Thursday 1 November 2018

THE STORY OF SRILANKA , PANDARA VANNIYAN








THE STORY OF SRILANKA ,
PANDARA VANNIYAN






தாய்மண் மீது அடங்காப் பற்றுக் கொண்டு இறுதிவரை போராடிய பண்டார வன்னியன்.
ஒரு நாட்டில் ஓர் இனத்தின் வரலாற்றுப்பாதைகளைப் புரட்டினால் அதில் பல்வேறு உணர்வுகள் வெளிப்படுத்தப்படுவதினை எவராலும் மறுக்க முடியாது. அதுவும் இலங்கைத் தீவில் தமிழினத்தின் வரலாறுகள், துன்பங்கள், துயரங்கள் நிறைந்திருந்தாலும் வீரஞ்செறிந்த நிகழ்வுகளும் ஏராளம் நடந்தேறியுள்ளன.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இராவணனின் வரலாறு, அதன் பின்பு அனுராதபுரத்தில் நீதி தவறாமல் 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்த எல்லாளன் வரலாறு. யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலியனின் வரலாறு, வன்னியை ஆண்ட மாவீரன் பண்டார வன்னியன் வரலாறு என்பன உயர்ந்தவை. இவர்களின் வரலாற்றை மீட்டுப் பார்த்தால் அதில் பல புனிதத் தன் மைகள் புலப் படுகின்றன. நாம் பண் டார வன்னி யனின் வர லாற்றினை அவரது நினைவு நாளில் நிலை நிறுத்திக் கொள்வோம்.

இலங்கையில் புராதன காலத்தில் காணப்பட்ட இராச்சியங்களில் அடங்காப்பற்று எனப்படும் வன்னிராச்சிய வரலாறுகள் வித்தியாசமானவை. இலங்கையில் வடபகுதியின் வடக்கே ஆனையிறவு பரவைக் கடலையும் கிழக்கே முல்லைத்தீவுக் கடலையும், தெற்கே நுவரகலாவிய மாவட்டத்தையும் மேற்கே மன்னார் கடலையும் எல்லைகளாகக் கொண்ட பிரதேசமே அடங்காப்பற்று எனப்படும் வன்னி ஆகும். இந்த வன்னிப் பிரதேசத்தில் ஆதிகாலத்தில் வேடர்களும் இராவணன் பரம்பரையைச் சேர்ந்த தமிழர்களும் வாழ்ந்ததற்கான தொல்லியல் வரலாறுகளும் வரலாற்றுச் சின்னங்களும் காணப்படுகின்றன.

இப்பிரதேசத்தில் வாழ்ந்த பூர்வீக குடிகள் சுதந்திரமாக இருந்தனர். புவியியல் அமைப்பு, சூழல், சமூக வாழ்க்கை முறை காரணமாக அவர்கள் யாருக்கும் அடி பணியாமல் இருந்தனர். யாழ்ப்பாண ஆட்சியினருக்கோ, சிங்கள ஆட்சியினருக்கோ அடங்காமல் இருந்த பிரதேசம் என்பதால் இப்பகுதி “அடங்காப்பற்று” எனப் பெயர் பெற்றது.

இவ்வாறு சிறப்புப் பெற்ற அடங்காப்பற்று எனப்படும் வன்னி இராயச்சியத்தை ஆரம்பத்தில் ஆண்ட வன்னியர்கள் பனங்காமத்தை தமது தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். பின்பு முல்லைத்தீவைப் பிரதான இடமாக மாற்றினர். இந்த வன்னி இராச்சியத்தை இரண்டு வகையானவர்கள் ஆட்சி புரிந்ததாகக் கூறப்படுகின்றது. வன்னியர்கள் எனப்படுவோரும் மற்றும் மாப்பாணர்களும் ஆட்சி புரிந்தனர்.

இவ்வாறான சூழ்நிலைகளில் கி.பி. 1505ஆம் ஆண்டு இலங்கைக்குள் நுழைந்த போர்த்துக்கேய இனத்தவர்களால் வன்னியின் செட்டிக்குளம், மன்னார் போன்ற பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் பின்பு கி.பி. 1782ஆம் ஆண்டு ஜூலை மாதம் லெப்ரினென் நாகெல பொது மன்னிப்பளித்தபோது சின்னநாச்சி என்பவருக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டது. முல்லைத்தீவிற்கு திரும்பிச் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டார். இவ்வாறான சூழ்நிலைகளில் பண்டாரவன்னியனின் தாயின் பெயர் சின்னநாச்சியாக இருந்திருக்கலாம். சுவாமி ஞானப்பிரகாசரின் பரம்பரைக் குறிப்பின்படி குழந்தை நாச்சனுடைய மகன் பண்டாரவன்னியன் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாகத்தான் பண்டாரவன்னியனின் ஆள்புலம் முல்லைத்தீவு வட்டுவாகல், முள்ளியவளை, ஒட்டுசுட்டான் போன்ற பிரதேசங்களாக இருந்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.


இவ்வாறான ஒரு சூழ்நிலையில் கி.பி. 1796ஆம் ஆண்டு இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பமாகின்றது. ஆங்கிலேயர்கள் கோட்டை இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியங்களை இலகுவாக கைப்பற்றிக் கொண்டனர். ஆயினும் கி.பி. 1800ஆம் ஆண்டு பனங்காமத்தில் படைப்பிரிவு ஒன்று இருந்த தாகக் குறிப்பி டப்படுகின்றது. பண்டாரவன்னியன் வன்னியில் கலகங்கள் செய்ததன் காரணமாக ஒல்லாந்தரினால் பதவி நீக்கம் செய்யப்பட்டு பின்னர் ஆங்கிலேயர்களின் மன்னிப்பின்பேரில் வன்னியில் ஒரு சிறு பிரிவிற்கு தலைவனாக நியமிக்கப்பட்டான். ஆனால் பண்டாரவன்னியன் ஆங்கிலேயர்களைத் தனது நாட்டிலிருந்து வெளியேற்றப் போவதாகச் சபதம் செய்து மீண்டும் கலகங்கள் செய்ய ஆரம்பித்தான்.

பண்டாரவன்னியன் பாரிய படையெடுப்பினை மேற்கொண்டு வடபகுதி வன்னி முழுவதையும் தனது ஆட்சியின்கீழ் கொண்டுவந்ததுடன் முல்லைத்தீவையும் கைப்பற்றினான். மேலும் அவனது படையினர் கொட்டியாரத்தையும் கைப்பற்றினர். பண்டாரவன்னியன் அங்கும் சில தனது படை வீரர்களை நிலைகொள்ளச் செய்தான். ஆயினும் குறுகிய காலப்பகுதியில் ஆங்கிலேயர்கள் மீளவும் இதனைக் கைப்பறியதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலைகளில் பண்டாரவன்னியன் 1803ஆம் ஆண்டு கற்சிலை மடுவில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

இதனை நன்கு அறிந்த ஆங்கிலேயத் தளபதி கப்டன் டிறிபேர்க்கின் தலைமையிலான ஆங்கிலப் படைகள் கி.பி. 1803ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 31ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் மன்னாரில் இருந்து கற்சிலைமடுவுக்கு வந்து கடுமையான தாக்குதல்களைக் தொடுத்தன. சற்றும் எதிர்பாராத பண்டாரவன்னியனும் அவன் சார்ந்த படைகளும் இதனால் அதிர்ச்சியடைந்தன. இச்சண்டையிலே பண்டாரவன்னியன் தனது இரு கரங்களிலும் வாளேந்திக் கடுமையாகப் போரிட்டாலும் அவன் கற்சிலைமடுவில் வீரமரணடைந்தான். பண்டாரவன்னியனை போரிலே தோற்கடித்தமைக்கு கப்டன் டிறிபேர்க்கிற்கு பண்டாரக்குளம் பரிசாக வழங்கப்பட்டது. பண்டாரவன்னியன் இம்மண்ணிலே மரணித்தாலும் ஒவ்வொரு தமிழர்களது மனங்களிலும் அவன் ஓர் வீரனாக வாழ்ந்து வருகின்றான் என்பதனை எவராலும் மறுக்க முடியாது.

ஒரு சமூக போராட்டமோ ஒரு இனத்தின் போராட்டமோ மழுங்கடிக்கப்படுவது அவ்வினத்தினரிடையே காணப்படும் அறியாமையால் . வரலாறு இதற்க்கான விடைகளை படைக்கிறது . தனது  சமூகத்தின்/இனத்தின்  வரலாற்றை அறியாதவன் சமூகம் நிச்சயம் சிதையும் .

இதில் எந்த போராட்டம் சரி என்பதோ அல்லது எதையுமோ ஆதரித்து எழுதவில்லை . இருந்த வரலாற்றை ஆவணங்களுடன் சமர்ப்பிக்கிறேன் .

வீரம் விளைந்த மண்ணின் மன்னன் பண்டார வன்னியன் பற்றி விரிவாக அறிந்தால் தமிழர் பூமி , அவர்களுக்கு தனியொரு உரிமைகளுடனான இடம் இலங்கையில் இருந்தமைக்கான ஆவணங்கள்  கிடைக்கும் .

மன்னன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவில் இருந்து வற்றாப்பளை அம்மன் கோவில் வரை உள்ள 2000 சதுர மைல் நிலத்தை ஆட்சி செய்து வந்தான் . தனது சகோதரர்களை முக்கிய பதவிகளில் வைத்து ஆட்சி செய்து வந்தான் . தனது தம்பி கைலாய வன்னியனை அமைச்சராகவும் தனது இறுதி சகோதரன் பெரிய மன்னரை தளபதியாகவும் வைத்திருந்தான். அதே நேரம் காக்கை வன்னியன் எனும் மன்னன் வன்னியின் இன்னொரு நிலப்பரப்பை ஆண்டு வந்தான் .

ஒல்லாந்தர்  எமது நாட்டை கைப்பற்ற வந்த போதே தமிழர் ஆட்சி இங்கு இவ்வாறு நிலவியது என்பதை அவர்களின் சிலர் எழுதிய குறிப்பு  ஏடுகளில் காணலாம் . முக்கியமாக மேலைத்தேயர்கள் இலங்கையை கைப்பற்ற காரணம் கடல் வளங்களும் , வணிகமும் , மண் வளங்களையும் பார்த்து மோகம் கொண்டதே . முக்கியமாக இயற்க்கை வளம் கொண்ட திருகோணமலை துறைமுகம்(ஆசியக்கண்டத்தின் திறவுகோல் ) பிரச்சனைகளின்  அடிப்படை எனலாம் . இவற்றுள் மாதோட்டம் துறைமுகமும் ஒன்று .

புவியியலாளர் தொலமி (உலக  வரைபடத்தை முதன் முதலாக வரைந்தவர் ) இலங்கையில் தமிழர் பூமியை தனியாக காட்டி  தமிழர் என்ற ஒரு இனம் அப்போது அந்த பிரதேசத்தில் இருந்ததாக் குறிப்பிட்டு உள்ளார் . வேறு எந்த இனமுமோ இருந்ததமைக்கான சான்று  இல்லை .


இது இவ்வாறு இருக்க மற்றைய பேரரசுகள் பல திருகோணமலைக்கு  ஆக  போரிட்டு மடிந்து போயின . கண்டிய மன்னனுக்கும் ஆங்கிலேயருக்கும்  இடையில்  சண்டை நடந்தது . அந்த நேரத்தில் மாபெரும் மன்னனாக இருந்த ஆங்கிலேயன் ராபர்ட் நொக்ஸ் கண்டிய மன்னனால் மூதூரில் (தற்ப்போது ) வைத்து சிறைப்பிடிக்கப்பட்டான் . பல வருடங்கள் சிறையில் கழித்த ராபர்ட் நொக்ஸ் ஒருவாறு சிறையில் இருந்து தப்பி அனுராதபுரப்பக்கமாக ஓடினான் . அனுராதபுரத்தை அடைந்தவுடன்  அங்குள்ள  மக்களையும்   ஆட்ச்சியையும் பார்த்து வியப்படைந்தான் . ஆட்சி  செய்த மன்னன் கைலாய வன்னியன் . 

மாவீரன் குலசேகரம் வைரமுத்து  பண்டார வன்னியனுக்கு நடந்தது என்ன ?

கண்டிய அரசனுக்கு  கீழ்ப்படியாது  ஆங்கிலேயருக்கு திரை வரி செலுத்தாது ஆட்சி செலுத்தி   வந்தவன் தான் மாவீரன் பண்டாரவன்னியன் . வழமை போல தமிழன் இடம் ஊறியுள்ள துரோகத்தன்மையை காட்டிய வரலாறு . வீரபாண்டிய  கட்டபொம்மன் போல ஒரு வரலாறு இங்கும் உண்டு .

பண்டாரவன்னியனுக்கு சகோதர்கள் ( கைலாய வன்னியன் , பெரிய மைனர் ) இருக்க சகோதரி நளாயினியும் இருந்தாள். நளாயினி தமது அவை புலவர் மீது காதல் கொண்டிருந்தாள் . மன்னன் காக்கை வன்னியன் ( இன்னொரு நிலப்பகுதி மன்னன் ) நளாயினி மீது காதல் கொண்டு எவளவோ கடிதங்களை பண்டாரவன்னியனுக்கு அனுப்பியிருந்தான் . பண்டாரவன்னியன் அதற்க்கு ஒன்றும் கூறவில்லை . இவ்வாறிருக்க புலவரும் நளாயினியும் காதல் கொண்டுள்ளதை கண்ட காக்கை வன்னியன் புலவருடன் போரிட்டான் . புலவர் மன்னனை வாளால் வென்று திருப்பி அனுப்பினான் . புலவனும் அரச குலத்தில் வந்ததை உணர்ந்த மன்னன் தனது சகோதரி காதலுக்கு சம்மதித்தான் .

இதை  மனதில் இருத்திக்கொண்டு இருந்த காக்கை வன்னியன் வெள்ளையர்கள் பண்டாரவன்னியன் மீது படை எடுத்து தோல்வி அடைவதை   உணர்ந்தான் . வெள்ளையர்களுடன்  சேர்ந்து சதி செய்து மன்னனை கொல்ல திட்டமிட்டான் . வழமை போல பாசாங்கு செய்து மன்னனிடம் மன்னிப்பு கேட்டு  தருணம் பார்த்து  ஆங்கிலேய படைகளிடம் சிக்க வைத்தான்

ஒருவனுக்கு அவனுக்கு பிடித்தவர்கள் உறவினர்கள் யார் வேண்டுமென்றாலும் சிலை வைக்கலாம் ஆனால் எதிரியாலேயே வைக்கப்பட்ட சிலை பண்டாரவன்னியன் சிலை .

பலமுறை படை எடுத்தும்  வெல்லப்படமுடியாத அவனை நிறைவில் ஆங்கிலேய தளபதி  ஆனையிறவு திருகோணமலை என மும்முனையிலும் இருந்து படை எடுத்து வந்து வென்றனர். இவ்வாறு வெல்லப்பட்ட அவனுக்கு ஆங்கிலேய தளபதியாலேயே சிலை வைக்கப்பட்டது .

1803/10/31 காலப் பகுதியில் அப்போது ஒட்டுசுட்டான் பகுதியாகவிருந்த  தற்போதைய கற்சிலைமடுப்பகுதியில் ஆங்கிலேயப் படைத்தளபதி கப்டன் "றிபேக்"என்பவனால் தோற்கடித்து கொலை செய்யப்பட்டார்.

இப்பொழுதும் கூட பண்டாரவன்னியனுக்காக அவரை கொலை செய்த ஆங்கிலேயராலேயே  வைக்கப்பட்ட நினைவு கல்  உள்ளது . ராபர் நொக்ஸ்  குறிப்பேட்டில் தான் வடக்காக  தப்பிச்சென்ற போது வயல்வெளிகளையும் எருதுகள் உழுவதையும் அங்குள்ள மக்கள் சிங்கள மொழியை பேசவில்லை என்றும் அவர்களுக்கு சிங்கள மொழியே தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் .

மேலும் அங்கு கயிலாய வன்னியன் ஆட்ச்சிசெய்த நாட்டை கயிலாய வன்னியன் நாடு என்றும் அவன் யாழ்ப்பாணத்தின் தெற்க்கு மற்றும் வன்னியின் கிழக்குப்பகுதியையும் ஆண்டு வந்ததாக அவரது  குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் . 

இதிலிருந்து காலம் காலமாக தமிழர் வாழ்ந்த பூமி. தமிழர் நாடு எதுவென தெளிவாக காணக்கூடியதாக  உள்ளது . இல்லாத ஒன்றை எவனும் கேட்கப்போவதில்லை .


1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் வன்னி ஒரு தனி மாவட்டமாகவே ஆக்கப்பட்டது.
வன்னியின் பாராள மன்ற உறுப்பினராக இருந்த திரு.சி.சுந்தரலிங்கம் அவர்கள் அடங்காப்பற்றின் பெருமையை எடுத்துக் கூறி இப்பிரதேசம் அடங்காப்பற்று ஆக விளங்க வேண்டுமென பாடுபட்டார். பல அபிவிருத்திகளையும் மேற்கொண்டார்.
1892ஆம் ஆண்டின் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் தாயக கோட்பாட்டு இயக்கத்தின் செயற்பாடுகள் தமிழர் வாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் அனைத்திற்கும் வியாபித்தன.
1983 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள இனக்கலவரம் வெடித்தது. இதன் பின்னர் இலங்கை அரசுக்கும் தமிழர் தாயகக் கோட்பாட்டு இயக்கத்திற்கும் இடையில் ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தது.
1987 ஆம் ஆண்டு கொழும்பரசின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய அரசு “அமைதிப் படை” என்ற பெயரில் படைகளை அனுப்பி இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதியில் தமிழர் வாழும் பிரதேசங்களை ஆக்கிரமித்தது.
1987 ஆம் ஆண்டு அமைதிப்படை என்ற பெயரில் வந்த இந்தியப் படையினர் தமிழர் தாயகக் கோட்பாட்டு இயக்கத்தினை அடிபணியச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் முறுகல் நிலை ஏற்பட்டது.
1987 இல் தமிழர் தாயகக் கோட்பாட்டு இயக்கம் தடைசெய்யப்பட்ட காரணத்தால் அதன் ஆயுதப்போராட்டப் பிரிவு தனது தலமையகத்தினை வன்னியின் முல்லைத்தீவுப்பிரதேசத்திற்கு மாற்றியது.
1987 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முல்லைத்தீவு வன்னிப் பிரதேசங்களில் தமிழர் தாயகக் கோட்பாடு இயக்க ஆயுதப் பிரிவினரை சல்லடை போட்டுத் தேடிய இந்தியப் படையினர் பெரும் தோல்வியை சந்தித்தனர்.
1989 இல் கொழும்பு அரசியல் தலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அமைதிப் படைகள் என்ற பெயரில் வந்த இந்தியப் படைகள் வாபஸ் பெறப்பட்டன.
தமிழர் தாயக கோட்பாட்டு இயக்க ஆயுதப் பிரிவினர் வன்னியில் தங்கியிருந்தனர். இதனால் இப்பிரதேசம் “வன்னிப் பெருநிலப்பரப்பு” என மாறியது.
1990 இல் வன்னியூடாகச் செல்லும் யாழ்ப்பாணம்-கண்டி
ஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டது.
யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்குமான போக்குவரத்துக்கள் கடல் மார்க்கமாகவும் ஆகாய மார்க்கமாக மட்டுமே நடைபெற்றன.
1990 ஆம் ஆண்டு தொடக்கம் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டதனால் வன்னி மீண்டும் இலங்கை ஆட்சிக்குட்படாத அடங்காப்பற்றாக மாறியது.
2000 ஆம் ஆண்டு வன்னியின் வட எல்லையில் இருந்த ஆனையிறவுக் கோட்டையை அடங்காப்பற்றிலிருந்த தமிழர் தாயகக் கோட்பாட்டு இயக்கம் தரைமட்டமாக்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
தமிழர் தாயகக் கோட்பாட்டின் ஆயுதப் பிரிவினர் எந்த நேரமும் அடங்காப் பற்றிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தை தாக்கக் கூடும் என இரங்கையரசு கருதியதால் ஆனையிறவிற்கு அப்பால் முகமாலையில் பாரிய இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டது. இது வரலாறு திரும்பியுள்ளதை நினைவூட்டுகிறது.
2002 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொழும்பில் அரசியல் தலமைகளின் மாற்றங்கள் ஏற்பட்டன.
நோர்வே நாட்டு அரசின் சமாதான முன்னெடுப்பு முயற்சியின் காரணமாக இலங்கை அரசிற்கும் தமிழர் தாயக கோட்பாட்டு இயக்கத்திற்கும் இடையே சமாதானத்தினை நோக்கிய ஓர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
2002ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் வன்னியூடாக செல்லும் யாழ்ப்பாணம்- கண்டி ஏ-9 நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது.
அந்நியர் ஆட்சி தொடங்கிய காலம் வரை எந்த ஆட்சிக்கும் உட்படாமல் இப்பிரதேசம் அடங்காப் பற்றாக இருந்ததது. பின்னர் ஏனைய மாவட்டங்களைப் போன்று போக்குவரத்துடன் கூடிய பிரதேசமாக மாறியிருந்தது. போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்ட பின்னர் இதுவொரு பெருநிலப்பரப்பாக(அடங்காப் பற்றாக) இருந்தது. மேற்குறிப்பிட்ட ஒப்பந்தத்தின் பெறுபேறாக தொடர்புகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் “வன்னி” என்ற வட்டத்துள் வந்தது.

No comments:

Post a Comment