Sunday 14 November 2021

KULANTHAIYUM DEIVAMUM - KUTTY PADMINI

 


KULANTHAIYUM DEIVAMUM - KUTTY PADMINI


நாற்காலியை விட்டு எழுந்து விட்டார் இந்திரா காந்தி.
இன்னும் சில நொடிகளில் அந்த மேடையை விட்டு புறப்படப் போகிறார்.
குழந்தை நட்சத்திரம் குட்டி பத்மினி தயங்கி நின்றார்.
கேட்பதா, வேண்டாமா ?
ஒரு நொடி தயக்கம்.
ஆனால் இந்த தயக்கம்தானே பல தாழ்ப்பாள்களை திறக்க விடாமல், தடைபோட்டு மூடி வைத்து விடுகிறது.
தயக்கத்தை உதறித் தள்ளினார்
குட்டி பத்மினி. ஓடோடிச் சென்று இந்திரா காந்தியை கட்டிப் பிடித்தார்.
அதன் பலன் தட்டிப் போன விருது, மீண்டும் அவர் கைகளுக்கு வந்தது.
இதோ, அந்த 'குழந்தையும் தெய்வமும்' அனுபவம்.
சொல்வது குட்டி பத்மினி :
“தமிழில் "குழந்தையும் தெய்வமும்" படத்தில் நடித்த நேரத்தில், மத்திய அரசு தேர்வுக்குழு சிறந்த பேபி நட்சத்திரமாக என்னை தேர்ந்தெடுத்தது.
அப்போது தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரியாக இருந்த இந்திரா காந்தி விருதுகளை வழங்க இருந்தார்.
"குழந்தையும் தெய்வமும்" படத்தில் என் அப்பா- அம்மாவாக நடித்திருந்த ஜெய்சங்கர் - ஜமுனா, டைரக்டர்கள் கிருஷ்ணன் - பஞ்சு ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தனர்.
அதில்தான் சிக்கல்.
படத்தின் டைரக்டர் கிருஷ்ணன் பஞ்சு என்றதும், அவர்களை ஒருவர் என்று எண்ணி ஒரு கேடயத்தை மட்டும் தயார் செய்துவிட்டார்கள். இப்போது டைரக்டர்கள் இரண்டு பேர் என்பதால், இருவருக்கும் விருது கொடுத்தாக வேண்டிய கட்டாயம் நேர்ந்ததால், என்னை தவிர்த்திருக்கிறார்கள். இது எனக்குத் தெரியாது.
விழா நடக்கும் நாளில் விருது பெற இருந்தவர்களை தனி வரிசையில் உட்கார வைத்திருந்தார்கள். என்னை பொதுவான பார்வையாளர்கள் இருக்கும் இடத்தில் உட்கார வைத்தார்கள். என்னால் தாங்க முடியவில்லை.
என்னை அழைத்து வந்திருந்த ஏவி.எம்.முருகன் அவர்களிடம் காரணம் கேட்டேன். அவர் உண்மையை சொல்லிவிட்டார்.
நிர்வாகக்குழு செய்த தவறுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் ?
விழாவில் விருதுகளை வழங்கி முடித்து விட்டு, இந்திரா காந்தி புறப்பட்டுக் கொண்டிருந்தார். நான் நேராக அவரை நோக்கி ஓடினேன். பாதுகாப்பையும் தாண்டி அவரை நெருங்கியதும் அவரை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டேன்.
உடனே இந்திரா காந்தி என்னிடம் பரிவுடன், "என்ன வேணும்மா உனக்கு?" என்று விசாரித்தார். அவர் கேட்டதுதான் தாமதம்.
நான் கடகடவென்று விருது விஷயத்தை விளக்கமாக சொல்லிவிட்டேன். பொறுமையாக கேட்டவரிடம், "நேரு மாமா இருந்தா எனக்கும் கொடுத்திருப்பாரே" என்றேன்.
இந்திரா காந்தி, என்னை தட்டிக்கொடுத்தார். "குழந்தையும் தெய்வமும்" படத்தைப் பார்க்க விரும்புவதாக தேர்வுக்குழுவினரிடம் தெரிவித்தார். அன்றிரவே சென்னையில் இருந்து "குழந்தையும் தெய்வமும்" படப்பெட்டி அனுப்பப்பட, மறுநாளே படம் பார்த்தார்.
படம் பார்த்து முடித்ததும் எனக்கான விருதை உறுதிப்படுத்திய இந்திரா காந்தி, மறுநாள் எனக்கு விருது கொடுத்தபோது, "பிரமாதமா நடிச்சிருக்கே" என்று சொன்னதோடல்லாமல் என் கன்னத்தில் முத்தம் கொடுத்து பாராட்டினார்."
'குழந்தையும் தெய்வமும்' படத்தில் உண்மையாகவே குட்டி பத்மினி பிரமாதமாக நடித்திருப்பார்.
அன்று அந்த நிகழ்ச்சியில் இன்னமும் ஒரு நொடி தயங்கியிருந்தால் கூட நிச்சயமாக அந்த விருது அவரது கை நழுவிப் போயிருக்கும்.
தேவையில்லாத தயக்கத்தை கை விட்டால்,
நமக்குத் தேவையான அத்தனையும் நம்மைத் தேடி வரும்.
Arul Arulroy, Babu Natrajan and 241 others
27 Shares
Like
Comment
Share

No comments:

Post a Comment