சித்தபுருடர் 'குணங்குடி'
மஸ்தான் சாகிபு.
குணங்குடி மஸ்தான் சாகிபு (1788-1835: சென்னை) அவர்கள் ஒரு இசுலாமிய தமிழ் அறிஞர், சூஃபி, தமிழ்ச்சித்தர் ஆவார் . இவர் பல இசை உணர்வு மிக்க பாடல்களை எழுதியுள்ளார். சமயங்களைக் கடந்த, மதங்களைக் கடந்த பாடல்களைக் கொண்டது ஆசான் குணங்குடி மஸ்தான் பாடல்கள்.
படைப்புகள்
நிராமயக்கண்ணி
மனோன்மணிக்கண்ணி
அகத்தீசர் சதகம்
நந்தீசர் சதகம்
பராபரக்கண்ணி
இவரைப் பாராட்டி எழுதப்பட்டவை:-
குணங்குடி நாதர் பதிற்றுப் பத்தந்தாதி - ஐயாசாமி
நான்மணி மாலை - சரவணப் பெருமாளையர்
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கு வட மேற்கில் பத்துக் கல் தொலைவில் அமைந்தது குணங்குடி. நயினார் முகம்மது எனும் தந்தைக்கும், பாத்திமா எனும் தாய்க்கும் 1792-ஆம் ஆண்டில் பிறந்தார்.
குணங்குடி மஸ்தான் சாகிபு எனப் பிற்காலத்தில் அழைக்கப்பட்டவரின் இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிர். ’தந்தை வழி தமிழ்ப்புலமையும் தாய்வழி குரிசில் நபி (ஸல்) அவர்களின் குடிவழிப் பெருமையும் குலதனமாகக் கொண்டவர் குணங்குடியார்’ என்கிறார் அப்துல் ரகுமான்.
அவர் ஒரு இஸ்லாமிய சூஃபி ஞானி. தமிழ்ச் சித்தர். அவரது பாடல்களில் அரபுச் சொற்கள், உருதுச் சொற்கள், பாரசீகச் சொற்கள், தத்துவச் சொற்கள் செறிந்திருந்தன.
குணங்குடியார், அவருக்கென்றே வளர்ந்த தாய்மாமன் மகளை மணம் செய்ய மறுத்துப் போனார். அப்துல் ரகுமான் ’அமுதத்துக்கு ஆசை கொண்ட மனம் அற்ப மதுவை அருவருத்தது’ என்கிறார்.
தனது 17-ஆவது வயதில் ஞானபூமியான கீழக்கரையில், தைக்கா சாகிபு என்றழைக்கப்பட்ட சய்கப்துல் காதிர் லெப்பை ஆலிம் என்னும் ஞானியிடம் மாணாக்கராக இருந்து 1813-இல் முற்றும் துறந்தவராகிறார்.
திரிசிரபுரம் மெளலவி ஷாம் சாகிபிடம் தீட்சை. திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலையில் 40 நாட்கள் யோக சிஷ்டை. அறந்தாங்கி அருகே கலகம் எனும் ஊரில் மோதம், தொண்டியில் தாய்மாமன் அடங்கிய வாழைத்தோப்பில் 4 மாதம் நிஷ்டை. சதுரகிரி, புறாமலை, நாகமலை, ஆனைமலை, நதிக்கரைகள் எனத் தவம். உணவு, சருகு, கிழங்கு, காய், கனி. குப்பை மேடுகளில் குடியிருப்பு. பித்த நடையும் அற்புத சித்துகளும்.
பாரசீக மொழியில் மஸ்த் எனும் சொல்லுக்கு போதை, வெறி எனும் பொருள்.
கொண்ட கொள்கையில் வெறியாகப் பற்றுதியுடன் இருந்தார். மக்கள் அவரை மஸ்தான் என்றழைத்தனர். ஏழு ஆண்டுகள் வடநாடு பயணம் செய்து ஞானோபதேசம் செய்திருக்கிறார். சென்னை திரும்பியவருக்கு ராயபுரத்தில் பாவா லெப்பை ‘தைக்கா’ (ஆசிரமம்) அமைத்துக் கொடுத்திருக்கிறார். ஒன்றரை ஆண்டுகள் அங்கே அவர் யோக நிட்டை புரிந்திருக்கிறார்கள்.
சின்னாட்கள் வெளிப்பட்டும் சின்னாட்கள் மறைந்து அடங்கி யோகம் புரிந்தும் வாழ்ந்தபோது நச்சரவங்கள் தீங்கு செய்யாமல் திருந்தன. அவர் சீடர்களாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் இருந்தனர். மஸ்தானிடம் தீட்சை பெற்றவர்களில் ஒருவர் ஆற்காடு நவாப் என்றும் ‘அட்டமா சித்து வல்ல குணங்குடியார் புரிந்த ஒன்பதாவது சித்து இது’ என்றும் கூறுகிறார் அப்துல் ரகுமான். மேலும் அவர் கூறுவது “தாம் சார்ந்திருந்த ‘காதிரிய்யா’ நெறி மரபுப்படி, அந்நெறித்தலைவர், அவருடைய ஞானகுரு முகியித்தீன் ஆண்டவர் பேரில் ‘பாத்திஹா’ (நேர்ச்சைப் படையல்) செய்து வந்தார்.”
பன்னிரண்டு ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்த குணங்குடியாரை, இஸ்லாமியர் ஆரிபுபில்லா (இறை ஞானி), ஒலியுல்லா (இறையன்பர்) எனவும், இந்துக்கள் ‘சுவாமி’ என்றும் அழைத்திருக்கிறார்கள்.
1838-ஆம் ஆண்டு தனது 47-வது வயதில் பரிபூரணம் பெற்றவரை தங்கிய இடத்திலேயே நல்லடக்கம் (தறுகா) செய்திருக்கிறார்கள். தொண்டியைச் சேர்ந்தவர் என்பதால் மக்கள் அவரைத் தொண்டியார் என்று அழைத்தத்தால் அவர் வாழ்ந்த இடம் தொண்டியார் பேட்டை – தொண்டையார் பேட்டை ஆயிற்று என்பர்.
பேராசிரியர் அப்துல் ரகுமான் மேலும் தரும் குறிப்புகள் சுவாரசியமானவை. சுஃப் எனும் அரபுச்சொல்லுக்கு கம்பளி என்று பொருள், சூஃபித் துறவிகள் முரட்டுக் கம்பளி ஆடைகள் அணிந்தனர் என்கிறார். சித்தர் மரபு, இறைவனை வாலை, மனோன்மணி என்றனர். சூஃபிகள் இறைவனை நாயகியாகப் பாவித்தனர்.
‘சமய மெல்லாம் சக்தியுண்டு சிவமும் உண்டு
சண்டாளர் பிரித்தல்லோ தள்ளினார்கள்’
என்ற கைலாயக் கம்பளிச்சட்டை முனிவர் பாடலை மேற்கோள் காட்டும் அப்துல் ரகுமான் சிவம் – சக்தி எனும் (Matter – Energy) சொற்களை புராணச் சொற்களாக அன்றி யோக பரிபாஷைச் சொற்களாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்,
குணங்குடியார் பயன்படுத்தும் துவள மணிமார்பன், அளகேசன், காலன், சனீஸ்வரன், இந்திரன் சொற்களையும் அவ்விதமே புரிந்து கொள்ள வேண்டும்.
‘மேலூரு வீதியில் வையாளி போட்டங்கு
விளையாட அருள் புரியவும்’
என குணங்குடியார் பாடிய மேலூர் மதுரைக்கு அருகிலிருக்கும் மேலும் எனப்புரிந்து கொள்வது அபத்தமானது என்கிறார் அப்துல் ரகுமான்.
பல் மதத்தவரும் குணங்குடியார் மீது பக்தி கொண்டு ஒழுகி இருக்கிறார்கள். சித்தர் மரபின் சூஃபி ஞானியான மஸ்தான் சாகிபுவை, மகாவித்வான் திருத்தணிகை சரவணவப் பெருமாள் ஐயர் பாடிய நான்மணி மாலையில்,
‘குருவாய் அடுத்தோர்க்கு அருள் சுரக்கும்
கோதில் குணஞ்சேர் குணங்குடியா’
என்கிறார்.
வேங்கடராயப் பிள்ளைக் கவிராயர் பாடிய அறுசீர்க்கழிநெடியடி ஆசிரிய விருத்தத் தோத்திரப்பா -
‘சொந்த மிலையோ பன்னாளும்
தொழுத திலையோ அடிமையெனும்
பந்த மிலையோ பிள்ளைகளைப்
படைத்த திலையோ வருந்துமவர்
சிந்தை யறியும் செயலிலையோ’
என இரங்குகிறார்.
குணங்குடியாரின் ‘முகியித்தீன் சதகம்’, ‘அகத்தீசன் சதகம்’, ‘பராபரக் கண்ணி’, ‘எக்காலக் கண்ணி’, ‘மனோன்மணிக் கண்ணி’ பிற கீர்த்தனைகள் யாவும் புகழ் பெற்றவை.
முகியித்தீன் சதகத்தில்,
‘நீக்கமற எங்கெங்கும் நின்றுநிறை கின்றபொருள்
நேரில் என் முன்னிற்கவே……
போக்குவரவு அற்ற பரிபூரண ஆனந்தமெப்
போதும் என் முன்னிற்கவே’
என்று இரங்குகிற குணங்குடியார்.
அகத்தீசன் சதகத்தில்,
கொள்ளிவைத்து உடலைக் கொளுத்துமுன் முச்சுடர்க்
கொள்ளிவைத் தருள் புரியவும்’
என்று வேண்டுகிறார்.
முச்சுடர்க் கொள்ளி என்பது யோகக்கனல்.
பராபரக்கண்ணி மொத்தம் நூறு பாடல்களைக் கொண்டது. இரண்டு இரண்டடிகள் கொண்டது.
சமயங்களைக் கடந்த மதங்களைக் கடந்த பாடல்களைக் கொண்டது குணங்குடி மஸ்தான் பாடல்கள். தாயுமானவர் பாடல்கள் போல் பெரும் சிறப்புக்குறியன. ஏறத்தாழ ஒத்தக் கருத்தினை கொண்டவை. சரவணப் பெருமாள் ஐயர், ஐயா சுவாமி முதலியார், வேங்கடராயப்பிள்ளைக் கவிராயர் சபாபதி முதலியார், மற்றும் செய்கு அப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலிம் புலவர் போன்றவர்களால் புகழ் மாலைப் பாடப்பெற்ற சிறப்பு திரு குணங்குடி மஸ்தான் பாடல்களுக்கு உண்டு.
இவர்களின் சில பாடல்கள்:
அண்ட புவனமென்றும் ஆடுதிருக் கூத்தினையான்
கண்டு மகிழ்ந்திடவே காட்டாய் பராபரமே.
எங்கும் நிறைந்த பராபரப் பொருளே.. அண்டம், புவனங்களில் ஆடும் நின் திருக்கூத்தினை நாங்கள் மனம் மகிழ காட்டிடுவாய்... அந்த பேரின்பைதை தந்திடுவாய்.
ஆதியாய் ஆண்டவனாய் அஃததுவாய் நின்றபெருஞ்
சோதியாய் நின்மலமாய் சூழ்ந்தாய் பராபரமே.
ஆதியானவனே... ஆண்டவனானவனே.. அதததுவாய் நின்ற பெருஞ்சோதியே..அப்பழுக்கற்ற நிர்மலமாய் எங்கும் சூழ்ந்திருக்கிறாய் நீ பராபரமே
வேத மறைப்பொருளை வேதாந்தத் துஉட்கருவை
ஓதி உனையறிந்தார் உண்டோ பராபரமே
வேதத்தின் மறைப்பொருளையும், வேதாந்த உட்கருத்தினையும் ஓதி உன்னையறிந்தவர்கள்யாருள்ளார் பராபரமே
அண்ட புவனமுடன் ஆகாசமென் றுசும்பிக்
கொண்டாடும் மெய்ஞ்ஞானக் கூத்தே பராபரமே
அண்டங்களும் புவனங்களும் ஆகாசமென்றசைந்துக் கொண்டாடும்மெய்ஞ்சானக் கூத்தான பராபரமே.
நாவாற் புகழ்க்கெட்டா நாயகனே நாதாந்தம்
பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே
நாவினால் புகழவியலாத அதற்கு எட்டாத நாயகனே,நாகந்த பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே.
*நிராமயக்கண்ணி *
(100 பாடல்கள்)
ஆதி முதலே யகண்டபரி பூரணமென்று
ஓதுங் குணங்குடி கொண்டோனே நிராமயமே!
தேசிகனா னென்றே திருநடன மாடுகின்ற
வாசாம கோசரமே வாழி நிராமயமே!
*மனோன்மணிக்கண்ணி *
(100 பாடல்கள்)
மெய்தொழவு மேலும் மேலும்நந்தி கேஸ்வரனைக்
கைதொழு வுங்கனவு கண்டேன் மனோன்மணியே!
கோப்பாக கவும்உனையான் கொண்டாடிப் பாடவும்நீ
காப்பாக வுங்கனவு கண்டேன் மனோன்மணியே!
*அகத்தீசர் சதகம் *
(100 பாடல்கள்)
தாயனைய இன்பந் தனைத்தந்து தந்துகை
தழுவிநின் றருள் புரியவுந்
தந்தைதா யுந்தானே யாகவு மிருந்தெனைத்
தற்காத்து னருள்பு ரியவுஞ்
சேயென் றிரங்கியணை காலியின் கன்றெனச்
சீராட அருள்பு ரியவுஞ்
செங்கீரை யாடுசிறு மதலைபோற் கொஞ்சிநான்
செல்வமிட அருள்பு ரியவும்
பாயுமடை கால்கண்டு கரைபுரள வருமதிப்
பால்கொடுத் தருள்பு ரியவும்
பக்குவத் தோடுமவு னத்தொட்டி லுக்குட்
படுக்கவைத் தருள்பு ரியவும்
வாயுவைக் கட்டவுந் தவராஜ சிங்கமே
வரவேண்டும் மென்ற னருகே
மாகுணங் குடிவாழு மென்னகத்தீசனே
மவுனதே சிகநா தனே.
நந்தீசர் சதகம்
(51 பாடல்கள்)
ஆதியந்தங் கடந்தவுமை யாளருள் நாதாந்தச்
சோதியந்தங் கடந்தசெழுஞ் சுடரேநந் தீஸ்வரனே
முடியடியாய் நின்றநடு மூல மணிவிளக்கே
அடிமுடியாய் நின்றநடு அணையேநந் தீஸ்வரனே
ஆனந்தக் களிப்பு
(38 பாடல்கள்)
கொடிகட்டிக் கொண்டெழு கோடி-தனங்
குவித்தந்த மகிழ்ச்சியாற் கூத்துக ளாடி
கெடுபுத்தி யுடையோரைக் கூடி-யானுங்
கெட்டலையாமலே கெதிபெற நாடி
இரக்கத் துணிந்துகொண் டேனே- எனக்
கிருக்குங் குறைமுழுதும் நிகழ்த்திக்கொண் டேனே.
No comments:
Post a Comment