Saturday, 10 September 2016

‘பத்ரகாளி’ படத்தின் கதாநாயகியாக நடித்த ராணி சந்திரா, விமான விபத்தில் பலி


‘பத்ரகாளி’ படத்தின் கதாநாயகியாக நடித்த
 ராணி சந்திரா, விமான விபத்தில் பலி





‘பத்ரகாளி’ படத்தின் கதாநாயகியாக நடித்த ராணி சந்திரா, விமான விபத்தில் பலியானார். அவருடைய தாயாரும், 3 தங்கைகளும் இதே விபத்தில் மாண்டனர். ராணி சந்திராவுக்கு வயது 22. கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்தவர். தந்தை பெயர் சந்திரன். தாயார் காந்திமதி. 1965-ம் ஆண்டில் கேரள அழகு ராணியாக (‘மிஸ் கேரளா’) ராணி சந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, மலையாளப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘அஞ்சு சுந்தரிகள்’, ‘சொப்னாடம்’ உள்பட சுமார் 60 மலையாளப்படங்களில் நடித்தார்.
சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதையும் பெற்றார். தமிழ்ப்பட உலகில் புகழ் பெறவேண்டும் என்பது ராணி சந்திராவின் ஆசை. ‘பொற்சிலை’, ‘தேன் சிந்துதே வானம்’ ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்தார். சிறு வேடங்கள். படங்களும் பெரிதாக ஓடவில்லை.

எனவே, தமிழ்ப்பட உலகில் ராணி சந்திராவுக்கு சரியான அறிமுகம் கிடைக்கவில்லை. 1976-ல் ‘பத்ரகாளி’ என்ற படத்தை சொந்தமாகத் தயாரிக்க, டைரக்டர் திருலோகசந்தர் ஏற்பாடு செய்தார். எழுத்தாளர் மகரிஷி எழுதிய கதை. வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். 

பிராமண குடும்பத்தில் நடப்பது போன்ற கதை. கதாநாயகனாக நடிக்க சிவகுமார் ஒப்பந்தம் ஆனார். கதாநாயகியாக நடிக்க ஒரு புதுமுகத்தைத் தேடினார்கள். கடைசியில் ராணி சந்திராவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
திறமையும், அழகும் கொண்ட ராணி சந்திராவை ‘காயத்ரி’ என்ற புதிய பெயரில் அறிமுகப்படுத்த திருலோகசந்தர் முடிவு செய்தார். படப்பிடிப்பு வேகமாக நடந்தது. படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

 இன்னும் ஒரு சில காட்சிகளே பாக்கி. இந்த சமயத்தில் விதி விளையாடியது. துபாயில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக, அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் துபாய் நாட்டுக்கு ராணி சந்திரா சென்றார். அவருடன் தாயார் காந்திமதி, தங்கைகள் அம்புலி (வயது 19), சீதா (18), நிம்மி(13) ஆகியோரும் சென்றார்கள்.
கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு, விமானத்தில் ராணி சந்திரா திரும்பினார். விமானம் பம்பாய்க்கு வந்து சேர்ந்தது. அந்த விமானத்தில் பழுது ஏற்பட்டு இருந்ததால் வேறு விமானத்தில் இவர்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டனர்.

11-10-1976 நள்ளிரவு 1-40 மணிக்கு (அதாவது 12-ந்தேதி அதிகாலை) விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானம் தீப்பிடித்து, விமான நிலையத்திலேயே நொறுங்கி விழுந்தது. விமானத்தில் மொத்தம் 95 பேர் இருந்தார்கள். அனைவரும் கருகி மாண்டனர். ராணி சந்திராவுடன் அவர் தாயாரும், 3 தங்கைகளும் இறந்து போனார்கள். ராணி சந்திராவின் கலைக்குழுவில் இடம் பெற்றிருந்த ஜெயலட்சுமி (பாடகி), சி.கே.கிருஷ்ணகுட்டி (மத்தளம்), எம்.கோதண்டராம் (மிருதங்கம்), பி.எஸ்.மாணிக்கம் (ஆர்மோனியம்) ஆகியோரும் பலியானார்கள்.

ராணி சந்திராவின் உடலும், அவருடைய தாயார், 3 தங்கைகள் உடல்களும் சென்னைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டன. உடல்களைப் பார்த்து ராணி சந்திராவின் தந்தை சந்திரன், சகோதரர் ஜாஜி, மூத்த சகோதரி ஆயிஷா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
திரை உலகினர் திரளாக வந்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். உடல்கள், நுங்கம்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன. 

இதற்கிடையே ‘பத்ரகாளி’ படத்தை முடிப்பது எப்படி என்று டைரக்டர் திருலோகசந்தர் தீவிரமாக ஆலோசித்தார். கதையை மாற்ற முடியாது. ராணி சந்திரா சம்பந்தப் பட்ட ‘கிளைமாக்ஸ்’ காட்சியை படமாக்கியே தீர வேண்டும். இந்த இக்கட்டான நிலையில், ராணி சந்திரா மாதிரி தோற்றமுள்ள துணை நடிகை யாராவது கிடைப்பாளா என்று அலசிப் பார்த்தார்.
இறுதியில், ஏறக்குறைய ராணி சந்திரா போலவே தோற்றம் உள்ள புஷ்பா என்ற நடிகை கிடைத்தார். அவரை வைத்து இறுதிக் காட்சிகளைப் படமாக்கினார், திருலோகசந்தர். டைரக்டர், ஒளிப்பதிவாளர் ஆகியோரின் திறமையால் அக்காட்சிகளில் ராணி சந்திராவுக்கு பதிலாக வேறொரு நடிகை நடித்திருக்கிறார் என்று யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை.
படம் 10-12-1976 அன்று ரிலீஸ் ஆயிற்று. பொதுவாக, படம் வெளியாவதற்கு முன் அதன் முக்கிய நட்சத்திரம் இறந்து போனால் அந்தப்படம் சரியாக ஓடாது. இதற்கு, முன் உதாரணங்கள் பல உண்டு. ஆனால், ‘பத்ரகாளி’ படம் பிரமாதமாக ஓடியது. அதில், அசல் பிராமணப்பெண்ணாகவே மாறி, ‘வாங்கோண்ணா…’ என்று சிவகுமாருடன் ஆடிப்பாடிய ராணி சந்திராவைப் பார்த்தவர்கள், ‘இவ்வளவு அழகான -திறமையான நடிகைக்கா இத்தகைய சோக முடிவு’ என்று கண்கலங்கினர்.




அந்தப் பிராமணக் கலாசாரக் கதையான ‘பத்ரகாளி’ தொடர்ந்து படமாகிக் கொண்டிருந்தது. இப்பொழுது அந்த மலையாள மின்னல் மோகினிப்பெண் ராணி சந்திரா வசனம் பேசுவதில் நல்ல தேர்ச்சி பெற்றுவிட்டாள். 

ஆனாலும், அவ்வப்பொழுது, ஆங்காங்கே தாய்மொழியான மலையாளம் சற்றுத் தலைகாட்டியதால் என் பிராமணத் தமிழ் வசனத்திற்கு அந்த ‘ஸ்லாங்’ என்னும் கொச்சை மொழி பொருந்திப்போய்விட்டது.

அந்தப் பெண்ணின் ‘விழி’ அழகாக இருந்தது. அது பழகும் ‘வழி’யும் ஒழுங்காக இருந்தது. அதனால் ‘மொழி’ ஒரு பிரச்சினையாக எனக்குத் தோன்றவில்லை. 

ஆனால், உண்மையில் என்னுடன் பிரச்சினை பண்ணியது, கதாநாயகியின் தந்தையாகவும் (தொவப்பனார்) குருக்களாகவும் நடித்த நண்பர் மேஜர் சுந்தர்ராஜன்தான்.

பொதுவாக எனக்கு பிராமணத் தமிழ் பேசவும் எழுதவும் நன்றாக வரும். அதற்குக் காரணம் இளம் மாணவப் பருவத்திலிருந்தே எங்கள் திருவாரூரில் எனக்கு பிராமண நண்பர்கள் அதிகம். 

‘லேங்வேஜ் டிபன்ஸ் ஆன் அசோசியேஷன்’ 

‘மொழி, நாம் சம்பந்தப்படும் இடத்தைப் பொறுத்தது.’

அதனால், பிராமணர் அல்லாத அதிலும் ஒரு கிறிஸ்துவரான நான் – ஒரு பிறவிப்பிராமண எழுத்தாளரைக் காட்டிலும் சிறந்த முறையில் இந்தப் படத்திற்கான வசனங்களை அமைக்கவேண்டும் என்று என் மனதிற்குள் ஒரு ‘சங்கற்பம்’ செய்து கொண்டேன். அதனால் இக்காலத்துப் பெரும்பாலான பிராமண வீடுகளில் புழக்கத்தில் இல்லாத ‘நேக்கு’ – ‘நோக்கு’ என்ற அக்கால வழக்குச் சொற்களைக் கையாண்டிருந்தேன்.

இதை மாற்றி, மேஜர் சுந்தர்ராஜன் ‘எனக்கு உனக்கு’ என்று கூறிக்கொண்டிருந்தார். அவரைக் கண்டித்து நான் எழுதியிருப்பதை அப்படியே பேசச்சொன்னேன். அதற்கு அவர்...

மேஜர் சுந்தர்ராஜன்:– இப்போல்லாம் எங்க வீடுகள்ளேயே அந்தப் பழைய பிராமணத் தமிழ் அதிகமாகப் பேசப்படுறதில்லே. அதனாலதான்...

நான்:– (குறுக்கிட்டு) எனக்குத் தெரியும் மேஜர். நானே ஒரு பாதிப் பிராமணன். நீர் பூணூல் போட்டுண்டிருக்கீர். நான் போடலை. உமக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் அது ஒண்ணுதான். இது முழுக்க முழுக்க பழைய பிராமணக் கலாசாரத்தைக் கொண்ட ஒரு குருக்கள் குடும்பத்துக்கதை. எனக்கு அந்தப் பழைய ‘பிரமினிக்கல் டிக்ஷன்தான்’ வேணும். அதுக்காகத்தான் நான் சிரமப்பட்டு, ஒவ்வொரு வார்த்தையா பொறுக்கிப் பொறுக்கிப் போட்டிருக்கேன். அதை நீர் சொல்லலேன்னா உம்மை விடமாட்டேன். ‘வித் த பர்மிஷன் ஆப் த டைரக்டர்’ என்று உறுதியாகக் கூறிவிட்டேன். 

இயக்குனர் திருலோகசந்தரும் என் கருத்தில் ஒருமித்திருந்தார். எனக்கும் அவருக்கும் எப்பொழுதுமே ஒரு ‘புரிதல் உணர்வு’ உண்டு. இல்லையேல் அவர் இயக்கத்தில் பெரும்பாலான – இருபது படங்களுக்கு மேல் நான் எழுதியிருக்க வாய்ப்பிருக்காது.

நண்பர் சிவகுமாரின் நாக்கு, கொங்கு நாட்டுத் தமிழ் பேசிப் பழக்கப்பட்டது. அதனால் அவருக்கும் என் பக்கா பிராமணத் தமிழ் சற்று நெருடலாயிருந்தது. அதையும் நான் உணர்ந்திருந்தேன். ஒரு கொங்கு நாட்டுக் கவுண்டரும், ஒரு மதுரை பெரியகுளம் அய்யங்கார் பிராமணரும் சேர்ந்து, இந்த தஞ்சாவூர்க்கார வசனகர்த்தாவை அவ்வப்போது இலைமறைவு காய் மறைவாக எட்டத்தில் இருந்து கேலி பேசுவதை நான் ஜாடைமாடையாகக் கவனித்துத் தெரிந்து கொண்டேன். 

என்னைப்பற்றிய ‘மேஜர்’ சுந்தர்ராஜன் – ‘மைனர்’ சிவகுமார் ஆகிய இருவரின் ‘இன்டைரக்ட் காமென்டரி’யுடனும், என் கண்டுபிடிப்பான இந்த விசித்திர நட்சத்திரத்தின் அப்பாவி நடிப்புடனும், அந்தப் பிராமணக்கதை ‘பிக்சரைஸ்’ ஆகிக்கொண்டிருந்தது.

ஒருநாள் மாலை. எதிர்பாராமல் இந்த இள நடிகை என் இல்லத்திற்கு வந்தாள். முன் அறிவிப்பு எதுவும் இன்றி திடீரென வந்தது எனக்கு வியப்பாக இருந்தது. ஆனாலும் அவளை என் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தேன். அவளை ஏற இறங்கப் பார்த்த என் மனைவி முகம் மலர்ந்து...

மனைவி:– சார் சொன்னதைவிட நேருல பார்க்கும்போது நீ இன்னும் ரொம்ப அழகா இருக்கியே. உங்கம்மாவும் உன்னை மாதிரியே இப்படி கலரா இருப்பாங்களா?

அவள்:– இல்லேம்மா. எங்கம்மா மாநிறந்தான். நான் என் பாட்டி மாதிரின்னு அம்மா சொல்வாங்க.

மனைவி:– பரவாயில்லியே. நீ சரியா தமிழ் பேசமாட்டேன்னு இவர் சொன்னாரே. இவ்வளவு நல்லா பேசுறியே.

அவள்:– எல்லாம் சாரோட டிரைனிங்தான்! கோவிலுக்குப் போறேன். அப்படியே உங்களைப் பார்க்கலான்னு வந்தேன்... (என்னிடம்) சார்! நாளைக்கு ஒரு கலை நிகழ்ச்சியில கலந்துக்குறதுக்காக நான் எங்கம்மா, சிஸ்டர்ஸோட துபாய்க்குப் போறேன். ரெண்டு நாள்ள வந்திடுவோம். இதை நேருல சொல்றதுக்காகத்தான் வந்தேன். துபாய்லேருந்து திரும்பினதும் எங்கம்மாவை அழைச்சிக்கிட்டு மறுபடியும் நான் இங்கே வர்றேன் பைம்மா! என்று விடைபெற்றாள். அவள் சென்ற அரை மணி நேரத்திற்குள்ளாக என் தொலைபேசி மணி ஒலித்தது. ரிஸீவரை எடுத்தேன். அந்த நடிகையின் குரல்:–

அவள்:– சார்! நான்தான் பேசுறேன். நாளைக்கு துபாய்க்குப் போறேன்னு போன்ல சொன்னா மரியாதையா இருக்காதுன்னு உங்ககிட்டே – நீங்க இல்லேன்னா அம்மாகிட்டேயாவது நேருல சொல்றதுக்காகத்தான் வீட்டுக்கு வந்தேன். கேரளக் கலை நிகழ்ச்சிகளுக்கு ‘ஆர்கனைஸ்’ பண்ற ஒரு மலபார் பார்ட்டி எங்களை அழைச்சிக்கிட்டுப் போறாங்க. ரெண்டே நாள்தான் அங்கே கேம்ப்! 


இந்த புரோகிராம் விஷயம் நம்ம டைரக்டருக்குத் தெரியாது. நான் சொல்லலே. ஏன்னா அக்ரிமெண்ட்படி படம் ஷூட்டிங் முடியிறதுக்கு முந்தி பர்மிஷன் இல்லாம வெளியூர் – அதுவும் துபாய்க்கு போகக்கூடாதுன்னு எங்கே டைரக்டர் சொல்லி ஸ்டாப் பண்ணிடுவாரோன்னு பயந்துதான் சொல்லாம உங்ககிட்டே வந்தேன். தயவு செய்து நான் திரும்பி வர்ற வரைக்கும் நீங்களும் அவர்கிட்டே சொல்லவேண்டாம். ஒன்லி டு டேஸ்! வர்ற சனி, ஞாயிறு ரெண்டு நாள் புரோகிராம் முடிஞ்சதும் திங்கட்கிழமை சாயந்திரம் புறப்பட்டு இங்கே வந்திடுவோம். சரியா?

நான்:– (தயக்கத்துடன்) சரிம்மா...

அவள்:– அப்புறம்... என் ஞாபகார்த்தமா துபாய்லேருந்து உங்களுக்கும், அம்மாவுக்கும் ஏதாவது பொருள் வாங்கிக்கிட்டு வந்து கொடுக்கணும்னு நான் ஆசைப்படுகிறேன். உங்களுக்கு என்ன வேணும்? சொல்லுங்க... பிளீஸ். அம்மாவையும் கேளுங்க. 

நான்:– ஒண்ணும் வேண்டாம். கலை நிகழ்ச்சிங்க முடிஞ்சு நீ நல்லபடியா சீக்கிரம் வந்து சேர்ந்தா போதும். ஏன்னா, கிளைமாக்ஸ் ஷூட்டிங்குக்காக டைரக்டர் ‘செட்’ போட்டு ரெடிபண்ணிக்கிட்டிருக்காரு. இந்தச் சமயம் பார்த்து நீ துபாய் போறேங்குறே. அவருக்குத் தெரிஞ்சா கண்டிப்பா போகக்கூடாதுன்னு சொல்லித் தடுத்திடுவாரு. அதனால நான் சொல்லமாட்டேன். எனி ஹவ்! ஹேப்பி ஜர்னி.

அவள்:– தேங்க்ஸ்! 

அவள் துபாய்க்கு புறப்பட்டுச் சென்ற அடுத்த ஆறாவது நாள். அன்றைய காலைப் பத்திரிகைகளில் காணப்பட்ட செய்தி:–

‘‘இன்று காலை பம்பாய் ‘ஸாந்தாகுரூஸ்’ விமான நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட ‘கேரவல்’ பயணிகள் விமானம் அதிகாலை 4.31–க்கு மேலே கிளம்பி உயரே சென்றதும், நடுவானத்தில் தீப்பற்றி எரிந்து கீழே தரையில் விழுந்து நொறுங்கி பலத்த சேதம் அடைந்தது. அதில் பயணம் செய்தவர்கள் ஒருவர்கூட உயிர் பிழைக்கவில்லை. அத்தனை பேருமே எரிந்து கருகி இறந்துவிட்டனர்.’’

இறந்தவர்களின் மரணப் பட்டியலில் – அந்தோ! குறுகிய காலத்திற்குள்ளாக, எங்கள் குடும்பத்தாரின் நெஞ்சங்களில் குடிபுகுந்து அன்பைப்பொழிந்த அந்த இளம் நடிகையின் பெயரும் இருந்தது. அவள் மட்டும் அல்ல. அவளுடைய தாயார் மற்றும் மூன்று சகோதரிகள் – ஆக மொத்தம் ஐந்து பேருமே குடும்பத்துடன் அந்தக் கோர விமான விபத்தில் பலியாகிவிட்டனர்.

விபத்து நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அவர்கள் துபாயிலிருந்து பம்பாய்க்கு திரும்பி வந்துவிட்டார்கள். துபாயில் அவர்கள் வாங்கியதும், பரிசாகப் பெற்றதுமான பல வெளிநாட்டுப் பொருள்களுக்கு சுங்கவரி கட்டுவதற்குப் போதிய இந்தியப் பணம் இல்லாமல், விமான நிலைய பயணிகள் அறையிலேயே அவர்கள் தங்க நேரிட்டுவிட்டது. பிறகு சென்னையில் அவர்களுக்குத் தெரிந்த சிலருடன் தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாக பம்பாயில் பணம் ஏற்பாடு செய்து வரியைக்கட்டிப் பொருள்களை மீட்டுக்கொண்டு ஒருநாள் தாமதமாகப் புறப்பட்டிருக்கிறார்கள்.

அன்றைக்கு என்று அங்கு காத்திருந்த காலன், விதியின் ஏவுதலால் அவர்களை வானத்திலேயே வைத்துக் காவு கொண்டுவிட்டான்.

விதியின் சதியினால் கொழுந்துவிட்டு எரிந்த தீயின் நாக்குகள், ஒரு வெள்ளை ரோஜாவையும், அதன் குடும்பத்தினரின் உயிர்களையும் கொள்ளை கொண்டுவிட்டது.

இடி விழுந்தது போன்ற இந்தக் கொடிய செய்தியைப் படித்ததுமே நானும் என் மனைவியும் பதறிப்போய் விட்டோம். எங்கள் குடும்ப உறவினர்களை இழந்ததைப் போன்ற துயர நிலைக்கு ஆளானோம். அன்று முழுவதுமே தாங்க முடியாதத் துக்கத்தால் தண்ணீரைத்தவிர வேறு எதையுமே உண்ணாமல் நான் ‘உபவாசம்’ இருந்து என் வயிற்றை வருத்திக் கொண்டேன். அந்த மயக்க நிலையிலும் அவளை என்னால் மறக்க முடியவில்லை.


இன்றுவரையில் – என் சினிமா வாழ்க்கையில் நான் ஒரு முழு நாளும் ‘உபவாசம்’ இருந்தது மூன்று நடிகைகளுக்காக மட்டுமே. ஒருவர் என் அன்பிற்கினிய அண்ணி ‘சாவித்திரி!’ இரண்டாவது எங்கிருந்தோ வந்து என் பாசத்தைப் பகிர்ந்து கொண்ட இந்தப் பத்தரை மாற்றுப் பசும்பொன் பெண்! மூன்றாவது, என் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டு, என் மனதில் இடம் பிடித்த சுடர் விளக்கு சுஜாதா! இம்மூன்று பேரும் மரணித்த நிலையில், அவர்களுடைய முகங்களை இறுதியாகப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை.

எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த இழப்பினால் அந்தப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான என் நண்பர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார். ஏற்கனவே படத்தின் எல்லா மாவட்ட வினியோக உரிமைகளையும் விற்றுப்பணம் வாங்கியிருந்தார். அவர் குறிப்பிட்ட வெளியீட்டு நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது.

முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகி, நிறைவு பெறவேண்டிய உச்சக்கட்டக் காட்சி இல்லாமல் இந்தப்படத்தை எப்படி வெளியிடுவது? என்ன செய்வது? தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், அரங்கங்களின் உரிமையாளர்கள் அத்தனை பேர்களுக்கும் இடையில் அடுக்கடுக்கான கேள்விகள்!

மின்னல் போல என் கண்ணெதிரில் தோன்றி மின்னி, மின்னல் போலவே மறைந்துவிட்ட அந்த நடிகையின் முகச்சாடையைக் கிட்டத்தட்ட ஒத்து இருக்கும்படியான யாராவது ஒரு பெண் கிடைப்பாளா என்று இயக்குனர் தேடினார். வீசி வீசி வெறும் வலையை இழுத்ததுதான் மிச்சம். இவர் தவித்த தவிப்புக்கும், துடித்த துடிப்புக்கும் கடைசியில் கடவுள் கருணை காட்டினார்.

நடனக்குழுவில் ஒரு பெண் கிடைத்தாள். அதே உயரம்! அதே உடல் பருமன்! அதே நிறம்! ஏறத்தாழ அதே குரல்! பக்கவாட்டில் பார்த்தால் அதே முகச்சாயல்! நேராகப் பார்த்தால் சற்று வேறுபாடு. ஆனாலும் பரவாயில்லை. ஒளிவீச்சில் சரி செய்து கொள்ளலாம். படப்பிடிப்பு தொடங்கியது. 

இவள், ராணி சந்திரா அல்ல – இன்னொரு நடிகை என்று நாங்களே நம்ப முடியாதவாறு இந்த நடன நடிகையின் முக அமைப்புக்கு ஏற்ற காமிரா கோணங்களை இயக்குனர் அமைக்க, அவருடைய அனைத்துப் படங்களுக்கும் பணியாற்றி, நல்ல அனுபவமும், ஆற்றலும் பெற்றிருந்த அந்த ஒளிப்பதிவாளர் இந்த முகத்தோற்றத்திற்குத் தகுந்தாற்போலவும், தந்திரமாகவும் ஒளி வெள்ளத்தை வீசி, கச்சிதமாக ஒளிப்பதிவு செய்தார். 

உச்சகட்டக் காட்சியில் போலிக் கதாநாயகியை அசல் கதாநாயகியாகக் காட்டி நம்ப வைத்த அந்த ஒளிப்பதிவாளர் நண்பர் பி.எல்.விஸ்வநாத் ராய். போலிக்கதாநாயகியாக நடித்தவர் ‘புஷ்பா!’

முழுவதுமாகப் படப்பிடிப்புப்பணிகள் முடிவுற்று, முதல் பிரதி (பஸ்ட் பிரிண்ட்) தயாராகி, நாங்கள் பார்த்து மகிழ்ந்து, மறுநாள் மாலை நடிகர், நடிகைகளும் மற்றும் கலைநுட்ப வல்லுனர்களும் படம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு நான் செல்லவில்லை.

‘சினிபாரத்’ தயாரிப்பாளரான ஏ.சி.டி. பாரதி தயாரித்து, அவருடைய அன்புக் கணவர் – என் அருமைச் சகோதரர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கி, நான் வசனமும், என் இனிய கவிஞர் ‘வாலி’ பாடல்களும் எழுதி ‘இசைஞானி’ இளையராஜா இசை அமைத்த ‘‘பத்ரகாளி’’ படம் 10.12.1976–ல் வெளியானது. 

சென்னை மவுண்ட்ரோடில் ‘பாரகன்’, புரசைவாக்கத்தில் ‘மேகலா’, தியாகராயநகரில் ‘ராஜகுமாரி’ ஆகிய மூன்று தியேட்டர்களிலும், மற்றும் தமிழக அனைத்துத் திரை அரங்குகளிலும் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. சென்னையின் மூன்று தியேட்டர்களிலும் 100 நாட்களைக் கடந்தும் மேற்கொண்டு 75 நாட்கள் ஓடியது. 

இந்தப்படம் முழுவதும் படர்ந்து பரவி இருந்த தனது பருவ அழகையும், நடிப்பு ஆற்றலையும் ஒரு பிரேம் கூட பார்த்துப் பரவசப்படக் கொடுத்துவைக்காமல் கட்டிக்கட்டி எழுப்பிய மனக்கோட்டைகள் அத்தனையும் கணப்பொழுதில் வெடித்துச் சிதறிச் சின்னாபின்னமாகி, விண்வெளியிலேயே தன் கனவு வாழ்க்கையை முடித்துக்கொண்டு விட்டார் எங்கள் ‘‘பத்ரகாளி’’ படத்தின் கதாநாயகியாக நடித்த ‘ராணி சந்திரா’ என்னும் பெயர் கொண்ட அந்தக் கேரளத்துக்கிளி.

இதே படம், இதே ஏ.சி.திருலோகசந்தர் இயக்கி, ‘‘பத்ரகாளி’’ என்ற அதே பெயரில் தெலுங்கு மொழியிலும், இந்தியிலும் தயாரிக்கப்பட்டு பெரிய அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதன் காரணம் ஒன்றே ஒன்றுதான். ‘காயத்ரி’ என்ற கதாநாயகி வேடத்தில் கதையும், சதையுமாக நடித்த – அல்ல வாழ்ந்து காட்டிய ராணி சந்திரா அந்த இரு படங்களிலும் இல்லை. அவர் மட்டும் மறையாமல் இருந்திருந்தால், தெலுங்கிலும், இந்தியிலும் அவரேதான் நடித்திருப்பார் என்பது நிச்சயம். அத்துடன்கூட குறைந்தது மூன்று ஆண்டுகளாவது அவர் முன்னணி கதாநாயகியாக பட உலகில் முடிசூட்டிக் கொண்டிருப்பார்.

இன்றைக்கும் ‘துபாய் – ரிஸ்ட்வாட்ச்’ என்னும் பெயர்களைக் கேட்டாலே, எனக்கு நினைவு வருவது என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற ‘முடிசூடா அழகுராணி’யான ராணி சந்திராதான்! அவள் நான் மறக்க முடியாத மாணிக்கம்!


வட இந்தியாவில் அண்ணனுக்கு தங்கை கையில் கட்டும் ‘ராக்கி’ என்னும் ‘ரட்சா பந்தனம்’ போல, அந்த அன்புத் தங்கை ராணி சந்திராவின் கொழுந்துக் கரங்களால் கடிகாரம் கட்டப் பெறுவதற்கு, மனித நேயம் மிக்க இந்த அண்ணனின் ‘மணிக்கட்டு’ கொடுத்து வைக்கவில்லை. ‘‘பத்ரகாளி’’யைத் தொடர்ந்து மேற்கொண்டு ‘ராணிசந்திரா’ நடிக்க இருந்த பல படங்களுக்கு நான் வசனம் எழுதக்கூடிய வாய்ப்பை இழந்தது, எனது சினிமா தொழிலுக்கு ஏற்பட்ட சேதாரம்! அந்த இழப்பு, ஈடு செய்ய முடியாதது.


No comments:

Post a Comment