COBA-MAYAN RUINS IN MEXICO
திலகா சுந்தரின் மெக்ஸிகோ டூர்... பீதியில் உறைய வைக்கும் ‘கோபா’ மாயன் கோவில் அனுபவங்கள்!
1. மனித வாழ்வில் சுற்றுலா மிகவும் அவசியம். இன்றைய வாழ்க்கை மிகவும் இயந்திரத்தனமாகிவிட்டது. செய்த வேலையையே திரும்ப, திரும்ப ஆண்டுக் கணக்கில் செய்வதால் சலிப்பும், மனச் சோர்வும் வந்து வாழ்க்கை நடை பிணமாகிவிட்டது போல் ஆகிவிட்டது. நமக்கு உற்சாகமும், புத்துணர்ச்சியும் பெருகுவதற்கு சுற்றுலாக்கள் மிகவும் அவசியம் ஆகும்.
2. கலை, மற்றும், பண்பாடு பரிமாற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் சுற்றுலா.
3. குடும்பத்தினருடன் சுமார் பதினைந்து முறை சுற்றுலா சென்றிருக்கிறேன்
4. என் பெயர் திலகா சுந்தர். நான் அமெரிக்காவில் வசிக்கிறேன். இரண்டு வருடங்கள் முன்பு, வட அமெரிக்காவின் தென் கோடியில் இருக்கும் மெக்ஸிகோ நாட்டிற்கு நானும், கணவரும் , மகனும் பயணமானோம். அங்கு ‘கேங்கூன்’ என்று அழைக்கப்படும் பெரு நகரத்தில் அழகிய கரீபியன் கடற்கரை ஒரத்தில் அமைக்கப்பட்டிருந்த உல்லாச விடுதியில் பத்து நாட்கள் தங்கியிருந்தோம். அது எங்கள் வாழ்வில் மறக்க இயலாத சுற்றுலா.
5. உலக கலை மற்றும் பண்பாடுகளை பார்ப்பதிலும், அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் உள்ளதால் கேங்கூனுக்கு அருகில் இருந்த ‘கோபா’ என்னும் இடத்தில் இருந்த மாயன் கோவிலுக்கு சென்று வந்த அனுபவத்தைத்தான் இங்கு எழுதுகிறேன்.
தற்சமயம் கோபா நகரத்தில் ((Coba) மக்கள் வசிக்கவில்லை என்றாலும் 100 BC காலத்தில் மிகப் பெரிய நகரமாக அது இருந்தது. மாயன் மன்னர்கள் இவ்விடத்தை ஆட்சி செய்தார்கள். அவர்கள் சிறிய கோணலான கண்களையும், பெரிய மூக்குகளையும், தடித்த உதடுகளையும் கொண்டவர்கள். இங்கு சுமார் 50,000 மக்கள் வசித்தார்கள். மாயன் மன்னர்களுக்குத் தங்கள் ஆட்சியையும், அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக, பக்கத்து நாட்டு மன்னர்களிடம் அடிக்கடி போர் புரிய வேண்டிய நிலை இருந்தது. ‘கோபா’ என்பதற்கு ‘காற்றடித்து அலை பிரளும் கடல்’ என்று பொருள். இதன் அருகே இன்றும் அழகிய ஏரிகள் உள்ளன
மாயன் கோவிலைப் பார்ப்பதற்கு மூன்று சக்கர வண்டியில் நாங்கள் பயணமானோம். வெண்ணிற மணல் பாதையில் சுமார் ஒரு மைலுக்கும் மேல் பயணம் செய்தது மகிழ்ச்சியைத் தந்தது. ஓங்கி, உயர்ந்து அடர்ந்து படர்ந்த கானகம் மிகப் பிரமாண்டமாக எழுந்து நின்று அந்த பிராந்தியத்தையே மூடியிருந்தது. மண்டையை பிளந்த வெயிலின் கொடுமையிலிருந்து, பெருங்குடையைப் போல காத்து நின்ற மரங்கள் எங்களுக்கு குளிர்ச்சியும், நிழலையும் தந்தன. பறவைகளின் இன்னிசை கீதங்கள் அந்த பிராந்தியம் முழுவதும் எதிரொலித்து சூழ்நிலையை சொர்க்கமாக்கிக் கொண்டிருந்தது. மாயன் கோவிலை நெருங்கினோம்! படிகள் மிகப் பிரமாண்டமாகத் தெரிந்தன.
நோஹாச் முல் (Nohoch Mul) என்று இந்த பிரமிடை அழைக்கிறார்கள். அதற்கு ‘பெரு மலை’ என்று அர்த்தம். யூகாட்டன் பெனிசுலாவில் உள்ள உயரமான பிரமிடு இதுதான். பூமியிலிருந்து வானத்திற்கு இணைப்பு ஏற்படுத்த கட்டப்பட்ட பாலம் போலத் தோன்றியது. இதன் உயரம் 136 அடிகள். கடும் வெயிலில் இவ்வளவு உயரம் ஏறமுடியுமா என்கிற சந்தேகம் வந்தது. இருந்தாலும் உச்சியில் என்ன இருக்கிறது என்று பார்க்கிற ஆர்வத்தில் துணிந்து ஏறி விட்டோம். படிகள் கரடு முரடாகவும், மிகவும் குறுகலாகவும் இருந்ததால் ஏறுவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது . பிடித்து ஏறுவதற்கு நடுவில் பெரிய வடக் கயிறு ஒன்று பிரமாண்டமாகத் தொங்கியது. பாதி தூரம் வந்ததும், நம்மால் முடியாது கீழே இறங்கி விடுவோம் என்று தோன்றியது. இருந்தாலும், ஒரு வழியாக முக்கி, முனகி, தம் பிடித்து மேலே வந்து சேர்ந்தோம். உச்சியில் மிகவும் குறுகிய கல் தளமும், சிறிய வாசலுள்ள சிறிய செவ்வக வடிவ கல் மண்டபம் (கோவில்) இருந்தது. கருவறை மண் மேடிட்டு வெற்றிடமாகக் கிடந்தது. வாசலின் மேல் உள்ள நிலையின் மீது தெய்வம் ஒன்று தலை கீழாக நின்று கொண்டிருந்தது. இரும்பு வேலிக் கதவின் மேலே 'DO NOT ENTER' என்கிற அறிவிப்பு பலகை தொங்கிக் கொண்டிருந்தது . அங்கிருந்து சுற்றிலும் பார்க்கையில்
மயிர்கூச்செறிந்தது. பூமிக்கும் வானத்திற்கும் நடுவே தொங்கிக் கொண்டு மரங்களின் மேல் பகுதியையும், சுற்றி இருந்த இடங்களையும் முப்பரிமாணத்தில் பறவைகள் பார்ப்பது போல பார்க்க முடிந்தது. உச்சியில் இருந்த தளம் மிகவும் குறுகியதாக இருந்ததால் ‘கரணம் தப்பினால் மரணம் “ என்கிறது போல கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்துவிட்டாலும் மேலிருந்து கீழே உருண்டு விடுவோம் என்கிற பயம் அடிவயிற்றிலிருந்து எழுந்து உடம்பை நடுங்க வைத்தது. அதோடு மாயன் மன்னர்கள் இந்த இடத்தில் நின்று கொண்டுதான் தங்கள் கடவுளுக்கு உயிர்ப் பலி ( நரபலி) செய்வார்கள் என்பது புத்தகங்களில் படித்தது தீடிரென்று நினைவுக்கு வந்தது. உச்சியில் இருக்கும் பலி பீடத்தில் பலியிடுபவர்களை மல்லாக்க, கீழ் நோக்கி வளைத்து படுக்க வைத்து அடிநெஞ்சில் (விலா எலும்புகள் முடியும் இடத்தில்) பிறை வடிவில் அறுத்து உள்ளிருக்கும் இதயத்தை பிடுங்கி எடுத்து சாமிக்கு காணிக்கையாக்குவார்கள். பிறகு தலையை கொய்து படிகளில் உருண்டோடச் செய்வார்கள். உடலையும் படிகளின் மீது வீசி எறிவார்கள்.
“அப்போகிலிப்டா” (Apoclypta) என்கிற மெல் கிப்ஸனின்ஆங்கிலப் படத்தில் இந்த காட்சிகள் சிறப்பாக காட்டப் பட்டிருக்கும். திகிலும், பிரம்மையும் கலந்த இனம்புரியாத உணர்வுகள் எங்களுக்குள்ளே போட்டி போட்டன. போரில் தோற்றுப்போன அரசன்தான் பெரும்பாலும் பலி கொடுக்கப்படுகிறான். மாதம் மும்மாரி மழை பெய்யவும் , பசி, பஞ்சம், வறுமை, பிணி முதலியவை நீங்கி நாடு செழிக்கவும்தான் இந்த பலி கொடுக்கப் படுகிறது! இறங்கும் போதும் மிகச் சிரமாக இருந்தது என்றாலும், ஏதோ வேறு உலகத்திற்கு போய் வந்த பிரமிப்பு நெடு நேரம் இருந்தது. இன்று வரையும் அப்படியேதான் இருக்கிறது!
இந்த பிரமிடுகளின் முன்பு (நமது ஊர் நடுகல் மாதிரி) ஸ்டீலா (stela) எனப்படும் கற் தூண்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. அவற்றில் மன்னர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டு, முக்கிய நிகழ்வுகள் தேதி வாரியாக பொறிக்கபட்டுள்ளன. இந்த கோவிலுக்கு தொடர்புடைய சிறிய பிரமிடுகளையும் ஆங்காங்கே பார்க்க முடிந்தது. ஆனால் அவற்றுள் நுழைய சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது.
இந்த பிரமிடுகளின் முன்பு (நமது ஊர் நடுகல் மாதிரி) ஸ்டீலா (stela) எனப்படும் கற் தூண்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. அவற்றில் மன்னர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டு, முக்கிய நிகழ்வுகள் தேதி வாரியாக பொறிக்கபட்டுள்ளன. இந்த கோவிலுக்கு தொடர்புடைய சிறிய பிரமிடுகளையும் ஆங்காங்கே பார்க்க முடிந்தது. ஆனால் அவற்றுள் நுழைய சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது.
(இதைத் தவிர மாயன் மக்கள் பந்து விளையாடும் இடங்களையும் பார்த்தோம். இரண்டு நீளமான கல் சுவர்கள் சாய்வாக கட்டப் பட்டிருக்கின்றன . அதில் கல் வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரப்பர் பந்தை அந்த வளையத்தினுள் குறி பார்த்து எறிந்து விளையாடுவார்கள். இந்த விளையாட்டில் தோற்றகின்ற அல்லது வெற்றி பெறுகின்ற அணித் தலைவனின் தலையைக் கொய்து இறைவனுக்கு பலியிட்டு படைப்பார்கள்! )
6. உலக நாடுகளுக்கெல்லாம் பயணித்து அவர்களின் கலை மற்றும் பண்பாடுகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற வேட்கை தோன்றியுள்ளது. சுற்றுலா சென்று வீடு திரும்பியதும் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் ஏற்படுகிறது. வாழ்க்கை உயிர்ப்புடன் ஓடுவதைப் போன்ற புத்துணர்ச்சியை உணர முடிகிறது.
7. சுற்றுலாக்களுக்கு திட்டமிடல் சில சமயங்களில் அவசியம். சில சமயங்களில் அவசியமில்லை. திட்டமிட்டு செல்லும் பயணங்களும் இனிமையாக இருக்கின்றன. திட்டமிடாமல் திடீர் என்று கிளம்பும் பயணங்களும் அதைவிடச் சுவையாயிருக்கின்றன.
8. தமிழகக் கற்கோவில்களை வியந்து பார்த்து ரசிப்பதுண்டு. அவற்றின் வரலாறுகள், மன்னர்களின் ஆட்சிமுறை, மக்களின் வாழ்க்கை முறை இவற்றை எல்லாம் புத்தகங்களில் படித்து வியப்பது உ ண்டு. நம் கலாச்சாரம் போலவே உலகின் பல பகுதிகளிலும் அவர்களுக்கென்றே பிரத்யேகமாக தனிப்பட்ட கலாச்சாரம், கோவில்கள், ஆட்சி முறை அமைந்திருப்பதை நேரில் பார்க்கும்போது அந்நாட்டையும் அவர்களின் பண்டைய கலாச்சாரங்களையும் மிகவும் மதிக்கத் தோன்றுகிறது. அவர்களின் ரசனைகள், படைப்பு உருவாக்கம் ஆகியவற்றைப் பார்க்கையில் வள்ளுவர் பெருமானின்
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்”
என்கிற குறள் நினைவுக்கு வருகிறது. மொழி, மத,இன வேற்றுமைகளைத் துறந்து எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளே என்று எண்ணுவதால் மனதில் அன்பு மிகுதியாகிறது.
கட்டுரையாளர் - திலகா சுந்தர்
No comments:
Post a Comment