Saturday, 6 August 2016

எம்.ஜி.ஆருடன் முதல் சந்திப்பு- ஆரூர் தாஸ்

 எம்.ஜி.ஆருடன் முதல் சந்திப்பு- ஆரூர் தாஸ் 


 கல்யாணராமய்யர் கம்பெனியில் டி.என்.ஆர். புரொடக்ஷன்ஸ் பேனரில், ‘‘ராணி லலிதாங்கி’’ படத்திற்கான வேலைகள் ஆரம்பமாயின. வாத்தியார் தஞ்சை ராமையாதாஸ் சொன்ன கதையையும், சில நாடகக் குறிப்புகளையும் வைத்துக்கொண்டு நான் எழுதிய லலிதாங்கியின் திரைக்கதைக் கோப்பை எடுத்துக்கொண்டு எம்.ஜி.ஆரிடம் சென்றேன். காலை மணி ஒன்பது. எம்.ஜி.ஆரை சந்திக்கப் போகிறோம் என்ற சந்தோஷம்.

இப்பொழுது அவ்வை டி.கே.சண்முகம் சாலையும், (அப்பொழுது அதற்கு ‘லாயிட்ஸ் ரோடு’ என்று பெயர்) ராயப்பேட்டை நெடுஞ்சாலையும் சந்திக்கும் ரவுண்டானாவின் அருகில் உள்ள வழக்கறிஞர் வி.பி.ராமனின் இல்லத்திற்கு அருகே உள்ள ‘தாய் வீடு’ என்று பெயர் கொண்ட சொந்த வீட்டில் எம்.ஜி.ஆர். தன் மனைவியார் சதானந்தவதி அம்மையார் மற்றும் தனது மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார்.

சதானந்தவதி அம்மையார் உடல் நலமின்றி படுத்த படுக்கையாகவே இருந்து வந்தார். “என்னால் உங்களுக்கு ஒரு சுகமும் இல்லை. எனவே, வி.என்.ஜானகியை மணந்து கொள்ளுங்கள். இதற்கு மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன். அவள் இந்த வீட்டில் இருக்க வேண்டாம். வேறு வீடு பார்த்து, குடிவையுங்கள்” என்று அவர் எம்.ஜி.ஆரிடம் கூறினார்.

இதைத் தொடர்ந்து, “தாய்வீடு” இருந்த தெருவுக்கு எதிர்த்தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு வி.என்.ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர் வசித்து வந்தார்.
எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்ற நான், வெளியிலிருந்த அழைப்புமணியின் பொத்தானை அழுத்தினேன். உடனே திரைச்சீலையை விலக்கிக் கொண்டு பட்டு ஜிப்பா அணிந்து, அதன் இரு கைப்பகுதித் துணியை உருட்டி, முழங்கைக்கு மேலே முண்டா தெரியும்படியாகப் பொருத்தியவாறு எலுமிச்சம் பழ நிறத்தில் ஒருவர் வெளியில் வந்தார்.

அவரது முகத்தைப் பார்த்தேன். ‘ராஜகுமாரி’, ‘மருதநாட்டு இளவரசி’, ‘மோகினி’, ‘மந்திரிகுமாரி’, ‘மர்மயோகி’ போன்ற படங்களில் நான் பார்த்து ரசித்த அதே முகம். என் இதயத்தை எடுத்து பனிக்கட்டி மீது வைத்து, அது இளகி உருகுவது போல ஓர் உணர்வு! ஒப்பனை இல்லாமலே எம்.ஜி.ஆர். அழகாக இருந்தார். கும்பிட்டேன். கும்பிட்டார்.

ஒரு நொடிப் பொழுது மலைத்து மவுனமாக நின்றேன்.
அந்த மவுனத்தை அவரே கலைத்தார்.
‘‘யார் நீங்க? என்ன வேணும்?’’
‘‘வாத்தியார் தஞ்சை ராமையாதாஸ் கிட்டேர்ந்து வரேன். இந்த ராணி லலிதாங்கி பைலை ஒங்ககிட்டே குடுத்திட்டு வரச்சொன்னாரு.

‘‘நீங்க யாரு?’’

‘‘அவரோட அஸிஸ்டெண்ட்.’’

‘‘சரி, இரண்டு நாள் கழித்து இதே நேரத்துக்கு இங்கே வாங்க. நீங்க போகலாம்’’ என்று உள்ளே போய்விட்டார்.
திரும்பி கோடம்பாக்கம் வந்து இந்த விவரத்தை வாத்தியாரிடம் சொன்னேன்.
மூன்றாவது நாள் காலை மணி 9. எம்.ஜி.ஆர். இல்லம். அழைப்பு மணி.
எம்.ஜி.ஆர். வெளியில் வந்தார். கையில் லலிதாங்கி பைலுடன் சில காகிதங்கள்.


வெளிவராந்தாவில் வட கோடியில் ஒரு மேசையும், மூன்று நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.
ஒரு நாற்காலியில் அவர் அமர்ந்தார். எதிரே என்னை உட்காரச் சொன்னார்.
பைலையும், காகிதங்களையும் மேசை மீது வைத்தார். கேட்டார். ‘‘இந்தத் திரைக்கதையை யார் எழுதினது?’’

‘‘நாடகக் கதையையும், சில குறிப்புகளையும் வாத்தி யாரு சொன்னாரு. அதை வச்சிக்கிட்டு நான்தான் எழுதினேன். வாத்தியார்கிட்டேயும் படித்து காட்டினேன். நல்லாருக்குன்னாரு. அதுக்கப் புறந்தான் ஒங்ககிட்டே கொடுக்கச் சொன்னாரு.’’

‘‘ஓகோ, சரி. லலிதாங்கி ‘ஒடியாத இடையினால் ஊர்வசியாக ஆடினாள்’ அப்படின்னு ஒரு காட்சியில் எழுதியிருக்கீங்களே. அது என்ன ஒடியாத இடை? அப்படின்னா என்ன?’’ என்று கேட்டார். அதற்கு நான் விளக்கம் சொன்னேன்.

‘‘துடி இடை, பிடி இடை, கொடி இடை, மின்னல் இடை, மெல்லிடை, சிற்றிடை’’ என்று நான் கூறிக்கொண்டிருக்கும் போதே இடைமறித்து, ‘‘இருங்க இருங்க. இப்ப நீங்க சொன்ன ஒவ்வொண்ணுக்கும் எனக்கு விளக்கம் சொல்லுங்க.’’
‘‘துடின்னா உடுக்கு. இடைன்னா இடுப்பு. உடுக்கு மாதிரி ஒடுங்குன இடுப்பு. பிடின்னா ஒரு கைப்பிடி. அந்த அளவுள்ள இறுகிய இடுப்பு. கொடின்னா பூங்கொடி போல வளைந்தாடும் தன்மையுள்ள இடுப்பு. மின்னற்கொடி போன்ற மெல்லிய இடுப்பு. இப்படியெல்லாம் பெண்களின் இடுப்பழகை கவிஞர்கள் கவிதையிலே வர்ணிச்சிருக்காங்க. அதெல்லாம் இல்லாம புதுசா இருக்கட்டுமேன்னு ஒடியாத இடை – அப்படின்னா இன்னும் கொஞ்சம் ஆடுனா, அவ இடிப்பு ஒடிஞ்சிடும். அந்த அளவுக்கு மெல்லிய இடுப்பு அப்படிங்குறதுக்காக ஒடியாத இடைன்னு எழுதினேன்.

இந்திர மன்றத்தின் நடன ராணிகள்னு சொல்லப்படுகிற ரம்பா, திலோத்தமா, மேனகா, ஊர்வசி இந்த நாலு பேர்ல, சொல்லின் ஓசை நயத்துக்காக ஊர்வசியைச் சேத்துக்கிட்டேன்.’’
– இந்த எனது விளக்கத்தைக் கேட்டு ரசித்து மலர்ந்த முகத்துடன் மேலும் என்னைக் கேட்டார்.
‘‘நீங்க என்ன படிச்சிருக்கீங்க?’’


‘‘எஸ்.எஸ்.எல்.சி.! தமிழ் நூல்கள் நிறையப் படிச்சிருக்கேன். தமிழார்வமும், தமிழ்ப்பற்றும் அதிகம்.’’
‘‘உங்க பெயரென்ன?’’
‘‘ஆரூர்தாஸ்.’’
இதைக்கேட்டதும் எறும்புக்கடி பட்டது போல – ‘‘ஆரூர்! அப்படின்னா திருவாரூர்தானே?’’
‘‘ஆமா.’’
‘மு.க.வைத் தெரியுமா?’’
‘‘நல்லாத் தெரியும். அவர் படிச்ச அதே பள்ளிக்கூடத்துலதான் நானும் படிச்சேன். என்னைவிட ஏழு வருஷம் பெரியவரு. முரசொலிமாறன் என் பள்ளித் தோழர்.’’

‘‘ஓ! நீங்க நம்மாளுதான். ஜானு! (ஜானகி அம்மையாரை அவர் ஜானு என்றுதான் அழைப்பது வழக்கம்) ஒரு டீ அனுப்பு’’ என்றார், சற்று உரத்த குரலில். பிறகு சொன்னார்:

கருத்து வேறுபாடு

‘‘கதை சம்பந்தப்பட்ட காட்சிகள்ள எனக்கு கருத்து வேறுபாடு இருக்கு. ஆனா, அதை நீங்க விளக்கியிருக்கிற விதமும், நடு நடுவுலே எழுதியிருக்கிற நல்ல தமிழ் வசனமும் ரொம்பப் பிடிச்சிருக்கு.’’

‘‘ரொம்ப நன்றி!” என்றேன். இதற்குள் ஒரு சிறு பணிப்பெண் தேநீர் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றாள். கை காட்டினார். பருகினேன். அவர் தொடர்ந்தார்:–
‘‘குறிப்பிட்ட சில காட்சிகளை நான் மாத்தி, இந்தப் பேப்பர்ல எழுதியிருக்கேன். இதையெல்லாம் நீங்க வாத்தியார்கிட்டே படிச்சிக் காட்டிட்டு, அந்தந்தக் காட்சிகளோட பொருந்தும்படியா எழுதி இணைச்சிக்கிட்டப்புறம் மறுபடியும் எங்கிட்டே வந்து படிச்சிக் காட்டணும்.’’
‘‘சரி.’’
‘ஏன்னா, நான் வாத்தியாருக்கும் மரியாதை கொடுக்கணும். அதே சமயத்துல என் கொள்கையையும் விட்டுக் கொடுக்கக் கூடாது. நீங்க அழகான தமிழ்ல எழுதியிருக்கிற இந்த திரைக்கதையை நான் படிச்சிப் பார்த்ததுல, உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்குன்னு எனக்குத் தோணுது.’’

‘‘நன்றி.’’
‘‘வாழ்த்துக்கள்! 
நீங்க புறப்படலாம். 
அப்புறம் சந்திப்போம். 
இடை யில் தேவைப்பட்டா கூப்பிடுகிறேன்.’’
‘‘வணக்கம்.’’


அப்பொழுது என் வயது 23. 
முண்டா திரண்டு இளமை முறுக்குடன் இருந்த எம்.ஜி.ஆரின் 
வயது 37. ஆனால் அழகும் ஆரோக்கியமும் சேர்ந்து அவர் 
வயதைக் குறைத்திருந்தன. 

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நான், முழுமை பெற்ற ஒரு கதை வசன கர்த்தாவாகி, இதே எம்.ஜி.ஆரைச் சந்தித்து கதை சொல்லப் போகிறேன். என் வசன வலையை வீசி அந்தக் கலைமானைப் பிடிக்கப் போகிறேன். 

என்னைப் பொறுத்தமட்டில் அவருடைய இந்தக் கேள்விகள் எல்லாம் இல்லாமல் நான் சொன்னதே கதை, எழுதியதே வசனம் என்ற நிலையை ஏற்படுத்தி, அவர் இதயத்தில் எனக்கென்று ஓர் இடம் பெற்று அவருடைய ‘அவை எழுத்தாளனாக’ ஆகப் போகிறேன் என்றெல்லாம் அப்பொழுது நான் எண்ணிப் பார்க்கக்கூட இல்லை.

வாழ்க்கை என்பது ஒரு பாய்மரக் கப்பல். காலம் என்ற காற்று வீச்சுக்கு ஏற்றவாறு அந்தந்தத் திசையில் அந்தக் கப்பல் தானாகச் செல்லும். சுக்கான் கொண்டு அந்த வாழ்க்கைக் கலத்தை இந்த உலகப் பெருங்கடலில் எவரும் செலுத்த வேண்டும் என்ற அவசியமே இல்லை. சேரும் இடம் என்பது குறிக்கோள். சேர வேண்டும் என்பது முயற்சி. சேர வைப்பது காலம்.

‘‘ராணி லலிதாங்கி’’யில் சிவாஜிகணேசன்
ராணிலலிதாங்கியில் பி .எஸ். வீரப்பா 

‘‘ராணி லலிதாங்கி’’ திரைக்கதையில் எம்.ஜி.ஆர். செய்திருந்த மாற்றங்களை, தயாரிப்பாளரான தஞ்சை ராமையாதாஸ் 
ஏற்கவில்லை.ஆனால், எம்.ஜி.ஆர். சிறிதும் விட்டுக் கொடுக்கவில்லை. தன் கொள்கையில் எப்போதுமே உறுதியோடு இருப்பவர் 
அவர். ‘‘ராணி லலிதாங்கி கதை எனக்கு ஒத்துவராது’’ என்று கூறி 
அந்தப் படத்திலிருந்து அவராகவே சுமூகமாக விலகிக்கொண்டார்.

எனவே, சிவாஜிகணேசனையும், பானுமதியையும் ஜோடியாக நடிக்க வைத்து, லலிதாங்கியை எடுக்கத் தொடங்கினார்கள். படத்தை இயக்கியவர் டி.ஆர்.ரகுநாத். இந்த நிலையில், 1955–ம் ஆண்டு அக்டோபர் 14–ம் நாள் (வெள்ளிக்கிழமை) எனக்குப் பெண் குழந்தை பிறந்திருப்பதாக என் தந்தை கடிதம் எழுதியிருந்தார்.

வாத்தியாரிடமும், அய்யரிடமும் சொல்லிவிட்டு திருவாரூருக்குப் புறப்பட்டேன். மனையாளையும், மகளையும் கண்டு மகிழ்ந்தேன்.
திருவாரூர் தேவாலயத்தில் எங்கள் தலைமகளுக்கு ஞானஸ்நானம் செய்வித்து ஆரோக்கியமேரி என்று பெயரிட்டோம். நாட்டியதாரா பட நினைவாக தாராதேவி என்று செல்லப்பெயரால் அழைத்தோம்.

இதற்குள் சிவாஜிகணேசன் பானுமதியுடன், படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது என்பதைப் பத்திரிகைகளில் படித்தேன். உடனே புறப்பட்டு வரவும் என்று வாத்தியாரிடமிருந்தோ, கம்பெனியிலிருந்தோ தந்தி வரும் என்று தினமும் ஆவலுடன் எதிர்பார்த்தேன். 

ஒரு போஸ்ட்கார்டு கூட வரவில்லை. குழந்தை பிறந்திருக்கிறது அல்லவா? தாஸ் மெதுவாக வரட்டுமே என்று விட்டிருப்பார்கள். 
இப்படி என் சஞ்சல மனதை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.
நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. ஒரு தகவலும் வரவில்லை.
மேற்கொண்டும் ஊரில் இருக்க இருப்புக் கொள்ளாமல் பழையபடி மனைவியையும், புதிய மகளையும் பிரிந்து மெயிலில் ஏறி, சென்னை வந்திறங்கி நேராக வாத்தியார் வீட்டிற்குச் சென்றேன்.

ஒரு சிறு இடைக்காலத்திற்குப் பிறகு சென்னைக்கு வாத்தியார் வீட்டிற்கு வந்த எனக்காக அதிர்ஷ்டம் காத்திருக்கவில்லை. அதிர்ச்சிதான் என் வருகையை எதிர்பார்த்து, வாத்தியார் வீட்டு வாசலிலேயே காத்திருந்தது.

தஞ்சையைச் சேர்ந்த, ஊரிலேயே வாத்தியாருக்கு அறிமுகமாகியிருந்த சக்ரவர்த்தி என்பவர், ஏற்கனவே வாத்தியார் வசனம், பாடல்கள் எழுதிய நரசூஸ் கம்பெனி தயாரித்த படங்களுக்கு உதவியாளராக இருந்தவர். கையில் கோப்புகளுடன் வராந்தாவில் உட்கார்ந்திருந்த அவர் என்னை நோக்கி வெடிகுண்டு ஒன்றை வீசினார்.

சிவாஜிகணேசன், பானுமதி நடிக்கும் ராணி லலிதாங்கி படப்பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. சக்ரவர்த்திதான் படப்பிடிப்பில் வாத்தியாருக்கு உதவியாளராகச் செயல்படுகிறார். இதை அறிந்து வெடித்துத் துடித்துப்போன என்னிடம் அவர் மேலும் சொன்னார்:

‘‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்சில் இருந்து யாரோ வந்து உங்களைத் தேடுனாங்க. நீங்க ஊரோட போயிட்டீங்க. திரும்பி சென்னை வரமாட்டீங்கன்னு சொன்னாங்களே.’’
அதிர்ச்சிகளைத் தாங்கிக்கொண்டு அய்யனார் சிலை போல அமர்ந்திருந்தேன். வாத்தியார் வெளியில் வந்தார். என்னைக் கண்டதும் அவர் முகத்தில் ஒரு சிறு சலனம்.

‘‘வாப்பா, எப்போ வந்தே?’’

‘‘இப்போதான் ரெயிலில் இருந்து இறங்கி, நேராக வந்துகிட்டே இருக்கேன்.’’

‘‘சிவாஜி உடனே கால்ஷீட் கொடுத்ததினால், திடீர்னு ஷூட்டிங் வச்சிக்க வேண்டியதாகி விட்டது. இப்போது சக்ரவர்த்திதான் அசிஸ்டெண்டா இருக்கு. நீ ஒண்ணு செய். முந்தி நான் சொன்னேன் பாரு ‘அந்த’ தாமானவளே, அந்தத் தெலுங்கு ஸ்கிரிப்ட் டிரான்ஸ்லேட் ஆகி வந்திருக்கு. அதை வச்சிக்கிட்டு நீ தமிழ் வசனம் எழுது. மாடியிலேயே இருந்துக்க. நம்ம ராஜாராமனும் (வாத்தியாரின் நண்பர் கும்பகோணத்துக்காரர்) மாடியிலதான் தங்கியிருக்கிறார். அவரோட சேர்ந்து நீயும் இரு. (பக்கத்தில் இருந்த ராஜாராமண்ணனிடம்) தாசைக் கவனிச்சிக்குங்க. நான் ஷூட்டிங் போயிட்டு வர்றேன்’’ என்று கூறிவிட்டு சக்ரவர்த்தி சகிதம் காரில் உட்கார்ந்தார். கார் ஸ்டூடியோவை நோக்கி பறந்தது

எம்.ஜி.ஆருடைய பாராட்டுதலைப் பெற்று, அவருடன் எனக்கு ஏற்பட இருந்த அந்தத் தொடர்பும் அறுந்து, அதன்பிறகு சிவாஜி வந்து, லலிதாங்கி படப்பிடிப்பில் அவருடன், எனக்கு உண்டாக இருந்த இந்தத் தொடர்பும் இழக்கப் பெற்று நூலறுந்த பட்டமாக ஆடி நொந்துபோன நான் ராஜாராமண்ணனைப் பின்தொடர்ந்து மாடிக்குப்போனேன்.

தெலுங்கு ஸ்கிரிப்ட், வெள்ளைக் காகிதம், பைல் முதலியவற்றை எடுத்து அவர் மேஜை மேல் வைத்தார். பையனைக் கூப்பிட்டு டீ கொண்டுவரச் சொன்னார்.

அவரிடம் சொன்னேன்: ‘‘அண்ணே! நான் ஊருக்குப் போயிருந்தப்போ எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்லேருந்து வந்து என்னைத் தேடுனாங்களாம். நான் திரும்பி சென்னைக்கு வரமாட்டேன்னு யாரோ சொல்லிட்டாங்களாம். இப்போ எம்.ஜி.ஆர். பிக்சர்சுக்குப் போயி நான் வந்திட்டதைச் சொல்லலாமா?’’

‘‘வேண்டாம். இங்கேயே இருந்திடுங்க நீங்க’’ என்றார்

நான் ‘நாயுடு வேலை’யில் ஈடுபடலானேன். தெலுங்குத் தமிழ் உதட்டசைவு உரையாடல் அமைக்கும் அந்தத் தமிழாக்க வேலையை (டப்பிங்) நான் வேடிக்கையாக நாயுடு வேலை என்று சொல்வது வழக்கம்.

அன்று இரவு! கும்மிருட்டு. கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பரவிக் கிடந்தது. அப்போதைய ஆற்காடு சாலையின் அகலம் இப்போது இருப்பதில் பாதிதான் இருக்கும். வாத்தியார் வீட்டு மாடியில் ராஜாராமண்ணன் குறட்டை விட்டுக்கொண்டிருந்தார்.

‘என்னை மட்டும் வாத்தியார் ஏன் இந்த டப்பிங் டப்பாவிற்குள் வைத்து மூடுகிறார்? மந்திரவாதி தன் உயிர் நிலை உள்ள வண்டை ஒரு சிறு பெட்டிக்குள் அடைத்து வைத்திருப்பதைப்போல. ஒருவேளை இந்தக் கடினமான டப்பிங் வேலையை கஷ்டமும், களைப்பும் தோன்றாமல் நான் இலகுவாகக் கையாளுகிறேன் என்பதால் இந்த பாரத்துக்கு என்னை சுமைதாங்கியாக்கப் பார்க்கின்றாரோ? 

அப்படியென்றால் என் இளமூளையில் குடிகொண்டுள்ள அந்தத் தமிழ்! என் மனோராஜ்யத்தை ஆண்டு கொண்டிருக்கும் அந்தப் புதுப்புதுக் கற்பனைகள்! என் கண்களில் தோரணங்களாகத் தொங்கும் அந்த இனிய கனவுகள்! இவை எல்லாமே வீணாக வேண்டியவைதானா?’ இரவு முழுவதும் இமையோடு இமை மூடாமல் சிந்தித்துக்கொண்டே இருந்தேன். ‘இந்தத் தடவை இங்கு நாம் வந்தே இருக்க வேண்டியதில்லை. நாம் தேவைப்படாததால்தான் வரச்சொல்லி திருவாரூருக்கு கடிதம் வரவில்லை.

வைராக்கியத்தை அடகு வைத்து வயிறு வளர்ப்பதைவிட பட்டினியால் வருந்துவது மேல். ‘கோள்’ சரி இல்லை என்றாலும் ‘குறிக்கோள்’ சரியாக இருந்து நிறைவேறல் வேண்டும். இந்த வகையில் எனக்கும் கொஞ்சம் எம்.ஜி.ஆர். குணம் உண்டு.’ விடிந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு, யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் இந்த சென்னையை விட்டே அகன்றுவிட வேண்டும்.

இந்தக் கதை வசனம், கலை ஆர்வம் எல்லாவற்றையும் மூட்டைகட்டி எங்கள் ஊர் ஓடம் போக்கி ஆற்றில் போட்டுவிட்டு, யாரிடமாவது 
கடன் வாங்கியாவது, தமிழாசிரியர் பயிற்சி பெறுவது. இல்லாவிட்டால் ஊரில் ஒரு பெட்டிக்கடை வைத்தாவது பிழைத்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

காலையில் நான் எண்ணியிருந்தபடியே, ராஜாராமண்ணனிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் வாத்தியார் வீட்டை விட்டு வெளியேறினேன்.
‘நல்லபிள்ளைக்கு அடையாளம் சொல்லாமல் கொள்ளாமல் போவது’ – இது ஊர்ப்பழமொழி.

வாத்தியார் வீட்டிலிருந்து கிழக்கு நோக்கி சற்றுத் தொலைவு வந்ததும் என் எதிரே ஒருவர் வந்தார்.என்னைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் என் இயற்பெயரைச் சொல்லி, ‘‘ஜேசு! எங்கே இவ்வளவு தூரம்?’’ என்று கேட்டார்.
‘‘அம்பி! நல்லாயிருக்கீங்களா?’’ என்று விசாரித்தேன்.

அவர் பெயர் திருவேங்கடத்தான். அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்தவர். அம்பி என்பது செல்லப்பெயர். திருவாரூரில் என்னுடன் படித்தவர். மன்னார்குடி அருகில் உள்ள வடுவூரைச் சேர்ந்தவர். வசதியான குடும்பம்.அம்பியிடம் எல்லா விவரத்தையும் சொன்னேன். ஏற்கனவே ஊரிலேயே என் எழுத்து, நாடகம் பற்றிய சகல சங்கதிகளும் அவருக்குத் தெரியும்.

அவர் சொன்னார்:‘‘வந்தது வந்திட்டீங்க – ஊருக்குப் போகவேண்டாம். நான் உங்களுக்கு ஒரு ஏற்பாடு பண்றேன். இப்போ நானும் சினிமாக் கம்பெனியில்தான் உதவி டைரக்டராக இருக்கிறேன். நளினி பிக்சர்ஸ்னு பேரு. ‘‘படித்த பெண்’’ணுன்னு ஒரு படம் எடுத்துக்கிட்டிருக்கோம். ஏ.எஸ்.முத்துங்குறவரு கதை, வசனம் எழுதுறாரு. அவர்கிட்டே உங்களை அறிமுகப்படுத்துகிறேன்.

கதை, வசனகர்த்தா ஏ.எல்.நாராயணனும் என் நண்பர்தான். அவரையும் நாம் சந்திக்கலாம். என் வீடு வில்லிவாக்கத்தில் தேவர் தெருவில் இருக்கிறது. என் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு அறையில் ‘நிவாஸ்’னு ஓவியர் இருக்காரு. அவர் என் சொந்தக்காரர்தான். அவரோட அந்த அறையில் நீங்கள் தங்கிக்கலாம்’’ என்றார்.
நான் உடன்பட்டு, அவருடன் சென்றேன். இந்த நிவாஸ் மிகச்சிறந்த ஓவியர். ஸ்ரீநிவாசன் என்பது முழுப்பெயர். ‘லதா’ என்ற பெயரில் வார பத்திரிகைகளிலும், சரித்திர நாவல்கள் எழுதுவதில் வல்லவரான சாண்டில்யனின் தொடர் கதைகளுக்கும், நாவல்களின் அட்டைகளுக்கும் படம் போட்டுப் புகழ் பெற்றவர். அவர் அறையில் சில நாட்கள் தங்கியிருந்து, அம்பியின் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

அம்பி சொன்னபடியே ‘‘படித்த பெண்’’ படக்கதை வசனகர்த்தா ஏ.எஸ்.முத்துவிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அவர் ஓர் கத்தோலிக்க கிறிஸ்துவர். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இளங்கலைப் பட்டதாரி. ஏ.சவேரிமுத்து என்பது அவரது முழுப்பெயர். சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்தார். கலையார்வத்தின் காரணமாக நாடகங்கள் நடத்தி அப்படியே படத்துறைக்கு வந்தவர். என்னிடம் அன்பு காட்டினார்.

அம்பி – முத்து இருவருடைய பரிந்துரையின் பேரில் அப்படத்திற்கு ஒரு பாட்டு எழுதும் வாய்ப்பைப் பெற்றேன். ‘அருண்’ என்ற நாடக இசை அமைப்பாளரும், ‘ராகவன்’ என்ற வீணைக் கலைஞரும் சேர்ந்து ‘அருண் ராகவன்’ என்ற பெயரில், ‘‘படித்த பெண்’’ படத்திற்கு இசையமைத்தனர்.

ஏதோ ஒரு கர்நாடக ராகத்தைப் பாடிக்காட்டி அதற்கேற்றவாறு பாட்டு எழுதுமாறு கூறினர். உடனே நான் ஒரு பல்லவி எழுதினேன். பாடிப்பார்த்தார்கள். சரியாக இருந்தது. பாராட்டினார்கள். பாட்டைத் தொடர்ந்தேன்.

வாழ்வினில் காணேன் இன்பம் –
என்றும் வருந்தவே வந்ததே துன்பம்

இதுதான் அந்தப் பல்லவி! கதைச் சூழலுக்கும், இசையமைப்பாளரின் ராகத்திற்கும் மட்டுமல்ல, அன்றைய என் நிலைமைக்கும் இந்தப் பல்லவி பொருத்தமாக இருந்தது.


No comments:

Post a Comment