காட்சி மொழிகளாக செதுக்கப்படும்
சென்னை வாழ்க்கை
நடைபாதை கடையில் நாஷ்டா சாப்பிடுபவர் முதல், ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்து சாப்பிடுபவர்கள் வரை, அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது சென்னை. அதிகாலையில் அலறும் ஆட்டோ சத்தத்தில் துவங்கி, நள்ளிரவில் கேட்கும் குல்பி ஐஸ் சத்தம் வரை பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.
இப்படி, மாநகர் மக்களின் அன்றாட வாழ்க்கை கேட்போருக்கு, ஒரு புதிய செய்தியையும், பார்ப்போருக்கு புதிய படம் பார்த்த அனுபவத்தையும் தரும். சென்னை வாழ்க்கையை படம் பிடித்தாலே போதுமானது. புதிதாக கற்பனை தேவையில்லாதது என, அறிந்த இளைஞர்கள் பலர், டிஜிட்டல் கேமராவுடன் சென்னையை வலம் வந்து படம் பிடிக்கத் துவங்கியுள்ளனர்.
இதன் தாக்கமாக, சென்னை மக்கள், வாழ்க்கையை நகர்த்த நூதனமாக செயல்படும் விதத்தையும், கிராமத்து மக்களின் சென்னை பார்வை குறித்தும் குறும்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
சமீபத்தில் வெளிவந்த குறும்படங்களில் சில...
அதிகாலை:
விபத்திற்கான அடிப்படை காரணத்தை களையாமல் விபத்துகளை குறைப்பது சாத்தியமில்லை என்கிற விஷயத்தை, மாநகரில் தொடரும் இரு வேறுபட்ட பிரச்னைகளை களமாக கொண்டு வெளிக்காட்டும் படம்
"அதிகாலை' ஐ.டி., துறையில் வேலை எப்போதும் நிரந்தரமில்லை என்ற கருத்தை விளக்கும் விதமாக, இளைஞர் ஒருவருக்கு வேலை பறிபோகிறது.
நல்ல சம்பளத்தில் புதிய வாழ்க்கையில் பழகிப் போன அவர், வேலையிழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார். சகோதரி, காதலி, குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் போய் விடுமோ என்ற, மன உளைச்சலில் அதிகாலையில் காரை ஓட்டிக் கொண்டு வீடு திரும்பும் அவர், விபத்தில் சிக்கி பலியாகிறார்.
இதே போல, கூவம் கரையோரம் வசிக்கும் குடிசைவாசிகள், புறநகர் பகுதிக்கு குடியேற்றம் செய்வதால் ஏற்படும் வாழ்க்கை சிக்கலை விளக்குகிறது படத்தின் மற்றொரு பகுதி.
புதிய வீட்டை பார்க்க மனம் இல்லாமல், குழப்பத்துடன் அதிகாலை புறப்பட்டு பார்க்க போகும் இளைஞர் மீது கார் மோதி விபத்தில் பலியாகிறார். இப்படி இரண்டு தளங்களில் அதிகாலை படம் நகர்கிறது.
"எத்தனை பாதுகாப்பு உடைமைகளும் உருவாக்கப்பட்டும், விதிமுறைகளை பின்பற்றக் கூறுவதாலும் மட்டுமே விபத்துகள் முழுவதுமாக குறைந்துவிடப் போவதில்லை. அதையும் மீறி, பெரும்பாலான விபத்துகள் மன அழுத்தத்தினால் நடக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது,'' என அழுத்தமாக கூறிய படத்தின் இயக்குனர் கவின் அந்தோணி, ஒரு விபத்தில் தனது கையை இழந்தவர்.
பூச்சாண்டி:
சிறுவன் ஒருவனது கதாபாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு, சென்னை மெரீனா கடற்கரையின் மறைவான முகத்தை பளிச்சென வெளிச்சம் போட்டு காட்டும் குறும்படம் தான் "பூச்சாண்டி'.
கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்த சிறுவன், மெரீனா கடற்கரையில் சுற்றி அலைகிறான். புதிதாக கடற்கரையில் சுற்றும் அவனை பலர் நோட்டமிடுகின்றனர். குறிப்பாக, குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைக்கும் கும்பல், கிட்னியை எடுத்து விற்பனை செய்யும் கும்பல், ஒரே இன பாலுறவு உணர்வு உடைய நபர்கள் என, பலரது பார்வையும் சிறுவனை நோக்கியே உள்ளது.
கடற்கரையில் சுண்டல் விற்கும் மற்றொரு சிறுவன், அவர்களிடம் இருந்து கிராமத்து சிறுவனை தப்பிக்க வைக்கும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. "சிறுவர்கள் சீர்திருத்த பள்ளிகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்த போது, அங்கு ஒரு சிறுவன் தனக்கு மெரீனா கடற்கரையில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து கூறியதை கேட்டு அதிர்ந்த நான், அதையே காட்சிகளாக அமைத்து தந்து உள்ளேன், ''என்றார், படைப்பை உருவாக்கிய சைமன் ஜார்ஜ்.
அடுத்த விடுமுறை:
தொடர்ந்து, ஞாயிறு பொழுதை வீணாக கடத்தும் இன்றைய இளைஞர்களுக்கு, கொடுங்கையூர் குப்பை கிடங்கை அடித்தளமாக அமைத்து, நல் வழிக்கு அழைத்து செல்லும் படைப்பு தான் "அடுத்த ஞாயிறு'. விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமையை, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கழிப்பதற்காக, மூன்று இளைஞர்கள் புறப்படுவதாக கதை துவங்குகிறது.
அவர்கள், அங்கு சுற்றித் திரியும் ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்வதும், அங்கு வேலை பார்ப்பவர்களுடன் இணைந்து பொங்கல் விழா எடுப்பதுமாக, அவர்கள் உற்சாகமாக காணப்படுகின்றனர். இப்படி, அடுத்தடுத்த ஞாயிற்றுக் கிழமைகளில், மேலும், பல இளைஞர்களுடன் அங்கு சென்று, அப்பகுதி மக்களுடன் ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபடும் சமூக நலன் சார்ந்த படைப்பாக முடிகிறது.
"மாநகரில் மக்கள் பிரச்னைகளையே காட்சி மொழியாக்க விரும்பும் நான், எனது முந்தைய படைப்புகளில் பேசின்பாலம் பகுதி பிரச்னை மற்றும் திருவொற்றியூர் பகுதி ரயில் தண்டவாளம் அருகேயுள்ள பிரச்னைகளை சுட்டிக் காட்டியுள்ளேன். வரும் காலங்களில் பல பிரச்னைகளுக்கு எனது படங்கள் மூலம் சிறியளவிலான தீர்வுகளை எட்ட விரும்புகிறேன்,''என விரிவாக விளக்கினார் இப்படத்தின் இயக்குனர் ராஜராஜன்.
அடைக்கலம்:
சிறிய குடிசைக்குள், பல குடும்பங்கள் ஒன்றாக வசிக்கும் மாநகர் வாசிகளின் இக்கட்டான வாழ்க்கையை, அப்படியே படம் பிடித்து காட்டுகிற குறும்படம் "அடைக்கலம்'. தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்தால், வீட்டில் தண்டிப்பார்களே என்ற பயத்தில், செருப்பு தைத்து வாழும் ஏழைகளின் வீடுகளில் அடைக்கலம் ஆகிறார், வசதியான வீட்டில் பிறந்த ஒரு சிறுவன்.
மிகக் குறுகிய இடத்தில் வசிக்கும், அவர்களின் வாழ்க்கை எல்லாம் அவனுக்கு புதிராக உள்ளது. மறுநாள் சிறுவனை மீட்டு செல்லும் தந்தையிடம், சிறுவன் ஏழைகளின் வாழ்க்கை நிலை குறித்து கேள்விகளை தொடுக்கிறான். தந்தையோ, அதுவெல்லாம் இறைவனின் செயல் என, கடவுள் மீது பதிலை திசை திருப்பி விட, "கடவுள் நல்லவருன்னு சொன்னீங்களே அப்பா' என முடிக்க, அடைக்கலம் அசத்தலாக முடிகிறது.
"சென்னை ஓட்டேரி பகுதியருகே, மேட்டுபாளையத்தில் இன்றும், பல நூறு குடும்பங்கள் செருப்பு தைத்து வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் மிக குறுகிய இடத்தில் வசிக்கும் நிலைமையை, இவ்வுலகிற்கு காட்டும் படமே அடைக்கலம், ''என, விளக்கினார் படத்தின் இயக்குனர் விஜயன்.
புறக்கணிப்பு:
மாநகரின் ஒரு அங்கமான திரையுலகம், போலியான கலைஞர்களின் சிக்கியுள்ள நிலையை, உண்மையான ஒரு கூத்துக் கலைஞன் பாத்திரத்தின் கோபத்தின் வழியே காட்டும் குறும்படம் தான் "புறக்கணிப்பு'.
தேனாம்பேட்டை பகுதியில் மரக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கு, அரசியல்வாதியாக ஆசை. அவரிடம் உதவியாக இருக்கும் சிறந்த கூத்துக் கலைஞராக ராஜ்பாட் நடராஜன் என்கிற வயதான பாத்திரம். மரக்கடை வைத்திருப்பவர் அரசியல்வாதியாக இலக்கியமும், சினிமாவும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு, தகுதியற்ற கலைஞர்களிடம் பாடம் கற்கிறார்.
அந்த கலைஞர்களிடம் கோபப்படும், நடராஜன் ஒரு சிறந்த கூத்துக் கலைஞர் என்பதை படம் பின்னோக்கி பார்க்கிறது. இப்படி வளர்ந்தவர் திரையுலகில் வாய்ப்பு கேட்டு, மூன்றாம் தர கலைஞராக மட்டுமே வாய்ப்பு கிடைத்து, அதில் வெறுத்து ஒதுங்கியே மரக்கடையில் இணைந்ததாக படம் முடிகிறது.
"அசோகமித்திரன் எழுதிய மீதம் இருக்கும் சொற்கள்' நாவலை தழுவி, இந்த குறும்படத்தை எடுத்துள்ள நான், யதார்த்தத்தை விட்டு விலகி நிற்கும் தமிழ் திரையுலகில், யதார்த்தமான கலைஞர்களுக்கு வாய்ப்பு இல்லை என்பதை அழுத்தமாக சொல்ல முயற்சி செய்துள்ளேன், ''என பக்குவமாக பேசினார், படத்தின் இயக்குனர் ஜெயராவ்.
நிழல் திருநாவுக்கரசு:
சென்னையைப் பற்றி உரையாடிச் செல்லும் குறும்படங்கள் ஏராளமாக உருவாகியுள்ளன. கொட்டிக் கிடக்கும் காட்சிகளுடன் சென்னைநகர வாழ்க்கையை, சீட்டு கட்டு போல் தங்களுக்கான விருப்பம் போல் கோர்த்து சித்திரமாக உருவாக்கியுள்ளனர். இப்படி சென்னை வாழ்க்கை குறும்படச் சுருளுக்குள்ளும் சிக்கி உள்ளது.
சினிமா ஆசையில், சென்னை நகரை நோக்கி இளைஞர்கள் வருவது, தினமும் நடக்கும் நிகழ்வு. அவர்களில் அதிகமானோர் தோற்றுப்போகின்றனர். சிலர் உண்மை நிலை உணர்ந்து வேறு பக்கம் திரும்புகின்றனர். அப்படி திரும்புவோரை வாழ்க்கை படம் பிடிக்க கற்றுத்தருகிறார் நிழல் திருநாவுக்கரசு. சென்னை வாழ்க்கையை காட்டும் குறும்படங்கள் குறித்து அவர் கூறியதாவது:
தற்போது வெளிவரும் குறும்படங்கள் சென்னையில் உள்ள அவல நிலையை எடுத்து காட்டுகின்றன. அது சிறப்பான விஷயமாக இருந்த போதிலும், சிக்கலான சென்னை வாழ்க்கையில் சாதுர்யமாக காலத்தை நகர்த்தும் வாழ்க்கை நிலையையும், இங்கு பிரச்னைகளை எளிதாக எதிர்கொள்ளும் வழிவகைகள் குறித்த குறும்படங்களையும் படைக்க இளைஞர்கள் முன் வர வேண்டும். இவ்வாறு திருநாவுக்கரசு கூறினார்.
No comments:
Post a Comment