Thursday 8 November 2018

கிருபானந்த வாரியாரின் வாழ்க்கை வரலாறு






கிருபானந்த வாரியாரின் வாழ்க்கை வரலாறு 

சிவசுப்ரமணியசுவாமி கோவில்  திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு மிகவும் பிடித்த கோவிலாக விளங்குகிறது, 
அவர் பல சொற்பொழிவுகளை நமது கோவிலில் நடத்தி இருக்கிறார், 
நமது குமாரசுவாமிபேட்டை இருக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒருவர் நமது கிருபானந்தவாரியார் சுவாமிகள்,

அவர் ஒரு சில சொற்பொழிவுகளை நானும் சிறுவயதில் பார்த்தும் மட்டும் கேட்டு இருக்கிறேன்,
என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது, 
அவர் தான் எனக்கு எனக்கு பெயர் சூடினார் என்பது இன்னும் எனக்கு பெருமையாக இருக்கிறது, 

அவர் சொற்பொழிவு என்றால் போதும் கூட்டம் அலைமோதும் கோவிலின் முன் , அவரின் சொற்பொழிவு கேட்பதற்கு மிகவும் 
அருமையாக இருக்கும்,





தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்து, மகிழ்ச்சியைச் சேர்த்து வழங்கும் தனித்திறன் அவருக்குண்டு. சின்னக் குழந்தைகளைக் கூட தன் பேச்சால் கவர்ந்து வயப்படுத்தி வைத்திருந்த மகான் இவர். இந்தியா மட்டுமில்லாது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் சிறப்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தி உலகத் தமிழர்கள் அனைவரது மனத்திலும் தனக்கென நீங்கா இடம் பெற்றிருந்தார் என்றால் அது மிகையில்லை,

"அருள்மொழி அரசு" என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட கிருபானந்த வாரியார்,

பிறப்பும் கல்வியும்:
வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேயநல்லூர் எனும் கிராமத்தில் செங்குந்த வீர சைவ மரபில் வந்த மல்லையதாசர் - கனகவல்லி தம்பதியருக்கு மொத்தம் பதினோரு குழந்தைகள் பிறந்தன. இவற்றுள் 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் கிருபானந்த வாரியார். இவருக்கு, இசையாலும், புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த மல்லையதாசர்,முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான “கிருபானந்த வாரி” எனும் பெயரைச் சூட்டினார்,அன்னையார் கனகவல்லி அம்மையார்,

“கிருபை” என்றால் கருணை என்றும், “ஆனந்தம்” என்றால் இன்பம் என்றும், “வாரி” என்றால் பெருங்கடல் என்றும் பொருள். இவர் பெயருக்கேற்ப கருணையே உருவாக, பிறரை தன் சொற்பொழிவால் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பெருங்கடலாகத் திகழ்ந்தார். தமிழ் இலக்கியத்திலும், ஆன்மிகத்திலும் தனித் திறன் பெற்றிருந்த இவருக்கு இவர் தந்தைதான் ஆசான். 

* இவருடைய தந்தையார் இவருக்கு மூன்றாம் வயதிலிருந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். 

* எட்டு வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்ற இவர் தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் அவர் மனப்பாடம் செய்துவிட்டார். கற்றறிந்த புலவருக்கே கடினமாக இருக்கும் அஷ்டநாக பந்தம், மயில், வேல், சிவலிங்கம், ரதம் முதலான பந்தங்கள், சித்திரக் கவிகள் முதலியவைகளை இயற்றினார்,

தமிழோடு தவழ்தல்:
வாரியாருக்கு மூன்று வயது முடிகின்றபோதே அவருடைய தந்தையார், குருவாக இருந்து எழுத்தறிவித்தார். பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டிலேயே பாடங்களைக் கற்பித்தார். 


வாரியாருக்கு மூன்று வயது முடிகின்றபோதே அவருடைய தந்தையார், குருவாக இருந்து எழுத்தறிவித்தார். பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டிலேயே பாடங்களைக் கற்பித்தார். 

நன்னூல் முதலான இலக்கண நூல்களையும்,
தேவாரம்
நளவெண்பா
ஒளவையாரது நூல்கள்
திருப்புகழ்க் கீர்த்தனைகள்
முதலானவற்றையும் பாடம் சொல்லி, மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கச் செய்தார். வரலாற்றுப் பாடல்களையும் கற்பித்தார்.



பன்னிரண்டு வயது நிரம்பியபோதே

தேவாரம்
திருப்புகழ்
திருவருட்பா
கந்தபுராணம்
கம்பராமாயணம்
வில்லிபாரதம்
முதலான நூல்களில் பதினாயிரம் பாடல்கள் மனப்பாடம் ஆகிவிட்டதென்றும், அது தான் தம் வாழ்நாளில் அமைந்த பெருஞ்செல்வம் என்றும் வாரியார் குறிப்பிடுவார்.
இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்,

இசை பயணம்:


வாரியார் இளைஞனாக இருந்தபோது, அவருடைய தந்தையார் ஒரு நவராத்திரி விழாவில், மைசூருக்கு அவரை அழைத்துச் சென்று வீணை சேஷண்ணாவிடமிருந்து ஒரு வீணை வாங்கிக் கொடுத்தார். பின்னர் சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் ஓர் இசை ஆசிரியரிடம் வீணை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார். தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். அவருடைய சங்கீத ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்ற வெள்ளி விழாவின் போது "இசைப் பேரறிஞர்" பட்டம் வழங்கி கெளரவித்தார்கள்.

தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது "ஆன்மிக மொழி" பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும், சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. பண்டிதர் முதல் படிப்பறிவில்லாதவர் வரை அனைத்துத் தரப்பினரும் அவருடைய பிரசங்கங்களை செவிமடுத்து மகிழ்ந்தனர். சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர். அற்புதமான நினைவாற்றலும், நாவன்மையும் பெற்றவர். அவர் கூறும் நுட்பங்களைக் கேட்டு "இதுகாறும் இதனை அறிந்திலமே" என்று கல்வியில் சிறந்த புலவர்களும் வியந்து பாராட்டினார்கள்.

"வாரியார் வாக்கு கங்கை நதியின் பிரவாகம் போலப் பெருக்கெடுத்தோடுகிறது; மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன" என்று அறிஞர்கள் புகழ்ந்தார்கள். மழையை நாடியிருக்கும் சகோரப் பறவைபோல அவரது பிரசங்கத்தைக் கேட்டு இன்புறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பார்கள்.

சொற்பொழிவாளர்:



இசை மற்றும் புராணச் சொற்பொழிவாற்றி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தை மல்லையதாசர் ஒருநாள் சொற்பொழிவு ஒன்றுக்குப் போக முடியாத நிலை,
 தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியார் சென்றார். சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், “மல்லையதாசர் சொற்பொழிவிற்கு வருவதாக ஒத்துக் கொண்டு, தான் வராமல் இளம் வயது மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே” என்று வருத்தப்பட்டனர். வாரியார் அன்று முதன் முதலாக செய்த சொற்பொழிவைக் கேட்டவர்கள் அசந்து போய்விட்டனர். இந்த இளம் வயதில் இவ்வளவு அனுபவமா? என்று அவருடைய சொற்பொழிவைக் கேட்டவர்கள் மகிழ்ந்து போனார்கள். பதினெட்டு வயதில் சொற்பொழிவைத் தொடங்கிய வாரியாரின் பேச்சு, எளிமையான உரைநடையில் இருந்ததால் அதைப் படிப்பறிவே இல்லாதவர்கள் கூட எளிமையாகப் புரிந்து கொண்டார்கள். சிறுபிள்ளைகள் கூட இவருடைய சொற்பொழிவு என்றால் கேட்க விரும்புவார்கள். அவ்வளவு எளிமையாக இருக்கும். சொற்பொழிவில் அதிகமான நகைச்சுவைகள் அர்த்தத்துடன் இருக்கும். 


பொதுவாக இவர் சொற்பொழிவாற்றும் கூட்டங்களில் சிறுபிள்ளைகள் முன் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். சொற்பொழிவின் இடையிடையே எளிமையான கேள்விகளைக் கேட்பார். அந்தக் கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்கும் சிறுபிள்ளைக்கு விபூதியும், சிறிய கந்தசஷ்டிக் கவசப் புத்தகம் ஒன்றும் பரிசாக அளிப்பார். இந்தப் பரிசைப் பெற சிறுவர்களுக்கிடையே ஆர்வம் அதிகமிருக்கும். இதற்காக முன் வரிசையில் இடம் பிடிக்கப் போட்டியும் இருக்கும். முன் வரிசையில் இடம் பிடித்து வாரியார் கேட்ட கேள்விக்குப் பதிலளித்து சில முறை (தாத்தா சொல்லி) சிறிய கந்தசஷ்டி கவசம் புத்தகத்தை வாரியாரிடமிருந்து பரிசாகப் பெற்றிருக்கிறேன்,

வாரியார் சொற்பொழிவில் கூட்டம் கலைவது என்பது குறைவாகவே இருக்கும். கலையும் அந்தக் குறைவான கூட்டத்தையும் தக்க வைக்கும் கலையையும் அவர் கற்றிருந்தார்.

வாரியார் ஒரு சமயம் ஒரு ஊரில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்த போது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ''ராமாயணத்தில் அனுமனை “சொல்லின் செல்வர்” என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார்.

போய்க் கொண்டிருந்தவர்கள் யாரைச் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர்.

வாரியார் தொடர்ந்து, ''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .'' என்றார்.

இடையில் எழுந்து சென்ற அவர்கள் மீண்டும் அவர்கள் இடத்திற்கு வந்தமர்ந்தனர்.

படைப்புகள் :



சுவாமிகள்,
திருமுருகாற்றுப்படை
திருவாசகம்
தேவாரம்
திருப்புகழ்
கந்தர் அலங்காரம்
கந்தர் அநுபூதி
வேல் விருத்தம்
மயில் விருத்தம்
திருவகுப்பு
திருவருட்பா
முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களை, பாடல் வரிகளை தம்முடைய சொற்பொழிவுகளில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவார். சபையினர் மெய்மறந்து கேட்டுப் பரவசமடைவார்கள். அவருடைய சொற்பொழிவுகளின் நாடக பாணி அனைவரையும் கவரும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும். அவருடைய பிரசங்கங்களால் மக்களுக்கு தெய்வ நம்பிக்கை அதிகமாயிற்று. நாத்திகம் தளர்ந்தது; மக்களிடையே உயர்ந்த மதிப்பீடுகள் உருவாகின.

வாரியார் சுவாமிகள் நிகழ்த்தி வந்த திருப்புகழ் விரிவுரைகளைச் செவிமடுத்து இன்புற்ற மக்கள் திருப்புகழ் விரிவுரையை நூலாக எழுதி உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். சுவாமிகள் 1936ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து "திருப்புகழ் அமிர்தம்" என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி "கைத்தல நிறைகனி" என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது. சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார்.

அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின. திருப்புகழ் அமிர்தம் என்ற பத்திரிகை பலருடைய வாழ்க்கையைத் திருத்தியிருக்கிறது என்று வாரியார் சுவாமிகள் எழுதியுள்ள தமது வரவாற்றில் சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறார். வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் வரைந்துள்ளார். அவையாவும் இலக்கியத்தரம் வாய்ந்தவை மட்டுமன்றி, தெள்ளத் தெளிந்த நீரோட்டம் போன்ற நடையில் அமைந்தவை.

அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள்,

சிவனருட்செல்வர்
கந்தவேள் கருணை
இராமகாவியம்
மகாபாரதம்
ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.

கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்பதை உணர்ந்து நாம் நம் குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்" என்ற நூலை அவர் படைத்தார். 20ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அருணகிரிநாதராக விளங்கியவர் பாம்பன் சுவாமிகள், அவர் கடுந்துறவி. சண்முகநாதனை மும்முறை நேரில் தரிசித்த மகான். சென்னை நம்புல்லையர் தெருவில் மேல்மாடியில் ஒரு கீற்றுக் கொட்டகையில் பாம்பன் சுவாமிகள் வீற்றிருந்த சமயம், வாரியார், சுவாமிகளை அங்கு தரிசனம் செய்தார். வாரியார் சுவாமிகள் ஒரு முறை விரிவுரை செய்வதற்காக திருநாரையூர் சென்றிருந்தபோது, விடியற்காலை பாம்பன் சுவாமிகள் தம்முடைய கனவில் தோன்றி சடக்கரமந்திரம் உபதேசம் செய்ததாகத் தம் வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியுள்ளார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.

கவிதை
கட்டுரை
கதை
காவியம்
ஆகியவை இலக்கியத்தின் கூறுகள் என்றும், காலத்தை வென்று நிற்பவை அனைத்தும் இலக்கியங்களாகவே கருதப்படும் என்றும், மனத்தைப் பண்படுத்துவதன் மூலமாக மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதே இலக்கியத்தின் தலையாய நோக்கம் என்றும் அறிஞர் கூறுவர்.

மக்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் தகைமை உடையன ஆதலால் சான்றோர்கள் செய்யும் பிரசங்கங்களும், உபந்யாசங்களும் கூட இலக்கியத்தின் பாற்பட்டவையே எனலாம்.

தாமே சிவாகம விதிப்படி தீட்சை பெற்றுக் கொண்டதுமன்றி, பக்குவப்பட்ட பிறருக்கும் தீட்சை அளித்தமையால்,
ஞானாசிரியராகவும்
மிகச்சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளராகவும்
பத்திரிகை ஆசிரியராகவும்
பல பாராயண நூல்களுக்கு விளக்கவுரை எழுதிய உரையாசிரியராகவும்
கட்டுரை ஆசிரியராகவும்
சிறுகதை எழுத்தாளராகவும்
அரிய பனுவல்கள் பல இயற்றியுள்ள நூலாசிரியராகவும்
விளங்கியமையால் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், இந்திய இலக்கியச் சிற்பிகளுள் சிறந்த இடம் பெறுகிறார் என்பது வெள்ளிடை மலைபோலத் தெள்ளிதின் விளங்கும்,







No comments:

Post a Comment