Wednesday 28 September 2016

PAKISTAN WATER ISSUE பாகிஸ்தானுக்கு ஒப்பந்தப்படி உள்ள தண்ணீர் மட்டுமே தரப்படும்: சிந்து நதி நீர்ப் பகிர்வில் இந்தியா முடிவு


PAKISTAN WATER ISSUE
பாகிஸ்தானுக்கு ஒப்பந்தப்படி உள்ள 
தண்ணீர் மட்டுமே தரப்படும்:
சிந்து நதி நீர்ப் பகிர்வில் இந்தியா முடிவு




சிந்து நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள அளவு தண்ணீரை மட்டுமே பாகிஸ்தானுக்கு வழங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட பிரதமர் மோடி, நாட்டில் ரத்தமும், நீரும் ஒரே நேரத்தில் ஓட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் சிந்து நதி நீர்ப் பங்கீட்டு ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர், மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
SUTLEJ RIVER FROM INDIA


பாகிஸ்தானுக்கான நதிநீர்ப் பங்கீடு குறித்தும், அதில் இந்தியாவுக்கு உள்ள உரிமைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இறுதியில் ஜம்மு - காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்குச் செல்லும் மூன்று நதிகளில் இந்தியாவுக்கு உள்ள உரிமைகளை முழுமையாகப் பயன்படுத்துவது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

இதைத்தவிர, ஜீலம் நதிக்கு நடுவே தடுப்பணை கட்டும் திட்டத்தை (தல்புல் அணை) மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்துவது, செனாப் நதிக்கு நடுவே கட்டப்பட்டு வரும் 3 தடுப்பணைத் திட்டங்களை துரிதப்படுத்துவது என பல்வேறு முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
அப்போது சிந்து நதி நீர்ப் பங்கீட்டுத் திட்டம் தொடர்பான முக்கிய விவரங்கள், இந்தியாவில் அதன் பயன்பாடு மற்றும் தேவை உள்ளிட்ட தகவல்களை மத்திய அரசு உயரதிகாரிகள் பிரதமரிடம் விளக்கிக் கூறினர். இதைத்தொடர்ந்து, ரத்தமும், நீரும் ஒருசேர ஓட முடியாது என்று பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவது குறித்து மோடி கருத்து தெரிவித்ததாகத் தெரிகிறது.
SIND RIVER

உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் என்று அண்மையில் நடைபெற்ற பாஜக தேசியக் குழுக் கூட்டத்தில் மோடி பேசியிருந்தார். அதற்கான முதல்கட்ட நடவடிக்கையாகவே இத்தகைய அதிரடி முடிவுகளை இந்தியா தற்போது எடுத்திருப்பதாகக் கருதப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் மறுப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்து விட்டது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு, "இதனை அவசர வழக்காகக் கருத முடியாது' எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

பங்கீட்டு ஒப்பந்தம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே 6 நதிகளைப் பகிர்ந்து கொள்வதற்கான சிந்து நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தமானது மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் அயூப் கான் ஆகியோர் முன்னிலையில் கடந்த 1960-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, பஞ்சாபில் இருந்து உருவாகும் பியாஸ், ராவி, சட்லெஜ் ஆகிய மூன்று நதிகள் இந்தியாவுக்கென்றும், 
JHELAM RIVER

ஜம்மு-காஷ்மீரில் உருவாகும் சிந்து, செனாப், ஜீலம் உள்ளிட்ட நதிகள் பாகிஸ்தானுக்கென்றும் பங்கிடப்பட்டன. அதேவேளையில், பாகிஸ்தானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நதிகளில் பாயும் நீரில் இந்தியாவுக்கும் உரிமை உள்ளது. ஆனால், அவற்றை அதிக அளவில் இந்தியா பயன்படுத்தாமல் இருந்து வந்தது. ஜம்மு - காஷ்மீரில் 13.14 லட்சம் ஏக்கர் விளைநிலங்களின் பாசனத்துக்கு அந்த நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. 

ஆனால், அந்த அளவை இந்தியா முழுமையாகப் பயன்படுத்தாமல் 8 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே பாசனம் செய்துவந்தது. இதனால், அந்த மூன்று நதிகளின் பெருமளவு தண்ணீர் பாகிஸ்தானுக்கே சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே, இந்திய மண்ணில் பயங்கரவாதத்தை ஏவி விட்டு, ரத்த நதியை ஓட வைக்கும் பாகிஸ்தானுக்கு எதற்காக நாம் தண்ணீர் தர வேண்டும்? என்று இந்தியாவில் பரவலாக எதிர்ப்பு எழுந்து வருகிறது. தற்போது உரி தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.




இந்தியா-பாகிஸ்தான் இடையே 6 நதிகளைப் பகிர்ந்து கொள்வதற்காக
கடந்த 1960-ஆம் ஆண்டில், சிந்து நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்ட மறைந்த முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு,
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் அயூப் கான்.

No comments:

Post a Comment