Monday 27 November 2017

FYODOR DOSTOYEVSKY - CRIME AND PUNISHMENT 11 November 1821 - 9 February 1881


FYODOR DOSTOYEVSKY -
CRIME AND PUNISHMENT 
NOVEMBER 11,1821-1881 FEBRUARY 9





1764ல் அவர் 'குற்றங்களும் தண்டனைகளும்' என்று ஒரு புத்தகம் எழுதினார். அதில்தான் அவர் 'மரண தண்டனை கூடாது' என்ற கருத்தை முன்வைத்தார்.”“
தஸ்தாயெவ்ஸ்கி
“ஒருத்தர் தப்பு செய்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான் பாலு. “அது யாராக இருந்தாலும் முதலில் அது தப்பு என்பதை நாம் தயங்காமல் சொல்ல வேண்டும்.” என்றேன்.
“தண்டிக்க வேண்டாமா?” என்று கேட்டான் பாலு.

“எல்லா சமயமும் தண்டிக்கத் தேவையில்லை. எச்சரித்து அவர்களைத் திருத்த முடிந்தால் எச்சரிக்கலாம். திரும்ப அதே தப்பைச் செய்தால் தண்டிக்கலாம்” என்றார் ஞாநி மாமா. “அதெல்லாம் சின்னத் தப்புக்குச் சரி. ரொம்பப் பெரிய தப்பு செய்தால் என்ன செய்வது?” என்றான் பாலு. “அதற்குத்தான் சட்டம், நீதிமன்றம் எல்லாம் இருக்கிறதே பாலு?” என்றேன்.
“வீட்டுக்குள் நுழைந்து ஒரு பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்துகிற நபருக்கு என்ன தண்டனை தருவது? மரண தண்டனைதானே தரவேண்டும்?” என்றான் பாலு. “இல்லை பாலு. அப்புறம் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? ஓர் உயிரைக் கொல்ல அவனுக்கு உரிமை இல்லை என்பது போல, நமக்கும் உரிமை இல்லை என்பதுதானே சரி?” என்று கேட்டார் மாமா.
“அப்படியானால் கொலை மாதிரி கொடூர குற்றங்கள் செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனை என்னதான் தருவீர்கள்?” என்று கேட்டேன். “அதிகபட்ச தண்டனை என்பது ஆயுள் தண்டனைதான். அது கூட இயற்கையாக மரணம் வரும்வரை சிறையிலேயே இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. பத்து, இருபது ஆண்டுகள் சிறையில் இருந்தபின் ஒருவர் முழுக்கவும் மாறி, திருந்திவிட வாய்ப்பு இருக்கிறது. நன்னடத்தையின் அடிப்படையில் அப்போது விடுதலை செய்யலாம்.” என்றார் மாமா.

“வெளியே வந்து திரும்பக் கொலை செய்யலாம் இல்லையா?” என்றான் பாலு.
“பெரும்பாலும் அப்படி நடப்பதில்லை. பல கொலைகள் ஒரு நொடியில் உணர்ச்சிவசப்பட்டு செய்பவைதான். செய்தவர்களே அதற்காகப் பின்னர் வருத்தப்படும் வாய்ப்புதான் அதிகம். செய்த கொலைக்காக வருந்தாதவர்கள் மிக அபூர்வமான, கொடூரமான மனிதர்கள், கொள்கை அடிப்படையில் கொலை செய்பவர்கள் மட்டும்தான்.” என்றார் மாமா.

“ராணுவத்தில் இருப்பவர்கள் கூடத்தான். போரில் எதிரியைக் கொல்வதை யாரும் கொலையாகவே கருதுவதில்லையே.” என்றேன். “அதைத் தற்காப்புக்காகச் செய்யும் கொலையாகப் பார்க்கிறார்கள்.” என்றார் மாமா.
“மரண தண்டனை கூடாது என்ற கருத்து எப்போது முதல் உலகத்தில் இருக்கிறது?” என்று கேட்டான் பாலு. “சிசாரே பெக்காரியா என்று ஓர் இத்தாலிய அறிஞர் இருந்தார். இன்று உலகத்தில் பல நாடுகளில் இருக்கக்கூடிய சட்டம், குற்றம் பற்றிய வரையறை, வெவ்வேறு குற்றங்களுக்காகத் தண்டனை முறைகள் எல்லாமே அவருடைய ஆய்வை அடிப்படையாகக் கொண்டவைதான். 1764ல் அவர் 'குற்றங்களும் தண்டனைகளும்' என்று ஒரு புத்தகம் எழுதினார். அதில்தான் அவர் 'மரண தண்டனை கூடாது' என்ற கருத்தை முன்வைத்தார்.” என்றார் மாமா.
“என்ன அடிப்படையில் அவர் அப்படிச் சொன்னார்?”
“முதலில் எந்தத் தண்டனையாக இருந்தாலும் அதன் அடிப்படை நோக்கம் என்ன என்பதை அவர் கேட்கிறார். பகுத்தறிவு, பயன்பாடு அடிப்படையில்தான் தண்டனைகள் இருக்க வேண்டுமே தவிர, உணர்ச்சி அடிப்படையில் இருக்கக் கூடாது என்கிறார். குறிப்பாகப் பழி வாங்கும் உணர்ச்சியுடன் தண்டனைகள் அமையக் கூடாது. கொலை செய்தால் பதிலுக்கு கொலை என்பது பழிக்கு பழிதானே? குற்றவாளி திரும்ப அந்தக் குற்றத்தைச் செய்யாமல் தடுக்க வேண்டும். திருத்த வேண்டும்.
இந்தப் பகுத்தறிவு அடிப்படையில் சிறை தண்டனை தவிர வேறு எதுவும் தேவையில்லை என்கிறார் பெக்காரியா.”
“அவர் சொன்னதை எந்த அரசாங்கமாவது ஏற்றுக்கொண்டதா?” என்று கேட்டான் பாலு. “இத்தாலியில் டஸ்கானி என்ற பகுதி லியோபால்ட் மன்னர் ஆட்சியின் கீழ் இருந்தது. அந்த மன்னர் பெக்காரியோ கருத்தை ஏற்று 1864 நவம்பர் 30ம் தேதி தன் நாட்டில் மரண தண்டனை இனி இருக்காது என்று அறிவித்தார். இப்போது உலகம் முழுக்க அந்த நாளை மரண தண்டனைக்கெதிரான நாளாக அனுசரிக்கிறார்கள்.” என்றார் மாமா.
“எத்தனை நாடுகள் இப்போது மரண தண்டனையை நீக்கிவிட்டன?”
“ஐரோப்பாவில் இருக்கும் எந்த நாட்டிலும் இப்போது மரண தண்டனை கிடையாது. மொத்தம் 103 நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்டன. 30 நாடுகள் அறிவிக்காவிட்டாலும் மரண தண்டனை தருவதில்லை. இந்தியா, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், இலங்கை, அமெரிக்கா, ஜப்பான், வட கொரியா, இந்தோனேசியா போன்ற 56 நாடுகளில் மட்டும்தான் மரண தண்டனை இன்னமும் இருக்கிறது.”

மரண தண்டனை அமலில் உள்ள நாடுகளில் கொலைக் குற்றங்கள் குறைந்துவிட்டதாகவோ, அது இல்லாத நாடுகளில் அதிகமாகிவிட்டதாகவோ சொல்ல முடியாதாம். குற்ற விகிதங்கள் எப்போதும் போலத்தான் இருக்கிறதாம். 
மரண தண்டனை அளிப்பதில் இருக்கும் முக்கியமான சிக்கல், சமயத்தில் ஒரு நிரபராதி கூட தவறாகத் தண்டிக்கப்பட்டுவிடலாம் என்பதாகும். ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு அப்பாவி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் நீதியின் புனிதமான கொள்கை. “ஆனால் நடைமுறையில் அப்படி இருப்பதில்லை. அமெரிக்காவில் ஒரு கொலைவழக்கில் பிராண்டன் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் பிறகு இன்னொரு நபர் வந்து தான்தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு அதை நிரூபித்தார். பிராண்டன் அப்பாவி என்று தெரியவந்தது. இதுபோல மரண தண்டனை விதிக்கப்பட்ட 150 பேர் பின்னால் டி.என்.ஏ. சாட்சிய அடிப்படையில் குற்றம் செய்யாதவர்கள் என்று நிரூபிக்கப்பட்டது.
டி.என்.ஏ. சாட்சியம் கிடைத்திராவிட்டால் அவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டிருப்பார்கள்.” என்றார் மாமா.
“இருபது வயதில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருத்தர் பின்னர் அது குறைக்கப்பட்டதால் உயிர் தப்பி 60 வயது வரை வாழ்ந்து புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்தார். யார் தெரியுமா?” என்று க்விஸ் போட்டது வாலு. அதுவே பதில் சொல்லிற்று. “ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கி. தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிப்பதற்கென்று நடந்த வாசகர் வட்டத்தில் அவர் உறுப்பினராக இருந்ததற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு ஜார் மன்னன் அவரை மன்னித்து சிறைக்கு அனுப்பினான்.”
தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய ஒரு புத்தகத்தின் தலைப்பு என்ன தெரியுமா?
குற்றமும் தண்டனையும்!

தஸ்தாயெவ்ஸ்கி நான்கு ஆண்டுகள் கொடுஞ்சிறையிலும் ஆறு ஆண்டுகள் கட்டாய ராணுவ சேவையிலும் இருந்தார். அவர் எழுதிய எல்லா நாவல்களும் தொடர்கதைகளாக பத்திரிகைகளில் எழுதப்பட்டவை. 170 மொழிகளில் அவருடைய படைப்புகள் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. மெர்க்குரி கிரகத்தில் ஒரு பள்ளத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் அவர் பெயரில் உள்ளன

No comments:

Post a Comment