Tuesday 27 September 2016

NAGESH நாகேஷ் , ஆசியாவின் சார்லி சாப்ளின் பிறப்பு 1933 செப்டம்பர் 27


NAGESH நாகேஷ் , ஆசியாவின் சார்லி சாப்ளின் 
 பிறப்பு 1933 செப்டம்பர் 27


நடிகர்கள் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் மனதில் பதிவது என்பது அவ்வளவு பெரிய விஷயமல்ல. பாட்ஷா, வேலு நாயக்கர், அலெக்ஸ் பாண்டியன், etc etc. ஹீரோக்களுக்கு இது சரி, எத்தனை நகைச்சுவை நடிகர்களின் பாத்திரப்பெயர் நமக்கு நினைவில் இருக்கின்றது. அவ்வளவாக நினைவில் இருக்காது. ஏனென்றால நாம் அங்கு பார்ப்பது நகைச்சுவை நடிகர்களைத்தான், பாத்திரங்களை அல்ல. அதற்கு பெயர் அவ்வளவாக அவசியமில்லாதது. விதிவிலக்கு வெகு சிலர் நாகேஷ், வடிவேலு.



நாகேஷ் என்றவுடன் நினைவில் வருவது படங்களல்ல, தருமியும், வைத்தியும், ஓஹோ ப்ரொடெக்‌ஷன் செல்லப்பாவும்தான்.





தில்லானா மோகனாம்பாள் படத்தை பார்த்துவிட்டுதான் புத்தகத்தை படித்தேன். படிக்கும் போது சிவாஜி, பத்மினி உருவங்கள் எல்லாம் மறைந்து, என் கற்பனை உருவமே கதை முழுக்க நிறைந்தது. ஆனால் வைத்தியை பற்றி படிக்கும் போது நாகேஷ்தான் என் கண்ணில் தெரிந்தார்.
இத்தனைக்கும் ஒரிஜினலுக்கும் சினிமாவிற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருந்தும் சினிமாவில் இல்லாத காட்சியில் கூட நாகேஷ்தான் தெரிந்தார். அந்தளவிற்கு அதற்கு உயிரை கொடுத்திருக்கின்றார். வைத்தியாக நடித்துக் கொண்டிருக்கும் போது கேமராவிற்கு பின்னால் அவருக்கு இருந்த கஷ்டங்களை படிக்கும் போது அதனோடு எப்படி நடிக்க முடிந்தது என்று ஆச்சர்யமளிக்கின்றது. 


இது போன்று பல விஷயங்களை கொண்ட தொகுப்பு நான் நாகேஷ் என்னும் இப்புத்தகம். நாகேஷின் வாழ்க்கை வரலாறு எல்லாம் அல்ல. நாகேஷுடன் அமர்ந்து கொண்டு அவரது பழங்கதைகளை பேசி, அதில் கிடைத்ததை வைத்து தேற்றியிருக்கின்றார்கள்.

குண்டுராவ் நாகேஷ், தாராபுரத்தில் பிறந்து வளர்ந்த கன்னட பிராமணர். அப்பா ரயில்வே உத்தியோகஸ்தர், நாகேஷும் ரயில்வே க்ளார்க். அலுவலக நாடகத்தில் சிறு வேடத்தில் நடிக்க ஆரம்பித்து, சினிமாவில் நுழைந்து தனி இடத்தை பிடித்தவர்.

நகைச்சுவையுணர்ச்சி இயல்பாக இருக்க வேண்டும், பயிற்சியினால் எல்லாம் வராது. நாகேஷின் இயல்பான குறும்புதான் அவருக்கு அப்படிப்பட்ட ஸ்கீரின் ப்ரெசென்ஸை தந்திருக்கின்றது. விடுமுறை தர மறுத்தவரை கடுப்படிக்க உள்ளாடைகளுடன் அலுவலகத்திற்கு செல்வது, தாலுகா ஆபிசில் அமர்ந்து கொண்டு, செய்யாத வேலைக்கு ராஜினாமா தருவது என்று குசும்பு கொப்பளிக்கும் ஆசாமியாகவே இருந்திருக்கின்றார்.

நாம் பார்க்கும் நாகேஷின் முகத்திற்கு பின்னால் இருப்பது மூன்று முறை அடுத்தடுத்து தாக்கிய அம்மையின் திருவிளையாடல். அந்த தாழ்வுணர்ச்சி அவரிடம் பல காலம் இருந்திருக்கின்றது. அதை மீறி வென்றது அவருக்குள் இருக்கும் கவலையில்லாத மனிதன்.

 எதற்கும் துணிந்த, கவலைப்படாத, சரி என்று பட்டதை செய்யும் குணம். அந்த தைரியம் இருந்ததால்தான், சாதரண வயிற்றுவலிக்காரனாக வந்து "வயிறு வலிங்க" என்னும் ஒரு வரி வசனத்தை பேச வேண்டிய காட்சியை, தயங்காமல் விஸ்தாரித்து, சிறந்த நடிகர் பரிசையும் தட்டி செல்ல முடிந்தது. அதுவும் எம்.ஜி.ஆரிடம் இருந்து. அதே தைரியம்தான் "நீ புது நடிகன், பெரிய நடிகரோடு நடிக்கிறோம்னு பயப்படாம நடி" என்ற சிவாஜியிடம் "புது நடிகனோட நடிக்கிறோம்னு நீங்க உங்க நடிப்ப கோட்ட விட்டுடாதீங்க" என்று கூற வைத்துள்ளது.

நாகேஷை உருவாக்கியது பாலச்சந்தர் என்ற ஒரு பிம்பம் உண்டு, ஆனால் கே.பிக்கு முன்னரே அவர் பல நாடகங்களில் நடித்துள்ளார் என்பதும், திரைப்படத்தில் முக்கிய வேஷத்தை தந்து ஒரு புதிய பாதையை அமைத்தவர் ஶ்ரீதர் என்பதும் புதிய தகவல்கள்.

நாகேஷ் என்ன செய்தார், இயக்குனர் சொன்னதை செய்தார், நடித்தார் என்று கூறலாம். ஆனால் இயக்குனரையும் மீறி பல இடங்களில் அவரது சொந்த சரக்கும் உள்ளது. தருமியின் பல வசனங்கள் அவரது சொந்த வசனங்கள். "அவனில்லை அவன் வரமாட்டான்", வைத்தி பேசும் "மெயினே சும்மா இருக்கு, சைடு நீ ஏம்பா துள்ற" இது எல்லாம் அவரது சொந்த சரக்கு. சிவாஜியுடனான அவரது உரையாடல் அப்படியே சர்வர் சுந்தரத்திலும் இருக்கும், சிவாஜிக்கு பதில் மனோரமா.

நாகேஷுக்கு பொருத்தமானது நகைச்சுவை பாத்திரங்களும், சாதரணர் பாத்திரங்களும்தான். சோக பாத்திரங்கள் என்றால் கொஞ்சம் அதிகமாகவே பிழிந்துவிடுவார். சும்மா இல்லாமல் அவரை அம்மாதிரி பாத்திரங்களில் நடிக்க வைத்து கொஞ்சம் வீணடித்து விட்டனர். நடுவே மதுவால் துவண்டு மீண்டு வந்தும் கலக்கியுள்ளார். அதைப் பற்றி அவர் கூறுவது, அவருக்கும் ஒரு பெண்ணிற்குமான உரையாடல்

"நாகேஷா நீங்கதான் போய்ட்டீங்களாமே"

"உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில இருந்தேன், இப்போ எல்லாம் சரியாடுச்சி"


"அதான் நீங்க போய்ட்டீங்கனு பேப்பர்க்காரனே போட்டுட்டானே"

நிஜ வாழ்க்கையில் கற்பனையை விட சுவாரஸ்யமான நகைச்சுவை கிட்டும்.

ட்டுரைகளுக்கு தொடர்ச்சி எல்லாம் ஏதுமில்லை. துண்டு துண்டான விஷயங்கள். கல்கியில் தொடராக வந்தது. ரஜினி கமல் இல்லாமல் சினிமா ஏது, அதனால் அவர்களை பற்றி இரண்டு பகுதிகள். ஜெயகாந்தனை பற்றி ஒரு பகுதி, பல பிரபலங்களை பற்றிய விஷயங்கள் என்று போகின்றது. சில விஷயங்கள் போரடித்தாலும், பல சுவாரஸ்யமானவை. குறை என்றால்  கட்டுரைகளை சரியாக முடிக்காததுதான். ஒரு விஷயத்தை படித்தால் ஏதாவது மனதில் தோன்ற வேண்டும், பல கட்டுரைகளை படித்தால், "அப்படியா அதுக்கு என்ன இப்போ" என்றுதான் தோன்றுகின்றது.

நாகேஷ் என்னும் ஒரு மனிதனை முழுவதும் தெரிந்து கொள்ள இது உதவாது. நாகேஷ் பற்றி சில தகவல்களை, சினிமாதாண்டிய நாகேஷை, சினிமா உலகை பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். 

” நான் சிவாஜிக்கு அடுத்து நாகேஷிடமிருந்துதான் அதிகம் கற்றுக்கொண்டேன். ஒருவர் யார், எப்படிப்பட்டவர் என்பதைவிட அவர் விஷயம் உள்ளவர் என்று தெரிந்தால் அவரை மதிக்கத் தெரிந்தவர் நாகேஷ். பாராட்டு, ஷீல்டு இதிலெல்லாம் அவருக்கு ஆர்வமில்லை. இவை நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டவற்றில் சில. அவரது உடலைப் பார்த்துவிட்டு ஐந்து நிமிடம்தான் அழுதிருப்பேன். 

அப்புறம் அவரது அற்புதமான நகைச்சுவை காட்சிகள் நினைவுக்கு வர பக்கத்தில் இருந்தவர்களுடன் அவற்றை நினைவுகூர்ந்து மனம்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தேன். இதுபோல வேறு யாருக்குச் சாத்தியம்? இப்போது இருக்கிறாரே, அந்த உயிரற்ற உடல்போலக்கூட மிகவும் தத்ரூபமாக என் படத்தில் நடித்திருக்கிறார். நம்மவர் படத்தில் அவருடன் நடித்தது ஒரு நெகிழ்ச்சியான அனுபவம். அவருக்காக நான் எழுதிய காட்சிகளில் மிகவும் ஈடுபாட்டுடன் நடித்ததும், அதற்காக நாகேஷுக்குச் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததிலும் எனக்குதான் பெருமை.”

கமல்ஹாசன் என்னிடம் இப்படி நாகேஷ் பற்றி நெகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்த இடம், சென்னை பெசன்ட் நகர் மின் தகன மையம். நாகேஷின் வீட்டிலிருந்து புறப்பட்ட அவரது இறுதி ஊர்வலம் இன்னும் பெசன்ட் நகர் வந்தடையவில்லை. ஏற்கனவே அங்கே வந்து காத்துக்கொண்டிருந்தார் கமல். “இது பேட்டி காண்பதற்கான இடமோ, தருணமோ இல்லை. ஆனாலும், அடுத்த இதழ் கல்கியில் “நாகேஷ்: சிரிப்பு சூப்பர் ஸ்டார் ” என்று ஒரு கவர் ஸ்டோரிக்குத் திட்டமிட்டிருக்கிறோம். 


அவரைப் பற்றிய உங்கள் நினைவுகளைச் சொல்லுங்களேன்” என்றபோது கமல் ரொம்ப கேஷுவலாக “நீங்கள் கேட்கவில்லையென்றாலும்கூட நான் இங்கே நாகேஷ் பற்றிதான் உங்களுடன் பேசிக்கொண்டிருந்திருப்பேன்” என்று சொல்லிவிட்டுச் சொன்ன விஷயங்கள்தான் இவை.

நாகேஷ் தன் வாழ்க்கையைப் பற்றி இந்த உலகத்திலேயே என்னிடம்தான் ரொம்ப விரிவாகப் பேசி இருக்கிறார் என்று நான் பெருமையுடன் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ள முடியும். சினிமா மூலம் கோடிக்கணக்கானவர்களைச் சிரிக்கவைத்த, சிரிக்கவைத்துக்கொண்டிருக்கிற நாகேஷ் சொந்த வாழ்க்கையில் பட்ட அவமானங்கள், வேதனைகள், ரணங்கள், சந்தோஷங்கள், சவால்கள் என்று சகலமான விஷயங்களையும் அவரே என்னிடம் சொல்ல, அவற்றை எல்லாம் தொகுத்து ஒரு வருடத்துக்கு வாராவாரம் கல்கியில் தொடராக எழுதியது எனக்குக் கிடைத்த அரிய பாக்கியம்.

கல்கியில் அவரது வாழ்க்கை அனுபவங்களை எழுதலாம் என்ற நோக்கத்துடன் அவரைச் சந்தித்துப் பேசியபோது, சுமார் ஒரு மணிநேரம் நிறைய பேசிவிட்டு “இவற்றையெல்லாம் எதற்காகப் பத்திரிகையில் எழுதவேண்டும்? அதனால் யாருக்கு என்ன பயன்? ” என்று ஒரு போடு போட்டார். நானும் உடன் வந்திருந்த புகைப்படக்காரர் யோகாவும் அரை மணி நேரம் பேசி அவரைச் சம்மதிக்கவைத்தோம்.

அதன்பிறகு ஒவ்வொரு சந்திப்பின்போதும் அவர் அளித்த ஒத்துழைப்பு அபாரமானது. பழைய விஷயங்களை நகைச்சுவை கொப்பளிக்கத் தேர்ந்த ரசனையுடன் குரலில் ஏற்ற இறக்கம் கொடுத்து அவர் மீண்டும் நினைவு கூரும்போது என்னை மறந்து சிரித்துவிடுவேன்.
நாகேஷின் இயற்பெயர் நாகேஸ்வரன். அப்பா கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அரிசிக்கரே என்ற ஊரில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர். குடும்பம் ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் வசித்தது. அப்பா ரொம்பக் கண்டிப்பான மனிதர். வீட்டில் நாகேஷுக்குச் செல்லப்பெயர் குண்டு ராவ். 

எஸ்.எஸ்.எல்.சி. முடித்த கையோடு கோவை பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் இன்டெர்மீடியட் சேர்ந்தார். இரண்டாவது வருடப் பரீட்சைக்குச் சில நாள்கள் முன்பாகக் கடும் அம்மை தாக்கியது. அது குணமடையும் தருவாயில் இரண்டாவது தாக்குதல். அடுத்து மூன்றாம் தடவையும் தாக்கியது. பிழைத்ததே பெரிய விஷயம்தான். பால் வழியும் முகத்தில் அம்மை தனது ஆட்டோகிராஃபைக் கிறுக்கிவிட்டுப் போனது. மனம் வெறுத்த நாகேஸ்வரன் வீட்டை விட்டு வெளியேறினான். 

இலக்கிலா வாழ்க்கைப் பயணம் தொடங்கியது. பலவிதமான வேலைகள். ஹைதராபாதில் ஒரு கூலித் தொழிலாளியாகக்கூட வேலை பார்த்திருக்கிறார். நாகேஷின் டான்ஸ் மூவ்மென்ட்களைத் திரையில் பார்த்து பிரமித்துச் சிரிக்கிறோமே, அதற்குப் பின்னால்கூட ஒரு கதை இருக்கிறது. ஒரு படத்தில் அவர் சரியாக நடனம் ஆடாதது கண்டு டைரக்டர் நாகேஷின் மனம் புண்படும்படியாக கமெண்ட் அடித்துவிட்டார். அன்று இரவுமுழுக்க அறைக் கதவைச் சாத்திக்கொண்டு, கிராமஃபோன் ரெக்கார்டு ஒலிக்க உண்ணாமல் உறங்காமல் பயிற்சி செய்து மறுநாள் டைரக்டரை ஆச்சரியப்படுத்தி மனதுக்குள் வெட்கப்பட வைத்தார் நாகேஷ்.  


மைலாப்பூர் கபாலி கோவில் தெப்பக்குளத்தின் படிகட்டுகளில் உட்கார்ந்துகொண்டு வற்றிப் போன தெப்பக் குளத்தைப் பார்த்து “அந்தப் பழைய நாள்கள் இனிமே வருமா? ஊஹூம்… வராது.. வரவே வராது… ” என்று தனக்குத்தானே புலம்பிய கிருஷ்ணசாமி அய்யர் என்பவர்தான் நாகேஷின் மிகப் பிரபலமான தருமி கேரக்டருக்கு இன்ஸ்பிரேஷன். 

டைரக்டர் ஏ. பி. நாகராஜன் தருமி சம்பந்தப்பட்ட காட்சிக்கு ஒரு சின்னக் கோடு போட்டார். நாகேஷ் ரோடு இல்லை, ஒரு தங்க நாற்கரச் சாலையே போட்டுவிட்டார். இன்றைக்கும் டி.வி.யில் தருமி நாகேஷ் – சிவாஜி காட்சியைப் பார்த்து ரசிக்கும் உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் தெரியுமா? திருவிளையாடல் படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு நாகேஷுக்கு அழைப்புகூட அனுப்பவில்லை.

ஒருகட்டத்தில் நகைச்சுவையிலிருந்து குணச்சித்திர வேடங்களுக்கு மாறினாலும் அவரது நகைச்சுவை உணர்ச்சிமட்டும் என்றுமே குறையவில்லை. ஒருமுறை இன்றைய நகைச்சுவை நடிகர்கள் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் அடித்த நச் கமெண்ட்: “சிலருக்கு டைமிங் சென்ஸ் நல்லா இருக்கு; சிலருக்கு டைம் நல்லா இருக்கு!”

வாழ்க்கையை வெகு எதார்த்தமாக எதிர்கொண்டவர் நாகேஷ். பண விஷயத்தில் அவர் வெகு கறாரான மனிதர் என்று சினிமா உலகில் சொல்வார்கள். ஆனால் தனிப்பட்டமுறையில் மிக எளிமையானவர். “எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறுதானே?” என்பார். சினிமா உலகத்தினரது வீட்டு வரவேற்பறையில் அவர்கள் வாங்கிய ஷீல்டுகளை ஷோ கேஸ் அமைத்துக் காட்சிக்கு வைப்பது சகஜம், ஆனால் நாகேஷ் வீட்டில் ஒரு ஷீல்டைக்கூடப் பார்க்க முடியாது. தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசுவது நாகேஷுக்குப் பிடிக்காத விஷயம்.

”சிரித்து வாழ வேண்டும்” என்ற தலைப்பில் வெளியான நாகேஷின் வாழ்க்கை அனுபவத் தொடருடைய முதல் அத்தியாயத்துடன் நாகேஷ், அவரது மூன்று மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் என்று அனைவரும் இருக்கும் ஒரு குரூப் ஃபோட்டோ போட்டால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். அந்த ஆசையை அவரிடம் தெரிவித்தபோது “அப்படி ஒரு ஃபோட்டோ இல்லை” என்றார். 

“பரவாயில்லை. ஒரு நாள் அனைவரையும் உங்கள் வீட்டுக்கு வரச்சொன்னால் ஒரு ஃபேமிலி குரூப் ஃபோட்டோ எடுத்துவிடலாம்!” என்றேன். ஆனால் “அதெல்லாம் சாத்தியமில்லை!” என்று சொல்லிவிட்டார். “இது என்ன சார் பெரிய விஷயம்? ஃபோன் நெம்பர் கொடுங்க! நானே பேசி ஏற்பாடு செய்திடறேன்” என்று வற்புறுத்தியபோது ‘இதை விட்டுடேன்! பிளீஸ்!” என்று சொல்லி அத்துடன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

2009 ஜனவரியில் அவர் மரணம் அடைவதற்குச் சில மாதங்கள் முன்பிருந்தே உடல் நலமில்லாமல் இருந்தார். அவ்வப்போது அவரது வீட்டுக்குச் சென்று பார்த்துவிட்டு வருவது என் வழக்கம். அப்படி ஒரு நாள் அவர் வீட்டுக்கு நான் சென்றிருந்த சமயம் இயக்குனர் கே. பாலசந்தரும் அங்கே வந்திருந்தார். தன் நெடுநாளைய நண்பனின் கைகளை வருடிக்கொடுத்தபடி “ராவுஜி! எப்படிடா இருக்கே?” என்று கே.பி. கேட்டார். 

பேச முடியாத நிலையிலும் நாகேஷின் உதட்டோரத்தில் ஒரு புன்னகை. அந்தச் சிரிப்பு இன்னும் என் மனத்தில் நிழலாடுகிறது.
அன்று நாகேஷைப் பற்றிப் பழைய நினைவுகளை அசைபோட்டார் கே.பி. “நீர்க்குமிழி படப்பிடிப்பின் முதல் நாள் நாகேஷ் என்னை ’சார்’ என்று அழைத்தபோது எனக்குச் சங்கடமாக இருந்தது. இத்தனை நாளும் வாடா போடா என்று பேசுகிற நீ திடீரென்று என்னை சார் என்று கூப்பிட்டால் கிண்டல் பண்ணுவதுபோல இருக்கு” என்று நான் அவனிடம் சொன்னேன்.

 அப்போது அவன் என்னைத் தனியாக அழைத்துக்கொண்டுபோய் “நாம ரெண்டு பேரும் நெருங்கின நண்பர்கள்தான். ஆனால் நீ இங்கே டைரக்டர்; நான் நடிகன். நான் உனக்கு மரியாதை தரவேண்டும்; அப்போதுதான் யூனிட்டில் எல்லோரும் உனக்கு உரிய மரியாதை தருவார்கள்” என்றான்.”
”நாகேஷ் ஒரு கிரியேடிவ் ஜீனியஸ். காட்சியைச் சொல்லிவிட்டு ரிகர்சல் பார்க்கிறபோது சொன்னபடி செய்வான். அடுத்து டேக் போகிறபோது தானாகவே இன்னும் ஏதாவது சேர்த்துக்கொண்டு காட்சியைப் பிரமாதப்படுத்திவிடுவான். 

உதாரணமாக, வணக்கம் சொல்லியபடி உடம்பை வளைக்கிறதுபோல் ஒரு காட்சி. டேக்கின்போது வளைந்துகொண்டே வந்தவன் தானாகவே “இன்னும் கூடக் குனிய முடியும், ஆனா தரை இருக்கு” என்று ஒரு வசனத்தைச் சொல்லி அசத்திவிட்டான்” என்றார் கே.பி. நாகேஷின் மறைவுக்குப்பிறகு கே. பாலசந்தரது கவிதாலயா தியேட்டர்ஸ் அரங்கேற்றிய நாடகத்தின் தொடக்கத்தில் நாகேஷின் படத்தை வைத்து அவரை உருக்கமாக நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினார் அவர்.


நாகேஷ் இன்று நம்மிடையே இல்லை; எனது ஆழ்ந்த அனுதாபங்கள்- அவரது குடும்பத்தினருக்கு அல்ல; அந்த மகத்தான கலைஞனை உரிய முறையில் கௌரவிக்கத் தவறிய இந்திய அரசாங்கத்துக்கு.

எஸ். சந்திர மௌலி

No comments:

Post a Comment