Saturday 15 January 2022

CHO - SOME THOUGHTS

 



CHO - SOME THOUGHTS



சோ –சில நினைவுகள்                             

-மணா

அபாரமான டைமிங்சென்ஸ் !

“” நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். சென்னை இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள் இல்லையா? அப்போதே உங்களுக்குத் தெரிய வேண்டாமா,சென்னைக்கு எவ்வளவு தூரம் நெருக்கமாக இருக்கிறேன் என்று?’’

-இப்படித் தன்னையே கிண்டல் பண்ணிக் கொண்டவர் துக்ளக் ஆசிரியரான சோ.

தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் கேலி தொனியுடன் பார்த்தவர் தன்னை மட்டும் அதிலிருந்து விலக்கிக் கொள்ளவில்லை.

தனிப்பட்ட பேச்சு, சினிமா, நாடகம், அரசியல் விமர்சனம் எல்லாவற்றிலுமே இந்தக் கேலியான பார்வை தான் மையமாக இருக்கும்.

டைமிங் சென்ஸ் அதிலும் மிகவும் முக்கியம். சோ- வசனம் எழுதிய ‘தேன்மழை’  படத்தில்

 சோ-வும், நாகேஷூம் சேர்ந்து ஒரு அலுவலகத்திற்கு வந்த நீண்ட கொண்டை போட்ட பெண்ணை இன்டர்வ்யூ பண்ணுவார்கள்.

‘’ நீங்க ரொம்பவும் சண்டை போடுவீங்களா?’’

‘’ ஏன்.. அப்படிக் கேக்கிறீங்க?’’

‘’ இல்லை.. நாரதர் கொண்டை போட்டிருக்கீங்களே’’

‘’ சரி.. உங்களுக்கு என்ன வயசு?’’

‘’ இருபத்தி ஒண்ணு’’

குறுக்கே புகுந்து சோ கேட்பார்.

‘’ எத்தனை வருஷமா?’’

இதேவிதமான கிண்டல் நேரடியாகவும் அவரிடம் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் சபாநாயகராக அப்போது இருந்த பி.ஹெச்.பாண்டியனுக்கும் சோ-வுக்கும் மோதல் கடுமையாக இருந்த நேரம்.

 தஞ்சையில் துக்ளக் ஆண்டு விழா. விழா துவங்குவதற்கு முன் லேசான மழை.

மேடைக்கு வந்த சோ பேச முயற்சித்தபோது ‘’ மைக்’’ சரியாக இயங்கவில்லை.

 தட்டிப்பார்த்தார்.

திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து ‘’ கேட்குதா?’’ என்று கேட்டதும்

 ‘’ இல்லை’’ என்று கத்தினார்கள்.

‘’ எப்போதும் நமக்கும் ‘ஸ்பீக்கருக்கும்’ ஒரே பிரச்சினை தான்!’’ என்று டைமிங்காக சட்டமன்ற ஸ்பீக்கரை அர்த்தப்படுத்தும் விதத்தில் சோ சொன்னதும் ஏகக் கைதட்டல்.

சென்னையில் இன்னொரு துக்ளக் ஆண்டுவிழா. துவக்கத்தில் வழக்கமாக அலுலவகத்தினரைக் கூட்டத்தினருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார் சோ. 

அறிமுகம் மிகவும் துறுதுறுவென்று அவசரமாக நடக்கும்.

‘’ ஸ்ரீனிவாசன்’’ என்று ரங்காச்சாரிக்கு முன்பு துக்ளக்கில் பப்ளிஷராக இருந்தவரைக் கூப்பிட்டார். 

மறுபடியும் அழைத்துப் பார்த்தார். ஸ்ரீனிவாசன் உடனே மேடைக்கு வரவில்லை. 

சற்று டென்ஷனாகி விட்டார் சோ.

‘’ இவரைச் சொந்த பெயரில் கூப்பிட்டேன். இதுவரைக்கும் வரலை. எங்க ஆபிஸிலே சில பேருக்குப் பட்டப்பெயர் வைச்சிருப்பேன். இன்னைக்கு அந்தப் பெயரில் கூப்பிட்டாத் தான் அவர். வருவார் போலிருக்கு. நாலடியார்.. வாங்க’’

-என்றதும் சற்று குள்ளமாக இருந்த ஸ்ரீனிவாசன் மூச்சிரைக்க மேடைக்கு ஓடிவந்து வணக்கம் போட்டதும் கூட்டத்தில் ஒரே சிரிப்பு. 

உடனே ஒரு கமெண்ட் அடித்தார் சோ.

‘’ சிலருக்குச் சொந்த பேரைவிட இந்த மாதிரிக் கூப்பிட்டாத் தான் திருப்தியா இருக்கும் போலிருக்கு’’

உடனே தமிழக அரசியலைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கூட்டத்தில் ஒரே கரகோஷம்.

சென்னையில் பல சமயங்களில் சோ-வே டிரைவ் பண்ணிக் கொண்டு போவார். போக்குவரத்து நெரிசலான ஒரு சிக்னலில் இவர் காரை நிறுத்தியிருந்த போது கார் கண்ணாடியை யாரோ ஒருவர் தட்டியிருக்கிறார்.

எதற்காகத் தட்டுகிறார்? – சோ கண்ணாடியைக் கீழறக்கியதும் நடந்தது தான் ஆச்சர்யம்.

‘’ நான் கண்ணாடியைக் கீழே இறக்கினேன். தட்டின ஆள் அக்கம்பக்கம் பார்த்தான். எதுக்காக அவன் தட்டினான்னு நான் யோசிக்கறதுக்குள்ளே சட்டுன்னு என் தலையிலே ஒரு கொட்டு கொட்டிட்டு விர்ர்ன்னு போயிட்டான். டிராஃபிக் சிக்னலிலே அவனை விரட்ட முடியுமா? காரைக் கிளப்பிட்டேன். 

அவனுக்கு எப்படியொரு சிந்தனை வந்திருக்கு பாருங்க என் தலை மேலே’’ – வாய்விட்டுச் சிரித்தபடி அலுலகத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னார் சோ..

என்னுடைய ‘’ ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள்’’ என்கிற நேர்காணல்களின் தொகுப்பு நுலை  ஆசிரியர் சோ-வுக்குச் சமர்ப்பணம் பண்ணியிருந்தேன். 

அதன் பிரதியைக் கொடுக்க துக்ளக் அலுவலகத்திற்கு காலை நேரத்தில் போயிருந்தேன்.

போனதும் சோ-விடம் நுலைக் கொடுத்தேன். 

வாங்கிக் கொண்டார்.

‘’ இந்த நூலை உங்களுக்குத் தான் ‘டெடிகேட்’’ பண்ணியிருக்கேன் சார்.’’

அந்தப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தவர் சொன்னார்.

‘’ இந்த ஒரு பக்கத்தை மட்டும் தான் ‘டெடிகேட்’ பண்ணியிருக்கீங்களா? அப்படின்னா ஒவ்வொரு பக்கத்திலும்லே நீங்க என் பெயரைப் போட்டிருக்கணும். இப்போ என்ன இந்தப் பக்கத்தை மட்டும் நான் கிழிச்சு எடுத்துக்கணுமா? சொல்லுங்க.’’ 

– என்று செம கேலியின் அமளி அடங்க நேரமானது.

சிவாஜி கணேசன் தனிக்கட்சி ஆரம்பித்த சமயம். 

மூன்று நாட்கள் தமிழகம் முழுக்கப் பிரச்சாரம் போனபோது சோ-விடம் அந்தப் பயணத்தைப் பற்றி துக்ளக்கில் எழுதச் சொல்லியிருக்கிறார் சிவாஜி. 

என்னை சிவாஜியுடன் போகச் சொன்னார் சோ.

தூத்துக்குடி துவங்கி சென்னை வரை மூன்றுநாட்கள் அவருடன் காரில் பயணம். அப்போது சிவாஜி ஆரம்பித்ததே பயங்கர மரியாதையோடு தான்.

‘’ வாப்பா.. உன்னைத் தான் அந்தக் குரங்குப்பய அனுப்பிச்சிருக்கானா?’’

எனக்குச் சற்று அதிர்ச்சியாகி விட்டது. 

என் முகக் கலவரத்தைக் கவனித்தார் சிவாஜி.

‘’ இந்தா பாருப்பா.. உனக்குத் தான் அவன் எடிட்டர். எனக்கு குரங்குப்பய தான். சும்மா ஷாக் ஆகாம உட்காரு..’’ என்றார் சிம்மக்குரலில். 

ஒரு கூட்டத்தில் சிவாஜி காரில் ஏறியதும் கூட்ட நெரிசலில் சிக்கி நான் காரை நெருங்கத் தாமதமாகிக் கொண்டிருந்தது.

‘’ என்னடா இவன்! அந்தக் குரங்குப்பய அனுப்பிச்சவன் அவனை விடக் குரங்குபயலா இருக்கானே! அவனைப் பிடிச்சுக் கூட்டி வாங்கடா..’’ 

என்று சிவாஜி சத்தம் போட்டுக் கொண்டிருக்கும்போது நான் காரில் நுழைந்தபோது என் முகத்தில் ஈயாடவில்லை.

நேரே சென்னைக்குப் போனதும் சோ-வைப் பார்த்தபோது கேட்டேன்  .

    ‘’ என்ன சார்.. சிவாஜி உங்களை ஒரு மாதிரி திட்டுறாரே?’’ 

‘’ என்ன.. அதைச் சொல்றதிலே உங்களுக்கு என்ன தயக்கம்! என்னைக் குரங்குப்பயன்னு சொன்னாரா?’இப்போ மட்டுமில்லை. எப்பவும் என்னை அப்படித்தான் அன்பாக் கூப்பிடுவார்’’

‘’ உங்களை மட்டுமில்லை. என்னையும் சிவாஜி சார் குரங்குப்பட்டியலில் சேர்த்துட்டார்’’

என்று நான் சொல்லி முடித்ததும் சோ முகத்தில் அப்படியொரு அமரக்களமான சிரிப்பு.

‘’ அப்படியா உங்களையும் சேர்த்துட்டாரா? ஹைய்யா..ஜாலி.. என்னோட உங்களுக்கும் நல்ல பிரமோஷன் தான் போங்க. எப்படியோ குரங்கு இனத்தோட நல்லபடியா இணைஞ்சிட்டீங்க. இனி சந்தோஷம் தான் ’’

 –  கிண்டலின் உச்சிக்குப் போனார் சோ.

தொலைந்தார் டார்வின் !!!

#

#  ‘குமுதம் ‘ இதழில் வெளியான கட்டுரை.


No comments:

Post a Comment