GANDHI காந்திஜி இறந்த பிறகு உலக அளவில்
மிகவும் சக்தி வாய்ந்த புகைப்படம்
”லைஃப்” பத்திரிகை.
மார்கரெட் புருக் ஒயிட்
சாந்தமே உருவான முகத்துடன் கையில் நாளிதழோடு ராட்டையின் முன்பு காந்திஜி அமர்ந்திருக்கும் இந்தப் புகைப்படம் மிகவும் பிரபலமானது. அவரது அஹிம்சை, ஒத்துழையாமை, கிராம சுயராஜ்ஜியம், ஆங்கிலேயருக்கு எதிராக அவர் எடுத்த ஆயுதமான இராட்டை என அனைத்தையும் ஒருசேர கொண்டிருக்கும் இந்தப் புகைப்படம் உலகளவில் அஹிம்சையின் முகமாக இன்றளவும் அவரை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது.
”லைஃப்” பத்திரிகை.
மார்கரெட் புருக் ஒயிட்
|
1946-ம் ஆண்டு பிற்பகுதியில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கான சூழல் நிலவியதால் அதற்கு காரணமான காந்திஜியைப் பற்றி எழுத நினைத்தது அமெரிக்காவின் புகழ்பெற்ற ”லைஃப்” பத்திரிகை. அதற்காக மார்கரெட் புருக் ஒயிட் (Margaret Bourke-White) என்ற பெண் புகைப்படப் பத்திரிகையாளரை இந்தியாவுக்கு அனுப்பியது.
டெல்லியில் காந்திஜியை சந்திக்க சென்ற அவரை உடனே அனுமதிக்கவில்லை. மாறாக காந்திஜி சார்பில் நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டது. ஒன்று புகைப்படம் எடுப்பதற்கு முன்பு இராட்டை சுற்றக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் இராட்டையோடு காந்திஜியை புகைப்படம் எடுக்க அனுமதிக்க முடியும். மற்றொன்று பிளாஷ் பயன்படுத்தக் கூடாது என்பது. காந்திஜியைப் புகைப்படம் எடுப்பது என்பது வரலாற்றில் அதிமுக்கியமான நிகழ்வு என்பதால் மார்கரெட் புருக் ஒயிட்டும் இராட்டை சுற்றக் கற்றுக் கொள்கிறார். ஆனால் பிளாஷ் பயன்படுத்த மட்டும் காந்திஜியின் உதவியாளர்கள் மூலம் அவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டார்.
அதன்பிறகு காந்திஜி மௌன விரதம் இருந்த ஒரு நாளில் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டார் ஒயிட். அன்றைய தினம் மூன்றே படங்கள்தான் எடுத்தார் ஒயிட். முதல் இரண்டும் சரியாக வராதநிலையில் மூன்றாவதாக எடுத்தப் படம்தான் ஒழுங்காக பதிவானது.
ஆனால் அந்தப் புகைப்படம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும் என்று மார்கரெட் ஒயிட் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் எந்தக் கட்டுரைக்காக அவர் அமெரிக்காவில் இருந்து வந்தாரோ அந்தக் கட்டுரையில் அந்தப் புகைப்படம் வெளியாகவில்லை. ஆனால் 1948-ல் காந்திஜி இறந்த பிறகு உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த புகைப்படமாக மாறியது. காந்திஜி இறப்பிற்குப் பிறகு இந்தப் புகைப்படத்தைத்தான் உலகின் அனைத்து முன்னணிப் பத்திரிகையிலும் வெளியிட்டது.
அமெரிக்காவின் முதல் பெண் போர் போட்டோகிராபரான மார்கரெட் புருக் ஒயிட், ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா, அம்பேத்கர், வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட முன்னணித் தலைவர்களை தனது காமிராவில் பதிவு செய்தவர்.
சோவியத் யூனியனில் அனுமதிக்கப்பட்ட முதல் பெண் புகைப்படக்காரரும் மார்கரெட் ஒயிட்தான். 1948 ஜனவரி 30-ம் தேதியன்று காந்திஜி சுட்டுக் கொல்லப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அவரை இறுதியாக பேட்டி எடுத்தது இந்த மார்கரெட் புருக் ஒயிட்தான்.
No comments:
Post a Comment