Saturday 17 September 2016

வில்லன் நடிகர் நடிகவேள் எம் .ஆர் .ராதா இறப்பு 1979 செப்டம்பர் 17



வில்லன் நடிகர் நடிகவேள் எம் .ஆர் .ராதா
 இறப்பு 1979 செப்டம்பர் 17




எம். ஆர். ராதா 14 ஏப்ரல் 1907- செப்டம்பர் 17, 1979 தமிழ்த் திரையுலகின் ஒரு முன்னணி நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகரும் புகழ் பெற்ற மேடை நாடக நடிகருமாவார்.

பிறப்பு[தொகு]

எம்.ஆர்.ராதா 1907 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். மதராஸ் ராசகோபால் அவர்களின் மகன் ராதாகிருட்டிணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா. ராணுவவீரராகப் பணிபுரிந்த ராதாவின் தந்தை ரஷ்ய எல்லையில் பஸ்ஸோவியா என்னுமிடத்தில் போரில் மரணமடைந்தார்.

சிறுவயதில் தந்தையை இழந்த ராதா பள்ளிக்குப் போகாமல் பொறுப்பற்று சுற்றித்திரிந்தார். பிறகு தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்து ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் இணைந்தார்.









குடும்பம்[தொகு]

நாடகத்தில் தன்னுடன் நடித்த பிரேமாவதி என்பவர் ராதாவுடன் ஒத்த அரசியல் மற்றும் கருத்துச் சாய்வு கொண்டிருந்தார். அவரைக் காதலித்து மணந்து கொண்டார். சில ஆண்டுகளில் அவர் அம்மை நோயால் இறந்து விட்டார்.[2] அதே நோயினால் அவரது மகன் தமிழரசனும் இறந்து விட்டான். 



பின்னர் தனலெட்சுமி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் கீதா என்னும் இலங்கைப் பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர் மகன்களான எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி, மகள்களான ராதிகா மற்றும் நிரோஷா ஆகியோர் திரைப்படத்துறையில் நடித்துள்ளனர்.


எம். ஜி. ஆர். கொலை முயற்சி[தொகு]
முதன்மைக் கட்டுரை: 
கொலை முயற்சி வழக்கு, 1967
1967, சனவரி 12 ஆம் நாள் எம். ஜி. ஆரை அவரது இராமவரம் வீட்டில் எம். ஆர். இராதா சுட்டார். அந்த எம். ஜி. ஆர். கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்ற இராதா 1967 பிப்ரவரி 12 ஆம் நாள் முதல் 1971 ஏப்ரல் 27 ஆம் நாள் முதல் சிறையில் இருந்தார். [3] அப்பொழுது இராதாவின் மகளான ராணி என்றழைக்கப்பட்ட ரஷ்யாவுக்கு திருமணம் நடந்தது. இராதாவால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. 


காமராஜரின் தூண்டுதலின்பேரில்தான் இராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி நிலவியதால் அவர் திருமணத்திற்குத் தலைமை தாங்கவில்லை, மாறாக அந்த திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்த தவிர வில்லை . அவரால் நாடக உலகிற்கு அழைத்து வரப்பட்ட சிவாஜி கணேசன் வரவே இல்லை

 ஈ.வெ.இராமசாமி தலைமையேற்றார். திரையுலக நடிகர்களில் ஜெமினி கணேசன்-சாவித்திரி தம்பதியைத் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.1968 இறுதியில் இராதாவிற்கு திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஜாமீன் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் இராதா விடுதலையானார்.[

விடுதலையானபின் தனது வெற்றி நாடகங்களான தூக்குமேடை, ரத்தக்கண்ணீர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஆகிய நாடகங்களின் தொகுப்பாக கதம்பம் என்ற பெயரில் நாடகம் நடத்தினார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி நாடகத்திற்குத் தலைமை தாங்குமாறு அழைத்தார்; அவரும் ஒப்புக் கொண்டார். 


எனினும் ஏதோ காரணங்களுக்காக அவர் கலந்துகொள்ளவில்லை. பின்னர் ஈ.வெ.இராமசாமியின் இறுதிச் சடங்கின்போது எம்.ஜி.ஆரும் இராதாவும் சந்தித்துக் கொண்டனர் என்றும் அப்போது அவர் எம்.ஜி.ஆருக்கு தனதருகில் இருப்பவர்களை நம்பக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மு. க. முத்து நடிப்பில் வந்த சமையல்காரன் என்ற திரைப்படத்திலும் பின்னர் ஜெய்சங்கருடன் நான்கு படங்களிலும் இராதா நடித்தார். 1975-ல் இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணல் சட்டம் மிசாவின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது விடுதலைக்கீடாக ஈ.வெ.இராமசாமியுடன் தொடர்பில்லை என்று எழுதித்தர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்ட அவர் பதினோரு திங்கள் சிறைக்குப்பிறகு மைய அரசு அமைச்சர்களின் தலையீட்டின் பேரில் வெளிவந்தார்.


அதன்பின் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எத்தனித்தாலும் அவரது பாதுகாப்புக் கருதி இராதா குடும்பத்தினர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அரசுமரியாதையையும் ஏற்க மறுத்துவிட்டனர்.

நடிப்பு[தொகு]

ராதா நாடகத்துறையில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் சாமிநாதன் என்பவர் அவரை வைத்து ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி என்னும் படத்தை 1937-ல் தயாரித்து வெளியிட்டார். அதன்பிறகு 1942 வரை ஐந்து படங்கள் நடித்த ராதா அதன்பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு நாடகத்துறைக்கே திரும்பினார்.


பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 1954ல் திருவாரூர் கே.தங்கராசு என்பவர் எழுதிய ரத்தக்கண்ணீர் [4] என்ற வெற்றி நாடகத்தை திரை வெளியீடாக ரத்தக்கண்ணீர் என்ற படத்தின் மூலம் திரைப்படத்துறைக்குத் திரும்பினார். கதாநாயகனாக திரைத்துறையில் நுழைந்த ராதா அதன்பிறகு பெரும்பாலும் வில்லன் மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்கள் ஏற்று நடிக்கத்தொடங்கினார்.

 125 படங்கள் வரை நடித்திருந்தாலும் ராதா நாடகங்கள் நடத்துவதையும் நடிப்பதையுமே விரும்பினார். ராதாவின் நாடகங்களில் புகழ்பெற்றது 'இழந்தகாதல்' என்னும் நாடகம். அதில் ஜெகதீஷ் என்னும் பாத்திரத்தில் ராதாவின் நடிப்புப் பலராலும் பாராட்டப்பட்டது.


எம்.ஜி.ஆரைச் சுட்ட வழக்கிற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார்.













அரசியல் வாழ்வு[தொகு]

துவக்கத்தில் ஈ.வெ.இராமசாமியுடன் தொழில் அடிப்படையில் சில மோதல்கள் ஏற்பட்டாலும்,[5] பின்னாளில் அவரது கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளராக இருந்தார்.[6] காமராஜரின் தனிப்பட்ட நண்பராகவும் இருந்த இவர் ஈ.வெ.இராமசாமி காங்கிரசை ஆதரித்தபோது காமராஜருக்காக தேர்தலில் வாக்குசேகரித்தார்.[5] இவரது அரசியல் சாய்வினாலும் தொழிலும் எம். ஜி. ஆருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.


தனது சீர்திருத்தக் கருத்துக்களையும், பிராமணர் எதிர்ப்பு கருத்துக்களையும், திராவிட இயக்கக் கருத்துக்களையும் இவர் தனது நாடகங்களிலும் திரைப்படங்களிலும் வெகுவாகப் பரப்பினார். இருந்தும் இவரது எதிர்ப்பாளர்களும்கூட இவரது நடிப்பை ரசித்தனர்.[7]

நடித்த படங்கள்[தொகு]

எம். ஆர். ராதா நடித்து வெளிவந்த சில திரைப்படங்கள்:

ராசசேகரன்
பம்பாய் மெயில்
ரத்தக்கண்ணீர்
ஆயிரம் ரூபாய்
கை கொடுத்த தெய்வம்
பாவ மன்னிப்பு
சித்தி
புதிய பறவை
பலே பாண்டியா
பெற்றால்தான் பிள்ளையா
தாய்க்குப்பின் தாரம்
குமுதம்
கற்பகம்
தாயை காத்த தனயன்
பாகப்பிரிவினை
பணம் பந்தியிலே
நல்லவன் வாழ்வான்
எழுதிய நூல்கள்[தொகு]
ராமாயணத்தை தடை செய் (நூல்)
ராமாயணமா?கீமாயணமா?

எம்.ஆர்.ராதா : எளியவர்களின் துருவேறாத போர்வாள்! கட்டுக்கட்டாக கரன்சியின் வாசத்தில் தன்னை மறக்காதவர் ,இழக்காதவர்

மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் எனப்படும் எம். ஆர். ராதா பிறந்து நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. தன்னுடைய ராமாயணம் நாடகத்திற்கு ஆட்சியாளர்கள் தடைவிதித்த போது, “குடிகாரன் கடவுளாக ஆக்கப்பட்டிருக்கிறான் என்றால் மதுவிலக்கு அமலில் இருக்கும் பிரதேசத்தில் அதை அனுமதிக்க முடியாது” என வாதிட்டு வால்மீகி ராமாயணத்தையும், ராமனையும் நீதிமன்றத்தில் நிறுத்தியவர் ராதா.
அந்தக் காலத்தின் நினைவுகள் வலிமையானவை. தனது நிகழ்கால அரசியல் சமரசங்களையெல்லாம் ஒரு கணம் மறந்துவிட்டு “ராமன் என்ன எஞ்சினீயரா?” என்று கலைஞர் எழுப்பிய கேள்வி அந்த பழைய நினைப்பின் தாக்கம் அன்றி வேறென்ன?

“சேது ராம் எனப் பெயர் வைத்தாவது சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுங்கள்” என்று இப்போது தரையிறங்கி விட்டார் கருணாநிதி. பார்ப்பான் என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் பெரியார் வாழ்க்கையைத் திரைப்படமாக்கத் தெரிந்த ‘அட்டைக்கத்திகள்’ நிறைந்த இந்தக் காலத்தில் ‘ராதா எனும் பெரியாரின் துருவேறாத போர்வாளை’, நினைவு கூர்வது, வேறெதற்கு இல்லையென்றாலும் நம் கண் முன்னே நடனமாடும் அட்டைக்கத்திகளை அடையாளம் காண்பதற்கு நிச்சயம் பயன்படும்.
சென்னையிலுள்ள சூளையில் 14 ஏப்ரல் 1907இல் பிறந்தார் ராதா. தந்தை இராணுவத்தில் இருந்ததால் தாயின் கண்டிப்பிலே வளர்ந்த ராதா அது பிடிக்காததால் வீட்டை விட்டு வெளியேறினார். எழும்பூர் ரயில் நிலையத்தில் டப்பி ரங்கசாமி நாயுடுவைச் சந்தித்ததால் அவரது பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் ராதா. சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டு ஓய்வு நேரத்தில் பல வேலைகளைக் கற்றுக் கொண்டார். வீட்டார் வந்து அழைத்ததால் திரும்பிய ராதா பிறகு உடன்பிறந்தோரையும் கூட்டிக்கொண்டு மைசூர் சென்று நாடகக் கம்பெனி ஒன்றில் சேர்ந்தார்.

சுயமரியாதையோடு நடத்தப்படாததால் அங்கிருந்து வெளியேறி சாமண்ணா ஐயர் கம்பெனியில் சேர்ந்தார். அங்கு படிக்காதவர்களுக்கு மரியாதை இல்லாததால் ஜெகந்நாதய்யர் கம்பெனிக்கு வந்து சேர்ந்தார் ராதா. இங்கு கதரின் வெற்றி, பதிபக்தி போன்ற நாடகங்களில் நடித்தார். சினிமா முதல் சிவகாசி காலண்டர் வரை அனைத்திலும் கடவுளர்களின் பின்புறத்தில் இன்று நாம் காணும் ஒளிவட்டத்தை உருவாக்கி பதிபக்தி நாடகத்தில் அறிமுகப்படுத்தியவர் ராதா தான். அந்த ஒளிவட்டத்தை ஒழிக்கும் வேலையையும் பிற்காலத்தில் அவரேதான் செய்ய வேண்டியிருந்தது.
யாருக்கும் பயப்படாத மற்றும் கட்டுப்பாடுகளுக்குள் அடங்காத ராதாவின் தன்மை மற்ற நடிகர்களுக்கு அவர்பால் அச்சத்தையே தோற்றுவித்தது. ஆனால் ராதாவின் நடிப்பு, கற்பனை வளம் ஆகியன மக்களிடம் ஒரு செல்வாக்கை ஏற்படுத்தியிருந்ததால் அவரைத் தவிர்க்கவும் முடியவில்லை. நாடகத் துறையில் பலருக்கு முன்மாதிரியாக இருந்த ராதாவிற்கு ஈரோட்டில் நாடகம் நடந்தபோது பெரியாரும் அவரது குடியரசு இதழும் அறிமுகம் ஆனது.

மரபுகளின் புனிதத்தன்மை குறித்து ஒரு ஏளனப்பார்வை அவரிடம் எப்போதும் நிலவி வந்திருக்கிறது. இழந்த காதல் என்ற புகழ்பெற்ற நாடகத்தில் ஜெகதீஷ் என்ற வில்லன் பாத்திரத்தை ஏற்ற ராதா நாடக சம்பிரதாயத்துக்கு மாறாக பார்வையாளர்களுக்குத் தனது முதுகைக் காட்டியபடி நீண்ட வசனம் பேசினாராம். அப்போது ராதாவின் நீண்ட தலைமுடி கூட நடிக்கும் என பின்னாளில் நினைவு கூர்ந்தார் கருணாநிதி.
அறுபதுகளில் வெளிவந்த ‘ப’ வரிசைப் படங்கள், உதிர்ந்து கொண்டிருந்த இந்திய நிலப்பிரபுத்துவ சமூகத்தின் எச்சசொச்சமான அற்பவாத உணர்வுகளைத் தூண்டி, சமூக மாற்றத்தில் ஒரு தேக்கத்தைக் கோரின. வாழ்ந்து கெட்டாலும் மாற்றுக் குறையாத மேன்மக்களையே அவை சுற்றி வந்தன. ஆளும்வர்க்கத்திற்கு தேவைப்பட்ட சமூக அமைதியை போலிக் கையறுநிலையோடு குழைத்து இளைஞர்களுக்கு வழங்கின இத்திரைப்படங்கள்.
பார்ப்பனரல்லாத ‘மேல்’சாதி இந்துக்கள் பலர் முதல் தலைமுறையாகக் கல்வி பெறத் துவங்கிய காலமது. அவர்களிடம் புராணங்களின் மீது ஒருவித விமர்சனமற்ற மரியாதையையும், உதிர்ந்து கொண்டிருந்த கூட்டுக் குடும்பங்களின் மீது ஒரு அனுதாபம் கலந்த கரிசனையையும் இப்படங்கள் தோற்றுவித்தன. கதாநாயகர்களின் சோகத்தில் மாத்திரமே தனது துன்பங்களை இனம் காணப் பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்களிடம் யதார்த்தத்தை ஈவிரக்கமின்றி முன்வைத்தன ராதாவின் பாத்திரங்கள்.
1942இல் ராதா நடித்த ‘இழந்த காதல்’ எனும் நாடகம், நிலவுடைமை ஆணாதிக்கத்திற்கு எதிராகக் காதலை ஆதரிக்கிறது. சிற்றரசு எழுதி 1940 முதல் நடிக்கப்பட்டு வந்த ‘போர்வாள்’ நாடகம், மன்னராட்சியின் கொடுங்கோன்மை, பொருந்தாத் திருமணம், புராண ஆபாசம், கோயிலில் நடைபெறும் ஊழல் என அனைத்தையும் பேசுகிறது. மக்கள் தங்களைத் தாங்களே ஆள வேண்டுமெனக் கோருகிறது. பிரகாசம் அரசாங்கம் இக்கருத்து பிரிட்டிஷாருக்கு எதிரானது என்பதால் நாடகத்தைத் தடை செய்தது. 1947இல் கருணாநிதி எழுதிய ‘தூக்குமேடை’ பார்ப்பனர்களின் சூழ்ச்சி, மிராசுதாரர்களின் காமக் களியாட்டங்கள், நேர்மையானவர்களின் காதலைத் தோற்கடிக்கும் பொய் சாட்சிகள் ஆகியவற்றை அம்பலப்படுத்துகிறது.

தூக்குமேடை நாடகத்தைத் தஞ்சையில் நடத்தும்போது வேண்டுமென்றே பண்ணையாருடைய பெயரை ‘தென்பாதி மங்கலம் தியாகராஜ முதலியார்’ என வைத்தார் ராதா. கீழத்தஞ்சையில் வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார் கோலோச்சி வந்த அந்தக் காலத்தில் ராதாவிடம் வெளிப்பட்ட இந்தத் துணிச்சல் அசாத்தியமானது.
ராதாவின் திராவிட மறுமலர்ச்சி நாடக சபாவில் நாடகம் துவங்குவதற்கு முன் கடவுள் வாழ்த்திற்குப் பதில் இனவுணர்ச்சிப் பாடல்கள், பெரியார் தொண்டு பற்றிய நிழற்படங்கள் இடம்பெறும். ‘உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்’ என்ற வாசகத்துடன் ஒரு ஆணும் பெண்ணும் கையில் சுத்தியல் அரிவாள் பிடித்தபடியுள்ள படத்துடன் திரையும் இருக்கும். பொன்மலை ரயில்வே தொழிலாளர் போராட்டமும், அதைத் தொடர்ந்து வந்த போலீஸ் துப்பாக்கிச்சூடும், அரசின் அடக்குமுறையும் ராதாவை மிரட்ட முடியவில்லை.

ரத்தக்கண்ணீர் ஆரம்பத்தில் நாடகமாகவும், 1954 நவம்பரில் திரைப்படமாகவும் வெளிவந்தது. இறுதிக்காட்சியில் நண்பனுக்கே தனது மனைவியை மணம் முடித்து வைப்பார் தொழுநோயாளியான ராதா. தாசி வீட்டுக்குப் போனாலும் கணவனே கண்கண்ட தெய்வமென்று காத்திருந்த கண்ணகிகளுக்கு சரியான வழியைக் காட்டினார் ராதா. தனது சிலையை ஊருக்கு நடுவே வைத்து எப்படி வாழக்கூடாது என்பதற்கு தன்னுடைய பாத்திரத்தையே உதாரணமாக்குமாறும் கோருவார். இளைஞர்கள் ரசித்தார்கள். பழமை விரும்பிகளுக்கோ இப்படம் வயிற்றில் புளியைக் கரைத்தது.
அன்று ரத்தக்கண்ணீர் திரைப்படத்திற்கு சுதேசமித்திரனில் விமர்சனம் எழுதிய சாண்டில்யன், “ஒருவரே வில்லனாகவும் கதாநாயகனாகவும் வருகிறார். சீர்திருத்தக் கருத்துக்களைப் பேசுபவன் இவ்வளவு மோசமானவனாக இருப்பானா?” என ஐயமெழுப்பி இருந்தார். விடை காணப்பட வேண்டிய கேள்விதான் இது.

கதாநாயகனை நன்மைகள் அனைத்தின் திருவுருவமாகவும், பலவீனங்களும் குறைகளும் அற்ற சொக்கத் தங்கமாகவும், வில்லனைத் தீமையின் திரண்ட வடிவமாகவும் சித்தரிக்கின்ற உண்மையும் கலைத்தரமும் அற்ற நம்முடைய இலக்கிய மரபையும், சினிமா ஃபார்முலாவையும் ஒரே நேரத்தில் தாக்கித் தகர்க்கிறது ரத்தக்கண்ணீர். நாயகனே வில்லனாகிறான், பிறகு வில்லனே நல்லதைச் சொல்கிறான், நல்லவர்கள் எனப்படுவோரிடம் படிந்திருக்கும் பழமையையும் எள்ளி நகையாடுகிறான், எதிர்மறைக்குச் சிலை வைத்து நேர்மறையைக் கற்றுக் கொள்ளச் சொல்கிறான்.
ரசிகனோ ‘யார் யார் வாய் கேட்பனும் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்று வில்லனின் நகைச்சுவையைக் கைதட்டி ரசிக்கிறான். இப்படத்திற்கான வசனத்தை திருவாரூர் தங்கராசு எழுதியிருக்கிறார் என்பது உண்மையானாலும், ராதாவின் வாயிலிருந்து அல்லாது வேறோரு நடிகரின் வாயிலிருந்து இந்த வசனங்கள் வந்திருந்தால் அவை இதே போன்ற வெற்றியைப் பெற்றிருக்குமா என்று சொல்ல முடியாது.
ராதா அந்த வசனங்களைப் பேசும்போது, கதா பாத்திரத்தின் குரல் அல்லாத வேறு ஒரு அலைவரிசையில் அது ரசிகனின் காதில் விழுகிறது. திராவிட இயக்கமும் பகுத்தறிவுக் கருத்துக்களும் அன்று பெற்றிருந்த அரசியல் செல்வாக்கும், அவற்றுடன் ஒன்று கலந்திருந்த ராதாவின் ஆளுமையும் கலைத்திறனும்தான் சாண்டில்யன் எழுப்பும் கேள்வியை ரசிகனின் மனதில் எழும்ப விடாமல் செய்கின்றது.


ஒரு நடிகன் என்ற முறையில் பல விதமான பாத்திரங்களில் நடித்தார் எனினும், ராதா என்ற ஆளுமையின் தாக்கம் அவர் எற்று நடித்த எல்லாப் பாத்திரங்களின் மீதும் பதிந்திருந்தது. அதுதான் வில்லன் என்ற பாத்திரத்தையும் மீறி அந்தக் கருத்துக்களை ரசிகனிடம் கொண்டு சேர்த்தது.
நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நடத்திய கம்பராமாயண நாடகம் அன்று மூடநம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைத்து வருகையில் சென்னையில் 28.8.1954 அன்று உண்மையான ராமாயண நாடகம் நடத்த ராதா முன்வந்தார். நாடகத்திற்கு தடை விதித்தது அரசு. இதற்காகவே தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு பெரியார் சென்னை திரும்பினார். ராமாயண ஆராய்ச்சி பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார். சட்டப்பூர்வமான போராட்டத்தை மேற்கொண்டதுடன், சட்டத்தை மீறி நாடகம் நடத்தி சிறை செல்லவும் தயார் என அறிவித்தார் ராதா. அரசு பணிந்தது.

ராதாவின் ராமாயண நாடகம் பெரியார் தலைமையில் 15.9.1954 அன்று சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் நடந்தது. வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட பல்வேறு ராமாயணங்களிலிருந்தும் தனது நாடகத்துக்கான ஆதாரங்களை மேற்கோள்களாக எழுதி அரங்கின் வாயிலில் வைத்து, எதிரிகளின் வாயை அடைத்தார் ராதா. பார்ப்பனர்களால் ராதாவின் நாடகத்தை கீமாயணஎன்று தூற்ற முடிந்ததேயன்றி அவரை மறுக்க முடியவில்லை.
ஆறு வாரம் சென்னையில் நாடகம் நடத்திய பிறகு திருச்சி சென்றார் ராதா. “என் ராமாயண நாடகம் இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது என்று கருதுகிறவர்கள் கண்டிப்பாய் என் நாடகத்திற்கு வர வேண்டாம். அவர்கள் காசும் எனக்கு வேண்டாம். மீறி வந்து பார்த்தால், அவர்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் ஜவாப்தாரியல்ல என்பதைக் கண்டிப்பாய் அறியவும்” என்று விளம்பரத் தட்டியை வெளியே வைத்து விட்டு 18.12.54 அன்று திருச்சி ரத்தினவேல் தேவர் மன்றத்தில் தடையை மீறி நாடகம் நடத்த முனைந்த போது ராதா வீட்டிலேயே கைது செய்யப்பட்டார்.

பெரியாருக்கு கிடைத்த கல்லடியும், சொல்லடியும் ராதாவிற்கும் கிடைத்தது. தலித் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தியவர் என்று அறியப்படும் வைத்தியநாத அய்யர் தலைமையில் சில வீடணர்கள் மதுரையில் ராதாவை நாடகம் நடத்த விடாமல் தடுத்து இடையூறு செய்தனர். மக்கள் அவர்களை விரட்டியதோடல்லாமல் நாடகத்திற்கு தடைவிதித்து ராதாவைக் கைது செய்த காவல்துறையினரையும் சூழ்ந்து கொண்டு விரட்டியடித்தனர். காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்த பின்னரே கூட்டத்தைக் கலைக்க முடிந்தது.
கும்பகோணத்தில் நாடகம் நடத்தியபோது ராமன் வேடத்திலேயே கைதானார் ராதா. ‘ராமன் வேடத்தைக் கலையுங்கள்’ எனக் கூறிய காவல்துறையினரிடம் ‘வேடம் கலையாது, வில் கீழே விழாது, கலசம் கீழே வராது’ எனக் கூறி, ஒரு கையில் கள்ளுக் கலயமும், மறுகையில் சிகரெட்டுமாக காவல் நிலையம் நோக்கி நடந்தார் ‘ராதா’ராமன். வீதியையும் மேடையாக்கும் வித்தை அவருக்குத் தெரிந்திருந்தது. கோவையில் பழமைவாதிகள் பிரச்சினை செய்தனர். “உயிருக்குப் பயப்படாதவர்கள் மாத்திரம் நாடகம் பார்க்க வாருங்கள்” என்று விளம்பரம் செய்தார் ராதா. மக்கள் முண்டியடித்து நாடகம் பார்க்க வந்தனர். போலீசு திகைத்து நின்றது.

வேலூர் முள்ளிப்பாளையம் தியேட்டரில் ராதாவின் நாடகம் நடந்த போது காங்கிரசு காலிகள் எதிர்ப்பு தெரிவித்து அடிதடியில் இறங்கினர். நாடகத்தையே கலகமாக நடத்திக் கொண்டிருந்த ராதா, தன் குழுவினரை நடிப்பில் மட்டுமின்றி, கம்புச்சண்டையிலும் பயிற்றுவித்திருந்தார் என்பது அந்த மூடர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. வேலூர் கடைத்தெரு வரை அவர்களை விரட்டி விரட்டி அடித்தார்கள் ராதாவின் கலைஞர்கள்.
காங்கிரசார் விட்டுச் சென்ற வேட்டி, சட்டை மற்றும் துணிகளை மறுநாள் தியேட்டர் நுழைவுவாயிலில் மாட்டி வைத்து ‘வேலூர் பேடிகள் விட்டுச் சென்றவை’ என எழுதி வைத்தார் ராதா. பல ஊர்களில் ராதாவின் நாடகத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி நாடகம் நடத்தியதற்காக ஆறு வழக்குகளும், 16 நாள் சிறைவாசமும் ராதாவிற்கு கிடைத்தது.

ராதாவின் ராமாயணத்திற்காக சென்னை மாகாண சட்டசபை ஒரு புதிய நாடகத்தடைச் சட்டத்தையே கொண்டு வந்தது. அதற்கான விவாதம் நடந்த போது சட்டமன்றத்திற்கும் சென்றார் ராதா. மன்ற உறுப்பினர்கள் எதிர்த்தனர். தனக்காகவே சட்டம் வருவதால் அவ்விவாதத்தைத் தானும் அவசியம் பார்க்க வேண்டும் எனக் கோரினார் ராதா. ஒரு கலைஞனுக்காக தடைச்சட்டம் இயற்றிய ‘பெருமை’யை அன்று பெற்றவர் சி.சுப்ரமணியம்.
“எங்களால் பழைய ராமாயணத்தை பல நூற்றாண்டுகளாகத் தாங்கிக் கொள்ள முடிந்தது. அவர்களால் புதிய ராமாயணத்தை ஐந்து ஆண்டுகள் கூடத் தாங்க முடியாது” என்று சனாதனவாதிகளைக் கேலி செய்தார் அண்ணா.
தனது ராமாயண நாடகத்திற்கு எதிர்ப்பு வலுத்ததால் ராதா இம்மியளவும் அசரவில்லை. மாறாக, திருவாரூர் தங்கராசுவை எழுத வைத்து, பத்து அவதாரங்களையும் தோலுரிக்கும் ‘தசாவதாரம்’ நாடகத்தை அடுத்ததாக நடத்தத் தொடங்கினார்.

ராதாவின் இந்தப் போர்க்குணம் இளைஞர்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை. காளிமார்க் பரமசிவம் நாடார் எம்.ஆர். ராதா சோடா என்ற பெயரில் ஒரு சோடாவையே அறிமுகப்படுத்தினார் என்றால் அந்தக் காலகட்டத்தில் ராதா இளைஞர்களிடம் பெற்றிருந்த செல்வாக்கை நாம் ஊகித்துக் கொள்ளலாம்.
ராதா வசதியான வாழ்க்கை வாழ்ந்தவர்தான் எனினும் அதிகார வர்க்கத்தின் மீதும், பணக்காரர்கள், மிட்டாமிராசுகள் மீதும் ஒருவிதமான வெறுப்பையும் ஏளனப் பார்வையையும் அவர் கொண்டிருந்ததைக் காண முடிகிறது. அவரைப் போலவே பாய்ஸ் கம்பெனிகளில் படாதபாடு பட்டு, பின்னாளில் வசதி வாய்ப்புகளைப் பெற்ற எம்ஜியார், சிவாஜி போன்றவர்கள் ஆளும் வர்க்கத்தினருடன் சுமுகமாக ஐக்கியமாகிவிட்ட நிலையில், ராதாவின் ஆளுமை மாத்திரம் தனித்து நின்றது.
அதிகாரவர்க்கத்தின் தயவு தேவைப்பட்ட நாடக வாழ்க்கைக் காலத்திலேயே, இலவச பாஸில் நாடகம் பார்க்க வந்து, முன் வரிசையிலும் அமர்ந்து கொண்டிருக்கும் வசதி படைத்தோரையும் அதிகார வர்க்கத்தினரையும் நாடக வசனத்தின் மூலமாகவே நக்கல் செய்வார் ராதா.

ராதாவின் ரத்தக்கண்ணீர் நாடகத்தைப் பார்க்க வந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியாரும் ராதாவின் சொல்லடிக்குத் தப்பவில்லை. “அடியே காந்தா, சினிமாவுல முதலாளிங்க அதச் செய்றேன், இதச் செய்றேன்னு ஆசை காட்டுவாங்க. அதெல்லாம் நம்பி மோசம் போயிராத” என்று காந்தாவை எச்சரிப்பார் ராதா. செட்டியாரை மட்டம் தட்டுவதற்காகவே சேர்க்கப்பட்ட வசனம் அது.
இம்பாலா காரில் தன்னுடைய மாட்டுப்பண்ணைக்கு வைக்கோலை ஏற்றி பண்ணையில் வேலை செய்யும் ஆட்களையும் ஏற்றி அனுப்புவார் ராதா. அந்தஸ்தின் சின்னமாக இந்தக் காரை வைத்து மினுக்கிக் கொண்டிருந்த பெரிய மனிதர்கள் இதைக் கண்டு புழுங்கினர். சிவாஜி போன்ற நடிகர்கள் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து கேட்டபோது “சாயம் பூசிய தகரத்துக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்குறீங்களே” என்று அவர்களைக் கேலி செய்திருக்கிறார் ராதா.

“நாட்டிலே அதிகமா உழைக்கிறவனுக்கு கொஞ்சமா கூலி கொடுக்கிறான். சினிமாவில கொஞ்சமா உழைக்கிறவனுக்கு அள்ளிக் கொடுக்கிறான். உலகத்தில் அசமத்துவம் ஒழிக்க முடியாதபடி சபிக்கப்பட்ட கொள்ளைப் பிரதேசம்னா அது சினிமா ஒண்ணுதான்” என்று பொது மேடையிலேயே சாடியிருக்கிறார் ராதா. பகல் நேர சினிமாக் காட்சியை எதிர்த்திருக்கிறார். எம்ஜியார், சிவாஜி ரசிகர் மன்றங்கள் கொள்ளை நோயாகப் பரவிக் கொண்டிருந்த காலத்தில் ‘கூத்தாடிக்கு மன்றம் வைக்காதே’ என்று தாக்கியிருக்கிறார்.
அன்றைய திராவிடர் கழக மாநாடுகளில் ஊர்வலத்தின் முகப்பில் கருஞ்சட்டை அணிந்து குதிரையின் மீது ஏறி அணிவகுப்பார் ராதா. மாநாடுகளின் இறுதியில் சமூக நாடகங்களும் நடத்துவார். அவர் தி.க. உறுப்பினராக இல்லாத போதிலும், பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம், பிராமணாள் ஓட்டல் என்ற பெயரில் உள்ள பிராமாணாள் என்ற வார்த்தையை அழிக்கும் போராட்டம், சட்ட எரிப்புப் போராட்டம் போன்றவற்றை ஆதரித்து பிரச்சாரம் செய்ததுடன் சிலவற்றில் கலந்தும் கொண்டார்.

“கலை கலைக்காகவேன்னு சில பேர் கரடி விடுவானுங்க. அதை நீங்க நம்பாதீங்க. அப்படியிருந்தா அது எப்பொவோ செத்துப் போயிருக்கும். கலை வாழ்க்கைக்காகத்தான். வாழ்க்கையும் கலையும் சேரும் போதுதான் அதுக்கு உயிரே வருது”, என்று தனது நாடகத்தில் சேர்க்கப்படும் அன்றாட நிகழ்வுகள் பற்றிய விமர்சனங்களைக் குறை சொன்னவர்களுக்குப் பதில் அளித்தார் ராதா.
“என்னைப் பொருத்த அளவில் நான் ஏற்றுக்கொண்ட சுயமரியாதைப் பகுத்தறிவுக் கொள்கைகளுக்காக என்றுமே இதைவிட அதிகத் தொல்லைகளை ஏற்க வேண்டியிருந்தாலும் சரி, அந்த விலைகள் எனது உயிராக இருந்தாலும் சரி, அதற்கு நான் எப்போதுமே தயார்” என்று 1964இல் வெளியான பகுத்தறிவு ஆண்டு மலரில் எழுதினார் ராதா.
அது மிகையல்ல, அவரையும் அவரது நாடகக் குழுவையும் அழிப்பதற்காக நடைபெற்ற தாக்குதல்கள் ஒன்றிரண்டல்ல. தனது நாடகக் குழுவையே ஆயுதக் குழுவாக்கி தாக்குதல்கள் அனைத்தையும் முறியடித்திருக்கிறார் ராதா. அடிதடிக்கும் சிறைக்கும் அவர் அஞ்சியதில்லை.

ஆனால், காமராசர் ஆட்சிக்காலத்தில் அவரது நாடகத்துக்கு அரசு தடை விதித்தபோது, ஆத்திரம் கொண்ட மக்களை அவரே முன்நின்று அமைதிப்படுத்திக் கலைந்து செல்ல சொல்லியிருக்கிறார். தன்னை பகத்சிங் கட்சி என்று சொல்லிக் கொண்டே நடைமுறையில் காங்கிரசு ஆட்சியை ஆதரித்திருக்கிறார். ‘பச்சைத் தமிழர் ஆட்சியைப் பாதுகாப்பது’ என்ற திராவிடர் கழகத்தின் நிலைப்பாட்டால் அவரது அரசியல் பார்வை வரம்பிடப்பட்டிருந்தது. அதே நேரத்தில் கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில், போலீசால் தேடப்பட்ட ஜீவாவுக்கு, தி.க நண்பர்களின் எச்சரிக்கையையும் மீறிப் பாதுகாப்பும் கொடுத்திருக்கிறார்.
பார்ப்பனிய நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயக விழுமியங்கள், சோசலிச அபிமானம், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் கலக மனோபாவம், அலங்காரமற்ற பெரியாரின் எளிய எள்ளல் மொழி இவற்றுடன் ஒரு விதமான நிலப்பிரபுத்துவ தோரணையும் கலந்த ஆளுமைதான் ராதா.
நாடகசினிமா வாழ்க்கைச் சூழல் மற்றும் அவை தந்த வசதிகளின் காரணமாக அவருடைய தனிப்பட்ட வாழ்வில் மைனர்த்தனங்களும் இருந்தன. திருமணத்திற்கு அப்பால் பெண்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகளும், அந்த உறவுகளில் அவர் எதிர்பார்த்த ஆணாதிக்க ‘நேர்மை’யும், மீறினால் அவ்வீட்டு வாயிற்படியைக் கூட மிதிக்க மனமற்ற நிலப்பிரபுத்துவ கவுரவமும், திரையுலகில் இருந்த போதும் விருப்பமில்லாத பெண்களை நிர்ப்பந்திக்காத ‘ஜனநாயக’ப் பண்பும், தனது குறைகளைக் கூச்சமின்றி வெளிப்படையாகப் பேசும் தன்மையும் ரத்தக்கண்ணீர் ராதாவிற்குள் கலந்திருக்கும் நிஜ ராதாவின் சாயலைக் காட்டுகின்றன.

‘கூத்தாடிக்கு மன்றம் வைக்காதே’ என்று முழக்கமிட்ட ராதாவின் பெயரில் மன்றம் திறக்கப்போவதாகப் பெரியார் கூறியபோது அதைக் கூச்சத்துடன் நிராகரித்தார் ராதா. 1963இல் பெரியார் திடலில் ராதா மன்றம் என்ற அரங்கத்தைத் திறந்து வைத்துப் பேசியபோது “மற்ற நடிகர்களுக்குப் புத்தி வரட்டும் என்பதற்காகத்தான் இம்மன்றத்தைத் திறந்து வைக்கிறேன்” என்று பேசினாராம் பெரியார். அது இன்று நடிகர்களுக்கு மட்டுமா பொருந்துகிறது?



No comments:

Post a Comment