரணம், வேலை இல்லாக் கொடுமை. வேலையில்லாத் திண்டாட்டத்தின் உச்சகட்டம் என்ன என்பதை, உ.பி., மாநிலத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.அங்குள்ள மாநில தலைமைச் செயலகத்தில் பியூன் வேலைக்கான, 368 காலியிடங்களுக்கு, 23 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்தன. இதில் கொடுமை என்னவென்றால், 2 லட்சம் விண்ணப்பதாரர்கள் குறைந்தது, பி.டெக்., - பி.எஸ்சி., - எம்.எஸ்சி., மற்றும் எம்.காம்., பட்டம் பெற்றவர்கள். 255 விண்ணப்பதாரர்கள், பிஎச்.டி., முடித்தவர்கள்.

இந்த பிரச்னைக்கு மிக முக்கிய காரணம், மக்கள் தொகை பெருக்கம் தான்.சீனாவில் பிறப்பு விகிதாசாரம், 12 சதவீதமாக உள்ளது. இந்தியாவில், 22 சதவீதமாக உள்ளது. இந்நிலை நீடித்தால், 2025-ல் இந்தியாவின் மக்கள் தொகை, 145 கோடியை எட்டி விடும். மக்கள் தொகை பெருக்கத்தில் இந்தியா முதலிடத்தில் வந்துவிடும். அவ்வாறு வரும் பட்சத்தில் வேலையில்லாத் திண்டாட்டம், இடநெருக்கடி, சுற்றுச்சூழல் மாசுபடுதல் உள்ளிட்ட விளைவுகளை அதிக அளவில் சந்திக்க நேரிடும். 
உலக மக்கள் தொகையில், முதல், 10 இடங்களைப் பிடித்துள்ள நாடுகளில், முதலிடம் வகிப்பது சீனா; 20 சதவீத மக்கள் தொகையை, சீனா கொண்டிருக்கிறது. இரண்டாம் இடம் வகிப்பது, இந்தியா. உலக மக்கள் தொகையில், 18 சதவீதம் இந்தியாவில் உள்ளது. மூன்றாவது இடம் வகிக்கும் அமெரிக்காவின் பங்கு வெறும், 5 சதவீதம் தான். இதைத் தொடர்ந்து, அந்த வரிசையில் இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், நைஜிரியா, வங்கதேசம், ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஆக, சீனாவும், இந்தியாவும் மட்டுமே மூன்றில் ஒரு பங்குக்கும் மேலான, 38 சதவீதம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. மக்கள் தொகைப் பெருக்கத்தின் பாதிப்பு, வளரும் நாடுகளில் தான் அதிகமாக உள்ளது.

காரணம், உலக வளத்தில், 80 சதவீதத்தை வைத்திருக்கும் வளர்ந்த நாடுகளான, செல்வந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகை, 20 சதவீதம். வெறும், 20 சதவீத வளங்களைக் கொண்டிருக்கும் வளரும் நாடுகளான, ஏழை நாடுகளில் உள்ள மக்கள் தொகையோ, 80 சதவீதம்.மக்கள் தொகை மிகுந்த நாடாக சீனா இருப்பினும், மக்கள் நெருக்கடி மிகுந்த நாடாக இந்தியா இருக்கிறது. இதற்குக் காரணம், இந்தியாவைப் போல, மூன்று மடங்கு பரப்பளவைக் கொண்டது சீனா.
இந்தியாவில் சுதந்திரத்தின் போது, 34 கோடியாக இருந்த மக்கள் தொகை, தற்போது, 127 கோடியாக உயர்ந்து விட்டது. ஆனால், அப்போது இருந்த விளைநிலம் குறைந்து கொண்டே வருகிறது. விவசாயமும் இல்லை; விவசாயிகளும் இல்லை என்ற நிலை உருவாகி விடுமோ என்ற பயமும் ஏற்படுகிறது. எதைச் சாப்பிட்டு உயிர் வாழப் போகிறோம் பணத்தையும், தங்கத்தையுமா?
ஒரு மாதம் வெங்காயத்தால் பாதிக்கப்பட்டால், இன்னொரு மாதம் பருப்பால் பாதிக்கப்படுகிறோம். அடுத்த மாதம் என்னாகுமோ என்ற பீதியில் வாழும்படியாகத்தானே உற்பத்தி இருக்கிறது.எந்த ஒரு நாட்டில் உணவு உற்பத்தி கூடி, மக்கள் தொகை குறைகிறதோ அந்த நாட்டில் தான் அமைதி நிலவும். 3 சதவீதமே விவசாயம் செய்யும் அமெரிக்கா, 65 சதவீதம் விவசாயிகளைக் கொண்ட நமக்கு உணவுப்பொருளை ஏற்றுமதி செய்யும் ரகசியமும் இதுதான்.
மக்கள் தொகையில், இந்தியாவில் முதலிடம் வகிக்கும் உத்தர பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை, தென் அமெரிக்க நாடான, பிரேசில் நாட்டின் மொத்த மக்கள் தொகைக்குச் சமமாக இருக்கிறது. இரண்டாவது பெரிய மாநிலமான, மஹாராஷ்டிர மாநிலத்தின் மக்கள் தொகை, மெக்சிகோ நாட்டின் மக்கள் தொகைக்குச் சமமாக உள்ளது. மூன்றாவது பெரிய மாநிலமான, பீஹாரின் மக்கள் தொகை, ஐரோப்பிய நாடான, ஜெர்மனி நாட்டின் மக்கள் தொகையை விட அதிகமாக 
உள்ளது.

வறுமை, வேலையின்மை, அடிப்படைச் சுகாதார வசதியின்மை, சுற்றுச்சூழல் சீர்கேடு, தண்ணீர்ப் பஞ்சம் போன்றவற்றில் இருந்து, வன்முறை, கொலை, கொள்ளை வரையிலான அனைத்தும், அளவுக்கதிகமான மக்கள் தொகைப் பெருக்கத்தின் பக்க விளைவுகளே என, உறுதியாகச் சொல்லலாம். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில், நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை, 0.7 சதவீதம் குறைந்துவிட்டதாம். உடனே, ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுக்கும் ஒவ்வொரு இந்துமத குடும்பத்தினருக்கும் தலா, 2 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று வினோத அறிவிப்பை, சிவசேனா கட்சி வெளியிட்டுள்ளது. இது எப்பேர்ப்பட்ட விபரீதத்தில் கொண்டு போய் விடும் என்று தெரிய வேண்டாமா?
ஒரு குழந்தையை வளர்த்து படிக்க வைத்து ஆளாக்குவதற்குள்ளாகவே, அந்த குடும்பம் கிட்டத்தட்ட ஆண்டியாகிவிடும் நிலை. இந்த லட்சணத்தில் ஐந்து குழந்தை பெற்றெடுத்தால், அந்த வீடும் நாடும் என்னாகும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டாமா?
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை, 86.25 லட்சம். ஒரு அரசு வேலை காலியானால் அதற்கு, 6,000 பேர் போட்டியிடுகின்றனர் என்பதுதான் நிதர்சனம். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடத்தான் போகிறது.
ஆகவே, 'இந்துக்களின் எண்ணிக்கையை கூட்டுவோம்' என்பது போன்ற பழமையான, யதார்த்தத்திற்கு ஒத்துவராத விஷயங்களை கைவிட்டு, மொத்த இந்திய மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டு வந்து, வறுமை இல்லாத வளமையான இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம். அதற்கு முதல் கட்டமாக மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவோம்.
இ - மெயில்: 
murugaraj2006@gmail.com

No comments:

Post a Comment