Monday 12 September 2016

‘My waste... My responsibility’ - டாக்டா்  வாசுகி


 ‘My waste... My responsibility’ 
- டாக்டா்  வாசுகி






பசுமைப் புரட்சி வெர்சன் 2.0 - டாக்டா்  வாசுகி

"வேஸ்ட் மேனேஜ்மென்ட்டுனு சொல்லப்படற கழிவு மேலாண்மை, அரசோட பொறுப்பு. அதிகாரத்துல உள்ளவங்களோட பொறுப்புனு பலரும் நினைச்சிட்டிருக்காங்க. அப்படியல்ல... சுற்றுச்சூழலை சுத்தமா வச்சுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருக்கும் இருக்கணும். தனிமனித ஈடுபாடு இல்லாம இந்த விஷயத்தை நம்மால வெற்றி பெறச் செய்யவே முடியாது... அதனாலதான்


 ‘My waste... My responsibility’ 

என்ற கோஷத்தை பிரபலப்படுத்திட்டிருக்கேன்...’’ என்கிறார் டாக்டர் வாசுகி.  ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் இப்போது கேரளாவில் சுசித்வா (Suchitwa)  மிஷனின் எக்சிக்யூட்டிவ் டைரக்டர். எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு, 2008ல் சிவில் சர்வீசில் இணைந்தவர் இவர். சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்னை வந்திருந்தவரிடம்  பேசினோம்.

"கேரளாவுல வேஸ்ட் மேனேஜ்மென்ட்டுங்கிறது ரொம்பப் பெரிய பிரச்னையா இருந்த நேரம்... அப்போ எனக்கு சுற்றுச்சூழல்  பிரச்னைகள் பத்திப் பெரிசா தெரியாது. வேலையில சேர்ந்து, சுசித்வா மிஷன்ல ஈடுபட்டு ரிசர்ச் பண்ணி, படிச்ச பிறகுதான்,  அது என் வாழ்க்கையிலயே ரொம்ப முக்கியமான பணிங்கிறதை உணர்ந்தேன். சுசித்வான்னா தூய்மைனு அர்த்தம். சுசித்வா மிஷன்ங்கிறது கேரளாவுல தூய்மைக்காகவே தீவிரமா செயல்படற ஒரு ஏஜென்சி. 2008ல அரசாங்கத்தால தொடங்கப்பட்ட இது, 


முறைப்படி பதிவு செய்யப்பட்டதும்கூட. குப்பைகளும் கழிவுகளும் இல்லாத மாநிலத்தை உருவாக்கிறதுதான் இந்த அமைப்போட நோக்கம். சுத்தத்தையும், பொது சுகாதாரத்தையும் மேம்படுத்தறதுக்கான எல்லா உதவிகளையும் செய்யுது...’’ என்கிற வாசுகி, சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தவர். 

2014ல் கேரளாவில் குடியேறி, இந்தத் தூய்மைத்திட்டத்தில் பொறுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார். "தூய்மைப் பிரச்னைங்கிறது  போதுமான தொழில்நுட்ப வசதிகள் இல்லாததாலயோ, போதுமான வளங்கள் இல்லாததாலயோ உருவெடுத்த பிரச்னையா எனக்குத் தெரியலை. அது மக்களோட பிரச்னை... அவங்க மனநிலையும் அணுகு முறையும்தான் இந்தப் பிரச்னை பெரிசாகக் காரணம். 

நான் பொறுப்பெடுத்துக்கிட்ட பிறகு இதை உணர்ந்தேன். அதனாலதான் புதுசு புதுசா திட்டங்களை அறிமுகப்படுத்தறதை விடவும், மக்களோட மனநிலையை மாத்தறதும், விழிப்புணர்வை ஏற்படுத்தறதும் இந்த விஷயத்துல முக்கியம்னு நினைச்சு அதுக்கான வேலைகள்ல இறங்கினேன்...’’ என்கிறார் வாசுகி. "கழிவு மேலாண்மைங்கிற விஷயத்துல குப்பைகளைக் குறைக்கிறதும், கழிவுகளைக் குறைக்கிறதும்தான் பிரதானமா இருக்கணும். 


இந்தியாவுலயோ நிலைமை தலைகீழா இருக்கு. சமீபகாலங்கள்ல டிஸ்போசபிள் கலாசாரம் இங்கே ரொம்பப் பெரிசா வளர்ந்திட்டிருக்கு. டிஸ்போசபிள் பை, டிஸ்போசபிள் கப், தட்டுனு எல்லாத்துலயும் அதைப் பார்க்கறோம். மறுசுழற்சிங்கிற விஷயத்தையே மறந்துட்டோம். எல்லாருக்கும் தன்னோட வீட்டை விட்டு குப்பைகள் வெளியே போனா போதும்கிற மனநிலைதான் இருக்கு. 

வெளியில தூக்கி எறிகிற குப்பை  அடுத்து எங்கே போகும், அதனால சுற்றுச்சூழல் எந்த அளவுக்குப் பாதிக்கப்படும்னு யாரும் கவலைப்படறதில்லை. முதல் கட்டமா இந்த அணுகுமுறையை மாத்தறதுக்கான முயற்சியை ஆரம்பிச்சேன். வீட்ல சேரும் கழிவுகளை வச்சு உரம் தயாரிக்கிற ஹோம் கம்போஸ்ட்டிங் முறையை எல்லா வீடுகளும் கட்டாயம் பின்பற்றணும்னு கேரள அரசு ஒரு ஆணை போட்டது.  

உடனேயே மக்கள்கிட்ட நல்ல வரவேற்பைப் பார்க்க முடிஞ்சது. அழுகும் குப்பைகளை ஒவ்வொருத்தரும் வீட்லயே உரம் தயாரிக்கப் பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க. உடலுக்குக் கேடு விளைவிக்கிற கெமிக்கல்களை போட்டு விளைவிக்கிற காய்கறிகளைத் தவிர்க்க, வீட்லயே இந்த இயற்கை உரத்தைப் பயன்படுத்தி தோட்டம் அமைக்க ஆரம்பிச்சிருக்காங்க. 


அமெரிக்காவுல ரொம்பப் பிரபலமாகிட்டு வர்ற இந்த நகர்ப்புற விவசாயத் திட்டத்தை மக்களோட ஒத்துழைப்போட நம்ம நாட்லயும் சாத்தியப்படுத்த முடியும். அரசோட இந்த ஆணை சட்டமாக்கப்பட்டா, இந்தத் திட்டம் இன்னும் முழுவீச்சோட செயல்படுத்தப்படும்கிறதுலயும் கேரள அரசு, மத்த மாநிலங்களுக்கும் ஒரு முன்னுதாரணமா இருக்கும்கிறதுலயும் சந்தேகமே இல்லை...’’ என்பவர் வெறும் பேச்சோடு தன் முயற்சிகளை நிறுத்திக் கொள்ளவில்லை.

இதற்கெல்லாம் முன்னோட்டமாக, மக்கள் தங்கள் அன்றாடப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய மாபெரும் மாற்றம் பற்றிய விழிப்புணர்வை 2015 தேசிய விளையாட்டுப் போட்டிகளில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். "குப்பைகளை குறைக்கிறதுதான் சுற்றுச்சூழலைக் காப்பாத்தறதுக்கான ஒரே தீர்வு. 


4050 வருஷங்களுக்கு முன்னாடி எப்படி வாழ்ந்தோமோ, சில விஷயங்கள்ல அப்படியொரு வாழ்க்கைக்குத் திரும்பப் போறதுதான் நமக்கு நல்லது. ஒருமுறை உபயோகிச்சுத் தூக்கி எறியற பொருட்களோட உபயோகம் கடந்த சில வருஷங்கள்ல ரொம்பவே அதிகமாயிருக்கு. சுற்றுச்சூழலை மாசுப்படுத்தினதுல இந்த டிரெண்டுக்கு பெரிய பங்கு உண்டு. அதை உணர்ந்துதான் 2015 நேஷனல் கேம்ஸ்ல அது மாதிரியான பொருட்களுக்கு தடை விதிச்சோம்.  டிஸ்போசபிள் டம்ளர், கப், பாட்டில்னு எதையும் உபயோகிக்கக்கூடாதுனு கண்டிப்பா சொல்லிட்டோம். 

திரும்ப உபயோகிக்கிற வகையிலான  ஸ்டீல் மற்றும் செராமிக் பொருட்களுக்கு மட்டும்தான் அனுமதி... எங்களோட இந்த முயற்சிக்குப் பெரிய வெற்றி கிடைச்சது. அந்த முயற்சியால எங்களால 600 டன் கழிவுகளைத் தடுக்க முடிஞ்சது. அதை ஒரு முன்னுதாரணமா எடுத்துக்கிட்டு, அதுக்கு Green Protocolனு பேரும் வச்சு, இனிமே மாநிலத்துல நடக்கிற எல்லா முக்கிய நிகழ்வுகள்லயும் இதை அமல்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க...


’’புதுமைக்கு வித்திட்டதை பெருமையுடன் சொல்கிற வாசுகியின் ஒவ்வொரு முயற்சிகளுமே வரவேற்கத் தக்கவையாக இருக்கின்றன. கேரளாவின் தெருவோரங்களில் குப்பை பொறுக்குகிற 500 நபர்களை சுசித்வா மிஷன் சார்பாக பதிவு செய்து, அடையாள அட்டை வழங்கி,  மறுசுழற்சி முறை பற்றிய விழிப்புணர்வைக் கொடுத்து, ஊக்கப்படுத்துகிறார். 

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலுக்குப் பிறகு அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் Green Protocol முறையை உறுதிமொழியாக ஏற்றுக் கொண்டு, கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் சரித்திரம் படைத்திருக்கிறார். திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் 100 தன்னார்வலர் களைக் கொண்ட குழுவுடன், பசுமை நிகழ்வை நடத்தியிருக்கிறார். இன்னும் தன்னால் முடிந்த இடங்களில் எல்லாம் இந்தப் பசுமைப் புரட்சியை சாத்தியப்படுத்தும் முயற்சிகளைத் தொடர்கிறார் வாசுகி!


 "தினம் வெறும் அஞ்சு நிமிஷத்தை ஒதுக்கினாலே போதும். வேஸ்ட் மேனேஜ்மென்ட்டை நாம நினைக்கிற மாதிரியே சாத்தியப்படுத்தலாம். ‘எனக்கு எக்சர்சைஸ் பண்ண நேரமில்லை’னு சொல்ற மாதிரி இதைத் தட்டிக் கழிக்கக் கூடாது. இன்னிக்குப் பலரும் குழந்தையின்மையைப் பத்தியும், புற்றுநோயைப் பத்தியும் பேசறோம். கவலைப்படறோம். 

சிகரெட் பிடிச்சா கேன்சர் வரும்னு பயப்படறோம். ஆனா, தொழிற்சாலைகள்லேருந்து வெளியேற்றப்படுகிற கழிவுகள் மிக மோசமான ரசாயனங்களைக் கொண்டதா இருக்கிறதும், புற்றுநோய், குழந்தையின்மை உள்ளிட்ட பல பயங்கர பிரச்னைகளுக்குக் காரணமா அமையறதும் பலருக்கும் தெரியறதில்லை. நம்ம வீட்டை, நம்மளோட சுற்றுப்புறத்தை நாம சுத்தமா வச்சுக்கிறது ரொம்ப சிம்பிள். 

அதுக்கு அலுப்பு பட்டுக்கிறதாலதான் மருந்துகளுக்கு ஆயிரக்கணக்குல செலவழிச்சிட்டிருக்கோம். ஒவ்வொரு தனிமனிதரும் தன்னோட பழக்க, வழக்கத்தை மாத்திக்கிறது மூலமாத்தான் இதை சாத்தியப்படுத்த முடியும். இந்தியர்கள்னா சுத்தமில்லாதவங்கன்ற மனோபாவத்தை மாத்தணும். சிங்கப்பூர் மாதிரியான சுத்தமான நாட்டுலயே கூட, இந்தியர்கள் அதிகம் வசிக்கிற லிட்டில் இந்தியா பகுதி, குப்பையா, அழுக்கா இருக்கும்னு பேர் வாங்கியிருக்கோம். 


இந்த நிலைமையை இப்படியே தொடர விட முடியாது. நமக்கு அடுத்து வரப் போற தலைமுறையை இந்த பாதிப்புகள்லேருந்து காப்பாத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நமக்கு இருக்கு. இது ஒரே இரவுல மாறிடக்கூடியதில்லைதான். மாத்தவே முடியாத விஷயமும் இல்லை..

.’’வாசுகியின் வார்த்தைகளே வேகத்தையும் உத்வேகத்தையும் கூட்டுகின்றன. "விழிப்புணர்வுங்கிறது பள்ளிக்குழந்தைகள்கிட்டருந்தே ஆரம்பிக்கப்படணும். கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு மாதிரியான இடங்களுக்கு பள்ளி மாணவர்களைக் கூட்டிட்டுப் போய் காட்டி, யதார்த்தத்தைப் புரிய வைக்கணும். சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தணும். அடுத்த தலைமுறையாவது சுத்தமான, சுகாதாரமான சூழல்ல வாழணும்னா இப்பவே இந்த விஷயங்களைச் செய்ய வேண்டிய அவசரத்துல இருக்கோம்.


சுற்றுச்சூழலைப் பாதுகாக்கறதுல பெண்களோட பங்கு மகத்தானது. வீட்டை நிர்வாகம் பண்றது பெண்கள்தான். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கணும்னா ஒவ்வொரு பெண்ணும் போராளியா இருக்கணும்னு அவசியமில்லை. தன்னோட குழந்தைங்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக்கத்துக் கொடுக்கிறதுலேருந்தே அதை ஆரம்பிக்கலாம். 

வீட்டுக் குப்பைகளை வச்சு உரம் தயாரிக்கலாம், வீட்டுத்  தோட்டம் அமைக்கலாம். சூழலுக்குக் கேடுனு சொல்லப்படற பொருட்களோட பயன்பாட்டைத் தவிர்க்கலாம். பெண்கள் நினைச்சா, சூழல் ஆரோக்கியத்தை இன்னும் முழு வீச்சோட செயல்படுத்த முடியும். பூமியை தாய்னு சொல்றோம். அந்தத் தாயைப் பாதுகாக்க தாய்மை மனசுள்ள பெண்களாலதான் முடியும்’’ கேள்வியையே  பதிலாகவும் முன் வைத்து முடிக்கிறார் வாசுகி!

No comments:

Post a Comment