Thursday 8 November 2018

THE HISTORY OF SABARIMALAI AYYAPPAN






THE HISTORY OF 
SABARIMALAI AYYAPPAN



சபரிமலை :

ராமனின் அருளைப் பெறுவதற்காக தவமிருந்த சபரி என்கிற கன்னிப் பெண்ணின் நினைவாகவே சபரிமலை எனப் பெயர் பெற்றது. பெரியாறு புலிகள் சரணாலயம் அமைந்துள்ள அந்த அழகான மலைகளின் மீதுதான் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது.

முந்தைய காலங்களில் மலைவாழ் மக்களின் காவல் தெய்வமாக விளங்கிய அய்யனார், பின்னர் 15-ம் நூற்றாண்டு வாக்கில் ஒரு சிறிய அய்யப்பன் கோவிலாக உருவானது.

அய்யப்பன் அரச குடும்பம் ஒன்றைச் சேர்ந்த இளவரசன் என்கிறது புராணக் கதைகள். பின்னர் கடுமையான தவங்களின் மூலம் அருள் பெற்று நால் வர்ணங்களுக்கு வெளியில் உள்ள சாதிகளால் வணங்கப்படும் அளவுக்கு ஆற்றல்களைப் பெற்றார் என்கின்றன அந்தக் கதைகள்.

தினசரி பூசை புனஸ்காரங்கள் ஏதும் செய்யப்படாமல் அடர்ந்த காடுகளுக்குள் அமைந்திருந்த இந்தக் கோவிலுக்கு வருடம் ஒரு முறை மகர சங்கரமனா எனும் சடங்கிற்காக (ஜனவரி-பிப்ரவரி மாதங்களில்) மலைப் பண்டாரம், உள்ளத்தார், மன்னன், நரிக்குறவர் போன்ற மலைவாழ் மக்கள் வருவதுண்டு. மேலும் தமிழ்நாட்டில் இருந்து சில பக்தர்களும் வந்து போவதுண்டு. பந்தளம் அரச குடும்பத்தால் நியமிக்கப்பட்ட பூசாரி ஒருவர் அந்த நாட்களில் பூசைகள் செய்து வந்துள்ளார்.


பின்னர் பந்தளம் அரச குடும்பம் திருவாங்கூர் அரசிடம் சரணடைந்ததை அடுத்து, இந்தக் கோவில் 1810-ல் வெள்ளை அதிகாரி கலோனல் முன்றோவின் அறிவுரைப்படி ராணி லட்சுமி பாயால் (1810-1815) உருவாக்கப்பட்ட திருவாங்கூர் தேசஸ்வம் கமிசனின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

வெள்ளமாய்ப் படையெடுத்த பக்தர்கள் !
சில வன ஆக்கிரமிப்பாளர்கள் ஜூன் மாதம் 1950-ம் ஆண்டு சபரிமலைக் கோவிலுக்கு தீவைத்து சிலையைச் சேதப்படுத்தினர். கோவிலுக்கு பக்தர்கள் வருகை வழக்கம் போல் தொடர்ந்து கொண்டிருந்தாலும், ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு கோவிலின் சேதம் சரி செய்யப்படவில்லை.

திருவிதாங்கூர் ராஜ்ஜிய தேவசம் கமிசன் (TRDC) கலைக்கப்பட்டு 1950-ல் உருவாக்கப்பட்ட திருவாங்கூர் தேவசம் போர்டு (TDB) என்கிற புதிய அமைப்பு பின்னர் ஒரு புதிய கோவிலைக் கட்டியது. அதன் பின் பக்தர்கள் வருகை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே சென்றது.

பதினெட்டாம் படி அருகே குவிந்து இருக்கும் பக்தர்கள்.
ஒரு சில ஆயிரங்களாக இருந்த பக்தர் கூட்டம், 70-களிலும் 80-களிலும் பல்லாயிரமாக அதிகரித்து, பின்னர் லட்சங்களைத் தொட்டு, இன்றைய நிலையில் ஏறக்குறைய நாளொன்றுக்கு 50 லட்சம் பக்தர்கள் வருமளவுக்கு கூட்டம் அதிகரித்துள்ளது. எனினும், நாளொன்றுக்கு ஒரு கோடி பக்தர்கள் வருவதாக கொஞ்சம் ஊதிப் பெருக்கிச் சொல்கிறது தேவசம்போர்டு.

பக்தர்களின் வருகை அதிகரித்ததற்கு ஏற்ப, கோவிலின் வழிபாட்டு நாட்களும் அதிகரித்துள்ளன. இன்றைய நிலையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 133 நாட்கள் கோவில் திறந்து வைக்கப்பட்டு 1431 மணி நேரங்கள் தரிசனத்திற்காக நடை திறக்கப்படுகின்றது. ஒரே நேரத்தில் 10 பக்தர்களை ஒரு நொடி நேரத்திற்கு தரிசனம் செய்ய அனுமதிப்பதென்றால், பக்தர்களின் மொத்த தொகை 51,51,600 ஆக இருக்கும். பக்தர்களை கருவறைக்கு முன் நீண்ட நேரம் தரிசிக்க விடுவதும் சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக தற்போது தென்னிந்தியா எங்கிலும் இருந்து ஏராளமான நடுத்தர வர்க்க பக்தர்கள் வந்து குவிகின்றனர். இதன் காரணமாக தங்கமாகவும் பணமாகவும் ஏராளமான காணிக்கைகள் குவிகின்றன. இந்தப் போக்கில் முன்னொரு காலத்தில் பழங்குடிகளாலும் பார்ப்பனிய சாதி அடுக்குகளுக்கு வெளியில் இருந்தவர்களாலும் கட்டுப்படுத்தப்பட்ட கோவில், தற்போது பார்ப்பனிய சாதிகளாலும் அவர்களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் நிறுவனங்களாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது. பக்தர்களின் சேத்திராடனம் என்பதைக் கடந்து அரசால் கட்டுப்படுத்தப்படும் பல்லாயிரம் கோடி வியாபார சாம்ராஜ்ஜியமாக உயர்ந்து நிற்கிறது.

கண்டுபிடிக்கப்பட்ட சடங்குகள் !

பத்திலிருந்து ஐம்பது வயது வரையிலான பெண்களின் நுழைவுக்கு எதிரான தடை 1991ல் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. அதாவது பெண்களின் மாதவிலக்கின் காரணமாக அவர்களால் 41 நாட்களுக்கு புனிதத் தூய்மையை கடைபிடிக்க முடியாது என்பதும், அய்யப்பன் ஒரு பிரம்மச்சாரி என்பதால் பெண்களை விரும்ப மாட்டார் என்பதுமே இந்த தீர்ப்பிற்கான முகாந்திரம்.

எனினும், இந்த தடைக்கு அறிவியல் பூர்வமான விளக்கமோ, சடங்குப்பூர்வமான புனிதக் காரணங்களோ ஏதும் இல்லை.பார்ப்பனிய சாதிகள் மாதவிலக்கை அசுத்தமானதாகக் கருதுவதும், அந்தக் காலங்களில் பெண்களை கோவில்களுக்கு அனுப்பாமல் இருப்பதும் உண்மை தான். ஆனால், மாதவிலக்கு என்பது பழங்குடிகளைப் பொறுத்தவரை புனிதமானது மட்டுமின்றி செழிப்பின் குறியீடு.

அவர்கள் எல்லா வயதுப் பிரிவையும் சார்ந்த தங்களது பெண்கள் மற்றும் குழந்தைகளோடு 60-கள் வரை இந்தக் கோவிலுக்கு வந்துள்ளனர். அதே போல் திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த பார்ப்பனிய சாதிகளைச் சேர்ந்த பெண்களே கூட 80-களின் போது இக்கோவிலுக்கு வந்துள்ளதற்கு ஆவணப்பூர்வமான சான்றுகள் உள்ளன.

ஆகமப்பூர்வமான பாரம்பரியத்தை அதிகம் கொண்டிராத கருநாடகாவைப் பூர்விகமாக கொண்ட தாழமோன் என்கிற குலத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலின் மீதான கட்டுப்பாட்டை நிலைநாட்டிக் கொண்டனர்.

சமீப காலம் வரை சபரிமலைக் கோவிலில் நம்பூதிரி பார்ப்பனர்களால் கட்டுப்படுத்தப்படும் பிற கோவில்களில் பின்பற்றப்படுவதைப் போல் பார்ப்பனிய வேதங்களை அடிப்படையாக கொண்ட ஆகம விதிகள் பின்பற்றப்படவில்லை. எனவே காட்டுக்குள் இருக்கும் கீழ்த்தர சாமிகள் எனக் கருதப்பட்ட அய்யப்பன், கருப்பசாமி போன்ற தெய்வங்களை வைதீக நடைமுறைப்படி அஷ்டபந்தன (எட்டு சடங்குகள்) முறையில் பிரதிஷ்ட்டை செய்யத் தேவையில்லை என்பதே நம்பூதிரி தந்திரிகளின் கருத்தாக இருந்து வந்தது.

அனைத்து சிறுதெய்வங்களையும் உட்செரித்து தனது சடங்குகளை புகுத்துகிறது பார்ப்பனியம்.
பதினெட்டு மலைகளைத் தனது எல்லையாக கொண்ட அய்யப்பன் கோவிலில் வைதீக முறைகளைப் பின்பற்றப்படுவதை எந்த நம்பூதிரிக் குடும்பமாக இருந்தாலும் எதிர்த்திருக்கும். வைதீக பாரம்பரியம் ஏதுமற்ற – தென் கருநாடகத்த்தின் பொட்டி குடும்பத்தைப் பூர்வீகமாக கொண்ட – தாழமோன் குடும்பத்தினரிடம் கோவிலின் உரிமை வழங்கப்பட்டது தற்செயலானது அல்ல.

கோவிலைப் பற்றிச் சொல்லப்படும் பெரும்பாலான புராணக் கட்டுக்கதைகளும், வழக்கங்களும் சமீபத்திய உருவாக்கங்கள் தாம். சடங்குகளின் பாரம்பரியம் எனப்படுவதில் எதுவும் நிரந்தரமானது கிடையாது. எல்லா பாரம்பரிய வழக்கங்களையும் என்னதான் நாம் காலங்களைக் கடந்தது என்று சொன்னாலும், புதிய புரிதலுக்கும், புதிய சூழலுக்கும் தக்கவாறு மாறித்தான் வந்துள்ளன. உலகப் பொது வழக்கமான இந்த சமூக நடைமுறைக்கு சபரிமலையின் பாரம்பரியங்கள் மட்டும் எந்தவிதத்திலும் முரணானது அல்ல.

பார்ப்பனிய மேலாதிக்கம் !
புதிய நடைமுறைகளைப் பொறுத்தவரை குறிப்பான போக்காக காணப்படுவது என்னவென்றால், பார்ப்பனிய கண்ணோட்டத்தில் சிலவற்றை அல்லது சிலரை தள்ளி வைப்பதும், வேறுபடுத்திப் பார்க்கும் வழக்கமும் திட்டமிட்ட ரீதியில் புகுத்தப்பட்டது தான்.

இதன் காரணமாக மிகக் கடுமையான கானகப் பயணத்தின் போது பக்தர்களிடையே நிலவிய ஒற்றுமையும் சகோதரத்துவமும் நீர்த்துப் போகின்றன. அதே போல் தற்போது மதச்சார்பின்மையின் குறியீடாக விளங்கி வந்த அய்யப்பனுக்கும் அவரது இசுலாமியத் தோழர் வாவர் சாமிக்கும், அர்த்துங்கல் கிறிஸ்தவ தேவாலயத்துக்குமான தொடர்பை அறுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

பார்ப்பனியவாதிகள் சபரிமலை பக்தர்களிடையே சாதி-மத-இன பேதமின்றி நிலவி வந்த நெகிழ்வுத் தன்மையையும், கூட்டுறவையும் அழித்தொழிப்பதற்கு முயல்கின்றனர்.

எரிமேலியில் உள்ள வாவர் சாமியின் மசூதிக்கு பக்தர்கள் சென்று வழிபடும் காட்சி.
சபரிமலை என்பது எல்லா சாதிகள், பிரிவுகள் மற்றும் மதங்களுக்கானது என்கிற வழக்கம் திட்டமிட்ட ரீதியில் புதிய விதிகள் மற்றும் ’மரபுகளின்’ மூலம் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது. தங்களது பாதயாத்திரையின் ஒரு பகுதியாக எரிமேலியில் உள்ள வாவர் சாமியின் மசூதிக்கு பக்தர்கள் சென்று வழிபடுவார்கள். பல பக்தர்கள் அர்த்துங்கள் கிறிஸ்தவ தேவாலயத்துக்கும் சென்று வழிபடுவதுண்டு.

இது போன்ற பொதுத்தன்மைகளும், வேறு சில வழக்கங்களும் அய்யப்ப பக்தி என்பது பௌத்த மத பாரம்பரியத்தையும் தன்னகத்தே உள்ளடக்கியது என்பதாக காட்டுகின்றது. எனினும், “தர்ம சாஸ்தா” என்று அழைப்பதைக் கொண்டோ, சரண கோஷங்களைக் கொண்டோ, பிரம்மச்சரியத்திற்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தைக் கொண்டோ மட்டும் இந்நம்பிக்கை முழுவதற்கும் பௌத்த பாரம்பரியத்தை சாற்ற முடியாது.

ஏனெனில், தர்ம சாஸ்தா என்பது சமீபத்திய வார்த்தைப் பிரயோகம்; அதே போல் சரண கோஷம் என்பதை பௌத்த சங்கத்தின் இணைவதை உணர்த்தும் சரண கோஷத்தோடு இணை வைத்துச் சொல்ல முடியாது. போலவே இந்த கோணத்தை உறுதிப்படுத்தும் தொல்லியல் ஆதாரங்களும் கிடையாது.

மேலும் பௌத்த மடாலயங்கள் பாறைப் பகுதிகளிலும், குறிப்பாக வணிகப் பாதைகளிலும் அமைந்திருக்கும். சாஹ்ய மலையில் வீற்றிருக்கும் நீலகண்டர் எனும் போதி சத்வர் குறித்த கர்ண பரம்பரைக் கதையைக் கொண்டு அவரோடு அய்யப்பனைத் தொடர்புபடுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் அதை உறுதிப்படுத்தவில்லை. மேலும், பௌத்த சிற்ப கலையின் தாக்கம் ஏதும் அய்யப்பனின் உருவத்தோடு ஒத்துப் போகவில்லை.

நீதிமன்றத் தீர்ப்பு !
புலிகளின் சரணாலயமாய் விளங்கும் அந்தக் காட்டின் சூழல் மற்றும் அதைப் பாதுகாக்கும் விதிமுறைகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டு பக்தர்களின் வசதிக்காக எனும் பெயரில் நவீன நகரக் கட்டுமானங்களை ஏற்படுத்தக் கோரி வருகின்றது தேவஸ்வம் போர்டு.

சபரிமலை பெண்கள் நுழைவு விசயத்தில் மட்டுமல்ல, சுற்றுசூழல் குறித்த தீர்ப்புகளிலும் கூட நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை கோவில் நிர்வாகம்.
இதன் காரணமாக கேரள வனச் சட்டம் 1961, வன உயிர்கள் பாதுகாப்புச் சட்டம் 1972 மற்றும் வனப் பாதுகாப்புச் சட்டம் 1980 ஆகியவற்றை மீறி காடுகளை அழிக்கப்பட்டும், வன நிலங்களை ஆக்கிரமிக்கப்பட்டும் வருகின்றது. நீதிமன்றத் தீர்ப்புகளை மீறுவது சபரிமலைக்குப் புதிதல்ல. சொல்லப் போனால், பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உட்பட பல நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்பட்ட இடம் அது.

கோவிலின் சந்நிதானம் கட்டப்படுவதற்கு எதிராக பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. துணை நீதிமன்ற உத்தரவு WP(C) எண் 202/95, WP(C) 212/2001 மற்றும் அக்டோபர் 24, 2005 தேதியிட்ட மத்திய அரசு உத்தரவு கடித எண் F.No.8-70/2005-DC, மாநில அரசு உத்தரவு GO(Rt) 594/05/F7WLD (31-10-2005), மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவு I.A No 1373 (No 202 of 1995) உள்ளிட்டவை வன நிலங்கள் வேறு பயன்பாட்டிற்கு ஒதுக்கப்படுவதற்கு எதிரானவை.

தேவசம் போர்டின் கண்மூடித்தனமான வளர்ச்சித் திட்டங்களால் மத்திய வனத்துறை அமைச்சகம் திட்டம் ஒன்றை உருவாக்கியது. உச்ச நீதிமன்றத்தினால் அது அமல்படுத்தப்பட்டது. எனினும், உச்ச நீதிமன்றம் சந்நிதானத்தைச் சுற்றி கட்டப்பட்டிருக்கும் விருந்தினர் விடுதிகள் உள்ளிட்ட கட்டுமானங்களை இடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி கூடுதலாக கட்டிடங்கள் கட்டவும் தடை உள்ளது.

சந்நிதானத்தைச் சுற்றியுள்ள நிலங்களையும் லீசுக்கு பெறப்பட்ட நிலங்களை பயன்படுத்தியதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. லீசுக்குப் பெறப்பட்ட நிலத்தின் மொத்தம் 14.6 சதவீத நிலங்கள் பக்தர்களில் 9.5 சதவீதமானவரின் பயன்பாட்டுக்காக தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3.4 சதவீத நிலம் வெறும் 0.1 சதவீதமானோரின் பயன்பாட்டுக்காக தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நன்கொடையாக விடுதிகள் கட்ட சந்நிதானத்தைச் சுற்றி அனுமதி வழங்கப்பட்டிருப்பது லீஸ் ஒப்பந்தத்திற்கு முரணானது மட்டுமின்றி பொது நிலத்தை ஒதுக்குவதில் செய்யப்பட்ட அநீதியுமாகும்.

வி.ஐ.பி-க்களும் பணக்கார பக்தர்களும் தங்களது சொந்த தேவைகளுக்காக சாதாரண மக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக பொது இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். இது கடுமையான வனப்பகுதியில் பாதயாத்திரை வரும் சபரிமலை பக்தர்களிடையே நிலவ வேண்டிய சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்த சகோதரத்துவம் என்கிற பண்புக்கே எதிரானது.

தற்போது எல்லா வயதைச் சேர்ந்த பெண்களையும் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பும் அப்பட்டமாக மீறப்படுகின்றது. கோவிலின் மீதான தங்களது கட்டுப்பாடு திருவாங்கூருக்கு மாற்றப்பட்டது குறித்த அறியாமையில் இருக்கும் பந்தளம் குடும்பத்தினரும், நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி குறித்த அறிவற்ற தாழமோன் தந்திரியும் சட்டவிரோதமான முறையில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையே தான் கோவிலின் மற்ற பூசாரிகளும் செய்து வருகின்றனர். ஓட்டுக்களின் மீது ஒரு கண்ணை வைத்துள்ள அரசியல்வாதிகளும் அரசியல் சாசனம் குறித்த அறியாமையில் மேலும் தாழ்ந்து செல்கின்றனர். சடங்கு சம்பிரதாயங்களின் மீதான நெகிழ்வுத் தன்மையும் சமூக விடுதலையையும் அடிப்படையாகக் கொண்ட தனது பாரம்பரியத்திற்கு முரணான ஒரு நிகழ்வுப் போக்கை சபரிமலை சந்தித்து வருகின்றது.

தமிழாக்கம் :
நன்றி: அவுட்லுக்

No comments:

Post a Comment