Sunday 31 October 2021

WHERE IS MRS.M.G.R

 



WHERE IS MRS.M.G.R



"எங்கே மிஸஸ் எம்ஜிஆர்"
என கேட்டபடியே விரைவாக நடந்து வந்தார் இந்திரா காந்தி.
அது சென்னை அப்போலோ
மருத்துவமனை.
அக்டோபர் 1984.
திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால், அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார் எம்.ஜி.ஆர்.
அவரை பார்ப்பதற்காக
டெல்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு விரைந்து வந்திருந்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.
எம்.ஜி.ஆரைப் பார்க்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
ஆனால் இந்திரா காந்தி அப்போலோ மருத்துவ மனைக்கு வந்தவுடன் நேரடியாக சென்று கண்ணாடிக் கதவு வழியாக எம்.ஜி.ஆரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்.
ஐ.சி.யூ.வில் அந்த ஆபத்தான நிலையில் எம்ஜிஆரை பார்த்தவுடன் இந்திரா காந்தியின் வாயிலிருந்து அவரையும் அறியாமல் வந்த வார்த்தைகள் :
"இஸ் தட் எம்ஜிஆர் ?
ஓ மை காட் ...
ஐ காண்ட் பிலீவ் இட்..."
அருகில் இருந்த ஜானகி அம்மையாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு இந்திரா காந்தி சொன்னாராம் : “கவலைப்படாதீர்கள்.
இவரை காப்பாற்றுவது இந்த நாட்டின் கடமை. என்னுடைய கடமை.”
இப்படி சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் உடனடியாக செயலிலும் இறங்கினார் இந்திராகாந்தி.
எம்ஜிஆருக்கு சிகிச்சை அளிக்க உலகத்திலேயே தலை சிறந்த மருத்துவர்கள் யார் என்பதை விசாரிக்க உத்தரவிட்டார்.
அடுத்த நாளே அமெரிக்காவிலிருந்து மருத்துவர்கள் அப்போலோவுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.
அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை இந்திராகாந்தி.
ஏர் இந்தியாவின் போயிங் விமானம் ஒன்றை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 24 மணி நேரமும் தயாராக நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.
.
அவசரமாக மருத்துவர்களை அழைத்து வருவதற்கும், தேவைப்பட்டால் எம்.ஜி.ஆரை வெளி நாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கும் கூட ஏற்பாடுகளை செய்திருந்தார்.
எப்படியாவது எம்ஜிஆரின் உயிரை காப்பாற்றி விடவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார் அவர்.
இந்த வேளையில்
1984 அக்டோபர் 31 காலையில் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்டது அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் !
இந்திரா காந்தி தன் சொந்த பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்.
இப்போது எம்ஜிஆருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவர்களுக்கு இக்கட்டான சூழ்நிலை.
எப்படி இந்த செய்தியை எம்ஜிஆரிடம் சொல்வது ?
ஏனென்றால் அந்த சமயத்தில்தான் எம்.ஜி.ஆர். உயிருக்குப் போராடிக் கொண்டு தீவிர சிகிச்சையில் இருந்தார்.
இந்த செய்தியை அவரிடம் சொல்லி, அதைத் தாங்க முடியாமல் எம்.ஜி.ஆர். உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்பட்டு விட்டால்...?
சிகிச்சை தொடர்ந்தது.
சிக்கல்களும் நீடித்தது.
எம்.ஜி.ஆரின் உடல் நிலை இன்னும் மோசம் ஆகவே
5.11.1984 அன்று ஏற்கனவே இந்திராகாந்தி ஏற்பாடு செய்து வைத்திருந்த தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அடுத்த சில நாட்களில் அமெரிக்காவில் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்ட எம்.ஜி.ஆரின் உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.
அதன் பின்னர்தான்
மெல்ல மெல்ல இந்திரா காந்தியின் மரணச் செய்தியை எம்.ஜி.ஆரிடம் சொன்னார்கள் அதிகாரிகள்.
அதிர்ச்சியில் உறைந்து போனார் எம்.ஜி.ஆர்.
கண்களில் நீர் வடிய கவலை தோய்ந்த முகத்தோடு அதிகாரிகளை ஏறிட்டுப் பார்த்தார்.
உடனடியாக இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலக் காட்சிகளின் வீடியோக்களை கொண்டு வாருங்கள் என சைகையில் சொன்னார்.
வீடியோ ஓட ஓட,
எம்.ஜி.ஆரின் விழிகளிலிருந்து கண்ணீர் பெரு வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
எதற்கும் கலங்காத எம்ஜிஆர் இந்திராவின் இறுதி ஊர்வலக் காட்சிகள் அடங்கிய அந்த வீடியோவைப் பார்த்து விட்டு
சிறு குழந்தையைப் போல
தேம்பி தேம்பி அழுதார்.
'நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்'
என்ற எண்ணத்தில் உறுதியான நம்பிக்கை கொண்ட எம்ஜிஆர்,
தான் அப்போது இருந்த அந்த சிக்கலான நிலையிலும்,
தன் உயிரைக் காப்பாற்ற ஓடோடி வந்து உதவிகளைச் செய்த இந்திராகாந்திக்கு நன்றி சொல்ல துடித்தார்.
ஆனால் இந்திரா காந்தியும் இப்போது உயிரோடு இல்லை.
எம்ஜிஆருக்கும் பக்கவாத பாதிப்பினால் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேச இயலவில்லை.
மௌனமாக மனதுக்குள் இந்திரா காந்திக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் எம்ஜிஆர்.
“வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்
நாலு பேருக்கு நன்றி.”
இன்று (அக்டோபர் 31)
இந்திரா காந்தி நினைவு தினம் .

No comments:

Post a Comment