Saturday 24 September 2016

தமிழிசை என்ற மாயக் கயிற்றால் தமிழகத்தைக் கட்டிப்போட்டவர் பிறப்பு அக்டோபர் 11,1908 கே. பி. சுந்தராம்பாள் மறைவு செப்டம்பர் 24, 1980



தமிழிசை என்ற மாயக் கயிற்றால் தமிழகத்தைக்
 கட்டிப்போட்டவர் கே. பி. சுந்தராம்பாள்
பிறப்பு அக்டோபர் 11,1908  
மறைவு  செப்டம்பர் 24, 1980


கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (அக்டோபர் 10, 1908 - செப்டம்பர் 24, 1980) தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார்.[1][2]. அறிஞர் அண்ணா இவரை கொடுமுடி கோகிலம் என்று புகழ்ந்தார். [3]


இளமைப்பருவம்

ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் பாலாம்பாள் என்ற அம்மையாருக்கு சுந்தராம்பாள் பிறந்தார். இவருக்கு கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு சகோதரர்கள். இளம்வயதிலேயே தந்தையை இழந்தார். தனது சகோதரர்களின் ஆதரவால், குடும்பத்தை நடத்தி வந்தார் தாயார். 'கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளி'யில் கல்வி கற்றார் சுந்தராம்பாள்.


நாடகம், இசை, திரைப்படம் ஆகிய மூன்று துறைகளிலும் சாதனை படைத்த கே.பி.சுந்தராம்பாள் குழந்தைப் பருவத்தில் வறுமையில் வாடியவர். அவருடைய நிஜவாழ்க்கை, சினிமாக் கதைகளையும் மிஞ்சக் கூடியதாகும்.

கரூரை அடுத்த கொடுமுடியில் ஒரு ஏழைக்குடும்பத்தில் 1908_ம் ஆண்டு அக்டோபர் 11_ந்தேதி சுந்தராம்பாள் பிறந்தார். இவருக்கு கனகசபாபதி என்று ஒரு தம்பி, சுப்பம்மாள் என்று ஒரு தங்கை. குடும்பத் தலைவர் இறந்ததால் குடும்பம் வறுமையில் வாடியது. சுந்தராம்பாளின் தாயார் பாலம்பாள், குழந்தைகளை வளர்க்க வீட்டு வேலைகள் செய்ய நேரிட்டது. வறுமை அளவு கடந்து போனதால், குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள பாலம்பாள் முயற்சி செய்தார்.


இதுபற்றி, பிற்காலத்தில் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் சுந்தராம்பாளே குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது:-
"வறுமையின் காரணமாக எங்களை இழுத்துக்கொண்டு போய் நல்லதங்காள் மாதிரி காவிரியில் தள்ள முயன்றார் அம்மா. நான், தம்பி, தங்கை எல்லோரும் ஓவென்று அழுதோம். வீட்டு வேலை செய்து காப்பாற்றுவதாக அம்மாவிடம் சொல்லி காலைக் கட்டிக்கொண்டு அழுதேன். அம்மாவோ எங்களைச் சேர்த்து அணைத்துக்கொண்டு அழுதார்.  பிழைக்க வேண்டி, கரூருக்கு ரெயிலில் பயணமானோம். அம்மா கண்களில் நீர் நிறைந்து கன்னத்தில் வழிந்தது. அவரைப் பார்த்து நாங்களும் அழுதோம். 

எதிரே உட்கார்ந்திருந்த ஒரு பெரியவர் மெல்ல எங்களை அணுகி, "நீங்கள் யார்? ஏன் அழுகிறீர்கள்? உங்களைப் பார்த்துக் குழந்தைகளும் அழுகின்றனவே!" என்றார். அம்மா விஷயத்தைச் சொன்னார். அவரும் பரிதாபப்பட்டுப் போனார். "என் தங்கை விதவையாக வந்து என்னுடன் வசிக்கிறாள். உங்களை உடன் பிறவாத பொறப்பாக நினைத்துக் கொள்கிறேன். எனக்கும் பிள்ளைகள் கிடையாது. இந்தக் குழந்தைகளை வளர்த்து விட்டுப் போகிறேன்" என்று தன் வீட்டுக்கு அழைத்தார். அம்மாவுக்கு முதலில் பயம். பின்னர் ஒத்துக்கொண்டார்.



அந்தப் பெரியவரின் பெயர் மணவாள நாயுடு. "மாமா" என்று அழைக்க ஆரம்பித்தோம். மாமா கரூர் முனிசிபாலிடியில் படிக்கற்களுக்கு முத்திரை வைக்கும் உத்தியோகம் செய்து வந்தார். இரவு வேளையில் நான் வாசலில் பாயைப் போட்டுப் படுத்துக் கொண்டு வெகுநேரம் ராகம் போட்டு ஏதாவது பாட்டுப் பாடிக்கொண்டே இருப்பேன். 

விடியற்காலையில் இரண்டு காவல்காரர்கள் வந்து என்னை அழைத்தார்கள். அம்மா பயந்து கொண்டே அனுப்பி வைத்தார்.  "நடு ராத்திரியில் பாடியது யார்?" என்றார் இன்ஸ்பெக்டர்.
"நான்தான்" என்றேன். அவர் நம்பவில்லை.

எங்கள் கதையைக் கேட்டார். சொன்னேன். அவர் மூலம் வேலு நாயரிடம் அனுப்பி வைக்கப்பட்டு குழந்தை நட்சத்திரமானேன். அவரிடம் சேர்ந்து நான் நடித்த முதல் நாடகம் நல்லதங்காள். அப்போது எனக்கு வயது ஏழு.
காவிரியாற்றில் அம்மா தள்ள நினைத்தபோது, எப்படி அழுது கதறினேனோ அதுவே கதாபாத்திரமாகக் கிடைத்தது. நடித்தேன், உணர்ச்சிகரமாக." இவ்வாறு சுந்தராம்பாள் குறிப்பிட்டார்.

வேலு நாயர் நாடகக் கம்பெனியில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய சுந்தராம்பாள் படிப்படியாக முன்னேறினார். அவர் பாடல்கள், பெரும் வரவேற்பைப் பெற்றன. அவர் புகழ் தமிழ் நாடெங்கும் பரவியது.

"ஸ்பெஷல்" நாடகங்களில் நடிக்கலானார்.


நாடக வாழ்வில்

வேலுநாயர் - ராஜாமணி அம்மாள் நாடகக் குழுவினர் நல்லதங்காள் நாடகம் நடத்த கரூருக்கு வந்திருந்தனர். அந்த நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை சுந்தராம்பாள் ஏற்று ஆண் வேடத்தில் நடித்தார். பசிக்குதே! வயிறு பசிக்குதே என்ற பாட்டை மிக அருமையாகப் பாடி ரசிகர்களிடன் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சொந்தக் குரலிலேயே பாடி நடித்தார்.

1917−ல் கொழும்பு சென்று நடிக்கத் தொடங்கினார். இலங்கையின் பல ஊர்களிலும் இவர் நடித்த நாடகம் நடைபெற்றது. 1929களில் நாடு திரும்பினார். வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், ஞானசெளந்தரி, பவளக்கொடி போன்ற அக்காலத்தில் புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தார்.


கிட்டப்பாவுடன் திருமணம்.

மீண்டும் கே.பி.எஸ். 1926−ல் கொழும்புக்கு நாடகக் குழுவுடன் சென்றார். கே.பி.எஸ் புகழ் பரவலாக வளர்ந்திருந்தது. அக்காலத்தில் எஸ். ஜி. கிட்டப்பா தனது குரல் வளத்தால் நடிப்பால் பலரது கவனத்தைப் பெற்று புகழுடன் இருந்து வந்தார். கொழும்பில் கேபிஎஸ் உடன் இணைந்து கிட்டப்பா நடிக்க ஆரம்பித்தார்.


கந்தர்வ கான செங்கோட்டை இசைச் சிங்கம் கிட்டப்பாவை அந்தக் காலத்திலேயே சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டவர். இவர்கள் இருவரும் தமிழ்கூறு நல்லுலகம் முழுவதும் சென்று தமிழ் நாடகத்தை உயிர் பெறச் செய்தார்கள்.

1924 ல் கிட்டப்பா, சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த கிட்டம்மாளை திருமணம் செய்துகொண்டார். தண்டையார்பேட்டை பரமானந்ததாஸ்- சோட்டாதாஸ் பங்களாவில் நடந்த இவர்களது திருமணத்திற்கு பிரபல சங்கீத வித்வான்கள் செம்மங்குடி சீனிவாச அய்யர், மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் உள்ளிட்ட பிரபலங்கள் வந்தனர்
kittappa at tha age of 10




1926ஆம் ஆண்டு சுந்தராம்பாள் - கிட்டப்பா நடித்த வள்ளிதிருமணம் அரங்கேறியது. இருவரும் பின்னர் திருமணம் புரிந்து கொண்டனர்.
பல்வேறு இசைத் தட்டுகளில் கேபிஎஸ் பாடல்கள் பதிவு செய்யப்பட்டு எங்கும் ஒலிக்கத் தொடங்கின.

1933−ல் டிசம்பர் 2இல் கிட்டப்பா காலமானார். அப்போது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து அவர் வெள்ளை சேலைக் கட்டத்தொடங்கினார். எந்தவொரு ஆண் நடிகருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார். அதைக் கடைசி வரை காப்பாற்றி வந்தார்.


நீண்டகாலமாக பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த கேபிஎஸ் 1934−ல் நந்தனார் நாடகத்தில் நடித்தார். தொடர்ந்து பல நாடகங்களை நடத்தி வந்தார். அவைகளில் பெரும்பாலும் அவர் ஆண் வேடம் தரித்து பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தியிருந்தார்.








திரைப்படத் துறையில்...

இந்திய அளவில் நடிப்புக்காக ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தை முதன்முதலில் பெற்ற நடிகை; இந்தியாவிலேயே முதன்முதலாக சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை கே.பி.சுந்தராம்பாள்தான்; காந்தியடிகளே நேரில் வந்து தேசச் சேவைக்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஒரே நடிகை கே.பி.எஸ்தான்; தமிழ்நாட்டில் அதிக அளவு இசைத்தட்டு விற்றதும் கே.பி.எஸ். பாடிய பாடல்களுக்குத்தான்.


இப்படி எத்தனையோ சாதனைகளைச் செய்தவர் கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள். நாடக உலகில் ஆண்களுக்கு இணையாகப் பாடி, நடித்துப் பலரை மேடையை விட்டே விரட்டியவர் அவர். “15 வயதுக்குள்ளாகவே சுந்தராம்பாள் ‘அயன் ஸ்திரிபார்ட்’ பதவிக்கு வந்துவிட்டாராம். இது ஆச்சரியம்தான். நாடக மேடையில் இத்தகைய ‘பிரமோஷன்’ யாருக்குமே இருந்ததில்லை” என்கிறார் வ.ரா.

“இவருடைய பெயர் தமிழ்நாடெங்கும் பரவச் செய்தது, இவர்களுடைய அபாரமான சங்கீதக் கலையே. நல்ல ராக-தாள ஞானமுடையவர். நான் கண்ட அளவில் இவர்களுடைய சங்கீதத்தில் ஈடுஜோடு இல்லாத பெருமை இவர்கள் பக்கவாத்தியம் இல்லாமலேயே மிகவும் இனிமையாகப் பாடும் திறமையாம். அநேக சங்கீத வித்வான்கள் பக்கவாத்தியத்தோடு பாடுவது ஒரு மாதிரியாக இருக்கும். பக்கவாத்தியம் இல்லாமல் பாடுவது வேறு மாதிரியாக இருக்கும். இவரது பாட்டில் அப்படி இல்லை. பக்கவாத்தியங்கள் இல்லாமல் பாடினாலும் மிகவும் காதுக்கு இனிமையாக இருக்கும். இது ஒரு அரிய குணம்” என்கிறார் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார்.



கே.பி.சுந்தராம்பாளுக்குக் கிடைத்த குரல் ஒரு வரப்பிரசாதம். இது போன்ற ஒரு குரல் தமிழக இசை வரலாற்றில் யாருக்கும் கிடையாது. பாடும் வல்லமையை அவர் தனக்குத் தானே வளர்த்துக்கொண்டார். விருத்தங் களை ராகமாலிகைகளில் பாடிப் புகழ் பெற்றவர் திருச்செந்தூர் சண்முகவடிவு. அவரிடமிருந்தே இம்முறையை கே.பி.எஸ். கற்றார்.


பக்த நந்தனார் என்னும் படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தார். பக்த நந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள். இவற்றில் கேபிஸ் பாடியவை 19 பாடல்கள். 1935இல் இப்படம் வெளிவந்தது.
அடுத்ததாக மணிமேகலையில் நடித்தார். 1938−ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940−ல் படம் வெளிவந்தது. இப்படத்தில் 11 பாடல்களை இவர் பாடியிருந்தார்.

தமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் (ஜனவரி 4, 1944) கலந்து கொண்டார்.
தொடர்ந்து கேபிஎஸ் ஔவையார் என்ற படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார். இப்படம் 1953−ல் வெளிவந்தது. 'பொறுமை யென்னும் நகையணிந்து' , 'கன்னித் தமிழ்நாட்டிலே - வெண்ணிலவே' போன்ற பாடல்கள் பிரசித்தமானவை. ஒளவையார் படத்தில் 48 பாடல்கள். இவற்றில் கேபிஎஸ் பாடியவை 30.

1964 பூம்புகார் படம் வெளிவந்தது. இப்படத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தை கேபிஎஸ் ஏற்று நடித்திருந்தார்.

மகாகவி காளிதாஸ் (1966), திருவிளையாடல் (1965), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை] (1967), துணைவன் (1969), சக்தி லீலை (1972), காரைக்கால் அம்மையார் (1973), திருமலை தெய்வம் (1973) உள்ளிட்ட 12 படங்களில் கேபிஎஸ் பாடி நடித்தார்.

நாலரைக் கட்டை ஸ்ருதி

கே.பி.எஸ். நாலரைக் கட்டை ஸ்ருதியில் பாடுவது வழக்கம். உச்சஸ்தாயியில் பாடலின் சிறப்பான வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து, ஒரு அசக்கு அசக்குவது இவர் பாணி. அப்படி அசக்குவதிலேயே பிருகாக்கள் வெடிக்கும். பொதுவாக, பாடகர்கள் மெல்ல மெல்ல முயன்று உச்சஸ்தாயியில் நிலைகொள் வார்கள்.
இவரோ எடுத்த எடுப்பிலேயே அந்த இடத்துக்குச் சென்றுவிடுவார். இதற்குக் காரணம், நாடக மேடைதான். ஒலிபெருக்கி இல்லாத அந்தக் காலத்தில், நாடகத்துக்கு வந்திருக்கும் கடைசிப் பார்வையாளருக்கும் கேட்க வேண்டும் என்கிற சூழல். அதனால்தான் நாடகப் பாடகர்கள் பைரவி, கேதாரம், காம்போதி முதலிய ராகங்களை எடுத்துக்கொள்வார்கள். அவை உரத்து, நாடகத்தின் இயல்பைப் பார்வையாளனுக்குத் தொற்ற வைக்கும். “கே.பி.எஸ். அந்தக் காலத்தில் கும்பகோணத்தில் நாடகத்தில் பாடியதைக் கேட்டிருக்கிறேன். ஒரு மைல் தூரம் கேட்கும்” என்கிறார் நடிகர் சாரங்கபாணி.

பழைய நாடகப் பாடல்களை இன்று கேட்கும்போது, என்ன வார்த்தை என்பதே புரியாது. கே.பி.எஸ். பாடலில் மட்டும்தான் சொல் சுத்தம், பொருள் தெரிந்து பாடும் அழகைக் கேட்க முடிகிறது. பாட்டுக்குக் காலப்பிரமாணம் முக்கியம். அது கே.பி.எஸ்ஸுக்குக் கைவந்த கலையாக இருந்தது.

குடம்குடமாகச் சொல் மகுடங்கள்

“இசையரங்குகளில் மரபாக முதலில் வர்ணம் பாட வேண்டும். ஆனால், வர்ணத்தைப் பாடாமல், அதற்கு நிகராக வர்ணத்தில் உள்ள பண்சுவை மிக்க இசைச் சுர அமைப்புகளையும் ‘ததிங்கிணத்தோம்’ வைக்கும் தாள முத்தாய்ப்பு அமைப்புகளையும் இனிய செந்தமிழ்ச் சொல் மகுடங்களாகவே அமைத்துக் காட்டி மகிழ்ச்சியூட்டுவார். இது போன்றே கற்பனைச் சுரங்கள் பாடுமிடத்திலே சொல்மகுடங்களைக் குடம் குடமாகப் பொழிந்து, துள்ளல் இசையைத் துய்க்கச் செய்வார்” என்று வி.ப.க. சுந்தரம் கே.பி.எஸ்ஸைப் பற்றிச் சொல்வார்.


அகர, இகர, உகர ஒலிகள் மூலமாகப் புதுப் படைப்புக் கோவைகள் போன்ற அமைப்பைக் காட்டிக் களிப்பூட்டுவார். ‘ஞானப்பழத்தைப் பிழிந்து’ என்கிற போது ‘ஞா’வை நீட்டிப் பாடுவதையும் ரசம் என்று பாடும்போது நீட்டாமல் குறுக்கிப் பாடுவதையும் கேட்டுப்பார்த்தால்தான் அதன் சுவை தெரியும்.

கே.பி.எஸ். இசை நிகழ்ச்சி குறைந்தது 6 மணி நேரம் நடக்கும். தஞ்சை, கும்பகோணம், சிதம்பரம், முதலிய ஊர்களில் பாடும்போது மட்டும் ராகம், தாளம், பல்லவி, ஆலாபனை, லய விந்நியாசம் எல்லாம் முடிந்த பின்னர்தான் திரைப்படப் பாடல்களுக்கு வருவார். கச்சேரியில் மற்றவர்கள் பாடாத ராகங்களை எடுத்து வைத்துக்கொண்டு, அந்த ராகங்களுக்கு அழகைக் கொடுத்துக் கச்சேரியைக் களைகட்டச் செய்வார்.


இசை இலக்கணம் தெரிந்தவர்தான் அதை ரசிக்க முடியும் என்பதை மாற்றி, இலக்கணம் தெரியாதவர் களையும் இசையைச் சுவைக்க வழிசெய்தவர் கே.பி.எஸ்-தான். ஒரு பாடலைக் கேட்டுவிட்டு, அடுத்த பாடலைக் கேட்காமல் சென்ற ரசிகர் யாருமே கிடையாது. கச்சேரி முடியும் வரை தமிழிசை என்ற மாயக் கயிற்றுக்குள் கட்டிப் போட்டுவிடுவார். எனவே, தமிழின் உச்சஸ்தாயி என்றுதான் கே.பி.எஸ்ஸைச் சொல்ல வேண்டும்.


இவர் பாடிய சில திரைப்படப் பாடல்களின் பட்டியல்:
எண் பாடல் பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
1 பழம் நீயப்பா... கண்ணதாசன் கே. வி. மகாதேவன் திருவிளையாடல்
2 அறியது அறியது... கண்ணதாசன் கே. வி. மகாதேவன் கந்தன் கருணை
3 துன்பமெல்லாம்... மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்
4 அன்று கொல்லும் / நீதியே நீயென்னும்… மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்
5 வாழ்க்கை என்னும் / ஒருவனுக்கு ஒருத்தி… மு. கருணாநிதி ஆர். சுதர்சனம் பூம்புகார்
6 தப்பித்து வந்தானம்மா… மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்
7 கேட்டவரம்… கண்ணதாசன் குன்னக்குடி வைத்தியநாதன் காரைக்கால் அம்மையார்
8 ஓடுங்கால் ஓடி… கண்ணதாசன் குன்னக்குடி வைத்தியநாதன் காரைக்கால் அம்மையார்
9 ஏழுமலை இருக்க… உளுந்தூர்பேட்டை சண்முகம் குன்னக்குடி வைத்தியநாதன் திருமலை தெய்வம்
10 ஞானமும் கல்வியும்… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்
11 பழநி மலை மீதிலே… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்
12 கொண்டாடும் திருச்செந்தூர்… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்
13 சென்று வா மகனே... கண்ணதாசன் கே. வி. மகாதேவன் மகாகவி காளிதாஸ்
14 காலத்தால் அழியாத… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் மகாகவி காளிதாஸ்

அரசியல் துறையில்...

காங்கிரஸ் பிரச்சாரங்களில் கேபிஎஸ் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய பாடல்களையும் பாடி வந்தார்.


காமராசர் ஆட்சியின் போது தமிழக மேல் சபை உறுப்பினராக பதவிவகித்தார். 1980 செப் 24இல் இவர் மறைந்தார்.

விருதுகளும் சிறப்புகளும்

இசைப்பேரறிஞர் விருது, 1966; வழங்கியது: தமிழ் இசைச் சங்கம் 
நாடக உலகின் ராணி கே.பி.சுந்தராம்பாள்


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

No comments:

Post a Comment