Saturday, 6 August 2016

நடிகையர் திலகம் சாவித்திரி மடிந்த கதை

நடிகையர் திலகம் சாவித்திரி
மடிந்த கதை 







ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.

ஊமை உள்ளங்கள் படத்தில், தான் நடிப்பதில்லை என, முடிவு எடுத்த ஜெமினி, அதன்பின், சாவித்திரியைப் பார்ப்பதையே தவிர்த்தார். சாவித்திரியிடம், எப்போதும் தலை தூக்கும் உயர்வு மனப்பான்மை, இங்கேயும் தலை தூக்கியது. தன்னை அவமானப்படுத்த முயலும்
 ஜெமினி முன், வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற உணர்வு, 
அவருக்குள் மேலோங்கியது. இச்சூழலில் படம் தயாரிக்க வேண்டுமாயின், சிவாஜியை கதாநாயகனாக நடிக்க வைப்பது தான் சிறந்தது என, அவர் மனதில் தோன்றியது.

ஊமை உள்ளங்கள் என்ற படம், பிராப்தம் என,பெயர் மாற்றப்பட்டது.

ஜெமினியோடு, சாவித்திரிக்கு நடந்த சண்டை, சிவாஜிக்குத் தெரியாது. தன் தங்கை இயக்கப் போகும் படத்தில் நடிப்பது அண்ணனின் கடமை என்ற எண்ணத்தில், கதாநாயகனாக நடிக்க, ஒப்புக் கொண்டார் சிவாஜி.

'படம் தயாரிக்காதே என்று சொல்லியும் கேளாமல், சிவாஜியை வைத்து படம் எடுக்கிறாளே...' என, ஜெமினிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இதனால், சாவித்திரியிடம் பேசுவதையே, குறைத்துக் கொண்டார்.

உயிருக்கு உயிராக நேசித்த அத்தம்பதி, தங்களை அறியாமலேயே, தங்களுக்கிடையே ஒரு பெரிய கோடு ஒன்றை இட்டுக் கொண்டனர் என்றால், அதன் பெயர் தான் விதி!

பிராப்தம் படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பிற்காக, ஆந்திர மாநிலம், கோதாவரி ஆற்றங்கரையில், 'செட்' அமைத்தார், சாவித்திரி. முகமனசுலு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு இங்கு தான் நடைபெற்றது. 'சென்டிமென்ட்' கருதி, அதே இடத்தில், படப்பிடிப்பை நடத்த விரும்பினார், சாவித்திரி.


ஆனால், படப்பிடிப்பிற்காக சென்ற போது, கன மழையால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த, 'செட்'டுகள் தன் உருவத்தை தொலைத்திருந்தது. இதனால், படப்பிடிப்பு நடத்த முடியாமல், சிவாஜியின் கால்ஷீட்டை இழந்து, பெருத்த பண விரயத்துக்கு ஆளானார், சாவித்திரி.

மீண்டும் அதே இடத்தில், 'செட்'டுகள் அமைத்து, சிவாஜியின் கால்ஷீட்டை மறுபடியும் வாங்கி, படப்பிடிப்பை நடத்தினார். படம் வளர வளர, சாவித்திரியின் பணம், கரைய ஆரம்பித்தது.

பிராப்தம் படம் பூஜை போட்ட சில நாட்களிலேயே, கணிசமான தொகைக்கு விலை பேசினர், வினியோகஸ்தர்கள்.

ஆனால், சாவித்திரிக்கு யோசனை கூறிய சிலர், 'படப்பிடிப்பு முடிந்த பின் படத்தை விற்றால், அதிக லாபத்தை சம்பாதிக்கலாம்...' எனக் கூறி, படம் விற்பனையாவதை தடுத்தனர்.

விலை பேச வந்த வினியோகஸ்தர்கள், படத்தை வாங்க முடியாமல் திரும்பினர். அன்று, பிராப்தம் படத்தை விற்றிருந்தால், அவர் வாழ்க்கையில் அரங்கேறிய கசப்புகள், அவரை சந்தித்து இருக்காது; விதி வேறொரு பக்கமாக விளையாட்டு காட்டியது.

சாவித்திரியை அழிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருந்தது.
 சாவித்திரியின் மூத்த சகோதரி மாருதி, 
அவரது கணவர் மல்லிகார்ஜுன ராவ் மற்றும் ஒளிப்பதிவாளர் ஒருவர், ஆகியோர் அதில் முதன்மையானவர்கள்.

பிராப்தம் படவேலை, ஜெமினி கொடுத்த மன அழுத்தம் மற்றும் படத் தயாரிப்பில் ஏற்பட்ட கால தாமதம் என, மன உளைச்சலில் இருந்த சாவித்திரிக்கு, அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது.

கடமைக்குத் தான் மருத்துவரை போய் பார்த்தார் சாவித்திரி; அப்போது தான், அவருக்கு சர்க்கரை நோய் தாக்கியிருப்பது தெரிய வந்தது.

சாவித்திரியிடம் பேசுவதை ஜெமினி தவிர்த்திருந்தாலும், அபிபுல்லா சாலையில் அமைந்துள்ள சாவித்திரியின் வீட்டுக்கு வருவதை, அறவே கைவிடவில்லை.

சாவித்திரி உணர்ச்சிவசப்பட்டு பேசிய சில சொற்கள், ஜெமினியை பெரிதும் காயப்படுத்தி இருந்தது என்றாலும், குழந்தைகளைப் பார்க்க வருவது போல, சாவித்திரியை பார்த்து விட்டுச் சென்றார்.

சாவித்திரியை, எச்சூழலிலும் ஜெமினியோடு சேர விடக் கூடாது என்று நினைத்தவர்களுக்கு, ஜெமினியின் வருகை இனிக்கவில்லை. திட்டமிட்டு அவரை அவமானப்படுத்தும் செயல்களில் இறங்கினர்; அதில், வெற்றியும் அடைந்தனர்.

சாவித்திரியின் உழைப்பில், அவர் தாய்வழி குடும்பங்கள் அனைத்தும், பராமரிக்கப்பட்டு வந்தது. தன்னை நம்பி வந்தவர்களை எச்சூழலிலும் கை விட்டதில்லை, சாவித்திரி. 

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்த கர்ணனை போல, தன் செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க, சேரக் கூடாத சிலரை, தன்னுடன் சேர்த்துக் கொண்டார். அவர்களில் சாவித்திரியின் தாய்வழி சொந்தமான சரஸ்வதியின் குடும்பமும் ஒன்று!

சாவித்திரியை, எப்படியாவது ஜெமினியோடு சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று, பின்னாளில், சாவித்திரியின் மருமகனான கோவிந்தராவின் தகப்பனார், பெரிதும் பாடுபட்டார்.

ஆனால், தெலுங்குப் படத் தயாரிப்பாளர் மதுசூதனராவின் மனைவி வி.சரோஜினி, மல்லிகார்ஜூன ராவ் மற்றும் சாவித்திரி புரொடக் ஷன்ஸ் மேலாளர் சுப்ரமணியம் ஆகியோர், இவரின் முயற்சியை தடுத்து, சாவித்திரியை ஜெமினியோடு ஒட்டாமல் பார்த்துக் கொண்டனர்.

அன்று — 
அப்பாவைப் பார்க்க வேண்டுமென்று, அடம் பிடித்து அழுதாள், சாமுண்டீஸ்வரி; செய்தி ஜெமினிக்குப் போனதும், துடித்து விட்டார்.

குழந்தைகள் மீது, எப்போதுமே ஜெமினிக்கு பாசம் அதிகம். சாமுண்டீஸ்வரி அப்பா செல்லம்; சிறுவயதில் இருந்து, அவள் அதிக நேரம் செலவிட்டது, தன் அப்பாவுடன் தான். அப்பாவை பிரிவது, அவளுக்கு முடியாமல் போனது.

சாமுண்டீஸ்வரி அழுகிறாள் என்றவுடன், 'என்ன நடந்தாலும் பரவாயில்லை, சாவித்திரி வீட்டிற்குப் போகலாம்...' என, முடிவெடுத்தார் ஜெமினி.


உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பிராப்தம் படப்பிடிப்பை இடையில் நிறுத்தி, வீட்டில் ஓய்வில் இருந்தார், சாவித்திரி.
கதையாசிரியை சரோஜினி, காலையிலேயே சாவித்திரி வீட்டிற்கு வந்து விட்டார். அவர் வந்தாலே, சாவித்திரியின் நிலைமை வேறு மாதிரியாகி விடும்.

சரோஜினி வாயில் எப்போதுமே, 'குட்கா' என்ற புகையிலை இருக்கும். 'மது குடிப்பதற்கு தனக்கு ஒரு துணை வேண்டும் என்று, சாவித்திரியை வற்புறுத்தி, தன் வழிக்கு அழைத்துப் போனவர்...' என்ற குற்றச்சாட்டும், இவர் மீது உண்டு.

சாவித்திரி என்ற பிம்பத்தை, ஒட்டுமொத்தமாக சீர்குலைத்ததில் சரோஜினியின் கைவரிசையும் ஒரு காரணம்.


சாவித்திரி வீட்டிற்கு வந்திருந்த சரோஜினி, சாவித்திரியை மது அருந்த அழைத்தார்; ஆனால், உடல்நிலை சரியில்லாததால், வேண்டாம் என மறுத்து விட்டார் சாவித்திரி. எப்படியோ பேசி, சாவித்திரியை தன் வழிக்குக் கொண்டு வந்தார், சரோஜினி; மது மயக்கம் இருவரையும் அணைத்திருந்த நேரத்தில், மகள் சாமுண்டீஸ்வரியைப் பார்க்க, வீட்டிற்குள் நுழைந்தார் ஜெமினி.

அங்கு இருந்த சூழலை பார்த்ததும், தன்னையும் அறியாமல் கோபம் அதிகமாகி, சரோஜினியை கடுமையான சொற்களால் திட்டி, வீட்டை விட்டு வெளியேறும்படிக் கூறினார், ஜெமினி.

விதி, வேறு விதமாக விளையாடியது. சாவித்திரியோ, தன் தோழிக்காக, ஜெமினியை வீட்டை விட்டு வெளியேறும்படி கூறினார்.

ஜெமினியின் தலையில், யாரோ பாறாங்கல்லைத் தூக்கிப் போட்ட உணர்வு. சாவித்திரியின் அறியாமையை நினைத்து, மனதுக்குள் அழுதார்.

சரோஜினிக்கு வந்த வேலை சுலபத்தில் முடிந்தது. இத்தருணத்திற்காக காத்திருந்த மல்லிகார்ஜூன ராவ், தனக்குள் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டார். 


No comments:

Post a Comment