Sunday 21 August 2016

சுதந்திர போராட்ட வீரர் வ.வே.சு. ஐயர் ஒரு சரித்திரம்


சுதந்திர போராட்ட வீரர் 
வ.வே.சு. ஐயர் ஒரு சரித்திரம் 





வ.வே.சு. ஐயர்
(பிறப்பு: 1881, ஏப்ரல் 2- மறைவு: 1925, ஜூன் 3)

ஏப்ரல் 2, 1881-இல், தமிழகத்தில், திருச்சி வரகனேரியில் பிறந்த வரகனேரி வெங்கடேச சுப்ரமணியம் ஐயர், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்துக் போராடிய இந்திய வீர மகன்களில் குறிப்பிடத்தக்கவர்.

சுப்ரமணிய பாரதி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஆகியோரின் சம காலத்தவர். தமிழ் எழுத்தாளரும் ஆவார். கம்பரின் இராமாவதாரத்தையும், திருவள்ளுவரின் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். வாஞ்சிநாதனின் குரு.

இளம்பிராயம்:

வரகனேரியில் பிறந்த இவர், திருச்சி செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரியில் வரலாறு, அரசியல், லத்தீன் மொழி கல்வி பயின்றவர். வக்கீல் ஆக வேண்டும் என்ற ஆசையில் மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் 1902-இல் தேர்ச்சி பெற்று, திருச்சி மாவட்ட நீதி மன்றத்தில் பளீடராக சேர்ந்தார். 1906-இல் ரங்கூனுக்கு இடம் பெயர்ந்தார்.


1907-இல் லண்டன்,  ‘பாரிஸ்டர் அட்லா’ ஆக முயற்சி செய்து கொண்டிருந்த கால கட்டத்தில், அங்கிருந்த புரட்சியாளர்களின் பாசறையான இந்தியா ஹுஸில் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, மேடம் காமா, சாவர்க்கர் ஆகியோரின் தொடர்பு ஏற்பட்டது.  அந்தக் காலகட்டத்தில் மகாகவி பாரதி இந்தியாவில் நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகைக்கு லண்டலிருந்து செய்திகளை நிருபராக எழுதி அனுப்பி வந்தார்.

குறிப்பாக, விநாயக தாமோதர் சாவர்க்கரின் சந்திப்பு அவரது வாழ்வில் திருப்பு முனையானது. சாவர்க்கரின் பாதிப்பால் ஐயர், போராட்டம் மூலமே இந்தியா சுதந்திரம் அடைய முடியும் என்று முழுமையாக நம்பினார்.

வெளிநாட்டில்:

லண்டனில் நடந்த கர்சான் வில்லி படுகொலையில் மதன்லால் திங்ரா என்ற இந்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.  இந்த ராஜவழக்கில்  ஐயர் மேல் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. 


இவ்வழக்கில் கைதான வீர சாவர்க்கர், இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக 1910-இல் அனுப்பி வைக்கப்பட்டபோது, பிரான்ஸ் நாட்டின் மார்சைல்ஸ் துறைமுகத்தில் துணிச்சலாகத் தப்பிக்க முயன்றார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் புகழ்பெற்ற விஷயம் அது. சாவர்க்கரை துரதிர்ஷ்டவசமாக பிரஞ்ச்காவலாளிகள் கைப்பற்றினர்.

சாவர்க்கரின் அறிவுறுத்தலால் மாறுவேடத்தில் லண்டலிருந்து தப்பிட வ.வே.சு ஐயர், பாண்டிசேரியில் 1916-இல் தஞ்சம் அடைந்தார். அங்கிருந்தப்டு அரவிந்தர், பாரதி ஆகியோருடன் இணைந்து 1920 வரை, தேச விடுதலைப்போரில் ஈடுபட்டார்.

இந்தியாவில்:

புதுச்சேரியில் அய்யர் இருந்தபோதுதான், வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தார். வன்முறையில் இறங்கித்தான் ஆங்கிலேயரின் அராஜகத்தில் இருந்து விடுபட முடியும் என இளைஞர்களுக்கு போதித்தார். 

ஆஷ்துரையைக் கொலை செய்யும் சதியில் வ.வே.சு.ஐயருக்கு பங்கு இருந்தது. திருநெல்வேலியில் கலெக்டராக ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொல்ல, அரசியல் படுகொலையை நிகழ்த்த, ஐயருக்கும் பாரதியாருக்கும் நெருக்கடி ஏற்பட்டது.

எம்டன் …

22 செப். 1914-இல் எம்டன் கப்பல் மெட்ராஸ் துறை முகத்தில் புகுந்து குண்டு மழை பொழிந்தது. புதுச்சேரியில் உள்ள ஐயர் மற்றும் நண்பர்களே அதற்குக் காரணம் என கற்பித்தது 



ஆங்கிலேய அரசு. அவர்களை ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்த வேண்டுகோள் வைத்தது பிரெஞ்சு அரசிடம். பிரெஞ்சுக்காரர்கள் குற்றங்களை ஏற்றுக் கொண்டாலும் தண்டனைகளை வழங்க மறுத்து விட்டனர். இந்தக் காலகட்டத்தில் தான் ஐயர் திருக்குறளை மொழிபெயர்த்தார். என்ன ஆளுமை பாருங்கள்!

முதல் உலக மகா யுத்தம் முடிந்த பின், ‘தேச பக்தன்’ இதழுக்கு ஆசிரியராக ஆனார் ஐயர். இருக்க விட்டால் தானே? 1921-இல் ராஜதுரோக குற்றம் சுமத்தப்பட்டு 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 


அங்கு ‘கம்ப ராமாயணம் – ஒரு பார்வை’ புத்தகத்தை எழுதினார். ஐயர் அவர்கள் தான் தமிழ் சிறுகதை மரபைத் துவக்கி வைத்தவர். (குளத்தங்கரை அரசமரம் – தான் தமிழின் முதல் சிறுகதை என்பது ஆய்வாளர்களின் கருத்து). ‘பால பாரதி’ என்ற தமிழ் இலக்கிய இதழை ஆரம்பித்தார்.


பிற்காலத்தில் (1922) சேரன்மஹாதேவியில் (திருநெல்வேலி மாவட்டம்) ஒரு குருகுலத்தையும் பரத்வாஜ ஆசிரமத்தையும்  நிறுவினார்.

வீரச் செரிவான வாழ்க்கை – முடிவுக்கு வருதல்.

இத்தனையும் விறுவிறுவென நடந்து முடிந்து வீரம் செரிந்த சுவாரஸ்யக் கதையாக நகர்கையில், விதி குறுக்கே பாய்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

பாபநாசம் நீர் வீழ்ச்சியில் மகள் சுபத்ரா அடித்துச் செல்லப்பட, ஐயர் தண்ணீரில் பாய்ந்து காப்பாற்ற முயன்றார். இங்கிலீஷ் கால்வாயையே நீந்திக் கடந்த ஐயருக்கு பாபநாசம் நீர்வீழ்ச்சி யமனாய்ப் போயிற்று. 



ஜூன் 4, 1925-இம் வருடம் 44 வயதான ஐயர் இப்பூவுலகை நீத்தார்.










தமிழிலக்கியத்தின் இரு கிளைகளுக்கு முன்னோடியானவர் வ.வே.சு.அய்யர். தமிழ்ச்சிறுகதையின் தொடக்கப்புள்ளிகளில் ஒன்று என அவர் எழுதிய மங்கையர்க்கரசியின்காதல் என்ற சிறுகதைத்தொகுதி குறிப்பிடப்படுகிறது. அதில் உள்ள குளத்தங்கரை அரசமரம் தமிழின் முதல் இலக்கணம் அமைந்த சிறுகதை என க.நா.சு. மரபினர் சொல்வார்கள்.  வ.வே.சு.அய்யர் பாரதிபாடல்களுக்கு எழுதிய முன்னுரை தமிழின் விமர்சன மரபுக்கு வழிகோலியது.

வ.வே.சு.அய்யர்

வாழ்க்கையின் கடைசிக்காலகட்டத்தில் வ.வே.சு.அய்யர் கடும் சர்ச்சைகளுக்கு ஆளானார்.பாரதியார் உத்தேசித்த சுதேசிக்கல்வியைப் பரப்பும்பொருட்டு வ.வே.சு.அய்யர் ஒரு கல்விநிலையத்தை சேர்மாதேவியில் நிறுவினார். தமிழ்நாடு ஆசிரமம் என்ற அக்குருகுலத்தில் எல்லா சாதி மாணவர்களும் பயின்றார்கள். அய்யரின் மகன் வ.வே.சு.கிருஷ்ணமூர்த்தியும் பிற மாணவர்களும் இணைந்து சமமாகவே அமர்ந்து உணவுண்டார்கள். ஆனால் இரு பிராமண மாணவர்களுக்குத் தனியாக அங்கே உணவு பரிமாறப்பட்டது

வாவில்லா குடும்பம் என்ற பிரபலமான வைதிக குடும்பத்தின் இரு மாணவர்கள் அவர்கள். ஆசிரமத்துக்கு நிதியுதவி செய்தவர்கள். அன்று கடுமையான பிரிட்டிஷ் அடக்குமுறைச் சூழலில் சுதேசிப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கப்படுவது கடினமாக இருந்தது. வீடுவீடாகச் சென்று மாணவர்களை சேர்க்கவேண்டியிருந்தது. ஆசாரம் கெட்டுப்போகலாகாது என்று  அந்தக் குடும்பத்தினர் இட்ட நிபந்தனையை ஏற்றுத்தான் வ.வே.சு.அய்யர் அவர்களை சேர்த்துக்கொண்டார். அதற்கேற்ப அவர்களை மட்டும் தனியாக உணவருந்தச் செய்தார்.

அன்றைய காங்கிரஸில் இருந்த இருபெரும் குழுக்களுமே பிராமணத்தலைமை கொண்டவை- சத்தியமூர்த்தி குழு, ராஜாஜி குழு. இரண்டுக்கும் எதிராக உருவாகிவந்தவர்கள் பி. வரதராஜுலு நாயுடு, திரு.வி. கல்யாணசுந்தர முதலியார், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் போன்றவர்கள் தலைமையில் கிளர்ந்துகொண்டிருந்தார்கள்.

உண்மையில் இது பிராமணர்களுக்கு எதிரான பிராமணரல்லாத உயர்சாதியினரின் அதிகாரக் கலகம். காங்கிரஸின் முன்னோடிகள் பிராமணர்கள். ஆனால் 1920களுக்குப்பின் காங்கிரஸுக்குள் பிராமணரல்லாத உயர்சாதியினர் பெருமளவுக்கு வந்து உறுப்பினர் எண்ணிக்கையில் அவர்கள் பெரும்பான்மை ஆகியிருந்தனர். அது தலைமையில் பிரதிபலிக்கவில்லை. இதுவே உண்மையான பிரச்சினை

வரதராஜுலுநாயுடுவின் சீடரும் தனக்கெனத் தனி செல்வாக்கு கொண்டவருமான ஈ.வே.ராமசாமி அவர்கள்  இந்த எதிர்ப்புக்குத் தலைமை ஏற்க ஆரம்பித்தபோது கடுமையான நிலைப்பாடுகளை எடுத்தார். இவர்கள் தமிழகக் காங்கிரஸின் அதிகார அமைப்புடன் முரண்பட்டுக் காங்கிரஸை விட்டு விலகும் நிலையில் இருந்தார்கள். இச்சூழலை நாம் கோவை அய்யாமுத்து, டி.எஸ்.எஸ்.ராஜன் போன்றவர்களின் சுயசரிதைகளிலும் ஈவேரா எழுத்துகளிலும் இன்று வாசித்தறிய முடிகிறது.

வ.வே.சு.அய்யர் அப்போது காங்கிரஸ் தலைமையால் மதிக்கப்படும் நிலைமையில் இருந்தார். அப்போது காங்கிரஸில் வளர்ந்து வந்துகொண்டிருந்த ஈவேராவுக்கும் வ.வே.சு.அய்யருக்கும் இடையே அகங்கார மோதல் உருவானது. வ.வே.சு.அய்யர் பொதுவாகவே கொஞ்சம் தோரணை கொண்டவர் என்பது பலரால் எழுதப்பட்டிருக்கிறது. வெளிநாட்டில் படித்தவர், விரிவான வாசிப்பு கொண்டவர், தியாக வரலாறு கொண்டவர். காங்கிரஸில் தன்னை அவர் விதிகளுக்கு அப்பாற்பட்ட பிதாமகனாக எண்ணிக்கொண்டிருந்தார்.

பொதுவாகவே எவருக்கும் பணிந்து போகாதவர் ஈவேரா. அத்துடன் காந்தியைப்போலப் பண விஷயத்தில் மிதமிஞ்சிய கண்டிப்பு கொண்டவர்.  காங்கிரஸ் கட்சியின் செயலராகக் காசோலையில் கையெழுத்திடும் இடத்தில் இருந்தார் ஈ.வே.ரா.  பொதுவாகவே ஈவேரா ஐந்துபைசாவுக்கும் ஆயிரம் கணக்கு கேட்பார், துளைத்து எடுப்பார். அதை கோவை அய்யாமுத்து விரிவாகவே எழுதியிருக்கிறார். வ.வே.சு. அய்யர் பணத்துக்கு வந்தபோது ஈவேரா கணக்குகளைக் கேட்டு குறுக்கு விசாரணை செய்தார். அதை வ.வே.சு.அய்யர் தனக்குச் செய்யப்பட்ட அவமதிப்பாக எடுத்துக்கொண்டார். ஈவேரா , வ.வே.சு.அய்யரின் தோரணையால் எரிச்சல் கொண்டார்

காங்கிரஸ் கட்சி ஆசிரமத்துக்கு ஒதுக்கிய பத்தாயிரம் ரூபாய் பணத்துக்கான காசோலையை வ.வே.சு.அய்யர் கேட்க வந்தபோது காங்கிரஸ் கமிட்டியின் எல்லா நிபந்தனைகளையும் அய்யரின் ஆசிரமம் நிறைவேற்றுகிறதா எனத் தன்னிடம் ஐயர் வாக்குமூலம் கொடுத்தால் காசோலையில் கையெழுத்திடுவதாக ஈ.வே.ரா சொன்னார். அய்யர் ஈவேராவை அலட்சியம் செய்து கூட்டுச்செயலாளாரிடம் ஐயாயிரம் ரூபாய்க்குக் காசோலையை வாங்கிக்கொண்டு போய்விட்டார்.

ஈவேரா

நான்குநாள் கழித்து இந்தத் தகவல் ஈவேராவுக்குத் தெரிய வந்தது. அந்த அலட்சியத்தால் சீண்டப்பட்ட ஈவேரா மிச்சத் தொகையைக் கொடுக்காமல் நிறுத்தி வைத்துவிட்டார். அய்யருக்கும் ஈவேராவுக்கும் கடுமையான பூசல் ஏற்பட்டுவிட்டது. அய்யர் ஈவேராவை சமாதானப்படுத்த முயலவில்லை. மாறாக காங்கிரஸ் மாகாணக் கமிட்டிக் கூட்டம் டாக்டர் டி.எஸ்.எஸ் ராஜன் இல்லத்தில் நடந்தபோது ஈவேராவிடம் உள்ள பூசலைப்பற்றி சொல்லாமல் தனக்கு மிச்ச ஐயாயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என்று புகார் சொன்னார். ராஜன் உடனே ஈவேராவைக் கூட்டத்திலேயே கடிந்து பேசினார்

கோபம்கொண்ட ஈவேரா,வ.வே.சு.அய்யர் கட்சியின் செயலராகிய தன்னை மதிக்கவில்லை, தன்னிடம் அறிக்கை அளிக்கவில்லை என்று கூறி ஐயாயிரம் ரூபாய்க்குக் கையெழுத்துப் போட முடியாது என்று மறுத்தார். கூட்டத்தில் சிலர் ஈவேரா வயதில் மூத்த அய்யரை எதிர்த்துத் துடுக்காகப் பேசுவதாக சொன்னார்கள். அதில் ஈவேராவின் நெருக்கமான நண்பராகிய கோவை அய்யாமுத்து முன்னணியில் இருந்தார். ஈவேரா அய்யர் தன்னிடம் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்றார். வ.வெ.சு.அய்யர் ஈவேராவிடம் எந்த வருத்தமும் தெரிவிக்காமல் எழுந்து சென்றார். கட்சி ஈவேராவைக் கண்டித்தது. வேறு செயலர் கையெழுத்துப் போடட்டும், நான் போடமாட்டேன் என்று ஈவேரா கறாராகச் சொன்னார்.

இந்த நிகழ்ச்சியில் எல்லா பிராமணர்களும் ஒரே தரப்பாகக் கூடிவிட்டதாக வரதராஜுலு நாயுடு கருதினார். அதை அங்கே அவர் கோபத்துடன் சொல்ல டி.எஸ்.எஸ்.ராஜன் அவர் வகுப்புவாதப்பேச்சு பேசுவதாக நாயுடுவைக் கண்டித்தார். கூட்டம் முடிந்ததும் பிராமணரல்லாதவர்களும் பிராமணர்களும் தனித்தனியாகப்பிரிந்து பேசிக்கொண்டார்கள்.  கடினமான சொற்கள் வீசப்பட்டன. மனக்கசப்புகள் பலப்பட்டன. ஈவேரா கையெழுத்து போடாததனால் வ.வே.சு.அய்யருக்குக் கடைசிவரை மீதிப் பணம் கொடுக்கப்படவில்லை.

அதைத் தொடர்ந்து திருச்சியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஈவேரா அவர்கள் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது சேவையைப்பாராட்டி ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தேர்தல் நடந்த அதே மாநாட்டில் வ.வே.சு.அய்யர்,ஈவேரா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். இது வெறும் தனிப்பட்ட மனக்கசப்பின் விளைவே என கோவை அய்யாமுத்து பதிவு செய்கிறார். ஈவேரா கடுமையாகப் புண்பட்டார். ஈவேராவின் நண்பரான திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அவருக்கே உரிய படபடப்புடன் இது ஒரு சாதிய மனநிலையின் வெளிப்பாடு, பிராமணர் கூட்டாகச் சேர்ந்து இதைச் செய்கிறார்கள் என்று அந்த மாநாட்டில் குற்றம்சாட்டிப் பேசினார்.

வ.வே.சு.அய்யரின் தீர்மானம் தோல்வி அடைந்தது. இது தொண்டர் மட்டத்தில் பிராமணர்களைவிட பிராமணரல்லாதாரின் எண்ணிக்கை அதிகரித்து அதிகாரச்சமநிலை மாறியமைக்கான திட்டவட்டமான ஆதாரமாக இருந்தது.  இது பிராமணர்களுக்கு ஒரு சுவரெழுத்தாகத் தெரிந்தது. உள்ளே ஈவேராவுக்கும் வ.வே.சு.அய்யருக்குமான பூசல் வலுத்துக்கொண்டே வந்தது. அதற்கு வ.வே.சு.அய்யரின் பிதாமக மனநிலையே காரணம் என்று இப்போது பலவாறாக ஊகிக்க முடிகிறது. காங்கிரஸ் மாறிவிட்டதை அய்யர் புரிந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் அய்யருக்கு வெள்ளைய அரசு கடுமையான நெருக்கடிகளைக் கொடுக்க ஆரம்பித்தது. காங்கிரஸின் நிதியைக் காங்கிரஸ் தலைவராக இருந்த ஈவேரா முற்றாக நிறுத்திவிட்டார்.  பள்ளியை நடத்துவது சிரமம் ஆகியது.வ.வே.சு.அய்யர் தன்னை வந்து பார்த்து சமாதானம் செய்வார் என ஈவேரா எதிர்பார்த்தார். ஆனால் அய்யர் தனிப்பட்டமுறையில் மக்களிடம் வசூல் செய்ய ஆரம்பித்தார். காங்கிரஸ் தலைவர்கள் அதை ஆதரித்து இதழ்களில் எழுதினர். திருவிகவும், வரதராஜுலு நாயுடுவும்கூட அதை ஆதரித்தனர்

கொதிப்படைந்த ஈவேரா நாயுடுவைக் கண்டித்துக் கூட்டங்களில் பேசினார். பிராமணச்சதிக்கு நாயுடு விலை போய்விட்டார் என்றார். நாயுடு திருவிகவை ஈவேராவிடம் தூதனுப்பினார். அவர்களுக்கிடையே ஒரு சமரசம் ஏற்பட்டது. இந்தத் தருணத்தில் ஒற்றுமையாக இருந்து வ.வே.சு.அய்யரையும் அவருக்குப்பின்னால் உள்ள பிராமண அதிகாரத்தையும் தோற்கடிப்பது என முடிவெடுத்தார்கள். ஈவேரா, நாயுடு ஆகியோர் வ.வே.சு.அய்யர் பிராமண சாதிபேதத்தைப் பரப்புவதாகவும் ஆகவே பிராமணரல்லாதார் அவருக்கு நிதியுதவி செய்யவேண்டாம் என்றும் இதழ்களில் எழுதினார்கள்.  இது வ.வே.சு.அய்யரைக் கொதிப்படையச்செய்தது.அவர் மேலும் தீவிரமாக வசூலில் ஈடுபட்டார். அவர் நாடறிந்தவராதலால் ஆதரவும் அதிகம் இருந்தது.

சிலநாட்கள் கழித்து ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருடைய மகன் வந்து சேர்மாதேவி ஆசிரமத்தில் இரு பிராமண மாணவர்களுக்குத் தனிப் பந்தி போடப்படுவதாகத் தெரிவித்தார். இந்த விஷயத்தைப் பெரிய அளவில் வெளியே கொண்டுவந்து வ.வே.சு.அய்யரை ஒடுக்கவும்,  பிராமணத்தலைமைக்கு எதிராக பிராமணரல்லாதாரைத் திரட்டவும் முடியும் என வரதராஜுலு நாயுடுவும் ஈவேராவும் கருதினர். அதை ஒரு பெரிய விஷயமாக முன்னெடுத்தனர். வ.வே.சு அய்யரின் ஆசிரமத்தில் பிராமணரல்லாதார் கொடுமைக்குள்ளாவதாகவும் பிரார்த்தனை உட்பட அனைத்திலுமே சாதிபேதம் காட்டப்படுவதாகவும் ஈவேராவும் நாயுடுவும் கடுமையாக எழுதினர்.

இந்த விவகாரம் தமிழகம் முழுக்க காங்கிரஸில் இருந்த பிராமணரல்லாதாரைக் கொந்தளிக்கச் செய்தது. ஆனால் வ.வே.சு.அய்யர் அவருக்கே உரித்தான மிதப்பில் இதைப் பொருட்படுத்தவில்லை. அவர் விளக்கமளிக்கவும் இல்லை. காந்தி உட்படப் பலர் விளக்கம் கோரியும்கூட தான் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் இல்லை என்பதனால் பதிலளிக்க முடியாது என்ற நிலையை வ.வே.சு.அய்யர் எடுத்தார். சில விஷயங்களை அவர் விளக்கியிருந்தால் அன்றே இச்சிக்கல் ஓய்ந்திருக்கும்.

உதாரணமாக ஆசிரமத்தில் பிரார்த்தனைகளில் மாணவர்களுக்கு அவர்களின் குடும்பங்களில் என்ன வகையான பிரார்த்தனைகள் இருக்கின்றனவோ அதுவே பின்பற்றப்பட்டது. அதாவது சைவர்களுக்கு தேவாரம்,திருவாசகமும், வைணவர்களுக்குத் திருவாய்மொழியும், பிராமணர்களுக்கு உபநிடத பாடங்களும் சொல்லிக்கொடுக்கப்பட்டன. ஒரு வழிபாட்டுமுறை கொண்டவர்கள்மேல் பிற வழிபாட்டுமுறைகள் திணிக்கப்படவில்லை. இது அன்றைய சூழலில் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஒருசைவ வேளாளப்பிள்ளைக்கு உபநிடதம் சொல்லிக்கொடுப்பது பெரும் மத அவமதிப்பாகவே கொள்ளப்படும். வ.வே.சு.அய்யர் அந்த உறுதிமொழியைக் கொடுத்தே பிள்ளைகளைச் சேர்த்திருந்தார்

ஆனால் அங்கே விருப்பமுள்ள அனைவருக்குமே உபநிடதங்கள் கற்பிக்கப்பட்டன. அய்யர் மாணவர்கள் குர் ஆன், பைபிள் ஆகியவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்துபவராக இருந்தார். அதைப் பல இடங்களில் எழுதியிருக்கிறார். ஆனால் அவரால் அதை ஒரு பாடத்திட்டமாக ஆசிரமத்தில் வைக்க முடியாத நிலை இருந்தது என்பதே உண்மை. ஆனால் இதையெல்லாம் அவர் விளக்க முயலவில்லை. தன்னைப்பற்றி அனைவருக்கும் தெரியும் என்று அவர் நினைத்தார்.

ஈவேரா காங்கிரஸில் இருந்து வெளியே வந்து சுயமரியாதை இயக்கத்தையும் பின்னர் திராவிடர் கழகத்தையும் ஆரம்பிப்பதற்கான தூண்டுதல் நிகழ்ச்சி இது. தமிழக அரசியல் வரலாற்றில் மிகமிக முக்கியமான இடம் வகிப்பது. இந்தப் போராட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே அய்யர் தன் மாணவர்களுடன் பாபநாசம் அருவியில் குளிக்கச்சென்று வெள்ளத்தில் சிக்கிய மகளைக் காப்பாற்றுவதற்காக முயன்று மரணம் அடைந்தார். பிரச்சினை அங்கே முடிந்தாலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சம்பந்தமான விஷயத்தில் மீண்டும் பிராமணர் -பிராமணரல்லாதார் பேதம் மேலோங்கி, காங்கிரஸில் இருந்து ஈவேரா வெளியேறினார். இந்தக் காலகட்டத்தில்தான் சிலமாதங்கள் வைக்கம் சென்று அந்தப் போரில் பங்குபெற்றார்.

இதையொட்டி வ.வே.சு அய்யர் ஒரு இந்துசனாதனி என்றும் சாதியவாதி என்றும் தொடர்ந்து வரலாறு எழுதப்பட்டு வந்தது. அதை மறுத்து அவரது உண்மையான ஆளுமையை முன்வைக்கும் எழுத்துக்கள் எழுதப்படவில்லை. பிராமண சனாதனிகளும் அவரைத் தங்களவர் என்று எழுதத்தலைப்பட்டார்கள். சேர்மாதேவி ஆசிரமத்தில் உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பதை அறிந்தவர்கள் மிகமிகக் குறைவே.  சாதிவெறியர் என ஒற்றைவரி முத்திரையால் அய்யர் வரலாற்றில்ன்ஒதுக்கப்பட்டார்.

இப்போது தலித் சிந்தனையாளர்கள் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், 1925 வாக்கில் சேர்மாதேவி ஆசிரமத்தில் பிராமணரல்லாத உயர்சாதி மாணவர்களுக்குத் தீட்டு கற்பிக்கப்பட்டது எனக் கொதித்தெழுந்த திராவிட இயக்க அரசியல்வாதிகள் 1960 களில்கூட அதே ஒதுக்கு தலித் மாணவர்களுக்கு அனேகமாக எல்லாப் பள்ளிகளிலும் இருந்ததை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. 1990 களில்கூட பல்வேறு ஆலயங்களில், தேர்த்திருவிழாக்களில் தலித்துக்கள் ஒதுக்கப்பட்டது அவர்கள் கண்ணில் படவில்லை.

ஈவேரா,வ.வே.சு.அய்யருக்கு எதிராகப் போராடிய அக்காலகட்டத்தில் ஈவேராவின் சாதியினர் உட்பட பல பிராமணரல்லாத உயர்சாதியினர் நடத்திவந்த பள்ளிகளில் தலித் மாணவர்கள் சேர்ந்து அமரவோ உணவுண்ணவோ அனுமதிக்கப்படவில்லை. அதைப்பற்றி அன்றைய தலித் தலைவர்கள் தங்கள் இதழ்களில் எழுதியிருக்கிறார்கள். அவை எந்த மனசாட்சிப்பிரச்சினையையும் உருவாக்கவில்லை. இன்றும்கூடப் பல பள்ளிகளில் அந்நிலை நீடிக்கிறது. அதற்கு எதிராகத் தமிழ்ப் பொதுமனநிலை இன்றும் திரண்டிருப்பதாகச் சொல்லமுடியாது.  எண்பதுகளுக்குப்பின் உருவாகி வந்த தலித் இயக்கங்களே அந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன.

ஆனால் இதை ஈவேராவின் சாதிய நோக்கு என சில தலித் எழுத்தாளர்கள் எழுதுவதை என்னால் ஏற்கமுடியவில்லை என்பதைச் சொல்லிவிடுகிறேன். அவர் இந்த மனநிலைகளுக்கு அப்பாற்பட்ட சீர்திருத்தவாதி என்றே நான் நினைக்கிறேன். ஆனால் எந்த அரசியல்தலைவரையும்போல அவரும் தன் ஆதரவு அடித்தளத்தை மீறி எதையும் செய்துவிடமுடியாத நிலையிலேயே இருந்தார். அவரது ஆதரவுத்தளம் என்பது முதன்மையாக பிராமணரல்லாத உயர்சாதியாகவே [முக்கியமாக நாயுடு, நாயக்கர், மற்றும் முதலியார்] அன்று இருந்தது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் அரசியலில் முன்னிடம் பெற ஆரம்பித்த பின்னரே திராவிட இயக்கம் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் இயக்கமாக உருமாற்றம் கொண்டது. ஈவேராவின் ஆதரவுத்தளமும் மாறியது. இன்று அவர் பிற்படுத்தப்பட்டோரின் அரசியல் முகமாகவே அறியப்படுகிறார்.தமிழகத்தில் ஈவேரா தலித்துக்களுக்காக எந்தப் போராட்டத்தையும் செய்யவில்லை. அந்த வரலாற்று உண்மையை மறைக்கவே அவர் சிலநாட்கள் பங்குபெற்ற வைக்கம்போராட்டம் முழுக்கமுழுக்க அவரால் நடத்தப்பட்டது என்ற வரலாற்றுத் திரிபு செய்யப்பட்டது.

வ.வே.சு.அய்யர் செய்துகொண்ட சமரசம் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. ஒரு அமைப்பு அதன் நிலைநிற்புக்காக ஆதாரமான கொள்கைகளில் சமரசம் செய்துகொள்வதென்பது அபத்தம். சேர்மாதேவி ஆசிரமம் மூடும்நிலையில் இருந்தது என்பது உண்மை என்றாலும் அந்நிலையில் அதை மூடியிருக்கவேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

வ.வே.சு.அய்யர் தன்னுடைய கல்விப்பணிகளுக்கும் ஆன்மீகத்துக்கும் வாரிசாக நியமித்தது கொங்குகவுண்டரான சுவாமி சித்பவானந்தரைத்தான். சித்பவானந்தர் தமிழகத்தில் ஒரு பெரிய கல்வி இயக்கத்தை உருவாக்கினார். அதற்கு நிதியாதரவு அளித்தவர்கள் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த பிராமணரல்லாத செல்வந்தர்களே. அன்றும் இன்றும் எல்லாவகையிலும் சாதி ஒதுக்குதல்களுக்கு அப்பாற்பட்ட அமைப்பாக இருந்து வருகிறது சித்பவானந்தரின் கல்வியமைப்பு. இதையும் நாம் கணக்கில் கொண்டாகவேண்டும்.

சமீபகாலமாக வ.வே.சு.அய்யர் மீதான மொத்தையான அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பால்சென்று அவரை அணுகும் நோக்கு உருவாகி வருகிறது. அதற்கு உதாரணம் என்று சொல்லத்தக்க  ஒரு நல்ல கட்டுரை செப்டம்பர் 2011 ‘உயிர் எழுத்து’ இதழில் மீனா எழுதி வெளிவந்துள்ள ’வ.வே.சு- ஒற்றை வரலாறுகளுக்கு இடையே உருப்பெறும் பன்முகம்’ என்ற கட்டுரை.

வ.வே.சு.அய்யர் பற்றிய திராவிட இயக்க திரிபுகளுக்கு மட்டுமல்லாமல் அவரைச் சொந்தம்கொண்டாடும் சனாதன தரப்பு திரிபுகளுக்கும் பதிலாக அமைந்துள்ளது திராவிட இயக்கத்தினரின் தரப்பில் இருந்து வெளிவந்துள்ள இக்கட்டுரை. வ.வே.சு.அய்யர் எப்படி மத,இன நோக்குக்கு அப்பாற்பட்டவராகத் திகழ்ந்தார் என்பதைப் பல்வேறு சான்றுகளுடன் வாதிடுகிறது. தென் தமிழ்நாட்டில் மதநோக்குக்கு அப்பார்பட்டவர் என இஸ்லாமியர் தரப்பால் எண்ணப்பட்டவர் அவர். பெரும்பாலான பூசல்களில் சமரசம்செய்யும் தரப்பாகத் திகழ்ந்தவர். நம்பிக்கையிலும் தனிவாழ்க்கையிலும் சாதிபேத நோக்கு இல்லாதவராக வாழ்ந்தவர்.

வன்முறைப்பாதையில் நம்பிக்கை கொண்டிருந்து,அந்தப் போராட்டங்களிலும் பங்கெடுத்தவரான வ.வே.சு அய்யர் காந்தி இந்தியாவுக்கு வந்து காங்கிரஸின் தலைவர்களில் ஒருவராக ஆன ஆரம்பகாலத்தில் காந்தியை நேரில் சந்திக்கிறார். அந்த சாதாரண சந்திப்பில் காந்தியின் தோற்றத்தாலேயே மனமாற்றம் கொண்டு உறுதியான அகிம்சைவாதியாக ஆனார்.

சேர்மாதேவி ஆசிரம விஷயத்தை பிராமணரல்லாத ஒருவரின் கோணத்தில் நின்றுதான் ஆசிரியர் விமர்சிக்கிறர். வ.வே.சு.அய்யர் எடுத்த நிலைப்பாடு தவறானது என்றாலும் அது அவர் அந்த மாணவர்களின் பெற்றோருக்கு அளித்த தனிப்பட்ட உறுதிமொழி சார்ந்தது என்றும் , பெரும் எதிர்ப்பு எழுந்தபோதும் அவர் அந்த மாணவர்களை நீக்கமுடியாது என்ற முடிவில் நீடிக்க அதுவே காரணம் என்றும் மீனா குறிப்பிடுகிறார். ஆனால் வ.வே.சு.அய்யர் ’குருகுலத்தில் இனி எந்த ஒரு மாணவருக்கும் தனிப்பந்திமுறையை அனுமதிக்கமுடியாது’ என்று அறிவித்து அந்த அறிவிப்பை ’தி இந்து’ நாளிதழில் வெளியிட்டார் என்கிறார்.

கட்டுரையாசிரியர் ‘காலாகாலமான பார்ப்பனிய ஒதுக்குதலுக்கு எதிரான சீற்றத்தில் வ.வே.சு.அய்யர் பலியானது சோகமானது’ என்கிறார். ’ இது பார்ப்பனரல்லாதாரிடம் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால் இந்த முறையை வ.வே.சுவே புகுத்தியதைப்போன்ற ஒரு கருத்து இங்கே கட்டமைக்கப்பட்டதில் தட்டையான வரலாறு எழுதும் முறையும் வறட்டுத்தனமான அரசியல் அணுகுமுறையும் பெரும்பங்கு வகித்துள்ளது’என்கிறார் ஆசிரியர்

வ.வே.சு அய்யரின் மறைவை ஒட்டி வெளியிடப்பட்ட ஓர் இரங்கல் கட்டுரையில் இருந்து ஒரு நீண்ட பகுதியை மீனா மேற்கோள் காட்டுகிறார். அப்போது அவரது ஆசிரமத்துக்கு எதிரான பிரச்சாரம் உச்சநிலையில் இருந்தது.  ‘சாதி மத பேதம் கடந்த பெரியார் ஆவர் நம் ஐயர். மக்கள் யாவரும் நிகரெனும் கொள்கையுடைவரவர். சமூக வாழ்க்கையை குலைத்து பெருங்கேடு விளைவித்து வரும் கொடிய வழக்கங்களை அறவே ஒழிக்கவேண்டும் என்ற சீரிய எண்ணம் உடையவர். …இதுகாலை நடந்துவரும் குருகுலப்போர் இவரது சமூகக் கொள்கைகளின் மேல் மக்களுக்குள் ஒருவித ஐயத்தை உருவாக்கி விட்டதென்றாலும் அவ்வையப்பாட்டுக்குச் சிறிதும் ஆதாரமில்லை. உடனுண்ணலையும் வேறு சாதியார் இல்லங்களில் உணவெடுத்தலையும் இவர் கைக்கொண்டிருந்தார் என உண்மையை யாமறிவோம்’

இந்த இரங்கல் கட்டுரையை எழுதியவர் ஈ.வே.ரா அவர்கள்தான். ‘பிரச்சினைகளைப் பன்முகப் பரிமாணங்களுடன் பார்க்கும் பண்பும் விமர்சனங்களுக்காகப் பங்களிப்புகளைப் புறக்கணித்துவிடாத நடுநிலைமையும் பெரியாரிடம் இருந்தது. இத்தகைய பண்புநலன்கள் ஒரு சிறிதும் இன்றி காஞ்சி சங்கராச்சாரியாருடன் வ.வே.சுவை ஒப்பிட்டுப்பார்த்தவர்கள்,தம்மைப் பெரியாரின் வழிவந்தவர்களாக சொல்லிக்கொண்டு பிழைப்பு நடத்தும் அவலத்தை என்னவென்பது?’ என்கிறார் கட்டுரையாசிரியர்.

பின்னாளைய திராவிட இயக்க நூல்களில் சற்றும் அடிப்படை இல்லாமல் வ.வே.சு.அய்யரின் ஆசிரமக் கல்விநிலையத்தில் அப்பட்டமான சாதிக்கொடுமைகள் நிகழ்ந்ததாக எழுதப்பட்டுள்ளன.இணையத்தில் இந்த விஷயத்தைப்பற்றி என்ன எழுதப்பட்டுள்ளது என தேடினேன். ‘அதிகம் படித்த வ.வே.சு அய்யர் நடத்தி வந்த குருகுலத்தில் வருணாசிரம அடிப்படையில் நடத்தப்பட்டு வந்தது. பார்ப்பன சிறுவர்களுக்கு தனியிடம், தனித்தண்ணீர், தனி உணவு என்றும் பார்ப்பனர் அல்லாத குழந்தைகளுக்கு வேறு இடம், வேறு தண்ணீர், வேறு உணவு என்று வித்தியாசத்தை கடைப்பிடித்து வந்தார். பார்ப்பன சிறுவர்களுக்கு காலை உணவாக உப்புமா போன்றவை சூடாக பரிமாறப்பட்டது. பார்ப்பனர் அல்லாதகுழந்தைகளுக்கு பழைய சேற்றையே கொடுத்து வந்தனர்’ என எழுதப்பட்ட கட்டுரையைக் கண்டு உண்மையிலேயே வருத்தமடைந்தேன்.

‘புறக்கணிக்கப்பட்டும் இருட்டடிப்பு செய்யப்பட்டும் கிடக்கும் வரலாற்றுப்பக்கங்களில் வெளிச்சமிட்டுக் காட்டுவதும் முன்முடிவுகளைக் கைவிட்டு சனநாயக வாசிப்பை சாத்தியப்படுத்துவதுமே நமக்குரித்தான பணிகள்.’ என்று மீனா சொல்லும் வரிகளை மீண்டும் ஆமோதிக்கிறேன். இத்தகைய கட்டுரைகள் இனிமேலாவது அதிகார விளையாட்டுக்காகச் செய்யப்பட்ட அநீதிகளைச் சமன் செய்யட்டும்.


 எம் வேதசகாயகுமார் வ வே சு அய்யர் பற்றி








“தமிழ்ச் சிறுகதையின் தந்தை “

முனைவர் சி.சேதுராமன்


‘‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள்
யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்“
என்ற பாரதியின் கூற்றிற்கேற்ப மேலைநாட்டு இலக்கியச் செல்வங்களைத் தமிழுக்குக் கொணர்ந்து வளம் சேர்த்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் வ. வே. சு. ஐயர் என்று அழைக்கப்பட்ட வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் ஆவார். இவர் இந்திய விடுதலைக்காக தீவிரமாகப் போராடினார். சிறந்த தேசபக்தராகவும் திகழ்ந்தார். அதுமட்டுமல்லாது வ.வே.சு.ஐயர் சிறந்த இலக்கிய வாதிகவும், மொழி பெயர்ப்பாளராகவும் விளங்கினார்.
இத்தகைய சிறப்புகளை உடைய வ.வே.சு.ஐயர் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயருக்கும், சின்னாளப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த காமாட்சியம்மாளுக்கும் 1881-ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 02-ஆம் நாள் மகனாகப் பிறந்தார். வ. வே. சு. ஐயர் பிறந்தார். அவரது இயற்பெயர் வேங்கடேச சுப்பிரமணியம் என்பதாகும். இப்பெயரே நாளடைவில் அவரது ஊர்ப்பெயருடன் சேர்ந்து வ.வே.சு.ஐயர் என்று மாற்றம் பெற்று அதுவே நிலைத்து நின்றுவிட்டது.
கல்வியும் திருமணமும்
வ வே சு.ஐயர் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். தம் பன்னிரண்டாம் வயதில் தகுதித் தேர்வு எழுதி (மெட்ரிகுலேஷன்) தேறினார். அக்காலத்தில் இருந்த வழக்கத்திற்கேற்ப அவ்வயதிலேயே வ.வே.சு.ஐயர் தமது அத்தை மகள் பாக்கியலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். வ.வே.சு.ஐயர் தமது பதினாறாம் வயதில் பி.ஏ. பட்டத் தேர்வில் சென்னை மாகாணத்தில் முதலாவதாகத் தேர்ச்சி பெற்றார். பின்னர் சென்னை சென்று வழக்கறிஞர் தேர்வில் முதல் பிரிவில் தேர்வுபெற்று, சென்னை மாநகர் மாவட்ட நீதிமன்றத்தில் முதல் வகுப்பு வழக்குரைஞராகச் சேர்ந்து பணியாற்றினார். வ.வே.சு.ஐயர் கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், வடமொழி, தமிழ் ஆகிய மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவராய் விளங்கினார்.
லண்டன் செல்லுதல்
பின்னர் தமது பத்தொன்பதாம் வயதில் திருச்சிக்கு வந்து அங்கேயே வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இதற்கிடையே இவரின் மைத்துனர் பசுபதி ஐயர் என்பவர், வ.வே.சு.ஐயரை லண்டனுக்கு அழைத்துச் சென்று பாரிஸ்டர் கல்வி பயில வைக்கத் திட்டமிட்டார். அதன்படி 1907-ஆம் ஆண்டில் வ.வே.சு. ஐயர் ரங்கூன் வழியாக இலண்டன் சென்றார். அங்கு அவர் இந்தியா ஹவுஸில் தங்கினார்.
லண்டனில் அரசியல் போராட்டம்
பாரிஸ்டர் பட்டம் பெற வந்த வ.வே.சு.ஐயரை இந்தியா ஹவுஸ் சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றியயது. இந்தியா ஹவுஸிற்கு அவர் அடிக்கடி சென்றபோது தீவிர தேசிய இயக்கவாதியான ஷாம்ஜி கிருஷ்ணவர்மா, டி.எஸ்.எஸ். ராஜன், வீர சாவர்க்கர் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. இவர்களின் நட்பால், இந்தியா ஹவுஸில் ரகசியமாக இயங்கி வந்த அபிநவபாரத் சங்கத்தில் வ.வே.சு.ஐயர் உறுப்பினராகச் சேர்ந்தார். அங்கிருந்த மற்ற விடுதலைப்போராட்ட வீரர்களான விபின் சந்த்ரபால், லாலா ஹரிதயாள், மேடம் காமா முதலியோருடன் ஒன்றிப் பழகினார். இவர் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார்.
இந்தியா விடுதியில் இயங்கி வந்த அபிநவபாரத் சங்கம் இந்திய விடுதலைக்கான இளைஞர்களின் களமாகத் திகழ்ந்தது. இங்கு வ.வே.சு.ஐயர் ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகளை கற்றுக் கொண்டார். அவர் மனதில் விடுதலை வேட்கை குடியேறியதால், அவரது பாரிஸ்டர் படிப்பு இரண்டாவது பட்சமாகியது. இலண்டன் இந்தியா விடுதியில் தங்கியிருந்த அவருடன் 30 பேர் சேர்ந்து விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சேர்ந்து வ.வே.சு.ஐயரும் துப்பாக்கிப் பயிற்சி பெற்று மற்ற புரட்சி இளைஞர்களுக்கும் அப்பயிற்சியை அளித்தார்.
1909-ஆம் ஆண்டில் தசரா பண்டிகையைத் தேசிய விழாவாக இந்தியா ஹவுசில் அங்கு தங்கியிருந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் கொண்டாடினர். அவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் காந்தி அடிகளை அழைத்து வந்து பேச வைத்தனர். இதே ஆண்டில் இந்தியர்களை இழிவாக நடத்திய கர்னல் கர்ஸான் வில்லி என்ற ஆங்கிலேயர் லண்டனில் சுடப்பட்டார். இவரைச் சுட்டுக்கொன்றவர் இந்தியா விடுதியில் தங்கியிருந்த மாணவர் மதன்லால் திங்காரா என்பவராவார். மதன்லால் திங்கராவை இந்த வீரச் செயலுக்கு தயார் செய்தவர் வ வே சு. ஐயராவார் என்பது குறிப்பிடத்தக்கது. மாபெரும் வீரரான திங்கராவிற்குப் பலவிதமான சோதனைகளை வ வே சு.ஐயர் வைத்தார். மதன்லால் திங்கராவின் புறங்கையில் பெரிய ஊசியினைக் குத்தினார். அவ்வாறு குத்தப்பட்ட ஊசியானது திங்காராவின் கையின் மறுபுறம் வந்தபோதிலும் புன்னகைபூத்த முகத்தோடு இவ்வேதனையை மதன்லால் திங்கரா தாங்கிக் கொண்டார். இவ்வாறு பல சோதனைகளில் வென்று இச்செயலுக்குத் தகுதியானவர் என்பதை நிறுவிய பின்னரே கர்ஸான் வில்லியைக் கொல்வதற்கு திங்காரா நியமிக்கப்பட்டார். திங்காராவும் தாம் ஏற்ற பொறுப்பை வெற்றிகரமாகச் செய்து முடித்தார்.
திங்கரா, கர்ஸன் வில்லியைக் கொன்றதன் விளைவாக, திங்காராவிற்கு மரணதண்டனை அளிக்கப் பெற்றது. வீரத்தின் விளைநிலமாக விளங்கிய அவ்விளைஞர் தூக்குமேடை ஏறி, வீர மரணத்தை மகிழ்ச்சியுடன் தழுவினார்.
விடுதலைப் போராட்டத்தில் வ.வே.சு.ஐயர் தீவிரமாக ஈடுபட்டபோதிலும் பாரிஸ்டர் படிப்பை அவர் புறக்கணிக்காமல் படித்து முடித்துத் தேர்வில் வெற்றி பெற்றார். லண்டனில் பாரிஸ்டர் பட்டமளிப்பு விழாவில் இங்கிலாந்து அரசரின் நம்பிக்கையாளன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டால் மட்டுமே பாரிஸ்டர் பட்டம் அளிப்பர். இதுவே இங்கிலாந்தில் வழக்கம். ஆனால் பாரிஸ்டர் தேர்வில் வெற்றி பெற்ற வ.வே.சு.ஐயர் பட்டமளிப்பு விழாவில் அரச நம்பிக்கையாளன் உறுதிமொழி (ராஜவிசுவாசப் பிரமாணம்) எடுக்க மறுத்தார். பட்டமும் பெறவில்லை.
வ.வே.சு.ஐயர் பட்டமளிப்பு விழாவில் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுக்க மறுத்ததால் அவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. வ.வே.சு.ஐயர் கலங்காது வீர சாவர்க்கரை மாறுவேடத்தில் சந்தித்தார். அப்போது சாவர்க்கர் வ.வே.சு. ஐயரை எவ்வாறாயினும் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுவிடுமாறு கூறினார். இந்தியர்களை இழிவாக நடத்திய கர்ஸானின் மரணத்தின் காரணமாக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பலரும் தலைமறைவாயினர். சாவர்க்கர் கைது செய்யப்பட்டார்.
சாவர்க்கர் கூறியது போன்று வ.வே.சு.ஐயரும் சீக்கியர் போல் வேடம் பூண்டு பிரான்ஸ் சென்றார். அங்கே அவரை உளவு பார்க்க வந்தவனிடம் தாம் வீர விக்ரம்சிங் என்ற சீக்கியர் என்று கூறி ஏமாற்றி, துருக்கி, கொழும்பு வழியாகப் பயணம் செய்தார். வ.வே.சு.ஐயரின் அப்பயணம் வீரதீர சாகசச் செயல்கள் நிறைந்தது. மாறுவேடத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பல பிரிட்டிஷ் உளவாளிகளை வெற்றிகரமாக ஏமாற்றி பயணம் செய்த பின், வ.வே.சு.ஐயர் 1910-ஆம் ஆண்டு அக்டோபர் 9 நாள் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார்.
ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எதிராக பல வீரர்களை உருவாக்குவதற்காக வ.வே.சு.ஐயர் பல கட்டுரைகளை தேசபக்தன் இதழில் எழுதினார். இதனால் ஆங்கில அரசு அவரை சிறைபிடிக்க நினைத்தது. இதனால் தேசபக்தனில் அவர் எழுதாத ஓர் எழுச்சிக் கட்டுரையைக் காட்டி, இராஜதுரோகக் குற்றம் சாட்டி எதேச்சதிகார ஆங்கிலேய அரசு செப்டம்பர் 11ம் தேதி வ.வே.சு.ஐயரைக் கைது செய்து பெல்லாரி சிறைக்கு அனுப்பியது.
கல்விப் பணி
சிறையிலிருந்து விடுதலையான வ.வே.சு.ஐயர் 1922-ஆம் ஆண்டில் சேரன் மாதேவியில் தமிழ்க் குருகுலம் என்ற கல்வி நிலையத்தை தொடங்கினார். அதை நிர்வகிக்க பரத்வாஜ் ஆசிரமத்தையும் அமைத்தார். தமது குருகுலத்தில் தொழிற்கல்வியும் அறிவுக் கல்வியும் மாணவர்க்கு அளித்தார்
மொழிபெயர்ப்பாளர்
மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராகத் திகழ்ந்ததைப் போலவே வ.வே.சு.ஐயர் இலக்கியப் புலமையிலும் சிறந்து விளங்கினார். தமிழிலக்கியத்திற்கு அவரின் பங்களிப்பு அளப்பரியதாகும். 1909-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி, புதுச்சேரியில் இருந்து வெளிவந்த “இந்தியா” (ஆசிரியர் பாரதியார்) இதழில், ஜுஸப் கரிபால்டி (Giuseppe Garibaldi) சரித்திரம் என்ற கட்டுரைத் தொடரை எழுதினார் வ.வே.சு.ஐயர். இதைத் தொடர்ந்து 1909-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி இந்தியா இதழில், “ழான் ழாக் ரூசோ எழுதிய ஜனசமூக ஒப்பந்தம்” எனும் தலைப்பில் எழுதப்பட்ட வ.வே.சு.ஐயரின் தமிழாக்கக் கட்டுரைத்தொடர் வெளிவரத் தொடங்கியது. இக்கட்டுரை வ.வே.சு.ஐயரை மொழிபெயர்ப்பாளராக முதன் முதலில் அறிமுகப்படுத்தியது. வ.வே.சு.ஐயர், தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் (1920),”குறுந்தொகையிலும், கலித்தொகையிலும் சில செய்யுள்கள் தெரிந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாக,”குறிப்பிட்டுள்ளார்.
கடித இலக்கியத்தின் முன்னோடி
“இந்தியா” பத்திரிக்கையில் 1908-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி முதல் வ.வே.சு.ஐயர் எழுதிய “இலண்டன் கடிதங்கள்” வெளிவரத் தொடங்கின. வ.வே.சு.ஐயரின் தொடக்க கால எழுத்துப் பணியில் இலண்டன் கடிதங்கள் குறிப்பிடத்தக்கன. பெரும்பாலும் அப்பத்திரிக்கையில் “பாரதப்பிரியன்” எனும் பெயரிலேயே எழுதி வந்தார். தேசிய – சர்வதேசிய அரசியல் நடப்புகள், சமூகம், வரலாற்றுக் குறிப்புகள், தமிழ், தமிழ்ப் பண்பாடு, தமிழக தேசிய மாவீரர்கள் பற்றிய செய்திகள் இலண்டன் கடிதங்களில் வெளிவந்தன. “இந்தியா” பத்திரிக்கையில் மட்டுமல்லாமல், புதுச்சேரியிலிருந்து வெளிவந்த “சூரியோதயம்”, “விஜயா” ஆகிய இதழ்களிலும் வ.வே.சு.ஐயரின் இலண்டன் கடிதங்கள் வெளிவந்தன. பின்னாளில் அவர் 1924-ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கிய “பாலபாரதி” எனும் அருமையான இலக்கிய மாத இதழில், “இராஜகோபாலன் கடிதங்கள்” எனும் தலைப்பில் எழுதிய கடிதங்களும் பன்முகப்பார்வை கொண்டவையாகும்.
திறனாய்வின் முன்னோடி
1918-ஆம் ஆண்டில் வெளிவந்த வ.வே.சு.ஐயரின் “கவிதை” எனும் கட்டுரை தான் கவிதை பற்றிய விமர்சனத்துறைக்கு ஓர் ஆரம்பம் செய்து வைத்திருக்கிறது என்பதை திறனாய்வாளர் சி.சு.செல்லப்பா சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அரிய ஒப்பியல் ஆய்வில் வ.வே.சு.ஐயர் சங்க இலக்கியமான “மலைபடுகடாம்” கவிதையை பிரெஞ்சு எழுத்தாளர் சேனாங்கூர், தாகூர், வேர்ட்ஸ்வர்த் ஆகியோரின் படைப்புகளுடன் ஒப்பிட்டு ஒப்பாய்வு செய்துள்ளார்.
குறள் நெறி பரப்பிய வ.வே.சு.ஐயரின் பணி மகத்தானதாகும். வ.வே.சு.ஐயர் ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்து, அதற்கு மிக நீண்ட ஆய்வு முன்னுரையும் வழங்கித் திறனாய்வின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
பெல்லாரி சிறையில் ஒன்பது திங்கள் சிறைப்பட்ட அவர், கம்பராமாயண ஆராய்ச்சி எனும் அரிய நூலை ஆங்கிலத்தில் எழுதினார். கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத மொழிக் காவியங்களை மூலமொழியிலேயே படித்தறிந்த விடுதலைப் போராட்ட வீரரான வ.வே.சு. ஐயர் ஒவ்வொரு பாத்திரமாக ஆராய்ந்து அழகிய ஆங்கிலத் திறனாய்வுக் கட்டுரைகளாக வடித்தார்.
வ.வே.சு.ஐயர் மாஜினியின் சுயசரிதை, கரிபாலிடியின் வரலாறு, நெப்போலியன், தன்னம்பிக்கை, “கம்பராமாயணம் – ஓர் ஆராய்ச்சி” போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். பாரதி எனும் மாபெரும் கவிஞரின் பெருமையை அக்காலத்திலேயே அறிந்து அவர் கவிதைகளை முக்கிய ஆக்கங்களாகக் கருதிச் சில திறனாய்வுக் குறிப்புகளை அவரது சமகாலத்திலேயே பதிவு செய்த பெருமை வ.வே.சு.ஐயரையே சாரும்.
பதிப்பாசிரியர்
வ.வே.சு.ஐயர் 1916-ஆம் ஆண்டில் புதுச்சேரியில் “கம்ப நிலையம்” என்ற பெயரில் பதிப்பகம் ஒற்றை மண்டயம் எஸ்.சீனிவாசாசாரியாருடன் இணைந்து தோற்றுவித்தார். கம்ப நிலையம் வெளியீடுகளில் ஒன்றாக 1917-ஆம் ஆண்டில் வெளிவந்த “கம்பராமாயணம் (சுருக்கம்) பாலகாண்டம்” எனும் பதிப்பு நூல், வ.வே.சு.ஐயரின் கம்பராமாயணத் தவத்தில் வெளிவந்த முதல் சாதனை நூலாகும். வ.வே.சு.ஐயர் இந்நூலில் கம்பராமாயணத்தில் உள்ள பாலகாண்டத்தின் 1399 பாடல்களில் 545 பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்துப் பதிப்பித்தார். இவர் தாம் எழுதிய நூல்களைத் தாமே பதிப்பித்து வெளியிட்டுச் சிறந்த பதிப்பாசிரியராகவும் திகழ்ந்தார்.
சிறுகதை இலக்கிய முன்னோடி
வ.வே.சு.ஐயர் “குளத்தங்கரை அரச மரம்“ என்ற பெயரில் சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன்முதலில் தமிழில் வெளிவந்த சிறுகதையாகும். இச்சிறுகதையின் வாயிலாக தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். 1917-ஆம் ஆண்டில் வெளிவந்த “மங்கையர்க்கரசியின் காதல், காங்கேயன், கமல விஜயம், ழேன் ழக்கே, குளத்தங்கரை அரசமரம் ஆகிய ஐந்து சிறுகதைகளைத் தொகுத்து மங்கையர்க்கரசியின் காதல் என்ற சிறுகதைத் தொகுப்பை கம்ப நிலையம் சார்பில் வெளியிட்டார். இதுவே தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும்.
இந்நூல், வ.வே.சு.ஐயரை தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முதல்வர் என்று தமிழ் இலக்கிய உலகிற்கு உணர்த்தியது. 1927-ஆம் ஆண்டில் வெளிவந்த பதிப்பிற்கு அளித்த முகவுரையில், “இக்கதைகளை ஒருவன் படித்துப் புத்தகத்தைக் கீழே வைக்கும் காலத்தில் அவன் மனதில் பரிசுத்தமான உணர்ச்சிகளும், உன்னதமான எண்ணங்களும் ததும்பும்,” என்று இராஜாஜி குறிப்பிடுவது வ.வே.சு.ஐயரின் படைப்பிலக்கியத்திற்கு சிறந்த திறனாய்வாக விளங்குகின்றது எனலாம்.
மறைதல்
தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முதல்வராகிய வ.வே.சு.ஐயர் பாபநாசம் அருவியில் தவறி விழுந்த தனது மகளைக் காப்பாற்ற முனைந்து 1925-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் நாள் மண்ணுலகை விட்டுப் பொன்னுலகை அடைந்தார். அவர் மறைந்தாலும் அவரது நினைவுகளின் பதிவுகள் பாரத மக்களின் நெஞ்சங்களில் என்றும் ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.


முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை

No comments:

Post a Comment