Sunday 11 September 2016

பாகிஸ்தானின் தந்தை முகமது அலி ஜின்னா இறப்பு 1948 செப்டம்பர் 11


பாகிஸ்தானின் தந்தை 
முகமது அலி ஜின்னா 
இறப்பு 1948 செப்டம்பர் 11



பாகிஸ்தான் அமைவதற்குக் காரணமாக இருந்த முகமது அலி ஜின்னாவின் வாழ்க்கை, பல திருப்பங்கள் நிறைந்தது. அவர் 1876 டிசம்பர் 25_ந்தேதி கராச்சியில் பிறந்தார். தந்தை பெயர் பூஞ்சா. தாயார் மிதிபாய். 


தந்தை ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் பெரும் பணக்காரராக விளங்கினார். கராச்சியிலும், பம்பாயிலும் கல்வி பயின்ற ஜின்னா, லண்டனுக்குச் சென்று சட்டம் பயில எண்ணினார். 

மகனை லண்டனுக்கு அனுப்ப தாயார் பயந்தார். அக்காலத்தில் லண்டன் செல்லும் இளைஞர்கள், வெள்ளைக்காரப் பெண்களை மணந்து கொண்டு ஊர் திரும்புவது வழக்கமாக இருந்தது. இதனால், ஜின்னா லண்டன் செல்வதென்றால் அதற்கு முன் அவருக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று தாயார் விரும்பினார். முதலில் இதற்கு ஜின்னா சம்மதிக்கவில்லை. என்றாலும் பின்னர் இணங்கினார்.

லண்டன் புறப்படுவதற்கு முன் ஜின்னாவின் திருமணம் நடந்தது. 

மனைவியின் முகத்தைக்கூட அவர் பார்க்க வில்லை. அக்கால சம்பிரதாயப்படி மணமகள் சார்பாக உறவினர் ஒருவர் திருமணச் சடங்குகளில் பங்கு கொண்டார். லண்டனுக்குச் சென்ற ஜின்னா சட்டம் பயின்று, "பார் அட் லா" பட்டம் பெற்றார். அவர் லண்டனில் இருக்கும்போது தாயாரும், மனைவியும் உடல் நலம் இன்றி மரணம் அடைந்தார்கள்.1896ல் இந்தியாவுக்கு திரும்பிய ஜின்னா, பம்பாயில் வக்கீல் தொழில் தொடங்கினார். சிறந்த வக்கீல் என்று பிரபலமானார். நல்ல வருமானம் வந்தது.


1906ல் ஜின்னா காங்கிரசில் சேர்ந்தார். காந்தியின் அரசியல் குருவான கோபாலகிருஷ்ண கோகலேதான், ஜின்னாவுக்கும் அரசியல் குரு. இந்திய சுதந்திரத்திற்கும், இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கும் ஜின்னா பாடுபட்டார். 

தென்ஆப்பிரிக்காவில் இருந்து 1915 ல் இந்தியா திரும்பிய காந்தி, காங்கிரஸ் இயக்கத்தின் மாபெரும் தலைவரா னார். ஆரம்பத்தில் காந்தியும், ஜின்னாவும் தோழமையுடன் பழகினாலும், நாளடைவில் காந்தியின் கொள்கைகள் ஜின்னாவுக்குப் பிடிக்கவில்லை. இதனால் 1920 ம் ஆண்டு, அவர் காங்கிரசை விட்டு விலகினார். 



1921 முதல் 1935 வரை ஜின்னாவின் அரசியல் வாழ்க்கையில் தேக்க நிலை இருந்தது. 1930 முதல் ஐந்தாண்டுகள் லண்டனில் தங்கியிருந்துவிட்டு 1935ல் இந்தியா திரும்பினார். முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பதவி அவரைத் தேடி வந்தது. வெகுவிரைவில், முஸ்லிம் லீக்கின் இணையற்ற தலைவராக உயர்ந்தார்.


1940 ம் ஆண்டில், முஸ்லிம் லீக் மாநாடு லாகூரில் நடந்தது. அந்த மாநாட்டில்தான், முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். பிரிவினையைத் தவிர்க்க காந்தி எவ்வளவோ முயன்றும், ஜின்னாவின் பிடிவாதத்தால் அது இயலாமல் போயிற்று. 

இதற்கிடையே ஜின்னாவுக்கு 41 வயதாகும்போது, டார் ஜிலிங் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் ரூட்டி என்ற 16 வயது அழகியைச் சந்தித்தார். 
ஜின்னாவின் நண்பரும், கோடீசு வரருமான தீன்ஷா என்ற வியாபாரியின் மகள்தான் ரூட்டி. இவர் பார்சி மதத்தைச் சேர்ந்தவர். வயது வித்தியாசம் அதிகமாக இருந்தும், இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். இது தீன்ஷாவுக்குத் தெரிந்தது.










மிக ஆத்திரம் அடைந்த அவர், ஜின்னாவும், ரூட்டியும் சந்திக்கக்கூடாது என்று கோர்ட்டில் தடை வாங்கினார். ரூட்டி மிகவும் பொறுமையோடு இரண்டு வருடங்கள் காத்திருந்தார்.
 18 வயதானதும் தன் கோடீசுவர தந்தைக்கு குட்பை சொல்லிவிட்டு, கட்டிய புடவையுடன் வீட்டை விட்டு வெளியேறி ஜின்னாவை மணந்து கொண்டார்.

ஜின்னாவும், ரூட்டியும் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தினார்கள். இவர்களுக்கு 1919 ஆகஸ்டு 14 ந்தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. (இதற்கு சரியாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் பிறந்தது குறிப்பிடத்தக்கது) இந்தக் குழந்தைக்கு தினா என்று பெயரிட்டனர்.

 10 ஆண்டுகளுக்குப்பின், ஜின்னாவுக்கும், அவர் மனைவிக்கும் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. ஜின்னாவை விட்டு ரூட்டி பிரிந்து சென்றார். ஒரு வருடத்துக்குப்பின் (1929 பிப்ரவரி 29 ந்தேதி) பம்பாய் ஓட்டலில் தங்கியிருந்தபோது, ரூட்டி திடீரென்று மரணம் அடைந்தார். அன்றைய தினம் அவருடைய 29 வது பிறந்த நாளாகும். 


ரூட்டி மரணத்தின் போது ஜின்னா டெல்லியில் இருந்தார். அவர் உடனே பம்பாய்க்கு விரைந்தார். ரூட்டியின் உடல் பெட்டிக்குள் வைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்ட போது ஜின்னா சிறு குழந்தை போல கதறி அழுதார். அதுவரை எந்த ஒரு சமயத்திலும் ஜின்னா தன் உணர்ச்சிகளை வெளியில் காட்டியதே இல்லை. வாழ்க்கையில் முதல் தடவையாகவும், கடைசி தடவையாகவும் அன்று அழுதார்.

ஜின்னா மிகவும் ஒல்லியானவர். 6 அடி உயரமுள்ள அவர் 55 கிலோ எடையே இருந்தார். ஆயினும் எப்போதும் விலை உயர்ந்த சூட்டும், கோட்டும் அணிந்து கம்பீரமாகத் தோன்றுவார்.


1947 தொடக்கத்தில் அவர் உடல் நிலையைக் குடும்ப டாக்டர் பரிசோதித்தார். ஜின்னாவுக்கு சயரோக நோய் வந்திருப்பதும், அவருடைய ஈரல்கள் பாதிக்கப்பட்டு இருப்பதும் எக்ஸ்ரே படத்திலிருந்து தெரிந்தது. 






இதை ஜின்னாவிடம் தெரிவித்த டாக்டர், "மதுப்பழக்கத்தையும், சிகரெட் பிடிப்பதையும் உடனே நிறுத்திவிடுங்கள். அரசியலில் இருந்து விலகி ஓய்வு எடுங்கள். இல்லாவிட்டால் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் உங்கள் ஆயுள் முடிந்துவிடும்" என்று கூறினார். 


இதைக்கேட்டு, ஜின்னா கொஞ்சம்கூட கவலைப்பட வில்லை. "ஒரு சயரோக ஆஸ்பத்திரியில் நோயாளியாகக் கிடந்து சாவதைவிட, பாகிஸ்தான் கோரிக்கைக்காக போராடிச் சாவதேயை விரும்புகிறேன்" என்றார்.

சொன்னது போலவே, பாகிஸ்தான் பிரிவினைக்காகப் போராடி அதில் வெற்றியும் பெற்றார். 1947 ஆகஸ்டு 14_ந்தேதி பாகிஸ்தான் உதயமாகியது. அதன் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்றார். 







காயிதே ஆஜம் (மாபெரும் தலைவர்) என்று பாகிஸ்தான் மக்களால் போற்றப்பட்டார். ஜின்னா பற்றி டாக்டர் கூறியதும் பலித்தது.

 பாகிஸ்தான் அமைக்கப்பட்டு ஒரு ஆண்டு முடிந்ததும் 1948 செப்டம்பர் 11_ந்தேதி ஜின்னா மரணம் அடைந்தார்.


No comments:

Post a Comment