Wednesday 10 August 2016

நடிகையர் திலகம் சாவித்திரி. சுக்கு நூறாய் உடைந்த சாவித்திரியின் கடைசி நாட்களின் காட்சிப் பதிவுகள்.

  நடிகையர் திலகம் சாவித்திரி. சுக்கு நூறாய் உடைந்த சாவித்திரியின் கடைசி நாட்களின் காட்சிப் பதிவுகள்.



சென்னை, லேடி வெலிங்டன் மருத்துவமனை - மாலை நேரப் பணிக்காக, செவிலியர் வந்து கொண்டிருந்தனர்.

அந்த அறையில், பாதி திறந்திருந்த கதவை தள்ளி, உள்ளே நுழைந்தாள் செவிலி ஒருத்தி.

லேடி வெலிங்டன் மருத்துவமனையில், ஒரு வழக்கம் இருந்தது. அது, பணிக்கு வரும் செவிலியர், முதலில் தங்கள் நோயாளிகளின் அறைக்கு சென்று, ஜெபிக்க வேண்டும் என்பதே!

அறைக்குள் நுழைந்த செவிலிப் பெண், சுவரில் மாட்டப்பட்டிருந்த மேரி மாதாவின் படத்துக்கு முன், கண்மூடி நின்று, கிறித்துவ மறைநூலான விவிலியத்தின் வசனம் ஒன்றை ஜெபிக்க ஆரம்பித்தாள்...


'திகையாதே; கலங்காதே; நான் உன்னோடு இருக்கிறேன்...' என்ற வசனத்தை உச்சரித்தபடி, மேரி மாதாவின் படத்திற்கு முன் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து, ஜன்னலைத் திறந்தாள்.

வெளியே, நீலவானத்தில் எப்போதும் மின்னும் விண்மீன்கள், ஏனோ அன்று ஒட்டுமொத்தமாகக் காணாமல் போயிருந்தன.

தமிழ் திரையுலகின் உன்னத நட்சத்திரம் ஒன்று உணர்வற்று, துயில் கொள்ளும் போது, நாம் மட்டும் விழித்திருந்து மின்னுவது, அறமற்ற செயல் என, அவை முடிவெடுத்திருந்தன போலும்!

படுக்கையில் கிடந்த அந்த நட்சத்திரத்தை ஜன்னல் வழியாக உற்று நோக்கிய நிலா, அப்பூமகளின் உணர்ச்சியற்ற முகம் கண்டு, அழுகையை அடக்க முடியாமல், மேக கைக்குட்டையால், முகத்தை மூடிக் கொண்டது.

கடந்த, 13 மாதங்களாக நினைவாற்றலை இழந்து, மயக்க நிலையில் கிடந்த அந்த நட்சத்திரம், எப்போதாவது உணர்வு பெற்று விழி உயர்த்தும்; அப்போது, அதைத் தழுவி, ஆறுதல் படுத்தலாம் என்று காத்திருந்தது தென்றல்!

ஜன்னலைத் திறந்த செவிலிப் பெண், திரும்பி, கட்டிலில் கிடந்த உருவத்தை உற்று நோக்கினாள்.

மயக்க நிலையில் இருந்த அந்த உருவம், விழி திறந்து, மெதுவாக கரத்தை அசைத்தது. தாதிப் பெண்ணுக்கு நம்ப முடியவில்லை.

ஓடோடி கட்டிலின் அருகில் வந்து, அசைத்த கரத்தை தொட்டாள். அந்த உருவத்தின் கன்னத்தில், தாரை தாரையாக நீர்த்துளிகள்!

காலையில் தன்னைப் பார்க்க வந்த மகளும், பேரனும் அங்கு இருக்கின்றனரா என்ற தேடலின் அடையாளமோ அந்தக் கண்ணீர்!


அன்று காலை, ஐந்து வயதுக் குழந்தையோடு, தன் தாயைக் காண வந்திருந்தாள் சாமுண்டீசுவரி.

பதிமூன்று மாதங்களாக படுக்கையில் நோயுற்றுக் கிடக்கும் தன் தாய், எழுந்து, முன்பு போல் நடமாடி விடுவாள், தானும், தன் குழந்தையும் அவளின் மடியில் தலை வைத்து, உலக கதைகளை கேட்கலாம் என்றே எண்ணினாள் அவள்.
ஆனால், விதியின் விளையாட்டு என்ன என்பது, யாரும் அறியா சித்தாந்தம் அல்லவா!

தன் கரம் பட்டவுடன், தாயிடம் எழும்பும் சின்ன அசைவு தான், இப்போது எல்லாம் சாமுண்டீசுவரிக்கு வேதம். இன்றும் அப்படித்தான், தன் மகனின் பிஞ்சு கரத்தால், தாயின் அசைவற்ற கன்னத்தை தடவினாள். பிஞ்சு விரல்களின் பஞ்சு போன்ற தடவலில், சிலிர்த்தது அத்தாயின் உடல்.

அதுவரை உணர்வற்றுக் கிடந்த கரம், மெதுவாக உயிர் பெற்று, வாஞ்சையோடு பேரனைத் தேடியது. 'சொல்லச் சொல்ல இனிக்குதடா...' என, மகளுக்கு தாலாட்டுப் பாடிய செவ்விதழ், இப்போது, தன் பேரனுக்கு முத்தம் கூட கொடுக்க முடியாமல் போய் விட்டதே என்ற இயலாமையில், விழிகள் தலையணையை நனைத்தது.

கண்ணீரோடு பேரனுக்குக் கையாலே முத்தமிட்டவள், மீண்டும் நினைவற்றுப் போனாள்.

இப்போது கொஞ்சம் நினைவு வர, பேரனைத் தேடுகிறது அத்தாயின் விழிகள்!

ஓடத்தில் பயணிப்போர், ஓட்டை விழாது என்ற நம்பிக்கையில் பயணிக்கும் போது, சூறாவளி வந்து, படகை சுக்கு நூறாய் உடைத்தது போல, வாழ்க்கை என்ற ஓடத்தில் ஏற்பட்ட சூறாவளி தாக்குதலில், சுக்கு நூறாய் உடைந்த சாவித்திரியின் கடைசி நாட்களின் காட்சிப் பதிவுகள் தான் இவையெல்லாம்!

ஆனந்தம் விளையாடிய தன் வீட்டு அன்பு இசையை, மனதில் தேடி தோற்ற சாவித்திரியின் கடந்த காலம், காயங்களின் பக்கங்கள் அல்ல; வெற்றியின் ஓங்கிய பேரிரைச்சல். ஆயினும், சில பக்கங்கள், சுற்றி நின்றவர்களால், திட்டமிட்டு கறுப்பாகக் காட்டப்பட்டது.

கட்டிலில் உணர்வற்று கிடந்த, அந்த மகாதேவியின் கால் கொலுசு எழுப்பிய ஓசையில், கூற முற்பட்ட விஷயங்கள் ஏராளம்.

ஒருவன் வீழ்ந்து விட்டால், சுற்றி நின்று ஏளனம் பாடுவோர் மத்தியில், சாவித்திரியின் வெற்றிக் கொலுசு தோற்று போனதும், அது கூறிய கதை கேட்பார் அற்றுப் போனதும் விதி எழுதிய சறுக்கல்கள்!

மேரி மாதாவின் படத்தின் முன் ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்தியின் ஒளி, அவர் கன்னத்தில் ஒட்டியிருந்த நீர்த்துளிகளில் பிரதிபலிக்க, ஒரு வரலாறு, மெதுவாக திரை எழும்பி, தன் முகத்தை காட்டத் துவங்கியது.


சாவித்திரியின் ஆழ்மனதில், சாமுண்டீசுவரியின் கெட்டி மேள ஓசை, மனதின் ஓரத்தில் எங்கோ ஒலிக்க, அவர் கரம், கட்டிலை இறுகப் பிடித்தது.

No comments:

Post a Comment