Wednesday 17 August 2016

இரண்டாம் ஜாலியன் வாலாபாக் - தேவகோட்டை துப்பாக்கி சூடு 14 பெண்கள் உட்பட 75 பேர் பலி 1942 ஆகஸ்ட் 17




 இரண்டாம் ஜாலியன் வாலாபாக் -
தேவகோட்டை துப்பாக்கி சூடு  
14 பெண்கள் உட்பட 75 பேர் பலி 1942 ஆகஸ்ட் 17 


அப்போது ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. யுத்தத்தின் காரணமாகக் கடும்பஞ்சம். ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் தாங்களுக்குத் தெரிந்த வழிகளில் போராடிக்கொண்டிருந்தார்கள்.

சிவகங்கையில் அரசுக் கருவூலம் கொள்ளையடிக்கப்பட்டது.

தேவகோட்டையில் இருந்த சப்-கோர்ட்டை நெருப்பு வைத்துக் கொளுத்தினார்கள். திருவாடானை நீதிமன்றத்தையும் போலீஸ் ஸ்டேஷனையும் முற்றுகையிட்டு பொதுமக்கள் கைப்பற்றிக்கொண்டார்கள்.

போலீஸ் எதுவும் செய்யத் திராணியற்று முடங்கிப் போனது ஏனைய அரசு அலுவலங்கங்கள் எதுவும் செயல்படமுடியவில்லை.

ராணுவம் வரவழைக்கப் பட்டது .துப்பாக்கி சூடு நடத்தினர் .இதில் 61ஆண்களும் 14 பெண்களும் சுட்டு கொல்லப்பட்டனர்  - 300 பேர் காயம் 
இது அக்காலத்தில் இரண்டாம் ஜாலியன் வாலாபாக் என்று அழைக்கப்பட்டது -1942 august 1942

இன்றைக்கு சிவகங்கை மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம், விருதுநகர் மாவட்டம் என்றழைக்கப்படும் மூன்றும் அன்றைக்கு ஒரே மாவட்டமாக இருந்தன. கிழக்கு ராமநாதபுரத்தில் மூன்று மாதகாலமாக அரசு என்று எதுவும் இல்லை. மக்களே ஆட்சி நடத்தினார்கள். இந்த எழுச்சியை நசுக்க வெளியிலிருந்து பிரிட்டிஷ் அரசு போலீசைக் கொண்டுவந்தது.

எழுச்சிக்குத் தலைமை தாங்கியவர்கள் எல்லாரும் வேட்டையாடிப் பிடிக்கப்பட்டனர். இதில் முக்கியமானவர் சித்தூர் சிவஞானம். அவரும் கைதுசெய்யப்பட்டார்.

சிவஞானத்தைக் கொன்றுவிடுமாறு அரசாங்கம் தகவல் தந்துள்ளதாக மிகுந்த மனவருத்தத்தோடு சப்-இன்ஸ்பெக்டர் ராமையா என்னிடம் கூறினார்.

‘கைதானவரை எப்படிக் கொல்லமுடியும்?’ என்றேன்.
கோர்ட்டுக்குப் போகும் வழியில் தப்பித்துச் சென்றதாகவும் அப்போது போலீஸ் சுட்டதாகவும் அதில் இறந்து போனதாகவும் ரிப்போர்ட் தரச் சொல்லியிருக்கிறார்கள்’ என்றார் அவர்.

’அப்படிக் கொன்று விடுவார்களா?’ என்று பதைத்துக் கேட்டேன்.

‘காலையிலேயே கட்டிவைத்துச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்’ என்றார்.

எனக்குள் இச்செய்தி இடியாய் இறங்கியது.

ஆறுமாதகாலம் வழக்கு நடந்தது.. ஸ்பெஷல் கோர்ட் 30 பேரை விடுதலை செய்தது. 100 பேருக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டது. எல்லோருக்கும் 7 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்கள் எல்லோரும் சாதாரண ஜனங்கள். யாரும் வசதி படைத்தவர்கள் இல்லை. படிப்பறிவும் கிடையாது. தேவர்களும், ஹரிஜனங்களும்தான் மிகப் பெரும்பாலானவர்கள்.

இவர்கள் ஒரு பெரும் ஏகாதிபத்திய அரசை எதிர்த்து வீரச் சமர் புரிந்தனர். ஏராளமான இன்னல்களையும் சித்திரவதைகளையும் இன்முகத்தோடு ஏற்றனர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

விரிவான வரலாறு


இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல பக்கங்கள் இன்னமும் பலரால் முழுமையாக எழுதப்படவில்லை. காரணம், இதற்கான ஆவணங்களைத் திரட்டுவதற்கு வரலாற்று ஆய்வாளர்கள் இடையே ஆர்வம் இல்லாமல் போனதுதான். வட இந்தியாவில் நிகழ்ந்தைவிட, பல மடங்கு வேகத்தில் தென்னாட்டில் சுதந்திரப் போராட்டம் நடந்தாலும் கூட, வட இந்தியா மாநிலங்களில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்கள்தான் முன்னிறுத்தப்பட்டு, இன்றுவரை புத்தகங்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் ஜாலியன் வாலபாக் என்ற இடத்தில், ஆங்கிலேய ராணுவ அதிகாரி ஜெனரல் டயர் நடத்திய மனிதாபிமானம் இல்லாத துப்பாக்கி சூடுதான் இன்றுவரை மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில், வடமாநிலங்களுக்கு இணையாக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களும், ஜாலியன் வாலாபாக் கொலைக் கொடூரத்துக்கு இணையான கொடூரங்களை ஆங்கிலேயர்கள் அரங்கேற்றியும், அதுகுறித்து தமிழகத்து பாடத்திட்டங்களில் இன்றுவரை ஒரு சிறிய பதிவும் கூட காணப்படவில்லை என்பது வேதனைக்குறியது. இந்த வகையில் தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக் என்ற அடைமொழிக்கு உரியது தேவகோட்டை. தேவகோட்டை நகராட்சி அலுவலகத்துக்கு எதிரில் உள்ள ‘தியாகிகள் பூங்கா’, தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்குக்கு இன்றளவும் சாட்சியாக உள்ளது.

தமிழகன் ஜாலியன் வாலாபாக் தேவகோட்டையா? அப்படி என்னதான் அங்கு நடந்தது? நிச்சயம் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாத, தெரிந்திருக்க முடியாத போராட்டத்தின் சுவடுதான். வீரம் கொப்பளித்த, உயிரை துச்சமென மதித்த தீரர்கள் பற்றிய வரலாற்றின் தொகுப்பு இது...


காந்தியடிகள் தலைமையில் 1920ம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமானது. ஆங்கிலேயர்களின் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்று முடிவு செய்த காந்தியடிகள், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை 1942ம் ஆண்டு தொடங்கினார். இதன்படி நாடு முழுவதும் உள்ள ஆங்கிலேயர்களின் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வந்த இந்தியர்கள் பணிகளை புறக்கணித்தனர். போராட்டத்தில் குதித்தனர். இது ஆகஸ்ட் புரட்சியாக வெடித்தது.

நாடெங்கிலும் சுதந்திர வேட்கையில் மக்கள் வெகுண்டெழுந்தனர். ஆங்கிலேயர்களே அச்சம் கொள்ளும் அளவுக்கு மக்கள் போராட்டக் களத்தில் சங்கமித்தனர். கட்டடற்ற மக்கள் திரண்டதால், ஆங்கிலேயர்கள் பல திறந்தவெளி மைதானங்களை, திறந்தவெளி சிறைச் சாலைகளாக மாற்றினார். இந்தியர்களின் எழுச்சியால் திணறிய ஆங்கிலேய அரசு, 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி நாடெங்கும் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டது. ஆனால், இந்தத் தடையுத்தரவு விடுதலை வேட்கையில் இருந்த வீரர்களை கட்டுப்படுத்தவில்லை.

ஆங்கிலேயர்களின் தடையை மீறி தேவகோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் திரண்டு, அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய சின்ன அண்ணாமலை, டி.எஸ். ராமநாதன் ஆகியோரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். அப்போதைய ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்த திருவாடானை சிறையில் அடைத்தனர். சுதந்திரப் போராட்ட வீரர்கள் 2 பேரை ஆங்கிலேயர்கள் கைது செய்தது, அப்பகுதி மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்தூர் கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் இரவோடு இரவாக ஒன்று கூடினர். சுதந்திரப் போராட்ட வீரர் பாலபாரதி தலைமையில் திட்டங்கள் வகுத்தனர்.


தேவகோட்டை, திருவேகம்பத்தூர், திருவாடானை பகுதிகளில் ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை ஒழிக்க புறப்பட்டனர். 1942 ஆகஸ்ட் 15ம் தேதி நள்ளிரவில் திருவேகம்பத்தூர், திருவாடானை இரண்டு ஊர்களுக்கும் இடையே உள்ள பாலங்களை தகர்த்தெறிந்தனர். போக்குவரத்தை துண்டித்தனர். 17ம்தேதி காலை அபிராமம் முத்தையா, திருவேகம்பத்தூர் ஜெயராம அய்யர் ஆகியோர் சைக்கிளில் தொண்டி சென்று தொலை தொடர்பு இணைப்புகளை துண்டித்தனர். செல்லத்துரை போராட்ட வீரர்களை ஒருங்கிணைத்தார்.

திருவாடானை சிறைச்சாலையை சுதந்திர போராட்ட வீரர்கள் தகர்த்தெறிந்தனர். ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சின்னஅண்ணாமலை, டிஎஸ்ராமநாதன் ஆகியோர் உட்பட 30க்கும் அதிகமான சுதந்திரப் போராட்ட வீரர்களை மீட்டனர். சிறை கஜானாவை சூறையாடினர். தாலுகா அலுவலகம், போலீஸ்நிலையம் துணைப் பதிவாளர் அலுவலகம் ஆகியவை சூறையாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட வீரர்களின் படை தேவகோட்டையை நோக்கி நகரத் தொடங்கியது.

ஆனால், தேவகோட்டை எல்லைக்குள் நுழைந்தால் சுதந்திரப்போராட்ட வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படும் என்று ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள் எச்சரித்தனர். ஆனால், எதற்கும் தயார் என துணிந்து நெஞ்சை நிமிர்த்தி, உண்மையான அஞ்சா நெஞ்சர்களாக தேவகோட்டையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர். இப்போதுள்ள தேவகோட்டை நகராட்சிக்கு அருகில் ஆங்கிலேயர்கள் துப்பாக்கிகளில் தோட்டாக்களை நிரப்பி, சுந்திரப் போராட்ட வீரர்கள் வருகைக்காக காத்திருந்தனர்.

நெஞ்சுக்கு நேராக துப்பாக்கிகள் நீட்டிக் கொண்டிருந்தபோதும், அஞ்சவில்லை. முன்னேறிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு முட்டுக்கட்டை போடுவதற்காக முத்திருளப்பனை சுட்டு வீழ்த்தியது வெள்ளையர் படை. இதனால், கோபமடைந்த சுதந்திர போராட்ட வீரர்கள், தேவகோட்டை கோர்ட்டுக்குள் நுழைந்து சூறையாடி, ஆவணங்களுக்குத் தீ வைத்தனர். வெள்ளையர்கள் நடத்திய சிம்சன் கம்பெனி பஸ்களை தீயிட்டு கொளுத்தினர்.

தங்கள் கண்முன் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆவேசமாக போராடுவதைக் கண்டு ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள் ஆத்திரம் அடைந்தனர். இதனால், அடுத்தடுத்து சுந்திரப்போராட்ட வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. குருவிக் கூட்டத்தை சுட்டு வீழ்த்துவது போல், 75 பேரை சுட்டுக் கொன்றனர் ஆங்கிலேய ராணுவத்தினர். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர்.


ராஜன்இன்ஸ்டிடியூட் நடத்தி வந்த தர்மராஜன்அய்யர், மணிவண்ணன், நடேசன், கிருஷ்ணன், சாவல்கட்டு மணியன், சிவனாண்டி செட்டியாரின் தாயார் உட்பட 75 பேர் இந்தத் துப்பாக்கி சூட்டில் நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்தனர்.

ஆர்.எம்.அண்ணாமலை என்பவரை போலீசார் துன்புறுத்தி, அவரது வாயில் சிறுநீர் கழித்தனர். கைது செய்யப்பட்ட போராட்ட வீரர்களையும் சுட்டு வீழ்த்தி, பிணமான அத்தனை வீரர்களையும் ஒரே வண்டியில் கொண்டு சென்றனர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக தேவகோட்டையில் நடந்த இந்த ரத்த சரித்திரம், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பக்கங்களில் சரியான முறையில் இடம்பெறவில்லை என்பது, இன்றளவும் உள்ள தியாகிகளின் வேதனையாகும். இதை தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக் சம்பவம் என்கினறனர் தியாகிகள்.

தேவகோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் 75 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதன் நினைவாக, நாடு சுதந்திரம் அடைந்த நாளில், தியாகிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் அவர்களுக்காக ஒரு நினைவுப் பூங்கா (தியாகிகள் பூங்கா) உருவாக்கப்பட்டது.

அந்த இடத்தில் நினைவுத் தூண் எழுப்பப்பட்டது. தேவகோட்டை நகராட்சி அலுவலகம் எதிரில் இப்போது கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளிக்கும் தியாகிகள் நினைவுத்தூண், இன்றைய தலைமுறைக்கு இந்த மண்ணின் வீரதீரத்தை உரைத்துக் கொண்டிருக்கிறது.

சுதந்திரப் போராட்ட வீரர்களால் கொளுத்தப்பட்ட கோர்ட் ரோடு, இப்போது தியாகிகள் ரோடு என்று அழைக்கப்படுகிறது. இன்றைக்கு இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சுதந்திரக் காற்றை நிம்மதியாக சுவாசிப்பதற்கு காந்திஜி போராடினார், சுபாஷ் சந்திரபோஸ் போராடினார் என்பதெல்லாம் இருந்தாலும், ஆங்கிலேயர்களை அச்சுறுத்தும் வகையிலும், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டத் தலைவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையிலும், தமது இன்னுயிரை துணிந்து கொடுத்த வீரர்கள் வாழ்ந்த தமிழகத்தில்,  நாம் வாழ்வதில் பெருமைதான்.

2 comments:

  1. தங்களின் இந்த பதிவினை "வரலாற்றில் இன்று" என்ற தலைப்பில் நன்பர்களுடன் பகிர்ந்துள்ளேன் - மிக்க நன்றி

    ReplyDelete
  2. மிக்க மகிழ்வடைகிறேன் -தங்களைப்போல் தேச அபிமானிகள் வரவு
    எனக்கு மிகுந்த ஆனந்தம் அடைய வைக்கிறது

    ReplyDelete